எனது நூல்கள்.

திங்கள், 5 அக்டோபர், 2015

மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

மனம் கவரும் மலேஷியா  - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும்.

மலேஷியாவின் தலைநகரம் கோலாலம்பூரில் கே எல் இண்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்டில் லாண்ட் ஆனவுடன் சென்ற இடம் ஜெலான் ஈப்போவில் செண்டுல். ஏனெனில் அங்கேதான் நகர சத்திரத்தில் ரூம் புக் செய்திருந்தோம். ( அதற்கு முன்பே மலேஷியாவில் கோட்டா டிங்கி வாட்டர் ஃபால்ஸுக்கு வந்து சென்றிருந்தோம்..) ஸ்டார் பக்ஸ் காஃபிகளும் ரெண்டட் டாக்ஸிகளுமாக பரபரப்பாக இருந்தது கே எல் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்.

ஏர்ப்போர்ட்டிலிருந்து டாக்ஸி போக பஸ்களும் இருக்கின்றன. அவையே சேஃப்.  அதன் பின் அவர்கள் இறக்கிவிட்ட இடத்திலிருந்து ஒரு டாக்ஸி மூலமாக செண்டுல் முருகன் கோயிலுக்குச் சென்று அதன் பின்புறமிருந்த நகரச் சத்திரத்தை அடைந்தோம். அப்போது மலேஷியா வாசியான ஒரு உறவினர் எங்களைப் பார்க்க வந்திருந்தார். அவர் சொன்னார்.

சிங்கப்பூரிலிருந்து மலேஷியாவுக்கு ட்ரெயினில் வந்திருந்தால் மிக அற்புதமான அனுபவமாக இருக்குமே ஏன் ஃப்ளைட்டில் வந்தீர்கள் என்று. ஆகக்கூடிப் பார்க்கப் போனால் ஃப்ளைட் ட்ரெயின் இரண்டுக்குமே ஏறத்தாழ ஒரே சார்ஜ்தான். ஆனால் ட்ரெயின் மூலம் வரும்போது அழகான காட்சிகளைக் காண முடியும் என்பதால் அவர்கள் சிங்கப்பூர் செல்லும்போதெல்லாம் ட்ரெயின் மூலமே செல்வதாகச் சொன்னார். நாமோ இருக்கும் ஒரு வாரத்தில் மலேஷியாவையும் சிங்கப்பூரையும் பார்க்க வேண்டுமே என்று எண்ணி நேரத்தை மிச்சப்படுத்த ஃப்ளைட்டில் வந்ததாகச் சொன்னோம்.


ஜெலான் ஈப்போவில் இருக்கும் அந்த சத்திரம் மூன்றடுக்குக் கொண்டது. இரு பக்கமும் அறைகள் நடுவில் ஒரு ஓபன் ஸ்பேஸூம் அதன் பக்கத்தில் பாத்ரூம் டாய்லெட்டும். பாத்ரூமில் இண்ஸ்டண்ட் ஹீட்டர் மூலம் ஹாட் வாட்டர் சப்ளை. மேலும் படுக்கை இரண்டு உண்டு. இன்னும் இருவர் படுக்கக்கூடியதாய் படுக்கையின் கீழேயே இன்னும் இரு கட்டைகளோடு கூடிய பெட்டுகள் ஃபோல்ட்டாக இருந்தன. உறவினர் மறுநாள் மாலை ஊர் சுற்றிக் காட்ட அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். வந்த களைப்புத் தீரக் குளித்து உணவருந்திவிட்டு உறங்கினோம். 


