செவ்வாய், 29 மே, 2012

ஆன்லைன் கல்வி சேவை.நாகராஜ ரவி

நண்பர் திரு நாகராஜ ரவி சிறுவர்களுக்காக ஆன்லைனில் இலவசக் கல்வி சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஒன்றாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகள் பள்ளியைத் தவிர இனி எங்கு சென்றாலும் நோட்டுப் புத்தகம் சுமக்க வேண்டியதில்லை. இன்சைட் க்ளோபல் குருப்பின் (INSIGHT GLOBAL GROUP) இந்த திட்டத்தின் மூலம் ஆங்கில மீடியம், தமிழ் மீடியம் படிக்கும் மற்றும் படிக்க முடியாத மாணவர்களுக்கு இந்த சமச்சீர் ஆன்லைன் கல்வி சேவை பயனுள்ளதாக இருக்கும்.

1 - 12 வகுப்பு பாடங்கள், மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆங்கில, தமிழ் பாட புத்தகங்கள், செவிலியர் பயிற்சி ஆங்கில மற்றும் தமிழ் பாடங்கள், மாதிரி வினா தாள்கள், 2009 / 2010 / தேர்வு கேள்விதாள்கள் மற்றும் இன்னும் நிறைய படிப்பு சம்பந்தமான புத்தகங்களை இனிமேல் இலவசமாக டவுன்லோட் செய்து படிக்கலாம். ஈ ரீடர் எனும் இன்ஸைட் டேப்ளட் கம்ப்யுட்டரும் அதில் இதிலுள்ள அனைத்து புத்தகங்களும் இன்டர்னெட் இல்லாமல் படிக்க ரூபாய் 999/- அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த போர்ட்டலில் எந்த ஒரு புத்தகத்தையும் புரட்டி படிக்க முடியும். அது போக எந்த பக்கத்துக்கும் நேராக செல்ல முடியும். புக்மார்க் வைக்க முடியும். அது போக நோட்ஸ் மற்றும் ரெஃபரன்ஸ் எழுத முடியும். அந்த ஸ்பெஸல் நோட்ஸ் உங்கள் கன்னுக்கு மட்டும்தான் தெரியும். ஆட்டோ ஃபிளிப் பட்டனை அமுக்கினால் அந்த புத்தகம் அதுவே புரட்டும். அது போக ஜூம் இன் ஜூம் அவுட் வசதி உள்ளதால் எவ்வளவு பெரிதாக வேண்டுமானலும் ஜூம் செய்து கொள்ளலாம். சில புத்தகங்கள் ஆடியோ வசதி செய்யபட்டுள்ள்து. அதனால் அதுவே உங்களுக்கு படிக்கும்.

மிக சீக்கிரம் வீடியோ கிளாஸஸ் தொடங்க உள்ளார். மற்றும் உலகில் உள்ள அனைத்து கல்வியாளர்களின் டிப்ஸ் வார பாட திட்டம், வர்ச்சுவல் கிளாஸ் ரூம் அனைத்து வசதியும் படி படியாக செயல்படுத்துவதாக கூறுகிறார்.. இது ஒரு இலவச கல்வி சேவை. இதற்க்காக மூன்று சர்வர்கள் (அமெரிக்கா / கனடா மற்றூம் இந்தியாவில்) நிறுவப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 2 - 4 லட்சம் மாணவர்கள் இலவசமாக ப்டிக்க ஏதுவாக ஹைஸ்பீட் பேன்ட்வித் டேட்டா சென்டரில் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

www.samacheeronline.com / www.samacheerkalvi.info / www,samacheerkalvionline.in. nag@insightgroupglobal.com.

இந்த ஆன்லைன் கல்வி சேவையைப் பயன்படுத்திப் பயன் பெறுங்கள்.

டிஸ்கி:- இந்த அறிமுகம் ஃபிப்ரவரி 1- 15, 2012  இன் அண்ட் அவுட் சென்னையில் வெளிவந்துள்ளது.

ஆண்களும், பெண்களும், வார்த்தைகளும்..

ஆண்களும் பெண்களும் வார்த்தைகளும்..:-

ஆறு ஆண்கள் சந்தித்தார்கள்.
ஒருவன் வாயிலிருந்து வார்த்தைகள்
தவளைகள்போல குதித்துக்கொண்டே இருந்தன.
இன்னொருவன் நாக்கையும் வாக்கையும்
கடிவாளமிட்டுப் பிடித்தபடியே இருந்தான்.
மூன்றாமவன் அசைபோட்டபடி இருந்தான்
எதையும் துப்பாமல்.
நான்காமவன் வாயில் நாராசத்திலிருந்த
பன்றிகுட்டிகள் உருண்டோடின.
ஐந்தாமவன் தேவதாரு பாஷையில் பேசினான்
யாருக்கும் புரியவில்லை.
ஆறாமவன் வாயிலிருந்து பூக்கள்
மலர்ந்தவண்ணம் இருந்தன.

இவர்களனைவரும் சேர்ந்துபிடித்த
சிகரெட்டுப் புகையில் வார்த்தைகள்
குப்பையிலும் தண்ணீரிலும்
நீந்தியபடி இருந்தன.
வார்த்தைகள் விடுபட்டபோது
சத்தமிட்டுச் சிரித்தார்கள்.

ஒருவன் அழுதான்.
பாட்டில் லேபிள் நெப்போலியன் போல
அனைவரும் வாய்மூடி மௌனித்தார்கள்.
அவன் வாந்தியெடுத்ததும்
அவனை நகர்த்திப் படுக்கவைத்து
அனைத்திலிருந்தும் விட்பட்டுவிட்டதாகக் கருதி
விடைபெற்றுச் சென்றார்கள் அனைவரும்..

சிதறிக்கிடந்த மிக்ஸர் துணுக்குகள் போல
பொருளற்றுக் கிடந்தன வார்த்தைகள்..

 * * * * *********************************

ஆறு பெண்கள் சந்தித்தார்கள்.
அறுவரும் ஒரேநேரம்
புன்னகைத்தார்கள்., அணைத்தார்கள்.,
கன்னத்தோடு கன்னம் ஒட்டி
முத்தமிட்டுக் கொண்டார்கள்.

எல்லா உடலிலிருந்தும்
வாசனைத்திரவியம்
அறையை நிறைத்தது.
ஒரே நேரத்தில் பேசப்பட்ட
அவர்கள் வார்த்தைகள் போல..

அனைவரும் பேசினார்கள்,
அனைவரும் கேட்டார்கள்.,
எரிமலைகள் பொங்கின.,
மலர்கள் குலுங்கின.
நதி பெருக்கெடுத்தது.,
நாகங்கள் தலைநீட்டின.,
பேச்சின் ஓரங்களில்
குகை வாழ் உயிரினங்கள்
எட்டிப் பார்த்தன.

வாழ்வு சுதந்திரமாய் இல்லையென்று
கண்ணீர் கண்ணீர் விட்டு
அழுதாள் ஒருத்தி.
அனைவரும் தன்னிலை
பரவாயில்லை என நினைத்து
வருந்தியவளுக்கான
வார்த்தைகள் உதிர்த்தார்கள்

அவர்கள் அனைவரும்
இணைந்திருந்த எல்லா நேரங்களிலும்
எல்லா இடங்களிலும்
வார்த்தைகளும் சத்தங்களும்
அவர்களுடன் கைகோர்த்திருந்தன.

வார்த்தைகள் சிக்காத நேரங்களிலும்
நெகிழ்வாய் ஏதேதோ கூறியபடி
பிரிந்தார்கள் அவர்கள்.

வீரியத்தோடும் அர்த்தமற்றும்
நிறைய வார்த்தைகள் செருகித்
தொங்கிக் கிடந்தன அறையெங்கும்.
 * * * * * ********************************

கண்ணீர் விட்ட ஒருவனையும்
ஒருத்தியையும் தவிர அனைவரும்
நினைவுகளில் வார்த்தைகளை
மென்றபடியே சென்றார்கள்.
அவர்கள் துப்பிய வார்த்தைகள்
தன்னை மறந்தும் கூட
அவர்கள் சொல்ல முடியாத துயராய்
சிவந்து கிடந்தன..

டிஸ்கி:- இந்தக் கவிதை   ஃபிப்ரவரி 1 - 15 , 2012 இன் அவுட் சென்னையில் வெளியானது.   


திங்கள், 28 மே, 2012

தலித் பெண்கள் சங்கத்தலைவி மணிமேகலை

தலித் பெண்கள் சங்கத்தலைவி மணிமேகலை. :- **************************************************

சாஸ்திரி பவனில் பெண்கள் சங்கத்தலைவியாய் இருக்கும் மணிமேகலை தங்கள் தலித் இனப்பெண்கள் வெளிவந்து தங்கள் சாதி பெயரை சொல்லவே பயப்பட்ட நிலையில் தலித் பெண்களுக்கென்றும் ஒரு சங்கம் ஆரம்பித்தார். அவர்களின் நலனுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் தற்போது பெண்கள் ஊக்கம் பெற்று தங்கள் நிலையை வெளியே சொல்வதாகவும் , அதனால் அவர்களுக்கெதிரான தவறுகள் குறைந்துள்ளதாகவும் சொன்னார்.

சமீபத்தில் IWID -- INITIATIVES : WOMEN IN DEVELOPEMENT என்ற NGO நடத்திய மாநாட்டில் பெண்கள் பணியிட சூழல் பற்றிய அனுபவ பகிர்வு என்ற தலைப்பில் பேசி இருக்கிறார். அங்கு பலவிதமான பெண்களை சந்தித்தது மறக்க முடியாத அனுபவம் என்கிறார். பெண்குழந்தைகளுக்கான ஆரோக்கியம் கிராமப்புறப் பகுதிகளில் சரிவர இல்லை என்றும் இனி அடுத்து தன்னுடைய கவனம் அதில் செலுத்த முடிவு செய்திருப்பதாகவும் சொன்னார்.

இவர் சென்ற சில மாதங்களாக பறவைகளுக்குத் தண்ணீர் வைக்கும் ப்ராஜெக்டை ஒவ்வொரு ஸ்கூலிலும் சென்று தன் தாயார் நடத்தும் அட்சயா பவுண்டேஷம் மூலம் விழிப்புணர்வுக்கு கொண்டு வந்ததாக சொன்னார். எல்லாரும் பறவைகளுக்கு உணவளிப்போம் ஆனால் தண்ணீர் வைக்க மாட்டோம். அதை அங்குள்ள பள்ளிப் பிள்ளைகள் உணர்ந்து இனி தாங்களும் செய்வோம் என சொன்னதாக பெருமையுடன் சொன்னார்.

