வியாழன், 10 செப்டம்பர், 2015

அம்பேத்காரின் தம்மகிரந்தி யாத்ரா - சித்தார்த்த புத்த விஹார் குல்பர்கா. DHAMMA KRANTI YATRA, SIDDHARDHA BUDDHA VIHAR, GULBARGA


அம்பேத்காரின் தம்மகிரந்தி யாத்ரா - சித்தார்த்த புத்த விஹார் குல்பர்கா

சித்தார்த்த புத்தவிஹார். குல்பர்காவிலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. குல்பர்கா யூனிவர்சிட்டி வழியாக செல்லும்போது கூட சில ஸ்தூபி அமைப்புக் கட்டிடங்கள் தென்படுகின்றன. புத்த சமயம் ஆழமாக வேரூன்றிய இடங்களில் இதுவும் ஒன்றாக இருக்கக்கூடும். புத்த சமயத்தைச் சார்ந்தவர்கள் சென்று வரும் ஒரு புனித தலமாக குல்பர்க்கா புத்தவிஹார் உருவெடுத்திருக்கிறது. மக்களிடையே வன்முறை இல்லாத வாழ்வியல் நெறிமுறைகளைப் பரப்பவும், அமைதி சாந்தம், சமாதானம் ஒற்றுமை ஆகியவற்றை உருவாக்கவும் இந்த புத்த விஹாரம் எழுப்பப்பட்டுள்ளது.

குல்பர்கா மாவட்டம் புத்தசமயம் பற்றிய நமது முந்தைய வரலாற்றையும் அதன் பின் ஏற்பட்ட சமூக மாற்றத்தையும் விளக்குவதாக உள்ளது. புத்தர், பசவேசுவரர், அம்பேத்கார் போன்ற மக்களுக்காகப் பாடுபட்டவர்களின் வரலாற்றையும் இயம்புகிறது.


இது டூரிஸ்ட் செண்டர் மட்டுமல்ல. புத்திஸம் பற்றிய விரிவான ஆராய்ச்சியும் இங்கே நடைபெறுகிறது. இங்கே ஐந்து ஆறு பெரிய புத்த பிக்குகளையும் பல சின்ன புத்த பிக்குகளையும் கண்டோம். பெரிய பிக்குகள் சிறிய காலர் வைக்கப்பட்ட சட்டை அணிந்து அதன் மேல் சிவப்புத் துண்டைச் சுற்றி அணிந்திருக்கிறார்கள். குட்டி புத்த பிக்குகள் வெறும் மேலில் இந்தச் சிவப்பு ஆடையை அணிந்திருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேதான் இங்கே இந்த அழகான விஹாரம் எழும்பக் காரணமானவர் .

1994 இல் சித்தார்த்த விஹார் ட்ரஸ்ட்,( குல்பர்கா )என்ற ட்ரஸ்டை ஜனாதிபதியும் திபெத்திய தலாய் லாமாவும் ஆரம்பித்து அதன்  மூலம் இந்த புத்தவிஹார் கட்ட அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள். இது புத்திஸ்ட் ஆர்க்கிடெக்சர் படி கட்டப்பட்டுள்ளது.  சர்வதர்ம சமிதி மூலம் 19-1-2009. அன்று புத்தர் சிலையை ஜனாதிபதி ப்ரதீபா பாட்டில், தலாய் லாமா, ரவிசங்கர் பாபா ஆகியோர் திறந்து வைத்திருக்கிறார்கள்.

குல்பர்காவின் எல்லா சாலைகளும் மாபெரும் புத்தவிஹாரை நோக்கியே செல்கின்றனவாம். இது 75 ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்திருக்கிறது. குல்பர்கா செடாம் செல்லும் ஹைவேஸ் சாலையில் சென்றால் இதை அடையலாம்.  1500 டன் சிமிண்ட், 250 டன் இரும்பு, 5 லட்சம் செங்கல் கொண்டு கட்டியிருக்கிறார்கள். இதன் அமைப்பு அஜந்தா எல்லோரா சிற்பக்கலையைப் பிரதிபலிக்கிறது.