மறுநாள் காலை விழித்ததும் ஊருக்கு பக்கத்தில் இருக்கும் ஷாப்பிங் மாலுக்குச் சென்று தொலைபேசித் தெரிவித்து விட்டு ( அங்கேயே நம்மூர் காய்கறியிலிருந்து சகலமும் கிடைக்கிறது ) டீ குடித்துவிட்டு வந்தோம். ஊர் சுத்தமாக இருக்கிறது. சத்திரத்துக்கு எதிர்த்தாற்போல ஒரு கோடவுனும். அதன் பக்கம் ஒரு தெருவும் அதன் அந்தப் பக்கம் ஒரு வீடும் இருந்தது. அந்த வீட்டின் அழகை சொல்லி முடியாது. அவ்வளவு அழகாக பார்த்துப் பார்த்துக் கட்டி பார்த்துப் பார்த்துப் பராமரித்துக் கொண்டிருந்தார்கள். நாம் இருந்த ரூமில் இருந்து அவர்கள் வீட்டில் ஒரு சின்ன மாடக் கோயில் போன்ற இடத்தில் ஊதுபத்தி கொளுத்தி வைத்துவிட்டு குடும்பத்தலைவர் குழந்தைகளோடு ( பள்ளியில் விட ) கிளம்பிக் கொண்டிருந்தார். அவரின் மனைவி பிள்ளைகளின் பைகளை எடுத்து காரில் வைத்துக் கொண்டிருந்தார்.


சைனீஸ் மலேய மக்கள் சாலை ஓர உணவகங்களில் நம்மூரு டீக்கடை போல காலை வேளைகளிலேயே டோரா போட்டிருந்தனர். உறவினர் சொன்னார் இவங்க எல்லாம் வீட்ல சமைக்கவே மாட்டாங்க. வேலைக்குப் போயிட்டு வந்து இப்பிடி வெளியேதான் சாப்பிடுவாங்க என்று.


ஜன்னலின் இன்னொரு பக்கத்தில் பார்த்தால் ஒரு பெரிய ஃப்ளை ஓவர் தூரத்தில் இரண்டு இடங்களை இணைக்கும்படி சென்றது மூன்றாவது மாடி என்பதால் தெரிந்தது. அடர்ந்த மரங்களும் பெயர் தெரியாத பறவைகளின் சப்தமும் அந்த ஃப்ளை ஓவரும் தங்கவண்ணம் அடித்துக் கொண்டிருந்த சூரியனுமாக மின்னிக் கொண்டிருந்தது கலர்ஃபுல் மலேஷியா.


எல்லாவற்றையும் ஜன்னல் வழி வேடிக்கை பார்த்துவிட்டு குளித்து முடித்து செண்டுல் முருகன் கோயிலுக்குச் சென்றோம். மிக அருமையான அமைதியான தரிசனம். கோயில் வெளியில் நம்மூர் போல இருவர் பூக்கட்டிக் கொண்டிருந்தார்கள். கடையில் இட்லி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் இன்னுமிருவர். மலேயாவில் மலாய் மக்களும் சீனர்களும் அதிகம் .

இஸ்லாமைப் பின்பற்றும் அந்நாட்டில் பணியின் நிமித்தம் இங்கிருந்து சென்ற மக்கள் வணங்க இந்துக்கோயில்கள் ஸ்தாபிதம் செய்யவும்  இடமளித்துள்ளார்கள். இந்தக் கோயில் அங்கே வியாபார நிமித்தம் சென்ற செட்டியார்களால் 1893 இல் கட்டப்பட்டிருக்கு. முதல் கும்பாபிஷேகம் 1902 லும், அடுத்த கும்பாபிஷேகம் 1961 இலும் அப்புறம் 71, 84, 98, 2013 லயும் ஆறு முறை நடந்திருக்கு.

இதோட மஹா மண்டபம் செட்டியார்களின் வீடுகளைப் போல செட்டி நாட்டு ஸ்டைலில் கட்டப்பட்டிருக்கு. மூன்று சுற்றுப் பிரகாரங்கள் இருக்கு. உள் பிரகாரம் , வெளிப்பிரகாரம் , திருவிழாக்காலங்களில் உற்சவமூர்த்தியுடன் ரதம் ஓடும் ப்ரகாரம் இருக்கு. சன்னதியில் வேல் மயில் பலிபீடம், இடும்பன் சிலைகளோடு வெங்கலத்தால் ஆன நால்வர் சிலைகளும் ( அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ) இருக்கு. மடப்பள்ளியும் அமைக்கப்பட்டிருக்கு. இங்கே குருக்கள் பண்டாரம் இருவருமே பூஜை செய்கிறார்கள்.


