செவ்வாய், 31 ஜனவரி, 2012

மீனா லெட்சுமணனின் கிராமத்துப் பொங்கல். இவள் புதியவளில்.


மீனா லெட்சுமணன் சென்னையைச் சேர்ந்தவர். ஈவண்ட் மேனேஜ்மெண்ட் செய்து வருகிறார். தன் தந்தையின் ஊரான திண்டிவனம் கிராமத்துக்கு பாட்டி வீட்டுக்குப் போனபோது கொண்டாடிய பொங்கலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.
அங்கே அடுப்பு வெட்டி பின் பொங்கல் செய்வார்களாம். இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பது இதுதானோ.. கிராமத்தில் மண் அடுப்பில் பானையில் செய்யும் பொங்கலுக்கு என தனி ருசி உண்டு.. ருசித்துப் பாருங்கள்.

வித்தியாசமான கிராமத்துப் பொங்கல்

நான் ஒரு சென்னை வாசி , சென்னைலேயே பிறந்து வளர்ந்த எனக்கு கிராமத்தில் பொங்கல் கொண்டாடினால் அது எனக்கு வித்தியாசமான புது அனுபவம் மிக்க பொங்கலாக தானே இருக்கும். குக்கர் பொங்கல் தொலைக்காட்சி நிகழ்சிகளை பார்த்து கொண்டே சாப்பிட்டு பழக்க பட்ட எனக்கு கிராமத்தில் அடுப்பு செய்து பொங்கல் பொங்கி உற்றார் உறவினரோடு சேர்ந்து சாப்பிடும் அனுபவம் வித்தியாசமான பொங்கல் கொண்டாட்டம் தானே.

வந்தவாசி பக்கத்தில் மங்களம் என்னும் ஒரு குக்கிராமம் என் தந்தையின் பிறந்த ஊர். அவர் சிறு வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டார்.என் பெற்றோர் கலப்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.என் தந்தைக்கு சென்னையிலேயே நல்ல வேலை, குடும்பம் என்று அமைந்து விட்டதால் மங்களத்தின் பக்கம் செல்லவே இல்லை , நாங்களும் கிராமத்தின் பக்கமே போகாமல் இருந்து விட்டோம் . எப்பொழுதாவுது என் தந்தையின் உடன் பிறந்தவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து செல்வார்கள் அவ்வளவே ..வேறு எந்த சொந்தங்களை பற்றியும் தெரியாது.இப்படி இருக்கையில் ஐந்து வருடத்திற்கு முன்பு அந்த கிராமத்தில் என் அன்னையார் சொல்லி தந்தை ஒரு பெரிய வீடு வாங்கினார், வாங்கிய ஒரு வருடமாக வீட்டை பூட்டியே வைத்திருந்தோம் காரணம் பெற்றோர்கள் அரசாங்க பதவியில் இருப்பவர்கள். விடுமுறை கிடைக்கவே இல்லை.2007 ஆம் வருடம் பொங்கலுக்கு ஒரு மாதம் முன்பிலிருந்தே என் தந்தையின் நெருங்கிய உறவினர்கள் பொங்கலுக்கு ஊருக்கு வருமாறு பிடிவாதத்துடன் அழைக்கத் துவங்கி விட்டனர்.சரி எங்களுக்கும் கிராமத்திற்கு போய் வரலாமே என்று தோன்றியது.பொங்கலுக்கு இரண்டு நாள் முன்னரே சென்று விட்டோம். பூட்டி இருந்த வீட்டை சுத்தம் செய்து அழகாய் வைத்து இருந்தனர் என் தந்தையின் உறவுப் பெண்கள். நாங்கள் எங்கள் புது வீட்டின் வாசலில் காரிலிருந்து இறங்கியவுடன், உறவினர்கள் அனைவரும் எங்களுக்கு ஆரத்தி எடுத்து பூசணிக் காயில் திருஷ்டி சுத்தி போட்டார்கள், எனக்கு பார்க்க ஆச்சரியமாக இருந்தது, என் பெரியப்பாவிடம் கேட்டேன் "எதற்கு இதெல்லாம் செய்கிறார்கள்" என்று கேட்டேன். "நீங்கள் எல்லாம் முதல் முதலாக இப்பொழுது தானே இந்த ஊருக்கு வருகிறீர்கள் அதானால் ஊரு கண்ணு பட கூடாது என்பதற்காக அப்படி செய்தார்கள்" என்று சொன்னார். சென்னையில் 2400 சதுரடியில் வீடு கட்டினால் கூட பார்க்க குருவி கூடு தான் அனால் அங்கே எங்களுக்கு மிக பெரிய வீடு பின்னால் வயல் வெளி, ஆள் அரவமற்ற தெரு, மிகவும் அமைதியான சூழல், இப்படி எல்லாத்தையும் நான் ரசித்து கொண்டு இருக்க என் தந்தையின் உறவினர்கள் என்னிடம் வந்து "எப்பிடி இருக்க பாப்பா, நான் யாருன்னு தெரியுதா ?" என்றெல்லாம் விசாரிக்க தொடங்கி விட்டனர், நானோ சங்கடமாக நெளிய ஆரம்பித்து விட்டேன்.காரணம் எனக்கு யாரையும் தெரியாது. பிறகு என் தந்தையே அனைவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.அப்பொழுது தான் தெரிந்தது என் தந்தைக்கு எவ்வளவோ. சொந்தங்கள் என்று கிட்ட தட்ட அந்த கிராமமே அவருடைய உறவினர்கள் தான், இவ்ளோ பெரிய குடும்பதை விட்டா என் தந்தை சென்னையில் இத்தனை வருட காலம் (50 years ) வாழ்ந்தார் என்று நினைக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கின்றது. அன்று மாலை என் தந்தை உறவினர்கள் விட்டிற்கு என்னை அழைத்து சென்றார்.எங்கள் கூட ஒரு பெரிய கும்பலே வந்தது ஏதோ பேரணி நடத்தி அதற்கு நானும் தந்தையும் தலைமை வகித்து செல்வது போல் இருந்தது, என் தந்தை உறவினர் வீடுகளுக்கு சென்றதும் அங்கிருந்த பெரியவர்களுக்கு என் கையால் இனிப்பு பழங்கள் அடங்கிய தட்டை என்னிடம் குடுத்து கொடுக்க சொல்லுவார்.ஒரு வீட்டிற்கு சென்றோம் அங்கே ஒரு வயதான பாட்டி, நெற்றியில் கை வைத்து கண்ணை சுருக்கி கொண்டு என் தந்தையைப் பார்த்து "யாரு லக்ஷ்மணன் னா" என்று கேட்டு கொண்டே என் தந்தையை கட்டி கொண்டு கன்னங்களை தடவி விழியில் நீருடன் எப்புடி ஐயா இருக்க? இப்ப தான் உனக்கு என் நியாபகம் வந்துச்சா?" என்று கேட்டு கொன்டே என்னை பார்த்து "இது யாரு உன் பொண்ணா ?" . "ஆமா பெரியம்மா இது என் சின்ன பொண்ணு " என்று நா தழு தழுக்க என் தந்தை சொன்னார். பாட்டியின் கண்களில் நீரை பார்த்ததும் என் தந்தையின் கண்கள் கலங்குவதை முதன் முதலாக பார்கிறேன். என் தந்தை எப்பொழுதும் சிரிப்பும், கல கல என்ற பேச்சோடும், தப்பு செய்தால் கண்டிக்கும் குணத்தோடு பார்த்து பழக்க பட்ட எனக்கு உணர்ச்சி வசப்பட்ட தந்தையை பார்ப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

நாங்கள் இப்படியே ஊர் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்தோம், வீட்டின் பின் புறத்தில் களி மண் பிசைந்து கொண்டு இருந்தார்கள். நான் சென்று "எதற்கு இந்த களி மண் என்று கேட்டேன்" , "இதில் தான் அடுப்பு செய்து பொங்கல் வைக்க போகிறோம் நம் வீட்டில் " என்று சொன்னார்கள், எனக்கோ மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது . நானும் என் வயது ஒட்டி இருந்த உறவுப் பெண்களும் சேர்ந்து மண் பிசைந்து , போட்டு இருந்த உடை எல்லாம் கரை ஆக்கி கொண்டும் (கறை நல்லது !!), முகத்தில் பூசிக்கொண்டும் பெரியவர்கள் உதவியுடன் அடுப்பு செய்து வெயிலில் காய போட்டோம். போகி பண்டிகை அன்று எங்கள் ஊரில் பழைய பொருட்களை எரித்து விட்டு ஐயனார் கோவிலுக்கு சென்று பொங்கல் செய்து வழி பட வேண்டும். நாங்கள் அனைவரும் எங்கள் நிலத்தில் உள்ள ஐயனார் கோவிலுக்கு பூ , பழம், மற்றும் பூஜா சாமான்கள் அனைத்தையும் எடுத்து கொண்டு உறவினர்கள் படை சூழ சென்றோம்,அங்கு போனதும் நான் ஐயனாரை பார்த்து ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்று விட்டேன் காரணம் நாற்பதடி உயரம் கொண்ட ஐயனார் அவர் , அவருக்கு பொங்கல் படையல் இட்டு தீபாராதனை காண்பிக்கும் பொழுது என் அம்மாவை கூப்பிட்டு காண்பிக்க சொன்னார்கள் , முதலில் தயங்கிய அம்மா பிறகு செய்தார்கள்.பூஜை எல்லாம் செய்து வீடு வந்து சேர்ந்தோம்.

பொங்கல் அன்று எங்கள் வீட்டின் வாசலில் நாங்கள் செய்த அடுப்பை எடுத்து அதில் கட்டைகளை வைத்து தீ மூடினார்கள் என் தந்தையும் தந்தையின் சகோதரர்களும்.என் அம்மா புது பானை வைத்து நீர் ஊற்றினார்கள், என் அம்மாவிற்கோ பானையில் பொங்கல் வைக்க தெரியாது , நாங்களோ சினிமாவில் மட்டுமே பார்த்தவர்கள்.நீர் கொதி வந்த உடன் என் அம்மா அரிசியை போட்டார்கள் அனால் பொங்க வில்லை நாங்களோ பொங்கலோ பொங்கல் என்று கத்துவதற்காக் நின்று கொண்டு இருந்தோம், என்னை செய்வது என்று என் அம்மா முழித்து கொண்டு இருக்கையில் என் பெரியம்மாவும் பெரியப்பாவும் அந்த இடத்திற்கு வந்து "என்னமா நல்ல நேரம் முடிய போகுது இன்னும் பொங்கலையா" என்று கேட்டார், "அது பொங்கவே மாட்டேன்குது" என்று அம்மா அலுப்புடனும் கோவத்துடனும் சொன்னார், உடனே என் பெரியம்மா சமையல் அறையில் இருந்து ஒரு பாத்திரத்தில் பால் கொண்டு வந்து அந்த பானையில் ஊற்றினார்கள் பிறகு ஐந்து நிமிடத்திற்கெல்லாம் பொங்கல் பானையில் இருந்து பொங்கியது, அது பொங்கிய சந்தோஷத்தில் நாங்கள் அனைவரும் "பொங்கலோ பொங்கல்" என்று கத்தினோம், பிறகு சூரியனுக்கு படையல் இட்டு வணங்கி முடித்ததும் இலைகள் போடப்பட்டது.நன்றாக வடை பாயசத்துடன் பொங்கல் சாப்பிட்டு முடித்தோம்.

மாட்டுப் பொங்கல் அன்று என் தந்தை உறவினர்கள் அனைவருக்கும் விருந்து வைத்தார், எல்லோருக்கும் அன்று பிரியாணி தான், வீட்டிலேயே ஆள் வைத்து செய்தோம்.தந்தையின் பெரியம்மா பிள்ளைகள் யாரும் என் தந்தையின் குடும்பத்தாரிடம் பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தை கிடையாது, அது ஏதோ பங்காளி சண்டையாம், என் தந்தைக்கோ அவர்களை விருந்துக்கு அழைக்க ஆசை.இத்தனைக்கும் எல்லாரும் பக்கத்து பக்கத்து வீடுகள் தான். என் தந்தை அந்த குடும்பத்தில் வளர்ந்ததனால் அந்த சகோதரர்களிடம் அவருக்கு பாசம் கொஞ்சம் அதிகம்.இதை உணர்ந்த நான் என் தந்தையிடம் அவர்கள் கண்டிப்பாக நம் வீட்டு விருந்துக்கு வருவார்கள் கவலைப்படாதீர்கள் என்று வாக்களித்து அந்த வீட்டிற்கு சென்றேன்.என் பெரிய பாட்டி என்னை பார்த்ததும் அவருக்கு சந்தோஷம் பொங்கி கொண்டு வந்தது. "வா அம்மா" என்று வீட்டிற்குள் அழைத்து சென்றார், என் தந்தையின் சகோதரர் பிள்ளைகள் என்னிடம் ஆசையாக வந்து பேசினார்கள், எல்லோரையும் விருந்துக்கு அழைத்தேன், என் பெரியப்பவையும் அழைத்தேன் (தந்தையின் பெரியம்மாவின் மூத்த மகன் ). "நீ கவலைப் படாத உங்க அண்ணன்ங்க வருவாங்க " என்று சொன்னார் , இது போதும் குடும்பத்தை இணைக்க என்ற சந்தோஷத்துடன் சென்றேன் . அதே போல் அவர்களும் வந்தார்கள், என் தந்தை அவர்களை அழைத்து விருந்து பரிமாறினார்..அடுத்தநாள் நாங்கள் சென்னைக்கு கிளம்பும் முன் என் தந்தை என்னை அழைத்து கொண்டு அவரது பெரியம்மாவின் மூத்த மகன் வீட்டிற்கு சென்றார், அங்கு அவரை பார்த்ததும் அவருடைய அண்ணன் கண்களிலும் நீர், எல்லோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர், அண்ணனும் தம்பியும் கட்டி அணைத்து பாச மழை பொழிந்து அப்பப்பா என்ன நெகிழ்வான தருணம் , பிரிந்து இருந்த இரண்டு குடும்பமும் பல வருடங்கள் கழித்து என்னால் ஒன்று சேர்ந்தது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி.இப்பொழுது சொல்லுங்கள் என் வாழ்வில் மறக்க முடியாத வித்தியாசமான பொங்கல் அனுபவம் தானே இது.


--- மீனா லெட்சுமணன்

திங்கள், 30 ஜனவரி, 2012

வலைப்பதிவர்கள் கவனத்திற்கு...( கலைமகள்., தினமணி போட்டிகள் )

வலைப்பதிவ தோழமைகளுக்கு,

இன்று கலைமகள், தினமணி போட்டிகளுக்கு சிறுகதை அனுப்ப கடைசி நாள். 31. 1. 2012 உடன் முடிகிறது. இன்று உங்களிடம் கைவசமுள்ள கதைகளை தினமணி ( 3 பக்கத்துக்கு மிகாமல்) , கலைமகள் ( 6 பக்கத்துக்கு மிகாமல்) முடிந்தவரை இன்று கூரியர் சர்வீசிலாவது அனுப்பி விடுங்கள். பரிசுத் தொகை அதிகம். கலைமகள் 50,000/- மற்றும் தினமணி முதல் பரிசு 5,000, இரண்டாம் பரிசு 3,000, மூன்றாம் பரிசு 2,000.

இந்த நினைவுறுத்தலை ஜனவரி மத்தியில் ஒரு முறை செய்ய எண்ணி இருந்தேன். என் வேலைப் பளுக்களாலும், புத்தக வெளியீட்டிலும், ப்ரயாணங்களாலும் தகுந்த சமயத்தில் நினைவுறுத்த இயலாமல் போயிற்று.

கலைமகள் போட்டி விவரம்.:-
*******************************

கலைமகளில் சிறுகதைப் போட்டி ( ரூபாய் 50,000/-)

கலைமகளில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.நூற்றாண்டு விழாவை ஒட்டி சிறுகதைப் போட்டியை அவரது குடும்பத்தினர் நடத்த உள்ளனர். பரிசு பெற்ற சிறுகதைகள் ஜூன் ஜூலை 2012 ஆம் இதழ்களில் பிரசுரிக்கப்படுமாம். முதல் பரிசு ரூ. 50,000/-. இரண்டாம் பரிசு ரூ.25,000/-. பிரபலமானவர்கள், புதியவர்கள் கலந்து கொள்ளலாமாம். 6 பக்கங்கள் ., ஒரு பக்கம் மட்டுமே வரும்படி எழுதி அனுப்ப வேண்டுமாம். டைப் பண்ணி அனுப்பினால் நலம். ஆனா ஈ மெயில் ஐடி கொடுக்கலை. போஸ்டல் மூலமாதான் அனுப்பனும். கடைசி தேதி 31, ஜனவரி 2012.

