எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சுதந்திரப் போராட்ட வீரர் பாலையூர் தீரன் ஆ. நெல்லியான்.

காரைக்குடியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவரின் நினைவுச் சின்னத்துக்கு எதிரில் கோலமிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆனந்த் என்று தற்போது சொல்லப்படும் அருணாசலா தியேட்டருக்கு எதிரில்தான் இந்த நினைவுச் சின்னம் இருக்கிறது.


காரைக்குடி  சி மெ வீதி , 28 ஆவது வார்டைச் சேர்ந்த இடத்திலிருக்கும் இந்த நினைவுச் சின்னம் பற்றி அங்கிருந்த ஆட்டோ ட்ரைவர்களிடம் விசாரித்ததில்  தீரன் நெல்லியான் பற்றிய தகவல்களைத் தெரிவித்தார்கள்.

நாங்கள் சென்ற அன்று அந்த நினைவுச் சின்னத்துக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்த  அரசியல் தலைவர்கள் அன்று வருவார்கள் எனத் தெரிவித்தார்கள். ( 2013 ஆம் வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி ) 

மேலும் விபரங்கள் தினமணியின் இணைப்பில் காணக் கிடைத்தன.

இது 2011 தினமணியில்

///
காரைக்குடி, ஆக.12: சுதந்திரப் போராட்டத்தின்போது, காரைக்குடியில் ஆங்கிலேயப் படையின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்த தீரன் நெல்லியான் நினைவு தினத்தையொட்டி வியாழக்கிழமை அவரது உறவினர்கள் உள்பட பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    காரைக்குடி அருகே கண்டனூர்-பாலையூர் பகுதியைச்சேர்ந்த ஆண்டியப்பன், சிகப்பி தம்பதிக்கு 16.8.1918-ல் மூத்த மகனாகப் பிறந்தார் நெல்லியான். இவர் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றபோது காரைக்குடியில் 12.8.1942-ல் ஆங்கிலேயப் படையின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே வீரமரணம் அடைந்தார். அவர் உயிர் விட்ட இடத்தில் அவருக்கு நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது.

 காரைக்குடி மகர்நோன்புத் திடலில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப்போராட்ட தியாகிகள் நினைவுத்தூண் முன் அவரது நினைவு தினமான வியாழக்கிழமை பலர் திரண்டனர்.

 இதில் நெல்லியானின் தம்பி மகன்கள் நெல்லியான், பழனியப்பன், ஆண்டியப்பன், வெங்கடாச்சலம், மகள் பேச்சிமுத்து, அவரது கணவர் ராமு மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.

 
நெல்லியானின் தம்பி மகன் ஆண்டியப்பன் கூறியது: எங்கள் பெரிய தகப்பனார் நெல்லியான் வீரமரணம் அடைந்ததால் அவரது நினைவாக தியாகி நினைவுத் தூண் அமைத்துள்ளனர்.   தீரன் நெல்லியான் புகழ் வெளியுலகுக்குத்தெரிய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.//////


இது  2012 தினமணியில்

///காரைக்குடி, ஆக. 14: இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஆங்கிலேயப் படையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான கண்டனூர்-பாலையூரைச்சேர்ந்த தீரன் நெல்லியான் நினைவு தினத்தையொட்டி, நினைவுத்தூணுக்கு மாலையணிவித்து ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

 12.8.1942-ல் தடையை மீறி காரைக்குடியில் இன்றைய காந்தி சதுரங்கம் பகுதியில் போராட்டத்தில் பலர் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்க தடியடி நடத்தியும், துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. அதில் 24 வயதே ஆன கண்டனூர் பாலையூர் தீரன் நெல்லியான் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்தார். இவரது நினைவாக நினைவுத் தூண் அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 புதுப்பிக்கப்பட்டுள்ள நினைவுத் தூணில் தமிழ்நாடு வல்லம்பர்பேரவை சார்பில் அதன் மாநில செயல் தலைவர் அம்பாள் சி. சுப்பிரமணியன், மாநிலப் பொதுச் செயலாளர் ஏஆர்.சுப்புராமன், மாநிலத் துணைத் தலைவர் கீழத்தெரு கருப்பையா அம்பலம், மாநில அமைப்பாளர் சொ. துரைசிங்கம் ஆகியோர் நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.( இது ஆகஸ்ட் 15, 2012 இல் )

 இதில் தமிழ்நாடு வல்லம்பர் பேரவை மாநில துணைச் செயலர் ரமேஷ்பாபு, செஞ்சை மெய்யப்பன், ராமசாமி, பாலையூர் கலையரசு, காரைக்குடி ஆண்டியப்பன் அம்பலம், அருள்பாண்டியன், அறந்தை சுகுமார், நகர வல்லம்பர் பேரவை தலைவர் சித. சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.////

நம்ம நாட்டுக்காகப் போராடிய தியாகியின் நினைவுச் சின்னம் என்பதாலும் அவர் நம்ம ஊர்ப்பக்கத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் பெருமித உணர்வு பெருகியது. அவர் நம் நாட்டு விடுதலைக்காக உயிரை ஈந்தார். 24 வயதே ஆன அந்தத் தியாகியின் தியாகம் போற்றுதலுக்குரியது.  பாராட்டுதலுக்குரியது.

 அரசாங்கம் நினைவுச் சின்னம் அமைக்கிறது. மக்கள் வணங்குகிறார்கள். அந்தத் தியாகியின் பாத கமலங்களில் நம் வலைத்தளம் சார்பாக நாம் அதைப் பகிர்வதன் மூலம் நம்முடைய அஞ்சலியையும் வணக்கங்களையும் உரித்தாக்குவோம் என நினைத்தேன். பகிர்ந்தேன்.

வாழ்க தாய் நாடு காத்த வீரர்கள். வளர்க அவர் தம் புகழ்.. வந்தே மாதரம்..!!!


4 கருத்துகள்:

  1. இதுவரை அறிந்திராத தியாகி தீரன் நெல்லியான் அவர்களைப் பற்றி அறிந்துகொண்டேன். இன்றளவும் அவரை மறவாது உறவும் ஊரும் கொண்டாடுவது குறித்து மிக்க மகிழ்ச்சி. படங்களுடனான பகிர்வுக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  2. அக்கா... ஆனந்த் தியேட்டருக்கு அருகெ நானும் இதை பார்த்திருக்கிறேன். ஆனால் அது ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் நினைவுத்தூண் என்பது தெரியாது... இன்று அறிந்து கொண்டேன்....

    பதிலளிநீக்கு
  3. நன்றி கீதமஞ்சரி

    நன்றி குமார்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...