எனது நூல்கள்.

திங்கள், 3 ஜூன், 2013

காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை:-
******************************

”வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
தண்டாயுதபாணிக்கு அரோகரா
பழனி மலை முருகனுக்கு அரோகரா
அன்னதானப் பிரபுவுக்கு அரோகரா.”


இதுதான் கார்த்திகை மாத வேல் பூசையில் காரைக்குடி எங்கும் கேட்கும் கோஷம்.

கார்த்திகை மாதம் முருகனுக்கு உகந்த மாதம். அரனுடைய நெற்றியில் அறுபொறிகளாக ஆங்காரமாக உதித்த முருகப்பெருமானின் வேலையும் தண்டாயுதத்தையும் பூசையிட்டு அன்னம் படைத்து ஊரோடு உணவிடும் திருவிழா இது.

வெளிநாடுகளுக்குக் கொண்டுவிக்கச் சென்ற நகரத்தார் தம் வருவாயில் ஒரு பகுதியை கோயில் கட்டவும், குளங்கள் வெட்டவும்,  வேத பாடசாலைகள் நிர்மாணிக்கவும், கலா சாலைகளை  உருவாக்கவும் முனைந்தனர். அதன்படி ஆன்மீகம், கல்வியறிவு  ஆகியவற்றுக்காகப் பணிபுரிந்த நகரத்தார்  அடிப்படையில் சிவ கோத்திரத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும் சிலர் கார்த்திகை மாதம் முருகனுக்காக விரதம்  அனுஷ்டிப்பவர்கள். சிலர் புரட்டாசி மாதம் பெருமாளுக்காக விரதம் அனுஷ்டிப்பவர்கள்.

கார்த்திகை மாதம் விரதம் இருப்பவர்கள் கார்த்திகை மாதம் மட்டும் விரதமிருந்து அன்னதானமிடுவர் . சிலர் தைப்பூசம் வரை விரதமிருந்து பழனி பாத யாத்திரை சென்று அல்லது காவடி எடுத்து பூர்த்தி செய்வார்கள்.

மழையும் காற்றும் குளிரும் நிறைந்த இந்தக் கார்காலத்தில் பயிர் விளைவிக்கும் மக்களுக்கு சரியான வேலை கிடைக்காமல் உணவு கிடைக்காமல் போகலாம் என்பதால் அந்த சமயம் அவர்களுக்கு தங்கள் வருவாயில் ஒரு பங்கை ஒதுக்கி உணவு சமைத்து முருகனுக்குப்படைத்து ஊரோடு உணவிட்டு மகிழ்வது நகரத்தார் மக்களின் வழக்கம்.

இதன்படி இந்த வருடமும் காரைக்குடி எங்கும் “முத்தான முத்துக் குமரா முருகையா வா வா. “எனப் பாடி அழைத்து  கார்த்திகை சோம வாரங்களில் வேல் பூசை சிறப்பாக நடைபெற்றது. மூன்றாம் வாரம் விசேஷம் என்பதால் காரைக்குடி ஆவுடையான் செட்டியார் வீட்டில் நடைபெற்ற கார்த்திகை வேல் பூசையில் கலந்துகொள்ள அழைப்பு வந்திருந்தது.

முதல் நாளே சாமி வீடு மெழுகிக் கழுவி நடுவீட்டுக் கோலமிட்டு நடையிலும் கோலமிட்டு வைக்கிறார்கள். மறுநாள் விடியற்காலையில் விநாயகப் பெருமானை வணங்கி கோலமிடப்பட்ட விநாயகப் பானையில்  கோலமிடப்பட்ட அடுப்பில் வெள்ளைப் பொங்கல் வைக்கப்படுகிறது.

காலையிலிருந்து முருக பக்தர்கள் வர ஆரம்பிக்கிறார்கள்.  சக்தியிடம் வேல் வாங்கிய முருகனின் வேலும், தண்டாயுதமும் கொண்டு வரப்பட்டு பண்டாரத்தால் நானாவித பரிமள கந்தங்களால் அபிஷேகிக்கப்படுகிறது.யார் காலிலும் படக்கூடாது என்பதால் ஒரு அண்டாவில்  அபிஷேக நீர் பிடிக்கப்பட்டு சேமத்தில் சேர்க்கப்படுகிறது. பால் , பஞ்சமிர்தம் போன்றவை மட்டும் தனியாகப் பிடிக்கப்பட்டு பூஜைக்குப் பின் விநியோகிக்கப்படுகின்றன.