இவரது தாயார் நடத்தும் அட்சயா பவுண்டேஷன் மூலம் எல்லா கார்ப்பரேஷன் பள்ளிகளுக்கும் சென்று அங்கு சிறப்பாகப் பணியாற்றும் எல்லா ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் விதமாக விருதுகளும். புத்தகங்களும் பரிசளிக்கிறார். மனித நேயத்தோடு செயல்படும் மணிமேகலை தான் ஒரு தலித் இனப் பெண் என சொல்லிக் கொள்வதில் பெருமையுறுவதாகவும். பெண்கள் மற்றும் தலித்துக்கள் உரிமைக்குப் பாடுபட்ட அண்ணல் அம்பேத்காரின் உருவச் சிலையை சாஸ்திரி பவனில் வைக்க அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். சீக்கிரமே இவரது எண்ணங்கள் நிறைவேறட்டும். இவரது சேவைகள் இன்னும் பலருக்குக் கிடைக்கட்டும். !!!.

டிஸ்கி:- இந்த அறிமுகம் 15 - 31 ஜனவரி 2012 இன் அண்ட் அவுட் சென்னையில் வெளிவந்தது.


வெள்ளி, 25 மே, 2012

புத்தகங்கள் வாசிப்போம். வாழ்வை நேசிப்போம். ( BAPASI)

புத்தகங்கள் வாசிப்போம். வாழ்வை நேசிப்போம்.
 ****************************** ********************

புத்தகம் வாசிப்பது என்பது ஒரு மனிதனைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. சென்னையில் நடக்கும் 35 ஆவது புத்தகக் கண்காட்சி தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் புத்தக விரும்பிகளுக்கான ஒரு திருவிழா. இதில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு , ஹிந்தி மற்றும் பிற மொழி நூல்களுக்கான கிட்டத்தட்ட 400 பதிப்பகங்களும் புத்தக விநியோக நிறுவனங்களும் ஸ்டால் போட்டிருக்கிறார்கள். சென்ற வருடங்களை விட இந்த வருடம் இணையதளத்திலும், வலைத்தளங்களிலும் எழுதுவோரும் வாசிப்போரும் அதிகரித்திருக்கிறார்கள்.

கேபிள் சங்கர் என்ற வலைப்பதிவர் கிட்டத்தட்ட 5 புத்தகங்களும். யுவகிருஷ்ணா 4 நூல்களும் வெளியிட்டிருக்கிறார்கள். இவர்கள் மற்றும் மற்ற வலைப் பதிவர்கள் வெளியீட்டிலும் புத்தகங்கள் நிறைய வெளிவந்து சக்கைப் போடு போடுகின்றன. இணையதளங்களிலும் நூல்கள் இணைய இதழ்களாக வாங்கப்பட்டு வாசிப்பாளர்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையில் புத்தகம் வாங்கி வாசிப்பவர்கள் பற்றி  ஒரு தமிழ்ப் பதிப்பாளர், ஒரு ஆங்கிலப் பதிப்பாளர், ஒரு புத்தக நிலைய உரிமையாளர் ஆகியோரிடம் விசாரித்தோம்.

எமரால்டு பதிப்பக உரிமையாளர் திரு . ஒளிவண்ணன் கூறும்போது நிறைய புதுப்புத்தகங்கள் வருடந்தோறும் வெளியிடப்படுவதாக சொன்னார். தன்னுடைய நிறுவனத்தின் மூலம் வருடம் முழுமைக்கும் 25 ஆங்கில புத்தகங்கள் வெளியிடப்படுவதாகவும் , இது போக ஆன்லைனில் இன்னும் அதிக அளவு நூல்களைப் பதிப்பித்து வருவதாகவும் சொன்னார்.

புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் முதலில் கிடைக்க வேண்டும். பின்பு பதிப்பகங்கள் பேரைப் பொறுத்தும் , அதன் பிரபலத்தைப் பொறுத்தும் புத்தகங்கள் வாங்கப்படுவதாக சொன்னார். கிட்டத்தட்ட 35 வருட பாரம்பர்யம் உள்ள எமரால்டு பப்ளிஷிங் நிறுவனத்தை தன் தந்தை காலத்துக்குப் பின் புத்தக வாசிப்பில் உள்ள நேசத்தாலே தொடர்ந்து நடத்தி வருவதாகவும். உலகளாவிய அளவில் அது நிறைய வாசகர்களைப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

குழந்தைகளுக்கான பசில்ஸ்( PUZZLES) புதிர்ப்போட்டிகள், மற்றும் சுய முன்னேற்ற நூல்கள், ஆங்கிலம் பேச கற்பிக்கும் நூல்கள், முதலீட்டு நூல்கள் அதிகம் விற்பதாகவும் . தற்போது E-BOOK எனப்படும் மின்னிதழ் வாசிப்பு அதிகரித்திருப்பதாக சொன்னார். விநியோகஸ்தர்கள் மூலமும் தங்கள் தரமான புத்தகங்களின் தொடர் வெளியீட்டின் முலமும் இந்த வெற்றியை அடைந்திருப்பதாகச் சொன்னார்.

அடுத்து தமிழின் மிக முக்கியமான பதிப்பகமான உயிர்மையின் உரிமையாளர் கவிஞர் திரு மனுஷ்யபுத்திரன் 10 வருடங்களாக உயிர்மை கிட்டத்தட்ட 500 புத்தகங்கள் வெளியிட்டுள்ளதாகவும் அதில் மொழிபெயர்ப்பு நூல்களும் அடக்கம் என சொன்னார். ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட நூல்கள் 10 இருக்கும் என சொன்னார். இலக்கியம் படிக்கும் இளைஞர்கள் 75 % அதிகரித்திருப்பது நல்ல ஆரோக்கியமான விஷயம் என்றும் அதனால் அவர்கள் எதைப்படிக்கவேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துப் படிக்கவேண்டும் எனவும் சொன்னார்.

பொது அறிவு, அறிவியல், கணினி இவற்றுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நல்ல இலக்கியத்தையும் வாழ்வியலுக்கும் மொழி அறிவுக்கும் , மொழி ஆற்றல் பெருகவும் படிக்கவேண்டும் என கூறினார். தங்களுடைய வேர்களை அடையாளம் காட்டும் இலக்கியம், வாசகர்களால் துய்த்துணரப்படவேண்டும் என்ற தீராத தாகத்தாலே இன்னும் உயிர்மை இலக்கிய நூல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறினார். கட்டுரைகள் உலகியலை அதிகம் பிரதிபலிப்பதால் நன்கு விற்பதாக கூறினார். கவிதை விரும்பிகளுக்கான அருமையான கவிதைத் தொகுதிகளையும் உயிர்மை வெளியிட்டு வருகிறது. ஆசிரியர்களின் பெயருக்காகவே புத்தகங்கள் விற்பதாக கூறினார். சுஜாதா, எஸ். ரா போன்றவர்களின் நூல்கள் அதிகம் விற்பதாக கூறினார், ஹிக்கின் பாதம்ஸ், லேண்ட் மார்க் போன்றவை தங்கள் புத்தகங்களுக்கு உரிய இடம் கொடுப்பதாக கூறினார்.

ஆன்லைனில் தமிழில் புத்தக வாசிப்பை கொண்டு வந்தது உயிர்மையும் கிழக்குப் பதிப்பகமும்தான் எனவும் அதில் க்ரெடிட் கார்டு மூலமும் பணம் வாங்கிக் கொள்ளப்படுவதான வசதியும் உள்ளதாக சொன்னார். ஒரு எழுத்தாளராகவும் இருப்பதால் உயிர்மையின் மூலம் வருமானம் கருதாது நம் இலக்கியத்தை இளையோரிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமிதம் கொள்வதாக கூறினார்.

டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் திரு வேடியப்பன் அவர்கள் அவர்கள் மின்னிதழ்கள் அதிகரித்து வந்த போதிலும்.புத்தக விற்பனை வருடம்தோறும் கூடி வருவதாக சொன்னார். ஆன்லைனிலும் தங்களுடைய புத்தகங்கள் விற்கப்படுவதாக சொன்னார். 5 ரூபாயில் இருந்து 1,00,000 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்படுவதாக சொன்னார். எஸ். ராமகிருஷ்ணன் , ஜெயமோகன் சாருநிவேதிதா, யுவகிருஷ்ணா நூல்கள் அதிகம் விற்கிறது. பொதுவாக தமிழில் சுயமுன்னேற்ற நூல்களுக்கு வரவேற்பு அதிகம் என்றும். புதிதாக காமிக்ஸ் ரசிகர்களும் அதிகரித்து வருவதாக சொன்னார். நாம் சின்னப்பிள்ளையில் ரசித்த எல்லா காமிக்ஸ்களும் ( அணில் காமிக்ஸ் , முத்து காமிக்ஸ் ) வந்து ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்து விட்டதாம்.

புத்தகத்திருவிழா நிஜத் திருவிழா போல சக்கைப் போடு போடுகிறது. ஒவ்வொரு ஸ்டாலும் இன்ஷூர் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஸ்டால் உரிமையாளர் 17,500 ரூபாய் கட்டியுள்ளதாகவும் , 3. 00,000 ரூபாய் வரை தன் ஸ்டாலில் புத்தகம் வைத்துள்ளதாகவும், அதில் 20 சதவிகிதம் விற்பனை செய்துள்ளதாகவும் சொன்னார்.எல்லா புத்தகங்களும் 10 சதவிகித தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. நீண்ட நடைபாதைகள், உணவுக்கடைகள், மேடை என்று எல்லாம் தாண்டி வண்டியை விட்டிறங்கி பொது ஜனம் உள்ளே வர கொஞ்சம் வயதானவர்கள், மற்றும் உடல் நிலை சரியில்லாதவர்கள் சிரமப்படுகிறார்கள். ஊனமுற்றோர் புத்தகம் வாங்க வசதியாக உள்ளே சக்கரநாற்காலிகள் வழங்கப்படுவதாக கேள்வியுற்றேன். வண்டிகளை நிறுத்துமிடம் ஒரு இடமாகவும் வாயில் இன்னொரு இடமாகவும் இருப்பது மட்டுமல்ல சில கடைகளின் எண்கள் வேறொரு இடத்தில் தொடங்குவதால் தேடி வருவோருக்கு சில சிரமங்களும் ஏற்படுகிறது.

