சனி, 27 ஜூன், 2015

ஜலதான சிறப்புப் பெற்ற ருக்ஷ்மணி தேவி ஆலயம்.

”சிறையில் பிறந்தவனை மணந்து கொள்ள ஜென்மம் ஜென்மமாய்த் தவமிருந்தவளே சித்திரம் போன்ற அழகி ருக்‌ஷ்மணி” என்று பாடிக்கொண்டிருந்தார்கள் துவாரகையிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ருக்மணி கோயிலில்

கிருஷ்ணரின்  எட்டு மனைவியரில் முக்கியமானவரும் முதன்மையானவரும் பட்டத்து ராணியான ருக்மணி தேவியே. இவர் லெக்ஷ்மியின் அம்சம். இவர் இங்கே இருக்க கிருஷ்ணர் துவாரகையில் கோயில் கொண்டிருக்கிறார்.அது சரி கிருஷ்ணர் துவாரகையில் இருக்க அவரின் சரிபாதியான இவர் ஏன் இங்கே இருக்கிறார்.

ஒரு முறை ருக்மணியும் கிருஷ்ணரும் துர்வாச மகரிஷியைத் துவாரகைக்கு எழுந்தருளும்படிக் கேட்டு அழைக்கச் சென்றிருந்தார்கள். தன்னுடைய ரதத்தை கிருஷ்ணரும் ருக்மணியும் ( காளைகளுக்குப் பதிலாக ) இழுத்துச் செல்வதாக இருந்தால் அவர் துவாரகைக்கு வருவதாகக் கூறுகிறார்.
ஒப்புக்கொண்ட தம்பதியர் அவரை ரதத்தில் வைத்து இழுத்து துவாரகைக்கு அழைத்து வருகிறார்கள். ருக்மணி பட்டத்து ராணியல்லவா. கடின வேலைகள் செய்து பழக்கமில்லை. மேலே தகிக்கும் சூரியன். நெற்றியிலிருந்து வியர்வை ஆறாகப் பெருகுகிறது. அவருக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது.

பகவானைப் பார்க்கிறார். மனைவியின் தாகமும் தவிப்பும் பொறுக்க இயலாத  பெருமான் மனமிரங்கி தன் பெருவிரலால் பூமியைக் கீறுகிறார். பகவான் அழைத்ததால் கங்கை பொங்கிப் பிரவகித்தாள் அவரின் பாதத்தடியில் இருந்து.  தாகவிடாயால் தவித்த ருக்மணி துர்வாசரின் அனுமதி பெறாமல் அந்தத் தண்ணீரைப் பருகி விடுகிறாள்.

சில இடங்களில் ருக்மணி துர்வாசரின் அனுமதி பெறாமல அவரின் கமண்டல நீரைக் குடித்ததாகக் கூறுகிறார்கள். உடனே கோபம் கொண்ட துர்வாசர் ருக்மணியை பகவானைப் பிரிந்து அங்கேயே 12 வருடங்கள் இருக்கும்படிச் சபித்து விடுகிறார்.

மேலும் துவாரகையில் உள்ள நீர் இனிப்பாக இருக்கும் என்றும். இங்கே இருக்கும் நீர் உவர்க்கும் என்றும் சாபமளித்து விடுகிறார்.

எனவே சாபம் தீரும்வரை ருக்மணி இங்கே கோயில் கொண்டு விடுகிறார். அவருக்காகக் கட்டப்பட்ட இது 12 ஆம் நூற்றாண்டுக் கோயில். பெய்ட் துவாரகையிலிருந்து 12 கிமீ தூரத்தில் உள்ளது. வடநாட்டு அமைப்பிலேயே கோயில் இருந்தாலும் அது மற்ற வட இந்தியக் கோயில்களைப் போலன்றி கற்களால் கட்டப்பட்டுள்ளது.  கோபுரங்களில் கற்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.  ஆனால் உப்புக்காற்றின் அரிப்பாலோ என்னவோ பல சிற்பங்கள் சிதலமடைந்துள்ளன.