அனுப்ப வேண்டிய முகவரி:-

கா. ஸ்ரீ. ஸ்ரீ. நூற்றாண்டு விழா சிறுகதைப் போட்டி.
கலைமகள்,
1, சமஸ்கிருத கல்லூரி சாலை,
சென்னை - 600 004.
***********************************************************

தினமணி போட்டி விவரம்:-
*********************************

தினமணி - காரைக்குடி புத்தகத் திருவிழா இணைந்து நடத்தும்

சிறுகதைப் போட்டி - 2012


நம் நாட்டுப் பண்பாடு, நாகரிகம், கலாசாரம் முதலியவற்றுக்கு முரண்படாத
புதுமைக் கருத்துகளை உள்ளடக்கமாகக் கொண்ட சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன.

தினமணி கதிரில் 3 பக்கங்களுக்கு மிகாத அளவில் படைப்புகள் இருக்க வேண்டும்.

முதல் பரிசு: ரூ.5000
இரண்டாம் பரிசு: ரூ.3000
மூன்றாம் பரிசு: ரூ.2000

கடைசி நாள்: 31-1-2012
பரிசு நாள்: 19-2-2012 (காரைக்குடி)

முகவரி:
தினமணி - காரைக்குடி புத்தகத் திருவிழா சிறுகதைப் போட்டி - 2012
29, இரண்டாவது முதன்மைச் சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை,
சென்னை - 600058


வலைப்பதிவர்கள் எப்படியும் சில கதைகளை ட்ராஃப்டில் போட்டு வைத்திருக்கலாம். எனவே முடிந்தவரை முயற்சி செய்து அனுப்ப பாருங்கள்.
வலைப்பதிவர்களில் யாராவது இந்தப் பரிசுகள் பெற்றால் மகிழ்ச்சியாய் இருக்கும். வாழ்த்துக்கள் மக்காஸ்..:)

மணிமேகலையின் தலைப்பொங்கல்., இவள் புதியவளில்.



மணிமேகலையின் (நகரத்தார் மக்கள் கொண்டாடும்) தலைப் பொங்கல் :-
****************************************************************************************

மணிமேகலை செட்டிநாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் ஊரில் பொங்கல் வீட்டில் மிகுந்த சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்படும். தீபாவளி சீர் போல பொங்கல் சீரும் பெண்ணுக்கு ரொம்ப முக்கியம். அந்தப் பொங்கல் சீரை தந்தை அல்லது அண்ணன் தம்பி கொண்டுவந்து தருவார்கள். ஒரு பெண்ணுக்கு பிறந்த வீட்டிலிருந்து மகிழ்வளிக்கக்கூடியது இந்த சீர்.. உன்னை நாங்கள் மறந்து விடவில்லை. உன் மனதில் என்றும் சந்தோஷம்ம் பொங்கட்டும் என பொங்கல் சீர் அளிப்பார்கள். பொங்கல் பொங்கியதும் பால் பொங்கிற்றா என கேட்பார்கள். தாய் வீட்டிற்கும் மாலையில் சென்று பால் பொங்கிற்றா என கேட்பார்கள். அவர்கள் எங்களுக்கு நல்லா பால் பொங்கிற்று. உங்களுக்கு நல்லா பால் பொங்கிற்றா என கேட்பார்கள். எனவே ஒவ்வொரு வருட பொங்கலும் பெண்களுக்கு தாய் வீட்டின் பிடிப்பை இன்னும் அதிகப்படுத்துவதாகவே அமையும்.

********************************************************

தலைப்பொங்கல்..:-
****************************

தை முதல்நாள் பொங்கலிட்டு சூரியனை வழிபடுவது தமிழர் மரபு. நாளெல்லாம் நமக்காக உழைத்துக் களைத்திட்ட பசுக்களையும் உழவு மாடுகளையும் சீராட்டி பாராட்டி பூசை செய்யும் மாட்டும் பொங்கலும் அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஆனால் இது என்ன தலைப்பொங்கல் என்று தோன்றுகிறதா..? புதிதாய்த் திருமணமான ஒரு பெண் தன் கணவனது வீட்டிற்குச் சென்ற பிறகு அதுவே அவளது வீடு. அங்கே அவள் வைக்கும் முதல் பொங்கல்தான் தலைப்பொங்கல். என் வாழ்விலும் அது சிறப்பாக நடந்தேறியது. அந்த சுவையான அனுபவத்தைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

என் அம்மா வீட்டில் நான் இருந்தபோது பொங்கல் என்றாலே குஷிதான். புது உடை சர்க்கைரைப் பொங்கல், கட்டுக் கரும்பு எல்லாம் கிடைக்கும். பள்ளிக்கு விடுமுறை எல்லாம் சேர்ந்து ஒரே மகிழ்ச்சிதான்.

ஆனால் திருமணமானதும் எல்லாம் வித்யாசமாக இருந்தது. அன்று பொங்கலுக்கு இருநாள் முன்னதாக என்னுடைய சகோதரன் என்னைப் பார்க்க அலுவலகம் வந்தான்.எனக்கு ஒரே ஆச்சர்யம். வா வீட்டுக்குப் போகலாம் என்றான். கீழே வந்தால் ஒரே திகைப்பு.. கீழே ஒரு கார் நின்றது. அதன் மேலே ஒரு கட்டுக் கரும்பு இருந்தது. உள்ளே ஏறு என்றான். உள்ளே ஒரே பெட்டியும் கூடையுமாய் இருந்தது. என்னண்ணா இது என்றேன். ஒன்றூம் இல்லை வா.. உன் விட்டுக்குத்தான் போகிறேன் அதனால் உன்னையும் அழைத்துச் செல்ல வந்தேன் என்றான்.

ஒரு வழியாக காரில் ஊர்வலமாக கரும்பு சகிதம் போய் சேர்ந்தோம். என் மாமியாருக்கோ ஒரே மகிழ்ச்சி. வாருங்கள் என வரவேற்றார்.என் அண்ணன் சிரித்தவாறு பெட்டிகளையும் கூடைகளையும் உள்ளே கொண்டுவந்தான்.

என் மாமியார் விளக்கேற்றி தடுக்கு எடுத்துப் போட்டார்கள். என் அண்ணன் எனக்கு பொங்கல் சீர் கொண்டுவந்துள்ளான் என்று மாமியார் சொன்னார்கள். இதற்குத்தான் இத்தனை தடபுடலா என வியந்தேன். ஒரு சூப்பர் மார்க்கெட்டையே அண்ணன் ஹாலில் இறக்கி இருந்தார்.

பரங்கிக்காய், அவரைக்காய், வெங்காயம்., பச்சைமிளகாய், கருணைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு, வாழைக்காய், கத்திரிக்கார்ய், பலாக்காய், தக்காளி, கரும்பு, மஞ்சள் கொத்து, பொங்கல் பானை 2,வெல்லம், நெய், பச்சரிசி., கொத்துமல்லி கருவேப்பிலை என கொலு வீற்றிருந்தது. அத்தோடு வெற்றிலை பாக்கில் பணம் வைத்து அண்ணன் பொங்கல் பானை எனக்குத்தந்தான். வீடே குதூகலமாய் இருந்தது. மாமியார் அண்ணனை உபசரித்து அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் கோலமிடும் படலம். அண்ணன் கொண்டுவந்த பானை, விளக்குச்சட்டி, அடுப்பு எல்லாம் எடுத்து வந்து கொடுத்து மாமியார் என்னை கோலமிடச் சொன்னார்கள். நான் ‘ஙே’ என்று விழித்தேன். அதன் பிறகு அத்தை எப்படிக் கோலமிடுவது என சொல்லிக் கொடுங்கள் என கேட்டேன். என்ன பொண்ணே இது துட நீ தெரிஞ்சுக்கலயா என்று மனதுக்குள் எண்ணிய மாமியார் ஒரு கிண்ணத்தில் கோலமாவும் , ஒரு கிண்ணத்தில் கோபியும் கரைத்து ஒரு விளக்குமாற்றுக் குச்சியை முனையில் மெல்லத் தட்டி பிரஷ் போல செய்து கொடுத்து பானையில் கோலம் போட கற்றுக் கொடுத்தார்கள்.

நானும் எனக்குத் தெரிந்த மயில் , தாமரை எல்லாம் போட்டு அசத்தி விட்டேன். அடுத்து தரையில் கோலமிடல்.அங்கேதான் வந்தது தலைவலி. மாமியார் கட்டம் கட்டி கோபுரம் போட்டு உள்ளே அடைக்கச் சொன்னார்கள். ஒரு வழியாக அதை முடித்து நிமிருவதற்குள் இடுப்பு வலி வந்துவிட்டது. அதற்கு அப்புறம் பொட்டு குத்தினாற்போல புள்ளி இட வேண்டும். என்றார்கள். ஒன்று சிறியதாக வந்தது. மற்றொன்று பெரியதாக வந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் பாவமாக அமர்ந்திருந்த என்னைப் பார்த்து அவர்கள் இதோ பாரும்மா என்று லாவகமாக கை எடுக்காமல் புள்ளி குத்தி காண்பித்தார்கள்.இதில் இவ்வளவு விஷயமா என அசந்து போனேன்.

அடுத்தநாள் பொங்கல். அமர்க்களமான சமையல். கத்திரிக்காய் குழம்பு., கருணைக்கிழங்கு குழம்பு, பரங்கிக்காய் குழம்பு, அவரைக்காய் பொரியல், வாழைக்காய் பொரியல், சர்க்கரை வள்ளிக்கிழங்கு பொரியல், பலாக்காய் கூட்டு, பருப்பு மசியல். இதெல்லாம் முடித்து பொங்கல் வைக்கும் வைபவம் தொடங்கியது,..!

கோலத்தின் நடுவில் அடுப்பு வைக்கப்பட அதன் மேல் மூன்று பானைகள் வைத்து இரண்டில் வெண்பொங்கலும் ஒன்றில் சர்க்கரைப் பொங்கலும் வைக்கப்பட்டது. விறகு அடுப்பு என்பதால் புகையோடு மல்லுக்கட்டு வேறு. பால் பொங்கியதும் சங்கு ஊதி அரிசி உலையில் இட்டார்கள். பால் பொங்கிற்றா என ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டோம்.

மாமியாரும் விளக்கிடும் சட்டியில் பனங்கிழங்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு வைத்து தேங்காய் உடைத்து வைத்து வெற்றிலை பாக்கும் வாழைப்பழமும் கரும்பும் வைத்து சாமியிடம் வைத்தார்கள்.

மாமனார் கரும்பு வெட்டி எங்களுக்கெல்லாம் கொடுத்தார்கள். பொங்கலிட்ட பின் இலை போட்டு படைத்து இரு விளக்குகள் ஏற்றி படையல் இட்ட இலைகளை சுளகில் வைத்து சாமி வீட்டில் வைத்து சாமி கும்பிட்டோம். காக்காய்க்கு சோறு வைத்து பின்னர் அனைவரும் கூடி பொங்கல் உண்டோம்.

அப்பாடா பொங்கல் என்றால் இவ்வளவு செய்ய வேண்டுமா., பேசாமல் சின்னப் பிள்ளையாய் இருந்திருக்கலாமே என்றது மனது.

ஆனாலும் வருடாவருடம் அண்ணன் பொங்கல் பானை கொண்டுவந்து தரும்போது மனதுக்கு நிறைவாயும் மகிழ்வாயும் உள்ளது

என்ன இருந்தாலும் தாய் வீட்டு சீர் நமக்கு வருடாவருடம் கிடைக்க வழி செய்யும் பண்டிகை பொங்கல் என்பதால் எனக்கு அதன் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு.

--- மணிமேகலை.

வெள்ளி, 27 ஜனவரி, 2012

வித்யாவின்( விதூஷ்) வித்யாலயம்,”.ஃபுட் ப்ரிண்ட்ஸ்”.இவள் புதியவளில்.


நம் பிரபல வலைப்பதிவர் ( பகோடா பேப்பர்கள் விதூஷ் ) ., தோழி, சகோதரி, வித்யாவின் குழந்தைகள் காப்பகம் மற்றும் கல்வியகம் ,”ஃபுட் ப்ரிண்ட்ஸ்” பற்றி சிறப்புப் பேட்டி இவள் புதியவளுக்காக எடுக்கப்பட்டது.

1. குழந்தைகள் காப்பகம் ஏன் ஆரம்பித்தீர்கள். இந்த எண்ணம் ஏற்பட்டது எப்படி.

பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது கனவு. அதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகமாக இருந்ததால், மூன்று வருஷ அடிப்படை உழைப்புக்குப் பின்ஃபுட் ப்ரின்ட்ஸ் கல்வி மையம் என்ற பெயரில் குழந்தைகளுக்கான காப்பகம் ஆரம்பித்தேன். தற்போது மடிப்பக்கத்திலும் நங்கநல்லூரிலும் இயங்கி வருகிறது. மூன்று வயதுக்கு மேற்பட்டக் குழந்தைகளுக்கு ப்ரீகேஜி-யில் அடிப்படைக் கல்வியும் பயிற்றுவிக்கிறோம். பள்ளி முடித்து வரும் குழந்தைகள், மாலை வீட்டுக்குப் போகும்போது பெற்றோருக்கு உதவியாக இருக்கும்படி, வீட்டுப்பாடங்களும் செய்து முடித்துவிட்டு போகும்படி ஏற்பாடு செய்திருக்கிறோம். இது தவிர பள்ளியில் பரீட்சை நேரங்களில் கூடுதலாகப் படிக்க உதவுகிறோம். ஹாபி வகுப்புக்கள், நடனம், இசை, கராத்தே, போன்றவைகளும் விருப்பமிருந்தால் கற்கலாம். www.footprintslc.com என்ற இணையதளத்தில் மேலும் விபரங்கள் இருக்கின்றன.


2. இதை நடத்துவதில் உள்ள சந்தோஷங்கள் , சிரமங்கள் என்னென்ன?

சந்தோஷங்களின் பட்டியல் மிகவும் நீளம். அதனால், சிரமம் என்னவென்பதை முதலில் சொல்லி விடுகிறேன். வாடகை, வீட்டு ஓனர் மற்றும் இடம், அது மட்டுமே பிரச்சினை.

சந்தோஷங்கள் என்றால் முதலில் சொல்லுவது குழந்தைகள் திடீரென்று வந்து பின்னால் கட்டிக்கொண்டு 'ஆன்ட்டி'ன்னு அன்பு முத்தங்கள் தருவாங்க பாருங்க.. அதுக்கு ஈடு இணையே கிடையாது, சதா சிரித்துக் கொண்டும், அதிசயித்து அதிசயித்து ஏதேதோ பேசிக்கொண்டும், அற்புதங்களை நிகழ்த்தும் தெய்வங்கள் நம்மோடு இருக்கும் சந்தோஷம். கதை சொல்லும் போதும், எதையாவது விவரித்து அது அவர்களுக்குப் புரிந்துவிடும் போதும் விரியும் விழிகள் - தெய்வாம்சம். வேறென்னங்க வேண்டும்?

3. அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள், வீடு வாடகைக்கு கொடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள். இதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன?

பெரும்பாலும் தனி வீடாக எடுப்பதால், அக்கம்பக்கத்துக்காரர்கள் தலையீடு இருப்பதில்லை. அப்படி அடுக்கு மாடியாக இருந்தபோது, சப்தம் வருகிறது என்று சண்டை போடுவார்கள். தண்ணீர், அடிப்படை வசதிகள், முதலீட்டை சேகரிப்பதற்குள் வரும் குழந்தைகளின் தலையை எண்ணி இன்னும் அதிகம் வாடகை கேட்கும் வீடு வாடகைக்குக் கொடுத்தவர்கள் போன்ற முக்கியப் பிரச்சினைகள் இருக்கின்றன.

4. எந்த வயதிலிருந்து எந்த வயது வரை பார்த்துக் கொள்கிறீகள். அல்லது அதன் நடைமுறை பற்றி சொல்லுங்கள்.

பிறந்த குழந்தைகளில் இருந்து பதினாறு வயதுடைய குழந்தைகள் வரை பார்த்துக் கொள்கிறோம். சேவை வரி பதிவு செய்து கொண்டு, மின்சாரத்தை கமெர்ஷியல் ஆக மாற்றி கொண்டால் பின்னாளில் பிரச்சினைகள் பெரிதாக வருவதில்லை. இதுதவிர, சுத்தம், கழிப்பறை பராமரித்தல் போன்றவை அடிப்படை சுகாதாரத் தேவைகள்.


5. குழந்தைகள் எப்படி ஃபீல் செய்கிறார்கள்.

