வெள்ளி, 30 செப்டம்பர், 2011

தியானம் என்பது..

ஆத்மலயம்.. எனது பார்வையில்..:-
******************************************

ஆத்மலயம்..தன்னைத்தானே லயத்தோடு, சுருதியோடு ஒப்புரவாய் ஒழுக்கத்தின்பால் ஒழுகுதலே ஆத்மலயம் சித்திக்கும் கருவி. ஆன்மாவுக்கு பிறப்பு இறப்பால் களங்கம் ஏற்படுவதில்லை. உடல்தானே கருவியாகி நன்மைதீமை எல்லாம் அனுபவிக்கிறது.. அது மேற்கொண்ட கர்மவினைகளுக்கு ஏற்ப பிறவிகள் எடுத்து எல்லாம் அனுபவித்துக் கடந்து துறந்து ஆன்மவலு பெற்றுப் பரம்பொருளை அடைகிறது.

இந்த ஆத்மலயத்தை ரோமானியப் பேரரசன் மார்க்கஸ் அரேலியஸின் ஆன்ம சிந்தனைகளுடன் ஒப்பு நோக்கலாம். நன்னடைத்தையுடன் இருப்பது ஞானிகளைப் போல வாழ்வது.. எல்லா விஷயங்களிலும் விருப்பு வெறுப்பற்று பிரபஞ்சத்தோடான விசாலமான அணுகுமுறைகளை வளர்த்துக் கொள்வது என்பதுதான் அது.. இந்தக் காலத்தில் தன் மனத்திற்கு எது வசதியாகப் படுகிறதோ அதன்படி உபவாசம்., தீர்த்த யாத்திரை., தனதானம் ஆகியவற்றைச் செய்து அதையே தர்மம் எனப் பிரஸ்தாபிக்கிறார்கள். கலியுக தர்மம் என்பது இதுதான். என கல்கி அவதாரம் என்ற நூலில் ஸ்ரீ பிரகாஷநாராயண மிச்ர சொல்லி இருப்பதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். போலியான இந்த சடங்கு., சம்பிரதாயங்கள்., வழிபாட்டு முறைகள்., ஆகியவற்றை நன்கு சாடுகிறார்.

பலமணிநேரம் தனியறையில் அமர்ந்து தியானித்தலால் ஒரு பயனும் இல்லை. நான் இதைச் செய்கிறேன்., அதைச் செய்கிறேன்., பலமணிநேரம் பாடல்கள் பாடுகிறேன்., பல நாட்கள் உபவாசம் இருக்கிறேன். வாழ்நாள் முழுமையும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கிறேன் என்று சொல்வதெல்லாம் ஒரு வெளிப்பாடாக மட்டுமே அமையுமே தவிர உண்மையான ஞானம் சித்திக்கும் வழிமுறை அல்ல என்று சொல்கிறார் இந்த நூலாசிரியர் கந்தராஜா.

மனதை வெறுமையாக வைத்திருப்பவனே தியான வழியிலோ ஆன்மீக வழியிலோ தன்னுடைய குறிக்கோளை எட்டமுடியும். உங்கள் சிந்தனை , சொல் செயல் எல்லாம் அதை நோக்கியே இருக்கட்டும். என்கிறார். வலிமையும் தீரமும் உள்ளவர்களால்தான் ஆன்மாவின் தேடல்கள் தெளிவுபடுத்தப்பட்டு ஆன்மீக பலம் அவர்களுக்குள் உருவாக்கப்படுகிறது என்கிறார். உடலை வருத்துவது போன்ற வெறும் பாவனைகளால் பாசாங்கு செய்பவனுக்கு இந்த ஆன்மத்தேடல் உண்டாக்கும் அதிர்வுகளையும் ஆற்றல்களையும் விளைவுகளையும் தாங்கவோ தெளிவாக உணரவோ முடியாது. பக்தனாக இருக்க விரும்புகிறவன் உண்மையிலேயே உற்சாகம் உடையவனாக இருக்கவேண்டும் என சாந்தோக்கிய உபநிடதம் கூறுகிறது. இது மகான்களுக்கும் அவதார புருஷர்களுக்குமே சாத்தியம். சாதாரண மனிதனுக்கும் இவ்வழிமுறைகளை அவர்கள் செம்மையுடன் ஆக்கிக் கொடுத்துள்ளனர்.