அதோடு அதாக நிறைய சொற்பொழிவுகளும், குழந்தைகளுக்கான பேச்சு, கட்டுரைப் போட்டிகளும் நடத்தி, பரிசு வழங்கி தினமும் புத்தகம் என்னும் தெய்வத்தை பபாசி என்னும் தேரில் உலா கொண்டு வந்து சீராட்டும் பபாசி மெம்பர்களும்., புரவலர்களும், புத்தக நிலைய உரிமையாளர்களும் , கடைக்காரர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். நன்கு படித்த ஒரு உயர்ந்த சமூகத்தை, வன்முறைகளற்ற சமுதாயத்தை., புரிந்து கொள்ளல்களுடன் கூடிய ஒரு உலகளாவிய நட்பை புத்தக வாசிப்பால் மட்டுமே கொண்டுவர இயலும் என்பதால் பல்வேறு இடையூறுகளும் கடந்து இதை நடத்துபவர்கள் சிறப்பிக்கப்படவேண்டியவர்கள். .

எங்கே எல்லாரும் கிளம்பிட்டீங்க.. டிவியையே பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு கொஞ்சம் புத்தக உலகத்தையும் சுவைத்துப் பாருங்கள். நீங்களாகவே சொல்வீர்கள்..புத்தகங்களை வாசிப்போம் வாழ்வை நேசிப்போம் என்று.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 15 - 31 ஜனவரி 2012 இன் அண்ட் அவுட் சென்னையில் வெளிவந்தது.


வியாழன், 24 மே, 2012

நாக. மெ. சுப. வள்ளியப்ப செட்டியார். நூற்றாண்டு விழா

இன்றோடு 100 ஆண்டுகள் !

 ”உழைப்பே உயர்வு தரும்!” என எங்களுக்கு சொல்லித் தந்த தந்தையே . . .

 6 புத்தகங்கள் எழுதிவிட்டேன் !  50,000 பிரதிகள் விற்றுவிட்டன. 200க்கும் மேற்பட்ட கட்டுரைகள்;

அதுமட்டுமா . . .? கணக்கு எழுதுவதிலிருந்து பங்குச் சந்தை வரை . . . எல்லாமே உங்களிடம் கற்றதும் பெற்றதும்.

உங்களை நினைக்காத நாளில்லை . . . எல்லாவற்றிற்கும் நன்றி! 

---- பங்குச்சந்தை இயக்குநர் நாகப்பன் வள்ளியப்பன்.

எங்கள் பேரன்புக்குக்கும் பெருமதிப்பிற்குமுரிய ஐயா உங்கள் ஆசீர்வாதம் என்றென்றும் எங்களைச் சூழ்ந்திருக்கட்டும், 

புதன், 23 மே, 2012

மனமாச்சர்யங்களை உடைப்போம். அணைகளை அல்ல. & புக் கிளப் இந்தியா ஒரு அறிமுகம்.

வள்ளங்களும் ஓடங்களும் கணக்கற்றுக் கிடப்பது மலையாள நாடு. கடவுளின் தேசம் எனப் புகழப்படும் அளவு வளமை, செழிப்பம். நூறு சதவிகிதம் கல்வியறிவு பெற்ற மக்கள். கம்யூனிஸ்ட் ஆட்சிதான் பெரும்பாலும். இருந்தும் எல்லாருக்கும் எல்லாவற்றையும் பகிர்ந்து தரும் பரந்த மனப்பான்மை இல்லை.

தமிழகத்திலிருந்து அரிசி மற்ற அத்யாவசியப் பொருட்கள் அனைத்தும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பது போல டீக்கடை நாயராகட்டும், நகைக்கடையாகட்டும், நிதி நிறுவனமாகட்டும், நடிப்புத்தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் நடிகர் நடிகையராகட்டும். தமிழ்நாட்டில் எல்லாருக்கும் இடம் உண்டு. எல்லாருக்கும் இருக்கவும் வாழவும் எல்லா உரிமைகளும் வழங்கி மதம், இனம் மொழி சாரா தன் இறையாண்மைமை நிரூபித்துள்ளது தமிழ்நாடு.

எல்லாவற்றையும் உற்பத்தி செய்து மற்ற மாநிலத்தவருக்கு வழங்கும் தமிழகத்துக்கு தண்ணீராகட்டும், மின்சாரமாகட்டும் மற்ற மாநிலங்கள் தருவதில் தயக்கம் காட்டவே செய்கின்றன. தமிழனுக்கும் கொடுக்கும் போது மட்டும் அவற்றின் கை சுருங்கி விடுகிறது.

தமிழக கேரள எல்லையில் இருக்கும் முல்லைப் பெரியாற்றின் மூலம் 225 டி எம் சி தண்ணீர் தமிழகத்திற்கு விவசாயத்திற்கும், மின்சார உற்பத்திக்கும் கிடைக்கிறது. வைகையாற்றில் தேக்கப்படும் இந்நீர் தேனி பகுதியின் விவசாயத்திற்கு உதவுகிறது. இதன் தேவையே இன்னும் அதிகமாய் இருக்கிறது. இந்த சூழலில் இது ஒரு நூற்றாண்டுக்கு முன் செஞ்சாந்தையும் சுண்ணாம்பையும் வைத்துக் கட்டப்பட்டது என்பதால் இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு அணை உடையும் அபாயத்தில் இருப்பதாக கேரள அரசியல்வாதிகள் ஒரு பிரசாரத்தை மேற்கொள்ள அது கேரளாவிலும்., நீர்வரத்து குறைந்தால் என்ன செய்வது என்ற கவலையை தமிழக விவசாயிகளிடமும் விதைத்துத் தேவையற்ற போராட்டங்களையும் சச்சரவையும் உருவாக்கியுள்ளது.

கேரளாவிலிருந்து உயிர் தப்ப பயந்தபடி கானகம்வழியாக எளிய தமிழகமக்கள் வருவதாக செய்தித்தாள்கள் சொல்லுகின்றன. தமிழகத்தில் பல ஆண்டுகளாக நம்முடைய தெருமுக்கின் அடையாளச் சின்னங்களாக இருந்த அப்பாவி நாயரின் கடைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. அரசியல் சூதாட்டத்தில் பகடைக்காய்களாக மக்கள் அங்குமிங்கும் உருட்டப்படுகிறார்கள்.

வன்முறைகளற்ற தேசத்தை உருவாக்க காந்தி பாடுபட்ட நம் நாட்டில் தங்கள் சுயலாபத்துக்காக மக்களிடம் தேவையற்ற பீதியை கிளப்பும் முயற்சி பல ரூபங்களில் நடந்துவருகிறது.

நம்நாட்டில் அந்த அணையை கட்டும்போது அதன் பொறியாளரான பென்னிகுயிக் தன் மனைவியின் நகைகளைக் கூட அடகுவைத்துக் கட்டினாராம். ஒரு வெளிநாட்டுக்காரருக்கும் நம் மண்ணின் மேல் இருந்த சேவை மனப்பான்மையை என்ன என்று சொல்ல.? இன்று அதே மண்ணைச் சேர்ந்த சொந்த சகோதரர்களாகிய நாம் நம் சகோதரர்களுக்கே தண்ணீரை மறுக்கிறோம், மின்சாரத்தை மறுக்கிறோம். அது வீணானாலும் பரவாயில்லை யாருக்கும் கொடுக்கக்கூடாது என்ற மனோபாவம் மாறவேண்டும்.

தமிழக அரசு மத்திய நதி நீர் ஆணையம் இட்ட கட்டளையை நிறைவேற்றச் சொல்லிக் கேட்கிறது. அதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. இன்னும் 11.25 டி எம் சி தண்ணீர் தேவை நம் மக்களுக்கு. ஆனால் அந்த அணையை இன்னும் உயர்த்தவும் பலமுள்ளதாக்கவும் அனுமதி கிடைக்கவில்லை. கிடைத்த சிலவற்றையும் நிறைவேற்ற முடியவில்லை.

மார்ஷல் நேசமணி அவர்கள் தமிழக கேரள எல்லைப் போராட்டத்திலும் தமிழகத்துக்கு நீர் கிடைக்க வேண்டியும் போராடிய போது எதிர்த்த கேரளத்தவருடன் கேரள மக்கள் கை கோர்த்தனர். ஆனால் நேசமணி அவர்கள் பெரும் பலம் கிடைக்காமல் நம் சகோதரர்களின் ஆதரவு கிடைக்காமல் தனித்தே போராடினார். இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நாம் நம் சொந்த நாட்டுக்குள்ளேயே நமக்கு சாதகமாக நீர்வழங்கும்படி இடப்பட்ட சட்டங்களை நிறைவேற்றும்படி போராட வேண்டிவருமோ. நதி நீர் எல்லாம் தேசியமயமாக்கப் படவேண்டும். இதை குறிப்பிட்ட மாநிலத்தவர் தங்களது என உரிமை கோரக்கூடாது.

உள்ளபடியே அந்த அணையில் விரிசல் இருந்தால் செப்பனிடப்பட்டு சீர் செய்யப்பட அனுமதிக்கப்படவேண்டும். அதை விட அதிகம் விரிசல் உள்ள அணைகளை எல்லாம் விட்டுவிட்டு இந்த அணையை மட்டும் உடைக்கவேண்டும் . இன்னும் இரு சிற்றணைகள் கட்டப்படவேண்டும் எனச் சொல்வது அரசியல் ஆதாயத்துக்காகவும், தமிழர்கள் மேல் உள்ள காழ்ப்புணர்வுக்காகவும்தான்.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பகிர்ந்து வாழ்வோம். பிரச்சனைகள் வந்தால் சேர்ந்தே சமாளிப்போம் . இதில் தனிமனிதர்களைத் தாக்க மாட்டோம் என ஒவ்வொருவரும் உறுதி எடுக்க வேண்டும். இதை விடுத்து மற்ற மாநில மக்களின் கடைகளை உடைப்பது, சொத்துக்களை சூறையாடுவது, மரங்களை வெட்டுவது, பாலை கொட்டுவது என அழிவு வேலைகளில் ஆக்கபூர்வமான தமிழரும், கேரளத்தவரும் ஈடுபடக்கூடாது. எதாயிருந்தாலும் மனித உழைப்பு, மனித உயி்ர் மதிக்கப்படவேண்டும்.

எனவே மன மாச்சர்யங்களை உடைப்போம், மனிதநேயத்தோடு அனைத்தையும் நம்முள் பகிர்ந்து வாழ்வோம்.

***********************************************************************************


புக் கிளப் ஒரு அறிமுகம்:-
**************************** .

