செவ்வாய், 31 ஜூலை, 2012

பிரம்ம கபாலம்.:-

காறலோ கசப்போ
உணர்ந்து பார்க்க
ஒற்றைக் கோப்பையைத்
தேர்ந்தெடுக்கிறேன்.

புதைக்கப்பட்ட பீப்பாயில்
கசிந்து வழிந்ததை
மண்ணோடு ஊற்றிச்
செல்கிறான் ஒருவன்.

என்னைப் பயமுறுத்திய
ரத்தச் சிகப்பை
ருசிக்கத் துவங்குகிறேன்.

எனக்கு மட்டும்
அளவு குறைவாகவும்
அடர்த்தி குறைவாகவும்
இருப்பதாகச் சொன்னபோது
இரண்டு திராட்சைகளை வீசி
மசித்துக் கொள்ளச் சொல்கிறான்

பழக்கமற்றதால்
விதைகளையும் மசிக்க
கசந்து கண்ணைப்
பிடுங்கியது அது.

அளவுகூட்ட
ஒரு ஜாடித் தண்ணீரை
ஊற்றுகிறான்.

உன்மத்தம் பிடித்த
மிருகம் போல
உறிஞ்சத் துவங்கினேன்
உதிரக் கசப்பை.

செமிக்கும் திறனற்று
கல்லீரல்கள் கதறியது
கைவிரித்துத் தள்ளியது.

போதையின் உச்சத்தில்
பரிமாறியவனைத் தள்ளிவிட்டு
பீப்பாய்களை
உடைக்கத் துவங்கினேன்.

கசப்பும் புளிப்பும்
மூழ்கடித்தது
தப்ப வழியின்றி.

கழண்ட கல்லீரல்
குடலை வெளியேற்றியது
விஷப்பாம்புபோல
விஷம் கொட்டியபின்

மீண்டும் நிரப்பத்
துவங்கினேன்
 என் கோப்பையை
இன்னும் போதவில்லை
இன்னும் போதவில்லை என
பிரம்மகபாலமாய்.

ஆசை.. சிறுகதை குங்குமத்தில்

ணவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு் வெளியே செல்ல வேண்டும். இதுதான் பாமாவின் ஆசை.

திருமணத்தன்று கைபிடித்தது. அப்போது 20 வயது.

திருமணமான புதிதில் ஊட்டி போனபோது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டே விட்டாள். ,”என்னங்க நாம கைகோர்த்துக்கிட்டு போலாமா..” கிண்டலாய்ப் பார்த்தவர் சொன்னார்., ”நீ கண்ட சினிமாவையும் பார்த்து கண்ட புஸ்தகத்தையும் படிச்சு கெட்டுப் போயிருக்குறே.”.

40 வயதில் ஒரு முறை இந்த ஆசை வந்தது. “ பிள்ளைகள் முன்னாடி என்ன இதெல்லாம் வேண்டாத ஆசை “ என்றார்.

அதன்பின் எப்போதுமே அவள் கேட்பதில்லை. அந்த ஆசை நிறைவேறவேயில்லை.

எங்கே சென்றாலும் கணவன் முன்னே வேகவேகமாக செல்ல பின்னே ஓடியே பழக்கமாகிவிட்டது. பின்னால் மனைவி வருகிறாளா இல்லையா எனக்கூட திரும்பிப் பார்க்காமல் செல்பவரிடம் எப்படிக் கேட்பது?

60 வயதில் சஷ்டியப்த பூர்த்தி வரப்போகிறது. அப்போதாவது கையைப் பிடித்துக் கொள்ளலாம் என ஆசையோடு இருந்தாள். படியில் ஸ்லிப்பாகி கால் ஃப்ராக்சராகி விட்டது கணவருக்கு.

கால் கட்டோடு எழுந்து பால்கனிக்கு செல்ல முயன்றவர் தடுமாறினார். தடுமாறியவரைத் தோள்பிடித்து நிற்க வைத்தாள். கைபிடித்து அழைத்துச் செல்ல கை நீட்டியபோது , “ நீ போய் கிச்சன் வேலையைப் பாரு” என்றபடி அப்போதும் கைபிடிக்காமல் பிடிவாதமாய் வாக்கரைப் பிடித்து நடக்கும் கணவரைக் கண்டு விக்கித்து நின்றாள் பாமா..

டிஸ்கி :- இந்தச் சிறுகதை நவம்பர் 2011 குங்குமத்தில் வெளிவந்தது.


திங்கள், 30 ஜூலை, 2012

கத்துக்குட்டி..!

கத்துக்குட்டி..!

இரண்டு நாள் முன்பு என் வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்தார்கள். வந்த விருந்தோம்பி வரும் விருந்து நோக்கியிருந்தது ஒரு காலம். அது கிட்டத்தட்ட ஒரு 3 , 4 வருஷம் இருக்கலாம். நாம பிரபல வலைப்பதிவர் ஆகிட்டபின்னாடி ரொம்ப விருந்தோம்புறது இல்லை. வந்தா சரி.. வராட்டியும் சரி.. அதுக்குன்னு வந்தா சரியா கவனிச்சுத்தான் விடுறது. (அட இது நிஜமான கவனிப்பு ஹுசைனம்மா..:))

வந்த விருந்தாளிங்க கண்ணுல அன்னிக்கு வந்திருந்த ஒரு பத்ரிக்கை தென்பட்டது. அதுல என்னோட அருமைத் தோழியின் கலை பற்றிய கட்டுரை 3 பக்கத்துக்கு வந்திருந்தது. சந்தோஷமா எடுத்துக் காட்டினேன். அதைப் பார்த்த இருவரும் படிக்கத் தொடங்கிட்டாங்க. அதே பத்ரிக்கையின் துணைப் புத்தகத்துல என்னோட சிறு குறிப்பு ஒண்ணும் பிரசுரமாகி இருந்தது. அடுத்து இன்னொரு இலக்கியச் சிற்றிதழ்ல என்னோட கட்டுரை வந்திருந்தது. இதை இருவரும் படித்தார்கள்.

அதைப் படித்த உறவினர்களுள் ஒருவர் இது நல்லா இருக்கு. ஓஹ் இதுக்கு இதுதான் காரணமா. சரியா சொல்லி இருக்கே. என்றவுடன் நான் தூக்கி விட்டுக் கொள்ளக் காலரைத் தேடிக் கொண்டிருந்தேன். இன்னொருவர் கேட்டாரே ஒரு கேள்வி.. ஏன் ஒன்னப் பத்தி பெரிய புக்குல போடல.. கத்துக்குட்டிய எல்லாம் போட மாட்டாங்களான்னு..

நான் ரெண்டு புக் போட்டு இருக்கேன். பல பிரபல பத்ரிக்கைகளில் என்னோட கவிதைகள் வந்துகிட்டு இருக்குன்னு சொல்ல நினைச்சேன்.. ஆனா ஏன் சொல்லணும்னு தோணுச்சு.. ஏன்னா இருவருக்கும் இது தெரியும். பாராட்டுனவர் கணவர். கிரிட்டிசைஸ் பண்ணவங்க அவரோட மனைவி.. . கணவர் மட்டும் பதில் சொல்ல முடியாம திக் திக்னு முழிச்சார். அடுத்து நான் சிரிச்சுகிட்டே வேற டாபிக் மாத்தி பேச ஆரம்பிச்சுட்டேன்.

ஆனா ஒரு விதத்துல நான் கத்துக்குட்டிதானோன்னு கூட தோணுது.. இல்லாட்டா இதை ரெண்டு நாள் மனசுல ஊறப்போட்டு, ஆறப்போட்டும் அடங்காம ஒங்ககிட்ட சொல்ல வந்திருப்பனா.. சரி.. போகட்டும். இன்னும் சாதிக்கணும்னு எண்ணத்தைத் தூண்டுறதுக்கும் இந்த மாதிரி கிரிட்டிசிஸம் தேவையாதான் இருக்கு.

ஒரு மாதிரி அடங்கின மனநிலையில் அவர் தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு கல்லைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டார்.. நாம என்ன சாதிச்சோம்னு சோதிச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கேன்..எனவே  மக்களே என்ன சொல்ல வர்றேன்னா யாராவது உங்கள இதுபோல ஏதாவது சொல்லிகிட்டு இருப்பாங்க.. அதை எல்லாம் ஆக்கபூர்வமா உங்க வளர்ச்சிக்கு பயன்படுத்திக்குங்க.. சோர்ந்து போயி அமர்ந்துடாதீங்க..

இன்னும் இருக்கு சாதிக்க.. தொடர் முயற்சிகள்தான் நம்மை உயிர்ப்பாக்கும். தடை ஓட்டத்தில் வெற்றி என்று ஏதுமில்லை. வாழும்வரை தொடர் ஓட்டம்தான். கத்துக் குட்டிகளுக்கும் காலம் கத்துக் கொடுத்து விருதுகளும் வழங்கலாம். ( ஒண்ணுமில்ல ஒலிம்பிக்ஸ் ஞாபகம் வேற..:) ) எனவே வலைப்பூவில் எழுதுவதையோ, தொடர் முயற்சிகளையோ விட்டுவிடாதீர்கள்.. இது நாம் அவர்களுக்கு சொல்லும் பதில் அல்ல. நமக்கே சொல்லிக் கொள்ளும் தன்னம்பிக்கைச் சொற்கள்.

பிடிவாதம். - ( கவிதை) குமுதத்தில்..

ஏதோ ஒரு காரணத்துக்காகப்
பிடிவாதம் பிடிக்கும்போது
வெளிப்படுகிறது..
எல்லாரிலும் ஒளிந்திருக்கும்
ஒரு குழந்தை..

டிஸ்கி:- இந்தக் கவிதை மார்ச் 2012  குமுதத்தில்  வெளியானது.


வெள்ளி, 27 ஜூலை, 2012

குழுமங்களும் பக்கங்களும்..

கடிதங்கள் எழுதும் பழக்கம் கிட்டத்தட்ட பத்து வருடங்களாகக் குறைந்துவிட்டது.எல்லாம் வலை மூலமே. ஜி மெயில் யாஹு மற்றும் செல்போன் மூலம் மெசேஜ்.., தகவல் அனுப்புதல் மற்றும் , யாஹூ மெசஞ்சர்., ஜி டாக் தான் உடனடி செய்திப் பரிமாற்றத்துக்கு. அழைப்பிதழ்கள் கூட மின்னழைப்பிதழ்களாக அனுப்பப்படுகின்றன. வீட்டு அட்ரஸ் கேட்பதில்லை யாரும். கைபேசி எண் அல்லது மெயில் ஐடிதான்.

இந்த சூழலில் முதல் முதல் கம்ப்யூட்டரில் மெயில் அனுப்பத் துவங்கும்போது நாம் தனிப்பட்ட மெயில் அனுப்பத் துவங்குகிறோம். பின்னர் நம் ஐடியை யார் யாரோ சேர்த்து க்ரூப் மெயில்களாக அனுப்பும்போது கொஞ்சம் சிரமத்துக்கு ஆளாகிறோம். இதில் குடும்ப மெயில்., குழு மெயில் .,வேண்டாமல் வரும் ஸ்பாம் மெயில் எல்லாம் அடக்கம். குழுமம் பற்றிப் பேசும் போது குடும்பக் குழுமம்., இலக்கியக் குழுமம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் செயல்படும் குழுமம் என மூன்றாகப் பிரிக்கலாம். பக்கங்கள் எல்லாம் ஃபேஸ்புக் பக்கங்கள்தான். ஓரளவு தொந்தரவு இல்லாதவை.

பொழுது போகாத வெட்டி நேரங்களில் இந்த குழுமங்களின் பழைய மெயில்களைப் படிக்கலாம். இது பொது டைரி போன்றது. குடும்ப மெயில்களில் பெரும்பாலும் பிறந்தநாள்., திருமணநாள் மற்றும் வெளிநாடு ., உள்நாடுகளில் இருப்போர் தாங்கள் சென்று வந்த ஊர்களின் ., இடங்களின் , விழாக்களின் ,நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும். இதில் கமெண்ட்ஸும் போடலாம். இது பொதுவாக பிகாசா வெப் ஆல்பங்களில் இணைக்கப்பட்டிருக்கும். இதில் பழைய சண்டைகள்., மனஸ்தாபங்களை பார்க்கலாம். எல்லாவற்றிலும் பட்டும் படாமல் நம் கமெண்டை போடுவது அவசியம். யார் மனமும் புண்படாமல்.

அந்தக் குழுமத்திலும் சரி. இலக்கியக் குழுமத்திலும் சரி. ”பேசத் தெரிஞ்சுக்கணும்” . இந்த இரு குழுமங்களிலும் பெரியய்யா இருப்பார். சின்னய்யா இருப்பார்., சித்தப்பா., மாமா., மாமி என எல்டர்கள் குரூப்பும், பொடிப்பசங்களும் கலந்து கட்டி இருப்பார்கள். பெரியவர்களைப் புண்படுத்தக் கூடாது, தெரியாமல் கூட கிண்டலடித்து விடக்கூடாது என கமெண்ட் போடும்போதே., சின்னப் பசங்க நம்மைக் காயப்படுத்துவதையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். எல்லாம் ஜாலி., ஜோவியல் என்பார்கள்., நாம் திரும்ப கமெண்ட் போட்டால் 4 நாளைக்கு குரூப்பில் சத்தமோ பதிலோ இருக்காது. ”என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது” என தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் ஒரு நிகழ்ச்சியைப் போடும் போது அதில் அவர்களின் குழந்தைகள் இருந்தால் எதிர்பார்ட்டியாக அந்த வீட்டுக்கு வந்த மருமகள்கள் அந்த குருப்பில் இருந்தால் .,”ஓஒஹ் சூப்பர்., ச்சோ ஸ்வீட். , க்யூட் கன்னுக்குட்டி., அழகு ” என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ”அடடா. ஏன் இவங்க இருவரும் சண்டை போடுகிறார்கள். கொஞ்சம் மாத்துங்க .” அட்வைஸி விட்டோமோ நாம் குடும்ப பொது எதிரியாகிவிடுவோம்.

இலக்கியக் குழுமங்களில் எல்லா வலைத்தளவாசிகள் பற்றியும்., நவீன கவிதைகள் பற்றியும்., அவர்கள் ஒரு அளவுகோலால் அளந்து கொண்டிருப்பார்கள். இந்தக் குழுமங்களில் மிகப் பிரபலங்களைப் பார்த்ததும் நமக்கு பிரமிப்பும் மிரட்சியும் ஏற்பட்டு கொஞ்ச நாளைக்கு அந்த மெயில்களில் குளறிக் கொண்டிருப்போம். ஒரு வாசக மனோபாவத்துடன்., வெட்டி பந்தா எதும் செய்யத் தெரியாமல்., ”படித்ததில் பிடித்தது” ரேஞ்சுக்கு நம்மை பாதித்தவைகளை நம் கண்ணோட்டத்தில் நம் வாழ்வோடு தொடர்புடையதாய் எழுதிக் கொண்டிருப்போம். அதில் இருப்பவர்கள் எல்லாம் ஜாம்பவான் ஜாம்பவதிகள் போல நடந்து கொள்வார்கள், மேலும் டீச்சர் இல்லதபோது பேசும் பிள்ளைகளை காது திருகி தண்டிக்கும் சட்டாம் பிள்ளைகள் மனோபாவத்துடன் நம்மை .,”பெஞ்சு மேலே ஏறு, பேசாதே., வாயை மூடு., எழுதத் தெரிந்தால் எழுது., எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு எழுது.,” என்ற ரேஞ்சில் அதட்டுவார்கள். திருந்த சான்ஸ் (!) கொடுப்பார்கள்., திருந்தாவிட்டால்., அந்தக் குழுமத்திலிருந்து நம்மை தூக்கிவிடுவதாக வேறு இன்னொரு நண்பர் மூலம் மிரட்டுவார்கள்.! அந்த இலக்கியக் குழுமத்திலிருந்து நாமும் உருப்படியாக ஏதும் கற்றுக் கொண்டிருக்கமாட்டோம். அவர்களின் வெட்டிப் பெருமைகளையும்., நக்கல்களையும்., நையாண்டிகளையும்., மெயிலைத் திறந்தாலே .,”ஐயோ ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. ஆரம்பிச்சுட்டாய்ங்க..” என்ற எரிச்சலோடு படிக்க வேண்டி வரும்.

இதில் உண்மையிலேயே சில பெரிய எழுத்தாளர்கள் மிக அருமையாக எழுதுவார்கள். எழுதியதைப் பகிர்வார்கள். அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம். பொது மெயிலாக இருப்பதால் நாம் பதில் கமெண்ட் போட்டாலும் ஒரு கர்ட்டஸி்க்காகக் கூட பதிலுக்கு ,”நன்றி” என சொல்ல மாட்டார்கள். அப்படிச் சொன்னவர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம். வெகு சிலரே மிக அருமையாக எழுதவும்., அதற்கு நம்முடைய பதிலை ரெசிப்ப்ரோகேட் செய்யவும் தெரிந்தவர்கள். அவர்களுக்கு எல்லாம் ஒரு ”ஹாட்ஸ் ஆஃப்.”

பொதுவாக குடும்ப மெயில் குழுமங்கள் ., இலக்கிய மெயில் குழுமங்கள் எல்லாவற்றையும் விட்டு வெளி வருவது நல்லது. நம் படைப்புத் திறமைக்கு., நம் எழுத்துக்களுக்கு., நம் மன நிம்மதிக்கு. இல்லாவிட்டால்., கொள்ளிக்கட்டையை எடுத்து முதுகு சொரிந்த கதையாகிவிடும்., அதிலிருந்து நாம் வெளி வரும்போது. ”விட்டால் போதும்..”.. ”சாமி. என்னை விடுவியுங்கள்.. உங்கள் அபத்தங்களிலிருந்து” என கூவ வேண்டி வரும். அல்லது நம் குழு விரோதப் போக்கு (!) கமெண்ட்ஸ் மற்றும் நடவடிக்கைகளைக் கண்டித்து அவர்களே நம்மை கேட்காமல் ( யாரைக் கேட்டுச் சேர்த்தார்கள் என தெரியாதது போலவே ) வெளியேற்றுவார்கள்.

நம்முடைய குடும்ப குழுமங்களாகட்டும்., இலக்கியக் குழுமங்களாகட்டும்., சகிப்புத்தன்மை அதிகம் உள்ளவரே நீடித்து நிற்கக்கூடிய பெருமை உடையது. எதிர்க்கருத்து உள்ளவர்களை., ஏன் எதிர்த்துப் பேசினாய் என்ற ரேச்ஞ்சில் ட்ரீட் செய்வார்கள். கொஞ்சநாள் இந்தத் தொல்லைகள் நம்மைத் தொடராத போதுதான் தெரியும்., நம்முடைய ஐடி அதிர்ஷ்டவசமாக ஹாக் ஆகிவிட்டது அல்லது அந்த நரகத்திலிருந்து நாம் தப்பி விட்டோம் ., நம் மன நிம்மதியை மீட்டு விட்டோம் என்பது.

