திங்கள், 31 அக்டோபர், 2011

கிராமத்துப் பெண்களைச் சாதிக்க வைத்த இருளர் இனத்தலைவி வசந்தி.(போராடி ஜெயித்த பெண் (12).

பழங்குடி மக்கள் இனங்களில் ஒன்று இருளர் இனம். மலைகளில் தேனெடுத்து வாழ்ந்துவந்த இவர்கள் இன்று எட்டிய உயரம் அவர்கள் வாழ்ந்த மலைச்சிகரங்கள் அளவு கூட இல்லை. இவர்களின் நலனுக்காக இன்னும் போராடிக்கொண்டிருக்கும் இருளர் இனத்தலைவி வசந்தியை சந்திக்க நேர்ந்தது. அவருடைய போராட்டங்களை இந்த மாதம் போராடி ஜெயித்த கதையாய்ப் பகிர்ந்தார்.

எஸ் டியில் 36 வது இனத்தில் 4 வது கேட்டகிரியை சேர்ந்தவர். இவரது தாத்தா பாட்டி பாம்புகடி., பூச்சிகடிக்கு மந்திரித்து வைத்தியம் பார்ப்பார்களாம். அவர்கள் சாமியிடம் குறி கேட்டல்., குறி சொல்லல்., பிரசவம் பார்ப்பது., மாதவிடாய்க்கு ., வெள்ளைப்படுதலுக்கு மருந்து கொடுப்பது., கூந்தல் தைலம் என தொழில் பார்த்ததாக சொன்னார்.

வசந்தியின் பூர்வீகம் காஞ்சிபுரம் ., செங்கல்பட்டை அடுத்த குளத்தாஞ்சேரி கிராமம் அம்மா ஊர். அப்பாவுக்கு வண்டலூரை அடுத்த கொலப்பாக்கத்தை அடுத்த ஊனமஞ்சேரி கிராமம். இவருக்கு 2 அம்மா 2 அப்பா. பெற்றவர்கள் கிருஷ்ணவேணி., அங்கமுத்து ஸ்ரீனிவாசன் சுப்பிரமணியன். வளர்த்தவர்கள் முனியம்மா., சுப்பிரமணியன். 6 வது குழந்தையாகப் பிறந்தவுடனே குழந்தையற்ற பெரியம்மா பெரியப்பாவுக்கு தத்து கொடுக்கப்பட்ட வசந்தி 10 வது வரை படித்து திருமணத்துக்குப்பின் எம் ஏ முடித்தார்.

சரோஜினி வரதப்பன் பள்ளியில் சர்டிஃபிகேட்டில் நாயக்கர் என சேர்த்ததால் குளத்தாஞ்சேரி நாட்டமையிடம் பேசி சர்டிஃபிகேட் வாங்கி தாசில்தார் மூலம் தன்னுடைய இனம் இருளர் இனம் என சான்றிதழ் வாங்கி இருக்கிறார். அதில் தொடங்கிய போராட்டம் இன்றுவரை தொடர்கிறது.

1990 திருமணம். கணவர் பெயர் சங்கரன். ராணி ப்ரேக் லிமிடட்டில் வேலை செய்தார். அப்போது இவர் எக்ஸ்போர்ட் கம்பெனியில் டெய்லரிங் செய்து வந்தார். சித்தாலப்பாக்கத்தில் இடம் வாங்கி வீடு கட்டி செட்டில் ஆகியுள்ளார். எப்போதும் வாடகை வீட்டில் இருக்கும் போது ஜாதி மதம் சொல்ல முடியவில்லையாம். எனவே சொந்த வீடு. மிகுந்த வேண்டுதலுக்குப்பின் பிறந்த (ஏறுகிடா., இறங்குகிடா என்ற வேண்டுதல் செய்து )இரண்டு குழந்தைகள் பெண் இந்துமதி. பையன் ராக்கேஷ்.

குழந்தைகள் பிறந்தபின் சுண்டல் , வடை முறுக்கு செய்து விற்றல் என செய்து பின் இட்லி வியாபாரமும் செய்திருக்கிறார். அப்போது இவர் (இருளர்) இனத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் ஒட்டியம்பாக்கம் கிராமத்தில் (ITWWS -- IRULAR TRIBAL WOMANS' WELFARE ASSOCIATION) ஃபீல்ட் ஆஃபீசராக இருந்த உஷாராணியை அறிமுகம் செய்ய அவர் இவரிடம் ஈவினிங் க்ளாசஸ் எடுங்க என்று சொல்லி இருக்கிறார்.

NFE -- யில் ஈவினிங் ஆசிரியராகவும். வில்லேஜ் டெவலப்மெண்ட் ஆஃபீசராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் பணி செய்யும் வேகம் பார்த்து மற்றவர்களுக்கு 5 கிராமங்கள் என்றால் இவருக்கு 10 கிராமங்கள் ஒதுக்கப்பட்டதாம். இதன்படி கிராம ஆய்வு., ட்ரைபல் இருளர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்., எத்தனை குடும்பம் இருக்கிறது அதற்கெல்லாம் ஜாதி சான்றிதழ்., ரேஷன் கார்டு., வாக்காளர் அட்டை., ரோடு., தண்ணீர் வசதி.,தெரு விளக்கு வசதி., இறப்புச் சான்றிதழ்., முதியோர் பென்ஷன்., கணவர் இறந்தபின் உதவித் தொகை., படிக்கும் பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப்., இவைகளை எல்லாம் கேட்டுப் பெற்றுத்தருவதோடு மட்டுமல்ல. அவர்களின் பர்சனல் பிரச்சனைகளையும் கேட்டுத் தீர்த்து வைத்திருக்கிறார். வாராவாராம் 5 ரூபாய் ., 10 ரூபாய் என சேமிக்க வைத்துப் பின் மாதாமாதம் மொத்தமாகச் சேர்த்து வங்கிக் கணக்கு திறந்து அதில் போடும்படி செய்திருக்கிறார்.

வீட்டுமனை., வீடு., வீட்டுப் பட்டா ஆகியன பெற்றுத்தருவது., வீட்டு வரி கட்டி ரசீதுகளை சேமிக்கச் சொல்வது. பத்தாவது படித்தால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது என சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவ்வாறு சேவை செய்து காஞ்சீபுரம் கலெக்டர் ஆஃபீஸில் ITWWS அமைப்பை நல்ல வளர்ச்சிக்குக் கொண்டு வந்தார். அதில் நிறைய பெண்கள் இணைந்தார்கள். இதன் திட்ட இயக்குனர் கிருஷ்ணன் நல்ல நம்பிக்கை கொடுத்ததால் நல்ல துணிச்சலோடு செயலாற்ற முடிந்ததாம். நல்ல பயிற்சியும் கிடைத்ததாம்.

அந்த அலுவலகத்திலேயே செயலாளார் ஆக ஆனார். 3 மாதம் செகரெட்டரி . மத்த நேரம் எல்லாம் ஸ்டாஃப் ஆக பணி. 96 இல் சேர்ந்து 2003 இல் பணி செய்ய முடியாமல் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டி வெளி வந்தார்.

ஊனமஞ்சேரி கிராமத்தில் கலெக்டர் இறையன்பு இருக்கும்போது மழை பெய்து கஷ்டப்பட்டதால் குடிசை மாற்று வீடாக டாப்பர் ( சதுர) வீடு கட்டித்தரப்பட்டது. தளம் போட்ட வீடு 22 வீடுகள் கட்டிக் கொடுத்தார்கள் . பாண்டூர் கிராமத்திலும் செல்ஃப் ஹெல்ப் குரூப் உருவக்கி 10 தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. இதெல்லாம் இவரின் முயற்சியினால்தான். இரவு 2 மணி வரையிலும் பெண்கள் பிரச்சனைகள் என்றாலும் இருந்து பஞ்சாயத்துப் பண்ணி வைத்திருக்கிறார். எஸ் டி வார்டு மெம்பர் கோபி என்பவர் உதவியோடு இரண்டு செல்ஃப் ஹெல்ப் குரூப் உருவானது.

சிமெண்ட் ரோடு., பிள்ளைகள் பள்ளிக்கூடம்., தண்ணீர் டாங்க்., ரேஷன் கடைக்கான இடம்., சமுதாயக்கூடம் ஆகியன கட்டப்பட்டன. மேடவாக்கத்தில் ரெங்கநாதபுரம் ஏரிக்கரையில் குடியிருந்த பெண்களுக்கு 500 , 1000 சேமிக்கச் சொல்லிக் கொடுத்தது., மேலும் பாட்டு நடனம் ஆகியன கற்றுக் கொடுத்தது எல்லாம் தன்னுடைய சேவைகளாக சொல்கிறார்.

மலைசாதி என்பதற்காக 17 பிள்ளைகளுக்கு இருளர் இனச்சான்றிதழ் வாங்கியது., சிட்லப்பாக்கத்தில் பாலம் .,ரோடு லைட் ., தண்ணீர் டாங்க் என கிடைக்கப் போராடி இருக்கிறார்.

இப்போது பள்ளிக்கரணை மக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பெண்கள் எல்லாருக்கும் சேர்த்து வானவில் பெண்கள் நலச்சங்கம் என ஒன்றை உருவாக்கி சேவை செய்து வந்தார். மேலும் எஸ்டி., இருளர் இனப் பெண்களைச் சேர்த்து (1) தலித் பெண்கள் கூட்டமைப்பு ., (2) இருளர் பெண்கள் கூட்டமைப்பு, ( 3) பஞ்சாயத்தளவில் ஒருங்கிணைந்த பெண்கள் கூட்டமைப்பு என 3 கூட்டமைப்புக்கள் உருவாக்கினார்.

50 சுய உதவிக்குழுக்கள் இருந்தன. பெண்கள் சுழல் நிதி உருவாக்கப்பட்டது. இந்தியன் வங்கியில் 1 லட்சம் வரை லோன் கிடைத்தது. இதன் மூலம் பொம்மை ( 15 விதமான) செய்தல்., டெய்லரிங் எல்லாம் கற்றுக் கொடுக்கப்பட்டன. அதில் படித்து சர்டிஃபிகேட் வாங்கி சில பிள்ளைகள் வேலை செய்து பணம் சம்பாதித்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள். இதுபோல 45 சர்டிஃபிகேட்டுகள் வாங்கி கொடுத்திருக்கிறார்.

சிட்லப்பாக்கத்தில் .,”அகில உலக பெண்கள் தின விழா “ நடத்தி 2000 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். BDO OFFFICE இல் இருந்து RWO . வரை மற்றும் பஞ்சாயத்துத்தலைவர்., கவுன்சிலர்., நாட்டாமை ., வார்டு உறுப்பினர்., மகளிர் குழுத்தலைவிகள்., கல்விக்குழு மெம்பர்கள்., ஸ்கூல் டீச்சர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள் , 3 வருடம் சிறப்பாக நடந்தது இது.

வானவில் பெண்கள் அமைப்பு மூலம் ரேஷன் கடை., முதியோர் பெஷன்., சமுதாயக்கூடம்., செல்ஃப் ஹெல்ப் குரூப் கட்டிடம்., பொதுக்கழிப்பிடம் என கட்டித்தர செய்திருக்கிறார். நம்பிக்கை பெண்கள் அமைப்பையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 5000 பெண்கள் சங்கரா மருத்துவமனையில் மெம்பராகி இருக்கிறார்கள். இவர்களுக்கு சுகர் செக்., கண் பார்வை சோதனை., கிட்னி ஸ்டொன்., ஜெனரல் செக்கப் எல்லாம் செய்து பெண்களுக்கு உதவி இருக்கிறார்.

இதில் 2005 இல் ஒரு அவார்டு சுகாதாரத்துக்கு என கொடுத்து இருக்கிறார்கள். எழுத்தாளர் மாநாட்டில் ஆஷா நிவாஸ்., சிவகாமி ஐஏஎஸ்., கிறிஸ்டியா சாமி ஆகியோர் இவர் இருளர் பெண்களுக்காக எப்படி போராடினார் என விளக்கி சிறப்பித்து கூறினார்கள். மதுரையில் தமுக்கம் மைதானத்தில் இரவு கலைவிழாவில் பெண்கள் முன்னணி என்ற பேரில் சாதனைப் பெண்மணி என்ற அவார்டு வழங்கப்பட்டது. டெல்லி., சூரத்., அஸ்ஸாம்., எல்லா இடமும் ட்ரைபல் வெல்ஃபேருக்காக போய் வந்திருக்கிறார்.

தமிழக ஆதிவாசிக் கூட்டமைப்பில் தமிழ்நாடு ஈரோடு பாலன் மாநிலத்தலைவர்.இவர் துணைத்தலைவர். பொதுச்செயலாளர் இருளாண்டி. செல்வகுமார். இன்னொருவர் சுடரொளி சுந்தரம். இது 2007 முதல் 2010 வரை தொடர்ந்தது. திருவள்ளூரில் ஆரணி., பொன்னேரி மீஞ்சூர் போன்ற 15 ஊர்களுக்கு ஆய்வு செய்ய செல்வார். இதில் வரதராசன் தலைவர். இவர் மெம்பர். “திருவள்ளூர் ஆதிவாசி இருளர் நலச்சங்கம்” என அறிவித்து மாதவரத்தில் ஆஃபீஸ் போட்டு செயலாற்றி வந்தார்.

நிறைய பிள்ளைகளின் படிப்புக்கு உதவி செய்து., ஸ்காலர்ஷிப் கிடைக்கச் செய்து., திருமணம் செய்தும் வைத்திருக்கிறார். பிபிஏ., டீச்சார் ட்ரெயினிங்., எல்லாம் படித்து பணிபுரிந்துதன் குடும்பத்தை மேலேற்றிச் செல்கிறார்கள் உதவி பெற்ற மாணவர்கள்.

இப்போதும் “ தோழமை ஆதிவாசிக் கழகம்” மூலம் நெட்வொர்க்கில் இருக்கிறார்.பாலன்தான் தலைவர். அப்புறம் முக்கியமான் விஷயம் இவர் சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிட்டியில் எம் ஏ., சோஷியாலஜியில் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் பிறந்தபின்பும் படித்துப் பட்டம் பெற்றவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. இன்னும் எம் எஸ் டபிள்யூவும் ( மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க்) படிக்கப் போகிறார். இன்னும் என்ன வேண்டும். ஒரு பெண் எப்போதும் தன்னைத் தயார் நிலையில் வைத்திருக்கும் போது அவர்முன் எதிர்ப்படும் பிரச்சனைகள் எல்லாம் தூசாகாதோ..

டிஸ்கி:- போராடி ஜெயித்த பெண் வசந்தி பற்றிய இந்தக் கட்டுரை ஜூலை 2011 லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்துள்ளது.:)

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

மண்சட்டிகளும் ஆடுகளும்...

இக்கரையில் நான் மண்சட்டிகளுடனும்..
அக்கரையில் நீ உன் ஆடுகளோடும்..
அவரவர் சந்தைக்கு..

என் பின் கொசுவச் சேலை படபடக்க..
தார்பாய்ச்சிய வேட்டி.,
துரட்டியுடன் நீ..

கெண்டை கெளுத்தி.,
வாவல்., வவ்வா., சிறா
சிணுங்கித் திரிய..

அவரவர் பாரங்களை அப்படியே விட்டு
மெல்ல இறங்கி உன் மேல் துண்டால்
வீசிப் பிடித்தோம்..மீன் தின்னும் ஆசையில்..