( 4 குழந்தைகளிடம் கருத்து கணிப்பு செய்தோம்)

ஷீலா - 4 வயது: விளையாடிகிட்டே படிக்கலாம். க்ளே மாவு பெசஞ்சு பொம்மை பண்ணுவேன்.

அம்ருத் - 7 வயது: ஹோம்வொர்க் எல்லாம் இங்கேயே முடிச்சுடுவேன். விளையாடிட்டே இருக்கும்போது அம்மா வந்துருவாங்க. நைட்டு டாம் அன்ட் ஜெர்ரி பார்க்க விடுவாங்க.

கிரேஸ் - 12 வயது: நான் ஸ்கூல் ப்ராஜெக்ட் வொர்க் செய்ய வந்திருக்கேன். எனக்கு ஏரோப்ளேன் மாடல் செய்யும் அசைன்மென்ட் இருக்கு.

சுஜீத் - 10 வயது: எங்க ப்ளாட்ல விளையாட யாருமில்லை. இங்க வந்து விளையாடுவேன். நிறையா பிரெண்ட்ஸ் இருக்காங்க.

6. பெற்றோர் எப்படி உணருகிறார்கள்?

ஜேகப்: ஷீலாவின் தந்தை: ஏற்கனவே மூன்று க்ரச்சில் இருந்திருக்கிறாள். இங்க தூங்கு தூங்குன்னு சொல்லாம விளையாட விடறாங்க. அதுனாலே குழந்தையும் சந்தோஷமா இருக்கிறாள். நிறையா விளையாடிட்டு நைட்டு வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டுட்டு கொஞ்சம் கதை பேசிட்டு தூங்கிடுவா. எங்களுக்கு இதுவே வசதியாய் இருக்கு.

லக்ஷ்மிராணி: அம்ருதின் அம்மா: பி.பி.ஓ வில் வேலை என்பதால் சாயந்திரம் எப்போ வரேன்னு நிச்சயமில்லை. இங்கேயே ஹோம்வொர்க் ஆயிடுவதனால் ரொம்ப சௌகரியமா இருக்கு.

(1) அவர்கள் தேவைகள் என்னென்ன?

பெற்றோர்கள் தம் குழந்தைகள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதையே விரும்புகிறார்கள்.

(2) அதை எப்படி ஃபில் செய்கிறீர்கள்.

தேவையான அளவில் மெல்லிய கண்டிப்போடும், நிறையா அன்போடும், சுதந்திரம் கொடுத்து குழந்தைகளை அவர்களாகவே இருக்க விடுகிறோம். இது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இன்னொரு வீடு போன்றே உணர்கிறார்கள்.

7. என்ன என்ன விதமான சேவைகள் வழங்குகிறீர்கள்.

ஃபுட் ப்ரின்ட்ஸ் என்ற ஒரே குடையின் கீழ், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கவும், வீட்டுப் பாடங்களைச் செய்யவும், பள்ளிப் பாடங்களைப் படிக்கவும், அருங்கலைகள் பல கற்கவும், வாசிக்கப் பழகுவதும், சுதந்திரமாக இயங்கவும், வாழ்வியல் நெறிகளைப் பழகவும், சிறிது நேரம் விளையாடுவதும் என்று தமது பொன்னான குழந்தைப் பருவ நேரங்களை வீணாக்காமல் நல்லவை பல கற்று சிறப்பாக வளர உதவும் இடமாக அமைந்திருக்கிறது. PreKG, Afterschool Day Care, Homework Assistance, Summer Camps, Hobby Classes, Crafts, Sewing, Drawing, Handwriting, Mathemagic, State, CBSE, ICSE tuitions, Photography, Hindi Prachar Sabha Exams, Carnatic/Hindustani Vocal, Keyboard, Bharatnatyam, Personality Development & Communication Skills. Special coaching for Competitive Exams like Olympiad (Science & Maths), Macmillan IAIS, NCERT Talent Search, Spell Bee, ASSET, NTSE, and STAR, இது தவிர சின்னச் சின்ன workshopகளும் நடத்தப்படுகின்றன.


8. இதனால் பயன் பெற்றோரின் கருத்துக்கள்.

ஆஷிஷ் & ஆதிஷ் பெற்றோர்: கட்டணம் மிதமாக இருக்கிறதால் என் இரட்டை குழந்தைகளுக்கு பணம் செலுத்துவது சுமையாக இல்லை. ஒரே குடும்பத்தில் இருந்து சேர்க்கும் போது சிறப்பு கட்டணச் சலுகை வேறு கிடைத்தது.


9 பொதுவா கிரீச்சின் தேவை என்ன அது எப்படி உபயோகமா இருக்கு

பெற்றோர்கள் இருவருமே பொருள் ஈட்டுவதன் பொருட்டு பணிக்குச் செல்வது கட்டாயமாக இருக்கும் தற்போதைய காலகட்டத்தில், ஃபுட் ப்ரின்ட்ஸ் கல்வி மையம், வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கு தமது குழந்தைகளைத் தாம் பணியிடத்திலிருந்து திரும்பும் வரை பார்த்துக்கொள்ளவும், அவ்வாறு இருக்கும் இடத்தில் குழந்தைகளின் பொன்னான நேரம் விரயமாகாமல் நல்லவிதமாக செலவிடச் செய்து நன்னெறிகள் கறக்கச் செய்வதுமே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. பெற்றோர்களின் கவலையைப் போக்கும் வண்ணம், ஃபுட் ப்ரின்ட்ஸ் கல்வி மையம் காலை 8.00 முதல் இரவு 8.00 மணி வரை அலுவல் நேரத்தைக் கொண்டுள்ளது. இது தவிர அவசரத் தேவைகளுக்காவோ, வேறெந்த காரணங்களுக்காவோ பெற்றோர்கள் வெளியே செல்ல நேர்ந்து, குழந்தைகளை அழைத்துச்செல்ல முடியாத நேரங்களில், குழந்தைகளை மணிநேரக் கணக்கில் இங்கே பாதுகாப்பாக விட்டுச் செல்லலாம். இரவு நேர பராமரிப்பும் இருக்கிறது.


10. இதை ஆரம்பித்தது எப்போது. ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமா. இதுபோல கிரீச் நடத்தபவருக்கு உங்க ஆலோசனை என்ன.

கடந்த வருடம் ஜனவரி 19 அன்று துவங்கினோம். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். அதுபோல இடமும் க்ரச் நடத்துபவர் மனமும் இருந்து விட்டால், குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.


11. உங்க கிரெச் பேரு அது இருக்கும் இடம். அதில் உள்ள உதவியாளர்கள். வீட்டில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவுகிறார்களா.

ஃபுட் ப்ரின்ட்ஸ் கல்வி மையம், மடிப்பாக்கம். என் நண்பர் திரு. பாலாஜி அவரின் உதவியோடு திரு.நாகராஜ், திருமதி.உமா ஆகியோரும் இதில் இணைந்து பணி புரிகிறார்கள்.

12. அதிக பணம் இன்வெஸ்ட் செய்யணுமா., யார் யாரெல்லாம் நடத்த முடியும். சக்சசிவா நடத்த யோசனைகள்

குறைந்த பட்சம் ஐந்து இலட்சம் கையிருப்புத் தேவை. பொறுமையும், சகிப்புத்தன்மையும், முதல் ஆறுமாசங்கள் வரை யாருமே திரும்பிப் பார்க்காவிட்டாலும், தொடர்ந்து செயல்படும் விடாமுயற்சியும் வேண்டும். அவ்வப்போது பிரச்சினைகள் வரும், தீர்த்துவிட்டோம் என்று உட்கார முடியாது, புதியதாய் வேறொன்று கிளம்பும். விடாமுயற்சி, குழந்தைகளிடம் மாறாத அன்பு, பொறுமை, பேராசை படாமல் இருத்தல் இவை எல்லாம் குழந்தைகள் காப்பகம் ஆரம்பிக்க அடிப்படை குணங்களாக இருந்தால், அவர் நிச்சயம் இந்தத் தொழில் வெற்றியாளர் ஆகலாம்.


வியாழன், 26 ஜனவரி, 2012

முப்பெரும் சுதந்திர தேவியர். ப்ரிகேடியர் துர்காபாய், ப்ரிகேடியர் முத்துலெக்ஷ்மி, ருக்மணி சேஷசாயி.



ப்ரிகேடியர் துர்காபாய்., ப்ரிகேடியர் முத்துலெக்ஷ்மி. ருக்மணி சேஷசாயி இந்த மூன்று பேரும் தேசம் காக்கப் போராடியவர்கள். ஒருவர் சிறு வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் மற்ற இருவரும் ராணுவ சேவையில் ஈடுபட்டு மருத்துவ சேவை செய்த பெண் வீராங்கனைகள். இவர்கள் பற்றி இந்த குடியரசு தின நாளில் சொல்லியே ஆகவேண்டும். எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்று பாரதி பாடிச் சென்றது இவர்கள் பற்றி இருக்கலாம். இந்தக்காலத்தில் கூட சாதாரண குடும்பங்களில் ராணுவத்தில் பணியாற்றுவதோ., காவல்துறை உத்யோகத்தில் சேர்வதோ அவ்வளவாக இல்லாத நிலையில் சுதந்திரப் போராட்டக்காலத்தில் சுதந்திரத்துக்காகவும். பின் இந்தியாவுக்காகவும் பாடுபட்ட வீரம் செறிந்த எழுச்சிப் பெண்களைப் பார்த்தபோது நாம் இந்தியர் எனப் பெருமித உணர்ச்சி பொங்கியது.

முதலில் ருக்மணி சேஷசாயி. இவருக்கு எட்டு வயதாயிருக்கும் போதே ( 1938 இல் பிறந்தவர்) அறியாத வயதிலேயே., சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். பூர்வீகம் தேனி., சிலகாலம் கானாடு காத்தான் அருகில் உள்ள பள்ளத்தூரிலும் வசித்திருக்கிறார். அப்போது ஒரு பலூன் 2 அணா. ஒரு 40 பக்க நோட்டுப் புத்தகம் வாங்க ஒரு வாரம் வரையில் காத்திருக்க வேண்டும். கப்பல் வந்தால்தான் புத்தகம் முதற்கொண்டு எல்லாம் வரும். எல்லாவற்றிலும் மேட் இன் இங்கிலாண்ட் என்று போட்டு இருக்கும். யுத்த சமயங்களில் யுத்த விமானங்கள் நகரத்தில் மிக நெருக்கத்தில் தாழ்வாகப் பறக்கும் என்ற விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

1945 இல் தேனியில் காங்கிரஸ் சார்பில் ஒரு பொதுக்கூட்டம். எல்லாத் தொண்டர்களும் கதராடை அணிந்து காந்தி குல்லாய் போட்டு ஊர்வலமாக சென்றார்கள். அப்போது 8 வயதான இவர் வீட்டில் காலண்டரில் இருந்த காந்திஜி படத்தை வெட்டி அட்டையில் ஒட்டி கதர் மாலை அணிவித்து ( அப்போதெல்லாம் பள்ளிகளில் நூல் நூற்கும் வகுப்பு உண்டு. கைராட்டினத்தில் நூல் சுற்றுவார்கள்.கைராட்டை மாலை செய்வார்கள்.) ஊர்வலமாக ,” மஹாத்மா காந்திக்கு ஜே “ எனக் கூடியபடி சில சிறுவர் சிறுமியருடன் சென்றாராம். அப்போது கூட்டத்துக்காக ஊர்வலமாக வந்தவர்கள் இந்தச் சிறுவர்களை முன்னே விட்டு பின்னே நடந்து வந்தார்களாம். கூட்டம் ஆரம்பிக்கும் இடத்திலும் இவர்களை முன்னே அமர வைத்து கூட்டம் இரவு 12 மணி வரை நடந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகளைக் காணோம் என்று தேடிவந்து அழைத்துச் சென்றார்களாம். யார் யார் கலந்து கொண்டு பேசினார்கள் என்று சரியாக சொல்லத்தெரியாத வயதிலும் இந்திய விடுதலை முக்கியம்., அதற்காக போராடிய அண்ணல் காந்தியடிகள் மிக முக்கியமானவர் என உணர்ந்திருந்தது .,. அந்த எழுச்சியிலேயே செயல்பட்டது அதிசயம். தற்போது 73 வயதாகும் இவர் அந்த நிகழ்ச்சியைப் பற்றிச்சொல்லும் போது அந்த வார்த்தைகளில் அந்த நேரத்து உறுதியும் சத்தியமும் மிளிர்கிறது.

இவர் அரசுப் பள்ளிகளில் ஆசிரியையாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டார். குழந்தைகளுக்கான மிகச் சிறந்த 30 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். வலைத்தளத்திலும் எழுதி வரும் முதுபெரும் ப்லாகர் இவர்.

அடுத்து கர்னல் துர்காபாய். 1930 இல் பிறந்த இவருக்கு தற்போது 82 வயதாகிறது. பிறந்தது கோலார் தங்க வயல். அப்பா பள்ளித்தலைமை ஆசிரியர். 1942 இல் இவரது சித்தப்பா தண்டபாணி திண்டிவனத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கைதாகி சிறைக்குச் சென்றபோது அவரது நெல் மண்டியைப் பார்த்துக் கொள்ள இவரது தந்தை அருணாசலம் திண்டிவனம் வந்தார். இவர்களது பூர்வீகம் திண்டிவனம் பக்கத்தில் கம்மத்தூர்.

வருடா வருடம் கோடைகாலத்தில் அப்போது எல்லாம் அழையா விருந்தாளியாக காலராவும் வரும். அப்போது ஒரு முறை இவருக்கு நோய் பாதிப்பு அதிகமாகி சுயநினைவில்லாமல் 5 நாட்கள் கிடந்த போது ஆஸ்பதிரியில் சேர்க்கப்பட்டு டாக்டர் வயலட் என்பவரால் சிகிச்சையளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். அன்று இவர் மனதில் டாக்டராக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது, ஆனால் வேறு வழியில்லாமல் நர்சிங் சேர்ந்தார். 1949 இல் சேர்ந்து 52 இல் முடித்திருக்கிறார்.

இவர் சிறுவயதில் சித்தப்பாவைப் பார்த்தும்., மேலும் காந்தியடிகள் 1946 இல் திண்டிவனம் வந்தபோது பார்த்தும் ( அப்போது அவர் மௌனவிரதமாம்) தேசத்துக்காகப் பணியாற்றும் ஆவல் ஏற்பட்டிருக்கிறது.

தேசப் பாதுகாப்புக்காகாப் போராடும் வீரார்களுடன் அவர்களின் முதலுதவிக்காக அவர்களோடு ரண களத்துக்குச் சென்று துணிவாக இருந்து சிகிச்சையளித்துப் பலரைக் காப்பாற்றி இரு்க்கிறார்.

1953 இல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். முதல் போஸ்டிங் பெங்களூர். அடுத்த ஒரு மாதத்தில் பூனா கட்கி ( KIRKEE) . 35 வருடம் சர்வீஸ். 1988 இல் 58 வயதில் பணி ஓய்வு பெற்றிருக்கிறார். அந்த சமயத்தில் 1968 வரை ராணுவத்தில் பணியாற்றும் பெண்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது சட்டமாம். இவருக்கும் அப்போது 38 வயது ஆகிவிட்டதால் திருமணம் செய்து கொள்ளவில்லை. தேச சேவைக்காகவே தன்னை அர்ப்பணித்திருக்கிறார்.

1962 இல் சீன யுத்தம். 1965 இல் இந்திய பாகிஸ்தான் யுத்தம்., அப்போது காஷ்மீரில் இருந்திருக்கிறார். 1971 இல் பங்களாதேஷ் யுத்தத்திலும் கலந்து கொண்டிருக்கிறார்.

1962-63 இல் INDIAN PEACE KEEPING FORCE - UNITED NATIONS ஐக்கிய நாட்டு அமைதிப்படையில் ஒரு வருடம் ஆப்பிரிக்கா நாட்டின் காங்கோவில் பணியாற்றி இருக்கிறார்.

மெட்ராசை சேர்ந்த ஒரு மேஜர். அவரின் தலைக்கு ரூபாய் ஒரு லட்சம் வைத்திருந்ததாம் பாகிஸ்தான் அரசு. அப்போது நடந்த சண்டையில் குண்டு அடிபட்டு குடலெல்லாம் வெளியே தொங்கியபடி சிகிச்சைக்கு எடுத்து வந்தார்களாம். அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார் . அவர் குணமாகி பின்பு அவரை கர்னலாக திமாப்பூரில் பார்த்தாராம்.