எனவே யாராவது குழுமத்துக்குள்ளே இணைக்கிறேன். உன்னை நீ செம்மைப்படுத்திக் கொள்ளலாம் என வந்தால் உறுதியாக நோ சொல்லி விடுங்கள்., குழும அரசியலுக்குள் எல்லாம் மாட்டிக் கொள்ளாமல். அப்புறம் தலை தப்பியது தம்பிரான் புண்ணியமாகிவிடும். இந்த மாதிரி வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களால்தான் அவர்கள் புத்தகங்களே விரும்பிப் படிக்கப்படுகின்றன என்ற எண்ணம் சிறிதுமின்றி.,” நான் சொல்வேன் ., நீ கேள். ”என்ற எதேச்சதிகாரக் குழுமங்களிடமிருந்து விடை பெறுங்கள்., விலகியே இருங்கள்.

உறவினர்களை நேரிலேயே சந்தியுங்கள் அல்லது ஃபோன் மூலமே மட்டும் பேசி விடுங்கள். இந்தக் குழுமத்தில் நட்பு வட்டத்தில் இருப்பவரிடமும் நேரிடையான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

ஊருடன் ஒத்து வாழத்தான் வேண்டும். ஆனால் தனிமையில் அமர்ந்து இந்த மெயில் வன்முறைகளில் சிக்கி உரிமைகளும் நேரமும் இழந்து புலம்ப அல்ல..

அடுத்து ஃபேஸ்புக் குழுமங்கள்., பக்கங்கள் கொஞ்சம் தொல்லைதான். ஆனால் நாம் அவற்றை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என தேர்ந்தெடுக்கலாம். நோட்டிஃபிகேஷன்., செட்டிங்க்ஸ் போன்றவற்றில் நாம் உருவாக்கும் குழுவிலும்., நம்மை இணைக்கும் குழுவிலும் பிடித்தால் இருக்கலாம்., அல்லது விலகிக் கொள்ளலாம். எனவே க்ளோஸ்டு குருப்புகளில் தேவையற்று இணைந்து உங்கள் நிம்மதியும்., நேரமும் பறிபோகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 2011,நவம்பர் முதல் வார உயிரோசையில் வெளியானது.

வியாழன், 26 ஜூலை, 2012

புலம் பெயர்ந்த பெண்களின் மன அழுத்தம் தீர

புலம் பெயர்ந்த பெண்களின் மன அழுத்தம் தீர:-

************************************************

கிட்டத்தட்ட நான் கல்லூரிக்கு வந்த முதல் வருடத்தில் இருந்து ஈழப்பிரச்சனைகளை உணர ஆரம்பித்திருக்கிறேன். தஞ்சாவூரில் எங்கள் அத்தை வீட்டில் ஒரு ஈழப்பெண் வேலை செய்து வந்தார். ஒரு கலியம் பெட்டி நிறைய அங்கு உபயோகப்படுத்திய சாமான்கள் கொண்டு வந்திருந்தார். அவர்கள் தமிழ் பேசுவதே கேட்க இனிமையாய் இருக்கும். ஆனால் அதிகம் படிக்காததால் தன் குடும்பத்தேவைகளுக்காக வீட்டு வேலை செய்து வந்தார். நன்கு படிக்க வைக்கப்பட்டிருந்தால் அவர் ஏதாவது அலுவலகங்களில் வேலை பார்த்து வந்திருக்கக்கூடும். திரும்ப தன் நாட்டுக்குச் செல்லும் ஆவலோடு இருந்தார் அவர். இருட்டில் படகில் அதிகமாகப் பணம் கொடுத்து இந்தியா வந்து சேர்ந்ததாகச் சொன்னார்.

1983 ஆகஸ்ட் 3 ஆம் தேதி அன்று எங்கள் கல்லூரியில் சிலோன் பிரச்சனைக்காக விடுமுறை விட்டார்கள். ரிட்ரிட் ஹாலிடேஸ் என 3 முதல் 5 நாட்கள் விடும் வழக்கம் உண்டு என்றாலும் அந்த முறை 20 நாட்கள் நீடித்தது அந்த விடுமுறை. இன்று பள்ளி நடக்குமா பாடம் படிக்க முடியுமா என குழந்தைகள் குழப்பத்தில் இருப்பதைப் போன்ற மன நிலையில் இருந்தோம். வீட்டுக்குச் சென்ற கல்லூரித் தோழிகள் சிலர் வீட்டுக்குச் செல்லாமல் காதல் கடிமணம் புரிந்திருந்தனர். ரொம்ப குழப்பமான மன நிலை இருந்தது.

நிறைய கவிதைகளும்., கவியரங்குகளும் கலந்து கொண்டிருக்கிறோம். இது பற்றி விவாதித்திருக்கிறோம் என்றாலும். இன்றைய நிலைமை என்ன என யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது. யுத்த சமயங்களில் பெண்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்தலும். அலங்கோலப்படுத்தலும். சீரழித்தலும். கொன்று குவித்தலும் பாலியல் பலாத்காரங்களும் எல்லா இடங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன். முறையான வளரும் நாடுகளிலேயே கூட இவைகளைக் கட்டுப்படுத்த இரும்புக் கர நடவடிக்கை எடுக்க நேரும்போது யுத்தத்தில் சிக்கியும் அகதிகளாயும் வாழும் மக்கள் திறந்த வெளியில் வாழும் நாடோடிகளாய் எல்லாத் துயரங்களோடும் வாழவேண்டி இருக்கிறது.

புலம் பெயர் பெண்கள் என நினைக்கும் போது அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதல் நிறைய எக்ஸ்போஷர் என சொல்லலாம்.இந்த உலகம் என இந்தப் புலம் பெயர்தல் உணர்த்தி அவர்களை இன்னும் உறுதியானவர்களாய். படைப்பாளிகளாய்., ஆக்கி இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட 30 வருடங்களில் உருவான ஈழப் பெண் எழுத்துக்கள் உயிர்ப்பானவை. ஈழவாணி ஜெயா தீபன் ., தமிழ்நதி ராஜேந்திரன்., மாயோ மனோ., ஹேமா சுவிஸ்., மஞ்சுபாஷிணி ஜெகன்னாதன்., போன்ற பெண் படைப்பாளிகள் தங்கள் உணர்வுகளை தங்கள் எழுத்துக்களில் வலிமையாக பதிவு செய்கின்றனர்.

இந்த எக்ஸ்போஷர் மற்றும் உலகளாவிய தன்மையினால் அவர்களின் பொறுப்பு., மன அழுத்தம் ., வேலைப்பளு அதிகம்தான். சொந்த ஊரில் ஒன்றுமறியா சிறுமியாக உலா வந்தவர்கள் தங்கள் குடும்பச் சுமைகளை சுமக்கத் தொடங்கி விட்டார்கள். ஏனெனில் பல் குடும்பங்களில் அம்மா அப்பா சிலோனிலும் பிள்ளைகள் படிப்பு மற்றும் வேலை இன்ன பிற சுதந்திரத்துக்காக வெளிநாடுகளிலும் வசிக்கத்துவங்கி விட்டார்கள். குடும்பத்து்க்காக வேலைக்குச் செல்லும் பெண்கள் அங்கும் உடல் ரீதியான பலாத்காரத்திலும். வாழும் நாடுகளிலும் மூன்றாம் தர குடிமக்களைப் போலும் பார்க்கப்படுகிறார்கள். இவற்றை எல்லாம் மீறி அவர்கள் தங்களை குடும்பத்தில் பெண்ணாகவும் வெளியுலகில் ஆணாக செயல்படவும் வேண்டியிருக்கிறது.

கல்ஃப் நாடுகள் மற்றும் சிங்கப்பூர் மலேசியா., போன்ற நாடுகளில் தனித்து வாழும் பெண்களை அறிவேன். அவர்கள் குடும்பம் சிலோனில் இருக்கும் . பிள்ளைகள் கணவர் கூட அங்கே இருப்பார்கள் அம்மா அப்பாவுடன். இவர்கள் நிறைய சம்பளத்துக்காக வெளிநாடுகளில் வேலைக்குச் செல்கிறார்கள். சிலர் வீட்டு வேலைக்கும்., சிலர் அலுவலக வேலைக்கும் சிலர் ஆஸ்பத்ரி வேலைக்கும் செல்கிறார்கள்.

வேலை செய்யும் இடத்தில் கூட வேலை செய்பவர்., மேலதிகாரி ஆகியோருடன் சுமுகமாக அட்ஜஸ்ட் செய்து செல்லும் நிலைமை. இல்லாவிட்டால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விடுவார்கள். அதனால இங்கு பிள்ளைகள் படிப்பு., கட்டி வரும் வீட்டுப்பணி எல்லாம் பாதிக்கப்படும். அவர்கள் தங்கி இருக்கும் இடமும் நால்வர் அறுவர் தங்கும் இடமாக இருக்கும். எல்லா விதத்திலும் பணம் மட்டுமே பார்க்கப்படுவதால் இவர்கள் தங்கள் சுயகௌரவத்தை விட்டுக் கொடுத்து வேலை செய்ய வேண்டி வருகிறது. குடும்பம் குழந்தைகளைப் பிரிந்த வருத்தம் வேறு.தங்கள் குடும்பத்தேவைகள் முடிந்து தங்கள் குடும்பத்தோடு எப்போது சேரப்போகிறோமோ என்று வேறு வருந்தியபடி இருக்கிறார்கள்.

முழுதாக குடும்பத்தோடு புலம் பெயர்ந்தவர்கள் தாங்கள் விட்டு வந்த சொத்து., தங்கள் தாய் மண் அதனோடான நேசம் ஆகியவற்றிலும் அங்கு இருக்கும் மிச்ச சொந்தங்களைக் காணும் ஆவலிலும் வாழ்ந்து வருகிறார்கள். என்று எல்லாம் சுமுகமாகும் எல்லாரும் ஒன்று சேர்வோம் என்பதே அவர்கள் எண்ணமாய் இருக்கிறது.மிகக் குறைவான சம்பளங்களில் முதலாளிகளின் கொடுமைகளை அனுபவித்தும் என்ன செய்வதென தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

தாய்நாட்டில் தாங்கள் உட்பட்ட துயரமான சூழ்நிலைகளில் இருந்து வெளியேற சிலர் யுத்தக் குழுக்களில் சேர்ந்து போராளி ஆகி தன் உயிரைக்கூடத் துறக்கின்றனர். தங்களைத் தாங்களே குண்டுகளாக்கி மாய்த்து., மாய வைக்கும் மனநிலையும் வருகிறது.சிலர் தெரியாமல் அந்தக் குழுக்களுக்கு உதவி தங்கள் வாழ்நாள் பூராவும் சிறைக்கைதியாகவே உயிர் துறக்கின்றனர். எல்லாவற்றையும் விட்டு விலகி வெளிநாடுகளில் செட்டிலான ஈழக் குடும்பப் பெண்களும் தங்கள் தாய் நாட்டில் வாழும் ஆசையோடு தங்களை உயிர்பித்துக் கொண்டிருக்கின்றனர். தாய் மண்., தாய் நாடு., தாய் மொழி என்பதெல்லாம் நம் உயிரோடு கலந்ததாயிற்றே..

இந்த மனநிலைகளில் இருந்து மாற முதலில் புலம் பெயர் பெண்கள் தாங்கள் இருக்கும் நாடுகளில் தங்களை ( தங்கள் தாய் நாட்டில் சிறப்பாக வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கட்டும் . அது ஒரு பக்கம் ) எஸ்டாபிளிஷ் செய்து கொள்ள வேண்டும். இன்னும் அதிகம் படித்து நல்ல உயர் வேலைகளில் அமர வேண்டும். தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணம் போல வாழ்வு என்ற சொற்றொடர் தமிழில் உண்டு.

நான் சில சுய உதவிக் குழுப் பெண்களோடு பழகி இருக்கிறேன். . அவர்கள் சொல்வார்கள்., தங்கள் சம்மதம் இல்லாமல் ஒரு ஆணால் கூட நெருங்க முடியாது என்று. அதுதான் உண்மை. அப்படி நேர்மைக்கு., மனசாட்சிக்குப் புறம்பான வேலைகளைத் தூக்கி எறியுங்கள். எந்த நிலைமையிலும் உங்களுடைய தனித்துவத்தை இழக்காதீர்கள். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் உங்கள் அனுமதி இல்லாமல் பலாத்காரமாக ஏதேனும் நடந்திருந்தால் அதை ஓவர் கம் செய்து வெளிவரப் பாருங்கள். மிகவும் அதிகமான மனச்சிக்கலில் அந்தச் சம்பவம் ஆழ்த்துமானால் அதை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் காண்பித்து சரி செய்து கொள்ளுங்கள். உங்கள் படிப்பை., வேலையை நீங்களே நிர்ணயம் செய்யுங்கள். நீங்கள் என்னவாக ஆக வேண்டுமோ அவ்வாறாக ஆக முடியும். உங்களை அறியாமல்., உங்கள் சம்மதம் இல்லாமல் நடந்த எதற்குமே நீங்கள் பொறுப்பாளி இல்லை.

யுத்தம் என்பதும் புலம் பெயர்தல் என்பதும் ஒரு மோசமான சம்பவமே. அதை நாம் கட்டுப்படுத்த இயலாத போதும் நம் வாழ்க்கைக்கான குறிக்கோள்களையும் நாம் வாழும் நாட்டையும் முறைகளையும் நம் கட்டுக்குள் வைக்க முடியும். தற்போதெல்லாம். குடும்பத்திற்காகதனியே வெளிநாட்டில் இருந்து சம்பாதிக்கும் பெண்களை சந்திக்க நேருகிறது. இவர்களை குடும்பங்கள் சம்பாதிக்கும் மிஷினாகக் கருதுகிறதோ எனக் கருதும் அளவிற்கு குடும்பங்களுக்குப் பணத்தேவை இருக்கிறது. தன்னுடைய சம்மதம் இல்லாமலே வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்ற பெண் ஒருவர் அங்கு நிலவிய சூழ்நிலையில் தன் சுய கௌரவம், தன்மானம் காக்க முடியாது என ஊர் திரும்பி சிலோனிலேயே குறைந்த சம்பளத்திற்கு வேலைக்குச் சென்று வருகிறார். குடும்பதோடு இருக்க முடிகிறது. ஆனால் வருவாய் போதவில்லை. என்ன செய்வது. மானேஜ் செய்துதான் ஆக வேண்டும். இன்னும் சிறப்பான வேலை கிடைக்கும் வரை இதில்தான் செலவுகளைக் கட்டுப்படுத்தி வாழவேண்டும்.

ஈழபெண்களுக்கு தன்னம்பிக்கையைக் கற்றுத்தர வேண்டாம். யுத்தம் ஏற்கனவே அதிகம் கற்றுக் கொடுத்துவிட்டது. ஆனால் மனநிம்மதியோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும். தன் சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும். காயம் நேரும் போது வெளியேறவும் கற்க வேண்டும். யோகா., தியானம்., போன்ற பயிற்சிகள் உதவும். மன உறுதி., மனத்திண்மை வேண்டும். எல்லாம் நம் கைக்குள்தான்., காலடியில்தான் என எல்லாவற்றையும் எளிதாகக் கடக்க வேண்டும்.

சாதனை செய்யும் பெண்களுக்கு நேரும் அனைத்தும் இந்தப் புலம்பெயர் பெண்களுக்கும் நேரும். இன்னொரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வாழ்க்கையிலும் வெற்றிக் கொடி நாட்ட முடியும். இப்போது அந்த மாதிரி வளரும் பெண் குழந்தைகள் தங்களின் வளர்ச்சிப் பாதையில் முன்னணியில் இருக்கிறார்கள். இதற்குத்தேவை., தன்னம்பிக்கை. எந்த சூழ்நிலையிலும் விடாமுயற்சி., தன்னைக் கடந்து இன்னும் பிரகாசமாக வெளிப்படுதல்., தன்னால் முடியும் என நம்புதல்., சூழ்நிலைகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்துதல். எனவே புலம் பெயர் பெண்கள் இன்னும் சாதனைகள் புரிந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்வதே இந்த உலகத்துக்கு சொல்லும் செய்தியாகும்.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 2011 அக்டோபர் இரண்டாம் வார உயிரோசையில் வெளியானது.

புதன், 25 ஜூலை, 2012

அரிசிச் சோறா.. அப்பிடின்னா..?

அரிசிச் சோறா.. அப்பிடின்னா..?

இப்படி உங்க வாரிசுகள் கேட்கும் காலம் அதிகமில்லை ஜெண்டில் மேன் & உமன்.. மாதா மாதம் ஏறிக்கிட்டு இருந்த அரிசி விலை ( பால், பஸ், பெட்ரோல் இதெல்லாம் தனிக்கதை).. இன்னிக்கு நாளுக்கு நாள் ஏறுது. தங்கம் விலை மாதிரி நேத்து என்ன விலை. இன்று என்ன விலைன்னு டிவியில் கூட சொல்லலாம். பங்குச் சந்தை சதியா இருக்குமோன்னு கூட ( கமாடிட்டீஸ் மார்க்கெட் மாதிரி அரிசி மார்க்கெட்..) தோணுது.

ரங்கமணி தமிழ்நாட்டுல வாங்கின அரிசிதான் இந்த நெலமைன்னா, நான் கர்நாடகாவுல வாங்கின அரிசி அதோ ரகம். என்னன்னா நாம இங்கே கர்நாடகா பொன்னிதான் சாப்பிடுறது. அதே கர்நாடகாவுல நீங்க போயி சல்லடை போட்டு சலிச்சாலும் கிடைக்காது. ஹாஃப் பாயில், பாரா பாயில், பச்சரிசி அப்பிடின்னு பல ரூபத்துல இருக்கும். ஆனா தமிழ்நாட்டுல இருக்க தரம் இருக்காது. சரி ஏதோ ஒண்ணுன்னு வாங்கிட்டு வந்து சமைச்சா சாதம் வெள்ளை வெளேர்னு மல்லிகைப் பூ மாதிரி இருந்துச்சு. ஆனா பாருங்க ரெண்டு நாள் சாப்பிட முடியல.

நம்ம இடுப்பை சுத்தி ஒரே வலி. கடைசி விலா எலும்பு ஜாயிண்டாயிட்டா ( பஸ் டயரை சுத்தி மாட்டினா )எப்பிடி டைட்டா இருக்கும். அதுபோல உதரவிதானம் எல்லாம் எங்க இருக்குன்னு வலி மருந்து தடவியே கண்டுபிடிச்சுகலாம். என்ன ஆச்சுன்னா மூச்சுக் குத்து பிடிச்சாப்புல வாயுப் பிடிப்பு. ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல சாப்பிட்ட நாலு நாளும். இப்பவெல்லாம் கர்நாடகாப் பொன்னியைப் பார்த்தாலே கிடுகிடுங்குது.

போன தரம் 34 ரூபாய்னா இந்தத் தரம் 38 ரூபாய். சரின்னு ரெண்டு நாள் கழிச்சு தமிழ்நாட்டுக்கு வந்தா அடங்கொப்புரானே.. 42 ரூபாயாம்.