இந்த புத்த விஹார் கிமு 3 ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி முதலாம் நூற்றாண்டு வரை குல்பர்க்கா மாவட்டம் முழுமையும் அதன் சுற்றுவட்டாரங்களிலும்  புத்தமதம் பரவியதை எதிரொலிக்கிறது.  புத்தமதக் கட்டிடக்கலை ,சிலைகள், மற்றும் அங்கே கிடைத்த கலைப் பொருட்கள் புத்தமதம் இங்கே கிமு 3 ஆம் நூற்றாண்டில் சன்னாடி,சித்தாப்பூர் தாலுகாவின் கனகனல்லி, ஷாஹாபூரின் ஹஸரகுன்டிகி, ஜெவார்கி தாலுகாவின் அனபி ஆகிய புத்த ஸ்தலங்களில் பரவியதை உறுதி செய்கின்றன..
 
முதலில் மெயின் ரோட்டில் ஒரு ஆர்ச்சும் அடுத்த நடுவில் ஒரு ஆர்ச்சும் வருகிறது இவை இரண்டும் மிகப்பெரிய ஆர்ச்சுகள் . இந்த ஆர்ச்சுகள் புத்த விஹாரம் இருப்பதற்குக் கட்டியம் கூறுகின்றன. இதில் மான், யானை போன்ற உருவங்கள் மூன்று அடுக்குப் பட்டைகளில் செதுக்கப்பட்டுள்ளன.

வெள்ளை ஆர்ச் வளைவு அரச இலையைப் பிரதிபலிப்பதா சொல்றாங்க. இந்த அரச இலை போதி மரத்தடியில் அவருக்கு ஞானம் கிட்டியதை உணர்த்துவதாக சொல்லப்படுது.

மஹாத்வாரா எனப்படும் மிகப் பிரம்மாண்டமான இந்த வாயில்களுக்குப் பக்கவாட்டிலும் சுற்றிலும் அழகான தோட்டம் இருக்கு. அங்கங்கே மரங்கள் எழில் கூட்டுது. போகன்வில்லாக்களும் பெயர் தெரியாத பூக்களும் மட்டுமல்ல சிங்கங்களும் யானைகளும் அந்தத் தோட்டத்திலும் வாயில் ஓரங்களிலும் அழகூட்டுகின்றன.

புத்த விஹாரை நோக்கி அண்ணல் அம்பேத்கார் செல்வது போலும் அவரைப் பின்பற்றி அவருக்கு நெருக்கமான அநேக தலைவர்கள் புத்தமதத்தைத் தழுவச்செல்வது போலும் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அம்பேத்கார் சிலை செம்பிலும் மற்றையோர் சிலை சிமிண்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 14, 1956 இல் நாக்பூரில் நடைபெற்ற தம்ம கிராந்தி யாத்ராவை நினைவூட்ட அமைக்கப்பட்டுள்ளது.


புத்த மதம் சமுதாயத்தில் மக்களை ஏற்றத்தாழ்வுகளுடன் நடத்தாத மதம் என்பதாலேயே அம்பேத்கார் இதைப் பின்பற்றியுள்ளார். அவரை பின்பற்றி புத்தசமயத்தைத் தழுவிய மக்கள் ஏராளம். அதைக் குறிப்பிடும் விதமாகவே இவ்வாறு சிலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

எல்லா புத்த விஹாரங்களிலும் இருப்பது போல் வலது பக்கம் மிகப் பெரும் மணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தனியே ஒரு ஸ்தூபி. மற்றும் நான்கு வாயில்கள்.இதற்கு சங்கல்ப ஸ்தூபி என்று பெயர். இது 26 அடி உயரமும் 30 அடி விட்டமும் கொண்டது. 100 க்கு 100 அடி உள்ள 2, 500 பேர் அமரக்கூடிய திறந்த வெளி தியேட்டரும், 4 பெரிய மஹத்வாரா என்று சொல்லப்படக்கூடிய வாயில்களும் சாஞ்சி கேட்ஸ் என்று சொல்லப்படக்கூடிய ஆர்ச்சுகளும் இருக்கின்றன.

நாற்புறமும் பாதைகள் அதன் ஒவ்வொரு முடிவிலும் 48 அடி உள்ள நாற்புறமும் சிங்கங்கள் பொறித்த அசோகர் தூண்கள் நான்கு உள்ளன. இவை துன்பம் , ஆசை/ பற்று, துன்பம் நீக்கல், துன்பத்தைப் போக்கும் எட்டு வழிமுறைகளை உணர்த்துகின்றன.