காங்கோவில் போய் இருந்த போது உள்ளூர் மக்கள் மிக உதவினார்களாம். வெளிநாடுகள் செல்லும்போதெல்லாம்தான் இந்தியத்திருநாட்டின் பெருமை தெரியும் என்கிறார் இவர். இந்தியாவைப் பற்றி அவர்கள் எல்லாம் மிக நல்ல மதிப்பீடு வைத்திருப்பதாக கூறினார்.

பங்களாதேஷில் டாக்கா., கோமில்லா., சிட்டகாங்க்., ஆப்ரிக்காவில் காங்கோ., லூலூ., சண்டிகரில் சியாச்சின்., லே எல்லா இடங்களிலும் பணியாற்றி இருக்கிறார். சில இடங்களில் பனி அதிகமாகி ஹார்ட்டில் பல்மனரி ஒடிமா என்ற வியாதியால் நுரையீரல் வீங்கி விடும். வெள்ளைப் பனியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பார்வை போய்விடும். மேலும் கை கால் விரைத்துப் போய் விடும் என்றார்.

விடுமுறை கிடைத்தால் குடும்பத்தாரைப் பார்க்க ட்ரான்சிட் காம்ப் வந்து ரயில்வே ஸ்டேஷன் வரவே லீவில் 5 நாட்கள் போய் விடும். பின் வீரர்கள் எல்லாருக்கும் மொத்தமாக ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு காரேஜிலேயே பயணம் செய்ய வேண்டும் என கூறினார்.

காங்கோவில் மெஸ் செகரட்டரி. பெல்ஜியம் காங்கோ பீஸ் கீப்பிங் ஃபோர்ஸ் ( BELGIUM CONO PEACE KEEPING FORCE ) இல் பணியாற்றி இருக்கிறார். ராணுவத்தில் ஈபி பேஷண்ட்களுக்கு என தனி வார்டாம் அதில் ஒரு பையன் செஸ்ட் ப்ராப்ளத்தால் பேசியபடியே இருக்கும்போது உயிர்துறந்தது மறக்க முடியாத வருத்தம் என்றார்.

அஸ்வினி பாம்பே நேவல் ஹாஸ்பிட்டல் (INDIAN NAVAL HOSPITAL SHIP ) இது ஆர்மி., நேவல்., ஏர்ஃபோர்ஸ் மூன்றிலும் உள்ள புற்று நோயாளிகளுக்கானது. அங்கு பணியாற்றி இருக்கிறார். அப்போது ஒரு ஜவான் மசால் தோசை கேட்டிருக்கிறார். கொலாபாவிலிருந்து தருவித்துக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவரும் இறந்து விட்டது துயரமாய் இருந்ததாம்.

ஒரு முறை காஷ்மீர் ஏர்போர்ட்டில் பாகிஸ்தான் குண்டு போட்ட போது இவர் அங்கே ஹாஸ்பிட்டலில் சேவையில் இருந்திருக்கிறார்.

மிக முக்கியமாக பங்களாதேஷில் கோமில்லா என்ற இடத்தில் ஹாஸ்பிட்டலில் கீழே 10 அடி ஆழத்தில் குழி தோண்டி உள்ளூர் மக்களை கை காலைக் கட்டி ., சுட்டுப் போட்டு குவியலாக வைத்திருந்தார்களாம். பல நாட்களுக்கு இவருக்கு எங்கு சென்றாலும் பிணவாடை அடித்ததாம்.

பொதுவாக இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டார்கள் என கூறுகிறார். பங்களாதேஷ் பாகிஸ்தான் பிரிவினையின் போது பாலியல் பலாத்காரம்., மேலும் பங்களாதேஷ் பெண்கள் தங்கள் நீளமான முடியினால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என அவர்கள் முடியை கத்திரித்தது. என கொடுமைகள் நடந்ததாக சொன்னார்.

55 வயதில் லெஃப்டினெண்ட் கர்னல்., 57 வயதில் கர்னல் என ஆகி ரிட்டயர் ஆகி இருக்கிறார். தேசத்திற்காக இவர் ஆற்றிய சேவைகள் பற்றிய படங்கள்., விவரங்கள் இன்னும் அதிகமாய் இருந்தன.

அடுத்து ப்ரிகேடியர் முத்துலெட்சுமி., இவர் தூத்துக்குடியைச் சேர்ந்த அயன் கரிசல்குளத்தைச் சேர்ந்தவர். இவருடைய ஊரிலேயே முதன் முதலில் எஸ் எஸ் எல் சி முடித்தவர் இவர்தான். இவருக்கு 15 வயதான போது இவருடைய அம்மாவுக்கு ஒரு கர்ப்பம் கர்ப்பக்குழாயிலேயே தங்கி விட்டதால் அதை ஆபரேஷன் செய்யாவிட்டால் உயிர் போய்விடும் என்ற நிலைமை . அப்போது மதுரைக்கு 60 கிமீ துரத்துக்கு மாட்டுவண்டி கட்டி வந்தார்கள். வந்து அறுவை சிகிச்சை செய்தபின் பிழைத்த இவரின் அம்மா ., ”பார் நம் ஊரில் ஒரு மருத்துவமனை அல்லது மருத்துவர் இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது எனவே நீ மருத்துவம் படி” என்று சொன்னார்களாம்.

ஆனால் இவர் காம்போசிட் மாத்ஸ் என்ற பாடத்தை எடுத்திருந்ததால் காமர்ஸ்தான் படிக்க முடியும். மருத்துவர் படிப்பு படிக்க முடியாது என்பதால் நர்சிங் எடுத்துப் படித்தார். சென்னை ஜி ஹெச்சில் படித்து 60 இல் ட்ரெயினிங்கை முடித்தார். 60 - 62 வரை காரைக்குடி பக்கம் கானாடு காத்தானில் அரசு மருத்துவமனையில் ஸ்டாஃப் நர்சாக பணிபுரிந்தார்.

அப்போது ஜவஹர்லால் நேரு பெண்கள் தங்களை ராணுவ சேவைக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று பேசிய பேச்சைக் கேட்டாராம். அதில் தூண்டப்பட்டு ராணுவத்தில் சேர்ந்தார். ஒரு மாதம் ட்ரெயினிங்க வழங்கப்படும். ரைஃபிள் ஷூட்டிங். , பரேட்., லைஃப்சேவிங் பயிற்சி அளிக்கப்பட்டது. INOC -- INITIAL NURSING OFFICERS COUNCIL. என 2 நாட்கள் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

1965 இல் பாகிஸ்தான் யுத்தம். அப்போது அம்ரிஸ்டர் அனுப்பப்பட்டார். சண்டை நடக்கும் இடத்துக்கும் இதற்கும் 10 கிமீ தூரம்தான். மிலிட்டரிக்காக தனியாக ட்ரெயின் முழுவதும் மில்ட்டரிக்காரர்களே அழைத்துச் செல்லப்பட்டார்களாம். அங்கு இருக்கும்போது பாகிஸ்தான் விமானம் வந்தால் சைரன் ஒலி கேட்கும். ரேடார் சத்தமும் கேட்கும். உடனே அனவரும் பதுங்கு குழியில் ஒளிந்து கொள்வார்களாம்.

காயம்பட்டோர் ( காஷுவாலிட்டி) நிறைய வருவார்கள். அவர்களுக்கு இரவு பகல் பாராமல் சிகிச்சையளிக்க வேண்டும். அந்த இடத்துக்கு ஒரு முறை காமராஜர் வந்தாராம். இவரைப் பார்த்தபோது ரொம்பப் பாராட்டி இருக்கிறார் . தமிழகம் வந்ததும் இவர்கள் ஊர் கலெக்டரிடம் சொல்லி கலெக்டர் ஆஃபீசிலிருந்து சென்று இவரின் தாய் தந்தையரை ஹானர் செய்தார்களாம்.

பணிக்காலத்தில் இவரும் நிறைய சோக நிகழ்வுகளைப் பார்த்து மனம் பதைத்திருக்கிறார். அம்ரிஸ்டரில் ஒரு ஜவான் வயிற்றில் குண்டுபட்டு வந்தபோது தன்னுடைய வாட்சைக் கழட்டிக் கொடுத்து தன் மகனிடம் சேர்ப்பிக்கச் சொல்லிவிட்டு உயிரிழந்தாராம்.

இன்னொரு தமிழ் ஜவான் தனக்கு முதல் குழந்தை பிறந்த சேதி கேட்டு விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்தார். அப்போது யுத்தம் வரவே சண்டையில் தன் முதல் குழந்தை முகத்தைப் பாராமலே இறந்துவிட்டாராம்.

1965 இல் வாகா பார்டரில் ஒரு சண்டையின் போது ஊர் மக்கள் அடுப்பில் சமைத்த உணவுவகைகளை அப்படியே விட்டு விட்டு ஊரை விட்டு ஓடி இருந்தது மனதை உலுக்கியதாம். எல்லா வீடுகளும் திறந்து கிடந்ததாம்.

ஒரு முறை இந்திரா காந்தியை பார்த்திருக்கிறார். அப்போது அவர் ப்ராட்கேஸ்ட் மினிஸ்டராக இருந்தாராம்.

அம்ரிஸ்டரில் ஒரு முறை பாகிஸ்தான் குண்டு போட்ட போது ஹாஸ்பிட்டல் கட்டடம் பொலபொலவென உதிர்ந்ததாம். பொற்கோயில் இருந்ததால் தப்பிக்க முடிந்தது என சொன்னார்.

1947 இல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது ஒரு ரூமில் பெண்களை மொத்தமாக அடைத்து நிர்வாணப்படுத்தி அவர்கள் சகோதரர்கள் மூலமாக தினம் உணவு கொடுக்கச் செய்தார்களாம். அதற்காக அவர்கள் சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு அவர்கள் அனுமதியுடன் விஷத்தைக் கலந்து கொடுத்து விட்டார்களாம் . இது அப்போது அங்கு ராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் சொல்லிக் கேட்ட செய்தி என்றார்.

1971 இல் டாக்காவில் ஜெசூரில் ஒரு பங்கரில் ( பதுங்குகுழி) பங்களாதேஷ் பெண்களின் ஹாண்ட் பாக்., தலைமுடி.,லிப்ஸ்டிக்., ப்ரா., உடைகள் எல்லாம் கிடந்ததாம். பெண்களை கெடுத்து உயிரோடு அதில் போட்டு இருந்தார்களாம். அநேக பாகிஸ்தான் வீரர்கள் பங்களாதேஷ் பெண்களைக் கற்பழித்து கர்ப்பமாக்கிய கொடுமை என பெண்கள் மீதான வன்முறைகள் அதிகம் என சொன்னார். அந்தக்குழந்தைகளை எல்லாம் மதர் தெரசா எடுத்து வளர்த்தார் எனச் சொன்னார்.


1985 ஸ்ரீலங்கன் யுத்தத்தின் போது சென்னை மிலிட்டரி ஹாஸ்பிட்டலில் இருந்தார். அமைதிப்படையில் பணியாற்றியவர்கள் மிகுந்த காயம் பட்டு மூன்று நாட்களுக்குப் பின் கண்டுபிடிக்கபட்டு சென்னைக்கு விமானத்தில் ( முக்கால் மணி நேரம்தான் பிரயாணமாம்) கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளித்த போது அவர்கள் கை எல்லாம் புண் வைத்து புழுக்கள் உண்டாகி இருந்தது ., மண்ணிலேயே கிடந்ததால்.. என்றார். அவர்களுக்கு கொண்டைக்கடலை மட்டுமே சாப்பிடத் தரப்பட்டதால் மிகுந்த பசியோடு அவர்கள் உணவு கேட்டதாக சொன்னார்.

அப்போது மேஜர் பரமேஸ்வரன் ஆஃபீசர்ஸ் ட்ரெயினிங் அக்காடமியில் பணியாற்றினார் அவருக்கு ஈழத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டது. குடும்பம் செயிண்ட் தாம்ஸ் மவுண்டில் இருக்கும் போது இவர் சென்ற 10 நாட்களிலேயே யுத்தத்தில் இறந்து விட்டார் . வடபழனியில் பரமேஸ்வரன் விஹார்., சைதாப்பேட்டை ஸ்ரீநகரில் பரமேஸ்வரன் பில்டிங்., ஆஃபீசர்ஸ் அக்காடமியில் பரமேஸ்வரன் விஹார் என அவர் பெயர் வைக்கப்பட்டது என கூறினார்.


1985 இல் சீஃப் ஆஃப் ஆர்மி ஸ்டாஃப் கமெண்டேஷன் என்ற விருது கிடைத்தது எனக் கூறினார். பின்பு ப்ரமொஷனில் அம்பாலா சென்றார். பின் ஏர் ஃபோர்ஸ் ஹாஸ்பிட்டல் ஜோர்ஹோட்டில் ( அஸாம்) பணிபுரிந்தார். அங்கு எல்லாம் 200 மணி நேரம் ஸ்ட்ரைக் நடக்குமாம். கரெண்ட் ., ட்ரெயின் எதுவும் கிடையாதாம். உல்ஃபா தீவிரவாதிகள் அதிகமாம். கோஹிமா எல்லாம் சென்று பணிபுரிந்திருக்கிறார்.


இவர்கள் இருவருமே சைவம் என்பதால் பால் மற்றும் காய்கறிகளே எடுத்துக் கொள்வர்களாம். பொதுவாக ராணுவத்தினர் இரண்டு முட்டைகள் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அதற்குப் பதிலாக பால் அதிகம் எடுத்துக் கொள்வார்களாம். மேலும் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு உணவோ ., தண்ணீரோ அருந்தக் கூடாதாம்.

ஏனெனில் உணவில் விஷம் வைத்து இருக்கலாம் என வாங்கக்கூடாதாம். மேலும் எந்த ஊரிலும் இருக்கும் தண்ணீரிலும் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என அருந்த விட மாட்டார்களாம்.

இவர் பணி செய்த போது திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டதால் 1972 இல் திருமணம் முடிந்து இரண்டு பையன்கள்.

மிக முக்கியமான விஷயம் இவர் தன் பணிக்காலம் முடிந்து 1986 இல் LLB ராஞ்சி யூனிவர்சிட்டியில் முடித்து இப்போது அட்வகேட்டாக பணி புரிகிறார். ராணுவத்தினரின் ப்ரச்ச்னைகளுக்காக .,வழக்காடுகிறார். பொதுவாக ராணுவத்தில் இறந்த கணவரின் பென்ஷன் மனைவிக்கு முறையாகக் கிடைக்க பாடுபடுகிறார்.

இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமையான அம்சம் இவர்கள் மூவரும் உரத்த சிந்தனை அமைப்பைச் சேர்ந்தவர்கள்.. மிக அருமையான பொக்கிஷமான இவர்களைச் சந்தித்த பெருமிதத்திலும் சந்தோஷத்திலும் நாமும் தேசப்பணிபுரிந்த பொற்கரங்களை, உயிர்களைப் பாதுக்காக்கும் கரங்களைப் பிடித்துக் குலுக்கி “ ஜெய் ஹிந்த”., என சொல்லி விடைபெற்றோம்.

குடியரசுதின வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

இந்தக் கட்டுரை சூரியக்கதிரில் வெளிவந்துள்ளது.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

வெளிநாடு வாழ் தமிழர்களும் சாதனை அரசிகள் புத்தகம் பெற..


வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களில் சிலர் என் வலைப்பதிவை படித்து வருவதாலும், முகநூலில் நான் எழுதும் கவிதைகளைப் படிப்பதாலும் இந்த புத்தக வெளியீடு முடிந்தவுடன் ஆன்லைனில் புத்தகம் கிடைக்குமா என விசாரித்தார்கள். அதற்கான முயற்சியை தொடங்கலாம் என நினைக்கிறேன்.

அதற்குமுன் சகோதரர் வேடியப்பன் தன்னுடைய டிஸ்கவரி புத்தக நிலையம் மூலம் புத்தகம் தேவைப்படுவோருக்கு கூரியர் சர்வீஸ் மூலமும் அனுப்பி வைக்கிறார்.

என்னுடைய புத்தகம் அவருடைய இந்த லிங்கில் வாழ்க்கை, சுயமுன்னேற்றம், பதிவர் நூல்கள் என்ற தலைப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் மற்ற பதிவர்கள், எழுத்தாளர்களின் நூல்களும் கிடைக்கின்றன. எனவே எந்த புத்தகம் வேண்டுமானாலும் தேவைப்படுபவர்கள் டிஸ்கவரி புத்தக நிலையத்தின் இந்த லிங்கை க்ளிக் செய்து புத்தகங்கள் வாங்க ஆர்டர் கொடுக்கலாம்.

டிஸ்கவரி புக் பேலஸ்.


உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.