ஆன்மா தான் சிப்பியைப் போல அலைந்து இறை என்னும் மழைத்துளியை உள்வாங்கி அதை ஆத்மஞானம் என்னும் முத்தாய்ப் பிரசவிப்பதுதான் இந்தப் பயணம். உண்மை., நேர்மை., பிரதிபலனை எதிர்பாராமல் பிறருக்கு நன்மைசெய்தல்., மனம் வாக்கு காயம் போன்றவற்றால் பிறருக்குத்துன்பம் செய்யாதிருத்த., பிறர்பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல்., வீண் சிந்தனைகளுக்கு இடம் கொடாதிருத்தல்., பிறர் செய்த துன்பங்களை எண்ணிக் கலங்காதிருத்தல்., போன்ற பண்புகள் இதன்மூலம் தோன்றும்.

நம்முள் உறைந்திருக்கும் சக்திகள் நம்மால் அறியப்பட்டஎல்லா எல்லைகளுக்கும் அப்பால் சென்று நம் எண்ணங்களை நிறைவேற்றும் வலு படைத்தவை. தமிழில் எண்ணம் போல வாழ்வு என்ற சொலவடை உண்டு. அதுதான் இது. இதன் வீச்சுதான் இந்தியாவின் கடைக்கோடியில் பிறந்தஒருவர் பிரதமர் ஆனதும். நம்மால் முடியும் என நேர்மறை எண்ணங்களைப் பயிலவேண்டும். இந்த நிலையை அடைய யோகம்., தியானம் உதவுகின்றன. ராகம்., துவேஷம்., காமம்., குரோதம்., உலோபம்., மோகம்., மதம்., மாச்சர்யம்., இரட்சியம்., அசூயை., இடம்பம்., ஆங்காரம் ஆகிய மனவிகாரங்களை நீக்கி முதலில் மனத்தின்கண் மாசிலன் ஆதல் வேண்டும்.

இப்படி சுத்திகரிக்கப்பட்ட உடம்பின் ஆன்மவலுவானது அபரிமிதமானது. இது அன்னமய கோசம்., பிராணமய கோசம்., மனோமயகோசம்., விஞ்ஞானமயகோசம். எல்லாம் தாண்டி ஆனந்தமயகோசத்துள் தெளிந்த நிலையுள்., ஐம்புலனும் அடங்கி பரம்பொருளைக் கண்டு அனுபவிக்கும் பேரின்ப நிலையை எய்துகிறது. இன்னும் அகிம்சை., சத்தியம்., களவு., பிரம்மச்சரியம்., ஆபரிக்ரகம்., மனத்தூய்மை., சந்தோஷம்., தபசு., தெய்வீகக்கல்வி., பரமாத்மாவை வாழ்த்துதல் ஆகிய ஒழுக்கங்களைக் கைக்கொள்ளவேண்டும்.

முக்கியமாக புத்தபெருமான் சொன்னதுபோல ஆசையை அறுக்கவேண்டும்.., கோபத்தை களைய வேண்டும். கோபம் பாவம் சண்டாளம் எனப்படுகிறது. இது எவ்வளவுதான் ஆன்ம முன்னேற்றம் அடைந்தாலும் அனைத்தையும் பொசுக்கும் தீ போன்றது. இது சாபம் போல பீடிக்கப்பட்டவன் என்ன தியானம் செய்தும் யோகம் புரிந்தும் பலனில்லை. கோபம் மனிதனின் ரத்தத்தைக் கெடுக்கிறது. அது ஒருவித பைத்தியக்காத்தனத்தின் கழுவாய் என்கிறார். அதே போல பய உணர்வும் களையப்படவேண்டும். என் வீடு., என் மனைவி., என் நாடு., என் மக்கள் என்ற ஒரு விதமான ஒருவரது சுயத்தின் எண்ணம் அடுத்தவரது சுயத்தின் எண்ணங்களோடு முரண்படும்போதுதான் வன்முறை., கலவரங்கள், யுத்தங்கள் வெடிக்கின்றன. எல்லாவற்றிலும் தன்னைக் காண்பவர்க்கு எல்லாம் சமரசமே..எனவே மனித மனங்களின் வன்முறையை முதலில் நீக்க வேண்டும்.