நல்லன பெருகவும் , அல்லன தொலையவும்  வடிவேலன் வழிகாட்டுவான். வேலும் தண்டமும் நம்மைக் காப்பாற்றும் வேலனின் ஆயுதமென்பதால் அவற்றுக்கு விஷேஷ பூசை. வேல் மாறல், வேல் வகுப்பு, குமாரத்தவம், அறுபடை முருகன் கவசங்கள், சண்முகக் கவசம், வெள்ளிமலைக் கந்தர் விளக்கம், ஸ்கந்த குரு கவசம்  போன்ற பாடல்களும் பாடப்படுகின்றன.

வேலையும் தண்டாயுதத்தையும் ஒரு ஆவுடை போன்ற தட்டில் மேலே ஒரு பீடம் வைத்து நிறுத்திப் பிடித்துக்கொள்கிறார்கள். தைலம், வாசனைப் பொடி, பால், தயிர், எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சுச் சாறு, சாத்துக்குடிச் சாறு, இளநீர், பஞ்சமிர்தம், விபூதி போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு அபிஷேகத்தின் பின்னும் சந்தனம்,குங்குமம்,  பூ வைத்து தீபாராதனை காட்டப்படுகிறது.

பின் வெள்ளி மயிலில் ( கிட்டத்தட்ட 3 1/2 கிலோ வெள்ளியில் செய்தது ) வெள்ளி முருகனை ஆவாகனம் செய்து வலது புறம் வேலும் இடது புறம் தண்டமும் வைக்கப்பட்டு பட்டும் பூக்களும் வைத்து அலங்காரம் செய்யப்படுகிறது. இரு புறமும் விளக்குகள் வைத்து ஏற்றப்படுகின்றன. சீரியல் லைட்டுக்களும் ஒளிபரப்பத்துவங்குகின்றன.

இதன் நடுவில் பொரியல், கூட்டு, மசியல், பச்சடி, சாம்பார், குழம்பு, ரசம், அப்பளம்,வடை,சாதம் , பாயாசம் போன்றவை மிகப் பெரிய அண்டாக்களில் சமையற்காரர்களால் தயாரிக்கப்படுகிறது. சாதம் சமைத்தவுடன்  கோலமிடப்பட்ட தரையில் பெரிய பாய்களை விரித்து சோற்றைக் கொட்டுகிறார்கள்.

இதன் நடுவில் இன்னொரு பானையை சாமியின் முன் வைத்து சர்க்கரைப் பொங்கல் செய்யப்படுகிறது. பால் பொங்கியதும் ஒவ்வொருவராக வந்து இரு கைப்பிடி அளவு அரிசி போடுகிறார்கள். வெந்ததும் வெல்லம்,ஏலம், நெய் , முந்திரி  சேர்க்கப்பட்டு பொங்கல் தயாராகிறது.

வெள்ளைப் பொங்கலையும் சர்க்கரைப் பொங்கலையும்  தீப தூபம் காட்டிப்  அடுப்பருகில் படைத்தவுடன் எடுத்துச் சென்று படைத்து வெள்ளைப் பொங்கலை மட்டும் பாயில் கொட்டிய சாதத்தோடு சேர்க்கிறார்கள்.

பாயில் கொட்டிய சாத மலையின் மேல்  பண்டாரம் மாலையிட்டு சங்கு சேகண்டி முழங்க  தீப தூபங்கள் காட்டுகிறார். வியஞ்சனங்களுக்கும் தீபம் தூபம் காட்டப் படுகிறது. அனைத்திலும் முருகனின் திருநீற்றைத் தூவிப் பரிசுத்தமாக்குகிறார். சோத்து அன்ன வட்டியால் ஒவ்வொருவரும் சோற்றை எடுத்து அங்கே வைக்கப்பட்டிருக்கும்  பெரிய கூடையில் ஆளுக்கு ஒரு கரண்டி போடுகிறார்கள்.