சின்ன வயசுல பள்ளிக் கோடம் படிக்கும் போது மதிய உணவு திட்டம் செயல்பாட்டுல இருந்த சமயம். ( இப்போ உள்ள சத்துணவுத் திட்டம் இல்ல) . அப்ப பள்ளிக்கூட வாத்தியார் என்ன சொல்வாருன்னா தினமும் உங்க அம்மா சாதம் செய்ய அரிசி எடுக்கும் போது ஒரு கைப்பிடி எடுத்து ஒரு பையில போட்டுக்கிட்டே வாங்க. அதோட தினமும் ஒரு பைசாவும் போட்டுகிட்டு வாங்க. ஒரு மாதம் கழிச்சு அந்த அரிசியை அன்னதானத்துக்கு கொடுங்க. அந்த பைசாவை காய் செலவுக்கு கொடுங்க. என்பார். என்ன காரணம்னா நாம் சாப்பிடும் சாப்பாட்டை எளியவங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கணும்கிற எண்ணம் மாணவப் பருவத்திலேயே வரணும்னுதான்.

இந்த அரிசிங்க எல்லாம் தமிழ் நாட்டுல விளையறதே இல்லையா.. அல்லது தண்ணீர்ப் பற்றாக்குறையா, இல்லைனா விவசாயிங்க எல்லாம் நிலத்தை ரியல் எஸ்டேட்காரங்களுக்கு வித்துட்டு வேற வேலைக்குப் போயிட்டாங்களான்னு தெரியலை.

ஏன்னா எங்க அம்மா பாட்டி காலத்துல எல்லாம் ஐ. ஆர். 20, பொன்னி புழுங்கல்னு கிராமத்துலேருந்து நெல்லுங்க வரும். அந்த நெல்லை அவிச்சு காயப்போட்டு ( பத்தாயம் இருக்கும் அதுல அடைச்சு வைச்சிருப்பாங்க) . அதை மெஷின்ல கொடுத்து அரைச்சுட்டு வந்து தவிடு நீக்கி, பொடைச்சு, உமி, கல் பொறக்கி, குருணையை எல்லாம் இட்லிக்கும் பலகாரத்துக்கும் வைச்சுகிட்டு, முழு அரிசியை சோறு வடிப்பாங்க. அந்த அரிசியில் இருந்த ருசி இப்ப எதிலேயும் இல்ல. ( அது போல கீரை, கத்திரிக்காய், தக்காளின்னு சோகக் கதையில சிக்கின காய்கறிங்க லிஸ்ட் பெரிசு ) .

பெரியவங்களுக்கு எல்லாம் வயசாயிடுச்சு. அரிசி அறையைத் திறந்து பத்தாயத்திலிருந்து எடுத்து அவிச்சு அரைச்சுப் பொடைச்ச பாக்கியத்தக்கா எல்லாம் இப்ப இல்லை. அது போல ஊரூரா டெண்டோட சுத்துற நமக்கும் அரிசியை வாங்கித் தின்னுதான் பழக்கம்.

வெயிட்டைக் கொறைங்கன்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. நலம் விரும்பிங்க சொல்லிட்டாங்க. பத்ரிக்கைகளும் சொல்லிட்டாங்க. ஆனா நம்ம பாழாப் போன தமிழ்நாட்டு வயிறு சப்பாத்தி, பூரி, பொங்கல் எல்லாம் பார்த்தா கெஞ்சி கெஞ்சி ரெண்டு இட்லியோ, தோசையோ போடச் சொல்லி படுத்துதே.

முன்னயெல்லாம் பிள்ளைகுட்டிக்காரங்க வீடுன்னு 3 ஆழாக்கு 4 ஆழாக்கு போட்டு வடிப்பாங்க. அந்த அரிசிக் கஞ்சியில் உப்பு போட்டுக் கூட குடிச்சிருக்கோம். அப்புறம் தனிக்குடித்தனம் வந்த பிறகு ஒழக்கரிசிச் சோறா அது கொறைஞ்சுச்சு. இப்ப சமீபகாலமா ரெண்டு பேருக்கு அரை ஆழாக்குக்கு கம்மியாதான் சோறாக்குறது. ஒரு கப் சோறுன்னா ஒரு கப் பொரியல், ஒரு கப் கூட்டுன்னு சாப்பாடு.

3 கோர்ஸ் விருந்து சாப்பிட்ட தமிழனுக்கு ( சிப்பல் தட்டுலயும், கரண்டி கரண்டியாவும் , குமிச்சு வைச்சு சாம்பார்ல பாத்தி கட்டி, ரசத்துல வரப்பு வச்சு, தயிர்ல கப்பல் ஓட்டினவங்களுக்கு )இப்ப என்ன நிலைமைன்னா, ஒரு 10 கிராம் அரிசியை வைச்சு ஸ்பூனால சோத்தை வைச்சுகிட்டு அதுக்கு பக்கத்துல ( ஒரு கிலோ அரிசி 42 ரூபாய்னா, ஒரு கிலோ காயும் அதே விலைதான் - 42 - 60/-) பொரியல் ஒரு கப், கூட்டு ஒரு கப் வைச்சு சாப்பிட்டுக்கலாம். காய்கறியைப் போட்டாவது வயித்த ரொப்ப வேண்டி இருக்கே.. வெயிட்லாசுன்னு சந்தோசப் பட்டுக்கலாம்.

வர்ற விருந்தாளிங்களுக்கும் இன்னும் ஒரு ஸ்பூன் சாதம் வைச்சுக்குங்கன்னு விருந்தோம்பல் பண்ணலாம். நிச்சயம் இன்னும் ஒரு தலைமுறைக்குப் பிறகு சோறுங்கிறதே காணாமப் போயிடும்.  நம்ம வலைத்தளத்துல ( மியூசியம்னு சொல்லி அலுத்துப் போச்சுங்க.. அது வேற ஏன் எடத்த அடைச்சுகிட்டு) இருக்குற நம்ம போஸ்டைக் காண்பிச்சு இதுதான்பா அரிசி சோறு. சோழ நாடு சோறுடைத்துன்னு நாங்க எங்க காலத்துல படிச்சிருக்கோம். பார்த்திருக்கோம்னு சொல்லி பெருமைப் பட்டுக்கலாம்.


மனித ஆயுதம்.. ”உலோகம்” . ஒரு பார்வை

ஜெயமோகன் அவர்களின் ”உலோகம்” த்ரில்லர் நாவல் என்ற பெயரில் டிஸ்கவரி புத்தக நிலையத்தில்பார்த்ததும் வாங்கி வந்தேன். மூன்று மாதமிருக்கும். இன்றைக்குத்தான் படிக்க அமர்ந்தேன். 4 மணி நேரங்களில் கீழே வைக்க முடியாமல் படித்த ஒரு மனித ஆயுதம் பற்றின கதை அது.

ஈழ மொழியில் புனைவுத்தியில் சொல்லப்பட்டிருக்கும் கதை அது. எப்போதும் கிடைக்கும் சுஜாதா., ராஜேந்திர குமார்., ராஜேஷ் குமார் நாவல்கள் போலில்லாமல் வேறோரு மனம் சார்ந்த மொழியிலான த்ரில்லர். இந்தியாவின் உளவு அமைப்புக்களும் எந்த விதமான செயல்களில் ஈடுபடுகின்றன என அதில் படித்தபோது மனம் கனமானது. வன்முறையை வேரறுக்க வன்முறை.. எதற்காக யாரைக் கொல்கிறோம்., என மனசாட்சி இல்லாமல் இப்படி நடக்கும் கொலைகளைப் பகிர்ந்தது அதிர்ச்சியாக இருந்தது.

ரஸ்கோல்னிகோவின் மனநிலையை இதில் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது. மிக வறண்ட வெறுமையான மனநிலை. ஒரு மாணவனாக தனித்த அறையில்( சவப்பெட்டி போன்றதொரு அறை) வாழும் ரஸ்கோல்னிகோவ் போல சார்லஸ் அலைவதும் படிக்கும் காலத்தில் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு வரலாற்றில் இருக்க விரும்பி வந்து வரலாற்றால் மூழ்கடிக்கப்பட்ட ஒரு மனிதனாய் ஆவதும் துயர சம்பவங்கள். நிஜமாக பாதிக்கப்பட்ட ஒருவன் வன்முறையைக் கைக்கொள்வதும்., பேச்சினாலும் சாகச உணர்வுகளாலும் ஈர்க்கப்பட்ட ஒருவன் வன்முறையைக் கையாள்வதும் ஒன்று போல தீவிரமாய் இருக்க முடியுமா.

சார்லசின் குடும்பம் பற்றி அவன் படிப்பு தவிர மற்ற நிகழ்வுகள் சரிவர தெரியவில்லை. இந்தியாவில் அவன் மனித ஆயுதமாக புகுத்தப்பட்டதன் பிண்ணனியில் யாரிடமிருந்து அந்த ஆணைகள் வருகின்றன எனவும் கடைசிவரை புரியவில்லை. எந்த குழுவுக்காக எந்தத் தலைமையிடம் இருந்து ஆணைகள் வருகின்றன என்பதும். அதேபோல் அவரது வயது 37., அந்தப் பெண்ணின் வயது 27. அவர்கள் அம்மா சந்திரா கல்லூரி சென்றபோது இவருக்கு வயது பத்துதான் இருந்திருக்கும். சென்னையில் சினிமா., விகடன் ., குமுதம் இவைதான் தமிழருக்கு பொதுவான ஆர்வங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன. இதில் இலங்கை வானொலி என்ற ஒன்றை நாம் யாரும் மறக்கவோ விடவோ முடியாது. ட்ரான்சிஸ்டரில் பாட்டு கேட்டாலும் இது பற்றி சின்ன விவரமும் கூட இல்லை.


பெண்களை அவன் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வரும் ஹீரோ போல காதலோடே அணுகுகிறான். அதற்கு அவர்கள் உடன்படுகிறார்கள். வெறும் போகப்பொருளாகவும்., தன்னலமிக்கவளாகவுமா கையறு நிலையில் உள்ள பெண்கள் மாறிவிடுவார்கள். பெண்ணைக் போல காமத்தைப் போல சாகசம் என்பதும் ஒரு வேட்டையாடும் மிருகமாக அவனை சித்தரிக்கிறது. தான் துன்பப்படும் போது மட்டும் கண்ணீர் விடும் அவனுடன் மனம் வருந்தினாலும் ஜோர்ஜ் இறக்கப்போகிறான் எனத் தெரிந்தும் மனதுக்குள் புன்னகைத்தபடி இருந்தது வெறுப்பை உண்டாக்கியது.

எல்லா ஆண்களுக்கும் உள்ள இயல்பான பெண்களைப் போகப்பொருளாகக் கருதும் தன்மை அவனுடைய மனித ஆயுதம் என்ற பங்கிற்கு பங்கம் ஏற்படுத்துகிறது. பொன்னம்பலத்தாரை மிகக் கோழையாகப் பார்த்தது இப்படித்தான் சுயநல அரசியல்வாதிகளும் இருப்பார்களோ என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. சிறீ மாஸ்டரைக் கொன்று, பின் கடைசியில் நிராயுதபாணியான பொன்னம்பலத்தாரையும் ( இயக்கத்தில் தான் இருந்த காலத்தில் தன் பேச்சின் மூலம் பலரையும் ஈர்த்து கெடுத்திருந்தாலும், )கொன்றது மனித வெடிகுண்டு., போன்று உலவியவர்களின் மனநிலையையும் செயல்பாடுகளையும் உணர்த்தியது.

வெறுப்பின் உச்சத்தில் ஆண்கள் போராளிகளாக மாறுவதும்., பெண்கள் எல்லாவற்றையும் ஏற்று கொள்பவராக மாறுவதும்., அகதிகள் குடியிருப்பும் அவர்கள் வாழ்வும் மிக வருத்தத்திற்குரியது.

இதில் வரும் வன்முறைகளை ., ரத்தவாசனையை ரசிக்கும் மனிதர்களை (ராம்கோபால் சர்மாவின் த கம்பெனி என்ற படத்தை) நினைவூட்டியது.. அம்பையின் ஆற்றைக் கடத்தல் என்ற நாடகத்தில் சீதை என்றால் ராமனின் மனைவியா., ஜனகனின் மகளா., தசரதரின் மருமகளா., ரவிவர்மாவின் ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டவளா என்றால் அதற்கு அவர் சொல்வார் , என்னை பிரதிமைகளுடன், முன் முடிவுகளுடன்., சாயல்களுடன் அணுகாதீர்கள் என்று. ஆனால் ஒரு விஷயத்தைக் கவனகப் படுத்திக் கொள்ள அது சம்பந்தமாக நமக்குத் தெரிந்த விஷயங்களுடன் பொருத்திப் பார்ப்பது என்பது தவிர்க்க இயலாதாதாகிறது.

நாம் நேரடியாக பங்குபெறாத., அறிய முடியாத , உணர்ந்து வாழாத ஒரு விஷயத்தை படங்கள் மூலமாவும்., புதினங்கள் மூலமாகவும்., வீடியோக்கள் மூலமாகவுமே தெரிந்து கொள்ள முடிகிறது. மனம் பல விஷயங்களைக் கோர்த்து அந்த சம்பவங்களைப் புரிந்து கொள்கிறது. அதன்படி உலோக நாயகனின் உள் புதைந்த உலோகத்திலிருந்து ஈயத்தினாலான தளிர்களும்., ஈய இலைகளும் கொண்ட செடி முளைப்பதான கற்பனை., நிராதரவாக மணற்தேரிய்ல் விட்டுச்செல்லும் படகு தம்மைவிட்டு தூரச் செல்லும் தாய்நாடுபோல் தோற்றம் தருவதும்., ( நேற்று கூட வெளிநாட்டில் வாழும் ஒரு ஈழத்து முகப்புத்தக நண்பர் சொன்னார் .. இன்னும் ஈழம் செல்ல கடுமையான நடைமுறை பின்பற்றப்படுவதாகவும்., அவருடைய பாஸ்போர்ட் ஆறுநாட்கள் தேவையில்லாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பதால் தன் புத்தகம் சம்பந்தமான சென்னை விஜயம் மிக அவசர கதியில் இருக்கும் என்றும், உடனே தான் இருக்கும் நாட்டிற்குத் திரும்பவேண்டும் என்றும் சொன்னார்). இது இலக்கிய நயம் வாய்ந்த சாகசப் புதினம்.

ரெஜினாவும்., வைஜெயந்தியும் எல்லாவற்றையும் சகஜமாக எடுத்துக் கொள்வது கொஞ்சம் அதிர்ச்சியளித்தது. பெண்களுக்கு சுயகௌரவம் என்ற ஒன்றே இல்லையா. உயிர் வாழவும்., சௌகர்யமாய் வாழவும்., என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்வார்களா. தந்தையைக் கொல்ல பேரம் பேசுவது., கணவனைக் கொன்றவனுடன் இருப்பது எல்லாம் ஜீரணிக்க முடியவில்லை.

துப்பாக்கியைக் கையில் வாங்கியதும் ஒப்புக் கொடுப்பதற்காகவே உடலெடுத்தது அது என்பதும்., கைகளின் வெற்றிட வெளியை நிரப்புகிறது என்பதும்., கருங்கல்., கோடாலியாகி., வில்லாகி., வாளாகி., துப்பாக்கியாக பரிணாமமெடுத்ததை ஜெவின் எழுத்தில் படித்தபோது ஒரு துப்பாக்கியை நேரடியாகவே தொட்டுப் பார்க்கவேண்டும் என்ற ஆவலை உருவாக்கியது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த வன்முறை என்பது எப்படி மனிதர்களை சாகச வலை போட்டு ஈர்க்கிறது என உணர்ந்து கொண்டேன் அப்போது. மணிதான் 4 ஆகிவிட்டபடியால் ஒரு மணல்தேரியில் படுத்து ஜன்னல் வழி நிலவையும், இரவு விளக்கையும் பார்த்துக் கொண்டே அடுத்த படகுக்காகவும் அடுத்த கட்டளைக்காகவும் காத்திருக்கும் ஒரு மனித ஆயுதமாக உணர்ந்தபடியே இருந்தேன்.

நூல் :- உலோகம்.

ஆசிரியர்:- ஜெயமோகன்

பதிப்பகம் :- கிழக்கு.

விலை :- ரூ. 50.

டிஸ்கி:- இந்த விமர்சனம்  2011,அக்டோபர் முதல் வாரம் உயிரோசையில் வெளியானது.

செவ்வாய், 24 ஜூலை, 2012

ஒன்றுமறியாத பூனைக்குட்டி

ஷாப்பிங் மால்களில்
முயல்குட்டிகளும்
பூனைக்குட்டிகளும்
கடந்த போது
அவன் கண்கள்
அவைபோல் துள்ளின.

கூட வரும் மனைவி
பார்க்கும்போது
கீழ்விடுவதும்
பின் ஏந்திக்கொள்வதுமாக
நீண்டன அவன் கண்கள்.

குறுகலான கடையில்
இருந்த காலண்டர்
சாமியின் ஆயுதம்
அவனை மிரட்டியது .

கண்களை வெவ்வேறு
கோணங்களுக்கு
உள்ளாக்கியபோதும்
தட்டுப்பட்டபடியே
இருந்தன அவை.

இடப்பக்கக் கடைவழியே
குதித்துச் சென்றவைகளை
பட்டைக் கண்ணாடிகள்
பலவாய்ப் பிரதிபலித்தன.

பர்சின் கனம் குறைந்து
பைகளின்கனம் அதிகமானபோது
அவன் உரசிச்செல்லும்
சில பூனைகளையும்
வெறுக்கத்துவங்கி இருந்தான்..

ஏதுமறியாததுபோல்
புன்னகைத்தபடி
இணைப்பூனையாய்
அடியொற்றியபடி
நடந்தாள் மனைவி..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஜூன் 12 , 2011 திண்ணையில் வெளியானது. 

திங்கள், 23 ஜூலை, 2012

நிறைய அமுதம் . ஒரு துளி விஷம் . வைரசின் நூல் எனது பார்வையில்

தகிதா பதிப்பகம் இந்த வருடம் வெளியிட்ட பத்து நூல்களில் ஒன்று கவிஞர் வைரஸின் நிறைய அமுதம். ஒரு துளி விஷம். கல்லூரி மாணவனான வைரஸின் கவிதைகளில் இளமை மிளிர்கிறது..பதிப்பாளர் மணிவண்ணன் கூறியபடி படிக்கும் காலத்திலேயே படைக்கும் ஆற்றல் பாராட்டுதலுக்குரியதுதான். தன் தந்தை., தாய்., சகோதரன்., சகோதரிக்கு இந்த நூலை அர்ப்பணம் செய்திருக்கிறார் கவிஞர். நூலின் விலை ரூபாய் 50/-

 ”என் சமூக சூழ்நிலைகள் விஷமாக இருந்தபோதும், அதனையே உணர்ச்சியால் கடைந்து கடைந்து அமுதமாக்கி இருக்கிறேன். சில நேரங்களில் அந்த அமுதமே அளவுக்கு மீறி விஷமாகவும் மாறி இருக்கலாம் “ என்று தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார் வைரஸ்.

கற்பகம் பல்கலைக் கழக ஆசிரியப் பெருமக்களுக்கும்., நீலகிரி வாழ் மக்களுக்கும்., நிறைய நண்பர்களுக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

இன்றைய கல்லூரி இளைஞர்களின் பிரதியாய் இருக்கும் வைரஸின் கவிதைகள் காதல்., அன்பு., சமூகப் பார்வை ., இயற்கை., குழந்தைத்தொழிலாளிகள்., பெண் பாலியல் தொழிலாளிகள்., நிலவு., முத்தம்., அம்மா., திருவிழா., தெருநாய்கள்., பூனைகள்., மதப்போர்., நான் என பல தலைப்புகளில் இளைய சிந்தனையோடு கூடிய கவிதைகள்..