சுழல் போல் காட்டாறு கணுக்காலிலிருந்து
முழங்காலேறி., பேய் போல ஆளடித்து
தலை சுழற்றி மூச்சு முட்ட..

அடித்துப் பிடித்து அவரவர் கரை சேர்ந்தோம்..
என் சுருக்குப் பை உன் கையிலும்.,
உன் மேல்துண்டு என் கையிலும் பிடித்து.

என் சுருக்குப் பை உன் துரட்டியிலும்,
உன் மேல் துண்டு என் சும்மாடாய்.,
திரும்ப அவரவர் சந்தைக்கு..

இருந்தபடி இருந்தன
மண்சட்டிகளும் ஆடுகளும்..
மீன்கள் மட்டும் கையெட்டாமலே..

வெடவெடத்த பாதங்களின் பின்னே
தவழ்ந்து வந்து கொண்டிருந்தது..
ஈர சாட்சியாய் தண்ணீர். ..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஃபிப்ரவரி 20, 2011. திண்ணையில் வெளிவந்துள்ளது.

வெள்ளி, 28 அக்டோபர், 2011

சார்பு நிலை..

சிரசு பலவானாலும்
அங்குசமற்ற மூளைகளோடு..

வெட்ட வெட்ட மகிஷாய்
கிளைக்கும் தலைகளோடு..

நாலாவதைக் கிள்ளி
எறிந்தாலும் எள்ளலோடு..

வடக்கில் தலைவைத்து
வெட்டி ஒட்டிய முகத்தோடு

கண்ணாடியைக் காணும்வரை
பூனையின் சாயலோடு..

உற்ற இன்ன பிற
அசட்டுத்தனங்களோடு..

விளம்புதல்கள் முடித்து
உருமாற்றங்களோடு..

சார்பற்றதும் தெறிக்கிறது.
சிறுத்தையின் உறுமல்களோடு..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஃபிப்ரவரி 20. 2011. திண்ணையில் வெளிவந்துள்ளது.

வியாழன், 27 அக்டோபர், 2011

சேமிப்பாளர்களுக்கு மட்டுமே..

முதலீடு சம்பந்தமான என் கட்டுரைகள் அனைத்தும் சிறிய நடுத்தர அளவில் முதலீடு செய்ய விரும்பும் மக்களுக்கான ஆலோசனைகள் மட்டுமே. அஞ்சலக முதலீடு., இன்சூரன்ஸ்., வங்கி டெப்பாசிட்டுகள்., பாண்டுகள்., தங்கம்., இதுபோன்றதே என்னுடைய ம்யூச்சுவல் ஃபண்ட் பற்றிய கட்டுரைகளும், பங்குச் சந்தை முதலீடு பற்றிய கட்டுரைகளும், ஏற்றுமதி பற்றிய கட்டுரைகளும். யாரையும் கட்டாயமாக பங்குச் சந்தையில் ட்ரேட் செய்யுங்கள் என கான்வாஸ் செய்யவில்லை. நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யுங்கள் என நான் ஒரு கட்டுரையும் எழுதியதில்லை.

நம்பகத்தன்மை வாய்ந்த செபியின் பரிந்துரைப்படியான A++ கம்பெனிகளின் நம்பிக்கையான ஷேர்களையே., முதலீட்டில் ஒரு பாகமாக மட்டுமே செய்யும்படி ஆலோசனை மட்டுமே பகிர்கிறேன். இது யாருக்கும் கட்டாயமானதல்ல. தேவை ஏற்படின் உங்கள் பணத்தை முதலீடு செய்ய மட்டுமே இது பரிந்துரைக்கப்படுகிறது. ஏற்ற இறக்கங்கள் குறித்தான சிந்தனைகள் முதலீட்டாளர்களுக்கு அவசியம்.

ஜாபர்கள், ட்ரேடர்கள் , சூதாடிகளுக்காக ( GAMBLERS AND SPECULATORS) நான் எழுத வேண்டிய தேவையே இல்லை. ரியல் எஸ்டேட், தங்கம்., டெப்பாசிட்டுகள் போல இதுவும் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டதே. இதைத் தேர்ந்தெடுப்பது பணத்தை முதலீடு செய்பவர்களின் விருப்பத்தையும் தேவையையும் பொறுத்தது.

எங்கள் பங்குகள் ஏறுமா என யாரும் யாரிடமும் கேட்கவேண்டாம். கம்பெனிகள், நிறுவனங்கள் பற்றி அவர்களுக்காய் நன்கு தெரிந்து முதலீடு செய்தாலே போதும். காய்கறி சாப்பிடுபவர்கள் கசாப்புக் கடையையே பார்க்க மாட்டார்கள். ரத்தம் இல்லாமல் கசாப்பு கிடையாது. மீல் மேக்கர், காளானுக்கு மாறிக் கொள்ளலாம்.

ஒரு இலக்கியவாதியாக பங்குச் சந்தையைத் தெரிந்து கொள்ளவும்., தெரிந்ததைப் பிறருக்குச் சொல்லவுமே என்னுடைய கட்டுரைகள். எனக்குத் தெரியாத ஒரு விஷயம் இன்னொருவனுக்கு எப்படித் தெரியலாம்., அதனால் புழுதி வாரித் தூற்றுவேன். கீழே இருப்பவனைக் கேடயமாகவே பயன்படுத்திக் கொள்வோம், அவன் முன்னேறவிடமாட்டோம் என நினைப்பவர்கள்தான் இதை சூதாடிகளுக்கானது என் ப்ராண்ட் முத்திரை குத்துவார்கள்.

இது சேமிப்பாளர்களுக்கு மட்டுமே சில அறிவுரைகள்.. இது சூதாடிகளின் கான்வாசிங் அல்ல..


செவ்வாய், 25 அக்டோபர், 2011

தீபாவளிக்குத் தங்கம். நம்தோழியில்.

இன்றைய நிலைமையில் தங்கத்தோட விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதனுடைய விலை ஏறினாலும் நகைக் கடைகளில் கூட்டம் இருந்துகிட்டுத்தான் இருக்கு. இது முதலீடுன்னும் ., இல்லை வேஸ்ட்ன்னும் சொல்றவங்க இருக்காங்க. ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் கரன்சியையும் தீர்மானிக்கிற விஷயமா தங்கம் இருந்துகிட்டு இருக்கு. அரசாங்கத்தின் தங்கத்தின் இருப்பைப் பொறுத்து அந்த நாட்டின் கரன்சி மதிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் எவ்வளவு ஏறினாலும் தங்கத்தை வாங்குவோம். அது சிறந்த முதலீடுன்னு சொல்ற இருவரையும் ., இது முதலீடு இல்லைன்னும் சொல்றவங்க கிட்ட கருத்து கேட்டோம். முதலில்.,

1. சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ரகு கீதா தம்பதி:-

இவர் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணிபுரிகிறார்.போனஸ் வந்தா மட்டுமில்ல. ஒவ்வொரு மாதமும் தங்கமா வாங்குவதா சொல்கிறார்.

”இதுக்கு ரீசேல் வால்யூ இருக்கு. தேவை ஏற்பட்டா உடனடியா பணமா மாத்திக்கலாம். இப்போ 2.500 ரூபாய் இருந்தா ஒரு கிராம் தங்கம் கூட வாங்கலாம். ஆனா இடம் வாங்கணும்னா நிறைய பணம் தேவை. இதுக்கு நல்ல அப்ரிஷியேஷன் இருக்கு. 2004 இல் என் திருமண சமயத்தில் ஒரு வாரத்துக்குள்ள அது விலை நல்ல ஏற்றம் இருந்தது. வாங்கலாம்னு நினைச்சு தாமதமாகி அதிக விலையில் வாங்கினோம். ஒரு கிராம் 600 ரூபாய்க்கு என் பொண்ணு பிறந்தப்ப வாங்கினேன். இப்ப விலை 2,500 க்கும் மேல. அதுவும் இந்த ஒரு வருடத்தில் தங்கத்தின் விலையில் நல்ல ஏற்றம். கிட்டத்தட்ட 4 மடங்கு ஏறி இருக்கு.

முதலீடுன்னு பார்த்தா நான் மாதா மாதம் உள்ள தொகைக்கு ஒரு கிராம்., 2 கிராம்., 3 கிராம்னு காயினா வாங்குவேன். என் மனைவி கொஞ்சம் அதிகமா பணம் செரும் போது வளையல் தோடுன்னு வாங்குவாங்க. கடையில் சீட்டுக் கட்டி வாங்குவதை விட இப்படி மாதா மாதம் வாங்குவது சிறந்தது . ஏன்னா நாம பணம் கட்டி முடிக்கும் போது வருட முடிவில் நிச்சயமா தங்கத்தோட விலை உயர்ந்திருக்கு. நல்ல ஃப்ளக்‌ஷுவேஷன் இருக்கு. எப்பவும் உயர்ந்துகிட்டேதான் இருக்கு. இறங்குவதே இல்லை. லிக்விடிட்டி இருக்கு. எனி டைம் மணி என்பது இதோட ஈர்ப்பு. பேப்பர் கோல்ட் அல்லது பங்குச் சந்தை கமாடிட்டி மார்கெட்டில் வாங்குவது இல்லை. பங்குச் சந்தையில் இரும்பு ( IRON & STEEL) கமாடிட்டீஸ் மட்டும்தான் வாங்குவேன். நிலத்துக்கு பதிலா தங்கத்தை பார்களாகவும் பிஸ்கட்டுக்களாகவும் வாங்குவது லாபம். ”

இவரின் தந்தை நாகேஸ்வரம் சொன்னார். தங்கத்தை விலையேத்துவதே இந்த பங்குச்சந்தை வியாபாரம்தான். அதை கண்ட்ரோல் செய்தா விலை சமனமாகும்.

2. சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பத்மா., இளங்கோ தம்பதி:-

இவர் SCHWING STETTER INDIA PVT LIMITED. GERMAN MNC யில் பணிபுரிகிறார். மிகக் கணிசமான போனஸ் வருடா வருடம் க்ரெடிட் ஆகும். இவர் தன்னோட பணத்தை டாக்ஸ் சேவிங் பாண்ட் மற்றும் தங்கக் காயின்களில் முதலீடு செய்கிறார்.

”நான் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கு. இடம்., பாண்டுகள்., ஷேர்களுடன் பார்க்கும்போது இதுக்கு குறைந்த முதலீடே தேவைப்படுது.டாக்குமெண்ட்ஸ்., ரெஜிஸ்ட்ரேஷன்., அப்புறம் பலவித நடைமுறைகள் ., அலைச்சல்கள்., நடைமுறைச் சிக்கல்கள் இல்லை. நிலத்தில் முதலீடு செய்வதை விடப் பாதுகாப்பானது. வால்யூ அப்ரிஷியேஷன் இருக்கு ( ஷேர்ஸ் போலில்லாமல்). ஈஸியா., மாத்திக்கலாம்., அல்லது வித்துக்கலாம்

முக்கியமா அணிந்து சென்றால் சோஷியல் ஸ்டேடஸை அதிகமாக்குது. செண்டிமெண்ட் ஒரு காரணம். தங்கத்தில் முதலீடு செய்தால் நம் நிலை எப்பவும் பாதுகாப்பானது., பினான்ஷியல் ஸ்டேடஸ் இறங்காது என இன்னொரு காரணம். மூன்றாவாது காரணம்தான் முக்கியம்.. எனக்கு ஒரு பொண்ணு இருக்கா.. அவ திருமணத்துக்கு தங்க நகைகள் அவசியம்.எனவே நான் தங்கத்துல முதலீடு செய்றேன். இப்பவே வாங்கி வச்சிட்டா திருமண சமயத்தில் நகைகளுக்காக பெரும் தொகையை ஒதுக்க வேண்டாம்.

3. சென்னை கே. கே. நகரைச் சேர்ந்த ராதா ராமகிருஷ்ணன் தம்பதி.:-

இவங்க இல்லத்தரசி. இவங்க கணவர் ஏர் கார்கோவில் பணிபுரிகிறார். மிகச் சிறப்பான பெயிண்டிங்குகள் செய்து கண்காட்சியில் வைக்கிறார். அடுக்கடுக்காகவும்., செட்டு செட்டாகவும் நகைகள் வாங்கியும்.,அணிந்தும் மகிழும் பெண்களுக்கு மத்தியில் ஒரு மலையாளியான இவர் தங்கம் வாங்கவே மாட்டேன் என்று சொன்னது நம் கவனத்தைக் கவர ஏன் வாங்க மாட்டீங்கன்னு கேட்டோம். மலையாளிகள் மிக அருமையான நகைகள நிறைய அணிந்து கொள்வார்களே உங்களுக்கு ஏன் அந்த விருப்பம் இல்லையா என கேட்டோம்.

என் அம்மா என் திருமணத்தின் போது கொடுத்த நகைகள்தான். அதையே அணிவதில்லை. அதன்பின் ஒரு துளி தங்கம் கூட வாங்கியதில்லை. பொதுவா நான் ஜீன்., டாப்ஸ்., லெக்கின்ஸ் போன்ற மாடர்ன் உடைகள்தான் அணிவேன். அதுக்கு ஏத்த டெம்பிள் ஜுவல்லரி., வெள்ளி நகைகள் அணிவேன். ஃபாஷன் ஜுவல்ஸ்தான் இந்த வகை உடைகளுக்குப் பொருத்தமாகவும்., நன்றாகவும் இருக்கும். இது நல்ல வெரைட்டியா டிரஸ்ஸுக்கு மாட்சிங்கா அணியலாம் என இவர் சொல்லும் நகைகளும் 2000., 3000 ரேஞ்சில் இருக்கிறது.

முதலில் தங்கத்தில் செய்வதை முதலீடுன்னு சொல்லாதீங்க.. விலை உயர்ந்து கொண்டே சென்றாலும் அது சிறந்த முதலீடே அல்ல. அது வாங்கும் காசில் பல விதமான பாஷன் ஜுவெல்ஸ் வாங்கலாம். புடவை போன்றவற்றுக்குக் கூட கிராண்டாக காண்பிக்கும். லெஹங்கா. போன்ற பார்ட்டி வேர் ட்ரெஸ்களுக்கும்., ஃபாஷன்வேர்களுக்கும்., டிசைனர் ட்ரஸ்களுக்கும் டெம்பிள் ஜுவல்ஸ் பொருந்தும் அளவு தங்கம் பொருந்தாது. தங்கம் என்றால் ஒன்றையே அணியவேண்டும். இது டிசைன் டிசைனாக அணியலாம். நாங்க பொதுவா இன்வெஸ்ட்மெண்ட் என்றால் இடம்., நிலம்., வீடு ஆகியவற்றில்தான் செய்வோம். இது விலை ஏறும் அளவு தங்கம் ஏறுவதில்லை. ஷேர்ஸ்., பேப்பர் கோல்ட் போன்றவையும் வாங்குவதில்லை. அப்புறம் முக்கியமான விஷயம் எனக்கு ரெண்டு பசங்கதான். பொண்ணு இல்லை..


இவங்க மூன்று பேரும் தங்கம் வாங்குவது தொடர்பா சொன்னதை ஓரியண்டல் ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் திருமதி சித்ரா நாகப்பனிடம் சொல்லி அவங்க ஆலோசனைகளை சொல்லுமாறு கேட்டோம்.