அந்தக் கூடை நிரம்பியதும் அதை எடுத்துச் சென்று  அலங்கரித்த வேல் முருகன் முன் நிறைய வாழை இலைகளைப் பரப்பிக் கொட்டுகிறார்கள். அதன் நடுவில் ஒரு லிங்கம் போலப் பிடிக்கிறார் பண்டாரம். சுற்றிலும் சமைத்த எல்லாக் காய்கறிகளும் அப்பளமும், வடையும் பாயாசமும் பரிமாறப்படுகின்றன.

இந்த நிகழ்வில் இந்த முறை ஒரு பெண் சங்கு சேகண்டியை ஒலித்தார். பண்டாரம் படைக்கும் வேலையில் ஈடுபட்டபோது எல்லாம் இந்தப் பெண்ணே சங்கையும் சேகண்டியையும் ஒலித்தார்.படைக்கத் துவங்கியதும் எல்லாப் பெண்டிரும் தாங்கள் கொண்டு வந்திருந்த மாவிளக்கை முருகக் கடவுள் முன் ஏற்றத்துவங்கினர்.

எங்கும் நெய்யின் மனமும் வெல்ல மணமும், பூக்கள் , தீப தூபத்தின் மணமும், உணவின் மணமும் கமழ்ந்து உண்ணும் வேட்கையைக் கிளப்பியது. தீபங்கள்  மாவிளக்கிலிருந்து ஒளிரத் துவங்கியதும் அங்கே ஒரு வெம்மைச்சக்தி பரவியது போலிருந்தது.

இதன் நடுவில் வந்த அனைவரும் அமர்ந்து முருகன் பாமாலைகளைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அர்ச்சனைக்காக அனைவரும் கொண்டுவந்திருந்த தேங்காயும், மாவிளக்குக்கான தேங்காயும் உடைக்கப்பட்டது. வேலுக்கும், தண்டத்துக்கும் , மயில்மேல் அமர்ந்த சண்முகக் கடவுளுக்கும்  தீப தூபங்கள் காண்பித்தது விபூதி பிரசாதங்கள் வழங்கியதும் அனைவரும் உணவருந்தத் துவங்குகிறார்கள். பெண்கள் மாவிளக்குகளை எடுத்து அனைவருக்கும் தேங்காயோடு வழங்குகிறார்கள்.

முருகன் பக்தர்கள் முதலில் உணவருந்த வேண்டும். அதிலும் ஆண்டிக் கோலத்தில் இருக்கும் முருகன் உணவுண்ண பக்தர்களோடு வருவார் என்பதால் ஆண்டிகளுக்கு முதலில் உணவிடுவது விசேஷம். எனவே பண்டாரம் அவர்களே முதலில் அமர்ந்து இந்த பூசையை ஏற்று நடத்துபவரின் குடும்பத்தினரின் பெயர் சொல்லி முருகன் பெயரால் வாழ்த்தி, அன்னதானப் பிரபுவாம் முருகனை வாழ்த்தி உண்ணத்துவங்குகிறார். அவர் உண்ண ஆரம்பித்ததும் மற்றவர்களும் உண்ணத் துவங்குகிறார்கள்.

மிச்சமாகும் உணவை அடுத்து அடுத்து அவர்களே இல்லங்களுக்கு எடுத்துச் செல்லவும் கொடுக்கப்படுகிறது. அதன் பின் அனைவரும் தங்கள் அர்ச்சனைப் பிரசாதங்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். அன்னதானம் ஒன்றுதான் போதும் என்ற நிறைவை உண்டாக்குகிறது. ஆதிரையின் பிச்சைப் பாத்திரத்தில் அன்னமிட்டு அனைவரின்  பசிப்பிணியையும்  போக்கிய மணிமேகலை நினைவு வந்தது.

உணவிடுதல் முடிந்ததும் வீட்டைக் கழுவி விட்டு பானகப் பூசை செய்கிறார்கள். எலுமிச்சை, வெல்லம், சுக்கு. ஏலம் கலந்த இந்தப் பானகம் முருகனுக்குப்படைக்கப்படும் விஷேஷமான ஒன்றாகும்.  பானகப் பூசையுடன் வேல் பூசை நிறைவடையும். அது வரை விளக்குகளில் நெய்விட்டு தீபத்தை ஒளிரச் செய்து கொண்டிருப்பார்கள்.

