திங்கள், 20 ஏப்ரல், 2015

பிதார் கோட்டையும் 16 தூண் மசூதியும். ( BIDAR FORT AND SOLAH KAMBAH MOSQUE )
கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா இந்த மூன்று நகரங்களின் எல்லையிலும் அமைந்திருக்கும் கர்நாடகாவின் க்ரீடம் என்று சொல்லப்படும் பிதார் கோட்டையைக் காண  சில மாதங்கள் முன்பு சென்றிருந்தோம்.கர்நாடகாவின் தக்காணப் பீடபூமியில் இது அமைந்துள்ளது.

இத முழுசா பார்க்கணும்னா நாம் கிறிஸ்துவுக்கு முற்பட்ட மூன்றாம் நூற்றாண்டுக்குப் போகணுமாம். மௌரியர்கள், சதவாகனர்கள், கடம்பர்கள்,  சாளுக்கியர்கள், அதன் பின் ராஷ்டகூடர்கள் என்று பலரின் அரசாட்சியில் இது இருந்துள்ளது. அதன்பின் செவுனாக்கள், காகதியாக்கள் அதன்பின்  கில்ஜிக்கள், சுல்தான்கள் கைக்கு மாறியது.


பஹாமனி ( நாம் பாமினி அரசர்கள் என்று சரித்திரப் பாடத்தில் படித்தவர்கள்தான் ) சுல்தான்கள் ஆட்சியில் இந்தக் கோட்டை  அஹமது ஷா என்ற பஹாமனி சுல்தானால் 1422 இல் கட்டப்பட்டுள்ளது. மஞ்சீரா என்ற நதிக்கரையில் இது அமைந்துள்ளது.

பாரசீகக் கட்டடக் கலையைக் கொண்டு கட்டப்பட்ட இக்கோட்டையில் விவசாயத்துக்கான தண்ணீர் சிக்கலான காரெஸ் என்ற அமைப்பு முறையில் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்பக்க வாயில் இஸட் அமைப்பில் சிக்ஜாக் அமைப்பில் 3 கேட்டுகளுடன் கட்டப்பட்டது.

7 பெரிய வாயில்களும்,  3 அகழிகளும், 37 ட்ரப்பீசிய வடிவ அரண்களும் கொண்டு, ( இதிலிருந்துதான் மதிலைக் கைப்பற்ற வரும் எதிரிகள் மேல்  காய்ச்சிய எண்ணெய் கொண்டு ஊற்றுவது, பீரங்கி பொருத்தி வெடிப்பது எல்லாம் ) இன்னும் பல நிலவறைகளும், சிக்கலான சுரங்கங்களும் கொண்டது இந்தக் கோட்டை.

சினிமாவில் ஹீரோ ஹீரோயின் நடனமாட  நாம் பார்க்கும் பளபளா கோட்டைகளுக்கும் பாதிக்குமேல் இடிந்து பாழாகிக் கிடக்கும் இந்தப் புராதனக் கோட்டைகளுக்கும் லவலேசமும் சம்பந்தமில்லை. எல்லாம் காமிரா செய்யும் மாயம்.


சோலே கம்பா மசூதி, தாரகேஷ் மஹல், ககன் மஹல், பிதார் கோட்டை ஆகியன இங்கே இருக்கின்றன. ( அப்பிடின்னு போர்டு சொல்லுது. ) எல்லாத்தையும் வெளியிலேருந்தான் பார்த்தோம். காமிரா விழுந்துடாம வேற பிடிச்சு சின்ன ஓட்டை இருந்த எல்லா இடத்திலும் கைவிட்டு ஃபோட்டோ எடுத்தேன். ( விழுந்துச்சோ தொலைஞ்சுச்சு ). உள்ளே பிரம்மாண்டத் தூண்கள். வெளியே இருந்து பார்த்தாலே 16 தூண்கள் தெரிஞ்சது. பிரம்மாண்டக் கதவுகள். முக்கிய நாட்களில் இவை திறக்கப்படும்போல. பெயிண்ட் அடிச்சுப் பளபளன்னு இருந்தது.

1423 -24 இல் கட்டப்பட்ட சோலே கம்பா மசூதி  பிதாரின் புராதன மசூதி மட்டுமில்ல இந்தியாவிலேயே மிகப் பெரும் மசூதியாம். பிதார் கோட்டையின் அதிகாரபூர்வ மசூதியான இது மஸ்ஜித் இ ஜாமின்னு அழைக்கப்பட்டது. 16 தூண்கள் இதன் மையப்பகுதியில் ப்ரேயர் ஹாலில் அமைந்துள்ளதால இது சோலே கம்பா ( ஹிந்தியின் பதினாறு தூண்கள் மசூதி ) மஸ்ஜித்துன்னு அழைக்கப்படுது.