திருமதி சித்ரா நாகப்பன்.:-

எல்லாருடைய முதலீட்டிலும் தங்கத்துக்கும் ஒரு பங்கு நிச்சயமா இருக்கணும்.

முதலில் நெசப்பாக்கம் ரகு கீதா தம்பதிகள் சொல்வது போல இப்ப பணம் அவசரமா தேவையா இருக்குன்னு சொல்லி வாங்கின கடைகளில் கூட உடனடியா விக்க முடியாது. ஏன்னா அவங்க எங்களுக்குத் தங்கம் தேவையில்லைன்னு வாங்குவதில்லை. அல்லது நிறைய கழிவுகள் போக ரொம்ப குறைந்த தொகைக்குதான் விக்க முடியும். இன்றைய மார்க்கெட் ரேட் போகாது. பழைய தங்கம் எடுக்கும் விலை என்பது மிகக்குறைவுதான். அதிலும் கழிவு போக லாபம் கம்மிதான்.

சில கடைகளில் நீங்க இன்னொரு நகையா மாத்திக்கலாம் ஆனா தங்கத்தை விக்க முடியாது. ரீசேல் வால்யூ என்பது சும்மா சொல்லலாம். ஜுவல்லரியா வாங்குவது இன்வெஸ்ட்மெண்ட் அல்ல. அதுவும் பட்டுப்புடவை., டிசைனர்வேர் உடைகள் போல உபயோகத்துக்குத்தான்.

ஈ கோல்ட்., ஈ சில்வர்., பேப்பர் கோல்ட் போன்றவைதான் சிறந்த முதலீடு. தங்கமா வாங்கி விற்பதில் 15 % வரை ஏறினால்தான் லாபம் பார்க்கமுடியும். ஆனால் ஈ கோல்ட் அல்லது பேப்பர் கோல்டில் 1 % மட்டுமே கழிவு/கட்டனம். வாங்கின அன்றில் இருந்து இன்று மார்க்கெட் ரேட் என்ன உயர்ந்து இருக்கிறதோ அந்த முழு லாபமும் ஒரு பர்சண்ட் கழிவு மட்டுமே போக நமக்குக் கிடைக்கும்.

அடுத்து பத்மா இளங்கோ தம்பதி சொல்வது என்னன்னா தங்கள் பெண்ணின் திருமணத்துக்காக சேர்ப்பது. இது போன்ற தேவைகளில் கிடைக்கும்போதெல்லாம் தேவைக்கேற்ப தங்க நகைகளாக வாங்கி விடலாம். ஆனால் நகையா வாங்குவது அலங்காரத்துக்குத்தானே தவிர சோஷியல் ஸ்டேடஸ் உயர்த்துதுன்னு சொல்ல முடியாது. இன்றைக்கு சின்ன சின்ன ஊர்களில் எல்லாம் கூட தங்கம் தவிர மற்ற நகைகள் அலங்காரத்துக்காக அணிகிறாங்க. இன்றைய தலைமுறையின் ரசனை மாறிவருகிறது.

எப்பவும் தங்கம் வாங்கிய விலையில் இருந்து உயர்ந்து கொண்டேதான் போகிறதே தவிர, பெறிய அளவில் குறைவதில்லை. குறையாது என சொல்ல முடியாது. சிறிது விலை குறையவும் வாய்ப்பு இருக்கு. ஆனா சர்வதேச பொருளாதார நெருக்கடி காரனமாக, இன்றைய நிலைமையில் உயர்ந்து கொண்டேதான் இருக்கு.

இதுக்கு பொதுவா் என்ன காரணம் என்றால் சைனாவில் இப்போ தங்கம் அதிகம் வாங்குறாங்க. அந்த தங்கம் வாங்குவதில் இருந்த கெடுபிடி தளர்த்தப்பட்டிருக்கு. எனவே அதிக அளவில் தங்கம் வாங்கப்படுவதால் தங்கத்தின் விலை ஏறுகிறது.

மூன்றாவதா ராதா ராமகிருஷ்ணன் தம்பதி.. இடத்தில் நிலத்தில் செய்யப்படுவது மட்டுமே முதலீடு அல்ல. இடம்., நிலம் வாங்கணும்னா சில பல லட்சங்கள் தேவை. எல்லாராலும் அது முடியாது. மேலும் 3000 ரூபாய் இருந்தா ஒரு கிராம் தங்கம் வாங்கலாம்.

தங்கம் ஒரு நாட்டோட பொருளாதார., கரன்சி இருப்பை தீர்மானிக்கிற சக்தியா இருக்கு. சர்வதேச அளவில் யென்., யூரோ., டாலர்., கரன்சி ஆகியவற்றின் மதிப்பு குறையும்போது தங்கத்தின் மதிப்பு அதிகமாகுது. எனவே ஒவ்வொரு தனி மனிதரும் ஈ கோல்ட்., ஈ சில்வர்., பேப்பர் கோல்ட், கோல்ட் ஈ.டி.எஃப். போன்றவற்றில் கொஞ்சமாவது., தங்கள் சேமிப்பில் இருந்து முதலீடு செய்யணும்.

திரு நாகேஸ்வரம் அவர்கள் சொன்னது போல ஆன்லைன் ட்ரேடிங்கால தங்கம் விலை ஏறுதுன்னு சொல்ல முடியாது. ஏன்னா உளுந்து., துவரை., போன்ற பொருட்கள் ஆன்லைன் ட்ரேடிங் ( கமாடிட்டி ட்ரேடிங்க்கு) தடை விதிக்கப்பட்ட பிறகும் 2008-09 இல் இருந்து இன்றுவரை பல மடங்கு விலை ஏறி இருக்கு,

எனவே தங்கம் விலை ஏற்றதுக்கு காரணம் அதன் தேவையே அன்றி பங்குச் சந்தை வர்த்தகம் அல்ல. எனவே இன்றைய நிலைமையில் தங்கத்தில் சரியான முதலீடு., லாபகரமான முதலீடுன்னா ஈ கோல்ட்., ஈ சில்வர்., பேப்பர் கோல்டில் முதலீடு செய்வதுதான்.


டிஸ்கி .1. :- இந்தக்கட்டுரை அக் 2011 நம் தோழியில் வெளிவந்துள்ளது.


டிஸ்கி.2. :- தீபாவளி ஸ்பெஷலா சென்னையைச் சேர்ந்த ஓரியண்டல் ஸ்டாக்ஸில் MUHURAT TRADING- in Shares, E Gold & E Silver on Wednesday, 26th October 2011,. From 4.45 PM - 7.15 PM.

திங்கள், 24 அக்டோபர், 2011

ஆனந்தவிகடன், லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்கள்.

26.10.2011 விகடனில் கடவுளை நேசித்தல் என்ற என் கவிதை.. :)


லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் நிறைய ப்ரபலங்கள் எழுதி இருக்காங்க.. சாந்தா தத்.,திருப்பூர் கிருஷ்ணன், பாக்கியம் ராமசாமி,விமலா ரமணி, சாருகேசி, காந்தலெக்ஷ்மி சந்த்ரமௌலி, புஷ்பா தங்கதுரை, இரண்டு நாளில் 25 கோயில்கள் என்று ம. நித்யானந்தம், மனைவி கணவன் மகிழ்விப்பது எப்படி என்று டாக்டர் பாலசாண்டில்யன் இவங்களோட நம்ம வலையுலகப் பிரபல பெண் பதிவர்கள் ஹுசைனம்மாவும் அமைதிச்சாரலும் எழுதி இருக்காங்க. மிக அழகான குழலூதும் கண்ணனோட அருமையா வந்துள்ளது லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர். எல்லாருடைய படைப்புக்கும் இடம் கொடுத்துட்டு மிகச் சின்னச் சிறுகதையா ஜ்வாலா எழுதின பாட்டியின் தீபாவளி எனக்கு ரொம்ப பிடிச்சுது. ஜ்வாலா வேறு யாரும் இல்லிங்க. நம்ம கிரிஜா ராகவன் மேடம்தான். மிக அருமையான கதை வாழ்த்துக்கள் மேடம். பெருநகரங்களில் தீபாவளி ஒரு விடுமுறைநாள் . அவ்வளவே .


என்னுடைய கவிதை காத்திருக்கிறேன்.. பக்கம் 39 இல்


டைட்டனிக் என்றால் காதல் என்ற நினைவு வரும் உங்களுக்கு . ஆனா உண்மையில் அது ஒரு சோகம். அதுபற்றிய கட்டுரை இதில். பக்கம் 104 இல்.




டிஸ்கி..1..:- லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரை நீங்க இணையத்தில் http://www.ladiesspecial.com/ என்ற லிங்கை க்ளிச் செய்தால் படிக்கலாம். படிச்சிட்டு உங்க கருத்துக்களை அங்கே பதிவு செய்யுங்கள்.




டிஸ்கி. 2.:- குமுதத்தில் அ. ராமசாமி, கி.ரா., இ. பா., ஜெயமோகன் ஆகியோர் ஞானபீட விருதுக்கு மிகப் பொருத்தமானவர்கள் எனக் கூறி இருக்கிறார். தமிழுக்கு விருது கிடைக்கவில்லையே என வருத்தம் ஏற்படும் இந்நேரத்தில் ,”விருதுக்கு ஆசைப்படும் நாம் அதற்காக செய்ய வேண்டிய வேலைகளை செய்யாமல் விட்டுவிட்டோமோ என்றும் தோன்றுகிறது.ஞானபீடம் விருது தமிழுக்குக் கிடைக்கவேண்டும் என்றால் முதலில் நாம் செய்ய வேண்டியது பரிந்துரைக்கத்தக்க எழுத்தாளர்கள் யார்
என்பதை முடிவு செய்து, அவரைப் பற்றி ஆங்கிலத்திலும், பிற இந்திய மொழிகளிலும் அறிமுகம் செய்ய வேண்டும். தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு தேசிய அளவிலோ, உலக அளவிலோ விருதுகள் கி்டைக்கிறது என்றால் அதில் அவருக்கு மட்டும் பெருமையில்லை. தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும், மக்களுக்கும் கிடைக்கும் பெருமை என நாம் நினைக்க வேண்டும்.” என்கிறார். இதை நானும் வழிமொழிகிறேன்.


முக்கஜ்ஜீய கனசுகளு(பாட்டியின் கனவுகள்) என்ற சிவராம் காரந்த்தின் நூல், காண்டேகரின் யயாதி, அகிலனின் சித்திரப் பாவை, ஜெயகாந்தனின் கதைகள் போன்றவற்றை வாசித்திருக்கிறேன். இதுபோல அருமையாக எழுதக்கூடியவர்களில் நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோர் இருக்கிறார்கள்.

மற்ற மொழிகளில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் அதிகம் வருகின்றன. தமிழிலும் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாவல்கள் ஆங்கிலத்தில் , மற்ற மொழிகளில் மாற்றம் செய்யப்படுகின்றன. ஆனால் குறைவு எனத்தான் சொல்லவேண்டும். மற்ற மொழிகளிலும், தமிழ் மொழியிலும் பயிற்சி உள்ளவர்கள் மிக அற்புதமாக உள்ள நம் நூல்களை மற்ற மொழிக்கு மாற்றி எழுத முயற்சி எடுக்க வேண்டும். நாம் நம் எழுத்தாளர்களை, படைப்புலக பிரம்மாக்களை கொண்டாட வேண்டும். புக் கிளப் இண்டியா போன்ற க்ரூப்புகளில் ஆங்கில மொழி நூல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. தமிழ்மொழி நூல்களுக்கும், அவற்றின் மொழிபெயர்ப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். நிறைய பதிப்பகங்கள் இதை செய்ய முன்வர வேண்டும். இதை இடுகையாக எழுத வேண்டுமென்றால் இன்னும் மேலதிக தகவல்களோடு, புள்ளி விவரங்களோடு, நுண்மையாக எழுதவேண்டும். இது வெறும் என் எண்ணப் பகிர்வுகள் மட்டுமே. எனவே டிஸ்கியில் பகிர்ந்துள்ளேன்.


டிஸ்கி .3. :- அனைவருக்கும் தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள். மங்கலம் பொங்குக எங்கும். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.




வெள்ளி, 21 அக்டோபர், 2011

குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

திருவாசகம் என்னும் தேன்..:-
********************************
நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க.. என தினமும் பிரதோஷ நேரத்தில் நடராஜப் பெருமானை சிவபுராணம் சொல்லி வணங்குவது நகரத்தார் பழக்கம். சமீப காலங்களாக செட்டிநாட்டுப் பகுதிகளில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது அனைத்து மக்களும் பங்கேற்று வருகிறார்கள்.


பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாகத் திகழ்வது திருவாசகம். சாத்திரத்தில் சிறந்தது திருமந்திரம் என்றால் தோத்திரத்தில் சிறந்தது திருவாசகம். பூவின் சாற்றை உறிஞ்சி தேனை எடுத்துச் சேமிப்பது போல சுவை கூடியது திருவாசகம். இதில் 658 பாடல்கள் உள்ளன. இதன் ஆசிரியர் மாணிக்க வாசகர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டவர்.சிவன் என்றாலே மங்களம் என்று பொருள்.: நன்மையைத் தருபவர் என்று பொருள். சிவபெருமானைப் போற்றி செய்து பாடப்பட்டது திருவாசகம். இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை தரக்கூடியது. அல்லல் அறுத்து ஆனந்தமயமாகுவது., ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்குவது. திருவாசகத்தை முற்றிலும் ஓதுதல் முற்றோதல். 658 பாடல்களையும் தொடர்ந்து 6 மணி நேரம் பாடுவது ஆகும்.

இதில் 51 பதிகங்கள் உள்ளன.


இந்த ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி காரைக்குடி ஆவுடையான் செட்டியார் வீட்டில் திரு சபாரெத்தினம் செட்டியார் திருவாசம் முற்றோதலுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று முழுமையும் திருவாசத்தேனில் திளைக்கும் பேறு பெற்றோம். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என இங்கே பகிர்கிறேன்.

சிவன்., பார்வதி., நால்வர் படமாகவும்., சிறு விக்கிரமாகவும் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூமாலைகளாலும்., பாமாலைகளாலும் தோத்திரம் செய்யப்பட்டு., ஒவ்வொரு பாடல் முடிவிலும் நைவேத்தியத்துடன் இருவராக இணைந்து தீப தரிசனம் பார்க்கப்படுகிறது. அதில் கீர்த்தித்திரு அகவல்., சிவபுராணம் ஆகியன படிக்கும் போதும்., ஆனந்தத்து அழுத்தல்., என்ற பதிகம் படிக்கும் போதும் உருகாமல் இருக்க முடியாது. திருவாசகத்திற்கு உருகாதவர் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது முன்னோர் வாக்கு


திருவாசத்தைப் படித்து மகிழ்ந்த ஜி.யூ.போப் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அதிலும் ஆனந்தத்து அழுத்தல் பதிகம் பாடும்போது நம்மை ஆனந்தம் வியாபிப்பதை பூரணமாக உணர முடியும். ஒரு குறிப்பிட்ட பதிகத்தை திருவாகசம் முற்றோதல் செய்பவர் தன் குடும்பத்தோடு பாடுகிறார். சிவன் அருளால் அந்தக் குடும்பத்தினர் வந்த சிவனடியார்களுக்கு பனங்கற்கண்டுப் பாலும் வெந்நீரும் வழங்குகிறார்கள். மதிய உணவின் போது மொத்தக் குடும்பமும் சிவனடியார்கள் முன்னிலையில் பந்தி பரிமாறி., சிவனடியார்கள் அமுது செய்து அருள வேண்டும் என்று குடும்பத்தலைவர் சொல்ல மொத்தக் குடும்பமும் விழுந்து வணங்குவது அழகு. சிவனடியார்கள் பூஜிக்கப்படும் இடம் எல்லாம் இல்லதுமாய்., அல்லதுமாய் இருக்கும் சிவனை வணங்கும் இடம்தானே.