இளைஞர்களுக்கான ஒரு மேம்போக்கான செல்போன் கலாச்சாரத்தில் கட்டுண்டு அலையாமல் தன் எழுத்து மூலம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எழுச்சியோடு எழுதபட்ட சில கவிதைகள் ஈர்த்தன.

“சிறகுகளின்றி அலையும்
சிகப்பு பட்டாம் பூச்சிகள்
சிகரங்களை எண்ணுவது
சிக்கலானது.

 “ நாவினால் இட்ட சொல் எனும் விதை வளர்ந்து வேரோடிப் போவதையும்., காதல் என்பது ஒரு உள்ளிருப்புப் போராட்டமாகவும்., இளமையில் தாடி வியாதியைக் களையச் சொல்வதும்., மரத்தின் மரண வாக்குமூலமும்., வித்யாசம்.

காதல் வயப்படாத இளைஞர்கள் உண்டா என்ன. அது வசந்தகால பருவம் அல்லவா. காதல் உணர்வுகள் முகிழ்க்க கவிதைகள் அமிர்தமாய் பெருகுகின்றன.

நூலகத்தில்.,

“ ஏன் என் எதிரே அமர்கிறாய்
உனக்குத் தெரியாதா..
எனக்கு
எதிர்ப்பு சக்தி இல்லையடி..

நீ
இமைகளைக் கவிழ்க்கையில்
நான்
இதயம் நிமிர்கிறேன்.

ஒரு தவத்தை விடக்
கொடியது
அழகியின் முன்னால்
அமைதியாக இருப்பதுதான்.

சற்று நேரத்தில்
நீ பறந்து போய் விடுவாய்.
அந்த வெற்று நேரத்தில்
நான் இறந்து போய் விடுவேன். ” என்றும்

பொம்மை பற்றி.,

 “ தயவு செய்து
குழந்தைகளை அடிக்காதீர்கள்.
பொம்மைகளுக்கு
வலிக்கிறது. “

விலை மகளிர் பற்றியும் கவலை மீதூர

 “வாழும் போதே
 உடல்தானம் செய்த
தியாகிகள் “ எனவும் குறிப்பிடுகிறார்.

இவரின் கவிதைகளில் மிகப் பிடித்தது., எல்லைச்சாமி கவிதை.. இராணுவத்தில் காவலாய் இருக்கும் வீரர்களை சிறப்பிக்கும் கவிதை.


முதிர்கன்னி பற்றிய கவிதையில்
 ”ஆளாகி நாளாகி போச்சு - இளமை
தூளாகி வீணாகி போச்சு “

”பொண்ணா பொறந்தும் பயனென்ன
கன்னி இன்னும் ருசிக்கலையே
உடம்பெ வித்துப் பொழக்கிறதுக்கும்
ஊருக்கு இன்னும் பசிக்கலையே..” என படிக்கும் போது மனம் வலிக்கிறது.

அரசு பள்ளிகள் பற்றி

”அரசு பள்ளியும்
அன்னைதான் .
அதனாலதானோ
அனாதையாகி விட்டது “ என்று கேள்வி எழுப்பும் போது சொல்ல நமக்கு பதில் இல்லை. ஆங்கில வழிக் கல்விப் பள்ளியில் அனைவரும் பிள்ளைகளைக் கொண்டு சேர்க்கும் போது குறைந்து கரைந்து கொண்டே வரும் அரசுப்பள்ளியின் நிலை வருத்தத்திற்குரியது.

நிலவு., இரவு., மழை., மரம்., ., காதல் தோல்வி ., ஒரு தலைக்காதல்., உடல் சார்ந்த காமம் பற்றிப்பேசும்போதே கைபேசியின் தீமைகள் தெருநாய்களை திருமணம் செய்வதை எள்ளுதல்.,மின்சாரமற்ற இரவை சுடுகாடு எனல்., நான் என்பது அனுபவம் எனல் என வித்யாசமான கவிதைகளும் அநேகம்.

கிராமப்புற பேச்சு வழக்கிலான கவிதைகள் சுவாரசியம்.

" நான் பேசும்
சொற்பொழிவுகள்
என் சொற்ப நிலைதான்" என்று வைரஸே சொல்வது போல வாழ்க்கையில் இன்னும் நிறைய அனுபவங்கள் காத்திருக்கிறது.. அனைத்தையும் அழகான கவிதைகளாக்குங்கள் வைரஸ். மணிவண்ணன் சொல்வது போல ”எழுதுகோல் ஆயுதம் ஏந்தி., கவிதை க்ரீடங்களைச் சூடி., இலக்கிய சாம்ராஜ்ஜியத்தில் கவிதை இளவரசனாக கம்பீரமாக களமிறங்கி இருக்கிறார் வைரஸ்.” இன்னும் கவிதை பேரரசனாக வாழ்த்துக்கள் வைரஸ்.

டிஸ்கி :- இந்த நூல் விமர்சனம் மே 8, 2011 திண்ணையில் வெளியானது


வெள்ளி, 20 ஜூலை, 2012

KOPS FOOD - MULTI CUISINE RESTAURANT..ஈரோட்டில் ஒரு சர்வதேச உணவகம்.

மஞ்சள் மாநகரமான ஈரோட்டில் எங்கள் அன்பிற்கினிய அண்ணனின் பிள்ளைகள் இணைந்து  Kops food- Multi Cuisine Restaurant. என்ற சர்வதேசத் தரம் வாய்ந்த உணவகம் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார்கள். அதில் இருக்கும் உணவு வகைகளைப் பார்த்தால் முரளி அவர்கள் சொல்வது போல  taste the difference. என்று மற்ற சாதாரண உணவகங்களுக்கு சவால் விடுவது போன்ற சிறப்போடு இருக்கிறது.. மேலும் உள் அலங்கார அமைப்பு ( இண்டீரியர் டெக்கரேஷன் ) அழகுற அமைந்துள்ளது.

அவர் குறிப்பிட்டிருக்கும் மெனுவை எல்லாம் பார்த்தால் அடுத்த ட்ரெயின் எப்போ ஈரோட்டுக்கு என்று தேடத் தோன்றுகிறது. இந்த முறை புத்தகத் திருவிழாவுக்கு ஈரோட்டுக்கு செல்லும் அனைவரும் KOPS FOOD ஐயும் சுவைத்து விட்டு வாங்க.. அப்புறம்  சொல்வீர்கள் .. இதுபோல எங்குமே சாப்பிட்டதில்லை என்று.. ஏனெனில் சும்மாவே அண்ணன் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றவர்கள். அவர்களின் இளைய தலைமுறை நடத்தும் உணவகத்திலும் அந்தச் சிறப்பு பொலிந்து இருக்கும்.

சௌத் இந்தியன், நார்த் இந்தியன், தந்தூரி, சைனீஸ், இத்தாலியன், என்று எல்லா உணவுகளும்.. மெனு படிக்கும்போதே சுவை மொட்டுக்கள் சுறுசுறுப்பாகுது.. நான் என்ன நினைக்கிறேன்னா.. அந்த ஃப்ரைட் ஐஸ்க்ரீமை சுவைக்கணும்னு.. உங்க ஃபேவரைட் மெனுவை படிச்சிட்டு சொல்லுங்க.. சீக்கிரம் ஒரு விசிட் அடிக்கலாம் ஈரோட்டுக்கு..அவங்க அவங்க செலவுல..:)

இது அண்ணனின் மகன் முரளி முகநூலில் கொடுத்திருந்த விபரங்கள்.. அதை மொழியாக்கம் செய்யாமல் அப்படியே கொடுக்க விழைகிறேன். ஏனெனில் இது வெளிநாட்டில் இருக்கும் அனைவருக்கும் உபயோகப்படும் என்று. 


// Welcome to Kops food - the luxurious multi cuisine restaurant at Erode . Now, enjoy the real taste of North Indian, South Indian, Tandoori, Chinese, Italian Delicacies in a luxurious environment. We serve the food in a perfect ambience with unparalleled hospitality and it will certainly make you come back for more.

Our Restaurant's food menu has a wide range of variety, we have everything for everyone and is proud to say that we can cater to everyone’s taste.

North Indian we can serve the best “North Indian" food items ranging from "Samosa" to "Kadai chicken", from our special "Fish pollichatu" to "Tandoori prawn", all serves as a great start for your perfect meal ahead.

Oriental Oriental section which not only looks good but also taste awsome, Oriental is also one of our great speciality where can serve almost everything like “ Fries", "Sandwich",”Subs”, "Burger", ”Pasta” to “Pizza", so all you oriental lover you wont be dissapointed with us, you just need to select your favourite option from our restaurant menu

South Indian South Indian menu has many finger licking food items so that you can eat till your neck, there are so many options to choose from “Nadu kolizi mulagu pertal”, “Mutton sukka” to “Keema Dosai”, “Chettinadu Egg Dosai” .To add on Kops’s Biriyani, Veg and Non Veg meals and many more..

Chinese Chinese counter are a variety of exotic vegetarian & non vegetarian steamed and fried & stir fried dishes cooked in Szechwan, Manchurian, Sweet n Sour and Hot garlic sause. Add it to our special we sever the above in fish and prawns also.

We also have “Soya chilly”, “Lamb in 5 spices powder. Mocktail & Desserts Our mocktail will sever as a good accompliment through out meal.

We sever “Misty blue”, “ plam tender” and our best rated is “Minty lemon” and “Frozen Delight”.

 A rich meal is never complete without Desserts, why dont you come to try out our "Fried IceCream", "Donut", "Mousses" and "Mud suffle" or your choice of ice cream in our restaurant.

 நான் வெஜ் ஐட்டத்தை ஒரு பிடி பிடிக்கிறதா.. அல்லது பர்கர், பிஸா, பாஸ்தா வா. அல்லது டெசர்ட்டான்னு ருசியான மெனு எல்லாம் பார்த்து பசியாகுது.. சீக்கிரம் வரோம்  KOPS FOOD..   ரெடியா இருங்க..:)


”பூவரசி” ஈழவாணி ஜெயாதீபன்

பூவரசி ஈழவாணி ஜெயாதீபன். :-

வாணி ஜெயாதீபன் இலங்கையைச் சேர்ந்தவர். ஈழவாணி என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். இவர் ஒரு பத்ரிக்கையாளர், கவிஞர், எழுத்தாளர், குறும்பட இயக்குநர். 2004 இல் இலங்கையில் இருந்து மலேசியாவுக்கு குடிபெயர்ந்தவர். பின் 2007 இல் இருந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.

எழுத்தாளர்கள் பலருண்டு என்ற போதிலும் இலங்கையின் சூழலில் நிஜம் பொங்கும் “செந்தணல்” என்ற பத்ரிக்கையை தன் இருபதுகளிலேயே நடத்தியவர். ”நிறங்கள்” இவரின் முதல் கவிதைத் தொகுதி. இரண்டாவதாக ”சிதறல்” என்ற சிறுகதைத் தொகுப்பு, மூன்றாவதாக ”ஒரு மல்லிகை சிவக்கிறது” என்ற குறு நாவல், நான்காவதாக ”நெஞ்சோடு கொஞ்சும் நாட்டார் பாடல்கள்” என்ற தொகுதியையும் வெளியிட்டு இருக்கிறார்.

இந்தியா வந்தபின் ”தலைப்பு இழந்தவை” என்ற கவிதைத் தொகுதி தகிதாபதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. சமீபத்தில் வந்துள்ள கவிதைத் தொகுதி “ ஒரு மழை நாளும் நடுநிசி தாண்டிய ராத்திரியும்”.

 ”பூவரசி நிஜமும் புனைவும்” என்ற இணைய இதழையும் ”பூவரசி” என்ற காலாண்டிதழையும் சிறப்பாக நடத்தி வருகிறார். சமீபத்தில் அவர் எடுத்து வரும் குறும்படம் “ அம்மா வருவாள்” இது புலம் பெயர்ந்த ஒரு குழந்தையின் எண்ணங்களை சொல்வதாக இருக்கிறது.

இன்னொரு ஆவணப்படமும் எடுத்து வரும் ஈழவாணி ” தன்னுடைய எழுத்துக்களில் தான் ஒருபோதும் போதனைகள் செய்வதில்லை. சீர்திருத்துவதில்லை. தான் வாழ்ந்துவரும் இந்தக் காலகட்டதை ஒரு எழுத்தாளராக, கவிஞராக, இயக்குநராக எனக்கு இவ்வாறு நிகழ்ந்தது என்று பதிவு செய்கிறேன்” என்று கூறுகிறார்.


வியாழன், 19 ஜூலை, 2012

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் சொக்கலிங்கம் செந்தில்வேல்.

மிகச் சிறுவயதிலேயே பெரிய பதவிகளை வகிப்பவர் சொக்கலிங்கம் செந்தில்வேல். மயிலாடுதுறை ஏவிசி கல்லூரிகளின் ( 3 கல்லூரிகள்) செகரெட்டரி கரெஸ்பாண்டண்டாக 12 வருடங்களாக இருக்கிறார். மெஜெஸ்டிக் மஹேந்திராவின் ட்ராக்டர்ஸின் மேனேஜிங் டைரக்டராக 2005 லிருந்து இருக்கிறார்.

மெஜெஸ்டிக் மோட்டார்சின் (ஹீரோ ஹோண்டா) மேனேஜிங் பார்ட்னராக 2002 லிருந்து இருக்கிறார்.. இன்னும் தமிழ்நாடு தனியார் கல்லூரிகளின் அசோசியேஷனில் எக்சிக்யூட்டிவ் மெம்பராகவும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் அசோசியேஷனில் எக்ஸிக்யூட்டிவ் மெம்பராகவும், சேம்பர் ஆஃப் ட்ரேடர்ஸில் எக்ஸிக்யூட்டிவ் மெம்பராகவும் இருக்கிறார். மயிலாடுதுறையில் யூனியன் க்ளப்பில் வைஸ் பிரசிடெண்டாகவும், மாநில அதெலட்டிக் அசோசியேஷனில் பேட்ரனாகவும் பெருமைமிகு பதவிகள் வகித்து வருகிறார்.


2005 இல் இவர் பதவி வகிக்க ஆரம்பித்தபின் ஏவிசி கல்லூரி மிகத் திறமையான நிர்வாகத்துக்காக NAAC யிடமிருந்து “ A" க்ரேட் தகுதி பெற்றுள்ளது. 2005 இல் மாயவரம் ஏவிசி கல்லூரி 50 ஆம் ஆண்டு கோல்டன் ஜூப்ளி விழாவை கொண்டாடியது. விளையாட்டுக்களில் தனித்திறமை பெற்றுள்ள மாணவமணிகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. பாலிடெக்னிக் மற்றும் இஞ்சினியரிங் கல்லூரிகளில் சேர்பவர்களிடம் டெனேஷன் வாங்கப்படுவதில்லை.

 ஏவிசி கல்லூரி சிறந்த செயல்பாட்டுக்காக ( POTENTIAL FOR EXCELLENCE).விருதும், பணமாக 1.3 கோடியும் 2011 இல் யூனிவர்சிட்டி ஆஃப் க்ராண்ட் கமிஷனால் பெற்றது. நேஷனல் போர்ட் ஆஃப் அக்ரடிஷனால் ( NATIONAL BOARD OF ACCREDITION) சிறந்த கல்லூரியாக சான்றளிக்கப்பட்டது.

12 வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டவர். . நிறைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்களில் பங்கேற்றவர். IIM இன் இரண்டு நிலைப் பயிற்சிகளில் தகுதிபெற்றவர். இருந்தும் எளிமையானவர். ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர். இளையராஜா அவர்கள் திருவாசம் சிம்பொனி இசையமைத்த போது 2005- 2006 இல் அதற்காக அமைக்கப்பட்ட கோர் கமிட்டியில் மெம்பராக தருமபுரம் ஆதீனத்தால் நியமிக்கப்பட்டவர்.உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என இவர் இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்.

டிஸ்கி:- இந்த அறிமுகம் மே 1 - 15 , 2012 இன் அண்ட் அவுட் சென்னையில் வெளிவந்தது. 


புதன், 18 ஜூலை, 2012

ஆட்டோ கொள்ளையா., கொடையா. ..?

ஆட்டோ வருமான்னு கேட்டா சென்னை ஆட்டோக்காரங்க எங்க போகணுகம்னு கேப்பாங்க. நாம இடத்தை சொன்னதும் தலையை இடம் வலமா அசைச்சிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. ஏன்னா அவங்க போற இடத்துக்குத்தான் நாம போகணும். நாம் போக வேண்டிய இடத்துக்கு அவங்க வரமாட்டாங்க.

முன்ன எல்லாம் ஆட்டோவுல ஏறினா அது சூடு வைச்ச மாதிரி ஓடும். பில்லி சூன்யம் வைச்ச மாதிரி சூடு வைச்ச ஆட்டோ மீட்டர் ஓடாம இருக்கணுமேன்னு வேண்டிக்கிட்டுத்தான் ஏறி உக்காரணும். இப்போவெல்லாம் மீட்டர் இருக்கு ஆனா அதை போடுறது இல்ல. பக்கத்து தெருவுக்கு போகணும்னா கூட மினிமம் 40 ரூபாய். மத்த இடத்துக்கெல்லாம் ஆட்டோக்காரர் நிர்ணயிக்கிற வாடகைதான்.

எங்க வீட்டுலேருந்து வட பழனி கோயில் போறதுன்னா முன்ன எல்லாம் 50 ரூபாய். அதுபோல அசோக் பில்லருக்கு போறதுன்னாலும். இப்போவெல்லாம் அதை 70 ரூபாயா ஆக்கிட்டாங்க. இதுல என்ன கொடுமைன்னா 70 ரூபாய் கேப்பாங்கன்னு போனா 80, 90 ரூபாய் கேக்குறாங்க. இவங்க கொள்ளைக்கு எல்லாம் ஒரு அளவே கிடையாது. வாய்க்கு வந்த தொகையை கேக்குறது. இந்த தொகையை நிர்ணயிக்க எல்லாம் ஒரு வரைமுறை , அளவு கிடையாது. கேட்டா பெட்ரோல், அல்லது டீசல் விலையேற்றத்தை காரணம் காட்டுறாங்க.

டி நகருக்கு போக 70 ரூபாய் இருந்துச்சு, ஆனால் அங்கே மாம்பலம் ஸ்டேஷன்ல காலை ட்ரெய்ன் வந்தவுடன் ஆட்டோ பிடிச்சா இரண்டு மடங்கு வசூலிப்பாங்க. 150 ரூபாய்.. அதே தூரம் அதிகாலையில அதிகமாயிரும் போல. நமக்காக விழிச்சிருந்து அவங்க ஆட்டோவோட காத்துகிட்டு இருக்கதால இந்தத் தொகை.அந்த சமயம் பஸ்ஸோ, ஷேர் ஆட்டோவோ கிடைக்காது. வேற வழியில்லாம பேரம் பேசியும் தண்டம் அழ வேண்டிய கட்டாயம். இதுக்கு ஏசி கால் டாக்ஸியே புக் பண்ணி போயிடலாம்.