நான்., எனது என்ற கட்டுண்ட மனநிலைகளில் இருந்து விடுபட்டு அனைத்தையும் பிரபஞ்சத்தின் பேரருளாகவே காணவேண்டும். நாம் அனைவருமே மகத்தான தூய ஆன்மாவை உடையவர்கள் என்பதை நம்புவோமாக. இன்பமும் துன்பமும் குளிரும் வெப்பமும் போலக் கலந்துதான் இருக்கும். ஆன்ம விடுதலையை அடையவே மதங்கள் உருவாக்கப்பட்டன. நம்மை மீறிய பேரருளை., சக்தியை., பரம்பொருளை கடவுள்., என்றும்., அல்லா என்றூம்., கர்த்தர் என்றும் நாம் அழைக்கிறோம்.

உண்மையான ஆன்மீகம் வெறும் சடங்குகள்,,பழக்க வழக்கங்கள்., மூடநம்பிக்கைகள் கொண்டதாக இருக்காது. இனம்., மொழி., மதம் என்று எதனோடாவது தன்னைப் பிணைத்துக் கொண்டவர்கள் ஆன்மவிடுதலை அடைய முடியாது. எல்லா உயிர்களும் ஒன்று என்று அன்பு செலுத்தப்படவேண்டும்.

காமத்தீயில் உழன்றுகொண்டே ஊருக்கு உபதேசம் செய்வது ., போலியான கட்டுப்பாடுகள்., கடமைகள் விதித்துக் கொள்வது., இப்படி தன்னை சித்ரவதை செய்துகொள்பவன் ஆன்மீகவாதியாகமுடியாது.தீய குணங்களில் இருந்து விடுவித்துக் கொண்டு அகமும் புறமும் எளிமையைக் கடைப்பிடிப்பது, அனைவரிடமும் அன்பாலும் பண்பாலும் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ளுதல்., தான் என்ற தலைக்கனமின்றி இருத்தல் இதுவே உண்மையான ஆன்மீகம். இதைக் கடைப்பிடிப்பவன் எந்த சமயத்தையும் சார்ந்திருக்கமாட்டான். அவன் இப்பிரபஞ்சத்திற்கே உரியவன்.

அறிதலும் கற்றலும்., சுய அறிவுப்பார்வையும் இதை உருவாக்குகின்றன. மனிதனின் உள்ளுணர்வும் எண்ணங்களும் எப்படிப் பயிற்றுவிக்கப்படுகிறதோ அதற்கேற்ப அவனை சிறப்பாக உருவாக்குகிறது. அவன் சார்ந்த உலகத்தையும் சிறப்பாக்குகிறது. இதற்கு ஆழ்மனமும் கனவும் கூட துணைசெய்கின்றன. தியானம் இந்தப் பிரபஞ்சமே எல்லைக் கோடுகளற்றதாக அவனுக்கு உருமாற்றம் அளிக்கிறது. இது குறுகிய வட்டமாக இல்லாமல் வாழ்க்கையுடன் தழுவிய ஒரு பிரயாணமாகும். தியானம் என்பது வலிந்து செய்யப்படுவதாக இருக்கக்கூடாது. அது இயல்பாய் நிகழவேண்டும். தியானமும் சமாதியும் திருமூலர் சொன்ன எட்டு சித்தியும் கிடைக்கச் செய்யும்.

கோபத்தைப் போல துறக்க வேண்டிய இன்னும் சில பயம் மற்றும் கவலைகள். நாம் வாழும் உலகம் போர் மற்றும் வன்முறைகளால் இவற்றைத் தூண்டும்போது இது எதனாலோ உருவாகவி்ல்லை., நம்மைப்போன்ற மனிதர்களின் பயத்தினாலும் அச்சத்தினாலுமே தூண்டப்படுகிறது என உணரவேண்டும். இன்னார் இது இதைச் சார்ந்தவர்கள் என்று பிறப்பிலிருந்து உருவாக்கப்படும் கற்பிதம் இந்த எண்ணங்களை அதிகப்படுத்துகிறது. இதை நம் கருத்துக்களை மாற்றிக் கொள்வதன் மூலமும் எண்ணங்களை அணுகுமுறைகளை மாற்றிக் கொள்வதன் மூலமும் உற்வுகளை சீராக்கலாம்.