குன்றுதோறாடி வரும் குமரனோட வேலு இது
கூடி வரும் பக்தர்களின் குறை தீர்க்கும் வேலு இது.

என்ற பாடல் கோஷமாக மனதுள் ஒலிக்க அங்கிருந்து கிளம்பும்போது இறைவனின் வேலும் மயிலும் தண்டமும் நமக்குத் துணைவருவது போலிருந்தது.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 24 . 3. 2013 திண்ணையில் வெளிவந்தது.


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

7 கருத்துகள் :

kavignar ara சொன்னது…

arumai aaka அருமை ஆக உள்ளது சிறப்பாக உள்ளது
கல்லை செதுக்கி சிற்பம் ஆக்கி வடிப்பது சிலை
சொல்லை செதுக்கி கவிதை ஆக்கிட கலை
ஆரா

Thenammai Lakshmanan சொன்னது…


க்ருஷ்ணகுமார் says:
March 25, 2013 at 8:42 am

அன்பு சஹோதரி தேனம்மை லக்ஷ்மணனுக்கு,

தங்களது காரைக்குடி வேல் பூசை சமாராதனை ப்ரசாதத்தை மானசீகமாக சுவைக்கும் பாக்யம் பெற்ற சிறியேனின் முருகார்ந்த நன்றி.

ஒரு புறம் தங்கள் வ்யாசத்தில் முருகன் திருவருள் மறுபுறம் சீதாலக்ஷ்மி அம்மையார் வ்யாசத்திலும் எனக்கு முருகன் திருவருள் பொங்கிப் பரவசப்படுத்துகிறது.

அம்மணி, தங்கள் வ்யாசம் முழுதும் ஒரு புறம்………

“”"”"”"”பழனி மலை முருகனுக்கு அரோகரா”"”"”"”"

என்ற வாசகம் மட்டிலும் மிகத் தனித்து மறுபுறம்.

ஏனெனில் இந்த வாசகம் தான் முழு வ்யாசத்தையும் என்னை மேலே வாசிக்கத் தூண்டியது என்றால் மிகையாகாது.

வள்ளல் அருணகிரிப்பெருமான்,

க்ஷேத்திரக்கோவையில் “உலகெங்குமேவிய தேவலயந்தொரு பெருமாளே” என்று புகழ்ந்து பாடியிருக்கிறார்.

இத்திருப்புகழமுதத்திற்கு பொழிப்புரை நல்கிய குஹஸ்ரீ கோபாலசுந்தரம் ஐயா அவர்கள்,

உலகெங்கும் உள்ள தேவாலயங்களில் உள்ள கடவுள் முருகனே என ஸ்வாமிகள் (ஐயா அவர்கள் ஸ்வாமிகள் எனச் சொல்வது வள்ளல் அருணகிரிப்பெருமானை) சொல்வதன் மூலம் உலகில் எல்லா மதத்துக் கடவுளும் ஒருவனே என்ற அவரது பரந்த கொள்கை தெரிகிறது.

பழனியாண்டவனைக் குலதெய்வமாய்க் கொண்ட எங்களது கொள்கையானால் குமரன் குடிகொண்டுள்ள ஆலயமெல்லாம் பழனியே.

இப்போது புரிந்ததல்லவா நான் ஏன் இவ்வளவு மகிழ்ந்தேன் என்று.

\\\\சிலர் தைப்பூசம் வரை விரதமிருந்து பழனி பாத யாத்திரை சென்று அல்லது காவடி எடுத்து பூர்த்தி செய்வார்கள்.\\\

ஆஹா!!!!!!!!!எங்களது பழனிப்பாத யாத்ரையைக் கூட நினைவுறுத்தும் வாசகமாயிற்றே இது. எங்கள் பழனியாண்டவனுக்குத் தான் எவ்வளவு கருணை. இந்த வாசகத்தின் மூலம் பழனிப் பாதயாத்ரையையும் நினைவு கூற வைக்கிறானே.

\\\\\வேல் மாறல், வேல் வகுப்பு, குமாரத்தவம், அறுபடை முருகன் கவசங்கள், சண்முகக் கவசம், வெள்ளிமலைக் கந்தர் விளக்கம், ஸ்கந்த குரு கவசம் போன்ற பாடல்களும் பாடப்படுகின்றன.\\\\\

அப்பப்பா!!!!!!!!! இவற்றை பாராயணம் செய்வதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்.