எக்மோரிலேருந்து ப்ரீபெயிட் ஆட்டோ புக் பண்ணா புக் பண்ண 3 ரூபாய் மற்றும் 183 /- ரூபாய்தான் எங்க வீட்டுக்கு வரும். ஆனா மத்த ஆட்டோவுல வந்தா 250 ரூபாய் அல்லது 300 ரூபாய் கேப்பாங்க. ஒரு முறை என் வீட்டில் இருந்து மதுர வாயிலில் இருக்கும் நடிகை ஊர்வசி வீட்டுக்குப் போக 250 ரூபாய் கேட்டார். ரொம்ப பக்கத்துல இருந்த இடம் அது. இந்த மாதிரி அநியாயத்தொகை வசூலிப்பதைத் தடுத்து ஆட்டோவுக்கான தொகைகளை சங்கங்கள் நிர்ணயிக்காமல் உரிமம் வழங்கும்போதே அரசு நிர்ணயிக்க வேண்டும். இந்த மாதிரி நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமான தொகை வசூலிப்பவர்களுக்கு உரிமத்தை ரத்து செய்யணும்.

அவசரம் சமயத்துக்கு ஆட்டோவில் போக பொதுஜனம் யோசிக்கும் நிலை மாறும். பிரசவத்துக்கு இலவசம் என்று போட்டிருப்பாங்க சில ஆட்டோக்களில் ஆனால் அந்த ஆட்டோ குலுக்குற குலுக்கலில் ஆஸ்பத்ரிக்குப் போகாம ஆட்டோவுலேயே இலவசமா பிரசவம் நடக்க வாய்ப்பு உண்டு.

எல்லா ஆட்டோக்காரங்களையும் நான் குறை சொல்லலை. சில நல்ல ஆட்டோக்காரங்களும் இருக்காங்க. புஷ்பக விமானம் மாதிரி அருமையா ஓட்டுற ஆட்டோக்காரங்க. மனிதாபிமானத்தோட மனித நேயத்தோட இருக்குற ஆட்டோக்காரங்க சிலர்தான். சமீபத்துல வடபழனி முருகன் கோயில்லேருந்து வீட்டுக்கு வர ஒரு ஆட்டோக்காரர் 50 ரூபாய் கேட்டார். மெய்யா பொய்யான்னு என் மெய்யைக் கிள்ளிப் பார்த்துகிட்டேன். வீட்டுக்கு வர வரைக்கும் ஆட்டோவுல வர்றமா அல்லது புஷ்பக விமானத்துல பறந்து வர்றமான்னு தெரியலை. அவ்வளவு ஸ்மூத்தா ஓட்டிக்கிட்டு வந்தார். மன நிறைவோடு இன்னும் பத்து ரூபாய் சேர்த்துக் கொடுத்தேன்.

ஆட்டோக்களில் பல நல்ல வாசகங்களும் பார்த்து படித்து ரசித்ததுண்டு. சில ஆட்டோக்களில் நல்ல ஆடியோ, கடவுள் படங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் எய்ட் சாதனங்கள்னு வச்சுருப்பாங்க. சிலர் ஆட்டோவை தங்கள் தெய்வம் போல வச்சிருப்பாங்க. மும்பையில் ஒரு ஆட்டோக்காரரோட மனிதாபிமான தன்மையினால் கவரப்பட்டு அவரப் பத்தி சமீபத்தில் ஃபேஸ்புக்கில் அவரைப்பத்தின தகவல் மற்றும் ஃபோட்டோ அதிகம் பகிரப்பட்டது. என்ன தொழில் செய்தாலும் அதில் உண்மையாய் இருங்கள் அதுவே உங்கள் உயர்வுக்கு வழி. இந்த மாதிரி ஒரு வாசகத்தை ஆட்டோக்காரங்க எல்லாம் தங்கள் மோட்டோவா வச்சிக்கணும். அப்பத்தான் ஆட்டோக்காரங்க கொள்ளையடிக்கிறாங்கங்கிற மனோபாவம் மாறி நமக்கு கிடைத்த கொடைன்னு மக்கள் நினைப்பாங்க,

செவ்வாய், 17 ஜூலை, 2012

விண்ணில் பறந்த மனிதன் மனோஜ் விஜயகுமார்.

மனோஜ் விஜயகுமார். மனசு வைச்சா எதிலும் ஜெயிக்கலாம்னு சொல்ற திருப்பூர் தொழிலதிபர். எக்ஸ்டீஸ் என்ற பனியன் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர். எக்ஸ்டீஸ் என்ற ப்ராண்டை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தியவர். இவரோட ஆன்லைன் டீ ஷர்ட் ஸ்டோர்ஸ் பற்றி என் டி டி வி , சி என் பி சி , டைம்ஸ் ஆஃப் இண்டியா, ஹிண்டு, இண்டியன் எக்ஸ்ப்ரஸ் , டெக்கான் ஹெரால்ட், பிசினஸ் வேர்ல்டு, பிசினஸ் டுடே, இந்தியா டுடே ஆகியவற்றில் வந்துள்ளது.

இன்ஃபோசிஸ், காக்னிஸண்ட் , மைக்ரோ சாஃப்ட், ஐ பி எம், அஸெஞ்சர், யாஹூ, கூகுள், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐ ஐ டி, ஐ ஐ எம், என் ஐ டி ஆகியவை இவர்களின் வாடிக்கையாளர்கள். வணிகம் சார்ந்த பத்ரிக்கைகளில் எழுதி வருகிறார். புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது, பயணங்கள் இவருக்குப் பிடித்தமானது.

இதை எல்லாம் விட அட்வென்சர்ஸ் இவருக்கு ரொம்பப் பிடித்தம். சமீபத்துல துபாய் போய் அங்கே எல்லா.( Dune bashing, Quad biking, Sky diving, Skiing, Scuba diving, Hot air balloon, Water theme parks, Deep sea fishing .) சாகச விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.ஏற்ற இறக்கமான பாலைவன மணலில் ஜீப் ஓட்டுவது, கரடு முரடான மலையில் பைக் ஓட்டுவது, விமானத்தில் இருந்து டைவ் செய்து பறந்து இறங்குவது, பனிச்சறுக்கு, ஸ்கூபா டைவிங், வெப்பக் காற்று பலூனில் பறப்பது, வாட்டர் தீம் பார்க்குகள், ஆழ்கடலில் மீன் பிடித்தல் என பல்வேறு சாகச விளையாட்டுக்களை செய்து வந்திருக்கிறார்.

இதில் ஸ்கை டைவிங் என்பது பார்க்கும்போதே அட்ரீனலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது. மனோஜ் விஜயகுமார் துபாயில் ஏப்ரல் 3, 2012 செவ்வாய்க்கிழமை அன்று விமானத்தில் சென்று கிட்டத்தட்ட 15,000 அடியில் இருந்து விமானத்தில் ஸ்கை டைவிங் செய்து மேகங்களுக்குள் 200 கிமீ/ ஹவர் 75-90 விநாடிகள் வரை சில ஸ்டண்டுகள் செய்து அதன் பின் பாராசூட்டை பயன்படுத்திப் பறந்து கிட்டத்தட்ட 6 நிமிடங்களில் துபாய் பாம் வடிவ கட்டிடங்களைப் ( அட்லாண்டிஸ்-- பாம் ஜுமைரா ) பார்த்தபடி பறந்து தரை இறங்கி இருக்கிறார். இந்த நிகழ்வைப் வீடியோவாக இன்னும் இருவர் பறந்தபடி படம் பிடித்திருக்கிறார்கள். இந்த நிகழ்வின்போது ஃப்ரெட்டி என்பவரும் இவருடன் இணைந்து பறந்து இறங்கி இருக்கிறார்கள்.

இந்த சாகச நிகழ்வை தன் மகளுக்கு அர்ப்பணித்திருக்கிறார். பின்னாளில் தன்னைப் போல தன் மகளும் சாதனை அரசியாக வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்திருக்கிறார். இந்த சாகசப் பயணத்தை ஏன் செய்தீர்கள் என்று கேட்டால் ” பிறந்த அனைவரும் இறக்கிறார்கள், சிலர் மட்டுமே தங்கள் வாழ்வை பூரணமாக வாழ்ந்து சாதித்தபின் இறக்கிறார்கள். ” என்கிறார். தொடரட்டும் இவரின் சாகசங்களும் சாதனைகளும். !

 டிஸ்கி :- இந்த அறிமுகம் ஏப்ரல் 15 - 30 , 2012 இன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானது.

திங்கள், 16 ஜூலை, 2012

TEACHERS OR CENTUM MAKING MACHINES..?

மாதா, பிதா, குரு , தெய்வம்னு சொல்றோம். இதுல குரு தெய்வத்துக்கு சமம். அந்த தெய்வங்கள்தான் நம்ம கல்விக் கண்ணைத் திறக்கிறாங்க. ஆனா அவங்களுக்கு இருக்க சிரமங்கள் எக்கச்சக்கம். இதுல நான் வகுப்புல சரியா சொல்லித்தராம தனியா ப்ரைவேட் ட்யூஷன் எடுக்கிற டீச்சர்களையோ, ஏதோ காழ்ப்புணர்வோடயோ, காம உணர்வோடயோ குழந்தைகள் கிட்ட நடந்துக்கிற ஆசிரியர்களைப் பற்றி சொல்லலை. அவங்க எல்லாம் விலக்கப்படவேண்டியவர்கள்.

அரசுப் பள்ளியாயினும் சரி, தனியார் பள்ளியாயினும் சரி ஆசிரியர்களுக்கு கடமை அழுத்தம் அதிகம். தினம் நடத்த வேண்டிய பாடங்களை குறிப்புகளாக எடுத்து வந்தால் மிகச் சிறப்பாக செய்யலாம். இதுக்கு நடுவில் பேப்பர் கரெக்‌ஷன்ஸ் மற்றும் குடும்பக் கடமைகள். ஆசிரியப்பணி என்பது மாணவர்களை ஆற்றொழுக்கப்படுத்துவது. ஆனால் ஆசிரியர்கள் சிலபசை சீக்கிரம் முடிச்சு கோச்சிங் ஆரம்பிக்கணும் என்ற எண்ணத்தைத்தான் நிறைய பள்ளி நிர்வாகங்கள் கையில் எடுக்கின்றன. இதனால் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் மிஷின்களாகிடறாங்க.

ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு விதமான புரிந்து கொள்ளும் தன்மை இருக்கும். எல்லா மாணவர்களின் ஐக்யூவும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஐந்து விரல்களும் வித்யாசப்படுவது போல ஒவ்வொரு குழந்தையின் கற்கும் திறனும், மனனத் திறனும் வேறுபடும். ஒரு குழந்தைக்கு கணிதம் பிடிக்கும். சிலசமயம் ஆசிரியகளைப் பிடிப்பதாலும், அவர்கள் கற்பிக்கும் திறனைப் பிடிப்பதாலும் கூட பிடிக்காத சப்ஜெக்ட் கூட பிள்ளைகள் இலகுவாக கற்றுக் கொள்வார்கள். இதற்கு போதிய அவகாசம் அளிக்கப்படணும்.

இப்போதெல்லாம் அரசுப் பள்ளிகளில் செயல்முறைக் கற்றல் என்ற முறையில் கற்பிக்கப்படுகிறது. எங்கள் குழந்தைகள் டெல்லியில் இருந்த போது பள்ளிகளில் வாரம் ஒரு முறை போஸ்ட் ஆஃபீஸ், போலீஸ் ஸ்டேஷன், ஃபையர் சர்வீஸ், வங்கிகள் என அழைத்துச் செல்வார்கள். அங்கே நடைமுறையில் இருப்பதை குழந்தைகள் பார்த்து கேள்விகள் கேட்டு அறிந்து கொள்வார்கள். மனனம் மட்டுமே முக்கியத்திறன் என்று செயல்படும் மெட்ரிக்குலேஷன் கல்வி முறைகளில் மனனத் திறமை மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. அதனால் ஆசிரியைகளும் சுமாராகப் படிக்கும் குழந்தைகளுக்கும் சரியான கவனிப்பு செலுத்த முடியாமல் எல்லாரையும் ஒரே தராசில் போட்டு அளக்க வேண்டிய அவதிக்கு ஆளாகிறார்கள்.

தங்களுடைய மாணவர்கள் சரியான பாதையில் போறாங்களான்னு கண்காணிக்க முடிவதில்லை. எங்கள் பள்ளி செண்டம் பாஸ் என சொல்ல விரும்பும் பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ போதுமான கவனிப்பை வழங்குவதில்லை. முன்பெல்லாம் மாரல் சயின்ஸ் வகுப்புகள் இருக்கும். பின்னால் கூட அது வால்யூ எஜுகேஷன் என்று இருந்தது. இப்போதெல்லாம் இந்த வகுப்புகள் இல்லை.

ஆசிரியர்கள் பிள்ளைகளைக் கண்டிக்க கூட பயப்படுறாங்க. வீடு, பயணம், ஆசிரியப்பணி மூன்றையும் திறம்பட சமாளிக்கிறாங்க. என் நண்பர் ஒருத்தர் பல கல்லூரிகளின் தாளாளர் . அவர் சொன்னார். இன்னும் கூட டீச்சர்களுக்கு நேரம் கிடைத்து பாடங்களை சரியாக பிள்ளைகளுக்கு போதிக்கணும்னு. இன்னும் நிறைய இன்ஃபர்மேஷன்களை கலெக்ட் செய்யணும். பையன்கள் சந்தேகம் கேட்டா நல்ல விரிவா விளக்கம் கொடுக்கும் அளவு அவங்க தங்களைத் தயாரித்துக் கொள்ளணும்னு. சொல்லப்போனா பள்ளி நிர்வாகம் நெருக்கடி கொடுக்காட்டா எல்லா ஆசிரியர்களும் சிறப்பாதான் செயல்படுவாங்க.

அப்பா அம்மா என்ன நினைக்கிறாங்கன்னா தங்களோட பையன் நல்ல ஒழுக்கங்களோடு வளர்றானோ இல்லையோ நிறைய மதிப்பெண் எடுத்து வெளிநாட்டுல உத்யோகத்துக்கு போகணும்னு. மாணவர்கள் ஆசிரியர்கள் நம்மை கரையேத்திடுவாங்கன்னு நினைக்கிறாங்க. பள்ளி நிர்வாகம் என்ன நினைக்குதுன்னா ஆசிரியர்கள் அனைத்துப்பிள்ளைகளையும் பள்ளியிலிருந்து மார்க் வாங்கும் ப்ராடக்டுகளாக மாத்தணும்னு. இதுல பாவம் அந்த ஆசிரியை எப்படி தன் ஆசிரியத் தொழிலை சிறப்பா செய்ய இயலும்.

ஆசிரியப்பணி என்பது ஒரு வாழ்வியல் மாதிரி.குருகுலம்னு அந்தக் காலங்கள்ல ஆசிரியருக்கு பணிசெய்து படிச்சிருக்காங்க மாணவர்கள். . ஆனால் ஆசிரியர்களை ஒரு மார்க் வாங்கும் கருவியாக பயன்படுத்தும் பள்ளிகளின் செயல்களில் மாறுதல் வந்தால்தான் அவங்க நல்லாசிரியரா பணிசெய்ய முடியும். நல்ல மாணவர்களை உருவாக்க முடியும்.

டிஸ்கி - இந்தக் கட்டுரை ஏப்ரல் 15 - 30 இன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானது. 


சனி, 14 ஜூலை, 2012

இளங்கோ பத்மாவின் “ங்கா” விமர்சனம்.

நேற்று தான் உங்கள் “ ங்கா”  புத்தகத்தை வாங்கினேன். உடன் வந்த பத்மா வாங்கியது ஆன்மீகம், வீட்டுக் குறிப்புகள் தொடர்பான 3 புத்தகங்கள்.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக படிக்கத் தொடங்கினோம். என் கையில் ”ங்கா”.பத்மா கையில் ஆன்மீகம் தொடர்பான ஒன்று. நான் முதலில் முடித்தேன்.

முடித்தவுடன் எழுதி வைத்த குறிப்புகளை வைத்து விமர்சனம் எழுதலாம் என்று நினைத்த போது,பத்மாவின் குரல்...'ங்கா'வைத் தாங்க இங்க.’.எனக்கு ஒரே ஆச்சரியம்...எனக்குத் தெரிந்து பத்மா கையில் முதன்முதலாய் ஒரு கவிதைப் புத்தகம்.

ஆர்வத்துடன் புத்தகத்தை வாங்கிப் படிக்க ஆரம்பித்த முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்...

1) நம்ம பய இப்பிடித் தாங்க...

2) அடடா...நம்ம பொண்ணு பண்ண சேட்டய பாத்த மாதிரியே எழுதியிருக்காங்களே...அவ டீச்சர் வெளயாட்டுல எத்தன ஸ்கேல ஒடச்சிருப்பா...

 3) நம்ம புள்ளைக பேசுறது எனக்கு மட்டும் தானே புரியும்...அதக் கூட எழுதியிருக்காங்க...

4) கேள்வியின் நாயகனென்னு புள்ளயப் பாத்து பாடுவீங்களே...அது கூட இருக்கு...

இப்படி ஒவ்வொன்றாய் ரசித்து ரசித்து விமர்சனம் வந்து கொண்டே இருந்தது....

என் குறிப்புகளை ஓரம் வைத்து விட்டு, பத்மாவின் வார்த்தைகளை மட்டும் பதிய முடிவு செய்தேன்... ஒரு அம்மாவின் இதயத்தை, இன்னொரு அம்மாவால் மட்டும் தான் முழுமையாக உணர முடியும் என்பதை உணர்ந்து..

 டிஸ்கி:- இன்று என் பிறந்த நாள். முகநூல் நண்பர்களான இளங்கோவும் பத்மாவும் என்னுடைய நூலுக்களித்த விமர்சனத்தையே விலைமதிப்பற்ற பிறந்தநாள் பரிசாகக் கருதுகிறேன். நன்றி இளங்கோ மற்றும் பத்மா.. நன்றியினால் நெகிழ்ந்திருக்கிறேன். வாழ்க வளமுடன்.

வெள்ளி, 13 ஜூலை, 2012

கார்ட்டூன் கதைகள்..

கார்ட்டூன் கதைகள்..
*********************

சில பல கோடுகளால்
கரடு முரடு வார்த்தைகளால்
குழந்தைகள் மனதில்
உருவாகி விடுகிறது
பொம்மைச் சித்திரக் கதைகள்..

அவ்வப்போது அவை
பொம்மைகள் போல
கதைப்பதும் குதிப்பதும்
களியாட்டம் தருகிறது.

பிரம்மனைப் போல
உணர்கிறேன்
ஒவ்வொரு சித்திரக்
கதாபாத்திரத்தையும் படைத்து
உலவ விட்டிருப்பவனை..

உருவாக்கத்தில்
உலவுவதை விட அவை
குழந்தைகளின்
இரவுக் கதைகளாக
உருப்பெறும் போது
முழுமையுற்றதாகின்றன..

கதை சொல்லியாக
இருந்த நான்
கதை கேட்பவளாக மாறி
குழந்தையின் கைபிடித்து
உலவுகிறேன் உறக்கத்தில்...

டிஸ்கி:- இந்தக் கவிதை ஜூலை 1- 15 ,2012 அதீதத்தில் வெளியானது. 


வியாழன், 12 ஜூலை, 2012

இரட்டைக் குடிசைகள்

பக்கத்துப் பக்கத்தில்
இழைநெய்து கொண்டிருந்தன
இரட்டைச் சிலந்திகள்.
ஒன்றின் வீட்டை
ஒன்று ரசித்தபடி.