எண்ணங்கள்று எல்லா ஆன்மாக்களும் ஒரே ஆன்மலயத்தில் செயல்படும்போது ஆனந்தமய கோசமே அங்கு நிலவும்.

* * * * *

பிற்சேர்க்கையாக வரும் சிலம்பு கூறும் சைவமும்., ஞாயிறும்., திங்களும் ., மாமழையையும் போற்றுவதும்., சங்ககாலச் சைவமக்கள் வணங்கிய குறிஞ்சி., முல்லை., மருதம்., நெய்தல்., பாலை நிலத் தெய்வங்கள் இன்றும் வணங்கப்படுவதும் ஒவ்வொருமதமும் போட்டி பொறாமை இன்றி இருந்ததும் இங்கு குறிப்பிடலாம்.

அட்டை வடிவமைப்பு அனந்த பத்மநாபன் . இதை சிறப்பாக சொல்லவேண்டும் . தியானம் செய்யும் மனிதனின் பின்னால் ஸ்ரீசக்ரம் இருப்பது சிறப்பு. ஆதன் பின் அரசமர இலை வரையப்பட்டிருக்கிறது. இது புத்தபெருமானுக்கு கிடைத்த போதிமரத்தை நினைவூட்டுகிறது.

யுத்த சூழ்நிலைகளைத்தாண்டி புலம்பெயர்ந்த தமிழரான கங்கைமகன் கந்தராஜா அவர்கள் ஆத்மலயத்தில் ஆன்மநிலைகள் பற்றி எளிமையான முறையில் விளக்கி தொகுத்தளித்திருப்பது பாராட்டிற்குரியது.

நூல் - ஆத்மலயம்.

ஆசிரியர் - கங்கைமகன் கந்தராஜா.( நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம். லண்டன் ( U. K).

பதிப்பகம். - தகிதா. ( மணிவண்ணன்)

டிஸ்கி :- இந்தக் கட்டுரை வியாழக்கிழமை 29.செப். 2011 .பூவரசியில் வெளிவந்துள்ளது.

வியாழன், 29 செப்டம்பர், 2011

செந்தீ..

செந்தீ..:-
**************
கானகம் அழிந்தது.,
வனப்புலிகளோடு.
புள்ளிமான்களும் சிதைந்தன
அமைதி தேடி.
காட்டாறு பெருகியது
வாய்க்கால் அழித்து.
செங்கொடி செந்தீயானாள்
செங்கோட்டை எட்ட..

நீதியோ நியாயமோ
சொல்லத் துணிவில்லை.
நேர்மையோ ஊழலோ
கண்ணில் படவில்லை.
சுவாசத்துக்கு சுவாசம்
பலிதான் பொருத்தமென
கண்கட்டிய நீதிதேவதையின்
கட்டவிழ்க்க இயல்வதில்லை.

இருந்தும் சாதிக்க
இன்னும் உன் உரம் இருக்க
நெருப்புதான் உரமென
நினைத்தாயோ அம்மா.
இறந்து போராடும் நீ
இருந்து போராடியிருக்கலாம்.
இருந்தும் இருக்கின்றோம்
இருப்பவற்றோடு இருப்பற்றவர்களாய்.

டிஸ்கி:- இந்தக் கவிதை சனிக்கிழமை 17., செப்டம்பர் 2011 பூவரசியில் வெளிவந்துள்ளது.

புதன், 28 செப்டம்பர், 2011

மழையாய் இருந்தபோது..

எங்கு பெய்கிறோம்
என்ற கணக்கெல்லாம் இல்லாமல்
பெய்யத்தோன்றும் போதெல்லாம்..

அடைமழையோ.,
தொறுதொறுப்போ.,
முணுமுணுப்போ.,

எங்கிருந்தோ சேர்ந்த அன்பை
சுமக்க முடியாமல் அலைந்து
எங்கேயோ வழிய ஊற்றி

நதியோ, சாக்கடையோ
மலையோ., பள்ளத்தாக்கோ.
மனிதமோ ., மிருகமோ.

வருடிச்செல்லும்
உடல்களெல்லாம்
ஒன்றுபோலத்தான்..

பெண்ணோ., ஆணோ
பெண்ணாகும் ஆணோ.,
பெண் சேரும் பெண்ணோ
ஆண் சேரும் ஆணோ..

