வெள்ளி, 31 அக்டோபர், 2014

குஜராத்தில் கொண்டாடப்படும் கணபதியும் கவனம் பெறவேண்டிய கார்த்திக் ஸ்வாமியும்.


குஜராத்தில் ( சோம்நாத்தில் ) வேராவலில்( VERAVEL)  பிடியா என்ற இடத்தில் உள்ளது கார்த்திக் சாமி மந்திர். இவர் நம்ம முருகர்தான். வடநாட்டு மக்களுக்குக் கார்த்திக் என்று சொன்னால்தான் புரியும்

வேராவல் என்ற கடலோர நகரம் குஜராத்தில் 13 ஆம் நூற்றாண்டில் ராவ் வேராவல்ஜி வதேர் என்ற ராஜ்புத்திரரால் கண்டுபிடிக்கப்பட்டு ஜுனாகத் குடும்பத்தினரின் பேர் பெற்ற துறைமுகமாக விளங்கியது. இது ப்ரபாஸ் பட்டன் என்று அழைக்கப்படும் புனித சோம்நாத்தின் திறவுகோல் நகராகும்.

தமிழகத்தில் இருந்து ரேயான் நூவோ கம்பெனிக்கு தொழிலாளிகளாக வேலை செய்ய சிலர்  வேராவலுக்கு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் சென்றுள்ளனர்.இவர்கள் இணைந்து தம் கடவுள் வழிபாடு நிகழ்த்த உரிய இடம் வேண்டும் என்று எண்ணி அங்கே பிடியாவில் இருந்த பூத் பங்களா என்ற இடத்தில் அதன் உரிமையாளரிடம் கேட்டு வெற்றிடமாக இருந்த அந்த இடத்தில் முருகன் படத்தை வைத்து குடிசை போன்ற அமைப்பை உருவாக்கி வழிபட்டு வந்துள்ளார்கள். இதில் ரேயான் நுவோ கம்பெனியைச் சேர்ந்த பலரும் பங்கெடுத்து வழிபாடு நடத்தி வந்துள்ளனர். அவர்களும் ஏ. செல்லத்துரை என்ற திருநெல்வேலிக்காரர் குறிப்பிடத்தக்கவர். இவருடைய மகன் பால சுப்ரமணியன் ஓம் சரவணபவ ஓம் என்று ஒரு அமைப்பை நிறுவி அங்கே முருகன் கோயிலின் எல்லா வழிபாடுகளும் எல்லாத் திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறவேண்டும் என்று தமிழ் மக்களின் சார்பாகப் போராடி வருபவர்.


கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு எல்லாத் தமிழக மக்களும் அங்கே பிழைக்கச் சென்றவர்கள் என்பதால் அவர்களால் அதிகம் செலவழித்து மண்டபம் அமைக்க முடியவில்லை. தினப்படி அபிஷேகம் அலங்காரம் வழிபாடு என்று செய்துவந்தவர்கள் பொங்கல் மட்டும் அனைவரும் இணைந்து வழிபாடு செய்து கொண்டாடி இருக்கிறார்கள்.

பொங்கலின் போது அனைவரும் பணம் போட்டு கலெக்ஷன் செய்து அன்னதானம் அளித்துக் கொண்டாடி இருக்கிறார்கள் அப்போது செல்லத்துரை அவர்களும் இன்னும் அவரது நண்பர்கள் சிலரும் இணைந்து அங்கே அம்புஜா சிமிண்டில் மிகப்பெரும் பதவியில் பணிபுரிந்த ராமமூர்த்தி என்பவரிடம் சென்று முருகருக்கு அர்ச்சாரூபம் செய்ய வேண்டிக் கேட்டு இருக்கிறார்கள். அவரும்  ஆலயம் இல்லாமல் எங்கே சிலை வைப்பீர்கள் என்று கேட்டுள்ளார்.

பின் அவரே ஆலயம் எழுப்பும் செலவை ஏற்றுக்கொள்வதாக கூறி அதில் வைக்க வேண்டிய சாமி சிலைக்கு என்ன செய்வதாகத் திட்டம் என்று கேட்ட போது தமிழகத்தில் இருந்து முருகரின் சிலையை செய்து எடுத்து வரும் பொறுப்பைத் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக செல்லத்துரை அவர்களின் தலைமையில் ஒரு குழு ஒப்புக்கொண்டதாம்

மேலும் தினப்படி தெய்வ வழிபாடு விட்டுப்போகாமல் சிறப்பாக நடைபெற வேண்டும் அதைக் கவனித்துக்கொள்வதாக வாக்களித்தால் அனைத்தையும் தான் ஏற்றுக்கொண்டு அமைத்துத் தருவதாகக் கூறிய அம்புஜா சிமெண்ட் ராமமூர்த்தி அவர்கள் இந்தக் கோயிலைக் கட்டிக்கொடுத்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 30 வருடங்கள் இருக்கும். அவர் ரிட்டயர் ஆகி தன்னுடைய தமிழக ஊருக்குச் சென்றுவிட்டார். அதன் பின் பலர் அதன் ட்ரஸ்ட் பொறுப்பை ஏற்று நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் அதன் பக்கத்திலேயே ஒரு விநாயகர் கோயிலையும் எழுப்பி இருக்கிறார்கள். விநாயகர் சித்தி புத்தி சமேதராக இஷ்ட சித்தி விநாயகர் என்ற திருப்பேருடன் அருள் பாலிக்கிறார்.