தக்காணப் பீடபூமியின் கட்டிடக் கலையைப் பின்பற்றிக்கட்டப்பட்டுள்ளது இது. பெரிய ப்ரேயர் ஹாலான இதுமிகப் பெரும் சர்குலர் வடிவத்துல ஜன்னல்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் காலக் கட்டத்தில் இந்தியாவில் கட்டப்பட்ட எல்லா மசூதிகளிலும் இருப்பது போல் இல்லாமல் இதன் தூண்களில் உள்ள வடிவங்கள் மிக எளிமையா இருக்கு.

அதன் உச்சியில் மிக அழகாக வடிவமைக்கப்பட்ட கோபுரம் இருக்கு. புவியியல் அமைப்புப் படி மிக வித்யாசமாக வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்ட மசூதி இது. இதன் சிறப்பம்சம் என்னன்னா இதன் மேல்தளத்திலும் தண்ணீர் கிடைக்கும். மோட்டார் எல்லாம் இல்லாத அந்தக் காலத்திலும் குழாயின் மூலமா ஒரு வகை சுழற்சியில தண்ணீரை மேலே கொண்டு  போயிருக்காங்க

பொதுவா மசூதிக்கு வர்ற ஆண்கள் கை கால் சுத்தம் செய்துகிட்டுத்தான் ப்ரேயர் பண்ணப் போவாங்க. அதுக்கு ஏற்றாற்போல கீழ் தளத்திலும் மேல் தளத்திலும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு. தண்ணீர்க் குழாய்கள் சுவற்றில் மேற்குச் சுவரில் பதிக்கப்பட்டிருப்பதன் அடையாளம் தெரியுதுன்னு சொல்றாங்க.

1656 இல் ஔரங்கசீப் இந்தக் கோட்டையை வெற்றி கொண்டபின் தன்னோட வெற்றியை வென்ற கோட்டையின்மேல் உறுதி செய்ய இங்கேதான் (குத்பா ஓதுதல் ) தன் தந்தையின் பெயரால் ப்ரேயர் செய்தாராம். . 
 
இதன் நடுவில் இருக்கும் முகல் கார்டன் போன்ற தோட்டம் அழகு. !

ஓரளவு பார்க்கும் அளவு இருந்தவை சோலே கம்பா மசூதியும் தர்கேஷ் மஹாலும்தான். ,  சுல்தானின் துருக்கிய மனைவிக்காகக் கட்டப்பட்டதாம். அதன் பக்கத்திலேயே சோலே கம்பா மசூதி. அதாங்க பதினாறு தூண் மசூதி. தக்த் மஹால், ரங்கீன் மஹால் எல்லாம் வெளியே போர்டு  பாத்ததோடு சரி. பூட்டுப் போட்டு வைச்சிருக்காங்க.

எவ்வளவு பக்கா, எத்தனை ஆயிரம் உயிர்கள், எவ்வளவு போர்கள், அத்தனையும் கடந்து அதன் சாயலும் சுவடும் சுமந்து உடைந்து விழுந்து  கரைந்து கிடக்கிறது கோட்டை. சொல்லமுடியாத விஷயங்களையும் துயரங்களையும் கடந்து அமைதியாய் இருக்கிறது. எப்படித்தான் இந்தக் கோட்டைகளைக் கட்டி ஆண்டார்களோ தெரியவில்லை. இப்போது இடிந்து கிடக்கும் புராதனச் சின்னமாக இருக்கின்றன. 

மேலதிகத் தகவலுக்கு இவற்றையும் பாருங்க.

பஹாமனி ஆட்சி 1 http://islamarivom.blogspot.in/2014/08/1_23.html

பஹாமனி ஆட்சி 2 http://islamarivom.blogspot.in/2014/08/2_23.html

8 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பிரமாண்டம்...

S.P. Senthil Kumar சொன்னது…

தாங்கள் பயணி இதழில் இதை எழுதிய போதே வாசித்துவிட்டேன். அருமையான பயணக் கட்டுரை. வரலாற்று தகவல்களும் சிறப்பு.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பிரும்மாண்டமான படங்கள். பிரமிக்க வைக்கும் செய்திகள். பகிர்வுக்கு நன்றிகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான தகவல்கள்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அட!! அழகான புகைப்படங்கள்! மிக மிகச் சிறப்பானத் தகவல்கள்! எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றோம் சகோதரி! இணையன பதிவு ஒன்று இடும் போது உங்களைச் சொல்லிப் பகிரலாம் என்று !!!

பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி! நிறைய மிஸ் செய்திருக்கின்றோம்....

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மேல் தளத்திற்குத்தண்ணீர் கொண்டு செல்லும் முறை அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கின்றது....ஆனால் இந்தக் கோட்டைகள் எல்லாம் நீங்கள் சொல்லி இருப்பது போல் எத்தனை உயிர்களை உள்ளடக்கி உள்ளதோ....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி செந்தில் சார்

நன்றி கோபால் சார்

நன்றி வெங்கட் சகோ

அஹா மிக்க நன்றி துளசிதரன் சகோ நிச்சயம் தகவல்களை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...