காலை ஆறரை மணியிலிருந்து மதியம் பன்னிரெண்டு வரைக்கும் மாலை ஐந்தரை மணியிலிருந்து 9 மணி வரைக்கும் கோயில் திறந்திருப்பதாக சொன்னார்கள். அங்கே ஞாயிறுகளில் தேவாரம் வகுப்புகளும் ஆன்மீகச் சொற்பொழிவுகளும் நடைபெறுவதாகவும் பங்குனி உத்திரம் மிக விசேஷமென்றும் சொன்னார்கள். விநாயகருக்கு உள்ளே நுழைந்ததும் அரசமரத்தடியில் தனிக் கோயிலே உள்ளது. ரிஷபாரூடரும் கோபுரத்தில் விநாயகர் அம்மையப்பனைச் சுற்றி மாங்கனி பெற்ற கோலமும் அறுபடை முருகன்களும் சுதைச் சிற்பமாக இருக்கின்றார்கள். மயில்களும் இருக்கின்றன. அஷ்ட லெக்ஷ்மிகளும் ஓவியத்தில் அருள் பாலிக்கின்றார்கள். 

ஓடுவேய்ந்த உள் பிரகாரமும் வெளிப்பிரகாரம் முழுதும் தொட்டிச் செடிகள் அழகுக்காக வைக்கப்பட்டும் பராமரிக்கப்படுகின்றன. மழை நீர் இறங்க ஒவ்வொரு தூணின்வெளிப்புறத்திலும் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.  

வள்ளி தெய்வானையை மணம் புரிந்ததும் உமையவளிடம் வேல் வாங்கியதும் தெண்டாயுதபாணி ஆகியதும் அப்போது விநாயகர் அந்த மாங்கனியைத் தம்பிக்கு வழங்க கையில் வைத்தபடி நிற்பதும் தந்தைக்கு ப்ரணவத்தை உபதேசித்ததும் வள்ளி யானையைப் பார்த்துப் பயந்து முருகனிடம் தஞ்சம் அடைவதும் வள்ளி தெய்வானையுடன் திருமணத் திருக்கோலமும் அறுமுக வடிவினனாக மயில்மேல் அமர்ந்திருக்கும் சண்முகனும் அழகுற ஓவியமாக்கப்பட்டுள்ளனர்.

கோபுரத்தில் விநாயகரும் முருகனும் தோளில் கைபோட்டபடி மயில்கள் சூழ நிற்கும் காட்சி அற்புதம். மிகப்பெரும் தூண்களும் சில்வர் கம்பிகளும் கொண்ட சன்னதி சிறக்க அழகுறப் பொலிந்து கம்பீரமாக அருள் பாலிக்கிறார் ஸ்ரீ தெண்டாயுதபாணி.  அவர் அருளாட்சி செய்யும் இடத்தை தரிசித்துவிட்டு அவரே பத்துமலை முருகனாக அரசாட்சி செய்யும் இடத்தைத் தரிசிக்கக் கிளம்பினோம். 

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க. 

1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
 
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS. 


இவற்றையும் பாருங்க :-

இன நல்லிணக்கம்.

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும். 

சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும். 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK. 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.  

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க. 

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :- 

சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

 சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.

7 கருத்துகள் :

Dr B Jambulingam சொன்னது…

சுற்றுலாப் பகிர்வுக்கு நன்றி.

துளசி கோபால் சொன்னது…

கூடவே வர்றேன். நாங்க இந்தக் கோவில் பார்க்கலை. புகிட் பின்டாங் லே தங்கி இருந்தோம்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை சகோதரியாரே
தொடருங்கள்
ஒரு முறை மலேசியா சிங்கப் பூர் சென்றிருக்கிறேன்
பத்துமலை முருகன் கோயிலுக்கும் சென்று வந்திருக்கிறேன்
நன்றி சகோதரியாரே

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

அருமை. ஆனாலும், முடிந்தவரை தமிழ் வார்த்தைகளை பயன்படுத்த முயற்சிக்கவும். நன்றி !!!

தனிமரம் சொன்னது…

அருமையான பகிர்வு நானும் போனதில்லை இந்தக்கோவிலுக்கு.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜம்புலிங்கம் சார்

நன்றி துளசி. அடுத்தமுறை கட்டாயம் பாருங்க

நன்றி ஜெயக்குமார் சகோ.

நன்றி ஆரூர் பாஸ்கர் சார். முயற்சிக்கிறேன் :)

நன்றி தனிமரம். அடுத்தமுறை போயிட்டு வாங்க :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...