திங்கள், 23 ஜனவரி, 2012

நன்றி பபாசி, டிஸ்கவரி புக் பேலஸ். ஆஸ்த்ரேலியன் வானொலி,சன் நியூஸ் ( THANKS TO BAPASI, DISCOVERY, AUSTRALIAN RADIO & SUN NEWS TV. )


என் புத்தக வெளியீடு டிசம்பர் 24 இல் இருந்து தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. ஏற்கனவே லேடீஸ் ஸ்பெஷலில் வந்த கட்டுரைகள் என்றாலும் ஒன்பது முறை ப்ரூஃப் போய் வந்தது.

கட்டுரையில் சிலதை சேர்த்து சிலதை நீக்கி, சின்ன சின்ன மாறுதல்கள். ஆனால் ஆங்கிலக் கலப்பில்லாமல் முழுமையாக செய்ய முடியவில்லை. புகைப்படங்கள் வாங்கி போனில் புதிதாக எல்லாரிடமும் அட்வைஸ் வாங்கி சேர்த்திருக்கிறேன்.

எல்லாருக்கும் கமிட்மெண்ட்ஸ். என் அம்மா அப்பாவிலிருந்து கரிசல் மீடியா வரை. நடுவில் 17 சாதனைப் பெண்கள், மற்றும் கிரிஜாம்மா, ஃபாத்திமா பாபு அவர்கள் ஆகியோர்..

எல்லாரையும் ஒருங்கிணைக்க முடியாமல் புத்தகத் திருவிழாவில் ஸ்டால் எண் 334 , டிஸ்கவரி அரங்கில் மிகுந்த கூட்டத்தோடு எங்கள் இலக்கிய குழும பிதாமகர் பாரதி மணி ஐயா தலைமையிலும், இளம் கிரிக்கெட்டர் திருஷ்காமினி தலைமையிலும் ஜனவரி 8, 2012 இல் வெளியானது சாதனை அரசிகள்.

இதனை சாத்யப்படுத்திய பபாசிக்கும், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுக்கும் நன்றி.

கடைசி நாளன்று அங்கே புத்தக விற்பனையின் போது இருப்பதற்காக சென்ற போது சன் டிவியில் ஒரு சின்ன கருத்து கேட்டார்கள். பபாசி பற்றி அதில் “ பபாசி என்னும் தேரில் புத்தகம் என்னும் தெய்வங்களை இவங்க இங்க அழைத்து வருவது பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. பபாசி மெம்பர்களுக்கு என்னுடைய நன்றிகள். என்னுடைய ” சாதனை அரசிகள் “ புத்தக வெளியீடும் இங்கேதான் நடைபெற்றது. புத்தகம் படிக்கும் வழக்கம் மக்களிடையே பெருக வேண்டும். புத்தக வாசிப்பாளர்களுக்கும் புத்தக நேசிப்பாளர்களுக்கும் பாலமாக இருக்கும் பபாசிக்கும் புத்தக விற்பனையாளர்களுக்கும் நன்றிகள்” என்று சொன்னேன். அது மறுநாள் சன் ந்யூஸ் தொலைக்காட்சியில் வெளியானது. கிட்டத்தட்ட 10 முறை ஒலிபரப்பானது பார்த்து தொடர்பு கொண்டு வாழ்த்திய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

புத்தக வெளியீடு கொஞ்சம் கடினமான பணிதான். ஒரு வீட்டைக் கட்டுவது போல ஒரு திருமணத்தை நடத்துவது போல, ஒரு தேரை வடம் பிடிப்பது போல.. ஆனால் தொட்டுவிட்டால் எல்லா கஷ்டங்களோடும் உதவிக்கரங்களும் நீண்டு உங்களுக்கு நல்ல அனுபவங்களைக் கொடுக்கும். கிரஹப் ப்ரவேசம் முடிந்தபின் சிலரை விட்டிருப்போம், திருமணத்தின் போது யாரின் அதிருப்தியாவது கலந்து காயப்படுத்தும். ஆனால் யார் யாரோ இழுத்து தேரை நிலைக்கு கொண்டுவருவது போல முடித்தவுடன் ஏற்படும் நிச்சலனம் அருமையானது. ஒரு ஞானி நிலைக்கு வந்து விடுவீர்கள்..:)

இந்த சந்தோஷங்களோடு சந்தோஷமாக புத்தகத்தில் வந்தவர்களே பல பிரதிகள் அடிப்படை விலைக்கே வாங்கிக் கொள்ள என் அன்பிற்கு உரிய சகோதரர் வேடியப்பனும் தன் டிஸ்கவரி புத்தக நிலையம் மூலமாக விற்ற 150 காப்பிகளுக்கும் ஒரே செக்காக கொடுத்து விட்டார். கிரெடிட்டும் ஆகிவிட்டது அக்கவுண்டில்.

இந்த புத்தக திருவிழாவில் முதல் புத்தகத்தை வெளியிடும் சந்தர்ப்பம் கொடுத்த பபாசிக்கும் என் அன்பு சகோ வேடியப்பனுக்கும் நன்றிகள்.

புத்தகம் வெளியிடும் நாளன்று பேட்டி எடுத்த ஆஸ்திரேலியன் வானொலியின் திரு ராமன் நாகப்பன் ,”இது அன்பால் சேர்ந்த கூட்டம்” என்றார். மேலும்”ஒரு கவிதாயினியாய் உங்களின் எத்தனையோ படைப்பிருக்க நீங்கள் ஏன் இதை மட்டும் எடுத்து வெளியிட்டீர்கள் ?”,என்று கேட்டார். என் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எல்லாம் நான் எழுதியது. இது இவர்களின் வாழ்வு , போராட்டம். நான் பேட்டி எடுத்த இவர்களின் வெற்றிக் கதைகளை மற்ற அனைவருக்கும் தன்னம்பிக்கை தரும்வண்ணம் சொல்ல விரும்பினேன் என்று கூறினேன். அதனால் நான் என் செலவிலேயே வெளியிட்டேன் என சொன்னேன்.

சன் டிவியில் பேட்டி எடுத்த திரு . விஜய் அவர்களுக்கும் நன்றிகள். ( இவர் என் புத்தகத்தின் பேரைக் கேட்டு பணம் கொடுத்து வாங்கிச் சென்றார். சும்மா வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்.). ”இந்த மாதிரி சாதாரண பெண்களாய் இருந்து சாதனை செய்பவர்களை நான் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் மீடியாவில் நாம் பார்க்க முடியாதவர்களை நீங்கள் அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். எனவே ஆவலாய் இருந்தது”, என சொன்னார். நன்றிகள் விஜய்.

நன்றி பபாசி, டிஸ்கவரி, ஆஸ்த்ரேலியன் வானொலி, சன் நியூஸ் குழுமம்.



சனி, 21 ஜனவரி, 2012

பதின்பருவப் பிள்ளைகளின் அம்மா II

பதின்பருவப் பிள்ளைகளின் அம்மா:-
*****************************************

வளரும் பிள்ளைகளின்
அம்மாவாய் இருப்பது
அற்புதம்தான்..
கொஞ்சம் கொஞ்சல்
கொஞ்சம் பொய்
கொஞ்சம் உரைத்தல்
கொஞ்சம் மறைத்தல்
எல்லாம் உணர்ந்தும்
மௌனமாய் இருக்கக்
கற்க வேண்டும்.

கைபேசியோ
கணணியோ
கவனிக்கப்படவேண்டும்
எல்லைமீிறா வகையில்.
படபடவென்று
சண்டையிடும்போதும்
தூக்கி எறிந்து பேசும்போதும்
உணரவேண்டும்..
பேசுவது அவர்களல்ல..
துடித்தோடும் ரத்தம்.

மனம்கவர் நட்போ
அதனோடான உராய்வோ
வரைந்து வைக்கும்
மந்தகாச ஓவியமோ
கரிக்கிறுக்கல்களோ
கண்டும் காணாமல்
கடக்க வேண்டும்.
கேள்விகளற்று..
பிள்ளைகள் புலிகளாய்
சீறப்போகும் சூத்திரம் உணர்ந்து.

இராத்தூக்கம் மறந்து
போர்வைக்குள் மறைந்து
கூடா நட்போடு
கதைக்கும் மகளோ
டிஸ்கோதேயில் தொலைந்து
பீருக்குள் கரைந்து
கூகை ஒலிக்கும் நேரம்
வரும் மகனோ பார்த்து
அதிராமல் இருக்க
பழக வேண்டும்.

ஒரு நட்பு தொலைத்து
மறு நட்பில் உயி்ர்த்து
உனக்கென்ன தெரியுமென
கேட்கும் பிள்ளைகளிடம்
கடித்துக் குதறவோ
சுயகௌரவம் காட்டவோ
விடுதலைப்பத்திரம் நீட்டவோ
தூக்கிப் போட்டுப்
போகவோ முடியாது
திருமண பந்தம் போல.

உள் வைத்து உணவூட்டியது
போல் எளிதில்லை
வெளியில் உணர்வூட்டுவது.
இதுவும் கடப்போமென
எளிதாய் நகர்ந்தால்
அனுபவம் அவர்க்குச்
செமிக்கச் சொல்லும்
வயிற்றில் சுமந்தவள்
மேலேற்றும் கவலையோடு
மனதிலும் சுமக்கிறாளென..


.

வெள்ளி, 20 ஜனவரி, 2012

நன்றி சுரேகா...சாதனை அரசிகள் விமர்சனத்துக்கு..



சக வலைப்பதிவராவும் ஒரு நல்ல நண்பராகவும் சுரேகா எனக்கு முதன் முதலில் கேபிள்ஜி எனப்படும் நண்பர் கேபிள் சங்கரின் லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் என்ற முதல் புத்தக வெளியீட்டின்போது அறிமுகம். அதாவது அவர் விழாவை அழகாக தொகுத்து வழங்கினார். அழகிய தமிழ். சரளமான நடை. புன்னகை முகம். பின் அவரின் வலைத்தளம் படித்ததுண்டு . அவர் சென்று வந்த, வாழ்ந்த ஊர்கள் பற்றிய பதிவுகள். அவர் வாழ்க்கைத் துணையின் ஒருமித்த எண்ணப் போக்கு பற்றிய பிரமிப்பு, பின் அவரின் நீங்கதான் சாவி என்ற நூல் , என்று ஆச்சர்யப்பட வைத்தவர் அவர்.

அந்த தன்னம்பிக்கை நூலைப் படித்து நான் எழுதிய விமர்சனம் திண்ணையில் வெளிவந்தது. என் வலைப்பதிவிலும் பகிர்ந்துள்ளேன். அவர் என் நூலைப் படித்து முதல் விமர்சனம் கொடுத்தது மிக சந்தோஷமான நிகழ்வு. நன்றி சுரேகா. வேறென்ன சொல்லி விடப்போகிறோம் நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் எல்லாவற்றையும் நிறைவாக்குவதை விட..!!!

இனி அவரின் விமர்சனம். உங்களுக்காக..

////வெற்றிக்கதைகள் படிப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும். சாதித்த மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இருந்த இடர்களைப் படிக்கும்போது அந்த உழைப்பின் மேன்மை உரைக்கும் செய்திகள் ஏராளம்!

அந்த வகையில் ‘நமது பதிவரும்..பிரபல கவிஞர், எழுத்தாளர் என்று அறியப்படுபவருமான தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதி சாதனை அரசிகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் சொல்லும் சாதனை மனிதர்கள் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள்.

மொத்தம் பதினேழு பெண்மணிகள். வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரது வெற்றிக்கும் பின்னால் இருந்த ஒரே ஒற்றுமை, -உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை.! மேலும் அவர்கள் ஜப்பானிலோ, ஜமைக்காவிலோ இல்லை.. நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம் நகரத்தில்..நம் மாநிலத்தில்…நம்முடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஒரு உண்மையும், நெருக்கமும் உணரமுடிகிறது.

முதலில் ரம்யா தேவி! – இவரை நான் ஒருமுறை அப்துல்லா அண்ணனின் அலுவலகத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் பார்த்திருக்கிறேன். சில நிமிடங்கள் பேசினோம். ஆனால்..இவ்வளவு சிறந்த பெண்மணியை சந்தித்திருக்கிறோம் என்று இதைப்படித்தவுடன்தான் உணர்ந்தேன். 13 வயதில் வாழ்வைப் புரட்டிப்போட்ட தீ விபத்திலிருந்து மீண்டு இன்று பலரது வாழ்வை நல்முறையில் புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறார். இவர் புதுக்கோட்டையில் படித்திருக்கிறார் என்பது எனக்கு தனிப்பெருமை! ரம்யா தேவி அவர்களே! உங்களைப் பாராட்டுவது சிறியது! வணங்குவதே உரியது!

அடுத்து மோகனா சோமசுந்தரம் – ஆலோசனை சொல்லி வந்த ஆங்கிலக் கடிதத்தை , காதல் கடிதம் என்று எண்ணி அல்வாவில் விஷம் வைத்துக் கொல்ல முயற்சித்த குடும்பத்திலிருந்து வந்த சுயம்பு! கல்வியின் மேன்மையால் தன்னையும் சமூகத்தையும் உயர்த்திய உத்தமப் பெண்.! புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இரும்புப் பெண்மணி!

மணிமேகலை – புத்தக வெளியீட்டன்று இவரை நேரிலேயே சந்தித்தேன். நீண்ட நாள் பழகியவர் போல் அன்பாகப் பேசிக்கொண்டிருந்தார். உணவருந்த அமர்ந்த சிறுமி, பக்கத்து வீட்டில் தீ பற்றுகிறது என்று தெரிந்தவுடன், யாரும் சொல்லாமல், நீரை எடுத்துச்சென்று ஊற்றி அணைத்திருக்கிறார். இது போதும்! அவரது உதவும் குணம் சொல்ல! அப்படிப்பட்டவர் இன்று ஒரு பெரிய அரசு அதிகாரி..! தலித் பெண்களின் துயர்துடைக்கும் சாதனையாளர்.!

சாருமதி,தமிழரசி, வெங்கடேசன் – சமூக அக்கறையுடன், வெறுப்பின்றிச் செயல்படும் கூட்டுச் சாதனையாளர்கள்.

மாங்குரோவ் காடுகளைப்பற்றி ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்ற, சூழல் அக்கறை உள்ள ஆஸ்வின் ஸ்டான்லி..

உடலில் நோய்கள் முற்றுகை இட்டாலும், உள்ளத்தில் உறுதியை முற்றுகையிடவைத்து அரசுப்பள்ளியில் அற்புதங்கள் நிகழ்த்தும் ஆசிரியை லூர்துராணி.!

இருளர் இனத்துப் பெண்களின் இருள் நீக்குவதே குறிக்கொளாகக் கொண்ட வசந்தி!

அன்னையின் மரணச் சோகம் கூட ஆட்டத்தை பாதிக்காத வகையில் வெறியுடன் வெற்றிகண்ட கிரிக்கெட் வீராங்கனை திருஷ்காமினி

இதயநோயுடன் போராடினாலும், இன்முகத்துடன் செவிலியராய் வலம் வரும் உமா ஹெப்சிபா!

குழந்தை நட்சத்திரமாய் மிளிர்ந்து, நடனப்பள்ளியை நடத்திவரும் லெஷ்மி என்.ராவ்!

உயிர்போக்க வந்த தன் நோய் தீராமல், உறுப்பு தானம் செய்து பிறர் துயர் தீர்த்த அனுராதா!

அ வில் ஆரம்பித்த வாழ்வை ஆட்டோவால் நிமிர்த்தி, சி ஐ டி யு வின் மாநிலக்குழு உறுப்பினராக உயர்ந்திருக்கும் சாந்தி!

ஐந்து வயதில் தாயை இழந்து, நம்பிக்கையை உரமாக்கிக்கொண்டு, பிறர் வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் ஸ்ரீலேகா!

ஒரு கட்டுப்பெட்டிக் குடும்பத்திலிருந்து ,கனவுகளை மட்டுமே கருவாகக் கொண்டு திரைப்பட இயக்குநராக திரு திரு துறு துறுவென வெற்றிப் படியேறும் நந்தினி ஜே எஸ்! ( புத்தக வெளியீடு அன்று குட்டிப்பாப்பாவுடன் வந்திருந்தார். மிகவும் எளிமையாகப் பழகும் அன்புக்குரியவர்)

படித்தது கணிப்பொறியாக இருந்தாலும், கவிதைப்பொறியால் கலக்கி, திரைப்படப் பாடலாசிரியராக, கட்டுரையாளராக, தமிழ்ப்பேச்சாளராக வலம்வரும் 25 வயது தோழி பத்மாவதி!

சோதனைகளைக் கடந்து ஆயத்த சீருடை அதிபராய் வளர்ந்து நிற்கும் மகேஸ்வரி!