சிவபுராணம் படித்தால் மனக்கவலைகள் யாவும் மறைந்து அமைதியும் ஆனந்தமும் உண்டாகும். செல்வம் பெருகும். விரோதிகளை அடங்கச் செய்து வெற்றியை நல்கும் பதிகம் ,”திருவுந்தியார்” . ஊமை, திக்குவாய் முதலியன நீங்கி நன்கு பேச ,”திருச்சாழல்” படிக்கவேண்டும். திருவெம்பாவை பாடியதன் பயனாக திருமணத்தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். மக்கட்பேறு இல்லாதவர்கள் ,”கோயில்மூத்த திருப்பதிகம்” படித்தால் குழந்தைகள் கிடைக்கும். பிண்கள் நீங்க ,”நீத்தல் விண்ணப்பம் படிக்கலாம். திருவாசகத்தின் எல்லாப் பதிகங்களுமே நன்மைகள் தரக்கூடியவை.


காரைக்குடியில்,” திருநாவுக்கரசர் இறைப்பணி மன்றம் ” என்று ஒரு அமைப்பு இருக்கிறது. அவ்வமைப்பைச் சேர்ந்த அன்பர்கள் எல்லா ஊர்களுக்கும் சென்று திருவாசக முற்றோதல் செய்து வருகிறார்கள். இதுவரை 222 முற்றோதல்கள் நடத்தி இருக்கிறார்கள். திருமணம்., மணிவிழா., சதாபிஷேகம்., புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தும் அன்பர்கள் தங்கள் இல்லங்களில் இவ்வமைப்பின் மூலம் முற்றோதல்கள் வைக்கிறார்கள்.

இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் எல்லா ஸ்தலங்களுக்கும் சென்று முற்றோதல்கள் செய்து வருகிறார்கள். வீடுகளில் முற்றோதல்கள் நடத்தும் போது நடராஜர்., சிவகாமி அம்மன்., மாணிக்க வாசகர் ஆகிய சிறுவிக்கிரகங்களை வைத்து வழிபட்டு., திருவாசகம் பாடுகிறார்கள். மாணிக்க வாசகருக்கு மலர் வணக்கம் செய்யப்படுகிறது


பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளில் இருந்து ஒவ்வொரு பாடல் பாடப்படுகிறது. அடுத்து திருவாசகம் முழுமையும் படிக்கப்படுகிறது. அதற்கு அடுத்து எட்டாம் திருமுறையில் திருக்கோவையாரில் 1 பாடல் அதன்பின் 9 ஆம் திருமுறையிலிருந்து 12 ஆம் திருமுறை வரை திருமுறைக்கு ஒரு பாடல் வீதம் பாடப்படுகிறது. அத்துடன் முற்றோதல் நிறைவு பெறுகிறது.

திருவாடுதுறை ஆதினம் நடத்திய சைவ சித்தாந்த வகுப்பில் தேவாரம் பயின்ற பலரும் இங்கு திருவாசக முற்றோதல்களில் பங்கேற்கிறார்கள். திருநாவுக்கரசர் இறைப்பணி மன்றத்தின் மூலமாக தேவாரப் பயிற்சி., திருவாசகம் முற்றோதல்., உழவாரப்பணி., சிவன் கோயில்களில் மாதாந்திர ஆன்மீகச் சொற்பொழிவு நடைபெறுகிறது. இதன் தலைவர் காரைக்குடி ஈப்போ நாராயணன் செட்டியார் அவர்கள். திரு தெ. சொக்கலிங்கம்., சீனி முத்தையா., பாலாம்பா ஆச்சி ஆகியோர் மிகச் சிறப்பாக சொன்னார்கள். கிட்டத்தட்ட 150 பேர் வரை எல்லா மக்களும் இணைந்து திருவாசகம் ஓதி வருகிறார்கள்.


தாயுமானவன்., மாயப்பிறப்பறுக்கும் மன்னவன்., சிவபெருமானை துதிக்கும் இந்தத் திருவாசக முற்றோதலில் பங்குபெற்று அடைந்த சிவானந்தத் தேன் தெவிட்டாதது. இந்தத் திருவாசகம் என்னும் தேனை எங்களை அடையச் செய்த திருநாவுக்கரசர் இறைப்பணி மன்றத்தினருக்கு நன்றிகள் பல.



டிஸ்கி.1.:- இது என்னுடைய 500 வது இடுகை.:)))))


டிஸ்கி.2.:- நன்றி செப்.2011 குமுதம் பக்திஸ்பெஷல்.:)


வியாழன், 20 அக்டோபர், 2011

அதீதத்தில் வேதாளம்..

சந்தேகச் சுக்கான்கள்
கைப்பிடிக்குள் அடக்கி
காற்றுனக்கு சாதகமாக
பாய்மரப்படகு விரித்த
படுதாக்களைச் சுருட்டி
நினைத்த திசைக்கு
இழுத்துச் செல்கிறாய்

ஒற்றை வார்த்தை
துடுப்பா., தடுப்பா
அலமலங்க வைக்கிறது
எதிர்பாரா தத்தளிப்பில்.
லயமற்ற இசையில்.
ஆட்டத்தில் நீயும் நானும்
நமது வாழ்வும்..

புயலடிக்க., மழைபெய்ய
யாருமற்ற தீவு வீடு
எல்லைக் கோட்டைத்
தாண்டினேனோ
நானறியும் முன்னரே
எதிர்கொண்டு
சிதறடிக்கின்றன
வார்த்தை குண்டுகள்

சிதறிக் கிடக்கிறோம்
முழுதாகவே நானும்
எண்ணங்களும்.
வன்மமாய் இருக்கிறாய்
என் சுயத்தை
சுருளவைக்கும்
முயற்சியில் இன்னும்.

டிஸ்கி :- இந்தக் கவிதை. புதன் செப்டம்பர் 1 அதீதத்தில் வெளிவந்துள்ளது.

புதன், 19 அக்டோபர், 2011

தேவதை அனுப்பிய தேவந்தி.

என் தாய்மொழியெனும் தேவதை தேவந்தியாய் கிடைத்தது கைகளில். தேனுண்ணும் வண்டுகள் முரல்வதுபோல ஒரு மயக்கத்தோடு தொடங்கியது அந்தப் பூவுக்கு அருகிலான பயணம். தேனை சேமித்து சேமித்து கெட்டிப்பட்ட கல்பூவாய் ஆகியிருந்தது அந்தப் பூ. சுற்றிச் சுற்றிவந்த வண்டு தாபத்தோடு மயங்கத் தொடங்கியது, பூவைச் சுற்றி..

வண்டின் வருகைக்காய் காத்து காத்து நெருப்புத்தவம் செய்தபூ நெருப்பாகவே தகித்துக் கொண்டிருந்தது. வேதியல் இரண்டாமாண்டில் என்ன உணர்ந்தேனோ அதையே இன்றும் உணர்ந்தேன்., கண்ணகி, தேவந்தி, சீதை, நளாயினி, அகலிகை, மண்டோதரி, மீரா, சூர்ப்பனகை, தாடகை எந்த வடிவமாய் இருந்தாலென்ன புறக்காரணிகளுக்காக பூக்கள் வேஷமிடவேண்டியிருக்கிறது.

தாயென்பவளும் மகளென்பவளும் சகோதரி என்பவளும் அதிக பாசத்தோடு அல்லது குறைந்தபட்ச பாசத்தோடாவது கவனிக்கப்படுகிறார்கள். மனைவியென்பவள் ஒரு மனவிலாசம் கூட இல்லாதவளாகவே இருப்பதையே இந்த சமூகம் விரும்புகிறது. எழுத்துக்களில் கூட போலிப் போர்வை போர்த்தியபடியே இருப்பதை. மகள் என்னும் முக்காடு, அம்மா என்னும் முக்காடு, சகோதரி என்னும் மு்க்காடு, மனைவி என்னும் முக்காடு. இதில் மனைவிக்கான முக்காடு போர்வை போன்றது. மூச்சுவிடக்கூட அதில் திறப்புகள் கிடையாது.

ஒரு தொழிலை, ஒரு உத்யோகத்தை ஒரு பெண் எவ்வளவு கடினமாக செய்ய நிறைவேற்றவேண்டியிருக்கிறது. இதெல்லாம் தேவையா என்ற கேள்விக்குறிகளை எதிர்நோக்கியபடியே. எதெல்லாம் ஒரு பெண்ணுக்குத்தேவை என ஆணாதிக்க மனோபாவம் உள்ள மகானுபாவர்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளின் வழியே மூச்சை அளந்து விட்டபடியும் எடுத்தபடியும் ஒரு ஆக்சிஜனற்ற குகைக்குள்ளே செல்லும்படியாய் செல்லவேண்டியிருக்கிறது. தந்தைவழி சமூகம் விதித்த கட்டுபாடுகளை தாய்வழிசமூகம் பின்பற்றுகிறது. நம் மனோபாவங்களிலேயே இது இது ஆண் செய்யலாம் தப்பில்லை. பெண் செய்தால் தப்பு என புகுத்தப்பட்டிருக்கிறது. எல்லா விலங்குகளையும் களையக் களைய மனம்சிக்கிக் கொண்ட வலை மட்டும் இன்னும் அறுபடுவதில்லை.

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, பிடிக்காதவற்றை அங்கேயே கம்பீரமாக சுட்டிக்காட்டுதல் விலக்குதல், இன்று நான் கொண்டிருக்கும் பெண்ணியல் நோக்குகள் எல்லாம் கற்பித்தவர் என் அம்மா, என் தேவதை.

காலம் கனியும் . என் மொழியை உருவாக்கிய தேவதையின் தேவந்திபோல இன்னும் பலர் வருவார்கள் . பெண்கள் வெறும் பாவை விளக்குகள் அல்ல என்பதை உணர்த்த. இதில் பென்னேஸ்வரனின், பாவண்ணனின், ஜெயமோகனின் அழகான வாழ்த்துரைகள் ஆசுவாசமளிக்கின்றன. வடக்குவாசல் இதை வெளியிட்டு பெருமையுற்றிருக்கிறார்கள். ஒரு மனுஷியின் , என் அம்மாவின் 30 ஆண்டுகால வாழ்க்கையின் அனுபவங்களின், அவற்றின் எதிர்வினைகளின் தொகுப்பு இது. அன்றிலிருந்து இன்றுவரை பெண்களுக்காக தன் குரலை எந்தப் பாசாங்குமில்லாமல் நேர்மையாக, நேர்த்தியாக பதிவு செய்திருக்கும் குரல் இது. தேவந்திக்கான முன்னுரை மட்டுமே இது, நேரம் கிடைக்குபோதெல்லாம் அவள் குரலை நான் இன்னும் ஓங்கி ஒலிப்பேன்.

டிஸ்கி..1:- வடக்குவாசல் பதிப்பகத்தின் தேவந்தி நூல். 36 கதைகள் அடங்கியது. விலை. ரூ 225. ஆசிரியர். முனைவர். திருமதி .எம். ஏ. சுசீலா.

டிஸ்கி 2. :- இவர் எழுதிய (பியோதர் தஸ்தாவ்யெஸ்கியின்) குற்றமும் தண்டனையும் குமுதத்தில் பெஸ்ட் செல்லராக அறிவிக்கப்பட்டிருந்தது.

டிஸ்கி 3 ;- இந்த டிசம்பருக்குள் வரவிருக்கும் இவரது இன்னொரு நாவல் அசடன். இடியட்டின் மொழியாக்கம். பாரதி பதிப்பகத்தில் முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

டிஸ்கி 4 ;- சகோ கணேஷ், நாஞ்சில் மனோ மற்றும் இந்தப் புத்தகம் வாங்க விரும்புவர்களுக்காக வடக்குவாசல் பதிப்பகத்தின் முகவரி மற்றும் தொலைபேசி எண்.
Vadakku Vaasal Publications.
5A/11032,Second Floor,
Gali No. 9, Sat Nagar,
Karol Bagh,
New Delhi. - 110 05.
Ph No. 91-11-25815476.
Mobile - 9910031958.
e-mail:vadakkuvaasal@gmail.com
Web site : www.vadakkuvaasal.com

செவ்வாய், 18 அக்டோபர், 2011

விக்னேஷ்வராவில் (துணை)விருந்தினராக..

ஜூன் 25 ஆம் தேதி ருக்கு அம்மாவுடன் விக்னேஷ்வரா லேடீஸ் க்ளப்பின் ஒரு விழாவுக்கு செல்ல நேர்ந்தது. அது போரூர் கவர்ன்மெண்ட் பள்ளியில் ப்ளஸ்டூ படித்து நல்லமார்க் வாங்கி தேறிய குழந்தைகளுக்குப் பணப்பரிசும், 18 குழந்தைகளுக்கு சீருடையும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கும் விழா. அந்த க்ளப்பை சேர்ந்த பத்மா மணி மேடம் சிறப்பு விருந்தினராக ருக்கு அம்மாவை அழைத்திருந்தார்கள். ருக்கு அம்மாவுடன் துணைக்கு சென்ற என்னையும் துணை விருந்தினராக அமரவைத்துவிட்டார்கள். லேடீஸ் ஸ்பெஷல் வாசகியர் அவர்கள் அனைவரும் என்பதும் என்னை ஓரளவு தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதும் மகிழ்ச்சியாய் இருந்தது. (நன்றி கிரிஜாம்மாவுக்கு) .

ராமாவரத்தைச் சேர்ந்த அந்த க்ளப்பில் கிட்டத்தட்ட 45 மெம்பர்கள் இருக்கிறார்கள். சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அந்த க்ளப்பின் தலைவி சியாமளா அவர்கள் வீட்டில் அவ்வளவு பெண்கள் கூட்டத்தைப் பார்த்ததும் நமக்கு ஆச்சர்யம்தான். எல்லாரும் ஃப்ரெஷ் ஃப்ரெஷ். தூங்க, கதையளக்க, டிவி பார்க்க என பலர் வெட்டியாய் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்க, இவர்களோ மிகவும் ஆக்கப்பூரவமான காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ( அதற்கு 4 நாளில் கமலா ஸ்கூலில் டெல்லி கணேஷ் தலைமையில் ஏதோ நிகழ்வு இருக்கிறதென்று வரச் சொன்னார்கள்.!) சியாமளா அவர்களின் இல்லத்திலேயே இந்த விழா நடைபெற்றது.