கிகாலோக்களோ
கால்கேர்ள்களோ
கைக்கிளையோ.,
பெருந்திணையோ..

எதுவும் பொருட்டில்லாமல்
பாலையோ பள்ளமோ
பெய்து தீர்ப்பதே
பெரும் பணியாய்..

டிஸ்கி:- இந்தக் கவிதை சனிக்கிழமை 06. ஆகஸ்ட் 2011 பூவரசியில் வெளிவந்துள்ளது.:)

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

சிலையாய் நீ. பூவரசியில்.

சிலையாய் நீ..
*************************

காகங்கள் எச்சமிட
கழுகுகள் உன் தோளமர
தனியனாய்
சாலை ஓரமெல்லாம்
கை நீட்டியபடி நீ

வெய்யிலோ
மழையோ
கைதட்டி., காலில் விழுந்த
எந்தத் தொண்டனும்
குடைபிடிக்காமல்

வருடாவருடம்
பூமாலை சுமந்து
காய்ந்த மாலைகளால்
காய்ந்து கருத்துக்
கிடக்கின்றன உன்
கழுத்தும் முன் சட்டையும்

பேருந்தில்
செல்லும்போதெல்லாம்
பாவமாய்க் கிடப்பாய்
உன் ஆயுள் தண்டனையோ
இந்த சிலை வடிவம்..

வரிவரியாய்
ரசனையோடு
வடிக்கப் பட்டிருந்தாலும்
அவ்வப்போது சாயமிழந்து
பரிதாபமாய்..

யார்யாரோ
கோபமுற்றால்
கட்டாரியெல்லாம்
உன் தலையில்..
பின் நீ முகமற்று
சாக்கு மூடி..

அடுத்த ஜென்மமெடுத்து
அரசாள நேர்ந்தால்
சிலை வைத்து
சீரழிக்காதீர் என்னை
என சட்டம் இயற்றிவிடு..
சாலையெல்லாம் தப்பிக்கும்..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஜூலை 25, 2011 பூவரசியில் வெளிவந்துள்ளது.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஒற்றை ஆள்.. தயாபாய். சமூகப் புரட்சியாளர். OTTAYAAL. DAYABAI SOCIAL ACTIVIST.




ஒத்தை ஆள்.. என்னவெல்லாம் செய்ய முடியும்.. எல்லாம் முடியும் என்கிறார் தயாபாய். உலகையே புரட்டிப் போட முடியும். நீதி, நியாயம், நேர்மை, உழைப்பு, எளிமை, சமூகப் போராட்டம் என பல பரிமாணங்கள் உண்டு 60 வயது தயாபாய்க்கு. இவரது வாழ்வை ஆவணப் படமாக எடுத்திருக்கிறார் ஷைனி ஜேக்கப் பெஞ்சமின்.


“KEEP EACH FOOT FORWARD CAUTIOUSLY

IF U FALL JUST GET UP

AND BE CAREFUL NOT FALL AGAIN."


இதுதான் தாரக மந்திரம் தயாபாய்க்கு. கேரளாவைச் சேர்ந்த 16 வயது மெர்சி மாத்யூ கன்யாஸ்திரிகளுக்கான மடத்தில் இருக்கும்போது ஒரு கிறிஸ்மஸ்தினத்தில் இங்கே விதம் விதமான உணவுகள் பரிசுப்பொருட்கள் நிரம்பி இருக்க ஆதிவாசி மக்களின் ஏழ்மையை., வெறுமையையான நிலையை நினைத்துப் பார்க்கிறார். தான் இருக்கும் இடத்தில் தனக்கான இயங்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை எனவே தான் சுதந்திரமாய் இயங்க - அன்னை தெரசா போல களப்பணி செய்ய -- வெளியேறுவதாக மதரிடம் அனுமதி கோருகிறார். இதற்காக அவர் முதல் நாள் நள்ளிரவில் தன்னுடைய இடம் இதுவல்ல., தனக்கான வாழ்க்கை இதுவல்ல.. தான் செயல்படுத்த நினைப்பவற்றை இப்போதே செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகக் கூறுகிறார். இறையியல் துறவியாய் இருப்பதைவிட சமூக மேம்பாட்டுக்கான போராளியாக விரும்புகிறார்.



