திங்கள், 22 செப்டம்பர், 2014

சென்னப்பட்டனா மரக்குதிரைகளும் மைசூர் சாரட் ,டோங்கா, ஜட்காக்களும்,

சின்னக்குழந்தையில் ஆடும் குதிரை பொம்மையில் நாம் எல்லாரும் ஆடி இருப்போம். இந்த வண்டிகள் காலுடைந்து பழுதாகி எங்கோ ஒரு மூலையில் பரணிலோ அல்லது பழைய சாமான் அறையிலோ புழுதி படிந்து இருக்கக்கூடும். இப்போதெல்லாம் பிராண்டட் ப்ளாஸ்டிக் குப்பைகளாலேயே வீட்டை அடைத்து வைத்திருக்கிறோம். ( மறைந்து போன விளையாட்டுச் சாமான்களில் மரப்பாச்சியும் ஒன்று ).


மரக்குதிரை ஓவியப் பின்னணியில் ஒட்டகச் சிவிங்கிகளும் மாட்டு வண்டியும்.
சினிமாக்களில் சாரட் வண்டிகளில் ஹீரோ ஹீரோயினைத் துரத்தியோ அல்லது ஹீரோ ஹீரோயின் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என மையலோடு பாடும் பாட்டிலோ  சாரட்டையும் பார்த்திருப்போம்.

சின்னப் பிள்ளையில் பட்டுக்கோட்டை இரயில்வே ஸ்டேஷனில் இருந்து பஸ்ஸ்டாண்டுக்கு  முக்கால்வாசி பின்புறம் சாய்ந்த  ஜட்கா வண்டியில் திகிலோடு கம்பியைப் பிடித்தபடி அமர்ந்து பயணப்பட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் பழனியில் பஸ்ஸ்டாண்டிலிருந்து மலைக்குச் செல்ல ஜட்கா வண்டிகள் புழக்கத்தில் இருக்கின்றன. அது போல சென்னையில் எக்மோர்/சென்ட்ரல்  ஸ்டேஷனை ஒட்டி ஜட்கா குதிரைகள் ( லாயம் ) பார்க்க முடிகிறது. இவை அனைத்தும் வடநாட்டினர் திருமண ஊர்வலத்துக்காகப் பயன்படுத்துவது. அலங்காரம் செய்யப்பட்ட குதிரைகள்.& வண்டிகள்.

நாட்டியக் குதிரைகளை நான் ஈரோட்டில் தாமோதர் அண்ணன் மகன் திருமண விழாவில் பார்த்தேன். மிக அருமை.

பெங்களூரில் இருந்து மைசூர் சென்ற போது ஸ்ரீரங்கப்பட்டனாவைக் கடந்து போனோம். ஆனால் மைசூர்க்காரர்கள் குதிரைகளை மறக்கவில்லை என்று தோன்றியது.

எல்லாக் கடைகளிலும் வெளியே விதம் விதமான மரக் குதிரைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இன்னும் குழந்தைகள் அங்கே ஆடும் குதிரைகளைப் படுத்துகிறார்கள் போலிருக்கிறது. சென்னப்பட்டனாவில் அரசாங்கத்தின் உதவியோடு ஒரு கிராமமே இந்த கைவினைத் தொழிலில் ஈடுபட்டு பொம்மைகள் செய்து கொண்டிருக்கிறது.

ஸ்ரீரங்கப்பட்டினம் ரெங்கநாதர் கோயிலுக்கு வெளியே மட்டக்குதிரைகள் சவாரிக்காகக் காத்து நின்றன.

300 வருடங்களுக்கு முன் தேசிங்குராஜா டெல்லி பாதுஷாவின் குதிரையை அடக்கியதும்.பாராசாரி குதிரையில் சென்று போரிட்டு வீரமரணம் உற்றதும் படித்து நெகிழ்ச்சி ஏற்பட்டது. வீரத்திருமகன்கள் உலவிய தேசம் இதுவென. எனவே வீரமும் குதிரையும் பிரிக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.