அவர்கள் கணவர் வெங்கட்ராமனும் குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த ஒத்துழைப்பு. கணவர் பக்கபலமாக இருந்து அனைவரையும் வரவேற்றார். புகைப்படங்கள் எடுத்தார். போரூர் அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஒருவரும் இந்த க்ளப்பில் மெம்பராக இருந்தமையால் அவர் அங்கு பிள்ளைகளை செலக்ட் செய்திருந்தார். பொதுவாக எல்லா இடங்களிலும் எனக்குத் தோன்றுவதுதான் இது. பிள்ளைகள் அனைவரும் கற்பூரபுத்திக்காரர்கள். அம்மா அப்பா உதவி இருந்தால் இன்னும் ஜொலிப்பார்கள். முதல் தலைமுறை கல்வி கற்கும் குழந்தைகள் அல்லது அம்மா அப்பா மிகுந்த கஷ்டத்தோடு (அடிப்படைக் கல்வி மட்டும் படித்தவர்கள். பிள்ளைகளுக்குச் சொல்லித்தரத் தெரியாது.) ஜீவனம் செய்பவர்கள்.

ருக்கு அம்மா அடிப்படையில் டீச்சர் என்பதால் தெனாலி ராமன் , பீர்பால் கதைகள் எல்லாம் சொல்லி குழந்தைகளுக்கு படிப்பின் அவசியத்தை உணர்த்தினார்கள். அம்மா சொன்ன குட்டிக் கதைகளில் நானும் மயங்கிவிட்டேன். மொத்தக் கூட்டமும் கூட. ( அம்மா வாராவாரம் ஞாயிற்றுக் கிழமை ஜெயா தொலைக்காட்சியில் மாலை 6 மணிக்கு குழந்தைகளுக்கு கதை நேரம் என்ற தலைப்பில் கதை சொல்கிறார்கள். நேரமிருப்பின் கேளுங்கள்.). அம்மாவின் ஸ்பீச் ஒரு பர்ஃபெக்ட் ஸ்பீச்.

அடுத்து நான் சில வார்த்தைகள் அறிவுரை கூறினேன்., “ கலைஞர், சூப்பர்ஸ்டார், ருக்கு அம்மா போன்ற பெரிய ஆளுமைகள்தான் குட்டிக் கதைகள் சொல்வார்கள். எனக்கு குட்டிக் கதைகள் எல்லாம் சொல்லத் தெரியாது. “ என்றவுடன் அனைவரும் புன்னகைத்தார்கள்.



“ படிப்பு ஒன்றுதான் நம்மை உயரவைக்கும். படிப்பு ஒன்றுதான் கள்வர் கொள்ள முடியாது. நம்மிடம் இருக்கும் திறமையை யாரும் அபகரிக்கவோ இல்லையென்று சொல்லவோ முடியாது. எந்த சூழ்நிலையிலும் விடா முயற்சியோடு படியுங்கள். அரசாங்கம் நிறைய வசதிகள் செய்து கொடுத்திருக்காங்க. மதிய உணவு , கல்வி எல்லாம். நன்கு படித்தால் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். இட ஒதுக்கீட்டினால் கிடைக்கும் சலுகைகளும் கிடைக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவருக்கு வங்கிகள் கல்விக்கடன் வழங்குகின்றன. நன்கு படியுங்கள். நல்ல உத்யோகங்களில் அமருங்கள். ஆனால் லஞ்சம் கட்டாயம் வாங்காதீர்கள். ஊழல் செய்யாதீர்கள்.

அப்புறம் முக்கியமான விஷயம் என்னன்னா இந்த லேடீஸ் க்ளப் மெம்பர்கள் எப்படி உங்க கல்விக்கு உதவுறாங்களோ அதுபோல நீங்களும் நன்கு படித்து நன்கு சம்பாதிக்கும்போது உங்களால் முடிந்த கல்வி உதவிகளை அடுத்தவர்க்கு செய்யுங்கள். PAY IT FORWARD என்பார்கள். நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம். என்பதுபோல நீங்களும் அடுத்தவருக்கு உதவ வேண்டும். அதுதான் உண்மையான தொண்டு. எப்போதும் நாம் வாங்குபவராகவே இருக்கக் கூடாது., கொடுப்பவராகவும் உயரவேண்டும். இதுதான் நான் உங்களுக்குச் சொல்ல விரும்பிய செய்தி.”

இந்த க்ளப்பை சேர்ந்த எல்லாரும் மொத்தமாக சீருடை, புத்தக செலவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் தனியாக தங்களுடைய அன்பளிப்பாக நல்ல மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்குப் பணப்பரிசு அளித்தார்கள்.



பின் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தபோது இந்த லேடீஸ் கிளப்பின் சேவைகள் போரூர் டைம்ஸில் வந்துள்ளதாக சொன்னார்கள். அனைவருமே லேடீஸ் ஸ்பெஷலின் வாசகியர். ஒவ்வொருவரும் தங்கள் ஹாபியையே தொழிலாக மாற்றிக் கொண்டவர்கள். பத்மாமணி அம்மா விதம்விதமான நகைகள் செய்கிறார். இன்னும் இருவர் புடவைகளில் எம்ப்ராய்டரி செய்கிறார்கள். இன்னும் இருவர் சின்னதாக விலைமதிப்புள்ள ஸ்டோன்ஸ் எல்லாம் ஒட்டிய பெயிண்டிங்குகள் செய்கிறார்கள். சிலர் குழந்தைகளுக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கிறார்கள். சிலர் இலவசமாக ஸ்லோகம் வகுப்புகள் எடுக்கிறார்கள். முடிந்த எல்லா சேவைகளும் செய்கிறார்கள். அவர்களோடு உரையாடி வந்தபின் எனர்ஜி பூஸ்டர் போட்டது போல் இருந்தது. வாழ்க விக்னேஷ்வரா., வளர்க அவர்களின் சேவை. !!!

சனி, 15 அக்டோபர், 2011

போடுரா ஷட்டரை..

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி..டாஸ்மாக்குக்குஎல்லாம் 5 நாள் ஷட்டர். ப்ளாக்குல கூட கிடைக்கலியாம்.. வீக் எண்டானா எஞ்சாய் பண்ணனும்னு நினைக்கிற வீக் எண்ட் ப்ரியர்களே.. பார், பஃப், கிளப்., நம்ம ஜனத்த எல்லாம் வாழவச்சிகிட்டு இருக்குற டாஸ்மாக்குல கூட கறுப்பு, வெள்ளை, நீலம் அப்பிடின்னு எந்தக் கலர்லயும் கிடைக்கலியாம். ரோட்டுல கூட்டம்கூட்டமா ஒரு இடத்துல வண்டிகளை ஆளுங்களை பார்க்க முடியலை. ஆனாலும் இதை எல்லாம் தெரிஞ்சு வெள்ளிக்கிழமையே வாங்கிவச்சவங்கள ஒண்ணும் பண்ண முடியாது.. ஆனா பிள்ளைகுட்டியும் பொஞ்சாதியும் வீட்டுலயும் ரோட்டுலயும் அடிதடி இல்லாம அஞ்சு நாளைக்கு நிம்மதியா இருக்கலாம்.

போடுரா ஷட்டரைன்னு சூப்பர்ஸ்டார் கணக்கா ஆர்டர் போட்ட அதிரடி கவர்ண்மெண்டுக்கு ஒரு ஜே..

டிஸ்கி:- இன்னிக்கு ரோடு பூரா தாரை தப்பட்டை சத்தம் . கொஞ்சம் இதை குறைக்கலாம். பம்பரம்., ,மாம்பழம், தாமரை, முரசு எல்லாம் இன்னிக்கு உலாவந்துச்சு. மனிதநேயரா, முன்னாள் மேயரான்னு தலைப்பில எழுதவந்தபோது இந்த இனிப்பான சேதி கிடைச்சுது.. ஜெ அம்மாவுக்கு ஜே..!!!

வெள்ளி, 14 அக்டோபர், 2011

ஜெயிக்கப்போவது யாரு.?

சென்னை மேயர் மா. சுப்பிரமணியன் அவர்களின் சாதனைப் பட்டியல்.


முகப்புத்தகத்தில் இருந்து எடுத்து போட்டுள்ளேன். இந்த முறை சைதை தொகுதியில் போட்டி இடுகிறார்.

**************************************************************


சைதை சா துரைசாமி அவர்கள் நிறைய ஐஏஎஸ்களை உருவாக்கியவர். தமிழகத்தை பெருமையுறச் செய்தவர். சைதை சா. துரைசாமி குளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். முகப்புத்தகத்தில் என்னுடைய நண்பரான அவருடைய தேர்தல் வாக்குறுதியை முகப்புத்தகத்தில் இருந்து எடுத்து போட்டுள்ளேன்.

////சைதை.சா. துரைசாமிCHENNAI MAYOR 2011
எனது தேர்தல் வாக்குறுதி:

1. கடந்த தி.மு.க மாநகராட்சில் நடைபெற்ற ஊழல் , மத்திய மாநில அரசுகளில் தி.மு.க செய்த ஊழல் போன்று அல்லாது என்னை மாநகராட்சி மேயராக தேர்தெடுத்தால் நேர்மையான, ஊழலற்ற மக்களாட்சி நிர்வாகத்தை நடைமுறை படுத்துவேன்.

2. சென்னை மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் இணையதளம் மையம் தொடங்கப்படும். அந்ததந்த வார்டுகளில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு உரிய இணையதள மையத்திற்கு சென்று தங்கள் புகாரை பதிவு செய்யலாம். தனியாக புகார்களுக்கென உறுவாக்கப்படும் மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் புகார்கள் பெறப்படும். இணையதளத்தை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு, அதே மையத்தில் புகார் பெட்டி வைக்கப்படும். தங்கள் புகார்களை இந்த புகார் பெட்டியில் போட்டு தீர்வு பெறலாம். புகார்கள் பெற்ற 10 நாளில் நடவடிக்கை எடுக்கப்படும்.

3. சென்னையில் ஒவ்வொரு பகுதியும் தனி சிறப்பு வாய்ந்தது. அதற்கு ஏற்றார்போல் திட்டமிட்டு செயல்படுவோம். மக்களின் தேவை அறிந்து செயல்படும்போதுதான் அவர்களின் குறைகளை சரி செய்ய முடியும். 155 வார்டுகளாக இருந்த மாநகராட்சி, இப்போது 200 வார்டுகளாக உருவாகியுள்ளது. இதனால், சென்னை பகுதி மக்களுக்கு கிடைத்து வந்த அனைத்து வாய்ப்புகளும் புறநகர் பகுதி மக்களுக்கும் கிடைக்கும். மருத்துவம், சாலை, குடிநீர், தெருவிளக்கு என்று அடிப்படை வசதிகள் கிடைக்கும்.

4. அறிவியல் பூர்வமாக வெள்ள தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றப்படும், பாதாள சாக்கடை திட்டங்கள் காலதாமதமின்றி விரைவாக முடிக்கப்படும்.

5. முதல்வரின் ஆலோசனைப்படி, அதி நவீன கருவிகளை பயன்படுத்தி சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

6. அனைத்து வார்டுகளிலும் சுகாதாரமான சுத்தமான குடிநீர் வழங்கப்படும்.

7. சாலைகள் அனைத்து காலநிலைகளையும் தாங்ககூடிய All Weather Roads ஆக மேம்படுத்தப்படும்.

8. தெருவோரங்களில் குவியும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுகாதாரம் காப்பாற்றப்படுவதுடன் சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குப்பைகள் அப்புறப்படுத்தப்படும். SOLID WASTE MANAGEMENTல் அதிக கவனம் செலுத்தப்படும்.

9. தனியார் நிறுவனங்களுக்கு நிகராக அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்

10. முதல்வரின் உத்தரவை பெற்று நீண்டகாலமாக இருந்து வரும் வீட்டுமனை பட்டா பிரச்னை தீர்க்கப்படும்.

11. சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தரம் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக மேம்படுத்தப்படும். மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்பு மட்டுமல்ல அவர்கள் எதிர்காலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளை அடைய தேவையான போட்டி தேர்வுக்கு தயார் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

12. மாநில அரசிடம் கூடுதல் நிதி உதவி பெற்று சென்னையை முன்மாதிரி மாநகராட்சி ஆக்குவோம். ///

இவரைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் மற்றும் வீடியோவுக்கு இந்த சென்னை ஆன்லைனைப் பாருங்கள்.

***************************************************************


இருவரைப் பற்றியும் நிறைய பேர் நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதால் இருவரைப் பற்றியும் பகிர்ந்துள்ளேன்.. மக்கள் மனதில் இடம் பிடித்து சென்னை மேயரா ஜெயிக்கப் போவது யாருன்னு பார்க்கலாம்.

வியாழன், 13 அக்டோபர், 2011

கார்ட்டூன் பொம்மைக்குக் குரல் கொடுப்பவள். எனது பார்வையில்.



கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் .. இது நேசமித்திரனின் புத்தகம் உயிர்மை வெளியீடு..நேயாவுக்கும் உயிர்த்தோழிக்குமான ஒற்றைப் புத்தகம் இது.. இது சுமந்து வரும் நினைவுகள் தொலையாதவை.. தொலைக்க முடியாதவை.. குரல்களின் வழி வழிகிறது.

கவிதைகளில் ஒரு வித்யாசமான உலகத்தைப் பார்க்கவேண்டுமென்றால் இந்தக் கவிதைகளைப் படிக்கலாம் உங்கள் கண்ணுக்குப் புலப்படும் உலகமே வேறொரு கோணத்தில். . நேசனின் கவிதைகள் கற்பாறைகளினூடாக பயணம் செய்யும் அனுபவம் தருபவை.. எங்கே காட்டருவி வரும்., எங்கே ஆகாயம் புலப்படும் எங்கே வனம் வரும் என புலப்படாத ஒரு பாதையில் செல்வதைப் போல அது.

எந்தக் கோட்பாடுகளை எல்லாம் ஒழுக்கம் என சொல்லிக்கொண்டிருக்கிறோமோ அவற்றின் மீதெல்லாம் ஒரு கேள்விக்கணையை எய்து கொய்யும் கவிதைகள்..

”ஒரு வஞ்சத்தைப் போல
ஒளித்து வைக்கிறது முதல் பூவை
காம்பின் நிறமுடைய
உதடுகளில் இருந்து கசியும்
கருணைக்காக..”

”வழி மொழிகின்றன குழந்தையின் உதடுகள்..
தொலைக்காட்சி பொம்மைகளின்
குரலை. ”

கார்ட்டூன் பொம்மைகளுக்கு குரல் கொடுப்பவள் போல கவிதைத்தொகுதி சில சமயம் குழந்தைத்தனத்தோடும்., சிலசமயம் மு்திர்ச்சியுடனும்., சிலசமயம் சலிப்புடனும்., சிலசமயம் விழிப்புணர்வு தூண்டியும் சிலசமயம் எச்சக் கணைகளோடும் ., பல சமயம் எதிர்பாராத உறுதியோடும் வீர்யத்தோடும் அச்சமூட்டியும் அதிர்வுகளோடும் செல்கிறது .

பறவைகளற்ற ஒரு உலகு., உடல்தானம் பெற்ற டி என் ஏக்கள்.,லேசர் திரைச்சீலையில் பாலையைக் கடக்கும் நாகங்கள் போல ஒருவரை ஒருவர் கைவிடுவதாக அறிவித்துக் கொள்வது ., அலை தோலுரிக்கும் கடல் அரவம்., எரியும் காகிதம் புல்வெளி வீழ்வதாய்., சிறகு முளைக்கும் கனவுகளோடு மல்பெரி இலைகளைத் தின்பதும் .,,டாஸ்மாக் பையூதியும்., வனம் எரியும் பாம்புகளின் பாதையும் ., அலகில் துள்ளும் மீனுக்கு ஒரு கண்ணில் ஆகாயமும் தற்கொலை குறிப்புக்களும் ., பரிசளிக்க விரும்பிய நாளில் பால் மாறிய செய்தியும் கொஞ்சம் அதிர்வேற்படுத்துகின்றன....

