புதன், 10 ஜூன், 2015

பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

மைசூர் சுற்றிப்பார்க்கச் சென்றிருந்தபோது மாலை வேளையில் பிருந்தாவன் கார்டன் சென்றோம்.டேமுக்குப் போகும் வழியில் எல்லாம் ஒரே பச்சை பசேல் என விரிந்து கிடக்கிறது கர்நாடகாவின் பசுமை வயல்கள்.

முன்பு எல்லாம் ஹனிமூன் போகும் தம்பதிகள் தேர்ந்தெடுக்கும் இடமாக ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு போல பிருந்தாவனுக்கும் செல்வார்கள். நாங்கள் சென்றது ஒரு கோடை விடுமுறையில்.


பள்ளிப்பருவத்தில் சென்றது அதன் பின் கல்லூரிப் பருவத்தில். அதன் பின் இப்போதுதான் செல்ல முடிந்தது. அதுவும் அந்த சமயம் பெங்களூருவில் இருந்ததால். பள்ளி பிக்னிக்கின்போது மதகுகள் சின்ன அளவில்  இருந்ததால் அதன் பக்கம் நீர் அடித்து வெளியேறுவதைக் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி நின்று பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். இப்போது அணை நீர்ப் ப்ரச்சனைகள் வேறு. எனவே டேம் திறக்கவெல்லாம் இல்லை.

கிருஷ்ணராஜ சாகர் டேம் பிரம்மாண்டமாய் நிற்க அதன் மதகுகள் அடைக்கப்பட்டு ஒரு யானை போல கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. அதிலிருந்து வந்த நீர் ஏரி போல தேங்கிக்கிடந்தது. அதன் இருபக்கங்களிலும் தோட்டம். நடுவில் ஒரு நீர் பம்பிலிருந்து நீர் பொங்கிக் கொண்டிருந்தது.


அட நாம் போன சமயமும் கோடை விடுமுறையாதலால் பள்ளிக்குழந்தைகள் கூட்டம்தான் எங்கும். யூனிஃபார்மில் வேறு அழைத்து வந்திருந்தார்கள். தொலைந்துவிடக்கூடாதல்லாவா. அதான்.வெளியே பஜ்ஜி போண்டா, மீன் வறுவல் கடைகள், மசாலா பொரி, பொரிகடலை, மிளகாய் பஜ்ஜி கூல்ட்ரிங்க்ஸ் எனப் பரபரப்பாக இருந்தது. நிறைய வண்டிகள் வந்தால் நிறுத்த பெரும் இடத்தைப் பாதையாக்கி பார்க்கிங் விட்டு ஒதுக்கி இருந்தார்கள்.

சினிமாவில் நாம் பார்த்திருப்பதும் முன்பு பார்த்திருப்பதும் போக இப்போது மிக விரிவடைந்திருக்கிறது. பிருந்தாவனம். எங்கெங்கும் தோட்டம் எங்கெங்கும் கூட்டம். மலர்கள், பொங்கி அடித்து வீழும் நீர் , தவழ்ந்து வரும் நீர். சன்னமாய் ஃபவுண்டன்களிலிருந்து பன்னீர் போலத் தெளிக்கும் நீர் என கோடைக்குக் குளுமையாயிருந்தது தோட்டம்.

இந்தப் பக்கம் அழகாக வடிவமைக்கப்பட்ட தோட்டமும் பல்வகைப்பூக்களும் பூ அமைப்புகளும் டோபியரி கார்டன் எனப்படும் செடிகளை வெட்டி உருவங்களை செதுக்கியும் இருந்தார்கள். இங்கே விதம் விதமான ஆர்க்கிட் வகைப்பூக்களும் டேலியா கினியா ரோஜாக்களும் கலர் கலரான க்ரோட்டன்ஸுகளும் அழகூட்டிக்கொண்டிருக்கின்றன. படிப்படியாக நீர் அணைத்தபடி ஓடி வருகிறது.

இன்னொரு பக்கம் செல்ல அணையைக் குறுக்காகக் கடந்து செல்ல வேண்டும்

மிக நீளளளமான பாலத்தைக் கடந்து சென்றால்  அங்கேதான் இந்த இசை நீரூற்றின் வண்ண நடனம். 95 களில்  டெல்லியிலும் , 2009 இல் துபாயிலும் கண்டு களித்த இந்த இசை நீரூற்றின் வண்ண நடனத்தை இங்கேயும் கண்டு களித்தோம்.