வாலிபத்திலேயே வால் ஸ்ட்ரீட்டை புரிந்துகொள்ளாதவர்கள் மத்தியில் , வயோதிகத்தில் பங்கு வர்த்தகம் செய்யும் உதாராண ஆச்சி முத்து சபா ரத்தினம் என சாதனையாளர்களின் சரித்திரங்களால் நிரம்பிக்கிடக்கிறது 80 பக்கங்கள்!

மனம் சோர்வாய் இருக்கும்போது , இதில் ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தால், ஒரு சாதனையாளரின் வாழ்க்கை விரியும். அவர் சந்தித்த துன்பங்களும் அதன் மீட்சியும், எழுச்சியும் நம்மைத் தட்டியெழுப்பி, ‘நமக்கு வந்திருப்பதெல்லாம் ஒரு கஷ்டமா? என்று தெளிவடைய வைத்து அடுத்த செயலை நோக்கிச் செல்ல வைப்பதுதான் இந்தப்புத்தகத்தின் ஒரே சிறப்பு, !

என் தோழி ஒருவருக்கு வாழ்வில் மிகப்பெரிய பிரச்னை ! என்னிடம் சொல்லி அழுதார்! எதேச்சையாக ஊருக்குக் கொண்டு சென்றிருந்த இந்தப் புத்தகத்தை அவரிடம் கொடுத்து படிக்கச்சொன்னேன்.. முடித்துவிட்டு அவர் சொன்னது இதுதான்..! எனக்கு வந்திருக்கிறதெல்லாம் ஒரு பிரச்னையா? பி.எச்.டி வேலை அப்படியே கெடக்கு அதைப் பாக்குறேன்..! என்று தெளிவாகிவிட்டார்.

இதுதான்..இந்த நூலின் வெற்றி!

உண்மையிலேயே செய்வதைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்ற முனைப்புடன் தன் எழுத்துலகப் பணியில் வெற்றி நடை போட்டுவரும் -இந்த நூலில் சொல்லப்படாத,- சாதனை அரசியான தேனம்மை லட்சுமணன் அவர்களே! சாதனைப் பெண்களை எங்களுக்கு வெளிக்காட்டியதற்கு நன்றி!

சாதனை அரசிகள் – தேனம்மை லட்சுமணன் – முத்துசபா பதிப்பகம் – ரூ.50.00

கிடைக்குமிடம்: : நம்ம டிஸ்கவரிதான்! ////

டிஸ்கவரியில் கிடைக்கிறது. திருப்பூர், காரைக்குடி புத்தக சந்தைகளிலும் கிடைக்க ஆவன செய்கிறேன். பெங்களூரு நண்பர்கள் ராமலெக்ஷ்மி, தவிர வேறு யாரும் இருந்தால் சொல்லுங்கள். அனுப்பி வைக்கிறேன்.


வியாழன், 19 ஜனவரி, 2012

அன்பின் அம்மாவும் அசடன் புத்தகமும்., குற்றமும் தண்டனையும் விமர்சனமும்.


அம்மா.. என்ன சொல்வது வார்த்தைகள் இந்த வருடங்களையும் வெற்றிடத்தையும் நிரப்பி விடுமா என்ன..?

எனக்கும் உங்களுக்கும் அறுக்கப்படாத தொப்புள் கொடி உறவாய் நம் தமிழ் அமைந்திருப்பது சிறப்பு அம்மா..

அசடன் புத்தகம் மிக அருமை.. படிக்க பல மாதங்கள் ஆகும்போல.

ஜெயமோகனின் முன்னுரையையே சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்தேன். அவர் எதையும் ஆராய்ச்சிக்கட்டுரைபோல சிறப்பாக வழங்குவதில் வல்லவர்.

உங்கள் கதைமொழிபெயர்ப்பில் நம் ஃபாத்திமா அம்மாவின் விமர்சனமும் பார்த்தேன்.

இன்னும் பல பிரபல எழுத்தாளர்களும் இருக்கும் இடத்தில் என்னுடைய விமர்சனத்தையும் சேர்த்தது உங்களுடைய பெருந்தன்மை அம்மா..

இன்னும் உங்கள் அடுத்த முயற்சிகளையும் எனக்கான தூண்டுதலாய் சுயநல நோக்கோடு உங்களின் அடுத்த புத்தகங்களையும் எதிர்பார்க்கிறேன் அம்மா.

பபாசி என்னும் தேரில் பல தெய்வங்கள். உங்கள் புத்தகங்கள் இருந்த இடத்தில் நான் எழுதிய ஒன்றும் அச்சிலேறி உற்சவமூர்த்தியானது குறித்து மகிழ்ந்தேன்.

எப்போது வருவீர்கள் உங்களை நேரில்காணலாம் என்ற ஆவலில் இருக்கிறேன்.

மாணவிகள் தன் ஆசிரியரை ஞாபகம் வைத்திருப்பது புதிதல்ல.. ஆனால் ஆசிரியை தன் மாணவியை ஞாபகம் வைத்து அடையாளம் காண்பிப்பதும் எளிதல்ல.

இது போராடிய ஜெயித்த பெண்களின் கதைகள்தான். உங்கள் அன்பை அருந்திய பாக்கியத்துடன் இன்னும் எனக்கான மற்றும் எல்லாருக்குமான இலக்கியம் படைக்கும் உறுதியையும் எனக்கு ஆசியாய் வழங்கும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் அம்மா.!

**********************************************************

என்னைப் பற்றியும் என் நூல் பற்றியும் அவர்கள் கருத்துக்கள் கட்டுரை வடிவில்

“மகளாய்.. மாணவியாய்..


***********************************************************

இது குற்றமும் தண்டனையும் விமர்சனம்:-


( ஏறக்குறைய 4 வருடங்களுக்கு முன் எழுதி என் அம்மாவுக்கு அனுப்பியதை அவர் தன் வலைத்தளத்திலும் வெளியிட்டு தற்போது தன்னுடைய அசடன் நூலிலும் பதிப்பித்திருக்கிறார். நன்றி அம்மா.:)

///தேனம்மை,மதுரை.
சின்ன வயதில் மிக்கேல் ஷோலகோவ் கதைகளை (தமிழ் மொழிபெயர்ப்பு)என் அம்மா வாங்கித்தந்து படித்திருக்கிறேன்.உலகத்தைச் சுற்றிவரும் ஒரு சிறுவனின் கதையையும் படித்திருக்கிறேன்.அதற்குப்பின்பு தற்போதுதான் ஒரு மிகச்சிறந்த ரஷிய எழுத்தாளரின் படைப்பைத் தமிழில் படிக்கும் பேரனுபவம் ஏற்பட்டது.பாராட்டுக்கள். உங்கள் முயற்சி அளவிடற்கரியது.எவ்வளவு பாராட்டினாலும் சொல்லில் அடங்காதது.

தனி மனிதர்களின் மன மேன்மைகளை,உன்னதங்களை,உயர் இலட்சியங்களை மட்டுமல்லாது குறைகளை,குணக்கேடுகளை,நோய் பிடித்த மனத்தின் சிறுமைகளை, சீரழிவுகளை,வக்கிரங்களை, அவலங்களை உங்கள் மொழியாக்கத்தின் மூலம் தரிசனம் செய்தபோது நிறைய ஆத்ம விசாரங்களும்,ஆத்ம விசாரணைகளும் ஏற்பட்டன.
சோனியாவின் ஜீவனோபாயமும்,ரஸ்கோல்நிகோவின் மனச்சங்கடமும், ஸ்விட்ரிகைலோவின் மன விகற்பமும் என்னை அவர்களுள் ஒருத்தியாக்கி,வேதனைப்படவும், அழவும்,வெகுண்டெழவும் வைத்தன. தன் உடன் பிறவாச் சகோதர,சகோதரிகளுக்காகவும், குடும்பத்தை இரட்சிக்கவும் அவள் விபச்சாரியாகும் காலகட்டத்திலும், முகஸ்துதிகள் மூலம் துனியாவை ஸ்விட்ரிகைலோவ் ஏமாற்றும் இடத்திலும் தவிர்க்க இயலாமல் அழுது கொண்டும், ஸ்விட்ரிகைலோவ் என் கையில் கிடைத்தால் கொன்று விடும் உத்தேசத்துடனும் இருந்தேன்.

ரஸ்கோல்நிகோவைப் பற்றித்தான் முன்பு நிறைய எழுத நினைத்தேன். ஆனால் நீண்ட நாட்களுக்குப் பின்பும் அந்த இரண்டு பெண்களும்தான் என்னை மிகவும் பாதித்து இருக்கிறார்கள். காரணம்,-அபலைகள்; தங்கள் வாழ்வைத் தாங்களே தீர்மானிக்க முடியாமல்-பணத்தின், சூழ்நிலையின், வாழ்க்கைத் தேவைகளின் கைப்பாவையாக- ஆனால்...உயர்ந்த கொள்கைகளிலும், உயர்ந்த பண்புகளிலும் உறுதியும், திடமும் உள்ளவர்களாக இருக்கும் அபலைகள்.

ஜூலை மாத மாலைநேரக் கசகசப்பில் ஆரம்பிக்கும் ரஸ்கோல்நிகோவின் வாழ்வைப்பற்றி நினைக்கும்போது-இனிப்பு உண்ணும்போதும் நாவினடியில் ஏற்படும் ஒரு சமயக் கசப்பு போல ஒரு சோகம் ஏற்படுகிறது.எப்படி வர வேண்டியவன் தன் வாழ்வை எப்படி ஆக்கிக்கொண்டான் என்றும்,சோர்வுற்ற மனமே சூழ்நிலைகளையும், தங்குமிடத்தையும் எப்படி மாற்றி விடுகிறது என்றும் எண்ணினேன். Once wearஉடைகளை ரஸுமிகின் வாங்கி வந்து கடை பரப்பும்போது, ஏழைகளின் வாழ்வு இவ்வளவு துயரங்களுக்கு உள்ளானதா என்று தோன்றியது.'ஏழை படும் பாடு' நாவலில் வரும் ஜீன்வால்ஜீனையும், கோஸத்தையும் நினைத்துக்கொண்டேன். இந்தியாவில் தீவிரவாதிகள் என்றும்,நக்ஸலைட்கள் என்றும்,மாவோயிஸ்டுகள் என்றும், சாராயம் காய்ச்சினான்...கஞ்சா விற்றான்...கொள்ளையடித்தான் என்றும் போலீசால் என்கௌண்டர் செய்யப்படும் தாதாக்கள்,குண்டர்கள்,அடியாட்கள் ஆகிய அனைவருமே குற்றம் செய்தவர்தானா என சிலர்

முகங்களைப்பார்க்கும்போது தோன்றும்.ரஸ்கோல்நிகோவ் போல தடி எடுத்தவன் எல்லாமே தண்டல்காரனாக ஆகிவிடமுடியாது.அது அடிப்படையிலேயே தவறு.

இந்தக்கதையின் மையக்கருவே ரஸ்கோல்நிகோவ் தன் குற்றத்தைத் தானாகவே ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்றுக்கொள்கிறானா என்பதுதான். மனித மனம் எத்தனை விசித்திரங்கள் நிரம்பியது என்பதை ...நான் பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியைப் படித்துத்தான் புரிந்து கொண்டேன். சாதாரண விஷயத்திற்கே சிலர் உண்மையைக்கூறாதபோது 'எவ்வளவு பொய், நெஞ்சழுத்தம்' என்று நினைத்துக்கொள்வேன். ரஸ்கோல்நிகோவ் நம் மனமே ஆயாசப்படும் வகையில் -கடைசி வரையில் குற்றத்தை முழுமனதோடு தானாக ஒப்புக்கொள்ளவே இல்லை.சோனியாவின் அன்பு, காதல், மற்றும் அவளது வார்த்தைகளுக்காகத்தான் ஒப்புக்கொள்கிறான் என உணர்ந்தபோது -மனித மனதில் கடைசிவரை போராடிப்பார்க்கும்....தன் செயலை எல்லாம் நியாயப்படுத்த நினைக்கும் ஒரு extreme corner இருக்கிறது(எல்லோருக்குமே) என உணர்ந்து கொண்டேன்.
ஆனால் ஒன்று சொல்ல வேண்டும்; ரஸ்கோல்நிகோவின் உடல் உபாதைகள்,மனச்சோர்வு,கொள்கை உறுதி, செயலில் நிலையாக நிற்பது ...இவை எல்லாமே நம்மைப்பிடித்து ஆட்டுகின்றன. அவன் போலீசில் மாட்டி விடக்கூடாதே என்ற பேராசையும், அவனைத்துன்பப்படுத்தும் போர்பிரி பெத்ரோவிச்சை ஏதாவது செய்து விடலாமா என்ற விபரீத எண்ணங்களும் நமக்கே உதிக்கின்றன.

ரஷியாவில் ஏற்பட்ட பலவித புரட்சி மாற்றங்களைக் கதை பேசுகிறது.அந்த எண்ணச்சிக்கல்களுக்குள் மாட்டிக்கொண்ட ஏழை இளைஞன் ரஸ்கோல்நிகோவின் வாய்க்கசப்பும், எதோ ஒரு தாகத்தில் தவிப்பவனைப்போல அலையும் அலைச்சலும், அவனுடைய பழைய உடைகளும், தொப்பியும், ஷூக்களும் நம்மைத் தீவிரமாகப் பாதித்துக் காய்ச்சலை உண்டு பண்ணுகின்றன.

துனியாவுக்குத்தான் எவ்வளவு சோதனைகள்...இடர்ப்பாடுகள்! ரஸ்கோல்நிகோவின் மீது அவன் தாய் பல்கேரியா அலெக்ஸேண்ட்ரோவ்னா வைத்த பாசமும் , நம்பிக்கையும் நம் மனதை நெகிழச்செய்கிறது. காதரீனா இவானோவ்னா இந்திய ஏழைத் தாய்களின் பிரதிநிதியாகவும், மர்மெலாதோவ் இந்தியக்குடிகாரத் தந்தையின்(மனைவி தாலியைப்பறித்துக்கொண்டுபோய்க்குடிப்பது) பிரதிநிதியாகவும் இருக்கிறார்கள்.

அல்யோனா- பணக்காரர்களின், அடாவடிக்காரர்களின், அக்கிரமக்காரர்களின் குறியீடு;

ரஸ்கோல்நிகோவ்- ஏழைகளின், இயலாதவர்களின்,புரட்சிச் சிந்தனையாளர்களின் கோபத்தின் குறியீடு;

ஸ்விட்ரிகைலோவ் ,லூசின் -கயவர்களின் குறியீடு;

துனியா, சோனியா -நேர்மைகளின்,நம்பிக்கைகளின், நன்னெறிகளின், நல்லொழுக்கங்களின் குறியீடு (அறியாமையினாலோ, குடும்பத்தேவையினாலோ பிறழ்ந்தவர்களை நான் மோசமானவர்களாகக் கருதவில்லை);.

காதரீனா, மர்மெலாதோவ்-இயலாதவர்களின், வறுமையின் குறியீடு.

போர்பிரி பெத்ரோவிச்-கடமை தவறாதவர்களின் குறியீடு.

லெபஸியாட்னிகோவ், ரஸுமிகின் போன்ற இளைஞர்கள்தான் நல்ல,,இனிமையான எதிர்காலத்துக்கான குறியீடு.

இவ்வளவு உணர்வுகளையும் படித்து...புரிந்து...உணர்ந்து...அனுபவித்து எங்களுக்காகக்கொடுத்திருக்கிறீர்களே ,உங்கள் கரங்களுக்கு ஆயிரம் வந்தனங்கள். ///

அசடனைப் படிக்க இன்னும் இரு மாத கால அவகாசம் தேவைப்படும். இவ்வளவு பெரிய நூலை எப்படி மொழி பெயர்த்தீர்களோ என்ற ஆச்சர்யத்துடன் இன்னும் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அம்மா. அதில் வரும் காரெக்டர்ஸ் படங்களுடன் முன்னுரையில் இருப்பது சிறப்பு.

ஜெயமோகனின் நல்லவர் , கெட்டவர் இயல்பு ( தெய்வீகத்தன்மை மற்றும் அசட்டுத்தனம், புத்திசாலித்தனம் மற்றும் கயமைத்தனம் ) பற்றிய ஒப்பீடுகளை சிறிது நேரம் அசைபோட்டுக் கொண்டிருந்தேன். நானும் நூலை முழுமையான அனுபவித்தபின் எழுதுகிறேன் அம்மா எனக்குத் தெரிந்த மொழியில்..:)

புதன், 18 ஜனவரி, 2012

சாதனை அரசிகளை சந்தித்தமைக்கு நன்றி விஜயலெக்ஷ்மி, தஞ்சைவாசன், ரெங்கநாதன்.