பூச்சிகள் தின்று
சலிக்கும் வேளை
இரண்டும் கால் பாவி
ஒன்றின் மையத்தில்
இன்னொன்றும் கூடி.

தூசிப்பூச்சி படிந்து
கிழியத்துவங்கும் நேரம்
ஒட்டடைக் கம்புகள்
சுருட்டிச் செல்லும் வீட்டோடு
தரையில் குதித்து

இரட்டைக் கோணங்களோ
மூன்று கோணங்களோ தேடி ஓடும்
இரட்டைக் கோபுரமாய்
இடிந்து வீழ்ந்தாலும்
இன்னொரு இழைக் குடிசை போட..

 டிஸ்கி:- இந்தக்கவிதை ஜூன் 1, 2012, அதீதத்தில் வெளியானது.

புதன், 11 ஜூலை, 2012

காரணங்கள்..

காரணங்கள்:-
***************

செய்யும் அனைத்திற்கும்
செய்யாத எல்லாவற்றுக்கும்
செய்ய விரும்பும் இன்னவற்றிற்கும்
காரணம் சொல்ல
வேண்டியதிருக்கிறது..

ஏன் செய்தோம்.
ஏன் செய்யவில்லை..
ஏன் செய்ய முடியாமல் போனது
ஏன் செய்திருக்கக் கூடாது..
எது தடுத்தது.
ஏன் செய்ய வேண்டும்
எதற்காக செய்ய வேண்டும்
யாருக்காக செய்ய வேண்டும்.

அல்லது ஏன் செய்து
கொண்டிருக்கிறொம்.
என்ன விழைகிறோம்
என்னவாக ஆகிறோம்
என்ன நடக்கிறது.
எதற்காக செய்து
கொண்டிருக்கிறோம்
யாருக்காக செய்து
கொண்டிருக்கிறோம்.

விளம்பிக்கொண்டே
இருக்கிறோம்.
விளக்கம் கேட்கப்படாமல்
போகும் இடங்களிலும்.

காரணம் கேட்டு
தண்டிக்கப்படும் தருணங்கள்
அற்புதமானவை.
நம்மின் இருப்பை
அங்கீகரிப்பவை..
காரணமே கேட்காமல்
ஏன் தண்டிக்கப்படுகிறோமென
காரணம் தெரியாமல்
உயிர்ப்பற்று இருப்பதை விட.

டிஸ்கி:- இந்தக்கவிதை ஜூன் 15, 2012, அதீதத்தில் வெளியானது. 


செவ்வாய், 10 ஜூலை, 2012

காஸ்மெடிக் சர்ஜரி .. டாக்டர் கண்பத் விஸ்வநாதன்.


டாக்டர் கண்பத் விஸ்வநாதன் சென்னையைச் சேர்ந்த பிரபல ப்ளாஸ்டிக் சர்ஜரி நிபுணர். இவர் சேத்பட்டில் விஷி காஸ்மெடிக் சர்ஜரி க்ளினிக் நடத்தி வருகிறார். அவரிடம் ப்ளாஸ்டிக் சர்ஜரி என்றால் என்ன ? அதனுடைய பயன்கள் என்ன ? எப்போது தேவைப்படுகிறது என்ற கேள்விகளை முகநூல் உள்டப்பியில்  கேட்டிருந்தேன். அதற்கு அவர் கூறிய பதில்கள் இங்கே.

டாக்டர் , "ப்ளாஸ்டிக் சர்ஜரியில் என்னென்ன வகைகள் இருக்கின்றன?. அதன் சிகிச்சை விபரம், அதற்கு ஆகும் செலவுகள் மற்றும் எங்கு ஒரு சாதாரண மனிதன் ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சையை தன்னுடைய பட்ஜெட்டுக்கு ஏத்தது போல செய்து கொள்ள முடியும்.? "

டாக்டர் கண்பத் விஸ்வநாத்தின் பதில்:-

"ப்ளாஸ்டிக் சர்ஜரி என்பது  அறுவைச் சிகிச்சைகளில் ஒரு சிறப்புப் பிரிவு. அது “ப்ளாஸ்டிக்கோஸ்” (PLASTIKOS) என்னும் க்ரேக்க வார்த்தையில் இருந்து உருவானது . அதன் அர்த்தம். மோல்ட் ( MOULD) செய்வது. பலரும் நினைப்பது போல் இது ப்ளாஸ்டிக் வைத்து செய்யப்படும் சிகிச்சை இல்லை. ஒரு நோயாளியின் பாதிக்கப்பட்ட திசுக்களை பக்கத்தில் இருக்கும் திசுக்களைக் கொண்டு செப்பனிடுவது. அவரது உடம்பிலிருந்தே தோல் , கொழுப்பு, தசை, கார்டிலேஜ், எலும்பு போன்ற பாகங்கள் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட திசுக்கள் உள்ள பகுதிகளை மூடி திரும்ப அந்தப் பகுதி பாதிப்பு மறைந்து தானாகவே உருவாகும்படி செய்வது. தற்காலத்தில் சிலிக்கான் போன்ற செயற்கை பொருட்களும் ( எந்த பாதிப்பும் ஏற்படுத்தாதவை மட்டுமே) இழந்த பாகங்களை ஈடுகட்டி உருவாக்கப் பயன்படுகின்றன.

ப்ளாஸ்டிக் சர்ஜரி முக்கியமான எதற்குத் தேவை என்றால் விபத்து அல்லது பிறப்பில் ஏற்பட்ட ஊனம் அல்லது காயத்தை , ஆபரேஷனுக்குப் பின்னான தழும்புகளை சரிசெய்யவே பயன்படுகின்றது. (BOTH CONGENITAL (AT BIRTH) & ACQUIRED ( LATER ON IN LIFE DUE TO INJURY OR AFTER SURGERY FOR REMOVING CANCER). எனவே ப்ளாஸ்டிக் சர்ஜரி பழைய நிலையை( RESTORES TO NORMAL) மீட்டுத்தரவே உதவுகிறது.

ப்ளாஸ்டிக் சர்ஜரியின் இன்னொரு பகுதி ஏஸ்தடிக் அல்லது காஸ்மெட்டிக் சர்ஜரி ( AESTHETIC OR COSMETIC) எனப்படுகிறது. இது உடம்பின் குறைபாடு உள்ள பகுதியை அதிகமாக்கியோ அல்லது குறைத்தோ மறுபதிப்பு அல்லது திருத்த உதவுகிறது. உடம்பை இன்னும் அழகிய வளைவுகளோடும், தன்மையானதாகவும் மாற்றுகிறது. எனவே காஸ்மெட்டிக் சர்ஜரி ( SURPASS THE NORMAL). யதார்த்தத்தை மிகைப்படுத்த/ஒழுங்குபடுத்த உதவுகிறது.

ப்ளாஸ்டிக் சர்ஜரி முதல் உலகப்போரின்போது அதிக அளவில் செயல்பாட்டுக்கு வந்தது. ஏனெனில் யுத்தத்தின் காயங்களினால் பாதிக்கப்பட்ட நிறையப் போர் வீரர்களுக்கு இந்த மருத்துவம் மிகுந்த அளவில் பயன்பட்டு வந்தது. இதன் பொற்காலம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னானது. இதில் புதுமைகள் நிறைய கண்டுபிடிக்கப்பட்ட காலம் அதுதான்.

இந்தியாவில் ப்ளாஸ்டிக் சர்ஜரி கி.மு, ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பே ( 600 B.C. )"சுஸ்ருதர்" என்பவரால் செய்யப்பட்டு வந்தது. எனவே" சுஸ்ருதர்"தான் "இந்தியாவின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் தந்தை" எனலாம். இவருடைய மருத்துவ முறை “சுஸ்ருதர் சம்ஹிதை” என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. முன்நெற்றியில் உள்ள தோலை எடுத்து மூக்கை சீரமைக்க அவர் பயன்படுத்திய முறை சிறப்பானது. அது இன்றும் “INDIAN FOREHEAD FLAP RECONSTRUCTION OF THE NOSE." என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் யுத்தத்தின்போது நிறைய வீரர்கள் மூக்கு அறுக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு சுஸ்ருதரின் இந்த முறை வைத்தியம் மிக வரப்ரசாதமாக அமைந்தது.

தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளைக் குணப்படுத்துவதுதான் ப்ளாஸ்டிக் சர்ஜரியின் சவாலான பணி. முதற்கட்ட சிகிச்சையில் புண்ணாகி இருக்கும் சதைகளை குணமாக்குவது, அதன் பின் புது தசைகளையும் செல்களையும் உருவாக்குவது. தோலை வளரச் செய்து தழும்புகளை குணப்படுத்துவது என பல கட்ட சிகிச்சைகளைக் கொண்டது. குழந்தைகளுக்கு வாயின் மேலண்ணம் பிளந்து இருக்கும். (CLEFT LIP & PALATE). அவற்றை ப்ளாஸ்டிக் சர்ஜரியின் மூலம் குணப்படுத்த முடியும்.

காஸ்மெட்டிக் சர்ஜரியைப் பொறுத்த வரை பல வகைகள் உண்டு. முகச்சீரமைப்பு, ( தொங்கும் தசைகளை சரி செய்யும் சிகிச்சை) , மூக்கின் குறைபாடுகளைப் போக்கி நேராக்க ரைனோப்ளாஸ்டி அறுவை சிகிச்சை, குண்டாக இருப்பவர்களுக்கு நார்மலாக வர லிப்போ சக்‌ஷன் ( கொழுப்பைக் குறைக்கும் ) சிகிச்சை, மார்பக அறுவை சிகிச்சை ( EITHER BY IMPLANTS OR FAT), சிறிதான மார்பகங்களைப் பெரிதாக்கும் சிகிச்சை, அல்லது பெரிதான மார்பகங்களை சிறிதாக்கும் சிகிச்சை, தழும்புகளை குறைத்தல் மற்றும் குணமாக்குதல். போன்றவை.

ப்ளாஸ்டிக் சர்ஜரி என்றால் மிக அதிக செலவு பிடிக்கும் சிகிச்சை என்று இன்னும் மக்களிடையே எண்ணம் இருக்கிறது. மேலும் அது பணக்காரர்களுக்கு மட்டும்தான் என்ற தவறான கண்ணோட்டமும் இருக்கிறது. அது உண்மையல்ல. ஏனெனில் சமீபகாலங்களில் இது எல்லாருக்கும் பயன்படும் விதத்தில் எளிமையாய்க் கிடைக்கிறது. மத்தியதர வகுப்பு மக்களும் அதிக அளவில் இப்போதெல்லாம் காஸ்மெடிக் சர்ஜரி செய்து கொள்கிறார்கள். ஆகும் செலவு என்று கணக்கிட்டால் நீங்கள் எங்கு செய்து கொள்கின்றீர்கள் என்பதைப் பொறுத்தது அது.

மிகப் பெரும் பேர் பெற்ற ஆஸ்பத்ரிக்களில் செய்து கொண்டால் அதன் செலவு அதிகம்தான். செயற்கைப் பொருள் அல்லது உறுப்பு பயன்படுத்தாமல் சிகிச்சை செய்யப்பட்டால் அதன் சிகிச்சைக்கான செலவு குறைவு. ஆஸ்பத்ரியில் தங்கும் செலவைத் தவிர்த்தால் அதுவும் மொத்த சிகிச்சைக்கான செலவிலிருந்து குறைவாக ஆகும்.

ப்ளாஸ்டிக் சர்ஜரி என்பது ஒரு கலை. நோயாளிகள் தம்மைத் திரும்ப உருவாக்கும் டாக்டரின் திறமைக்கு அளிக்கும் ஊதியம்தான் இது. சிகிச்சையின் முடிவில் எந்த செயற்கைப் பொருளும் உபயோகப்படுத்தாவிட்டால் அந்த சிகிச்சைக்கான செலவு சர்ஜனின் தன்முனைப்பான உழைப்புக்கானதாக மட்டுமே இருக்கும்.

செயற்கை உறுப்புக்கள் தேவைப்பட்டால் அவை பொருத்தியே ஆக வேண்டும் என்ற நிலை வரும்போது நோயாளி அதற்கான செலவைச் செய்தே ஆக வேண்டும். உதாரணமாக செயற்கை மார்பக உறுப்புகள் ஒரு ஜோடியின் விலை குறைந்தது ரூபாய் 50,000/- ஆகும். இந்த நிலையில் மருத்துவர் செலவைக் குறைக்க நினைத்தாலும் மார்பக உறுப்புக்கான விலையை நோயாளி செலுத்தியே ஆக வேண்டும். எந்த அறுவை சிகிச்சைக்கும் ஆகும் செலவு நிர்ணயிக்கப்பட்டதல்ல. மருத்துவரின் செயல் திறமை, புரிந்துணர்வு , பரிவு மற்றும் நோயாளியின் நிதி நிலைமை மற்றும் நோயாளியால் தர இயன்றதைப் பொறுத்தது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அரசு ஆஸ்பத்ரிக்களில் நடத்தப்படுகின்றது. அங்கே எளிய ஏழை மக்களுக்கும் அரிய சேவைகளை அவர்கள் செய்து வருகிறார்கள். காஸ்மெட்டிக் சர்ஜரி அரசு ஆஸ்பத்ரிக்களில் செய்யப்படுவதில்லை. அதற்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் வசதியும் கிடையாது. ப்ளாஸ்டிக் சர்ஜரி மிக இன்றியமையாது ஆனால் காஸ்மெட்டிக் சர்ஜரி அப்படியல்ல எனப் பலரும் நினைக்கிறார்கள். இது தனிப்பட்ட ஒவ்வொரு நோயாளியின் மனதையும் பொறுத்தது. ஆனால் காஸ்மெட்டிக் சர்ஜரி வளர்ந்து வரும் உலகில் தன்னைப் பற்றிய தன்னம்பிக்கையைப் பெறவும் சுய மதிப்பீட்டை அதிகரிக்கவும் போட்டிகள் நிறைந்த உலகில் மிக இன்றியமையாதாய் இருக்கிறது என்பது உறுதி.


டிஸ்கி:- மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள் டாக்டர். கண்பத் விஸ்வநாதன். :) ( HAPPY BIRTHDAY ..DR. GANPAT VISWANATHAN.!)

டிஸ்கி 2. :- ப்லாகர் பாலா கேட்டுக் கொண்டதால் டாக்டரிடம் முகநூல் உள்டப்பியில் அவரைப்  பொதுமக்கள் தொடர்பு கொள்ள க்ளினிக்கின் நம்பரைத் தெரிவிக்கும் படிக் கேட்டிருந்தேன். டாக்டர் வெளிநாட்டுப் பயணம் சென்றிருப்பதால் ஆகஸ்டிலிருந்து அவரை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

O44246420654


திங்கள், 9 ஜூலை, 2012

தோழமை

தோழமை:-
***********

அலுவலகத்தில்
இலக்கியத்தில்
வழிப்பயணத்தில்
தோழிகள் உண்டு
அப்பாவுக்கு
அம்மா உட்பட..
அம்மாவுக்குத்தான்
தோழர்கள் இல்லை
எங்குமே
அப்பா உட்பட..

டிஸ்கி:- இந்தக்கவிதை மே 1, 2012, அதீதத்தில் வெளியானது.


வெள்ளி, 6 ஜூலை, 2012

ப்லாகர் ஸ்பெஷல்..

ஸ்ரீவித்யா பாஸ்கர். இவர்தான் லேடீஸ் ஸ்பெஷலில் முதல் அறிமுகமான ப்லாகர். பகோடா பேப்பர்கள் இவர் வலைத்தளம். இவரின் மொழி ஆளுமை, மொழியாக்கத் திறன் அருமை. குழந்தைகள் காப்பகம் மற்றும் பள்ளி நடத்திவரும் இவருக்கு குழந்தைகள் முன்னேற்றம் குறித்த அக்கறை மிக உண்டு. இவரின் வலைத்தளம்.http://vidhoosh.blogspot.com

மேனகா சத்யா. சஷிகா என்பது இவரது வலைத்தளம் .. மிக அருமையான சமையற்குறிப்புகளுக்குச் சொந்தக்காரரான இவர் இரண்டாவதாக அறிமுகமான ப்லாகர். ஓவன் சமையல், விதம் விதமான கேக்குகள் , வித்யாசமான உணவுகள் இவரது ஸ்பெஷாலிட்டி. இவர் மாதம் ஒரு விரதம் என்ற தலைப்பிலும் சில கட்டுரைகள் லேடீஸ் ஸ்பெஷலுக்காக எழுதி இருக்கிறார். இவரின் வலைத்தளம்.http://sashiga.blogspot.com

என் தமிழம்மா திருமதி எம். ஏ சுசீலா அவர்கள் . இவர்கள் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்ற மூன்றாவது ப்லாகர். இவர் டெல்லியில் வசிக்கிறார். 8 நூல்கள் வெளியாகி இருக்கின்றன. இரு நூல்கள் ( அடசன், குற்றமும் தண்டனையும்) மொழியாக்கம் செய்திருக்கிறார். மாபெரும் உழைப்பு இவருடையது. இவரின் வலைத்தளம் http://www.masusila.blogspot.com

ருக்குஅம்மா, பாட்டி சொல்லும் கதைகள் என்ற ப்லாகுக்கு சொந்தக்காரர். இவர் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்ற நான்காவது ப்லாகர். இவர் 30 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். இவரது குழந்தைகளுக்கான கதைகள் மற்றும் திருக்குறள் கதைகள், நீதி நெறிக் கதைகள் ப்ரபலம். இவரின் வலைத்தளம்http://chuttikadhai.blogspot.com

துளசி கோபால். இவர் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்ற ஐந்தாவது ப்லாகர். ஆன்மீகப் பயணக் கட்டுரைகள் எழுதிக் குவித்துக் கொண்டே இருப்பவர். மிகச் சரளமான கிண்டலுடன் கூடிய கட்டுரைகள் இவரின் பாணி. இவள் புதியவளிலும் கட்டுரைகள் பெட் அனிமல்ஸ் பற்றி எழுதி வருகிறார். இவர் இரு புத்தங்கங்கள் வெளியிட்டிருக்கிறார். இவரின் வலைத்தளம். http://thulasidhalam.blogspot.com

ராமலெக்ஷ்மி.. இவர் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்ற ஆறாவது ப்லாகர். படங்கள் பளிச்சென்று இருந்தால் ராமலெக்ஷ்மி ஞாபகம்தான் வரும். கறுப்பு, வெள்ளையிலும் வண்ணத்திலும் ஃப்ளிக்கரிலும் முகநூலிலும் ப்லாகிலும் தனி முத்திரை பதித்தவர் இவர். இவரின் கட்டுக்கோப்பான கதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும் அருமை. இவரின் வலைத்தளம். http://thamilamudam.blogspot.com.

மனோ சுவாமிநாதன் இவர் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்ற ஏழாவது ப்லாகர் . இவரின் பெண்களுக்கான கட்டுரை ஸ்பெஷலான ஒன்று. நிறைய சத்துள்ள சமையல் குறிப்புக்களும் பகிர்ந்திருக்கிறார். இவரின் வலைத்தளம் http://muthusidharal.blogspot.com

புவனேஸ்வரி ராமநாதன். இவர் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்ற எட்டாவது ப்லாகர், இவரின் கோயில் கோபுரங்கள் , பயணங்கள், மற்றும் ஆன்மீக கட்டுரைகளும், சிறுகதைகளும் சிறப்பானவை. இவரின் வலைத்தளம். www.maragadham.blogspot.com.