இந்த ஸ்தோத்ர நூற்களின் பெயர்களை வாசிக்கையில் கூட இவற்றை பாராயணம் செய்த மன நிறைவு கிட்டுகிறதே.

வேல் மாறல் —- முருகனடியார்க்கு மஹாமந்த்ரமாயிற்றே.

அதனால் ஸ்தோத்ர நூற்களிலும் காரைக்குடியிலும் இதற்கு முதன்மை போலும்

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என துளத்தில் உறை கருத்தன்மயில் நடத்து குகன் வேலே

\\\\\இதன் நடுவில் பொரியல், கூட்டு, மசியல், பச்சடி, சாம்பார், குழம்பு, ரசம், அப்பளம்,வடை,சாதம் , பாயாசம் போன்றவை மிகப் பெரிய அண்டாக்களில் சமையற்காரர்களால் தயாரிக்கப்படுகிறது. சாதம் சமைத்தவுடன் கோலமிடப்பட்ட தரையில் பெரிய பாய்களை விரித்து சோற்றைக் கொட்டுகிறார்கள்.\\\\\முருகன் பக்தர்கள் முதலில் உணவருந்த வேண்டும். அதிலும் ஆண்டிக் கோலத்தில் இருக்கும் முருகன் உணவுண்ண பக்தர்களோடு வருவார் என்பதால் ஆண்டிகளுக்கு முதலில் உணவிடுவது விசேஷம்.\\\\\

Thenammai Lakshmanan சொன்னது…
ஆயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் எனக்கு மணம் வீசுகிறதே என நினைத்தேன். பின்னால் வந்த வாசகத்தை வாசித்த பின் மண்டையில் குட்டிக்கொண்டேன். அடியார் அமுதுசெய்த பின் தானே நாம் அதை ஏற்க வேண்டும். அடியார் அமுது செய்த பின் அவர்களது ஆசிகளும் கூடி ப்ரசாத அமுதின் சுவையும் கூடிடுமே.

அதெல்லாம் சரிதான்……….

உங்களுடைய பெரிய ப்ரசாத லிஸ்டைப் பார்த்ததும் எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானுடைய லிஸ்ட் யாதாக இருக்கும் என யோஜித்துப் பார்த்தேன்………..

டக்கென நினைவில் வந்ததென்னவோ……….

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன்

எனவும்

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை …… இளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை …… தனிமூலம்

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் …… அருளாழி

இக்கு – கரும்பு
வண்டெச்சில் – தேன்

இப்படி அருணகிரிப்பெருமான்,

அப்பம், அவல், பொரி, கரும்பு, அவரை, நற்கனிகள்,பருப்பு,எள்,பொரி (மீண்டும் பொரி – ஆனால் வேறு திருப்புகழமுதத்தில்),அவல்,துவரை, இளநீர்,தேன்,பயறு,அப்பவகை,பச்சரிசி,பிட்டு,வெள்ளரிப்பழம்,பலவகையான மாவுவகைகள்,ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த வகைவகையான உணவுகள், கடலை

இப்படியெல்லாம் பக்ஷணமாகக் கொள்ளும் பெருமானே என

மருப்புடைய பெருமாளே – என விநாயகப் பெருமானுக்கு உகந்ததாகச் சொல்கிறார்.

கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. முருகனுக்குகந்த உணவு வகைகள் என இங்கு வள்ளல் பெருமான் சொல்லவில்லையே எனத்தோன்றியது.

என் சிறுமதிக்கு வள்ளல் பெருமான் முருகனுக்குகந்த உணவு வகைகளை வேறு ஏதும் திருப்புகழமுதத்தில் பகர்ந்துள்ளாரோ என நினைவுக்கு வரவில்லை எனச்சொல்லுதல் தான் சரியாக இருக்கும். உங்களுக்கோ அல்லது வாசிக்கும் அன்பர்கள் யாருக்காவது வேறு திருப்புகழமுதத்தில் முருகனுக்குகந்த உணவு வகைகள் வள்ளல் பெருமானால் சொல்லப்பட்டிருப்பது நினைவுக்கு வந்தால் பகிரலாம்.