ஆமாம் இதுக்கும் ஜலதானத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றீர்களா. இங்கே ருக்மணி தாகவிடாயால் தவித்தபோது பகவான் கங்கையை அழைத்து தாகம் தீர்த்ததால் இங்கே பித்ருக்களுக்கு ஜலதானம் செய்வது விசேஷம்.

அங்கே தீப ஆரத்திக்கு முன் ஒரு பண்டிட் ( பாபாஜி என்றும் சொல்கிறார்கள் ) வந்து இந்தக் கோயிலின் புராணம் பற்றியும் ஜலதானத்தின் சிறப்புப் பற்றியும் நாம் நம் பித்ருக்களுக்கு ஜலதானம் அளிக்க வேண்டியதன் சிறப்புப் பற்றியும் கூறினார். ஒரு நாள் அரை நாள் என்று கட்டண விகிதங்கள் உள்ளன.

திரை மூடி தீபம் காண்பிக்கு முன் இதை அறிவித்தார் பண்டிட் ஜீ. அடுத்துத் திரை விலக்கி  சௌராஷ்டிர தேசத்தின் வெண்மையான நிறத்தில் முன் பக்கம் பூராவும் நீண்ட ஹாரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ருக்மணி தேவிக்கு இன்னொரு பண்டிட் ஜீ  ஜல அர்ப்பணம் செய்து வெளியே அந்த கர்ப்பக்கிரகத்தின் உள்ளேயே மூன்று திசைகளில் பஞ்சபாத்திரத்தில் இருந்து நீரை வீசினார். அந்தத் திசைகளில் துர்வாசரை பகவானும் தேவியும் தேரில் சுமந்து சென்ற சித்திரங்கள் இருந்தன.

பூக்களை இரு கைகளாலும்  அள்ளி எடுத்து சுற்றிச் சுழற்றி உயரத் தூக்கி நளினமாகத்  தூவியதோடு   அவளின் பேரழகை வியந்து இரு கைகளாலும் தன் நெற்றியில் சுழற்றி வைத்து திருஷ்டி கழித்தார். அதன் பின் 5 வரிசை உள்ள நாக தீபம் காட்டப்பட்டது.

திருஷ்டி கழித்த அழகு சொல்லில் மாளாது. அவ்வளவு அழகு. முன்னோர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்க ஜலதானம் செய்வது சிறப்பென்பதால் பெருங்கூட்டமான மக்கள் ஜலதானத்திற்கு பணமளித்தார்கள். ஒவ்வொருவருக்கும் பண்டிட் ஜீக்கள் தோளில் மஞ்சள் நிறத் துணிகள் அணிவித்து முடிபோட்டு கௌரவித்ததோடு பிரசாதங்களும் கொடுத்தார்கள்.

வெளியே வந்து ப்ரகாரத்தில் கோயில் ப்ரசாதமான ஜலத்தைக் ( டம்ளர்களில் ஊற்றி வைத்திருந்தார்கள் ) குடித்துவிட்டு பிறவிப்பயனை அறுக்குமாறு வேண்டி வந்தோம்.

6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்த வரலாற்றை இன்று தான் அறிந்தேன்... நன்றி...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கிருஷ்ணருக்கு எட்டு மனைவியரா?!! புதிய தகவல் அறிந்தோம். கதைகளும் புதிது.....படங்கள் அருமை!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பானதோர் கோவில். நாங்கள் இங்கே சென்ற போது மாலை நேர ஆரத்திக்கான சமயம். ஆரத்தி பார்த்துவிட்டு கோவிலில் உள்ள சிற்பங்களை ரசித்து திரும்பினோம்.

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

சிறப்பான தல வரலாற்றோடு கோயில் பற்றிய பகிர்வு அருமை!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி துளசி சகோ

நன்றி வெங்கட் சகோ

நன்றி தளிர் சுரேஷ்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...