அரை மணி நேரத்துக்கு ஒரு முறை நிகழ்த்தப்படுகிறது. 6.30 க்கு ஒன்று , 7 மணிக்கு ஒன்று. மூன்று அடுக்கு தோட்டத்தை மேலே மேலே ஏறிக்கடக்க இந்தக் கூடம் போன்ற அமைப்பு வருகிறது. நடுவில் ஃபவுண்டன் சும்மா இருக்கிறது. அனைவரும் கூடிய வேளை நன்றாக இருள் சூழத்துவங்கிவிட்டது இரவு ஏழு மணி.எரிந்துகொண்டிருந்த ட்யூப்லைட்டுகளை அணைத்துவிட்டார்கள்.

கரு கும்மென்ற இருட்டில் ஹிந்திப்பாடல் ஒலிக்க இசை நீரூற்று ஜம்மென்று மேலே எழும்பி வர்ணஜாலங்களைக் காட்டத்துவங்கிவிட்டது. பச்சை, நீலம், மஞ்சள், அரக்கு, சிவப்பு, வயலட், என வண்ணக் கலவை தெளித்துக்கொண்டிருந்தது இரவின் மேல்.

பாடியபடி கரவொலி எழுப்பியபடி ரசித்துக் கொண்டிருந்தோம். இளையர்கள் அனைவரும் கையில் செல்ஃபோனில் படம் பிடித்தார்கள். குளுகுளுவென்ற இரவில் பூச்செடிகளின் நறுமணம் சூழ வண்ண வண்ணமாய் இசைக்கேற்ப நெளிந்தாடிய அந்த நீரூற்று மிக அற்புதமாக மனதை நெகிழ்விக்கும் விதமாக இருந்தது.

அரை மணி நேரம் இந்த ஷோ முடிந்ததும் முடிவில் ஒரு பெரிய அளவு உயரத்தில் அந்த நீரூற்று உயர்ந்த இசையோடு அடர் சிவப்பு வண்ணத்தோடு எழும்பி அடங்கியதும் ஹோ வென்ற கூச்சல். கைகோர்த்து உரையாடியபடி ஜோடிகள் பிரிந்து நடக்கத்துவங்கினார்கள். ட்யூப்லைட்டுகள் ஒளிரத் துவங்கின.

மாறி இருக்கும் பிருந்தாவனத்தில் ஒளிவித்தையைப் பார்த்துவிட்டு நந்தகுமாரனைப் பார்க்காமல் வந்துவிட்டோமே என்று நினைத்தபடியே திரும்பி வந்தோம்.

மைசூரிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
திறந்திருக்கும் நேரம் - காலை 6 - மாலை 8 வரை.
ம்யூசிக் ஃபவுண்டன் ஷோ -
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 6.30 - 7 .30.
சனி ஞாயிறில் இரவு 6.30 - 8. 30.
எண்ட்ரன்ஸ் டிக்கெட் பெரியவர்களுக்கு ரூ  15 , குழந்தைகளுக்கு ரூ 5.

சென்று பார்த்துக் களித்துக் கோடையை வண்ணமயமாக்கி  வாருங்கள்.

டிஸ்கி :- ஏப்ரல் 16 - 30 , 2015 ஷெனாய் நகர் டைம்ஸில் வெளியானது.  

டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
 

7 கருத்துகள் :

R.Umayal Gayathri சொன்னது…

புகைப்படங்கள் அழகு....

முன்பு சென்றது.....நிறைய மாறி இருக்கிறது தான்...படங்களை பார்க்கும் போது தெரிகிறது.

இப்போ உங்க மூலமா பார்த்தாச்சு...நன்றி சகோ.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரைட்டு... சென்று ரசிக்கிறோம் சகோதரி...

கீத மஞ்சரி சொன்னது…

கண்ணைக் கவரும் அழகிய காட்சிகளின் அணிவகுப்பு. அருமை. பாராட்டுகள் தேனம்மை.

G.M Balasubramaniam சொன்னது…

பலமுறை பிருந்தாவன் கார்டனுக்குச் சென்றதுண்டு. அண்மையில் குழந்தைகளுடன் சென்றோம் கூட வந்திருந்த இளைஞர் அணியினர் வறுத்த மீன் வாங்கச் சென்றனர் கூட்டத்தின் முடிவில் மீன் வறுவல் வாங்கியபின் உள்ளே சென்றால் எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்துவிட்டிருந்தன. பதிவர் ஒற்றுமை ஓங்குக.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பல முறை சென்றதுண்டு....படங்கள் அருமை! உங்கள் வர்ணனையும்....

ஷெனாய் நகர் டைம்ஸில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள் சகோதரி!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி உமையாள் காயத்ரி :)

நன்றி டிடி சகோ

நன்றி கீத்ஸ்

அஹா அடுத்தமுறை கட்டாயம் பார்த்திடுங்க பாலா சார்

நன்றி துளசி சகோ & கீதா மேம் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...