புதன், 9 அக்டோபர், 2013

ஆற்றுக்கால் பகவதி கோயிலில் அகிலம் புகழும் பொங்காலை.

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற கோயில், லட்சக்கணக்கில் பொங்கல் வைக்கப்படும் கோயில் ,பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கோயில் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில்.


கண்ணகி மதுரையை எரித்தபின் சேரநாட்டிலுள்ள கொடுங்கலூரை நோக்கிப் போகும் போது தன் துயரத்தை கிள்ளியாற்றின் கரையில் ஆற்றுப் படுத்தித் தங்கிச் சென்றிருக்கிறார். அவர் வருத்தத்தை ஆற்றுப் படுத்திய ஊர் என்பதாலேயே ஆற்றுக்கால் பகவதி என்றழைக்கப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. சுற்றிலும் தென்னஞ்சோலைகளும் வாழைத்தோட்டங்களும் சூழ , மீன்கள் துள்ளும் புஷ்கரணியோடு அரக்கி ஒருத்தியை அடக்கி அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கும் ஆற்றுக்கால் பகவதியைக் காணக் கண் கோடி வேண்டும்.

குருவாயூர் போல துலாபாரம் வழிபாடு, குழந்தைக்கு முதல் சோறூட்டல் ( சத்யா என்றழைக்கப்படுகிறது இந்த நிகழ்ச்சி ),  வித்யாரம்பம் ஆகியன இங்கும் நடைபெறுகிறது.  வெடி வழிபாடு என்ற சிறப்பு வழிபாடும்,  தட்டுத் தட்டாக எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபடுவதும் இங்கே சிறப்பு. குழந்தை இல்லாதவர்கள் துலாபார வழிபாடு செய்வார்கள். அம்மன்  கோயிலுக்குள் உலா வரும் நிகழ்ச்சி ஸ்ரீவேலி என்றழைக்கப்படுகிறது. ஊரில் நடக்கும் திருமணம் போன்ற நிகழ்வுகளில் முதல் அழைப்பு அம்மனுக்குத்தான். அம்மனைத் தங்கள் இல்லத்துக்கு அழைத்தபின் தான் ஆரம்பிப்பார்கள். ஆதிசங்கரர் நிறுவிய இயந்திரம் இங்கே இருக்கிறது. சன்னதியில் உற்சவர் ஒருவரும் மூலவர் ஒருவரும் இருக்கிறார்கள்.

நாங்கள் சென்றபோது சன்னதியின் முன்பு  நெற்றியில் குளிர் சந்தனமிட்டு ஓணம் புடவை கட்டிய கேரள மகளிர் எலுமிச்சை விளக்கேற்றி வழிபாடு செய்து கொண்டிருந்தனர். வாசலில் துவார பாலகியரும் பெண்கள்தான். மிகப் பிரம்மாண்டமான ( க்ஷேத்திர பாலகிகள் ) பெண் வாயிற்காப்பாளர்கள். சன்னதியைச் சுற்றி விநாயகர், சிவன், நாகங்கள், தட்சிணாமூர்த்தி,  ஆஞ்சநேயர் என்று தனியாயும் உக்கிரத்துடனும் இருக்கும் தெய்வங்கள் குடிகொண்டிருக்கின்றன. கோயில் தங்கத் தகடு வேய்ந்தது போல் இருக்கிறது. செம்புத்தகடு என்று கூறினார்கள்.

ஆண்கள் இருமுடி கட்டி சபரி மலை செல்வது போல இந்தக் கோயிலுக்கும் பெண்கள் விரதமிருந்து இருமுடி கட்டி செல்கிறார்கள். மாசிமாதம் பொங்கல் திருவிழா மிகச் சிறப்பான ஒன்று. வருடா வருடம் 20, 25 லட்சம் பெண்கள் வேண்டுதல் செய்து பொங்கல் வைத்து வழிபடுவதாகவும். இந்த வருடமும் 25 லட்சத்துக்குமேல் பெண்கள் பொங்கல் வைத்துவழிபடுவார்கள் என்றும் கூறினார்கள்.

ஊரைச்சுற்றி 5 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒவ்வொரு தெருவிலும் இருபுறமும் மகளிர் கல்லில் அடுப்பு வைத்து, தென்னை மட்டை எரித்து மண்பானையில் பொங்கல் , பாயாசம் போன்றவை படைப்பார்களாம். கோயில் மேல் சாந்தி பொங்கல் வைக்கலாம் என்று மைக்கில் அறிவித்தவுடன் அனைவரும் பொங்கலிடத் தொடங்குவார்களாம். மதியம் இரண்டு மணி அளவில்  கோயிலிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து தெளிக்கப்பட்டவுடந்தான் அடுப்பில் ஏற்கனவே வைத்து முடித்த பொங்கலை  எடுத்து எல்லாருக்கும் பிரசாதமாக வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.

ஊரில் இரண்டு நாட்களுக்கு எல்லார் வீட்டிலும் பொங்கலிட மகளிர்  வெளிநாடுகளில் இருந்தும் வெளிதேசங்களில் இருந்தும் குவிந்து விடுவார்கள் என்று நண்பர் சொன்னார். இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரி , எல்லாவற்றுக்கும் விடுமுறை என்றும் வீட்டை விட்டு யாரும் காரிலோ, வாகனத்திலோ வெளியே வரவே முடியாது என்றும் கூறினார். ஊரே ஒரே புகைக்காடாய் எல்லாப்பக்கமும் பொங்கல் பொங்கப்படும் காட்சி மிக அழகானதாய் இருக்குமாம். பொங்கல் இட பானைகள், தென்னம் மட்டைகள் அந்த சமயம் மிகுந்த டிமாண்ட் ஆகி கிடைக்காமல் போய்விடும் என்று கூறினார்.

இந்த வருடமும் மாசிமாதம் ( ஃபிப்ரவரி 26 ஆம் தேதி ) பூரம் நட்சத்திரத்தன்று ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்குப் பொங்கல் படையலிடும் நிகழ்ச்சி நடந்தது.  மாசிமாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் தொடங்கும் பெண்கள் பூரத்தன்று விரதம் முடித்து பொங்கலிடும் “பொங்காலை “ என்ற நிகழ்ச்சிக்கு 25 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு அதன் படி ஒரு பொதுக்குழு அமைக்கப்பட்டு ஒழுங்கமைப்பு வசதிகள்
செய்யப்படுவதாகக் கூறினார்.

எல்லா திருஷ்டிகளும் தோஷங்களும் நீங்கவும், மனநோய் நீங்கவும், திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிட்டவும் ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு வேண்டிக் கொண்டு பொங்காலை வழிபாடு செய்கிறார்கள். அனைவருக்கும் அருளாசி வழங்கி அமைதியாய் உறைந்திருக்கிறாள் ஆற்றுக்கால் பகவதி.. எல்லார் குறைகளையும் களைந்து எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்தருளவேண்டும் என்று வேண்டுகிறோம்.

”அம்மே பகவதி
தேவி பகவதி
நாராயணி பகவதி. ”4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...


அன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... வாழ்த்துக்கள்... நன்றி;;;

அன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ.. மனைவியும் சகோதரியும் நலமா..

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...