என் புத்தகம் வந்ததும் முதன் முதலில் வந்து வாங்கியவர்கள் நண்பர்கள், தோழிகள் உறவினர்கள். முதன்முதலில் விமர்சனம் எழுதியவர் ரெங்கநாதன். அதன் பின் அன்புத்தோழி விஜி.. இவர்களுடன் தஞ்சைவாசன்.. மூவருக்கும் என் நன்றிகள்.

அங்கீகாரம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செயலுக்கும் தேவையாய் இருக்கிறது. என்னை அங்கீகரித்து நூலுக்கு மதிப்புரை அளித்திருக்கும் மூவருக்கும் நன்றி.. வேறென்ன சொல்ல..

விஜயலெக்ஷ்மி ஜெயவேலு:-
************************************

என் தோழி தேனம்மை லக்ஷ்மணன் எழுதிய "சாதனை அரசிகள்" என்ற புத்தகத்தை நேற்று புத்தக கண்காட்சியில் வாங்கி ஒரே மூச்சாக படித்துவிட்டேன்!!!

அப்பப்பா! என்ன ஒரு தடைகளற்ற வாக்கிய அமைப்பு! சொற் பிரவாகம் !!

வாழ்த்துக்கள் தேனு!!! இது உங்களுடைய முதல் படைப்பு என்று நம்பதான் முடியவில்லை!!!

உங்களுக்கு முதலில் இருந்து ஆதரவு தந்த மேடம் கிரிஜா ராகவன்,தாங்களே பேட்டி எடுத்த மேடம் பாத்திமா பாபு,கல்லூரி காலம் தொட்டு உங்கள் திறமை அறிந்த professor சுசீலா முன்னுரை,நட்புரை,வாழ்த்துரை இவற்றில் மிக்க பெருந்தன்மையும்,ஊக்கமும்,உங்கள்பால் அக்கறையும் தென்படுகிறது தேனு!!!

உண்மையில் ஒவொரு தோழியுமே சாதனை அரசிதான்!!!! அவர்கள் சந்தித்த சோதனைகளே சாதனைகளாக மாற்றிய முயற்சி, தன்னம்பிக்கை ஒரு கணம் எல்லோரையும் அசர வைக்கும்.

இவர்களில் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என் தோழியர்கள்!!

ரம்யா தேவி:

நான் வியந்து திகைத்த தோழி இவர்தான்!!!தன்னம்பிக்கையின் உச்சகட்டம்!!! காயத்திரி அக்காவின் நட்பு இவருக்கு பெரும்பலம் !!!ஆசைகளும் இளமை பூரிப்பும் அரும்பு விடும் 13 வயதில் நெருப்பு காயத்தால் ஏற்பட்ட ரணங்களை 42 plastic surgery மூலம் சரி செய்து தன்னம்பிக்கை உருவமாக ஊலா வருகிறார் தன்னால் முடிந்த சேவைகளை விடாமல் செய்து கொண்டு!!!

மோகனா அம்மா:

சோதனைகளே வாழ்க்கையாக பெற்றவர் .பெண்ணாக பிறப்பதற்கு மாதவம் செய்தல் வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டு இவரை பற்றி முக நூல் தோழியருக்கு நான் சொல்லவேண்டியது இல்லை!!!பள்ளி படிப்பு முதல் பிரின்சிபால் பதவி வரை பிறகு தனிப்பட்ட வாழ்கையில் அவர் சந்தித்த சோதனைகள்,சங்கடங்கள், இடர்பாடுகள்,அவமானங்கள் ஏராளம்!!புற்று நோய் தாக்குதல்,தொடர் சிகிச்சை இவற்றில் எல்லாம் மீண்டு புற்று நோய் பற்றி awareness எல்லோரிடமும் ஏற்படுத்தும் அளப்பரிய பணியை தொடர்ந்து கொண்டு இருக்கிறார். இது போதாது என்று எதிர்கால சந்ததினருக்கு science research என்று ஊக்குவித்து கண்ணுக்கு தெரியாத புரட்சியை அமைதியாக ஏற்படுத்துகிறார் !!!இவருக்கு ஒரு நாளைக்கு 24 மணிநேரம் பத்தாது அப்படி காலில் சக்கரம் கட்டி பறக்கும் பெண்மணி!!

மணிமேகலை:

iron lady என்றால் அது மணிமேகலை தான்!!! பெண்கள்,ஒடுக்கப்பட்டோர் இவர்களுக்கு ஒரு சிறு பிரச்சினை என்று தெரிந்தால் ஓடோடி வந்து களத்தில் நின்று போராடுபவர்!!!SC / ST போராட்டத்தில் பலமுறை சிறை சென்றவர்!!!கணிர் என்று ஒலிக்கும் இவர் குரல் நமக்கு பல மடங்கு உற்சாகம், தன்னம்பிக்கை தரும்!!!

சாருமதி,தமிழரசி :
மத்திய அரசில் அதிகாரிகளாக பணி புரியும் இவர்கள் நாம் கண்ணில் காணும் தெய்வங்கள்!!!ஈ புழுக்கள் இவற்றால் மொய்த்து அனாதையாக கிடக்கும் மன நிலை சரி இல்லாதவர்கள், வயோதிகர்கள், பெண்கள் இவர்களை சக தோழர்களோடு சுத்த படுத்தி மருந்திட்டு உணவிட்டு ,கவுன்செல்லிங் செய்து அவர்கள் உறவினர்கள் அல்லது காப்பகங்கள் சேர்ப்பதும் அவர்களை அரசு கவனத்திற்கு கொண்டு செல்வதும் இவர்கள் சிரமேற்கொண்டு செய்கிறார்கள் .WELL WISHERS OF MENTALLY ABNORMAL NATIONALS என்ற அமைப்பு ஒன்றை சட்ட ரீதியாக நிறுவி செவ்வனே செய்து வருகிறார்கள் !!


எங்கோ கண்ணுக்கு தெரியாமல் சோதனைகள் இடையே சாதனைகளை சேவைகளை செய்து கொண்டு இருக்கும் 17 பெண்களை பற்றி சமுகத்துக்கு வெளி கொண்டு வந்த தேனம்மை லக்ஷ்மணன் நீங்களும் சாதனை அரசிதான்!!!தொடரட்டும் உங்கள் எழுத்து பணி!!!
**************************

தஞ்சைவாசன். :-
*********************

மனிதனாய் பிறந்துவிட்ட நமது அனைவர் வாழ்விலும் சோதனை வருவதும், அதனை எதிர்கொள்வதும் பொதுவான ஒன்றுதான்... பெண் என்றால் இன்னும் அதிகமாகவே இருக்கும்... ஆனால்...

வாழ்வில் வந்த சோதனை எல்லாவற்றையும் கடந்து, வென்று சாதனையாக்கி மற்றவர்களுக்கு தானும் ஒரு முன்னோடியாக இருக்கும் இத்தகைய மங்கையர்களை பற்றி படிக்கும் போது மனதுக்குள் கண்டிப்பாக எனக்கே உற்சாகம் பிறக்கும் போது உங்களுக்குள் கண்டிப்பாக வெள்ளமாகவே இருந்திருக்ககூடும்...

அவர்களை பற்றி ஆய்ந்து, ஒரு நூலாக தன்னுடைய முதல் நூலாக எழுதி தானும் ஒரு சாதனை அரசியாக உங்கள் மனதிலும் உலாவரும் உங்கள் இனிய தோழிக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்...

நீங்கள் குறிப்பிட்ட அனைத்து மங்கையர்களுக்கும் மற்றும் எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் என் வாழ்த்துகள்...

*************************************

வி. ரெங்கநாதன்:-
********************

இன்று சாதனை அரசிகள் புத்தகத்தை கண்காட்சியில் வாங்கினேன். அட்டை படம், வடிவம், உள்ளே எழுத்துக்களின் வடிவம், அளவு அருமை.
என்னை மிகவும் கவர்ந்த விஷயம் பிழையின்றி நேர்த்தியான அச்சு படிக்க சுகமாக இருந்தது.
மூன்று புத்தகங்களின் ஆசிரியன் என்ற அனுபவத்திலும், தீவிர வாசிப்பை கைக்கொண்டவன் என்ற அணுகுமுறயிலும் நான் தெரிந்து கொண்டது நேர்த்தியான கட்டமைப்பை கொண்டுவருவது என்பது கடும் முயற்சிக்குப் பின்னேயே நடக்கக் கூடியது.
அந்த வகையில் பிரபல பதிப்பகங்களே வழுக்கி விழுந்து விடுகின்றன.
உங்கள் புத்தகம் நேர்த்தியோடு சமைக்கப்பட்டுள்ளது படிக்க ஊக்கம் அளிக்கிறது.
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

செவ்வாய், 17 ஜனவரி, 2012

லேடீஸ் ஸ்பெஷலின் ஸ்பெஷல் லேடியும் சாதனை அரசிகளும்...


வாழ்வின் சில தருணங்கள் எப்படி எதிர்ப்படுகின்றன என்பதை நாம் கணிக்கவே முடியாது. நம் கனவுகளை சூலுற்று பாதுகாத்து வைத்திருந்தால் நாமே அவற்றை ஒரு காலத்தில் சுகமாய்ப் பிரசவிக்கலாம் என்பது உண்மை,

திரு நாகப்பன் அவர்கள் என் உறவினர் மட்டுமல்ல.. என் பால்யகால புத்தகத் தோழர் என்பதும் உண்மை. அவரது புத்தக அலமாரியில் இருக்கும் புத்தகங்கள் எங்கள் விடுமுறைகளைப் புதுப்பித்தவை. ஒன்றைப் படித்துப் பத்திரமாய்த் திருப்பிக் கொடுத்தால்தான் அடுத்தது கொடுப்பார். அவ்வளவு ஸ்ட்ரிக்ட். என்னைவிட ஒரு வயது மூத்த என் தாய் மாமா அவர்.

வலைத்தளங்களிலும் இணைய தளங்களிலும் நான் எழுத ஆரம்பித்த புதிதில் இளமை விகடனில் என் கவிதைகள் வெளிவந்தன. அப்போதுதான் நாம் ஒரு எழுத்தாளர் என்ற வளையத்துள் வந்திருப்பது நமக்கே தெரிந்தது. படிக்கும் புத்தகங்களை எல்லாம் நம் கண்ணோட்டத்தில் விமர்சனம் எழுதி அது எல்லாம் திண்ணையிலும் வெளிவந்தது.

காந்தி ஸ்டடி சென்டரில் நடக்கும் புத்தக விமர்சனக் கூட்டத்துக்கு அவர் ஒரு குறுந்தகவல் அனுப்பி இருந்தார். A SLUM NO MORE -- இனி இது சேரி இல்லை என்ற புத்தகம் திரு பைரவனால் எழுதப்பட்டது குறித்த ஒரு விமர்சனக் கூட்டம் அது. என்னால் செல்ல முடியவில்லை. எனவே அது குறித்து கேட்ட போது திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் என்பவர் அது குறித்த தகவல்கள் சொல்வார் என சொன்னார்.

அவரிடம் தொலைபேசி அவரின் மூலம் சேவாலயா முரளியைத் தொடர்பு கொண்டு இந்த புத்தகம் சம்பந்தமான தகவல்கள் திரட்டி ( அது எங்கள் கே. கே. நகரின் அருகில் இருக்கும் சத்யா நகர்தான்..!!!) அது பற்றி ஒரு கட்டுரை எழுதி இளமை விகடனுக்கு அனுப்ப அது வெளிவந்து பலரது கவனத்தையும் பெற்றது.

அதைப் படித்த லேடீஸ் ஸ்பெஷலின் ஆசிரியை கிரிஜாம்மா ஈர்க்கப்பட்டு என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார். உடனே ஸ்ரீனிவாசன் சார் சொல்ல நான் தொடர்பு கொண்டேன். அவரே சிறப்பாக நடத்தி வந்த போதும் , லேடீஸ் ஸ்பெஷலில் இன்னும் இளைய சிந்தனை தேவைப்படுவதால் என்னையும் அழைத்ததாக சொன்னார்.

முதலில் கவிதைகள் சில அனுப்பினேன். சில கைபேசி கவிதைப் போட்டிகளும் நடத்தினோம். முதலீட்டுக் கேள்வி பதில்கள் திருமதி நாகப்பன் மூலம் கேட்டு பதிலளித்தோம். சில கட்டுரைகளும் எழுதினேன். அம்மா அருமை அம்மா என்ற தலைப்பில் வாசகிகள் அதைத் தொடர்ந்தார்கள்.

கிட்டத்தட்ட பெண் 25 வலைப்பதிவர்களை ஒவ்வொரு மாதமும் ஒரு வலைப்பதிவராக அறிமுகப்படுத்தியுள்ளோம். சில விஷேஷ இதழ்களில் ஆண் பதிவர்கள் படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.

பல தரப்பட்ட மக்களையும் சந்திக்க விழையும், பேச விழையும் என் குணம் கண்டு கிரிஜாம்மா என்னை ஒரு கட்டுரையாளராக்கினார் எனத்தான் சொல்ல வேண்டும். சில தலைப்புகள் செய்யலாம் என கேட்டேன்., முதலீடு , போராடி ஜெயித்த பெண்கள். மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள். இவற்றை என்னையே செய்யும்படிப் பணித்தார் .

தொடர்ந்து முதலீடும்( 4 கட்டுரைகள் ) , மருத்துவ விழிப்புணர்வு ( 7 கட்டுரைகள் ) வந்துள்ளது. போராடி ஜெயித்த பெண்கள் கட்டுரை பலரது கவனத்தையும் பெற்றது. முதலில் யாரிடம் கேட்பது என தயக்கம். வலைப்பதிவ நண்பராய் இருந்த ஈரோடு கதிரிடம் கேட்டதில் ரம்யாவை அறிமுகப்படுத்தினார். என்றாலும் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் யாரிடம் கேட்பது என தயக்கம். கிரிஜாம்மா நம்மைச் சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையிலேயே தேடுங்கள்.. உங்களைச் சுற்றியே விஷயங்கள் கிடைக்கும். ஒவ்வொருவராக சொல்லி வையுங்கள். என்றார். அதையே வேதவாக்காக பிடித்துக் கொண்டேன்.

கார்ப்பரேட் லெவலில் இருந்து களப்பணியில் இயங்குபவர் வரை ஒவ்வொரு பெண்ணின் போராட்டமும் ஒவ்வொரு மாதமும் கண்முன்னே தொடர்ந்து வந்தது. இதை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாகப் போடும் முயற்சியை மேற்கொண்டேன். அதற்கான முன்னுரையில் அவர்

///எழுத்து ஆர்வம் அதிகமாக இருந்தாலும் பத்திரிக்கையாளராக தனக்கு அனுபவம் இல்லையே என்கிற பயம் அவருக்கு ஆரம்பத்தில் இருந்தது. இருந்தாலும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் தன்னம்பிக்கையும் இருந்தது. ’போராடி ஜெயித்த பெண்கள் ’ என்கிற பெயரில்தான் இந்தக் கட்டுரைகள் லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்தன. இப்படி சாதித்த பெண்களைத் தேடிக் கண்டுபிடித்து எழுதுங்கள் என்று சொன்னபோது ,’ நாலைந்து பேரை வேண்டுமானால் கண்டுபிடிக்கலாம். அதற்குமேல் முடியுமா தெரியவில்லை’ என்று தயங்கிக் கொண்டிருந்தவர் அடுத்தடுத்து பலரைக் கண்டுபிடித்து சுவைபட எழுத ஆரம்பித்து விட்டார். இதன்முலம் பல புதிய சாதனை சகோதரிகளைத் தெரிந்து கொண்டதில் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி//

என குறிப்பிட்டு இருக்கிறார். இன்று உங்கள் கைகளில் தவழும் சாதனை அரசி என்னுடைய விட்டுப் போன கனவான விகடன் மாணவ நிருபர் திட்டத்தின் தொடர்ச்சியாக செயல்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். விகடன் மாணவர் பத்ரிக்கையாளர் திட்டம் கொண்டுவந்தபோது நான் கல்லூரியில் மூன்றாமாண்டு வேதியல்படித்தேன் . இரண்டாமாண்டு படிப்பவர்கள்தான் அப்ளை செய்ய முடியும். என்ன செய்வது என்று ஒரே வருத்தம். ஜர்னலிசம் படிக்கலாம் அல்லது எல் எல் பி படிக்கலாம் என நினைத்தால் வீட்டிலிருந்தே தொலைதூரக் கல்வியில் பொலிட்டிகல் சயின்ஸ் படிக்க அனுமதி கிடைத்தது. முதலாமாண்டு முடிந்ததும் திருமணம். அடுத்தடுத்து பிள்ளைகள்.