கோமதி அரசு. இவர் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்ற ஒன்பதாவது ப்லாகர். இவரின் கோலங்கள் பற்றிய கட்டுரையும் கோலங்களும் ஸ்பெஷலானவை. திருமதி பக்கங்கள் என்ற இவரின் வலைத்தள முகவரி http://mathysblog.blogspot.com

ஜலீலா கமல். இவர் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்ற பத்தாவது ப்லாகர். இவரின் சமையல் அட்டகாசங்கள் ரொம்ப அற்புதமாக இருக்கும் . டயட் சமையல் ரொம்ப ஸ்பெஷலான ஒன்று. லேடீஸ் ஸ்பெஷலில் கான்சர் பற்றி எழுதி இருந்தார் இவர். இவரின் வலைத்தள முகவரி http://samayalattakaasam.blogspot.com

ஸாதிகா ஹசனா.. எல்லாப் புகழும் இறைவனுக்கே ஒப்புக் கொடுத்தவர். இவர் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்ற பதினொன்றாவது ப்லாகர். இவர் மிக சிறுவயதிலிருந்தே எழுதி வருகிறார். இவரின் படைப்புகள் மங்கையர் மலர் , மங்கை ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளன. இவரின் வலைத்தளம். http://shadiqah.blogspot.com

விஜி. இவர் விஜிஸ் கிச்சன் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். சமையல் ஸ்பெஷலிஸ்ட்.இவர் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்ற பன்னிரெண்டாவது ப்லாகர். இவர் அமெரிக்க வாழ்க்கை முறை பற்றி பத்ரிக்கைகளில் கட்டுரை எழுதி இருக்கிறார். இவர் கர்நாடக சங்கீதம் மற்றும் நடனத்தில் வல்லவர். வகுப்புகள் எடுக்கிறார். இவரின் வலைத்தளம் http://vijiskitchen.blogspot.com

ஈழவாணி. இவர் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்ற பதிமூன்றாவது ப்லாகர். இவர் பூவரசி என்ற இணையம் வைத்துள்ளார். பூவரசி என்ற காலாண்டிதழும் வெளியிடுகிறார். ஈழமக்களின் வாழ்வை தனது எழுத்துக்களில் கவிதையாகவும், கட்டுரைகளாகவும் பதிவு செய்யும் இவர் 5 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். இவரின் வலைத்தள முகவர். http://eelavanai.blogspot.com

பத்மஜா நாராயணன். இவர் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்ற பதினான்காவது ப்லாகர். இவரின் கவிதைகள் அற்புதமானவை. இவரின் தாய் மகள் உறவு பற்றிய கட்டுரை ஸ்பெஷலான ஒன்று. இவர் கவிதைத் தொகுதி ஒன்று வெளியிட்டுள்ளார். இவரின் வலைத்தள முகவரி http://kakithaoodam.blogspot.com

கீதா இளங்கோவன். இவர் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்ற பதினைந்தாவது ப்லாகர். இவர் பல்வேறு தளங்களில் இருக்கும் பெண்களைப் பற்றிய கட்டுரைகள் எழுதி இருக்கிறார். இரண்டு குறும்படங்கள் எடுத்திருக்கிறார். சிறப்பான பெண்ணியவாதி எனலாம். இவரின் வலைத்தளம் http://thulithuli.blogspot.com

தமிழ்ச் செல்வி இவர் சக்தி என்ற பெயரில் வீட்டுப்புறா என்ற வலைப்பதிவில் எழுதுகிறார். இவர் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்ற பதினாறாவது ப்லாகர். இவரின் கவிதைகள் அருமை. பேச்சும் அருமை. இனக்கவர்ச்சி பற்றிய ஒரு கட்டுரை சிறப்பானது இவரின் வலைத்தளம். http://veetupura.blogspot.com

தமிழரசி. நெல்லூரைச் சேர்ந்தவர். இவர் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்ற பதினேழாவது ப்லாகர். இவரின் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் நச் ரகம். உண்மையைப் பட்டென்று பேசும் இவரின் படைப்புக்கள். எழுத்தோசை என்ற ப்லாகில் எழுதி வருகிறார். இவரின் வலைத்தள முகவரி http://ezhuthoosai.blogspot.com

அமைதிச்சாரல்.. சாந்தி மாரியப்பன். இவர் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்ற பதினெட்டாவது ப்லாகர். இவரின் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் அருமை. இவர் வல்லமை என்னும் இணையத்திலும் படைப்புகள் பகிர்ந்து வருகிறார். சமையல் குறிப்புக்களும் அற்புதமானவை. இவரின் வலைத்தளம் http://amaithiccharal.blogspot.com

ராஜேஸ்வரி . இவர் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்ற பத்தொன்பதாவது ப்லாகர். இவரின் ஆன்மீகக் கட்டுரைகள் பெயர் பெற்றவை. இவர் தினம் ஒன்றுக்குமேற்பட்ட இடுகைகளை தினத்துக்கேற்றவாறு எழுதிப் பகிர்வதில் வல்லவர். இவரின் வலைத்தளம் http://jaghamani.blogspot.com

மலீக்கா ஃபாரூக். இவர் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்ற இருபதாவது ப்லாகர். இவரின் வலைத்தளம் நீரோடை. வாழ்ந்து பாரடி பெண்ணே இவரின் சிறந்த கட்டுரைகளுள் ஒன்று.இவர் பெண்களுக்கான கட்டுரைகள் சிறப்பாகப் படைத்துள்ளார். இவரின் வலைத்தள முகவரி http://niroodai.blogspot.com

21. இது தவிர இன்னும் கலா ஸ்ரீராம் என்ற புதுகைத் தென்றலின் கதை லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் வெளியாகியுள்ளது. பல்லாண்டுகளாக எழுதி வரும் இவரின் பர்சனாலிட்டி டெவலெப்மெண்ட் கட்டுரைகள் சிறப்பு. இவரின் வலைப்பூ http://puthugaithendral.blogspot.com

22. சித்ரா சாலமன். இவரின் தனிமரங்களின் தீபாவளி லேடீஸ் ஸ்பெஷலில் வெளியானது. இவர் மிகக் கிண்டலான கட்டுரைகளுக்குச் சொந்தக்காரர். பொ. ம. ராசமணியின் மகளான இவர்க்கு நகைச்சுவை ரத்தத்திலேயே ஊறியது. தந்தையைப் போல மகளும் ..:) இவரின் வலைத்தளம் http://vettipechu.blogspot.com

23. ஆசியா உமரின் சமையல் குறிப்புக்கள் அற்புதமானவை. அவர் இவள் புதியவளுக்காக விதம் விதமான பிரியாணிக் குறிப்புக்கள் கேட்டிருந்தேன். அதுவும் மற்றும் ஃப்ரைட் ரைஸ் வகைகளும் உணவு ஸ்பெஷல் இதழில்வெளியாகின. இவரின் வலைத்தளம். http://asiaomar.blogspot.com 23. மேனகாவின் பேக்கரி சமையல் வகைகளும் இவள் புதியவள் உணவு ஸ்பெஷலில் வெளியாகி இருந்தன.

24. ரூஃபினா ராஜ்குமார். என் செல்ல நாய்க்குட்டி மனசு ப்லாகில் எழுதுகிறார். இவரின் கதை ஒன்று இவள் புதியவளில் வெளியானது. இவரின் மகளின் திருமணம் சம்பந்தமான எச்சரிக்கைப் பகிர்வு ஒன்றும் என் வேண்டுகோளுக்கிணங்க எழுதி அனுப்பி இருந்தார். தமிழ்க் கவிதைகளை மொழிபெயர்த்து பகிர்ந்து வரும் இவரின் இன்னொரு வலைத்தளம் http://blossoms111111.blogspot.com

 25. ரஞ்சனா இவர் உயிரோசையில் இந்தியாவின் பாரம்பரிய சமையல் பற்றி எழுதி வருகிறார். இவரின் திருமண நிகழ்வும் அந்த கலாட்டாக்களும் இவள் புதியவள் திருமண ஸ்பெஷலில் வெளியானது.

 26. கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மனின் கார்த்திகை கவிதை லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் வெளியானது. கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மனின் திருமண கலாட்டாவும் இவள் புதியவள் திருமண இதழில் வெளியானது.

27. மராவின் கருணையின் வடிவு என்ற கவிதை லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் வெளியானது.

28.தினேஷ்குமார் மோகன் தாஸின் மாதங்களில் காதலி என்ற கவிதை. லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் வெளியானது.

29. யோகியின் ( தமிழுதயம் ரமேஷ்) விட்டு விடுதலையாகி என்ற கதை லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் வெளியானது.

30. ஆர். கோபியின் பிடிவாதம் என்ற கதை லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் வெளியானது

31. ஈரோடு கதிரின் கொங்கு நாட்டுப் பொங்கல் இவள் புதியவள் பொங்கல் ஸ்பெஷலில் வெளியானது

32. கயல்விழி லெட்சுமணனின் கிராமத்துப் பொங்கல் இவள் புதியவள் பொங்கல் ஸ்பெஷலில் வெளியானது

33. மணிமேகலையின் தலைப் பொங்கல் இவள் புதியவள் பொங்கல் ஸ்பெஷலில் வெளியானது

34. தமிழ் செல்வியின் நட்பு+ காதல் = இல்லறம் இவள் புதியவள் காதலர் தின ஸ்பெஷலில் வெளியானது.

35. லலிதா முரளியின் காதலாகிக் கசிந்துருகி இவள் புதியவள் காதலர் தின ஸ்பெஷலில் வெளியானது.


மணவாளன் அவர்களின் “சாதனை அரசிகள்” விமர்சனம்

 இந்நூலை வாசித்ததும் எனக்கு ஓர் ஆச்சர்யம் ஏற்பட்டது. என்னவெனில் பெரும்பாலும் கவிஞர்கள் கற்பனை புனைந்து எழுதித்தான் மற்றவர்களை மகிழ்விப்பார்கள். ஆனால் இந்தக் கவியோ 17 பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய பெண் சாதனையாளர்களின் உண்மைச் சம்பவங்களை முழுமையாகக் கேட்டு ஆராய்ந்து பின்பு அதை மாத்திரை வடிவத்தில் வாசிப்பவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் தொகுத்து அளித்திருப்பதுதான்.

இந்நூலின் மூலம் பெண்கள் தாங்கள் பெண் என்ற எண்ணத்தை மட்டுமே நினைக்காமல் அவர்களின் தேவையை அறிந்து விடாமுயற்சியுடன் நிச்சயம் வெற்றி அடைவோம் என்ற எண்ணத்துடன் கடினமாக உரிய வகையில் உழைத்தால் ஒருநாள் அவர்கள் தேவையை அடைந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியும் என்பதை இவ்வுண்மை சம்பவங்களின் மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வுவை ஊட்டி அவர்களை தூண்டுகிறார். அத்துடன் ஒவ்வொரு சாதனையாளரும் கூறும் ஆலோசனை “டிப்ஸ்” களையும் கொடுத்துள்ளார். எளிய நடையில் தொடர்ந்து வாசிக்கும் விதமாக தொய்வின்றித் தொகுத்து இருப்பது பாராட்டிற்குரியது. முதல் நூலாக இருப்பினும் தன் முத்திரையைப் பதிக்க நூலாசிரியர் முயற்சித்து இருப்பது வாசிக்கும்போது தெரிகிறது. இந்நூல் பெண்களின் மத்தியில் நிச்சயம் பேசப்படும், வெற்றியும் அடையும்.

இந்நூலை நான் பரிந்துரைக்கிறேன், கிராம நூலகங்களில் நிச்சயமாக இடம் பெற வேண்டியநூல். மேலும் பல சிறந்த நூலகளை எதிர்காலத்தில் இந்நூலாசிரியர் உருவாக்குவார் என்பது திண்ணம்.

 --- ஆ. மணவாளன்

டிஸ்கி:- உங்கள் விமர்சனத்துக்கு நன்றி மணவாளன் சார். உங்கள் எண்ணப்படியும் ஆசீர்வாதத்தின் படியும் அடுத்த நூல்களையும் சிறப்பாக செய்ய முயல்கிறேன்.

வியாழன், 5 ஜூலை, 2012

பெருந்தன்மைக்காரியும்., பேரறிவுக்காரியும்



பொழுதைத் தின்பவளும்
பேரறிவுக்காரியும்
சந்தித்தார்கள்.

வர்க்க பேதம் அறியா
வேலைக்காரி
மக்கிப் போன மனையறத்தாள்.

மட்டம்தட்ட
கட்டிப்போட
கொட்டில் அடங்கியது இல்லம்.

வசதிகளுக்கானது வீடு..
உடல்கிடத்த
ஓய்ந்து படுக்க..

அறிவுஜீவித் தோழிகள்
உரையாடினால்
உற்சாகம்., உல்லாசம்.

அதிகப்படி அறிவு கீறும் போது
மக்கானவள்
பெருந்தன்மைக்காரியாவாள்.

உறுத்தும் கீறல்களோடு
இக்கரைக்கு அக்கரை
பச்சை மனிதன் பார்த்து

நாவுக்குள் விழுங்கிய
நகைப்போடு நகர்கிறார்கள்
பெருந்தன்மைக்காரியும் பேரறிவுக்காரியும்.

 டிஸ்கி:- இந்தக்கவிதை ஏப்ரல் 14 2012, தமிழ்ப் புத்தாண்டு அதீதத்தில் வெளியானது.


புதன், 4 ஜூலை, 2012

கொத்தும் மயில்

கொத்தும் மயில்.:-
***************************

நத்தை, மரவட்டை
மண்புழு, செவ்வட்டை,
குத்திப் பார்க்க சுருளும்.

பூரான், பல்லி,
கரப்பு, பாம்பரணை
குச்சிபட தப்பித்தோடும்.

மாடு, குதிரை
மூக்கணாங்கயிறிலும்,
யானை அங்குசத்திலும்.

நரி தந்திரம்,
சிங்கம் சோம்பேறி
புலி பாய்ச்சல் மட்டும்.

இறகை விரித்தாடும்
மயில் கூண்டுக்குள்தான்....
அத்துமீறும் நாகம் கொத்தும்.

 டிஸ்கி:- ஏப்ரல் 1., 2012 அதீதத்தில் வெளியானது.

டிஸ்கி 2.:- நேற்று மக்கள் தொலைக்காட்சியில் சாதனை அரசிகள் பற்றிய விமர்சனம்  காலை  8.30 - 9 மணிக்கு ஒளிபரப்பாகியுள்ளது. நன்றி மக்கள் தொலைகாட்சி மற்றும் பாடலாசிரியர் பத்மாவதி.:)

இன்னும் சிலருக்கு நன்றி கூற விட்டுப் போய் விட்டது. எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், ஆர் ஆர் ஆர், டி வி ஆர், இராகவன் நைஜீரியா, டாக்டர் முனியப்பன், சுந்தர் மதுரைதுரை. நன்றி மக்காஸ்..:)

செவ்வாய், 3 ஜூலை, 2012

எல்லாம் வெற்றியே..

ஒரு வல்லரசுக்கான எல்லா சக்திகளும் இந்தியாவிடம் பெருகி வருகிறது. இந்த சூழலில் எல்லா திசைகளிலிருந்தும் வரும் நெருக்கடிகளில் இருந்து அது தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. இறையாண்மையோடு கூடிய அரசியலைத் தக்க வைக்க அது பெரும் ப்ரயத்தனம்தான் செய்கிறது. அரசியல் தலைவர்களே தீர்வுகள் எடுக்கமுடியாமல் திணறும் போது தன் அன்றாட வாழ்க்கைக்கே போராடும் பொது ஜனம் என்ன மாறுதல்களை நிகழ்த்தி விட முடியும்..

நாம் மார்க் எடுக்கும் ப்ராடக்டுகளை உருவாக்குகிறோமே தவிர மாரல் நாலெட்ஜ் உள்ள குழந்தைகளை அல்ல. மனிதாபிமானம் மரித்து சுயநலம் ஓங்கி வருகிறது. எதிலும் நான்.. நான் .. நான் மட்டுமே. பொது நலம் என்பது பிள்ளைகளுக்கும் புகட்டப்பட வேண்டும். பள்ளிகளில் எல்லாவற்றுக்கும் பயிற்சிகள் இருப்பது போல மனவளக்கலையும் ஒரு வகுப்பாக நடத்தப்பட வேண்டும்.

ஆன்லைன் என்றொரு ராட்சசக் கரம் நம் அனைவரையும் இணைக்கிறது. தேவையற்றவற்றிலும் பிணைக்கிறது. செல்ஃபோன், ஐ பேட், லாப்டாப் என நாமும் பிள்ளைகளும் உலகம் முழுமைக்கும் ஊருடுவுகிறோம். நம் வீட்டுக்குள்ளும் அனைத்து நல்லது கெட்டதும் ஊருடுவுகிறது. சூப்பர் ஹூயூமன் சாமுராய் போல எல்லா கெடுதல் வைரஸ்களிடம் இருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்ளப் பிள்ளைகளையும் பயிற்றுவித்து நாமும் நம் நிலை உணர்ந்து நடக்க வேண்டும்.

மேக்கப்புக்கு மிகுந்த அக்கறை செலுத்தும் பெண்கள் உடல்நலத்துக்குக் கொடுப்பதில்லை. சுமார் 10 லிருந்து 45 வயது வரையான பெண்களுக்கு கர்ப்பப்பை புற்று பாதிக்காமலிருக்க தடுப்பு ஊசி போடப்படுகிறது. அதை அவரவர்களின் டாக்டர்களின் ஆலோசனைகளுடன் போட்டுக் கொள்ளவும். ஆண்களுக்கும் மார்பகப் புற்று, காரணமில்லாமல் வரும் புற்று எல்லாம் அச்சுறுத்துகிறது அணு ஆயுத சேமிப்பு போல்.எல்லா நாடுகளும் வகை தொகையற்று இந்தப் புற்றைச் சேமித்துள்ளன.

பெண்கள் தினம் ஒரு நூற்றாண்டாய் கொண்டாடி விட்டோம். நினைத்ததை எல்லாம் அடைந்து விட்டோம். இன்னும் பாரபட்சமான பெண் நீதிதான் கிராமப்புறங்களில் நிலவுகிறது. பெண் சிசுக் கொலை, பெண் கருக்கொலை, பெண் குழந்தைத் தொழிலாளி, பெண் பாலியல் தொழிலாளி, பெண் கொத்தடிமைகள் என்ற கொடுமை எல்லாம் போல ஒரு பெண்ணுக்கு தனக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றன எனத் தெரிந்து கொள்ள வேண்டும். அதுவே தெரியாமல் குடும்பத்தில் தங்களைத் தாங்களே சங்கிலிகளால் பிணைத்துக் கொண்டவர்கள் உலகத்தைக் கற்க வேண்டும்.

மணமான தம்பதியினருக்கு தங்கள் வரவு செலவு, இருப்பு நடவடிக்கை இவற்றில் எல்லாம் புரிதல், தெளிவு படுத்துதல் இருக்க வேண்டும். இருவருக்கும் பொதுப்படையான வங்கி அக்கவுண்ட் இருக்க வேண்டும். மாற்றங்களை நம் குடும்பங்களில் இருந்து ஆரம்பிப்போம். கணவன், மனைவி , குழந்தைகள் அனைவரும் தங்களை, தங்கள் எண்ணங்களை குடும்பத்தில் சுதந்திரமாகத் தெரிவித்து கலந்துரையாடி முடிவுகள் எடுத்தால் எல்லாம் வெற்றியே..