புக் கிளப் இந்தியா..இது வாசிப்பனுபவம் மறந்துவிட்ட மக்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் திரும்பக் கொணர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

திரு ஜி். ஒளிவண்ணன் அவர்கள் ரோட்டரி கவர்னராக இருந்தவர். இவர் ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் அதிபரும் கூட. சுமார் 25 வருடங்களாக பதிப்பாளராக புத்தகங்கள் வெளியிட்டு வரும் இவர் இணையத்தின் மூலம் புக் கிளப் இண்டியா என்ற வெப்சைட்டை இந்திய புத்தக வாசிப்பாளர்களுக்காக உருவாக்கி இருக்கிறார்.

இதன் குறிக்கோள் புத்தக நேசர்களை ஒரு பொதுப்படையான இணையதளம் மூலம் ஒருங்கிணைப்பதே ஆகும். இது நிறைய ஆலோசனைகள், மதிப்புரைகள், கலந்துரையாடல்கள், கருத்துப் பகிர்வு, மற்றும் புது புத்தகங்கள் மற்றும் எல்லா புத்தகங்களுக்குமான விமர்சனத்துக்கான ஒரு இணைய மேடை அமைத்துக் கொடுக்கிறது.

இதற்கான இணையதளத்தின் பெயர் www.bookclubindia.net . இது 2011 ஆகஸ்டில் ஆரம்பிக்கப்பட்டது. இது ஆரம்பிக்கப்பட்டு இப்போது வரை 90 நகரங்களிலிலிருந்து பார்வையாளர்கள் தொடர்ந்து பார்வையிட்டும் தங்கள் பங்களிப்பை செய்தும் வருகிறார்கள். கிட்டத்தட்ட 60 வெளிநாடுகளிலிலிருந்து பார்வையாளர்களைப் பெற்றுள்ளது புக் கிளப்.

பதிப்பாளர்கள் தங்கள் புதுப் புத்தகம் பற்றியும் புத்தக வெளியீடு பற்றியும் பகிர்ந்து கொள்ள இது வகை செய்கிறது.ஒரு புத்தகம் பற்றிய மதிப்புரை, கருத்துரை இதில் வாசகர்களுக்கு கிடைக்கச் செய்கிறது. குழந்தைகளுக்கான புத்தகங்கள் பற்றியும் ஒரு ஸ்பெஷல் இடம் கொடுக்கிறது.

இந்த வெப்சைட்டின் நோக்கம் புத்தக வாசிப்பாளர்கள் வாழ்வில் தங்களைப் பாதித்த எழுத்துக்களை, புத்தங்கங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே. எந்த புத்தகம் பற்றியும் உங்கள் கருத்துக்கள், மதிப்புரைகள், அலசல்கள் எதுவானாலும் அனுப்பவேண்டிய முகவரி bookclubindia@gmail.com.

புத்தகம் வாசிப்பது ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு புரட்டிப் போடும் அனுபவத்தை எப்போதேனும் உண்டாக்குகிறது. எனவே புத்தகத் திருவிழா நடைபெறப்போகும் இந்நேரத்தில் நீங்களும் புக் க்ளப் மெம்பராகி உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை ஜனவரி 1 - 15 , 2012 இன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானது.  


செவ்வாய், 22 மே, 2012

இனிய இல்லறம். அது நல்லறம். & இளம் மாஜிஷியன் ஆர்த்தி மங்களா சுப்ரமண்யம்.

இனிய இல்லறம்.. அது நல்லறம். :-
************************************

வீடென்று எதனைச் சொல்வீர்.. ஒரு கணவனும் மனைவியும் இணைந்து இறையாண்மையோடு செயல்படும் இடம்தான் வீடு.ஒரு இல்லம் இனிய இல்லமாக இருக்க கணவன் மனைவி இருவரின் கூட்டு முயற்சியும் புரிந்து கொள்ளலும் அவசியம். தான் தான் பெரியவன் அல்லது பெரியவள் என்ற எண்ணம் கணவன் மனைவிக்குள் பொதுவா இருக்கக் கூடாது.. விட்டுக் கொடுத்துப் போதலும் புரிந்து கொள்ளும் தன்மையும் அவசியம்.

வீடு என்பது கோயில் என்றால் அங்கே கணவனும் மனைவியும் குழந்தைகளுக்கு கடவுளைப் போல இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரின் பொறுப்பும் பளுவும் அதிகம். வாழ்வியலுக்கான பணம் சம்பாதிக்க கணவன் மனைவி இருவரும் ஓடி ஓடி சம்பாதிக்கிறாங்க.. ஆனா சிலர்தான் அதன் பயனை அனுபவிக்கிறாங்க.. சிலர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத தன்மையோடு வேறு வழியில்லாமல் சேர்ந்து வாழ்ந்துகிட்டு இருக்காங்க.. இந்த நிலைமையிலிருந்து உங்க வாழ்க்கை என்றென்றைக்கும் மகிழ்ச்சியானதா ஆக சில மந்திர வார்த்தைகள் உண்டு .. அதை உங்களோடு பகிர்ந்துக்கிறேன்..

முதலில் மனைவிகளுக்கு நீங்க உங்க கணவரை நேசிக்கிறீங்களா.. இதுதான் முதல் கேள்வி.. இதிலிருந்துதான் எல்லாம் தொடங்குது.. உண்மையா நேசித்தால் அவரிடம் இருக்கும் குற்றம் குறைகளைப் பொருட்படுத்த மாட்டீர்கள்.. உங்க பொருளாதார விபரங்களைப் பகிர்ந்து கொள்வது போல உங்கள் எண்ணங்களை , ஆசைகளை நிதானமான ஒரு சந்தர்ப்பத்துல அவருக்கு புரிய வைச்சிருக்கீங்களா..

எப்ப பார்த்தாலும் வருமானம் பத்தியும்., வரவு செலவு கணக்கு பத்தியும்.,அவர் அதிகமா செலவு செய்றது பத்தியும் அவங்க அப்பா அம்மாவுக்கு செய்றது பத்தியும் பேசிகிட்டே இருக்கீங்களா.. அப்போ அவருக்கு உங்களைப் பார்த்தா இன்கம்டாக்ஸ் ஆஃபீசரப் பார்த்தது போலத்தான் இருக்கும். எதை மறைக்கலாம் என முயல்வார். சில சந்தர்ப்பங்களையும் சில விஷயங்களையும் அவருக்காக விட்டுக் கொடுங்க. என்கொயரி ஆஃபீசர் போல கண்காணிச்சுகிட்டே இருக்காதீங்க.

எப்பவும் உங்க கூடவே இருக்கணும்னு நினைக்காதீங்க. அவருடைய நண்பர்களோடவும் அவர் நேரம் செலவழிக்க அனுமதிங்க.. ஒரு சின்ன சின்ன பிரிவும் உங்க தாம்பத்துல நெருக்கத்தை ஏற்படுத்தும். அவருக்கு பிடிச்ச விஷயங்கள்ல அபிப்ராய பேதம் இருந்தாலும் அதை ரொம்ப சொல்லி காட்டிக்கிட்டே இருங்காதீங்க.

ஒரு விவாதம்னு வந்தா முடிந்தவரை அதை தவிர்க்கப் பாருங்க.. வீட்டுக்குள்ள உங்களோடு இருக்கிற அவர்தான் முக்கியம்.. நீங்க சண்டை போடக்கூடிய விஷயம் முக்கியம் இல்லை. அது போல அவருடைய ஆசைகள்., எண்ணங்கள் என்னன்னு காது கொடுத்துக் கேளுங்க.. அவர் பேசும்போது அவர் அருகில் அமர்ந்து கண்களை கவனியுங்கள்.. ஏதோ வேலை செய்துகிட்டு ஏனோ தானோன்னு கேக்குறது , போற போக்குல வாய்க்கு வந்த கமெண்டை உதிர்த்து அவரை சங்கடப்படச் செய்யாதீங்க..

நீங்க வேலை செய்யும் இடங்களில்., வெளிஆட்களுடன் பழகும்போது என்ன மரியாதை கொடுக்கிறீங்க.. பிடிக்காட்டி கூட வேலை ஆகணும்னா விட்டுக் கொடுத்து சிலசமயம் புன்னகையோடு சகிச்சுகிட்டு வேலையை வாங்கிக்கிறீங்க.. உங்களோடு வாழ்நாள் பூரா கைபிடிச்சு நடக்கப்போற கணவன் கொஞ்சம் அப்படி இப்படி கோச்சுகிட்டா மட்டும் வாழ்நாள் பூரா பேசாத மாதிரி வென்சன்ஸ் வச்சுக்காதீங்க..

எந்தக் கோவத்தையும் அப்பவே விட்டுடுங்க.. சொல்ல வேண்டியதை சரியா சொன்னா மற்றும்புரிய வைச்சா போதும். உங்க கோவம் அவங்களை யோசிக்க வைக்கணும். காயப்படுத்தக் கூடாது. உதவி தேவைன்னா கேளுங்க.. எல்லாரும் உதவ தயார்தான் . அது நீங்க எப்படி காரியம் சாதிச்சுக்கிறீங்கங்கறது முக்கியம். எதையும் அவரிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்ங்க.. பணத்தை மாதாந்திர செலவுகளுக்கு பட்ஜெட் போடுவதிலிருந்து பங்குச் சந்தையில் சேமிப்பது வரை.. அவரிடம் கேக்காம சீட்டு கட்டி பின்னாடி ஏமாந்து போறதை எல்லாம் இது தவிர்க்கும்.. ,

மனைவி என்பவள் இன்னொரு அம்மா மாதிரி.. எனவே உங்க கணவரை குழந்தையாக்கும் சாமர்த்தியம் உங்க அணுகுமுறையில்தான் இருக்கு.

இனி கணவர்களுக்கு .. அதே கேள்விகள்தான் .. நீங்க உங்க மனைவியை நேசிக்கிறீங்களா.. எப்ப பார்த்தாலும் அடுத்த பெண்களோட சமையல்., பழகும் முறைகள்ல கம்பேர் பண்ணிகிட்டே இருக்கீங்களா.. அவங்க ரொம்ப செலவு பண்றாங்க.. அல்லது உங்கள கட்டுப்படுத்துறாங்கன்னு நினைக்கிறீங்களா.. முதல்ல உங்க செலவுக் கணக்கை எழுதிப் பாருங்க.. உங்க தனியாளுக்கு செலவழிக்கிறத விட மொத்தக் குடும்பச் செலவும் ஆகாது..