வீரத்தின் அடையாளமான குதிரைகள் இப்போது சாரட் வண்டிகளிலும் ( வெளிநாட்டு டூரிஸ்ட்,) டோங்கா, ஜட்கா வண்டிகளிலும், பூட்டப்பட்டு ஓடுகின்றன. சுற்றுலாத் தலங்களில் சில மட்டக்குதிரைகளும் சவாரிக்கே. சிலமட்டுமே ரேஸில் ஓடுகின்றன. இவற்றின் பராமரிப்பு செலவும் அதிகம். ஒவ்வொரு ரேஸ்குதிரைக்கும் மாதம் பல லட்சம் செலவாகும். ( விஜய் மல்லையாவுக்கே இது எல்லாம் சாத்தியம் .:))

மைசூரின் அரண்மனை எதிரில் ஒரு  ரவுண்டானாவில் நடுவில் இரும்புகுதிரை செதுக்கப்பட்டுள்ளது.

மைசூரின் தசராவில் குதிரைகளில் காவலர்கள் அங்கங்கே ரோந்துப் பணியில் இருப்பார்கள்.

2012 இல் மைசூர் மகாராஜா 200 ஆண்டுகளாக உபயோகப்படுத்திய சாரட் வண்டி 70 லட்சம் வரை ஏலத்துக்குப் போனதாம். 16 ஜன்னல்களும் இரண்டு வேலையாட்கள் அமரும் வகையிலும் இருந்த அது இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் ஆகும்.

குதிரை வண்டிகள் பற்றி  A ( ARABA )யில் இருந்து W  ( WHISKEY) வரை 75 வகையான வண்டிகள் உலகெங்கும் வழக்கில் இருந்திருக்கின்றன. சில மட்டுமே இன்னும் இருக்கின்றன.


மைசூரின் அரண்மனை வாசலில் ஜட்காக்களும் டோங்காக்களும் அணிவகுத்து நிற்கின்றன.இவை ஒற்றைக் குதிரை பூட்டிய வண்டிகள். ஆனால் தினப்படி வருமானத்தில் தங்களையும் குதிரையையும் வண்டியைப் பராமரிக்கும் செலவையும் செய்ய முடிவதில்லை என்று ஆதங்கப்பட்டார் ஒரு டோங்கா வண்டிக்காரர்.

ஒரு ஊர் தன்னுடைய பாரம்பரியத்தை அழிய விடாமல் இன்னும் ரிக்‌ஷா ஆட்டோ என்று எல்லாம் பெரிய அளவில் கொண்டு வராமல் குதிரை வண்டிகளைப் புழக்கத்தில் வைத்துள்ளது.

பெட்ரோல் விற்கும் விலையிலும் மற்றும் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கவும் இது போன்ற குதிரை வண்டிகள் எங்கெங்கும் வந்தால் நலமாகத்தானிருக்கும்.

என்ன ஆட்டோவில் பேரம் பேசாமல் போகும் நாம் இயற்கையோடு இயைந்து வாழ்கிறோம் என்ற சந்தோஷத்தில் இந்த டோங்காக்களில் கேட்ட தொகை கொடுத்து ஒரு சவாரி போய்வரலாம். சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ சலோ.  ஜல்தி போவோம் சலோ சலோ.

11 கருத்துகள் :

கோமதி அரசு சொன்னது…

அமெரிக்காவிலும் டோங்காக்கள் உண்டு அழகான கம்பீரமான குதிரை பூட்டபட்டு இருக்கும். காசியிலும் இண்ட வண்டிகள் உண்டு பயணம் செய்து இருக்கிறேன்.

பழனியில் குதிரை வண்டி சவாரி செய்து இருக்கிறேன். முன்னாடி வாங்க கொஞ்சம் பின்னாடி போங்க என்று வண்டி ஓட்டுபவர் சொல்லிக் கொண்டே வருவார். கொஞ்சம் கவனமாய் இல்லை என்றால் மண்டை இடித்துக் கொண்டே வரும். அந்தக் காலப் படத்தில் பத்மினி, ராகினியும் இது(டோங்கா)போல் வண்டியில்” மண் உலகெல்லாம் பொன் நிறமாகும் மாலை வேளை மாலையின் லீலை ”என்று பாடி வருவார்கள்.