டிஸ்கி:- அதீதம் மார்ச் 1, 2012 இணைய இதழுக்கான சிறப்பாசிரியராகப் பங்களிப்பு செய்த போது எழுதிய தலையங்கம்.

திங்கள், 2 ஜூலை, 2012

தன்னை எண்ணுதல்..

ஒரு வாரம் நட்சத்திரப் பதிவராக அறிமுகப்படுத்தி முன்னிலையில் என்னை வைத்த தமிழ்மணத்துக்கு மனமார்ந்த நன்றிகள். (கிட்டத்தட்ட  1000  விசிட்டர்கள், 3 பின்பற்றுபவர்கள், 106 ஆவதாக ஒரு நாட்டில் இருந்து ஒரு பார்வையாளர் என இந்த  ஒரு வாரம் மகிழ்வாகச் சென்றது. நேரப்பற்றாக்குறையினால் நான் பலரின் ப்லாகுக்கு விசிட் செய்யாவிட்டாலும் வழக்கம்போல என்னைப்படித்து ஊக்கமூட்டிய சக வலைப்பதிவத் தோழமைகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் . வாழ்க வளமுடன். வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !! )

தன்னை எண்ணுதல்.
******************************

தரையில் இருக்கும்
கட்டங்களை, வட்டங்களை,
கோடுகளை எண்ணத்
துவங்குகிறாள் ஒருத்தி.

சுவற்றில் பதிந்து இருக்கும்
சுவிச்சுகளையும்
ஜன்னல் கம்பிகளையும் கூட

மொட்டை மாடிக்குச் சென்றால்
பறவைகளையும்
படுத்தி்ருக்கும்போது
மின்விசிறி ப்ளேடுகளையும்.

சிறைக்குள் சிக்கியவள் போல
திரும்பத் திரும்ப
ஒன்று, இரண்டு., மூன்று என.

குழந்தமை., கன்னிமை.,
இளம்மனைவி., இளம்தாய்.,
பேரிளம்பெண் என
கட்டங்கள் வட்டங்கள் இடுகின்றன.

காசியின் அறுபத்துநான்கு கட்டங்களில்
தசாசுவமேத யாகக் கட்டம்
ஒன்றே கண்டிருந்தாள்.
கடந்திருந்தாள்.

பரமபதக்கட்டங்களில்
நீளும் பாம்புக் கட்டங்களைத்
தாண்டிக் கடக்க யத்தனிக்கிறாள்.

மாமியாராவதும், பாட்டியாவதும்
குறிக்கப்பட்டிருந்த கட்டங்கள் குறித்த
பயம் இருந்தது அவளுக்கு,

எல்லாக் கட்டங்களையும்
எளிமையாய் எளிதாய்க்கடக்க
ஆசைப்பட்டாள்.

தினமும் நட்சத்திரங்களை
எண்ணியவள் அன்று மட்டும்
புதிதாய் நிலவை எண்ணத்
துவங்கி இருந்தாள்..
ஒன்று..ஒன்று..ஒன்று என.


டிஸ்கி 2 :-  பெண் வலைப்பதிவர்கள் சந்திப்பு

1. இவள் புதியவள் சார்பாக - வலைப்பூக்களில் கலக்கி வரும் புயல் பூக்கள்

2. லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக - மெரீனாவில் ஒரு மாலை

3. எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் சமுதாய வானொலிக்காக மகளிர் தினக் கலந்துரையாடல். தொகுத்து வழங்கியது.


25 பெண் பதிவர்கள்.  5 ஆண் பதிவர்களை பத்ரிக்கைகளில் அறிமுகப்படுத்தியது.

பத்ரிக்கைகளில் 20 போராடி ஜெயித்த பெண்களின் கதைகள், 7 மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள், 15 சிறுகதைகள், பல கவிதைகள், பல கட்டுரைகள், பிரபலங்களின் பேட்டிகள், நேர்காணல்கள், பெண் மொழிக் கட்டுரைகள் மற்றும் பல விழிப்புணர்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

டிஸ்கி 3.:- நேற்று என் அம்மாவிடம் இருந்து ஃபோன்.. என்னடி தினம் தினம் நன்றி அறிவுப்பு போடுறே.. எழுதுறத நிறுத்தப் போறியா என்ன.. என்று.. ஹாஹாஹா எனக்கு சிரிப்புத் தாங்கவில்லை. இல்லம்மா.. என்னை தமிழ் மணத்தில் இந்த வாரம் நட்சத்திரப் பதிவரா தேர்ந்தெடுத்தமைக்காக, ஒரு வலைப்பதிவரா இருந்து பத்ரிக்கை எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், சிறப்பு விருந்தினராகவும், இரண்டு புத்தகங்களின் ஆசிரியராகவும் என்னால் மேலெழுந்து வர இயன்றதைப் பகிரவே இதை எல்லாம் போடுறேன்மா. என்றேன். எப்போதும் எனக்கு நானே தன்னம்பிக்கை ஊட்டிக் கொள்ளவும் உங்களாலும் முடியும் என என் வலைப்பதிவ சகோதரிகளை ஊக்கமூட்டவுமே இதை எல்லாம் அனைவரோடும் பகிர்ந்து கொள்கின்றேன் என்றேன்.. என்ன செய்திருக்கிறோம் என்ற திரும்பிப் பார்த்தல் எல்லாருக்கும் தேவை என நினைக்கிறேன். உண்மைதானே..

எனது புத்தகங்கள் "சாதனை அரசிகள்" மற்றும் "ங்கா" கிடைக்குமிடங்கள்.

டிஸ்கவரி புக் பேலஸ். சென்னை

விஜயா பதிப்பகம் , கோவை.

ஸ்ரீ மீனாக்ஷி புக் ஸ்டால் மதுரை.


ஞாயிறு, 1 ஜூலை, 2012

பெண் சிசுக்களை நேசிப்போம்..

பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு.. இது இருக்கிறதா இல்லையா என்பது பற்றி பொதிகை தொலைக்காட்சியில் காரசாரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது . நல்ல கருத்துக்களைக் கூற ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இன்னும் விழிப்புணர்வு தேவை என்பது என் கருத்தாக இருந்தது.. அங்கு பேசப்பட்ட  பல சுவையான கருத்துக்களை இங்கே நான் என்னுடைய கருத்துக்களோடும் தர விழைகிறேன்.ஆயிரம் ஆண்களுக்கு 933 பெண் குழந்தைகள்தான் இருக்கிறார்கள். இன்னும் பெண் பிறப்பின் சதவிகிதம் குறைந்து வருகிறது. அதற்கு பெண் சிசுக் கொலைதான் காரணம்.

பெண் சிசுக்கொலை பொதுவாக ஏன் நடக்கிறது. வரதட்சணைக் கொடுமையை முதன்மையாக சொன்னார்கள் பலரும். நான் சொன்னேன். ”நானும் படித்திருக்கிறேன் , நானும் வேலைக்கு செல்கிறேன் நான் ஏன் உனக்கு வரதட்சணை தரவேண்டும் என பெண் கேட்கும் காலம் வரும். எனவே ஆண் பிள்ளை காப்பாற்றுவான். பெண் பிள்ளை என்றால் செலவு என்ற மனோபாவம் மாற வேண்டும். அப்படி மாறினால்தான் பெண் சிசுக் கொலை நிற்கும்.

அரசியல் ஆதிக்கம் மற்றும் இலக்கியத்தில் மொழி வழக்கு என்பதில் கூட ஆண்பால் ஆதிக்கம்தான் அதிகம். ஆண் சார்ந்து சிந்திக்கும் சமுதாயத்தில்தான் நாம் இன்னும் இருக்கிறோம். பெண்ணைச் சுய சார்புள்ளவளாக இருக்கவும் சிந்திக்கவும் விடுவதில்லை. அதில் ஆண் முடிவு செய்பவனாகவும் பெண் அந்த முடிவை ஏற்று நடத்துபவளாகவுமே இன்றைய காலகட்டத்திலும் இருக்கிறாள்.

ஒரு குழந்தை ஆணா , பெண்ணா என்பதல்ல முக்கியம் அது நல்லபடியாக சுகமாகப் பிறந்ததா.. தாயும் சேயும் நலமா, என்பதுதான் முக்கியம். ஆண் உசத்தி, வாரிசு, பேர் சொல்ல ஒரு பிள்ளை என்பதெல்லாம் போல பெண்ணும் உசத்திதான், வாரிசுதான்., பேர் சொல்லும் பிள்ளைதான். இன்று பல குடும்பங்களில் பெண்கள் தங்கள் தாய் தந்தையரைப் பாதுகாக்கிறார்கள். ஆண்மகன் மட்டும்தான் தாய் தந்தையரைக் கடைசிவரை காப்பாற்றுவான்., பெண் திருமணம் செய்து கொண்டு போய் விடுவாள் எனபது தவறான கண்ணோட்டம்.

” பெண் என்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப் பீழை இருக்குதடி தங்கமே" என்ற பாட்டை கேட்டிருப்போம். இன்று பீடு நடை போடும் பெண்களுக்கு மத்தியில் இன்னும் சில கிராமங்களில் பெண் சிசுக் கொலையாகவும், நகரங்களில் கருக்கலைப்பாகவும் அது செயல்படுவதாக வெளிச்சம் என்ற அமைப்பில் இருந்து வந்த பெண் கூறினார்.

இன்னும் கிராமங்களில் பெண் சிசுக் கொலை தொடர்வதை செய்தித்தாள்களில் பார்க்கலாம். குப்பைத்தொட்டியிலும், சாக்கடைகளிலும் வீசும் குழந்தைகளின் படம் பார்த்தாலே மனம் பதைக்கும்.. இது சில சமயம் குடும்பத்தாராலும், கணவனாலும் நடைபெறுகிறது. முறையற்ற உறவுகளில் பிறக்கும் குழந்தைகள் கூட இவ்வாறு கொல்லப்படுவது தண்டனைக்குரிய செயல்.. எனவே சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும்.

ஒரு மருத்துவர் தான் உயிரைக் காக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். அவரை மக்கள் தெய்வமாகக் கருதுகிறார்கள். அவர் தான் உயிரைக் காப்பாற்றும் தன் இறையாண்மையை, உறுதியை நிறைவேற்ற வேண்டுமே தவிர ஒரு உயிரை கருவிலேயே அழிக்கும் செயலுக்கு உடன்படக்கூடாது என கருதுகிறேன். அதை உரத்தும் அங்கு பதிவு செய்தேன்.

இதில் சமூக ஆர்வலர் ஜேனட் செல்வகனி, முனைவர் ஹாஜா கனி, சமூக ஆர்வலர் ஷைலா சாமுவேல் ஆகியோர் சிறப்பு பங்கேற்று தங்கள் வலிமையான கருத்துக்களையும் சொன்னார்கள். பொதுவாக ஆசிய நாடுகளில் தென் தமிழங்களில்தான் சிசுக் கொலை அல்லது கருக்கலைப்பு நடக்கிறது. ஸ்கானிங்க் செய்யும்போது பாலினம் பற்றிக் கூறாவிட்டாலும் சில மருத்துவமனைகள் திங்கட்கிழமை ரிப்போர்ட்டை வாங்கிக் கொள்ளச் சொன்னால் அது ஆண் குழந்தை என்றும் செவ்வாய்க்கிழமை வாங்கிக் கொள்ளச் சொன்னால் அது பெண் குழந்தை என்றும் ஒரு சொல்லப்படாத சட்டத்தைக் கடைப்பிடிப்பதாக ஒருவர் சொன்னார்.

1994 இல் வந்த சட்டப்படி கருக்கலைப்பு செய்வது குற்றமாக கருதப்படும். 2003 இல் கொண்டு வரப்பட்ட பெண்கள் பாதுகாப்பு சட்டமும் அதையே சொல்கிறது. முதல்வர் தொட்டில் திட்டத்தை அறிமுகப்படுத்திய போது அதில் வந்த குழந்தைகள் அனைத்துமே பெண் குழந்தைகள்தான். உன் குழந்தையை நீ கொல்லாதே. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பெற்றவர்களிடம் அரசாங்கம் உறுதி அளிப்பது எவ்வளவு கொடுமையான விஷயம். இது கலாசார சீரழிவான ஒரு விஷயமும் கூட.

1982 இல் இருந்து சமூக ஆர்வலராக தொண்டு செய்யும் ஷைலா சொன்னார், தத்தெடுக்க வரும் பெற்றோரும் ஆண் குழந்தைகள்தான் வாரிசு என ஆண் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பார்கள், பெண் குழந்தைகளை யாரும் தத்தெடுப்பதில்லை .

அந்தக் காலத்தில் பரிசம்தான் இருந்தது . வரதட்சணை அல்ல என கூறினார் ஹாஜா கனி. பெண் குழந்தைகள் சாபக்கேடு என எண்ண வைத்ததில் இந்த வரதட்சணைக் கொடுமைக்கு முக்கிய இடம் உண்டு எனக் கூறினார். 1997 இல் அரசாங்கம் இயற்றிய ஓரு சட்டப்படி இரு பெண் குழந்தைகள் கொண்ட குடும்பத்துக்கு அரசாங்கம் பாதுகாப்புத்தொகை தருவதாக கூறினார். பொதுவாக பெண்களுக்கு, சமூகப் பாதுகாப்பு, குடும்பப்பாதுகாப்பு மற்றும் முக்கியமாக கருவில் பாதுகாப்பு வேண்டும் என சொன்னார்.

கல்வியறிவு பெற்ற சமூகம் பெண் சிசுக் கொலை செய்வதில்லை. என்ன குழந்தை பிறந்தாலும் நம் குழந்தை என்ற மனோபாவம் வேண்டும். குழந்தைகள் நேசிக்கப்பட வேண்டும். பெண்கள் தங்கள் கணவனிடமும், மாமியார் வீட்டிலும் நம்பிக்கை கொடுக்க வேண்டும் நம் குழந்தை அது..நம்மால் நன்றாக வளர்க்க முடியும் என. பெண்குழந்தைகள் மதிக்கப்பட வேண்டும்

பொதுவாக மனமாற்றம் வேண்டும். சட்டங்கள் மூலமாக மன மாற்றத்தைக் கொண்டு வருவதை விட தனி நபர் ஒவ்வொருவரும் அந்த மன மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும். தன் வங்கியில் சேர்மனாக ஒரு பெண் இருப்பதாலும் பெண்களும் நன்கு படித்து சமூகத்தின் உயர் பொறுப்புக்களில் இருப்பதாலும் பெண் சிசுக் கொலை குறைந்திருப்பதாக என் கணவர் தன் சார்பாக விழிப்புணர்வு வந்து விட்டதாக சொன்னார்.

இன்னும் கிராமங்களில் கள்ளிப் பால், கருவை முள், கருக்கலைப்பு, சிசுக் கொலை போன்றவை அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அனைவருமே நல்ல கல்வி அளிக்கப்பட வேண்டும். தன்னுடைய சுதந்திரம், வாழ்வுரிமை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். தான் சூல் கொண்டது பெண்ணோ ஆணோ, குடும்பத்தாரின் கட்டாயத்துக்கு ஆட்படாமல் ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் உரிமை ஒரு தாய்க்கு உண்டு. அதற்கு இந்திய சட்டங்களிலும் வழி உண்டு.

பெண் சக்தி என்கிறோம்.. தாயாய், தாரமாய் , மகளாய் எல்லாமாய் நினைக்கிறோம் ஆனாl பெண் குழந்தை பிறந்தால் அழிக்கும் படித்த மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் மனோபாவம் மாற வேண்டும். ஆணும் பெண்ணும் சமம்தான் என உணர வேண்டும். இருவருமே வாரிசுகள்தான் எனபதையும், இருவருமே தம் ரத்தத்தில் உருவானவர்கள் என்பதையும் இறுதிவரை தம்முடனே இருக்கப் போவதும் அவர்கள்தான் என்பதையும் உணர்ந்தால் பெண் சிசுக் கொலை அல்லது கருக்கொலை என்ற அவலம் நிகழாது.

பெண் சக்தியைப் போற்றுவோம்.. பெண் சிசுக்களை நேசிப்போம். புதிய உயிர்களையும் புதிய பயிர்களையும் விளைவிக்கும் புதிய பூமியைப் போன்ற பெண் குழந்தைகளின் பிறப்பை வரவேற்போம்.!!!

டிஸ்கி:- இன்றைய நன்றிகள்.

1. 2010 இல் எனது கவிதையை மகளிர் தின இசைப்பாடலாக இணையத்தில் பதிவு செய்த நண்பர் செல்வகுமாருக்கும்,

2. சிகரம். காம் என்ற வெப்சைட் விளம்பரத்துக்கு என்னிடம் ஸ்க்ரிப்ட் கேட்டுப் பதிவு செய்த நண்பர் அருண்குமாருக்கும்

3.சாதனை அரசிகளுக்கு அட்டைப்படம் வரைந்து தந்த நண்பர் ஜீவா நந்தனுக்கும். 

4. என் அன்பு வேண்டுகோளுக்கிணங்கி என் முதல் புத்தகம் "சாதனை அரசிகளை" வெளியிட்ட பாரதி மணி ஐயாவுக்கும். மகளிர் கிரிக்கெட்டர் திருஷ்காமினிக்கும்,

5.என் இரண்டாவது புத்தகம் "ங்கா"வை பதிப்பித்த தாமோதர் சந்துரு அண்ணனுக்கும், வெளியிட்ட சிபி டைமண்ட்ஸ் பரசுராமுக்கும், பெற்றுக் கொண்ட கார்த்திகைப் பாண்டியனுக்கும்

6."சாதனை அரசிகள் விமர்சனத்துக்காக தோழி ராமலெக்ஷ்மி, மற்றும் நண்பர் சுரேகாவுக்கு

7.என் ஆசிரியை சுசீலாம்மா, லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஜாம்மா, தோழிகள் ஃபாத்திமா பாபு, விஜயலெக்ஷ்மி, தனலெக்ஷ்மி, மணிமேகலை, கயல்விழி, மற்றும் நண்பர்கள் பாரதி ராஜா, விஜயகுமார், வெங்கடேஷ் மகாதேவன், மணவாளன், தமிழ்நாடு அறிவியல் கழகம் உதயன், ரத்னவேல் சார், கோபால் சார், பா. கணேஷ், குமார், நேசன், விஜய்,வரலாற்றுச் சுவடுகள், செய்தாலி, ஆழி செந்தில்நாதன், அப்துல் ரகீம், லயன் வெங்கடாசலம், பொன் பிரபாகர், வேடியப்பன்,சதீஷ் நாராயணன், ரம்யா முரளி, தினமணிக்கும் மனமார்ந்த நன்றிகள்.


எனது புத்தகங்கள் "சாதனை அரசிகள்" மற்றும் "ங்கா" கிடைக்குமிடங்கள்.

டிஸ்கவரி புக் பேலஸ். சென்னை

விஜயா பதிப்பகம் , கோவை.

ஸ்ரீ மீனாக்ஷி புக் ஸ்டால் மதுரை.