எனது நூல்கள்.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க.சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4.
கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க. J

சென்னையிலிருந்து அல்லது திருச்சி , மதுரை , கோவையிலிருந்து நீங்க சிங்கப்பூர் சுற்றுலா செல்ல முடிவெடுத்தா முதலிலேயே அக்கம் பக்கம் நாடுகளுக்கும் விசா எடுத்துடுறது நல்லது. ஏன்னா சிங்கப்பூருக்கே ஒரு மாதம்தான் டூரிஸ்ட் விசாவில் செல்ல முடியும். அதே போல் அங்கிருந்தே மலேஷியா போகணும்னா முன்னாடியே இங்கேயே விசா வாங்கிட்டுப் போயிட்டா அலைச்சல் மிச்சம்.

டூர் அட்வைஸர் டிரிப் நிறைய இருந்தாலும் நீங்களே ப்ரீ ப்ளான் செய்து ஒரு டூர் ப்ளானர் போட்டுட்டு போய் பார்க்கிறது நல்லது. உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்குவதும் செலவைக் குறைக்கும். அல்லது அங்கேயே நம்மூர் ஆட்கள் நடத்தும் சில சத்திரங்களில் குறைந்த வாடகையில் தங்கவும் முடியும். பொதுவா பாஸ்போர்ட் பத்து வருடமும், விசா ஒன்பது மாதங்களும் செல்லுபடியாகும்.


எனவே ஊர் சுத்திப் பார்க்கக் கிளம்ப ஒரு மாதம் இருக்கும்போது விசா வேலைகளை ஆரம்பிக்கலாம். ஒரு வேளை தொடர்ந்து அங்கே தங்க வேண்டிவந்தாலும் ஒரு மாதத்துக்கு ஒரு தரம் அக்கம் பக்கம் உள்ள நாட்டுக்குப் போயிட்டுத் திரும்ப புதுப்பிச்சுக்கிட்டு வரணும்.

மலேஷியாவுக்கு இந்தியா போன்ற சில நாடுகளைத் தவிர உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த விசா இல்லாமலே போய் வரமுடியும். அப்புறம் முக்கியமான விஷயம் அந்த பாஸ்போர்ட் விசாவை கர்ணனின் கவச குண்டலம் மாதிரி கூடவே வச்சிருங்க. எல்லா இடத்திலும் கேட்பாங்க. அதுவும் காரிலேயே நாடு விட்டு நாடு போகும்போது ( எல்லை தாண்டும்போது )  கட்டாயம் தேவை. அங்கங்கே அனுமதி கடவுச் சீட்டும் காருக்கும் வாங்கணும். ஹவர்ஸ் கணக்குத்தான். அல்லது ஒரு நாள் கணக்கு.

நாங்க உறவினர் வீட்டில் இருந்து ஒரு விடுமுறை நாளில் காரில் சிங்கப்பூரில் இருந்து மலேஷியா ஜோகூர் பாரு வழியாக சென்றோம். ஜோஹூர் பாருவில்தான் என் மாமா ஆசிரியராக 90 களில் பணிபுரிந்திருந்தார். இந்த ஊரில்தானே பல்லாண்டுகளாகக் குடும்பத்தைப் பிரிந்து தனித்து வசித்திருந்திருப்பார் என்ற எண்ணம் சுழன்றது என் மனதில்.

மிகச் சுத்தமான சிறிய ஊர்கள்தான் அனைத்துமே. ஒரு இடத்தில் செக் போஸ்டைக் கடக்க வேண்டி வந்தது. அங்கே எங்கள் பாஸ்போர்ட்டைக் காட்டி சீல் அடித்துக் கொண்டு கடந்தோம்.

வந்தாச்சு கோட்டா டிங்கி வாட்டர் ஃபால் என்ற போர்டையும் கடந்தாச்சு. எங்கே இருக்கிறது என்று தெரியாமல் ஒரு மர்மமான இடத்தில் மறைந்திருக்கிறது கோட்டா டிங்கி நீர் வீழ்ச்சி. உள்ளே நல்ல கார்பார்க்கிங்க் வசதி உண்டு. அடுக்கடுக்காக கார்களை நிறுத்தும் வசதி உண்டு. அங்கே வாட்டர் தீம் பார்க்குகள் போல அழகான மர அமைப்பில் பாலமும் சில படகுகளும் சறுக்குமிடமும் இருந்தது. அப்படியே சறுக்கிச் சென்று நீரில் நீந்தலாம். நிற்கலாம். மிக ஆழமில்லாத நீரோட்டம்.

உள்ளே சென்று எண்ட்ரன்ஸ் டிக்கெட் வாங்கி கையில் பாண்டும் கட்டியாச்சு. ஒரு ஆளுக்கு RM 9 PP.  அதாவது ஒரு ஆளுக்கு எண்ட்ரன்ஸ் டிக்கெட் மலேஷியன் ரிங்கெட்டில் 9 பர் பர்சன். அப்ப ஒரு ரிங்கெட் 17.32 பைசான்னா கணக்குப் போட்டுக்கலாம். இங்கே இருக்கும் வாட்டர்தீம் பார்க்குகளில் நிறைய வாட்டர் கேம் இருக்கும் ஆனால் 300 முதல் 500 ரூபாய் வரை வாங்குவாங்க. ஆனா இதே அதிகம்னு ( 9 ரிங்கெட் ) மலேசிய மக்கள் சொல்றாங்க

இந்த பாண்ட் என்பது நீலக் கலரில் ஒரு வளையம். குழந்தை பிறந்தவுடன் கையில் அடையாளத்துக்கு மாட்டுவது போல ஒவ்வொருவரின் கையிலும் நானும் டோக்கன் வாங்கிட்டேன் என்பதன் சாட்சியாக இருந்தது அது.