விலா எலும்பில் விந்து வைத்திருந்தவன் மகள் ., அக்காவிடம் அம்மாவைத்தேடுதல்., என உறவுகளும் மற்றும் பின்ன உடலின் ஸ்கலிதங்கள் என கோமாளி மீனுக்கு பெண்ணுறுப்பு வால்புறமிருப்பதும். விநோதம்.

ஒலியின் உடல் மொழி அற்புதம்.. கருவிலிருந்து வெளியேறுவதை உணரத்தரும் வலம்புரி இசையதிர்வு.. ஆனால் அரட்டுவது கிளை படரும் சிறுத்தையின் அதிர்வில் சங்குகளில் ஒளிந்து கொள்ளும் நத்தைகள்..

நார்சிச வனம் மாற்றும் நாசிசத்திமிர்., ப்ரேதமுத்தம் வைப்பரில் சிக்கிய சிறு தும்பியின் ரத்தம் அரக்கில் உறைவதை வரைவதும்., கடவுளர்க்கும் க்ரோமோசோம் குறிப்பதும்., குதிரை முடியால் கொலை செய்யும் பெண்ணும்., வெளிச்சத்தோடு பறக்கும் பாலுண்ணிக்கு ஈர்ப்பு வேறோர் கோளிலும்., காளான் தலை உலகமும்., கிலாகோவும் எஸ்கார்ட் பெண்ணும்., ஸ்டெராயிடும் ஐ பில்லும்., கூடும் இரு ஆண்களை நிழலாக்கும் ஈரிலைத்தாவரத்தின் கிளைகளும் எழுப்பும் கேள்விகள் அநேகம்..

கார்ட்டூ்ன்., லெஸ்பியன்., கிகாலோ., ஸ்டென்சில்., டி என். ஏ., ஃபாசில்., தெர்மோகோல்., ஃபோட்டொ சிந்தடிக் முத்தங்கள் ஈயும் வெப்காம் சஞ்சயர்கள்., கிரமஃபோன்., பிரமிட் வவ்வால்கள்., ஹைட்ரோதெர்மல் நாசி.,கிராஃபிக்ஸ்., கார்பன் தாள்., ஓபியப் பாதரசம்., ரேடிய விடியல்., அர்மதான் வளி வெளி., மார்ஃபிங்., மாயன் காலண்டர்., டெசிபல்., ந்யூரான் மடிப்புக்கள்., டாரெட் கார்டுகள்., பெரிகார்டியல் திரவம்., இங்குபேட்டர்., சோலார்., போன்சாய்., ஹார்மோன்., பிக்சல்கள்., டெசிபல்கள்., ஸ்டெராயிட்., ஐ பில்., ஓசோன்., டங்ஸ்ட்டன்., பைனரி., பிக் பாங் தியரி., பாசில் மூலம் அறிவது., ரப்பர்., ப்ளாட்டினம்., என விஞ்ஞான ஆங்கில வாத்தைகள் அதிகம் பிரயோகிக்கப்பட்டிருந்தாலும் வாழ்வியலோடு கலந்து விட்டதால் படிக்க எளிதாய் விட்டதுதான்.. பரிணாமங்கள் மாறுவது போல மொழியும் மாறிக் கொண்டிருப்பதற்கான ஒரு பதியனிட்டது போலிருக்கிறது..

கம்ப்யூட்டர் ., ஆன் லைன் வழி நடக்கும் ஒரு குறிப்பிட்ட சமூக மாற்றத்தையும் அங்கங்கே கோடிட்டு செல்கின்றன கவிதைகள்.. வெப்காம் மூலம் பார்த்து குடும்பம் நடத்துவது., பிக்சல்கள் மூலம் ஆண் பெண் நட்பு தரிசித்துக் கொள்வது., டெசிபல்கள் மூலம் களியாட்டம் நிகழ்த்துவது என கொஞ்சம் கோலத்தையும் ., அலங்கோலத்தையும் கூட வரைகின்றன.. குரல்கள்..

அருவி வனத்தின் அரையி்டைப் பின்னல் ஆவது., ஒளியேந்தும் இலை கீழிருக்கும் மெல்லிருள்., கடல் தாவரத்தின் சுவாசம்., வெய்யிலைச் சலிக்கும் மரம்., கர்ப்பகால தொப்புள் நிலா., கிள்ளிய இருள் சாட்சியாய் நிலா., தெர்மோகோல் ஆகாயம்., நட்சத்திர உமிகளாய்ச் சிப்பிகள். சூரிய அடையில் பாலைபறவையின் நிலாக்கல் முட்டை., உதட்டுக்கு இருக்கும் குழந்தையின் விரல்களாய் மார்பகம்., காற்று குடித்து மிதக்கும் கோப்பையில் நிலாப்பிறை..நிலாக்குவளை மிதக்கும் நிசி..இன்னும் இன்னும் நிறைய என்னை ரசிக்க வைத்தவை.. நீர்ப்பறவை மேலோட்டமாக கால் பாவி செல்வது போலத்தான் எல்லாவற்றையும் பாவி பாவிப் பறந்து படித்தேன்.. திரும்ப திரும்ப தேனீ போலவும் சிலவற்றில் செம்மாந்தும்..

“வதுவையின் துவக்க வாசனை மிதக்கும்
மென்னகைக்கு ஆறேழுமுறை உயிர்த்தெழ சாகலாம்..”

”ஆலிவ் தளிர் யேந்திய பறவையின் குரலில்
ஆர்க்கிமிடிஸின் மகா நிர்வாணச் சொல்..”

”பாறையின் மீதமிருக்கும் நீர் தழும்பாய்
தண்டவாளத்துண்டு அதிர்ந்ததும் கேட்கும்
களிக்கூச்சல்..”

“இறைஞ்சிக் கொண்டிருக்கிறாள்
பிராயம் தொலைந்த பெண்
பழைய வாடிக்கையாளனை..”

”வெளியேறுகையில் கடைசியாகவும்.,
நுழைகையில் உடலை முந்தியும் நுழையும்
நிழலைப் பழக்கியிருக்கும் இவ்வீட்டில்”


புத்தகம் முழுமையுமே நாம் ஒவ்வொரு வரியாக சிலாகித்துக் கொண்டே போகலாம். இறந்த காலம் ., நிகழ் காலம்., எதிர்காலமற்று., என்றும் பொருந்தும்.,சொற்சித்திரங்கள் வரையப்பெற்ற குகையினூடே சென்று மங்கிய தீவட்டி ஒளியில் எல்லா ஓவியத்தையும் சிதைக்காமல் கருத்தோடு பார்க்க வேண்டிய கவனத்தை உண்டு பண்ணுகின்றன கவிதைகள் அனைத்தும்..

நிறைய புதுமையான சிந்தனைகள் ., ஆங்கிலக் கலப்போடு வந்தாலும் அவற்றின் வீர்யம் கருதி வாசிப்பு இயல்பாகிறது.. சி்லவற்றை இரண்டு மூன்று முறை படித்தால் பல கோணங்கள் விரிவாகின்றன.. வாசிப்பாளனுக்கு ஒரு சித்திரத்தை.. கோடு காட்டி மன கான்வாசில் முழுமையுறச் செய்கிற உத்தி நேசனுக்கு கைவந்தது..இ்ன்னும் வேறு விதங்களில் நாமே வரைந்து பார்க்க ஊக்கியாகவும் இருக்கும்.

நிறைய கவிதைகள் முன்பே படித்திருக்கிறேன் என்றாலும் கீ வேர்டு என்பதை நேசன் குறிப்பிட்டு இருப்பார்.. அதன் மூலம் இன்னும் எளிதாக நம்மை அடையும் கவிதைகள் புத்தகம் மூலம் சிறிது தாமதமாகத்தான் கைவரப் பெறுகின்றன..


இயற்கையை எல்லாம் செயற்கையாய் மாற்றிக் கொண்டிருக்கும் நாம் கவனிக்க வேண்டும் இந்த எச்சரிக்கையை எல்லாம்...

”செல்போன் கோபுரம் வீசும் மின் வலை
மெல்லக் கொல்லும்.

கம்பியில் உறங்கப் பழகுகிறது கூண்டுப் பறவை.. ”

“குடை ரிப்பேர்செய்து கொண்டிருக்கிறோம்
மரம் நட்டு “

என்ன சொல்ல...நேசனின் வார்த்தைகளில் சொல்கிறேன்.. இத்தொகுதி “சிறகுதான் ஆனால் கனம் பென்குவினுடையது.. ”

டிஸ்கி:- இந்த விமர்சனம் செவ்வாய் 12. ஏப்ரல் 2011 கீற்றுவில் வெளியானது.

புதன், 12 அக்டோபர், 2011

ஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராமன் சாத்தப்பன்.

வெற்றிகரமான ஏற்றுமதியாளராவது எப்படி? பணம் காய்க்கும் மரம். ஏற்றுமதியில் சந்தேகங்களா., பாகம் 1, 2. இவை மூன்றும் திரு சேதுராமன் சாத்தப்பன் அவர்களின் நூல்கள். முதலீடு சம்பந்தமாக ஏகப்பட்ட ஆலோசனைகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.. ஆனால் ஏற்றுமதி சம்பந்தமான ஒரு வலைப்பூவை இவர் நடத்துகிறார் என்பது ஆச்சர்யமாய் இருந்தது. ஏற்றுமதியும் இறக்குமதியும் நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கின்றன.

இவர் செட்டிநாட்டின் நெற்குப்பையை சேர்ந்தவர். வெளிநாட்டு வங்கியொன்றின் இந்தியப் பொது மேலாளராகமும்பையில் பணியாற்றுகிறார். மிக அருமையான தகவல்கள் இவர் வலைப்பூவில் கொட்டிக் கிடக்கின்றன. ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்களின் கேள்விகளுக்கும் இவர் பதில் அளிக்கிறார்.

இறக்குமதி பற்றிக் கூறும் போது .” இறக்குமதியாளரை இனம் காணுங்கள். பின்னர் அவரை பற்றிய நன்னம்பிக்கை அறிக்கையை இசிஜிசி, மீரா இன்பார்ம், டன் அண்ட் ப்ராட்ஸ்டீரிட் ஆகிய நிறுவனங்கள் மூலம் பெறலாம். இதை வைத்துக் கொண்டு ஏற்றுமதி செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம்.” என்றும் ”அலங்கார மீன்கள் (கொய் மீன்கள்) இறக்குமதி செய்ய வேண்டுமென்றால இது ஒரு ரெசிடிரிக்டெட் இறக்குமதி. டைரக்டர் ஜெனரல் ஆப் பாரின் டிரேட் அவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் செய்ய முடியும். ” என்றும் கூறுகிறார்.

ஏற்றுமதியில் என்னென்ன முக்கியமான டாக்குமெண்ட்கள் தேவை :-
ஏற்றுமதியில் முக்கியமான டாக்குமெண்ட்கள் என்று பார்க்கபோனால் இன்வாய்ஸ், பில் ஆப் லேடிங் அல்லது ஏர்வே பில் ஆகியவை மிகவும் முக்கியமான டாக்குமெண்ட்களாக கருதப்படும். மற்ற டாக்குமெண்ட்கள் தேவையெனில் கொடுத்தால் போதும். அவை, சர்ட்டிபிகேட் ஆப் ஆர்ஜின், இன்ஸபெக்ஷன் சர்ட்டிபிகேட், வெயிட் சர்டிபிகேட், பில் ஆப் எக்சேஞ்ச், இன்சூரன்ஸ் டாக்குமெண்ட் போன்றவை ஆகும். எல் சி படி தவறில்லாமல் இருக்க வேண்டும். என ஏற்றுமதி செய்வதற்கு தேவையான தகவல்களைக் கூறுகிறார்.

இந்தியா உலகளவில் 20 இடத்தில் இருக்கிறதாம். ஏற்றுமதி இறக்குமதி செய்ய நிறுவனத்தின் பெயரில் ஐ இ சி கோட் ( IEC) தேவை என்கிறார். கடல் பொருட்கள், உருளைக்கிழங்கு, பனைவெல்லம், வெங்காயம். கைவினைப் பொருள், தோல் பொருட்கள். ஏலக்காய், நெய் மாம்பழம் புண்ணாக்கு, கார்மெண்ட்.மெஷினரி, எலக்ட்ரானிக், ஆட்டோமொபைல்ஸ், கன்சல்டன்சி, ட்ரெயினிங், ஆகியன ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பேரீச்சை இறக்குமதி செய்யப்படுகிறது.

மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான பணப் பரிவர்த்தனைக்கு டாலர் மற்றும் ரூபாயின் மதிப்பு மாறும்போது பார்வேர்ட் காண்ட்ராக்ட் போடுவது சிறந்தது என்கிறார். ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு வெப்சைட் அவசியம் என்கிறார்.

பங்களாதேஷுக்கு ஏற்றுமதி செய்து பணம் பெற தாமதமாவது ஏன்? வர்த்தகக் கண்காட்சிகளின் தேவைகள் இந்திய அரசு வர்த்தகப் பொருட்களை சேமிப்பதற்கான கிடங்குகள் அமைத்து விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளருக்கு உதவ வேண்டும் என்பது பற்றியெல்லாம் விரிவாக அலசி இருக்கிறார்.

இது ஏற்றுமதி செய்ய விரும்புவர்களுக்கான இவருடைய இணைய தளம். என்னென்ன பொருட்கள் ஏற்றுமதிக்கு தேவையா இருக்கிறது.என அறியலாம்.

மேலும்சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால் இவர் சிறந்த எழுத்தாளரும் கூட. உயிர்மையில் கதைகள் எழுதி இருக்கிறார். இவர் தனது சைக்கிள் பற்றி உயிரோசையில் எழுதி இருந்த கதை சைக்கிள் நேசர்களுக்கான ஒரு கவிதை..ஆச்சி வந்தாச்சு, நகரத்தார் மலர் போன்ற இதழ்களில்மிகச் சிறப்பான கட்டுரைகள் எழுதி வருகிறார். நகரத்தார் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், பற்றி எழுதும்போது ஏ. கே . செட்டியார் பற்றியும் சிறப்பாக எழுதி இருந்தது கவனத்தைக் கவர்ந்தது. இவர் பற்றி அதிகம் பேருக்குத்தெரியாது. ஆனால் பயண நூல்களின் முன்னோடி ஏ. கே. செட்டியார். என குறிப்பிட்டிருந்தார்.

சேதுராமன் சாத்தப்பன் அவர்களின் இந்த வெப்சைட்டையும் பார்த்து பயன் பெறுங்கள். மிக அருமையான தகவல்களை பயனுற பகிரும் திரு . சேதுராமன் சாத்தப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

டிஸ்கி 1 .:- இண்டி.காம் ப்லாகர்கள் சந்திப்பில் பெண்ப்லாகர்களை ( லஷ்மி தவிர) அழைத்திருந்தார்களா.? மற்றும் அங்கு தமிழ் வலைப்பதிவர்க்கு உதவுவது தொடர்பான சர்ச்சைகளை கேபிள் சங்கர் ப்லாகில் படித்தேன். மிக அதிகமாக எழுதி வாசிப்படும் தமிழ் வலைப்பதிவர்களுக்கு இண்டி போன்றவை என்ன உதவி செய்ய முடியும்.?