டாஸ்மாக்கு , சிகரெட்டுன்னு எத்தனை எத்தனை பழகி வைச்சிருக்கீங்க.. ஹையர் லெவல் மக்களிடம் இதுக்கான செலவு ரொம்ப பாதிக்கிறது இல்லைன்னாலும் மிடில் க்ளாஸ் லெவல்ல இது கடுமையான பாதிப்பு ஏற்படுத்துது. அப்புறம் குடிச்சா உங்களுக்கு எல்லாம் பேச தைர்யம் வந்த மாதிரி நினைச்சது நினைக்காதது எல்லாம் சொல்லி வீட்டுல சண்டை போடுறீங்க.. சிலர் அடிக்கக் கூட செய்வாங்க.. இது குடும்ப வன்முறைன்னு உங்க மனைவி கோர்ட்டுக்கு போனா என்ன ஆகும். சிலர் வார்த்தைகளால துன்புறுத்துவாங்க. இன்னும் அப்பர் க்ளாஸ் ஆண்கள் நீ சொல்றத சொல்லு நான் செய்யிறத செய்றேன்னு செய்துகிட்டு இருப்பாங்க.

அப்புறம் உங்க வரவு செலவு சேமிப்பு எல்லாம் மனைவிக்கும் சொல்லுங்க. மனைவியிடமும் நல்ல ஆலோசனைகள் கிடைக்கலாம். எதையும் மனைவியை கலந்துகிட்டே செய்ங்க.. வங்கியில் உங்க இருவருக்கும் ஜாயிண்ட் அக்கவுண்ட் இருந்தா ரொம்ப நல்லது. மனைவியின் உறவினர்கள்.,மனைவியின் ஆசைகள்., எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அங்கீகரியுங்கள். வாழ்க்கையை ரொம்ப இனிக்க செய்யும் மந்திரம் இது.உங்ககூட வாழ வந்த பெண்ணை பிட்டர் ஹாஃபா ஆக்குறதும் , பெட்டர் ஹாஃபா ஆக்குறதும் உங்க கையிலதான் இருக்கு.

லீவு நாட்களில் மனைவி மட்டுமே வேலை செய்ய நீங்க டிவி., பேப்பர்., சினிமான்னு போகாம அவங்களுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்ங்க. அப்புறம் அவங்களையும் வாரம் ஒருநாள் வெளியே கூட்டிகிட்டு போங்க. வெளிநாடுகளில் இதனால விவாகரத்துகள் அதிகம். மனைவியோடு சேர்ந்து இருக்கும் நேரங்களிலும் அலுவலக போன்கால்கள்., பிசினஸ் மீட்டிங்குகள்., உத்யோக பிரச்சனைகளை பேசிக்கிட்டு இருக்காம கொஞ்சம் உங்க ரெண்டு பேரைப் பத்தி மட்டுமே பேசுங்க.. ஒரு வாழ்நாள் பூரா போதாதுங்க ஒருத்தர் தன் மனைவியை புரிந்து கொள்ள.. இன்னும் நிறைய சொல்லலாம். இப்போதைக்கு இது போதும்.

 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்க.. உங்க அம்மா எப்பவுமே உங்க கூட இருக்க முடியாது என்பதால் கடவுள் மனைவியை கொடுத்திருக்கிறார்.. அந்த தேவதையோடு மட்டும் சந்தோஷமா வாழுங்க.. ****************************************************************************************

ஆர்த்தி மங்களா.. இவர் யாருன்னு கேக்குறீங்களா.. ஆறு வயசிலேயே ஆப்ரா கா டாப்ரா/ ஜீபூம்பான்னு சொல்லி மாஜிக் செய்து எல்லாரையும் அசத்துனவங்க இவங்க. . இந்த 19 வயது தஞ்சாவூர் பொண்ணு இப்போ மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் விஸ்காம் படிக்கிறாங்க.

எல்லாரும்தான் மேஜிக் பண்றாங்க .. இவங்க கிட்ட என்ன ஸ்பெஷல்னு கேக்குறீங்களா.. இவங்க அறிவியல் சம்பந்தமான மாஜிக் மற்றும் சமூக விழிப்புணர்வு மாஜிக் செய்றாங்க. சிகரெட்டின் தீமையை விளக்க ஒரு ப்ளாக் பாக்ஸில் சிகரெட்டை வைச்சு இதை விட்டு விலகி வரணும் அல்லது இதை விரட்டி விடணும். என்று சொல்லி சிகரெட்டை காண்பித்து மறைக்கும் மாஜிக்கை செய்வாராம்.

ராஜா., ராமசந்திரன்., கணேஷ் ஆகிய மாஜிக் நிபுணர்களிடம் கற்றுக் கொண்ட இவர் நிகழ்ச்சியைப் பார்த்து நையாண்டி தர்பாரிலும் யூகி சேது இவரை அழைத்து பங்கு பெறச் செய்தாராம். சினிமா மூலமும் மக்கள் கிட்ட மாஜிக் என்பது கண்கட்டு வித்தை இல்லை என சொல்ல விரும்புவதால் விஸ்காமில் டைரக்‌ஷன் கோர்ஸ் படிக்கிறார். பெண்களால் எல்லாம் செய்யமுடியாதுன்னு சொல்லப்பட்ட இந்த மாஜிக்கை வெற்றிகரமா செய்துகிட்டு வர்றாங்க.  ஆர்வத்தோடு இருக்குற  நிறைய திறமையுள்ள புதுமுகநடிகர்., நடிகைகளை வைத்து ஒரு திரைப்படம் இயக்க நினைக்கிறார்.

இவங்களும் இனி தன்னோட கருத்துக்களை, எண்ணங்களை எழுத்து வடிவில் இன் அண்ட் அவுட் சென்னையில் உங்களோட அடுத்த அடுத்த இதழ்களிலும் பகிர்ந்துக்க வர்றாங்க.. ரெடியா இருங்க.. ஆப்ராகா டாப்ரா..!!!

டிஸ்கி:- இந்தக் கட்டுரை டிசம்பர் 15 - 31, 2011 இன்  அண்ட் அவுட் சென்னையில் வெளிவந்தது. 


திங்கள், 21 மே, 2012

மின்சார சிக்கனம். தேவை இக்கணம்..( இன்& அவுட் சென்னைக் கட்டுரைகள் --2)

ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாட்டை அலுக்காம சலிக்காம லட்சக்கணக்கா கேட்டுக்கிட்டு இருக்கிற இளைஞர்களுக்கு தெரியுமா கூடங்குளம் பிரச்சனை.. மின்சாரம் எப்பிடி எல்லாம் நமக்கு கிடைக்குதுன்னு.. அனல் மின்சாரம், நீர் மின்சாரம்., அணு உலை மூலம் கிடைக்கும் மின்சாரம். எல்லாம் எவ்வளவு பயன் தருது.. இதனோட நன்மை தீமை என்னன்னு..

அனல் மின்சாரம் நிலக்கரியிலும்., நீர் மின்சாரம் அணைகளில் இருந்தும்., அணு மின்சாரம் அணுவை பிளப்பது மற்றும் இணைப்பது மூலம் கிடைக்குது. இதில் நீர் மின்சாரமும்., அனல் மின்சாரமும் அதிகளவில் சேமிக்கப்பட முடிவதில்லை. அதிக அளவு பயனுக்காக அணு மின்சார உலைகள் அமைக்கப்படுது.. ஆனால் இதன் கழிவுகள் அச்சமூட்டுபவையாக உள்ளன. பல லட்சக்கணக்கான ஆண்டுகள் இதன் கழிவுகளை பராமரிக்கணும். இதன் செலவு மின்சார உற்பத்தி செலவை விட அதிகம்..இதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் இன்றைய தேவைக்கு அவசியம் என்றாலும் பலர் வாழ்வில் உலை வைக்கும் இந்த உலை தேவையா என பார்ப்போம்.

இந்த அணு உலை அமைக்கப்படுவதை பலர் எதிர்க்கிறார்கள். அதன் காரணங்கள் சுனாமி போன்ற அழிவுகள்., இயற்கை சீற்றங்களான பூகம்பம் போன்றவற்றாலும் அணு உலையில் மிச்சமிருக்கும் அணுக் கழிவுகளால் மிகப்பெரும் ஆபத்து நிகழக்கூடிய சாத்தியங்கள் இருக்கு. இது அமைக்கப்படும் முன்பே பல முறை யோசிக்கப்பட்டு இருக்க வேண்டும். இப்போது முடியும் தருவாயில் பெரும் பணத்தைக் கொட்டி அமைக்கப்பட்ட அணு உலை அந்தப் பகுதி மக்களுக்கு அச்சமூட்டுவதாயிருக்கிறது. எந்த திட்டமும் மக்கள் வாழும் பகுதிகளில் அரசாங்கத்தால் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாகக் கூறி ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கு தனியார் முதலாளிகளும்., அரசாங்கமும் வேறு அல்ல. ஆனால் அதன்படி வழங்கப்படுவதுமில்லை. அவங்க இடம்., வாழ்வாதாரம் எல்லாம் பறிபோய் விடுகிறது. நர்மதா அணைத்திட்டமும் இப்படித்தான் மேதா பட்கரின் பெரும் போராட்டத்தால் தடுக்கப்பட்டது.

நம் நாடு தொழில் துறையில் முன்னேற வேண்டுமென்றால் இந்த பவர் ப்ராஜெக்டுகள் எல்லாம் அவசியம் என்று ஒருகருத்து இருக்கு. ஆனா இந்த மாதிரி மக்களின் பயத்தின் மேல் அமைக்கப்படுவது தேவையா என்ற கேள்வியும் இருக்கு.வெளிநாடுகளில் பல அணு உலைகள் இருக்கின்றன. இந்தியாவில் இருப்பது 6 மட்டுமே என ஒரு சாரார் கூறும் போது இல்லை வெளிநாடுகளில் இருக்கும் சிலவும் மூடப்பட்டு வருகின்றன. என இன்னொரு சாரார் சொல்கின்றார்கள்.. இந்த சமயத்தில் நாம் ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு விபத்தையும்., போபாலில் நடந்த விஷவாயுக் கசிவையும்., செர்னோஃபில்லில் நடந்த அணு உலை விபத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். இதில் எத்தனை எத்தனை அப்பாவி உயிர்கள் எந்த விபரமும் தெரியாமல் மாண்டன என்று.