ட்ரஸ்டிக்களில் நம் தமிழகத்தைச் சேர்ந்த சந்திர சேகர் என்பவர் ஒருவர். அவர் முருகன் விழாக்களின் போது குஜராத் மக்களுக்கு -- பக்தர்களுக்கு ஒருவிதமாகவும் தமிழகத்தில் இருந்து வந்து தொழிலாளிகளாகப் பணிபுரியும் பக்தர்களுக்கு தமிழ்நாட்டு முறைப்படியும் அன்னதானம் வகுத்தது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

மேலும் அங்கே ஒரு விநாயகர் கோயிலையும் அமைந்த ட்ரஸ்ட் --( இதன் தற்போதைய ட்ரஸ்டியாக இருப்பவர்  ரமேஷ் சோபட்கர்) - எல்லா வழிபாட்டையும் முறைப்படித் தன்கீழ் கொண்டு வந்துள்ளது.

விநாயகர் வடநாட்டிலும் வேரோன்றி இருப்பதால் அவர் சம்பந்தப்பட்ட திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்படுகிறது.  ஆனால் முருகர் தமிழ்க் கடவுள் என்பதால் பொங்கல் தவிர வேறு விசேஷங்கள் கடைப்பிடிக்கப்படவில்லை. கடந்த ஐந்து மற்றும் ஆறு ஆண்டுகளாகத்தான் அவருக்கு மற்ற வழிபாடுகளையும் வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்களையும் விமர்சையாகச் செய்து வந்திருக்கிறார்கள். அதையும் ட்ரஸ்டிக்களின் அலட்சியத்தால் சரிவரச் செய்ய இயலாமல்  ஓம் சரவணபவ ஓம் என்ற அமைப்பின் சார்பாக பால சுப்ரமணியன்  வருந்தி இருக்கிறார்.

பிடியா கார்த்திக் ஸ்வாமியின் கோயிலின் பக்கத்திலேயே பிட்பஜன் மகாதேவ் மந்திர் என்ற கோயில் கடற்கரையின் பக்கம் இருக்கிறது. இங்கே ஒரு சிவலிங்கம் கடலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. அங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சிவலிங்க அபிஷேகம் செய்கிறார்கள்.

விநாயகர் சதுர்த்திக்காக விநாயகருக்குப் பெரும் பந்தல் அமைக்கப்பட்டு விழா ஏற்பாடு நடந்து வருகிறது. ஆனால் முருகனுக்கு நாங்கள் சென்றிருந்த போது அபிஷேக ஆராதனை செய்ய கோயில் கதவைச் சாத்திவிட்டு அதிகாலை 5 மணிக்குச் செய்ய நேர்ந்தது.  ட்ரஸ்டி ரமேஷ் மிக நல்லவர் என்றாலும் மற்ற ட்ரஸ்டிக்களின் அதிகாரத்தில் இவை கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறினார் பால சுப்ரமணியன்.

அவரது தந்தையும் தாயும் அந்தக் காலத்தில் தாங்கள் சைக்கிளில் சாமிக்குரிய பொருட்கள் கொண்டுவந்து அபிஷேகம் ஆராதனை செய்து தமக்குத் தெரிந்த பாடல்களைச் சொல்லி வணங்கியதாகக் கூறினார்கள். அன்றைய பூஜைக்கு எல்லாப் பொருட்களையும் வாங்கி வந்ததும் அவர்கள்தான்.

கணபதியின் சன்னதியில் ராமர் சீதை லெக்ஷ்மணரும், காயத்ரி தேவியும், சரஸ்வதியும், குருநானக், சிவாஜியும் முருகன் சன்னதியில் ஆஞ்சநேயரும் பிள்ளையாரும் கோஷ்ட தெய்வங்களாக அருள் பாலிக்கின்றனர். அவற்றின் கீழேயே ராமர் ஸ்துதி, காயத்ரி ஸ்துதி, சரஸ்வதி ஸ்துதி, ருத்ரம் சமகம் ஆகியன குஜாராத்தி மொழியில் எழுதப்பட்டுள்ளன.

கணபதி கொண்டாடப்படும் இடத்தில் அவரின் சகோதரனான தமிழ்க் கடவுள் முருகனைத் தடையறத் தரிசிக்கவும் அவருக்கு அபிசேக ஆராதனைகள் செய்யவும் வழிபாடுகள், திருவிழாக்கள் சிறப்புற நடைபெறவும் வேண்டும் என்பதே ஓம் சரவணபவ ஓம் என்ற குழுவின் ஆதங்கமாகும்.

புலம்பெயர்ந்து சென்ற மக்களின் நம்பிக்கை நம் தமிழ்க் கடவுள் முருகன் ஒருவரே. அங்கே இருக்கும் வடநாடு, தென்னாடு கடவுள் என்ற அரசியலை எல்லாம் தாண்டி நம் தமிழ்கடவுளுக்கும் உரிய வழிபாடுகளும் ஆராதனைகளும் நடந்து அவர் வேராவல் மக்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதே தற்போதைய பிரார்த்தனை.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வேராவல் முருகனுக்கு அரோகரா.


3 கருத்துகள் :

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

சிறந்த பக்திப் பதிவு
தொடருங்கள்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...