டிஸ்கி 2. :- இது எனக்கு இன்று வந்த கருத்துரை. இது அனைவருக்கும் உபயோகப்படும் என்பதால் இங்கு சேர்த்திருக்கிறேன்..

////sethu உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராமன் சாத்தப்பன்.":

தேனம்மை அவர்களே அன்பு வணக்கம்.
திரு சாத்தப்பன் அவர்களை பதினோரு வருடங்களாக எனக்கு பரிட்சயம் . அவர் தினமலரில் எழுத துவங்கி பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டது. சிறு தொடராக ஆரம்பித்தார். இன்று விருட்சம் போல வளர்ந்துள்ளது அவரது ஏற்றுமதி தொடர்.
தமிழ் நாட்டில் பல ஆயிரங்கள் பணம் வாங்கி சொல்லி தரும் ஏற்றுமதி படங்களை அவர் இலவசமாக நடத்தி தருகிறார். எந்த நேரம் செல் போனில் அழைத்தாலும் ஏற்றுமதி ஆலோசனைகளை இலவசமாய் வழங்குகிறார்.
அவரின் ஆலோசனையால் ஏற்றுமதியாளர் ஆனவர்கள் அதிகம். தினமலரில் ஈரோடு, சேலம், கரூர், வேலூர் , திருப்பூர் போன்ற இடங்களில் ஏற்றுமதி நிகழ்ச்சி நடத்தி உள்ளார்.
எழுத்து பணி தாண்டி , பழகுவதற்கு நல்ல பண்புள்ள மனிதர். நேர்மை தவறாதவர்.
அன்புடன் சேது
செய்தியாளர், தினமலர் /////

நன்றி திரு சேது. எனக்கு அவர் தினமலரில் எழுதி வரும் விபரம் தெரியாது. தற்போது தெரிந்து கொண்டேன். நன்றி.

செவ்வாய், 11 அக்டோபர், 2011

யாதுமானவள்.. SHE .. THE END AND THE BEGINNING.



யாதுமானவள். அப்பா என்ற சொல்லுக்கு எத்தனை பதம் பிரிக்க முடியும். தோழன், வழிகாட்டி, தந்தை. , இன்னும் இறைவன் என்றும் சொல்லலாம். இன்றும் கூட போனில் நான் சிறிது அப்செட் ஆக இருந்தால் அப்பா அன்று இரண்டு மூன்று முறை கூட பேசுவார்.. அப்பாவுக்கு மகள் என்பது அவ்வளவு பொக்கிஷமான உறவு. அது இந்த குறும்படத்தில் இன்னும் பலமாய் ஒலித்திருக்கிறது. அப்பாவுக்கு மகளைப் பிடிக்கும். அம்மாவுக்கு மகனைப் பிடிக்கும் என்பது இயற்கை.

ஐ எஸ் ஆர் செல்வகுமாரின் இந்தக் குறும்படத்தின் நாயகன் அன்பு மிக இயல்பாக செய்திருக்கிறார். நடிப்பதே தெரியாத அளவு இயல்பான பேச்சு. நடிகர் சிம்புவின் சாயலை அவ்வப்போது நினைவூட்டுகிறார். இளமையை பிரதிபலிக்கும் வயது. அளவான பங்களிப்பு.

சோலை மிக அருமை.. வாழ்க்கை செதுக்கி இருக்கும் கோடுகளோடு முதுகின் வளைவுகளோடு, உண்மைத் தந்தையை பிரதிபலிக்கிறார். நல்ல வசனங்கள். உச்சரிப்பு இருவரிடம் இயல்பாய் நெகிழ்வாய் வருகிறது. மிக நல்ல நடிகர் சோலை. வேறெதிலும் நடித்திருக்கிறாரா தெரியவில்லை. கடைசியில் கடற்கரையில் ஓடும்போது மூழ்கிவிடுவாரோ என்ற பதட்டமும், சிறிது கண்ணீரும் வந்தது. பெண்கள் தந்தைக்கு பேரரசிகள்தான்.

நடிப்பு, காமிரா, இசை, காட்சியமைப்பு, டப்பிங் அருமை. சப்டைட்டில்ஸ் ரம்யா முரளி.. சிறப்பாக செய்திருக்காங்க. விவேக் நாராயணன் இசை. எங்குமே உறுத்தல் இல்லாமல் காட்சியோடு இணைந்து அழகா இருக்கு. கார் செல்லும்போது செண்பகப் பூக்கள் கொட்டிக் கிடக்கும் சாலை அழகு.

இன்னும் பெண்களின் அன்பால் ஆளப்படுபவர்களாகவே ஆண்கள் இருக்க விரும்புகிறார்கள். அது மகளானாலும் சரி, மனைவியானாலும் சரி, சகோதரி ஆனாலும் சரி, அம்மாவானாலும் சரி. மகளுக்குத் தந்தை எல்லாமுமானவர். அன்பை இரப்பவர்கள் ஆண்களாகவும் வழங்குபவர்கள் பெண்களாகவுமே இருக்கிறார்கள் என்பது உண்மை.

ஆனா ரெண்டு கேள்விகள். மெட்ராசிலேயே பீச் இருக்கு. இவங்க எந்த ஊருக்கு கடற்கரையை தேடிப் போறாங்கன்னு ஒரு போர்டாவது காமிச்சிருக்கலாம். தெரியாத ஒருவர் இந்த ஊருக்கு இந்தக் கடற்கரைக்குத்தான் போவார்னு எப்பிடித் தெரியும்.? ஒரு தூக்கம் வேறு போடுகிறார் ஹீரோ. அப்ப அது எங்கிருந்து எந்த அளவு தூரத்தில் இருக்கும் ஊர். நேஷனல் ஹைவேஸ் போல இருக்கு.

இரண்டாவது எல்லா இடத்திலும் வசனம் சரி. ஆனால் ஒரு தகப்பனுக்கு அவர் பெண் சகோதரியா, தாயா இருக்கலாம். ஆனால் எப்பிடி காதலியா, மனைவியா இருக்க முடியும்?. இந்த இடத்தில் உங்க நேசத்துக்குரியவளா, தோழியா என கேட்டு இருக்கலாம். ஒரே வசனம் ரிப்பீட்ட் ஆகணும் என்று இந்தத் தவறை செய்திருக்க வேண்டாம். என்றைக்கும் தந்தைக்கு மகள் நேசத்துக்குரியவளா, தோழியா, சகோதரியா, தாயா இருக்கமுடியும். சின்னக் குறைபாடுகள் பார்ப்பவருக்கு இடறல்களை உண்டுபண்ணும்படி அமையக்கூடாது. ஒரு பர்ஃபெக்ட் படத்தில் எல்லாமே பர்ஃபெக்ட்டா இருக்கணும் என்பது எனது எண்ணம்.

கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும்படம் மிக அருமை. நல்ல முயற்சி ஐ எஸ் ஆர் வென்சர்ஸ். நிறைய குறும்படங்கள் இந்த நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு வருது. நிறைய திறமையாளர்கள், படைப்பாளிகளை வெளிக் கொணரும் டைரக்டர் செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள்.
இந்தப் படத்துக்காக உழைத்திருக்கும் இளம் திறமைசாலிகள் அனுஷாவுக்கும் தான்யாவுக்கும் வாழ்த்துக்கள்.

குறும்படத்தை பார்த்துட்டு உங்க கருத்துக்களையும் பின்னூட்டத்தில் பகிருங்கள்.

திங்கள், 10 அக்டோபர், 2011

விஜய் டிவியின் நீ்யா நானாவில் நாங்கள்.

ஏப்ரல் 14 அன்று தமிழ் புத்தாண்டுக்கான ஸ்பெஷல் நீயா நானாவில் பங்கேற்கும் சந்தர்ப்பம் அமைந்தது. அது சம்பந்தமாக ஃபோனில் சுதா பேசியபோது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபின் டிவியில் தொடர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார். நான் தொடர்களே பார்ப்பதில்லை என்பதால் அது பற்றிய சில கருத்துக்களைச் சொன்னேன். மெயினாக அதுக்கு அடிக்ட் ஆனவங்க பலபேரை பார்த்ததினால் அது பற்றியும் சொன்னேன். இந்தக் கருத்துக்களை நீயா நானா நிகழ்ச்சியில் சொல்ல முடியுமா, கலந்து கொள்ள விருப்பமா என கேட்டார். ஒப்புக் கொண்டேன். ( தொலைக்காட்சி சீரியல் கில்லர்களைப் பற்றி தெளிவுறுத்துவது என் கடமை என்பது போல:))


அங்கு சென்றபின் ( அதற்கு தமிழரசி, தமிழ்ச்செல்வி இரு பெண் பதிவர்களும் நன்றாக பேசக்கூடியவர்கள் என பரிந்துரைத்திருந்தேன். மிக அருமையான கருத்துக்களை எடுத்து வைத்தார்கள். கவிதைச் சங்கமத்தில் ஏற்பட்ட இம்ப்ரஷ்ன் அது) பதிவர் ஜாக்கி சேகரும் அழைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இவரும் மிக அருமையான கருத்துக்களை கோர்வையாக கூறினார்.

நிகழ்வுக்கு முன் ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டி சென்றபோது அங்கே சின்னத்திரையில் எல்லா சீரியல்களின் பிரபலங்களும் இருப்பதை பார்த்தேன்.

ராகவி, வடிவுக்கரசி, நிஷா, விமல், தீபக், காவ்யா .. அவ்வளவுதான் நாம அவுட் என நினைத்தேன். நீயா நானா நிகழ்ச்சி துவங்கிய பின் தான் சரியாக தெரிந்தது தலைப்பு சீரியல்கள் பற்றி மட்டுமல்ல. தொலைக்காட்சி பார்ப்பது குறித்தான நன்மை தீமை பற்றி என. பின்ன என்ன.. நாம் கூறிய கருத்துக்களில் சில மட்டுமே வந்தன. தொலைக்காட்சிக்கு நாங்கள் எதிரி அல்ல தொலைக்காட்சித் தொடர்களுக்கு மட்டுமே. அவை மக்களுக்கு அடிமை மனப்பான்மையை ஊட்டுகின்றன என்ற கருத்தை சொல்லி நடிகை வடிவுக்கரசியின் கோபத்தை சம்பாதித்ததுதான் மிச்சம்.( பின் ஒரு பேட்டிக்காக அணுகியபோது ரொம்ப கோபப்பட்டார். பலமுறை தொடர்பு கொண்டபின் சமாதானமாகி பேட்டி கொடுத்தார். )


எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் தினமும் ஒன்றரை மணி நேரம் இரவு தொடர்கள் பார்ப்பதாகவும் வீட்டில் உள்ளோர் பார்க்க விடவில்லை என்றும் சொன்னாள். அக்கா நான் நிம்மதியா இந்த சீரியலை எல்லாம் பாத்து அழக்கூட எங்க வீட்டில் விடமாட்றாங்க. என்பையன் இந்த மூணு சீரியல்லயும் ஒரே மாதிரிதானே வருது. எங்கே கதையை சொல்லுங்க அப்புறம் நான் உங்களுக்கு அந்த சீரியலை போடுறேன் என்று ரிமோட்டை தரமாடேங்குறான். கிரிக்கெட் பார்த்துகிட்டு என்றாள்.


அந்தக் கருத்தைக் கூறியபோது எதுக்கு இப்படி செய்யணும். ஒன்னரை மணி நேரம் அழறதுக்கு அதுல என்ன இருக்கும் என நான் கேட்டபோது , நீங்க சம்பளம் ஒழுங்கா தரீங்களா என படவா கோபி கேட்டார்.


பின் நான் தொலைக்காட்சி பிடிக்காது என சொல்லவில்லை. அதில் ட்ராவல் அண்ட் லிவிங், நேஷனல் ஜியாகரஃபிக், பாடல்கள், செய்திகள் பார்ப்பேன் என கூறினேன். பின் தொலைக்காட்சித் தொடர்கள் உறவுச் சிக்கல்களையும் உணர்வுச் சிக்கல்களையும் உண்டாக்குகின்றன என்ற கருத்தையும் பதிவு செய்தேன். அதற்கு கோபியும் தொலைக்காட்சித் தொடர்கள் உறவுச் சிக்கல் உணர்வுச் சிக்கல்கள் உருவாக்குவதாக இவங்க சொல்றாங்க என்று சொல்லி அதுக்கு கருத்துக் கேட்டபோது எதிர்வரிசையில் இருந்த பெண் நீங்க அதுல சமையல்குறிப்பு பாருங்க, வேறு நிகழ்ச்சி பாருங்க என்றார். என் கருத்து இல்லாமல் அவர் கருத்து மட்டும் ஒலிபரப்பில் பார்த்தோம். எடிட்டிங்கில் சென்று இருக்கலாம். ஒருவர் சொல்லும் ஒரு கருத்து மட்டுமே ஒலிபரப்பப்படும் என தெரிந்திருந்தால் இதை மட்டுமே சொல்லி இருக்கலாம்.

நிகழ்வு முடிந்து வெளியே வந்தபின் சுதா, கீதா, மஞ்சுவை பார்த்து( இந்த நிகழ்ச்சிக்கு அதிகமாக உழைக்கின்ற பெண்கள் இவர்களும் கூட) புகைப்படம் ஒன்று எடுத்து வந்தேன்.



சனி, 8 அக்டோபர், 2011

காமமும் லஞ்சமும்..

தண்டவாளக்
கழிவறைகளைப் போல்
எங்கெங்கும் சிதறிக்
கிடக்கிறது காமமும் லஞ்சமும்..

அகலக்கால் வைத்து
தாண்டிச் செல்கின்றன
பெட்டிகளும் எஞ்சினும்..

கழிவுகளையும் காமத்தையும்
சுமந்து திரியும் மனிதர்கள்
கிடைக்கும் இடமெல்லாம்
கழித்துக் களிக்கிறார்கள்..

நாற்றங்களை சுவாசித்து
மூச்சடைத்த எஞ்சினும்
பெட்டிகளிலிருந்து
தற்காலிகமாக கழன்று
ஓடிப்போகிறது ஓய்வெடுக்க..

கழுவிசுத்தமாக்கும் பணியில்
தொடர்ந்த போராட்டத்தோடு
துடைப்பமும் கையுமாய்
துப்புரவுப் பெண்களும்..

லஞ்சத்தைப் போல்
ஒழிக்க முடிவதி்ல்லை
எல்லா இடத்திலும் என்றாலும்
துடைப்பத்தால் தொடப்பட்ட
சில இடமாவது சுத்தமாய்...

டிஸ்கி 1 :- இந்தக் கவிதை ஏப்ரல்18. 2011 கீற்றுவில் வெளிவந்துள்ளது.

டிஸ்கி 2. :- லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்காக கவிதைகள் 10.10.2011க்குள் அனுப்பி வையுங்க மக்காஸ். ஈமெயில் ஐடி. raghavan.girija@gmail.com . உங்க கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட வாழ்த்துக்கள் மக்காஸ்..:)

வியாழன், 6 அக்டோபர், 2011

சதுரங்கம். எனது பார்வையில்.