ஆமாம் உள்ளேயும் வந்தாச்சு. அருவிச் சத்தமே கேக்கலையே எங்கே மறைந்திருக்கும் அருவி. ரொம்ப தூரம் போகணுமோ. தேடிக் கொண்டே நடந்தால் மணல் பாதையும் சிற்சில குட்டிப் பாறைகளும் வருகிறது. ஒரு வளைவில் அட இதோ வந்தே விட்டது அருவி. ஆனால் பிரம்மாண்டமான வானுயர எழும்பி அடிக்கும் அருவியல்ல. அகத்தியர் போலக் குள்ள அருவி. ஆனால் மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது. அது அதில் நனைந்ததும் புரிந்தது.

ஒரு குட்டைப் பாறையிலிருந்து சடசடவெனெ அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது அருவி. அட சட் இதுதானா இதுக்குத்தானா இத்தனை தூரம் வந்தோம் என்று சப்பென்றாகிவிட.. எங்கள் உறவினர் வாருங்கள் இங்கே என் மனைவி வந்தால் தண்ணீரை விட்டு எழுந்து வரமாட்டாள் அங்கேயே தியானம் செய்வது போல அமர்ந்திருப்பாள் என்றார்.

சரி என்று அங்கே நீர் விழும் இடத்துக்குச் செல்ல இறங்கினோம். சில மரங்களும் சொரசொர பாறைகளும் அதன்பின் வழுக்கும் பாறைகளுமாக மெல்ல கையைப் பிடித்தபடி இறங்கினால் இடுப்பளவு பள்ளமான நீர் அதன் அருகே கைகெட்டும் தூரத்தில் அருவி. மெல்ல கால் வழுக்காமல் நடந்தால் அருவியைப் பிடிச்சாச்சு.

கற்றை வெண் கயிறைப் போல தட் தட் என்று அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது அருவி. லேசாகத் திரும்பி அதன் பாறைப் பக்கம் முதுகைச் சேர்த்து தலையை நனைத்த என் கணவர் அந்தப் பரமானந்தத்தில் கண்களை இறுக மூடி ஒரு ஆனந்த தவம் செய்பவர் போல ஆனார். கொஞ்சம் மிரட்சியோடு காதுக்குள் தண்ணீர் போய்விடுமோ என்ற பயத்தோடு நானும் தண்ணீருக்குள் தலையை நனைத்தேன். அஹா அஹா ஆனந்தம். தலையில் தபலா வாசித்தது நீர்.

ஆனந்த பைரவியா மோகனமா யார் கண்டா. கண்களை இறுக மூடிக் கொண்டு தண்ணீர்த் தவத்தில் ஆழ்ந்திருந்தோம் மனிதக் கொக்குகளாய். தலையையும் முதுகையும் அடித்துப் புரட்டி மசாஜ் செய்தபடி ஓடிக் கொண்டிருந்தது நீர். பார்க்கத்தான் குட்டையான அருவியே தவிர அதன் அடி சும்மா உங்க அடி எங்க அடி இல்லை. தவில் முழங்குவதுபோல முழங்கித் தீர்த்துவிட்டது.

உடலைத் துவைத்தது போல ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டவுடன் கொஞ்சம் விலகி சேர்ந்து பின் விலகி சேர்ந்து குளித்துவிட்டுக் கரையேற மனமில்லாமல் அரைமணி நேரத்துக்குப் பின் கரையேறினோம். பெண்களுக்கு உடை மாற்றும் அறை தனியாக உண்டு. அது அந்த மரப்பாலத்தில் ஏறிச் சென்று மாற்றிக் கொள்ளலாம். அங்கே ரெஸ்ட் ரூமும் இருக்கிறது. சேஃப்டி & செக்யூரிட்டி மற்றும் சுத்தமாகவும் இருக்கு.

குளித்தபின் கொள்ளைப் பசி எடுத்தது. அங்கே உணவு கொண்டு செல்ல அனுமதி இல்லை.  எனவே காரில் வைத்திருந்த உணவைச் சாப்பிட்டு காது தலை எல்லாம் குளுகுளுக்க உடம்பை சலவைக்குப் போட்டு எடுத்த புத்துணர்வோடு வந்து சேர்ந்தோம். எங்க கிளம்பிட்டீங்க. நீங்களும் கோட்டா டிங்கியில் வாட்டர் வாஷ் செய்துகொள்வதற்கா. :)

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க. 

1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
 
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS. 


இவற்றையும் பாருங்க :-

இன நல்லிணக்கம்.

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும். 

சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும். 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK. 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.  

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க. 

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :- 

சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

 சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.


6 கருத்துகள் :

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

பயண அனுபவம் நல்லாயிருக்குங்க...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

எந்த தேதியில்?

Thenammai Lakshmanan சொன்னது…

இது சில வருடங்களுக்கு முன் கோடையில் சென்றது.. நிஜாம் சகோ.

நன்றி நிஜாம் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாட்டர் வாஷ்.... ஆஹா... அருவிகளில் குளிப்பது பேரானந்தம்.....

நல்லதொரு இடத்தினை எங்களுக்கும் சுற்றிக் காண்பித்தமைக்கு நன்றி சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...