பின்னும் எங்கள் பழனியாண்டவனுக்கு நாங்கள் மற்றெந்த உணவு வகைகளைப் படைக்கினும் மிக முக்யமாய்ப் படைப்பது “திணைப்பாயசம்” .

கொல்லிமலைத் திணை.

\\\\மிச்சமாகும் உணவை அடுத்து அடுத்து அவர்களே இல்லங்களுக்கு எடுத்துச் செல்லவும் கொடுக்கப்படுகிறது.\\\\

ம்……….மானசீகமாகவே ஆயினும் சரி, நானும் கூட எடுத்துக்கொண்டேன்.

\\\\குன்றுதோறாடி வரும் குமரனோட வேலு இது
கூடி வரும் பக்தர்களின் குறை தீர்க்கும் வேலு இது.

என்ற பாடல் கோஷமாக மனதுள் ஒலிக்க அங்கிருந்து கிளம்பும்போது இறைவனின் வேலும் மயிலும் தண்டமும் நமக்குத் துணைவருவது போலிருந்தது.\\\\

இந்தப் பாடலில் மட்டுமா

தனித்துவழி நடக்குமென திடத்தும்ஒரு
வலத்தும் இருபுறத்தும் அருகடுத் திரவு பகற்றுணையதாகும்

என வேல்மாறல் மஹாமந்த்ரத்திலும் ஓதியுள்ளீர்கள் அல்லவா. திருப்புகழ் ஓதுவர் அனைவருக்கும் எங்கெங்கும் துணையிருப்பான் அன்றோ வள்ளிமணாளன்.

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்
நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும்
நிசிக்கரு அறுக்கும் பிறவாமல்

என்ற படிக்கு

யாம் நினைத்ததுமளிக்கும் மனத்தையுமுருக்கும் திருப்புகழமுதம்

இந்த அருமையான வ்யாசத்தின் மூலம் காரைக்குடி வேல்பூசையில் கலந்து கொள்ளும் படிக்கு எனக்கு பாக்யமளித்த (மானசீகமாக) சஹோதரி தேனம்மைக்கும் இதை வாசிக்கும் அன்பர் அனைவருக்கும்

வள்ளல் அருணகிரிப்பெருமான் அருளால்

நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் அவன் திருத்தாள்களில் குறைவற்ற பக்தியும்

வள்ளி மணாளப்பெருமான அருளால் நிறைந்திருக்க இறைஞ்சுகிறேன்

வேலும் மயிலும் சேவலும் துணை.

அன்புடன்
க்ருஷ்ணகுமார்

Reply
IIM Ganapathi Raman says:
March 30, 2013 at 6:58 am

கார்த்திகை மாத விசேடம் பங்குனி மாதத்தில் திண்ணையில் போடப்பட்டாலும்,

பங்குனியும் முருகனுக்கு ஒரு விசேடமான மாதம்.

தேனம்மை லெட்சுமணன் முருக பக்தர்களுக்கு ஒரு பெரிய படையலே போட்டிருக்கிறார்.

நான் முருக பக்தனன்று. எனினும் நன்றிகள்.

யாராவது ஒருவர் பெருமாள் பக்தர்களுக்கும் படையிலிட்டால் அட்வான்ஸ் நன்றிகள்.


****************************

Manavalan A. சொன்னது…

Vantha Vinaiyum Varukindra Valvinaiyum
Kanthan Entru Solla Kalangume
Senthil Nagar Sevagaa Ena
Thiruneeru Anivaarku Mevavaarathe Vinai.

- Ithuthaan thinamum naan solluvathu Muruganai enni.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஆரா

நன்றி கிருஷ்ணகுமார்

நன்றி கணபதி ராமன்

நன்றி மணவாளன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

அருண் பிரசாத் ஜெ சொன்னது…

நீங்கள் பதிவிட்டுருக்கும் இந்த போட்டோக்கள் எல்லாம் சமுத்திராபட்டி (நத்தம் )
முருகன் கோவிலில் எடுக்கப்பட்டவையா ?

அதுதான் எனது குல தெய்வம் ...

நன்றி
அருண் பிரசாத் ஜெ

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...