செஸ் விளையாட்டில் எங்கெங்கெல்லாம் ராஜாவுக்கு செக் வர சாத்யக்கூறுகள் உண்டு. எதிர்பார்க்கும் இடத்தைத்தவிர மறைந்திருக்கும் எதிரிகளும் இருப்பார்கள். பலமுனைத்தாக்குதல்கள் இருக்கும். ராணி, குதிரை, யானை, தேர் என எல்லாம் இருக்கும். இது மூளை விளையாட்டு என்பதால் எல்லாப்பக்கமும கவனமாக விளையாட வேண்டும். இந்த மூளை விளையாட்டில் யார் யாரையெல்லாம் காவு கொடுத்தும் கடைசியில் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் கதை. பொதுவா ராணி எல்லாப்பக்கமும் சுழன்று ராஜாவைக் காப்பாற்றுவது சதுரங்கம். இந்தச் சதுரங்கத்தில் ராஜா எல்லாப் பக்கமும் சுற்றிச் சுழன்று ராணியைக் காப்பாற்றுகிறார்.

ஹீரோ ஸ்ரீகாந்த பத்ரிக்கையாளர். இன்வெஸ்டிகேட்டிங் ஜர்னலிசம் என்பதன் முழுமையான பணி செய்கிறார். அதன் விளைவுகள் கதை. கதை பழகி இருந்தாலும் சொல்லி இருக்கும் களனும் வேகமும் புதுசு. ஆறுவருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட கதையாம். இன்றும் பொருந்தி வருகிறது. இன்றும் எதுவும் மாறவில்லை. இதை நச் நச் என்ற வசனங்களிலும்புள்ளி விவரங்களிலும் தனக்கே உரிய பாணியில் படபடவென்று கரு பழனியப்பன் கொட்டி இருப்பது அழகு.

ஸ்ரீகாந்த கொஞ்சம் கரடுமுரடாக உதட்டில் காயத்தோடு கொஞ்சம் டெரர் பத்ரிக்கையாளர் லுக் கொடுக்கிறார். நான் எதிர்பார்த்தபடி தன் காதலி கடத்தப்பட்டதும் சாராயம்காய்ச்சுவோர், ப்ராத்தல் செய்பவர்கள், கள்ளக்கடத்தல் செய்பவர்கள், திருட்டு லாரியை உடைத்து விற்பவர்கள் எல்லாம் அவர் கண்ணில் படவில்லை. நம்முடையது ஒன்று தொலைந்தால் அதைத் தேடுவதிலேயேதான் நம் குறிக்கோள் இருக்குமே தவிர வேறு எந்த உலக அவலமும் கண்ணில் படாது. எந்தச் சீர்திருத்தத்துக்கும் நாம் போக மாட்டோம் என்பதும் உண்மைதான்.

ஹீரோயின் சோனியா ஸ்லிம் அழகி. அந்த மஞ்சள் டீஷர்ட், ப்ளூ ஜீன்சில் அசத்தலாக இருக்கிறார். நிறைய இடங்களில் மஞ்சள் உடை. மிஷ்கின் பட டான்சர் போல ஒரு பாட்டிலும் மஞ்சள் உடை. தன் காதலனின் தோளில் கை போடும் குறும்பு அழகு. அம்புலி மாமா, கன்னித்தீவு பாடல் மிக அழகு. வில்லன் மிரட்டும் இடங்களில் நல்ல நடிப்பு. இப்போ எங்கே இவர்.? மிக நல்ல நடிகைகளை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

ஆண்கள் இன்னும் பெண்கள் சொல்வதை நிறைவேற்றுபவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் பெண்களுக்கு -- காதலிகளுக்கு, மனைவிகளுக்கு -- என்ன தேவை, அவள் ஆசைகள் என்னென்ன என்பதை வாழும் காலம்வரை புரிந்து கொள்வதில்லை என்பது உண்மை. அவள் காத்திருப்பதுபோலும்., ஆசை வைப்பதுபோலும்., முழுமையாக தன்னை சரணாகதி செய்வது போலும் அவளுடைய ஆண் செய்வதில்லை. அந்த காற்றிசைச் சிணுங்கி போல அவள் தானே பேசிக்கொண்டும், மகிழ்ந்துகொண்டும் என்றாவது தன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்ற எண்ணத்தோடும் வாழ்கிறாள்.இதை நன்கு உறைக்க, உரக்க சொன்ன கரு. பழனியப்பனுக்கு HATS OFF.

பாடல்கள் போடும்போது ஆண்கள் பலர் வெளியே ஓடுகிறார்கள். பெண்மை., மென்மை., மலர்கள்.,பாடல்கள் எல்லாம் ஆண்களுக்கு அவ்வளவு அலர்ஜி. இனி படங்களில் 4 வரி பாடல்கள் போதும் என தோன்றுகிறது.

ஸ்க்ரூட்ரைவர் கத்தியால் குத்தி ரத்தம் வரும் இடத்திலும் அடிக்கடி ஹீரோ சிகரெட் பிடிக்கும் இடத்திலும் கொஞ்சம் கோபம் ஏற்பட்டது உண்மை. இவ்வளவு வன்முறை, ரத்தம் எதிர்பார்க்கவில்லை. டென்ஷன் ஆகும் ஆண்கள் சிகரெட் புகைப்பது ஏன்.? அது இஞ்சூரியஸ் டு ஹெல்த் என அடிக்கடி திரையிலும் காட்டப்படவேண்டும்.

சந்தியாகாலம். சந்தியா புஷ்பம்., சந்தியா வேளை என எழுதிப்பார்ப்பது கவிதை. அதுபோல் கேக் முத்தமும். ஒரு கட்டத்தில் கமலை விட அதிக முத்தம் கொடுத்தவர் என்ற போட்டியில் ஸ்ரீகாந்த அதிக முத்தம் கொடுக்கிறாரோ எனத் தோன்றியது.:))

திமிருதான் என சோனியா சொல்வது, தரம் பார்த்துத்தான் நட்பு வச்சுக்குவேன், தகுதிபார்த்துத்தான் எதிரியை வச்சுக்குவேன். அந்தத் தகுதி உங்களுக்கு இல்லை என மகாதேவன் சொல்லுமிடம்., நல்லது ஜெயிக்கும் என நம்புங்கள் என சொல்லுமிடம் ரசிக்க வைத்தன. முதல் பாதி விறுவிறுப்பு, இரண்டாம் பாதியில் கடைசியில் மாமூலாகி விட்டது.




பத்ரிக்கை ஆசிரியர் மணிவண்ணின் சப்போர்ட் மெச்சத்தக்கது.

மகாதேவன் சொல்வது போல கெட்டவன் நம்புகிறான் தான் ஜெயிப்போம் என. அதன்படியே ஜெயிக்கிறான். நல்லவன் நாம் ஜெயிப்போம் என நம்புவதில்லை. உண்மைதான். நாம் ஜெயிப்போம் என நல்லது எதற்காவது நாம் நினைக்கிறோமா. நல்ல பாசிட்டிவ் திங்கிங்கை க்ரியேட் செய்த வார்த்தைகள். படத்தின் மைய நாடியும் இதுதான்.

நல்ல படத்தை தந்த தயாரிப்பாளர் துரைராஜுக்கும் , மாஸ் மூவி மேக்கர்ஸுக்கும், வித்யா சாகரின் இசைக்கும், திவாகர், ராஜீவனுக்கும்., ( மழை நடனம் நைஸ்) டான்ஸ் மாஸ்டர் தினேஷுக்கும்., சண்டைப்பயிற்சி சூப்பர் சுப்பராயனுக்கும் ( நிறைய இடங்கள் நமக்கே அடிபட்டது போல வலித்தது. ப்ளாட்ஃபார்மிலிருந்து ட்ராக்கில் ஒரு ஆள் விழுவார் பாருங்கள் அந்த இடம் வெலவெலக்க வைத்து விட்டது.) திறமையாக எடிட் செய்திருக்கும் சுரேஷ் அர்ஸுக்கும் வாழ்த்துக்கள். மனோ பாலா, ஸ்ரீமன், வினோதினி, சரண்யா, இளவரசு, கணேஷ் யாதவ், மகாதேவன் அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.



முகப்புத்தக நண்பர் அமர சிகாமணி சாரும் நடித்திருக்கிறார். மிக யதார்த்தமான நடிப்பு.




வாழ்க்கை என்னும் செஸ் கேமில் எங்கு செக் எந்த ரூபத்தில் காத்திருக்கிறது எனத் தெரியாமல் பயணப்படுகிறோம். எதையும் நேர்மையாகவே ஜெயிப்போம் என நம்பிக்கை கொள்ளுங்கள் எனக் கூறிய கரு பழனியப்பனுக்கு வாழ்த்துக்கள்.

சொல்ல மறந்துவிட்டேன்., இந்தப் படத்திலும் எங்கள் முகப்புத்தக நண்பர் நிதிஷ்குமார் நடித்திருக்கிறார். ( சொல்லவே இல்லையே நிதீஷ்). வாழ்த்துக்கள் நிதீஷ்., உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பார்ட்டை கச்சிதமாகச் செய்தீர்கள்.

பழனியப்பன் படங்களை அவரின் வசனத்துக்காகவே ரசிப்பேன். இந்தப் படத்தில் சில இடங்கள் மட்டுமே எதிர்பாராத அந்த அழகிய சந்தோஷத்தைத் தந்தன. அடுத்த படங்களில் இன்னும் எதிர்பார்க்கிறோம் கரு பழனியப்பன்.

புதன், 5 அக்டோபர், 2011

கவ்வாலி, பாங்க்ரா, ராப் பாடல்கள்



நுஸ்ரத் பதே அலிகானின் ஆஃப்ரீ ஆஃப்ரீயும் அற்புதம் .



லக்கி அலியின் ஓ சனம்..



அதிரடி பாபா சேகல்.



தலேர் மெஹந்தி..



எவர்க்ரீன் சாங்க் ஆஃப் அட்னான் சாமி.

எனக்குப் பிடித்த சில பாடல்கள் இன்னிக்கு இங்கே பகிர்கிறேன்.

கவ்வாலி பாடல்களில் நுஸ்ரத் பதே அலி கானின் கித்னா சோனா ரொம்பப் பிடித்தது. அடுத்து லக்கி அலியின் ஒ சனம்... இவர்கள் இருவரின் குரலும் சந்தனக் குரல். மென்மை. மென்மை.

மிஸ் 420 யில் பாபா சேகலின் ஆஜா மேரி காடி மே அதிரடி. அதுபோல் தலேர் மெஹந்தியின் ( தசாவதாரம் கமலில் ஒரு வகை போல இருப்பார்) போலே டா ரா ரா. இரண்டும் தூள். கேட்கும்போதே ஒரு உற்சாகம் கொடுக்கும் பாடல்கள்.

அட்னான் சாமியின் முஜ்கோபி தோ லிஃப்ட் கரா தே.. ரொம்பப் பிடிச்ச சாங். நல்ல குண்டு உடம்பை வச்சிகிட்டு மனுஷன் ரொம்ப ENTHUSIASTIC ஆ ஆடிக்கிட்டு இருப்பார். எனக்கும் கொஞ்சம் லிஃப்ட் கொடு.. அதாவது வாழ்வில் உயர்த்து என்ற இந்தப் பாட்டை எல்லாருக்குமா இன்னிக்கு டெடிகேட் பண்ணுறேன். ஏன் டிவியில்தான் டெடிகேட் செய்யணுமா என்ன. எனவே இந்த 5 பாட்டும் மக்காஸ் உங்களுக்காக நான் விரும்பிக் கேட்ட பாடல்கள் .

சரஸ்வதி, லெக்ஷ்மி., துர்க்கை இந்த முப்பெரும் தேவியரும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் உயர்வையும் வழங்கட்டும். வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன். வாழ்க வையகம்.

செவ்வாய், 4 அக்டோபர், 2011

சகுந்தலை துஷ்யந்தனும் பின்ன கென்னும் பார்பிகளும்.

சென்ற வருடம் போல் இந்த வருடமும் நண்பர் அருண்குமார் வீட்டில் கொலு. அவரது அம்மா தான் கையாலேயே செய்த நெட்டி பொம்மைகள் கொலுவை விவரித்தார்.



அருண்குமாரின் பெண்ணின் பார்பி கலெக்‌ஷன் கொலு.



கென்னுடன் பார்பிகள். பிரிக்க முடியாத பந்தம்.! (கென் கார்சன் 1961 இல் இருந்து ). 1959 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பார்பிகளின் ஆண் நண்பன். 1961 இல்தான் அறிமுகப்படுத்தப்பட்டான்.


ஜாலியாய் அமர்ந்திருக்கும் விதம் விதமான பார்பிகள். CELEBERATING PARTY.


சகுந்தலை கண்வ மகரிஷி ஆஸ்ரமத்தில் மான் குட்டியோடு விளையாடிக் கொண்டிருத்தல், சகுந்தலையை துஷ்யந்தன் சந்தித்தல்., மோதிரம் அணிந்து (காந்தர்வ ) காதல் கடிமணம்புரிதல்., பின் பிரிதல்., விசுவாமித்திரர் சாபம்., மோதிரத்தை இழத்தல், துஷ்யந்தன் சகுந்தலையை மறத்தல், மீனின் வயிற்றில் மோதிரம் கிடைத்தவுடன் துஷ்யந்தனுக்கு நினைவு வரல்., ஆஸ்ரமம் சென்று புலியுடன் விளையாடும் தனது மைந்தனை அடையாளம் காணல்., பிரிந்தவர் ஒன்று கூ்டுதல்., ராஜ தர்பாரில் குழந்தையுடன் சகுந்தலை துஷ்யந்தன் அமர்ந்திருக்கும் காட்சி. இத்தனை பொம்மைகளையும் அவர் தன் கையாலேயே செய்திருக்கிறார்.




அடுத்த வருடம் தீம் மாற்றும்போது வேறு புராணக் கதையை பொம்மைக்காட்சியாக கொலுவில் செய்து வைப்பார்களாம். மிக அபாரமான அரிய முயற்சி.. ஆர்வத்தில் இரவு 2, 3 மணி வரை கூட பொம்மைகளுக்கு உடைகள்., நகைகள் தைத்து கோர்த்து அலங்கரித்துக் கொண்டிருப்பாராம். கொலுவுக்காக பல நாட்கள் முன்பிருந்தே இந்த வேலைகள் ஆரம்பித்து விடுமாம்.




நமது பாரம்பர்யக்கலைகள் ., கைவேலைப்பாடுகள் எல்லாம் குறைந்து, கரைந்து , அழிந்து வரும் வேளையில் இவர்களைப் போன்றவர்களால்தான் நமது தொன்மையான பண்டிகைகள் அதன் முழு உத்வேகத்தோடு அடுத்த தலைமு்றைகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன.


தன் பாட்டி, அம்மா மற்றும் அப்பாவின் ஈடுபாட்டைப் பார்த்து அருணின் மகளும் தனது பொம்மைகள் கலெக்‌ஷனில் இருந்து கென்.,பார்பியை தனி கொலுவாக வைத்திருந்தது இந்த பாரம்பர்ய விழாவின் அடுத்தகட்ட பரிணாமமாக இருந்தது


நவராத்திரியில் முப்பெரும் தேவியரின் ஆசீர்வாதமும் அனைவருக்கும் கிடைக்கட்டும் என வாழ்த்தி வந்தோம்.