இன்னும் வாழ்வு என்பது இருக்கிறது., பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். இண்டிவிஜுவல் ஆகிவிட்டார்கள், நாம் மட்டும் பாசப் பைத்தியங்களாக செக்கு மாடுபோல ஒன்றையே சுற்றி வருவது எல்லாருக்கும் அன்பு இடைஞ்சல் எனப் புரிந்தது.

நம் எண்ணங்கள் , கனவுகளுக்கான காலகட்டம் இது. அதை யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் செயல்படுத்துவோம் என நினைத்தேன். முதலில் வெளி உலகம் நம் அவசரத்துக்கும், செயல்களுக்கும், உடன்பாடானதாக இல்லை. இன்று கிரிஜாம்மாவிடம் கேட்டால் சொல்வார்கள்.. அன்றைய தேனம்மையிடம் இருந்த படபடப்பு போய் இன்று கொஞ்சம் அமைதி இருக்கிறது என்று.

இவற்றுக்கெல்லாம் நான் சந்தித்த சாதனை அரசிகள்தான் காரணம். முதல் சாதனை அரசி கிரிஜாம்மாவின் புத்தகங்களிலிருந்தும் வழிகாட்டுதலில் இருந்தும் நான் கற்றுக் கொண்டது நிறைய.. உலகைப் புரிய வைத்த என் சாதனை அரசிகளுக்கு என் நன்றி..

நன்றி சில ஆண்களுக்கும்.. என் கணவர், என் அப்பா, என் குழந்தைகள் .. இவர்கள் தவிர என் விழாவை தன் விழாவாக வந்து சிறப்பித்த திரு பாரதி மணி ஐயா அவர்கள். என் மாமாவான நாகப்பன் ( புகழேந்தி), வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன், சேவாலயா முரளி, ஈரோடு கதிர், இந்தப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரே சாதனை ஆண் வெங்கடேசன். சொன்னவுடனே மிக உற்சாகத்துடன் அட்டைப் படம் வரைந்து அனுப்பிய ஜீவாநந்தன், புத்தக அமைப்பில் உதவி வழிகாட்டிய செல்வகுமார், கரிசல் மீடியா மகேந்திரன், டிஸ்கவரி புத்தக நிலைய வேடியப்பன் மற்றும் என் முகப்புத்தக நண்பர்கள். !!!!

நன்றி என் வலைப்பதிவ சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்களுக்கும்.!!!

வருடந்தோறும் என்னை ஊக்குவிக்கும் தமிழ்மணத்துக்கும், இணைய தளங்களுக்கும், மற்ற பத்ரிக்கைகளுக்கும் , வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்கும் நன்றி. !!!

பொங்குக பொங்கல்., இன்பமும் மகிழ்வும் கூட.!!!


சனி, 14 ஜனவரி, 2012

சுசீலாம்மாவின் வாழ்த்துரை.. சாதனை அரசிகள் புத்தகத்தில்.


என் தாய் தமிழ் பேச கற்றுக் கொடுத்தார். அது என் தாய் மொழி என்பதால் இலகுவாகக் கற்றுக் கொண்டேன். கல்லூரியில் தமிழின் மேல் என் காதலைக் கண்டுபிடித்தார் சுசீலாம்மா. என் தமிழன்னை. பெண்கள் பற்றிய அவரது ஒரு ஆராய்ச்சிப் படிப்புக்காக நிரம்பி வழியும் அவரது அலமாரியில் இருந்து தினம் எங்களுக்கு ஒரு நூல் வரும். ( எனக்கும் உமா மகேஸ்வரிக்கும்) . தினம் ஒரு கவிதை எழுதுவோம். தினம் எங்களுக்கு அதற்கான ஒரு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். தினம் தினம் தாயவளின் சன்னதியில் ஒரு தீப தரிசனம் போல எங்கள் தமிழ் தரிசனம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்தில் வலைப்பதிவர் திரு பால பாரதி ஒரு கதை சொன்னார். அதில் ஒரு குழந்தை அவரின் டீச்சர் ஒவ்வொரு எழுத்தைச் சொல்லும் போதும் , ம் , ம் எனச் சொல்ல குழந்தை அடுத்தடுத்த எழுத்துக்களைச் சொல்லும் ஒரு கதை.. மிக அருமை.. எங்க சுசீலாம்மாவும் எங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக ஒவ்வொரு நாளும் அவரின் பணிக்கிடையிலும் எங்கள் டைரிகளை வாசிப்பார். கருத்துக்கள் இடுவார். இன்னும் என்னிடம் பத்திரமாய் இருக்கும் பொக்கிஷங்கள் அவை. அந்த ம் கொட்டுதல் நின்றபின் நான் எழுதுவதையே மறந்தேன்..

மதுரையில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் இருந்தபோது டாப் 10 பெஸ்ட் செல்லர் என குற்றமும் தண்டனையும் என்ற நாவலை குமுதத்தில் போட்டிருந்தார்கள். அப்போது என் தமிழன்னையை காணும் ஆவலில் இருந்த நான் அந்தப் புத்தகத்தையே மொழி பெயர்த்தது அவர்தான் என்னும் செய்தியறிந்து காணத்துடித்தேன்.. இன்னும் கூட காணவில்லை.. ஏனெனில் அவர்கள் டெல்லியில்.

இந்த இடைப்பட்ட வருடங்களில் என் அம்மா வலைத்தளம் வைத்திருப்பது அறிந்து கணினி என்றாலே அச்சமுற்றிருந்த நான் எல்லாவற்றிலும் புகுந்து புறப்பட்டு இன்று ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறேன் என்றால் அது அவர்களின் தொடர்ந்த ம் கொட்டுதலில்தான்.. அதாவது ஊக்கமூட்டுவதில்தான்.. நன்றி அம்மா.. இன்னும் உங்கள் அங்கீகாரத்துக்காக ஏங்கும் குழந்தைதான் நான்.

என் அம்மா இடியட் என்னும் அடுத்த நாவலை மொழிபெயர்த்து அசடன் என்ற பெயரில் ( பாரதி பதிப்பகம்) சக்கைப் போடு ( நடுவில் வடக்கு வாசலில் தேவந்தியும் வெளியிட்டிருக்கிறார்கள். ) போட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் நானும் ஒரு புத்தகம் வெளியிடக் காரணமாய் இருந்த என் அன்பு அம்மாவுக்கு நன்றிகள்..

அவர்கள் என் சாதனை அரசிக்காக எழுதி அனுப்பிய வாழ்த்துரை பெரிது. அதில் சில வரிகள் இதோ..

///மதுரை பாத்திமாக் கல்லூரி வளாகத்தில் ’80களில் தேன்சிட்டாகப் பறந்து திரிந்த தேனம்மை இரசாயனம் படிக்(ரு)க வந்து தமிழ்த் தேன் மீது காதல் கொண்டவர்.சுறுசுறுப்பும்,புதியன தேடும் நாட்டமும்,படைப்புத் திறனும் கல்லூரிப் பருவத்திலேயே அவரிடம் நிரம்பித் தளும்பியதைக் கண்கூடாகக் கண்டிருக்கும் சாட்சி நான். அந்த உயிர்த்தீயை, எழுத்தாற்றலைப் பல்லாண்டுக் காலமாய் அணைந்து விடாமல் அடை காத்துக் கொண்டிருந்து,உரிய வேளை வந்தபோது வலையுலகிலும்,இதழியல் துறையிலும்,கவிதைப் படைப்பிலும் அவர் தனி முத்திரை பதித்துக் கொண்டிருப்பதைக் காணும்போது நான் பெருமகிழ்வும்,பெருமிதமும் கொள்கிறேன்.///

மிக்க நன்றியும் நெகிழ்வும் அம்மா. உங்கள் குரலை தொலைபேசியில் கேட்டாலும் உங்கள் எழுத்துக்களைப் படித்தாலும் உங்களை நேரில் காணும் ஆவலில் இருக்கிறேன். அன்பின் அம்மா ..!!வாழ்க வளமுடன், நலமுடன் எங்களுக்காய் பல்லாண்டுகாலம்..:)



வியாழன், 12 ஜனவரி, 2012

என் அன்பின் அம்மாவுக்கு..

எங்களுக்காய்
கடவுள் அனுப்பிய தேவதையே..
அன்பெனும் குடுவையான அழகியே..
உன் உதிரத்தைப்
பாலாக்கி உரமூட்டியவளே..

வீட்டினுள் இருக்கும்
விளையாட்டுத் தோழி நீ..
வேதனையில் சாயும் போது
போதி மரம் நீ..

ஆப்ரா கா டாப்ரா
சொல்லாமலேயே
உன் அன்பெனும்
மந்திரத்தால்
எங்களை வண்ணமயமாக
உருமாற்றுகிறாய்..

கலாசாலைகளும்
கற்பிக்க இயலாததெல்லாம்
கற்றுக் கொடுத்த
உயிர் கல்விக்கூடம் நீ..

உன் பார்வை பார்த்தே
நல்லது கெட்டது கண்டு
ஒதுங்குகிறோம் நாங்கள்..

உத்யோகம் புருஷ லட்சணம்
மட்டுமல்ல..
பெண்ணுக்கும்தான் என
புகட்டியவள் நீ..

மனத்தடைகளையும்
உடல் தடைகளையும்.,
உத்யோகத்தடைகளையும்
எளிதாய்த்தாண்டக்
கற்பித்தவள் நீ..

எந்த இரவுகளிலும்.,
எந்த இடங்களிலும்
நான் என் சுயத்தை
இழந்ததேயில்லை..

என் சுயத்தின்
ஆழ வேர் நீ..
அதன் கிளை நான்..
அதுதான் அசையாமலிருக்கிறேன்..

நீ எவ்வளவு இட்டாலும்
எங்களுக்குக் கொள்ளும்தான்..
உன் அன்பை மட்டுமே புசிக்கும்
காயசண்டிகைகள் நாங்கள்..

டிஸ்கி:- என் முதல் புத்தகம் சாதனை அரசிகளை என் அம்மா , அப்பா பெயரில்தான் ”முத்துசபா பதிப்பகம்” வெளியிட்டேன். இந்தக் கவிதை அவர்கள் இருவருக்கும் சமர்ப்பணம்.


புதன், 11 ஜனவரி, 2012

சாதனை அரசிகள் வெளியீடு 35 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில்..

டிஸ்கவரி புத்தக அரங்கில் என்னுடைய புத்தகத்தை என் கணவர் வெளியிட உயர்திரு பாரதி மணி ஐயாவும், இளம் பெண் கிரிக்கெட்டர் திருஷ்காமினியும் பெற்றுக் கொண்டார்கள்.

சாதனைப் பெண்கள்.. இயக்குநர் நந்தினியும் , தலித் பெண்கள் சங்கத் தலைவி மணிமேகலையும்.

சாதனைப் பெண் தைர்ய லெக்ஷ்மி ரம்யா தேவி..:)
சாதனைப் பெண்கள் சாருமதி, தமிழரசி, மற்றும் வெங்கடேசன்.


நண்பர்கள் செல்வகுமார், ராஜிக்கா..:)



ஆஸ்த்ரேலிய வானொலியில் இருந்து சாதனை அரசிகளைப் பற்றிய நேர்காணல்.

சாதனை அரசிகளை வெளிக்கொணரக் காரணமான சாதனை அரசியுடன் லேடீஸ் ஸ்பெஷல் அலுவலகத்தில் ஸ்பெஷலாக ஒரு வெளியீடு.

இன்னும் சில சாதனை அரசிகள் வெளியூர் , வெளிநாடுகளில் இருப்பதாலும். உடல் நலக் குறைவால் கூட்டத்தில் வர முடியாமல் இருவரும், தொடர்ந்த களப்பணி காரணமாக 4 பேரும்., குடும்ப விஷேஷம் காரணமாக இருவரும் வரவில்லை.. எனினும் அவர்கள் அன்பும் ஆசியும் இருந்தது. அவர்களுக்காக டிஸ்கவரி புத்தக நிலையத்தில் ஜனவரி 22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்திருக்கிறேன். சென்னைப் பெண் பதிவர்களும்., பதிவுலக , பத்ரிக்கை நண்பர்களும் கட்டாயம் வருக. !

நன்றி.! நன்றி..! நன்றி...! மக்காஸ்.. !!! உங்கள் பேராதரவுடன். அன்றைக்கே நூற்றுக்கு மேல் விற்றது புத்தகங்கள். உங்கள் வருகைக்கும்., அன்புக்கும், தொடர்ந்த, தொடரும் ஆதரவுக்கும் நன்றி.. தேனம்மைலெக்ஷ்மணன்.


சனி, 7 ஜனவரி, 2012

சாதனை அரசிகள் விழா அழைப்பிதழ்:-


என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய வலைப்பதிவ சகோதர, சகோதரி மற்றும் தோழமைகள், வாசகர்கள், உறவினர்கள் அனைவரும் வருக..!!!

என்றும் உங்கள் அன்புடன், ஆதரவுடன் தேனம்மைலெக்ஷ்மணன்.

டிஸ்கி:- நன்றி லேடீஸ் ஸ்பெஷல், நண்பர்கள் ஜீவாநந்தன், செல்வ குமார், அன்பு சகோ வலைமனை சுகுமார், அன்பு சகோ வேடியப்பன்.:)

வியாழன், 5 ஜனவரி, 2012

எப்போதும் உங்களுடன் 106.4 ஹலோ எஃப். எம்மில்

டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஹலோ எஃப்.எம்மில் ஒரு நல்ல கலகலப்பான நிகழ்ச்சி. சர்வதேச சினிமா பற்றி ப்ரபலங்கள் கருத்து பகிர்ந்து கொண்டிருந்த நேரத்தில்., நாமும் நம்ம கருத்தை சொன்னோம். ( நாம பிரபலமா, நேயரா என்பது கொஸ்டீனபிள்..!!!). கருத்து கேட்டாங்க .. சொன்னேன்.

நம்மோட சினிமா பற்றி , அதன் வளர்ச்சி பற்றி , மற்றும் பொதுவான தங்கள் கருத்துக்களை எல்லாம் சொல்லிகிட்டு இருந்தாங்க..

என்னோட ஒரு நிமிட கருத்து இதுதான்..,” இப்போவெல்லாம் நிறைய ஸ்டூடண்ட்ஸ் விஸ்காம் படிக்கிறாங்க. நிறைய புது இயக்குநர்கள், ( மங்களா ஆர்த்தி போன்றவங்க மாஜிக்கை கூட சினிமாவில் கொண்டு வந்து இயக்க நினைக்கிறாங்க). புது முயற்சிகள் மேற்கொள்றாங்க. சர்வதேச தரத்தில் நம்ம சினிமா டெக்னிக்கலா எப்பவோ ரீச் ஆயிருச்சு. இந்த வருடத்துல நிறைய நம்மோட படங்களும் சர்வதேச விழாவின் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறது. என்னதான் இலக்கிய தரத்தோட இருந்தாலும் அதன் கமர்ஷியலா ஹிட்டை வைச்சுத்தான் அது நல்ல படம்னே முடிவுக்கு வர வேண்டி இருக்கு. கமர்ஷியல் ஹிட்தான் சர்வதேச படங்களிலும் சரி, இந்தியப்படங்களிலும் சரி நிறைய பேரை சென்றடையுது. நிறைய விஷயங்களை பணவெற்றிதான் முடிவு செய்யுது. அது போக நல்ல இலக்கிய முயற்சிகள், படைப்பு முயற்சிகள் ஆதரிக்கப்பட வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை நாம் சினிமாவில் டெக்னிக்கலா, உலக தரத்தோட அதி உச்சத்துல இருக்கோம், ஆனா இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்து டெப்தா , அழுத்தமான படைப்புக்கள் கொண்டு வரக்கூடிய திறமையான புதுமையான டைரக்டர்கள் இன்னும் நம்மிடையே இருக்காங்க.. நிறைய அவங்களால் நிச்சயம் முடியும். அவங்க இன்னும் சிறப்பான சினிமாக்களை எடுக்கணும் என்பதே என்னுடைய ஆசை..”

எல்லாரும் பேசும் போது குறுக்குக் கேள்விகளால் மடக்கிக் கொண்டிருந்த பாலாஜி நான் பேசும்போது மட்டும் ஏதும் கேட்கவேயில்லை.. ம் ,ம் , சொல்லுங்க என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனா நடுவுல கலாய்ச்சிருந்தார்னா சொல்ல வந்த கருத்துல தடுமாறி இருப்பேன்.. நன்றி பாலாஜி அண்ட் கவி..:)

நன்றி....எப்போதும் உங்களுடன் 106.4 ஹலோ எஃப். எம்..:)