யாருக்கோ எங்கோ நடப்பதுதானே என நீங்க பாட்டுக்கு ஹெட்போனில் பாட்டு கேட்டுகிட்டு போகலாம்.. ஆனால் அது உங்களையே தாக்கினா அதன் பதில் என்ன சொல்லுங்க.. உங்களால முடிஞ்ச அளவு மின்சார உபயோகத்தை குறைக்கவாவது செய்ங்க. வீட்டில் இருக்கும் மின் பொருட்களை பட்டியலிடுங்கள். டி. வி., ஃப்ரிட்ஜ்., வாஷிங் மெஷின்., சி டி ப்ளேயர்., எம் பி 3., கம்ப்யூட்டர்., லாப்டாப்., ஏ சி., ரைஸ் குக்கர்., மைக்ரோவேவ் அடுப்பு., இண்டக்‌ஷன் அடுப்பு., மிக்ஸி., க்ரைண்டர்., ஜூசர்., காஃபி மேக்கர்., ட்ரெட் மில்., வாட்டர் ப்யூரிஃபையர், வாட்டர் ஹீட்டர் ..வாட்டர் மோட்டார்., இது போல எத்தனை லைட்டுகள்., ஃபான்கள் பத்தாததுக்கு பாட்டரி சார்ஜுடு வெஹிக்கிள்ஸ் வேற உபயோகிக்கிறீங்க நீங்க..

இது போல எல்லா அலுவலகங்களிலும்., கடைகளிலும் ஏசி யின் பயன்பாடு அதிகரிச்சுகிட்டு இருக்கு.. இத்தனை மின் பொருட்களை உபயோகிச்சுகிட்டு நாம க்ளோபல் வார்மிங்கை அதிகப்படுத்திக் கிட்டு இருக்கோம்.. இயற்கையை சிதைச்சுகிட்டு இருக்கோம். இதை எல்லாம் நாம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் நம் சந்ததியினருக்கும் வெறும் நிலத்தைக் கூட விட்டு வைப்போமா தெரியாது.

பெரிய தொழிற்சாலைகளிலும்., வணிக வளாகங்களிலும்., கல்லூரி விடுதிகளிலும்., அரசு அலுவலகங்களிலும் சோலார் எனர்ஜி பயன்படுத்தப்படவேண்டும். அதை சேமிக்கும் வழி முறைகளையும் அதிகப்படுத்த வேண்டும். சோலார் குக்கர்கள்., சோலார் வாட்டர் ஹீட்டர்கள் பயன்படுத்தலாம். சாதாரண க்ளைமேட் உள்ள நம் நாட்டில் ஏசி யின் பயன் பாடு குறைக்கப்பட வேண்டும். இயற்கை காற்றையும் அனுபவியுங்கள்.. தேவையற்ற இடங்களில் லிஃப்டை உபயோகிக்காம படியை உபயோகியுங்க. தேவையற்று ஓடும் லைட் ஃபான்களை அந்த ரூமை விட்டு வெளியே வரும்போது அணைத்து விடுங்கள். தேவையின் பொருட்டே மின் சாதனங்களை சிக்கனமாக உபயோகியுங்கள்..

தெருக்களில் காலை முதல் மாலை வரையும் கூட தெரு விளக்குகள் அநாவசியமாக சில சமயம் எரிவதைப் பார்க்கலாம். இந்த மாதிரி அநாவசியமான மின்சார உபயோகம் பார்த்து சரிசெய்யப்பட வேண்டும், ஒலி பெருக்கிகள்., கூட்டங்களில் கண்ணைப் பறிக்கும் விளக்குகள் எல்லாம் கூட தவிர்க்கப்படலாம்.

ஒரு பிரஜையா சக பிரஜைகளுக்கு நீங்க செய்யக்கூடிய உதவி என்னன்னா அவங்க துன்பத்துல பங்கெடுத்து ஆறுதல் அளிப்பதுதான். அதுக்கு முதல் கடமையா இன்னிலேருந்து மின்சாரத்தை அளவோடு பயன்படுத்துவோம்னு உறுதி எடுத்துக்குங்க..

 டிஸ்கி:- இந்தக் கட்டுரை இன்  அண்ட் அவுட் சென்னை டிசம்பர் 1-15 2011 இதழில் வெளிவந்தது.

சனி, 19 மே, 2012

அளவோடு நட்பு ( இன் & அவுட் சென்னைக் கட்டுரை -- 1)

இன்னிக்கு இருக்குற டீனேஜ் பசங்களுக்கு உள்ள பிரச்சனை என்னன்னா நல்ல படிக்கணும்., நல்ல வேலைக்குப் போகணும்., நல்லா கை நிறைய சம்பாதிச்சு கேள்வி கேப்பாரில்லாம என் ஜாய் பண்ணனும். அப்பிடித்தானே நினைப்பீங்க.. இது எல்லாத்தையும் தாண்டி ஒவ்வொரு பதின்பருவ ஆணுக்கும் உள்ள ஆசை என்னன்னா., “ பால்போலே பதினாறு . எனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் வேணுமடா” என்று சங்கரின் படப்பாடல் போல ஒரு தோழிதான். பதின் பருவத்துல இல்லாட்டியும் தன்னைப் புரிஞ்சி ஊக்கம் கொடுக்குற எல்லாப்பெண்ணையும் தோழியா நினைக்கிறாங்க.. அவங்க பதின்பருவப் பெண்ணா இருந்துட்டா ரொம்பவே சந்தோஷம்தான். அவங்களோட பைக்கில ஊர் சுத்தணும். என் கேர்ள் ஃப்ரெண்ட் என நண்பர்களுக்கு காட்டணும். அப்போ அப்போ அவகிட்ட இருந்து போன் கால் வரணும். அத கெத்தா நண்பர்கள் கிட்ட காமிச்சிகிட்டு போய் தனியா பேசணும் அவங்களுக்கு.

 பெண்களைப் பொறுத்தவரை பெண்களுக்கு அவங்களைப் பாராட்டுற எல்லாரையும் பிடிக்கும். ஆனா அந்தப் பாராட்டு உண்மைக்கு மிக நெருக்கமா இருக்கணும். பொய் சொல்லும் எந்த ஆணையும் பெண்ணுக்குப் பிடிக்கவே பிடிக்காது.

அடலஸண்ட் ஆண் அல்லது பெண் மனதில் ஏற்படும் கன்றுக்குட்டிக் காதல்., அல்லது இன்ஃபாச்சுவேஷன்., எதிர்பாலினக் கவர்ச்சி என்பது ஒரு காலகட்டம் வரை அவங்களை ஆட்சி செய்யுது. அதன்பிறகு அவங்க மெச்சூர்டா ஆகும்போது நல்லது கெட்டது., தேவையானது., தேவையில்லாதது புரியுது அந்த இனம் காணும் காலகட்டம் வரை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் பலவித குழப்பங்களில் ஆழ்கிறார்கள். நம் தோழி அல்லது தோழனுக்குப் பிடிக்குமோ இல்லையோ என பலதும் செய்வார்கள்.

எப்போது பார்த்தாலும் செல்போனில் மெசேஜ்., தூங்கினியா., சாப்பிட்டியா., குளிச்சியான்னு ஒரே அரட்டைதான். நடுராத்திரி அப்பா அம்மாவுக்குத் தெரியாம போர்வைக்குள்ள ஒளிச்சி வைச்சி கூட மெசேஜ் பண்ணிகிட்டு இருப்பாங்க. இதெல்லாம் ஒரு வயசு வரைக்கும்தான்னு நீங்க நினைச்சா தப்பு., அது சில கேஸ்ல இருவருக்கும் திருமணம் ஆகும் காலம் வரை கூட அதுக்குப் பின்னேயும் கூட தொடரும். இப்பதான் பிரச்சனையே ஆரம்பிக்குது. ஏன்னா எப்ப ஒரு உறவுல இரண்டுக்கு மேற்பட்டவங்க இருக்காங்களோ அப்பவெல்லாம் பிரச்சனைதான். அதுனால எந்த நட்புலயும் அளவோடு மெயிண்டெயின் பண்ணுறது நல்லது.

இதுவுமில்லாம பொஸஸிவ்னெஸ் ஒரு காரணம். என்னோடதுன்னு அந்த உறவுல இறுக்கிப் பிடிச்சீங்கன்னா உறவுநொறுங்கிப் போயிரும். மேலும் வேலையில் இருக்கும் சிலர் இருவர் வீட்டுக்கும் தெரியாம மணமாகும்வரை சேர்ந்து வாழ்வோம் என முடிவெடுத்து ஒண்ணா தங்குறது இதெல்லாம் தவறான முடிவுகள். நம் கலாசாரம் என்று ஒன்று உண்டு. அதுக்குன்னு சில பாரம்பர்யங்கள் உண்டு. அப்பா அம்மா சம்மதத்தோடு சேர்ந்து வாழணும் . இல்லாட்டா நல்ல நண்பர்களாகவே பிரிந்துவிடணும். யாரும் யார் வாழ்விலும் ஆக்கிரமிப்பு செய்து., பின் அவர்களைப் பிடிக்கவில்லை என்னும்போது கொலை செய்தல் அல்லது திருமணத்துக்குப் பின் கட்டிய வாழ்க்கைத் துணையை கொலை செய்தல் என விபரீதமான போக்குகளில் இறங்கி விடுகிறார்கள்.

எண்ணங்களைக் கட்டுப் படுத்தி வாழ்தல்., ஒழுக்கம்., நேர்மை., உறவுகளை நல்ல முறையில் கையாளுதல் போன்றவை முக்கியம். காதல்., இன்ஃபாச்சுவேஷன்., சுயநலம் மட்டுமே வாழ்க்கையல்ல. விட்டுக்கொடுத்தலும்., புரிந்துணர்வும்., கொண்ட நட்பே என்றும் ஜெயிக்கும். தேவைப்பட்டால் நம் தனிப்பட்ட வாழ்வு இனிமையாக நட்பைக்கூட ( நட்பு கொண்டோரிடம் புரிய வைத்து ) விட்டுக் கொடுக்கலாம்.

வெள்ளி, 18 மே, 2012

மைதானமும் மரமும்..