பெட்ரோல் விற்கும் விலையிலும் மற்றும் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கவும் இது போன்ற குதிரை வண்டிகள் எங்கெங்கும் வந்தால் நலமாகத்தானிருக்கும்.//
நீங்கள் சொல்வது போல் காலம் வந்தால் நன்றாக இருக்கும்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக அழகான படங்களுடனும், விளக்கங்களுடனும் நல்ல பதிவு! பல புதிய தகவல்கள் தெரிந்து கொண்டோம்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இப்ப ஓடினா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணிப் பார்த்தோம்!

Thenammai Lakshmanan சொன்னது…

மிக அருமையான கருத்துக்களுக்கு நன்றி கோமதி மேம். எனக்கும் அந்தப் பாடல் ஞாபகம் வந்தது. :)

நன்றி துளசிதரன் சார். இப்ப ஓடினா குதிரையை கார் வண்டி எல்லாம் அடிச்சிட்டுப் போயிடும். :) அங்கே மைசூர்ல இவ்ளோ ட்ராஃபிக் இல்ல. கொஞ்சம் அமைதியான ஊர்தான். :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பழைய தில்லி பகுதியில் சில வருடங்கள் முன்பு வரை குதிரை வண்டிகள் [ஜட்கா] பயணிகள் பயன்படுத்தினார்கள். இப்போது இந்த வண்டிகளெல்லால் தடை செய்யப்பட்டு விட்டன. ராஜா மஹாராஜாக்கள் அரண்மணைகளில் - அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட அரண்மணைகளில் இப்போது பார்வைக்காக நிறைய இப்படி வைத்திருக்கிறார்கள் - ஜெய்ப்பூர், குவாலியர் போன்ற இடங்களில் பார்த்திருக்கிறேன்.

இன்றும் ஆக்ராவில் இவை பயன்படுத்தப்படுகின்றன!

சே. குமார் சொன்னது…

குதிரை வண்டிகள் பற்றிய கருத்துக்களும் படங்களும் அருமை.,..

பழனியில் குதிரை வண்டியில் சென்றால் அவர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் ஒரு பந்தம் இருக்கும்... அந்தக் கடையில் கொண்டு போய் விட அவர்கள் நிறையப் பேரிடம் ஆயிரம் ரெண்டாயிரம் என பறித்துக் கொண்டு பூ பழம் கொடுப்பார்களாம்... உறவினர் ஒருவர் குதிரை வண்டியில் பயணித்து கடைக்காரரிடம் சண்டை போட்டு மலை ஏறி இருக்கிறார். மலையாளி நண்பனும் பழனியில் ஏமாந்த கதையைச் சொல்லியிருக்கிறான்...

Muruganandan M.K. சொன்னது…

மிக அருமை
சிறப்பான படங்கள்
தெளிவான விளக்கங்கள்
அழகிய பதிவு.

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் நானும் ஆக்ராவில் பார்த்திருக்கிறேன் வெங்கட் சகோ

பழனியில் வண்டிக்காரர்கள் கூலி அதிகம்தான் ஆனால் இப்போ வெல்லாம் கடைப்பக்கம் போக முடியாது என்கிறார்களே குமார். அடிவாரத்தின் பக்கத்தில் ஒரு சந்தில் நிறுத்தி நடந்து போங்க என்கிறார்களே.

Thenammai Lakshmanan சொன்னது…

கருத்திட்டமைக்கு நன்றி முருகானந்தம் சார். :)

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

மீண்டும் மீண்டும் பார்க்கச் சொன்ன அழகான படங்கள். அருமையாக விளக்கமும் தந்தமைக்கு நன்றி!

தஞ்சை ரயிலடியில் இப்போதும் குழந்தைகளுக்கான மரக் குதிரைகளை செய்து விற்கிறார்கள்.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...