இந்த விஹாரம் தாஜ்மகாலின் அமைப்பை ஒட்டி இருந்தாலும் தாஜ் மஹால் முழுக்க முழுக்க வெள்ளைச் சலவைக் கற்களால் ஆனது ஆனால் இது கான்க்ரீட்டால் கட்டப்பட்டு இத்தாலியன் வெள்ளை மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பு  சாஞ்சி, சாரநாத் , ராஜ்கிரி, லும்பினி, புத்தகயா, அஜந்தா எல்லோரா, நாக்பூர், குசினாரா, தாய்லாந்து, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, திபெத் ஜப்பான், ரோமில் இருக்கும் பிரபல புத்தவிஹாரங்களின் அமைப்பை ஒத்திருக்கிறது.

இரண்டு தளங்கள். மூன்று பெரிய ஆர்ச்சு வளைவுகள் கொண்டதா இருக்கு இதனோட எண்ட்ரன்ஸ் ஒவ்வொரு ஆர்ச்சிலும் இந்த தர்மச் சக்கரம் நட்ட நடுவில் பதிக்கப்பட்டிருக்கு. இந்த விஹாரத்தின் மெயின் கட்டிட நுழைவாயிலிலும் இந்தச் சக்கரம் அரைவடிவில் பதிக்கப்பட்டிருக்கு. கீழே உள்ல காரிடார் நடைபாதையில் புத்தரின் சிமெண்ட் சிலைகள் அங்கங்கே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த ப்ரேயர் ஹால் 15, 625 சதுர அடி, நிலத்தில் 170 தூண்கள், 284 ப்ளாக்குகள் கொண்டதாக இருக்கு. கீழ் தளத்தில் தியான மந்திர் அமைந்திருக்கிறது. மினுமினுப்பான கறுப்புக் கிரானைட் கல்லில் புன்னகை சிந்தும் ஆறடி உயர புத்தர் சைத்யா (சிலை) அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. இதை வடித்தவர் ராமநகரம் பிடாதி என்ற இடத்தைச் சேர்ந்த சிற்பி அசோகா குடிகார் என்பவர். இங்கே ஒரு உயரமான பீடத்தில் பகவான் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க பக்கத்தில் ஒரு மெத்தையிடப்பட்ட ஆசனத்தில் முழங்கால் மடித்து அமர்ந்தபடி இரு புத்த பிஷுக்கள் ஆசியளித்தபடி காட்சி அளித்தனர். ப்ரேயர் செய்ய விரும்புபவர்களுக்கும் தனித்தனி மெத்தை ஆசனங்கள் போடப்பட்டுள்ளன. நாமும் முழங்கால் மடித்து குதிகால்களின் மேல் அமர்ந்து தியானம் செய்யலாம்.

இந்தப் பாதாள தியான அறையில் புத்தம் சரணம் கச்சாமி என்ற தம்மபத மந்திரம் ஒலிக்கக் கேட்கலாம். 1500 பேர் அமரக்கூடிய அளவில் இருக்கு இந்த மண்டபம். தர்மச் சக்கர வடிவில் சாளரங்கள். 28 பெரிய சாளரங்கள் வெவ்வேறு ஈராக்களில் வாழ்ந்த புத்தரின் பெயர் சூட்டி நிர்மாணிக்கப்பட்டுள்ளன.மேலே வட்ட வடிவமான ஸ்தூபி மற்றும் கட்டிடம். இதன் டோம் 70 அடி உயரமும் 59 அடி விட்டமும் கொண்டது.

அதன் உள்மேல் புறம் முழுவதும் சுற்றிலும் சிமிண்டில் வடைவமைக்கப்பட்ட புத்தரின் பூர்வீகக் கதைகளைச் சொல்லும் ஜாதக் (Jatak tales ) கதைகள், புத்தரின் சரித்திரம் மேலும் புத்தரின் த்ரிபீடகா ( சூத்திரங்கள் – மஹாயான சூத்திரங்கள், சுட்ட பீடிகா, அபிதர்மா – தத்துவ மனோதத்துவ விசாரங்கள், வினயா- புத்த துறவியருக்கான உடை உணவு உணர்வுக் கட்டுப்பாடு ) எனப்படும் போதனைகள் புத்தர் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன.   ஒவ்வொரு சாளரத்தின் கீழும் மூன்று மான், அல்லது மூன்று யானை,  போன்ற வடிவங்களும் போதி மரத்தடியில் புத்தர் அமர்ந்திருக்கும் காட்சியும் வடிக்கப்பட்டுள்ளது.