மைதானம் பொது..
மரமும் பொது..
பலநாளாய்ப் பழக்கம் மைதானத்தோடு.
கால் முளைத்ததிலிருந்து
களமேடை அதுதான்.
விளையாட்டு என்று
வெய்யிலை, மழையை
குளிரைப் பனியைச்
சேர்ந்து சுவைத்திருக்கிறேன் அதனோடு.
விருட்சங்கள் தோறும் ஊஞ்சலாடி
ஊக்க விதைகளை
வாதுமைக் கொட்டைகளைப் போல
உடைத்துத் தின்றதும் அங்குதான்.
பலாவாய் இனிக்கும்
பல மரங்கள்..
இருந்ததும் போனதும்
உறுத்தவோ வலிக்கவோ இல்லை.
இந்த மரத்துக்கும்
எனது வயதிருக்கலாம்..
பூவாய்க் காயாக் கனியாக் கிடந்து
விழுதுகளோடு உருப்பெற்று
விருட்சமாய் பிரம்மாண்டமாய்
பரிமாணித்திருந்தது.
முன்னொருமுறை ஒருத்தி
உரிமைப்படுத்த முயன்றபோது
விரட்டியடித்து விருட்சத்தைத்
தக்கவைத்துக் கொண்டது மைதானம்
தனக்கேயான சொத்தாய்
வளர்ச்சிப் பரிமாணத்தில்
விழுதுகள் வெவ்வேறு திசைகளில்
துளிர்விட்டு வேறூன்ற ஆரம்பித்தன....
பரிணாமத்தின் திசையில்
இடம்பெயர வேண்டிய
கட்டாயம் வந்தது மரத்துக்கு.
நேற்றுவரை மரம் இருந்த இடத்தில்
இன்று மைதானத்தின்
ஈரமண்ணின் நிணமும்
விருட்சத்தின் சல்லிவேர்களும்
பால்துளிகளாய் சிதறிக்கிடந்த
பச்சைக் கவிச்சி வாசமும்
கலந்து கலங்க வைத்தன..
வேறு இடத்தில்
வேரூன்றி இருக்கலாம் மரமும்..
மறந்து விடலாம்
 பலகனிகளோடு குலுங்கும் மைதானமும்..
மைதானங்கள் அங்கேயே இருக்கின்றன.
இடப்பெயர்ச்சி அடையாமல்.,
நிலையாமைத் தத்துவத்தை விளக்கி
அகண்டு கிடந்த பள்ளம்
விளக்கமுடியாத கருந்துளையாய்ப்
படுத்திக் கொண்டே இருக்கிறது
வளர்ந்து விட்ட என்னை இன்னும்..

வியாழன், 17 மே, 2012

பொய்சாட்சி...

வெட்டப்பட்ட முடியையும்
நகத்தையும்
வேறொரு பெயர் சொல்லிப்
புதைக்கிறேன்.
தீர்ப்பு நாளில்
சாட்சி சொல்லக்கூடுமோவென்ற
பயத்தோடு.

அவையும்
நடுக்கத்தோடு கிடக்கின்றன
பெயர் மாற்றக் குழப்பத்திலும்.
கடவுள் முன்
பொய் சாட்சி சொல்வதற்கும்.

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011, அக்டோபர் முதல் வார உயிரோசையில் வெளிவந்தது. 


புதன், 16 மே, 2012

காபந்து..

ஒரு பொருளைப்
போர்த்தி வைப்பது
தூசியாவதில் இருந்து
காப்பாற்றுகிறது.
தூசி அடைவதில்
அதற்கு மெத்த மகிழ்ச்சி
என எண்ணி
காபந்து பண்ணுகிறோம் அதை.
அதால் சுவாசிக்க
முடியாத அளவு
முடிச்சை இறுக்கிக் கட்டுகிறோம்.
அது பேசாமல்
இருப்பதைப் பார்த்து
வீட்டிலிருக்கும் அனைத்தையும்
போர்த்தத் துவங்குகிறோம்.
அவற்றுக்குக் குளிர்வது போலும்
போர்வை கேட்டது போலும்.
கட்டுப்பாட்டில் இருக்கும்
எல்லாவற்றையும் போர்த்தியதும்
நிம்மதியாகிறோம்.
உறைகளின் மேலும்
தூசி படிகிறது. ,
காற்றின் போக்குவரத்தினால்.
ஜன்னல்களையும், கதவுகளையும்
திரைச்சீலைகளால் சாத்துகிறோம்.,
மழை., மின்னல்., குளிர்ச்சி
என்னவென தெரியாது.
புகை வெளியேறா
கணப்பே உயர்வென்று
புகைபோக்கிக்கும்
மின்சாரமூடி அணிவிக்கிறோம்.
அந்துருண்டையாய்
கற்பூரமாய்
கட்டிவைக்கப்பட்டது
காற்றான பின்னும்
போர்த்தப்பட்டவைகளுக்குக்
காவலிருக்கிறோம்.

 டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 செப். மூன்றாம் வார உயிரோசையில் வெளிவந்தது.


திங்கள், 14 மே, 2012

பின் சுழற்சி..

பின் சுழற்சி:-
***************
ஆட்டோக்காரர்
வண்டி விட்டிறங்கி
இளநி அருந்தி
களைப்புத்தீர்கிறார்.
இளநி வெட்டியவர்
அரிவாளைப் போட்டுவிட்டு
பக்கத்து மாவுக்கடை
பெஞ்சில் அமர்கிறார்.
மாவுக்கடைக்காரர்
ஆட்கள் இல்லாததால்
மல்லிகைப்பூக்காரரின்
ஸ்டூலில் அமர்கிறார்.
மல்லிகைப்பூக்காரர்
வாடிக்கையாளரற்ற
வெய்யில் நேரத்தில்
ஆட்டோவில் அமர்ந்து
ஹாரனை அமுக்குகிறார்..
நான்கு வெய்யில்கள்
ஒருசேரக் கடக்கும்போது
மருந்துக் கடைக்காரர்
ஆட்டோவில் சரக்கு
ஏற்றுகிறார்..
ஐந்தாவது வெய்யிலைச்
சுமந்தபடி ஆட்டோ
நகரும்போது
இருக்கைகளின்
பின் சுழற்சியில்
கசிந்து வெளியேறுகிறது
வெப்பமும் களைப்பும்.

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011, செப்டம்பர் முதல் வார  உயிரோசையில் வெளிவந்தது.


சனி, 12 மே, 2012

பயணம்..

பயணம்;-
***********
தன்னைத் தானாய்
புதுப்பிக்க நேர்ந்தது.

நானும் அவளும்
பயணத்தில் இருந்தோம்.

தோணிகள் வெவ்வேறு.
ராமன்கள் கூட..

ஒரு நினைவுறுத்தலைக்
கற்பித்துக் கொண்டிருந்தது

அந்த ஆறு அதற்கும்
இரு கரைகளென.

தானாய் எப்படி இருப்பதென.
தவம் கலைத்து பெருகுவதென.

மூடிக்கிடந்ததை கரை தள்ளுவதென.
முக்காடுகளை தூக்கிப் போடுவதென.

குறுக்கே கடக்கிறோமா
சங்கமத்துக்கு செல்கிறோமா

நினைவற்றுப் பயணித்துக்
கொண்டிருந்தோம்.

ராமன் ராமனாய் இருப்பதன்
துயரத்தைப் பேசினான்.

சீதையாய் இருப்பதன் துயரம்
தெரிவிக்கப்படவேயில்லை.

மௌனமாய்க் கடந்தோம்
இருவரும் அருகருகாய்.

சுழலுக்காய் திருப்பத்தில்
காத்திருந்தோம்.

கவிழ்ந்தவுடன் நீந்தத்
தொடங்கினோம் தளைகள் விட்டு.

தேடிக்கொண்டே இருந்தான் ராமன்
மாரீச மானிலும் பொன் சிற்பத்திலும்.

டிஸ்கி :- இந்தக் கவிதை ஆகஸ்ட் 29,2011 உயிரோசையில் வெளிவந்தது.


வெள்ளி, 11 மே, 2012

”ஷில்ப விகாஸா..”. HUES OF HEART STUDIO.






HUES OF HEART ஸ்டூடியோவில் ஏப்ரல் 28, 2012  அன்று  அங்கு பயின்ற 12 குழந்தைகளின் ஆர்ட் ஷோ நடக்க விருப்பதாக என் தோழி மீனாக்ஷி மதன் அழைப்பு விடுத்திருந்தார்.

எனக்கு மீனாக்ஷியின் தொடர் முயற்சிகளும் , அழகான ஓவியங்களும் பிடிக்கும். இயங்கிக் கொண்டே இருக்கும் உயிர் ஓவியம் அவர். அவரிடம் பயின்ற குழந்தைகள் அங்கே "எங்க மீனாக்ஷி மிஸ்" அன்புடன் என்று விளித்து விளித்து மீடியாக்காரர்களிடம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்கள். விதம் விதமான ஓவியங்களுக்குள் குட்டிக் குட்டியாய்ப் பெண்ணோவியங்களும் அவர்களை ஊக்குவித்த அவர்களின் தாய் ஓவியங்களும் பார்க்க கண் கொள்ளாக் காட்சி.

அற்புதமான ஓவியங்கள். அக்ரிலிக், போஸ்டல் கலர், ஸ்கெட்சஸ் என்று. அதில் கணபதியும், ஒற்றைக் கண் மூடிய ஆந்தையும், சிப்பியால் உருவான மீனும், மெத்தையில் அமர்ந்து அளவளாவும் ராஜா ராணிக் கிளிகளும் ( க்ரீடம் அணிந்திருந்தன !) மற்ற எல்லாமுமே.  அழகும் கலைநயமும் பொலிய இருந்தன.

குழந்தைகள் பொழுது போக்கக் கற்பவை பல உண்டு எனினும். அதையும் ஊக்கத்தோடு கற்று தன்னுடைய ஆசிரியைக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். நட்புக்கு இலக்கணம் நண்பர் “ பார்த்திபன்” என சொல்லலாம் . எளிமையான தன்மையான மனிதர். அன்று சிறப்பு விருந்தினர்களாக பார்த்திபன் அவர்களும், எஸ். வி சேகர் அவர்களும் வந்து குத்து விளக்கேற்றித் துவங்கி வைத்தார்கள். மக்கள் குரல், குறள் டிவி என்று சுற்றிலும் மீடியா கவரேஜ். ஒரு ஓவிய வகுப்பில் இவ்வாறு நடைபெறுவது எனக்குப் புதிதாக இருந்தது.

பூக்களை வரையும் வனிதை மீனாக்ஷி மதன் பூக்களைப் போன்ற பெண் குழந்தைகளின் இதயத்திலும் தன் அன்பை ஓவியமாக வரைந்திருந்தது அழகு. இன்னும் கலையார்வம் பெருகி அந்தக் குழந்தைகள் மிகப் பெரும் விருதுகள் பெறட்டும், தங்கள் ஆசிரியைக்கு சிறப்பு சேர்க்கட்டும்  என வாழ்த்துகிறேன்.

வியாழன், 10 மே, 2012

நவீன் KBB யின் நெல்லை சந்திப்பு...shoot at sight.

 சகோதரர் நவீன் கேபிபியின் நெல்லை சந்திப்பு ஆடியோ ரிலீஸ் மற்றும் ட்ரெயிலருக்கான அழைப்பு வந்திருந்தது முகநூலில். அவர் இந்த நிகழ்வை நிகழ்த்தும் முன்பே நாங்கள் அவரின் இந்தப் பாடலுக்கு அடிமை ஆகி விட்டோம்.. மிக இனிமையான பாடல். இதுதானே எங்கள் வீடு.. சந்தோஷம் பொங்கும் கூடு, தாய்தந்தை அன்பில் வாழும் ஜீவன் நாங்களே..

http://www.youtube.com/watch?v=UcM5qgRNyfU&feature=share
 
அந்த ஆடியோ லாஞ்சுக்கு நான் அன்று சாஸ்த்ரிபவனில் எனக்களிக்கப்பட்ட மதர் தெரசா அவார்டுடன் ( அடையார் கான்சர் இன்ஸ்டிடியூட் டாக்டர் சாந்தாம்மா, என் அன்புத் தோழி ஏஜிஸ் ஆடிட்டில் பணிபுரியும் விஜயலெக்ஷ்மி ஜெயவேலு , மற்றும் சிலருக்கும் பெண்கள் சங்கத்தலைவி மணிமேகலையால் வழங்கப்பட்டது ..). ப்ரசாத் லேப் சென்றடைந்தேன். எங்கே ஆடியோ ரிலீஸ் முடிந்து விட்டதோ என கவலைப்பட்டபடி. ஆனால் அங்கே தேர்த் திருவிழாக்கூட்டம். உள்ளே ப்ரிவியூ தியேட்டரும் நிரம்பி வெளியிலும் 200 பேர் நின்றிருக்க , அதிர்ஷ்ட வசமாக எனக்கு ஒரு சீட் கிடைத்தது. உள்ளேயும் அந்தக்கால த்யேட்டர்கள் மாதிரி எல்லா பக்கங்களிலும் பார்வையாளர்கள் நின்று கொண்டே பங்கேற்றார்கள்.

மேடையிலும் நல்ல ஸ்ட்ரென்த்.. நவீன் மற்றும் திருமலை .. மனிதர்களைச் சேர்த்திருக்கிறீர்கள். நல்ல மனிதர்களை மற்றும் அவர்கள் அனைவரின் அன்பையும்.. வாழ்த்துக்கள்..

 சென்று சேர்ந்த அவசரத்தில் சுற்றும் முற்றும் நோக்கியபோது என் நட்புக் குழாமையும் பின் வரிசை நாற்காலிகளில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். அன்பு, கயல், மரியா, செல்வா. இன்னும் பலர். ஆனால் பேச இயலவில்லை. அந்தக் கூட்டத்தைக் கண்டதும் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.  இதில் அன்பு வேறு அவசரமாய் வேர்த்து வழிய சென்ற என்னைப் பார்த்து , அக்கா மேக்கப் இல்லாமல் வந்துவிட்டீங்களா “ என கலாய்த்தார்.

அப்போது நவீன் கேபி அந்தக் கூட்டத்திலும் கண்டு வரவேற்றுக் கை கொடுத்தார். தொகுத்து வழங்கக் கேட்ட போது எனக்குத் தெரியாத சினிமா பிரபலங்கள் நிறைய பேர் இருந்ததால் கூச்சப்பட்டு மறுத்து விட்டேன். ஆனால் தொகுத்து வழங்கிய நபர் அருமையாக ஒவ்வொருவர் பற்றிய தகவல்களையும் சிறப்பாகக் கூறினார்.

டி கிரியேஷன்ஸ் , திருமலையின் தயாரிப்பு. இணை தயாரிப்பு எஸ் . வெங்கடேசன், கதை திரைக்கதை இயக்கம் - நவீன் கேபிபி, இன்னும் சேவிலோ ராஜா, யுகேந்திரன் வாசுதேவன், சலீம், வெங்கல் ரவி, ஸ்பீட் சையத், பிரபாகரன், மூர்த்தி, மோதிலால், விஜயமுரளி,குமார், முருகன், விமல் ஆகியோரும் பங்களிப்பு செய்துள்ளார்கள். இதில் கே. ஜி. கன்னியப்பன் என்ற முகநூல் நண்பரும் ( வசனம்) பங்களிப்பு செய்துள்ளார்.

கிட்டத்தட்ட 7 1/2 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சியில் முதலில் ட்ரெயிலர் லாஞ்ச் செய்யப்பட்டது. மிக அழகான காட்சியமைப்புகள். உயர்தர தொழில் நுட்பம்,  இயல்பான வசனங்கள், சரளமான காட்சிகள் என்று சென்று கொண்டிருந்த ட்ரெயிலர் முடிவில் அதிரடியான காட்சிகளோடு பரபரப்பாகவும் அற்புதமாகவும்  இருந்தது. 

அன்று திரு ராம சுப்பு அவர்களுக்குப் பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டப்பட்டது. நடிகர் ஷாம் இன்னும் பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்கள். எல்லாரின் அன்பையும் ஆசீர்வாத்தையும் காண முடிந்தது. அதில் அம்மாவாக நடித்த மீரா அப்போதுதான் வந்தார்.கிட்டத்தட்ட 8 1/2 மணியாகிவிட்டதால் கொஞ்சம் வேலைகள் காரணமாகக் கிளம்ப வேண்டியதாகி விட்டது.

கிளம்பும் நேரம் ஆடியோ ரிலீஸ் நல்லவிதமாக நடந்தது. அந்தப் பாடல் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது . இயக்குநர் விக்கிரமன் பேசும்போது தன் சொந்த ஊர் நெல்லை பற்றிய மனம் நெகிழ்ந்த குறிப்புக்களைக் கூறி படம் பற்றிய தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இரு வேறு விதமான அதிர்வுகளைக் கொண்டதாக  அதை அழகாக இணைத்துள்ளதாக அந்தப் படத்தின் ட்ரெயிலர் பற்றிக் குறிப்பிட்டார். மொத்தத்தில் அற்புதமான நிகழ்வு. கலந்து கொள்ள அழைத்தமைக்கு நன்றி நவீன் கேபிபி. திருமலை , நீங்கள், மற்றும் உங்கள் குழாமின் ஒட்டுமொத்த முயற்சியில் வெளியாக உள்ள நெல்லை சந்திப்பு மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

டிஸ்கி:- முதன் முதலாக ஒரு படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் ட்ரெயிலர் லாஞ்சுக்காக என்னுடைய வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒரு இணையப் பதிவு இது

புதன், 9 மே, 2012

சுமந்தவள்..

சுமந்தவள்:-
************

அவள் கண்கலங்க அமர்ந்திருந்தாள்.
என்னைப் பிரியும் துயரம்.
முன்பே பிரித்திருக்கிறாள்.
பிரித்தபின் மகிழ்ந்திருக்கிறாள்.

எனக்கும் துயரம்தான்
இருந்தும் வலைபின்னிக்
கிடக்கிறது வலியப்
பிரியவேண்டிய வேலை.

வழக்கம்போல அணைத்தாள்.
நெற்றியில் முத்தமிட்டாள்.
முதுகுச் சுமை விட
கனமாய்க் கிடந்தது அவளது அன்பு.

கடக்க நினைக்கிறேன்.
கண்ணீர் பெருகுகிறது.
உப்புமுட்டையாய் இறக்கமுடியவில்லை
வயிற்றில் சுமந்தவளின் அன்பை..

டிஸ்கி:- இந்தக் கவிதை  ஆகஸ்ட் 17,  2011 உயிரோசையில் வெளிவந்தது.


செவ்வாய், 8 மே, 2012

நம்பர் ஒன்..

நம்பர் ஒன்...:-
**************
பெட்டிகள் முடிவு செய்கின்றன..
நம்பர்களை..
பெட்டிங்குகள் தீர்மானிக்கின்றன.
காமிராக்களின் ஃப்ளாஷ்களில்
ஷாம்பெய்ன் திறப்பவரை..

சேணங்கள் மாட்டி
திப்புவின் காலத்தில்
போரிட்டவை இன்று
நாட்டியமும்., ஜட்காவும்
மூக்கணாங்கயிற்றில் மாட்டி.

சந்தையில் சுழி பல்பிடித்து
தேர்ந்து வாங்கியது
சேணம் தகர்த்து
சூறாவளிப் பாய்ச்சலில்
பணக் கொள்ளு நோக்கி..

ஆறு அமர ஆடு.,
நாலு ..நின்று ஆடு
ரெயின் ரெயின் கோ அவே
ரன் ரன் கமான்..கமான்..
அதிகப்படி பந்தயத்தில்..

விளம்பரங்களுக்காய் ஆடி
காய்த்துக் காயம்பட்டு
பாய்ச்சல் ஒடுங்கும்போது
பக்கத்துப் பலகைகளில்
தாய்தேசம் நம்பர் ஒன் ஊழல்களில்..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஆகஸ்ட் 15, 2011 உயிரோசையில் வெளிவந்தது


திங்கள், 7 மே, 2012

கிடை போடுபவன்...

கிடை போடுபவன்:-
****************************
மொழி புரியாதவனிடம்
சொல்ல வேண்டியதிருக்கிறது
குடும்பத்தைப் பிரிந்து
கிடை போடும் கதையை..

உரிமங்களைப் பதுக்கி
விற்பவனிடம் மட்டும்
விளைந்து கிடக்கிறது
பணமும் ஏராளமாய்.

மொழியறியும் தேவையற்றவன்
விளைவுகளின் தேவைக்காய்
விட்டுக் கொடுக்கிறான்
விளைச்சலுக்கான நிலத்தை.

மண்மணம் வீச கிடைபோட்டவன்
வெய்யிலிலும் மழையிலும்
காய்கிறான், மொழி விளங்காதவனின்
நிலத்தை வளப்படுத்த.

புழுக்கைகளால் நிரம்பிய மண்
செழிப்பாய் விளைந்து
பெருகும் போது சில கிடாய்களை
நரிக்குப் பறிகொடுத்துவிட்டு

சொற்ப ஜீவிதத்தோடு
நகர்கிறான்., கிடைபோடுபவன்
அடுத்த மொழி புரியாதவனின்
நிலத்தை வளப்படுத்த..

--- திரை வாய்ப்புக்காய் கதை சொல்லும் உதவி இயக்குனர்களுக்கு சமர்ப்பணம்.

டிஸ்கி.:- இந்தக் கவிதை ஆகஸ்ட் 8, 2011 உயிரோசையில் வெளிவந்தது.