இங்கே மேலே உள்ள மண்டபத்தில் ஆசையை அறுமின் என்று கூறிய 8 அரை அடி உயரமுள்ள  புத்தரின் பஞ்சலோலகச் சிலை தங்க வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது புன்சிரிப்போடு திகழும்  தங்க புத்தரின் பின்னணியில் முன்னால் தர்ம சக்கரமும் ஊதுபத்தி மெழுகுவர்த்திகளும் வைக்கப்பட்டுள்ளன. ஒரு கையில் சின்முத்திரையும் இன்னொரு கையில் தாமரை தாங்கிய பாவனையில் விரல்கள் பிடித்தபடி இருக்கின்றன.

தென்னிந்தியாவில் மிகப்பெரும் சிலை இங்கேதான் இருக்கிறது. 2010 செப்டம்பரில் பாங்காங்கில், தாய்லாந்திலிருந்து வடித்துக் கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை இது. இவருடன் இவருடைய இரு முக்கிய சீடர்கள் ஆனந்தர், காஷ்யப் ஆகியோரும் கொண்டு வரப்பட்டு இவரின் இருபக்கமும் மண்டியிட்டு வணங்கும் நிலையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஹாலில் 500 பேர் அமர்ந்து தியானிக்க முடியும். மிக அழகான சிற்ப வேலைப்பாடு கொண்ட ரோஸ் மற்றும் தேக்கு மரக் கதவுகள் மூன்று புறமும் இருக்கின்றன. கெய்சர் அலி என்னும் சிற்பி அவற்றை வடிவமைத்திருக்கிறார். இதன் டோமில் 10 அடி உயர பஞ்சலோகக் கலசம் வைக்கப்பட்டிருக்கு.

இங்கே ஒரு மியூசியம் இருக்கு. அங்கேயும் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கு. இன்னும் இங்கே  ஆங்கில யூ வடிவில் அமைக்கப்பட்ட தம்மா காம்ப்ளெக்ஸ் என்ற கட்டிடத்தில் ஆடிட்டோரியம், டைனிங் ஹால், லைப்ரரி, படிக்குமிடம், சமையலறை, கான்ஃபரன்ஸ் ஹால், எக்ஸிபிஷன் ஹால், பிக்குகள் தங்குமிடம், கெஸ்ட் ஹவுஸ் போன்றவையும் இருக்கு. பிக்குகள் தங்குமிடங்களிலும் சிறிய புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மிக அருமையான இடம் இது. ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்று சொல்லிய புத்தரையும் புத்தமதமே நம் அனைவரையும் இனம் மதம் பிரிக்காமல் ஒன்று சேர்க்கும் என்று தம் மக்களை அழைத்துச் சென்ற அம்பேத்காரையும் ஒரு சேர அந்த மாலை நேரத்தில் தரிசித்துவிட்டு மனிதர் அனைவரும் ஒரு குலமே என்று உணர்ந்தோம்.

புத்தர் பஞ்சசீலக் கொள்கையை ஐந்து சீடர்கள் குழுமி இருக்க உபதேசிக்கும் வண்ணம் ஓவியம், கீழே கிரானைட் புத்தர் மேலே ஆனந்தர், காஷ்யபர் என்ற இரண்டு சீடர்கள் முன்னே மண்டியிட்டிருக்க தங்கச்சிலை புத்தர்., ஜன்னல்கள் எல்லாம் அசோகச் சக்கரவடிவில், மிகப் பெரும் மணி, அசோகச் சின்னம், அம்பேத்காரின் தம்மகிராந்தி யாத்ரா சிலைகள் ஆகியன ஸ்பெஷல்.

காட்சி நேரம். காலை 8 – 12, மதியம் 5 – 10. காட்சி நேரம்.

கௌதம புத்தர். உபதேசித்ததை மனதுள் உச்சரித்து வந்தோம்.

புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி


4 கருத்துகள் :

Geetha M சொன்னது…

அருமை நேரில் பார்த்த உணர்வு.. புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.நன்றி

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சகோதரி அருமையான விவரணம்! நல்ல தகவலும் கூட...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கீதா முயற்சிக்கிறேன். வாழ்த்துகள் விழா சிறப்புற.

நன்றி துளசி சகோ & கீத்ஸ்

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Nachiappan Narayanan சொன்னது…

arumai; i am go to ajantha;in oct 2015; also gulbarga; i want see; buddha in tamilnadu, kanchipurum ek-appara temple; buddhaism syomble;;

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...