தான் வாழ விரும்பிய சேவை வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணிக்கிறார். தயாபாய் ஆகிறார். தயா என்றால் கருணை என்று அர்த்தம். இவரின் கருணை ஆதிவாசிகளின் மேல் பெண்ணினத்தின் மேல் துயரப்படுபவர்களின் மேல் பொழிகிறது., இவர் ஒரு ஆதிவாசி தலைவி என ஒரு அரசியல்வாதி சொல்கிறார். மத்தியப்பிரதேச கிராமங்களில் பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்ய வலியுறுத்தி அழைத்துச் செல்கிறார். அப்போது அவர்கள் புகாரை விசாரிக்கும் விதம் , வீடியோ எடுக்கக்கூடாது என கட்டுப் படுத்தும் விதம்., மும்பை சேரிகளில் பாடுபட்டது., பாலியல் தொந்தரவுகள் என எந்த ஒரு விஷயத்தையும் ஜனநாயக நாட்டில் கூட ஒரு பொதுஜனம் சத்தமிட்டு தன் உரிமையை ., தன் பாதுகாப்பை நிலைநாட்ட எவ்வளவு பாடுபடவேண்டியிருக்கிறது என்பதை உணர்த்தியது.



ஆதிவாசி மக்களிடம் பேசி அவர்களை ஒன்றுபடுத்தியது., கல்வியின் தேவை., தண்ணீர் , மின்சாரம் மற்ற பல வசதிகளுக்காக போராடுதல் என பரந்து விரிகிறது இவர் பணி. மக்களோடு மக்களாக எளிமையாக புடவை ரவிக்கை அணிந்து வாரப்படாத கூந்தலை கொண்டை போட்டு எளிய சிரிப்போடும் தன்னம்பிக்கையோடும் தான் செல்லும் இடங்களில் பேசவேண்டியவற்றை மக்களுக்காக தைரியமாக பேசி , செயலாற்றி என பிரமிக்க வைக்கிறார் தயாபாய்.. சமயங்களில் ஆங்கிலத்திலும் உரையாடுகிறார்.. அற்புதம். தன் உணவை தானே பயிரிட்டு விளைவித்துக் கொள்கிறார்.



இவரது வாழ்க்கையை ஷைனி ஜேக்கப் பெஞ்சமின் எடுத்திருக்கிறார். இவர் இதற்கு முன்பே பல டாக்குமெண்டரிகள் எடுத்திருக்கிறார். துபாயை சேர்ந்த க்ளோபல் ஸ்பார்க் குரூப்பின் தயாரிப்பு. தயாரிப்பாளர் நிஜாமுத்தீன்.



மிக துல்லியமான இசையுடனும் இயற்கையான லைட்டிங்குடனும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் தயாபாயின் உழைப்பும்., புன்னகையும் ஒளிவிடுகிறது. ’WOMAN'S SOLITARY QUEST FOR TRUTH. HER NAME IS DAYABAI' என ஒற்றை மனுஷியின் உண்மையின் தேடலை விவரிக்கும் படம். கேரளாவின் பூவாராணி., கோட்டயத்திலிருந்து மத்தியப்பிரதேஷின் கிராமங்கள் வரை நீண்டிருக்கிறது. தன் வளர்ப்பு பிராணியுடனான நடனம்., கவிதை புன்முறுவலைத் தோற்றுவித்தது.



ஆதிவாசிகளின் பிரச்சனைகளை மட்டுமல்ல மொத்த பெண்ணினத்துக்குமான விஷயங்களை தன் வீதி நாடங்களில் செய்தியாய் பகிர்கிறார். எந்த என் ஜி ஓ., அல்லது ஃபாரின் ஃபண்டின் உதவியையுன் நாடாமல் ( நந்திதாதாஸ் போன்ற இவரின் தோழிகள் இவரின் முயற்சிக்கு கைகொடுக்கிறார்கள்) தன் சேவைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.



இந்தப் படம் NATIONAL AWARD WINNING DOCUMENTARY ( மலையாள டாக்குமெண்டரி -- SPECIAL MENTION AWARD IN THE NATIONAL FILM AWARDS 2010)வென்றிருக்கிறது.



வாழ்க தயாபாய். .! சமூகத்துக்காக உழைக்கும் நல்ல மனிதர்களை உலகுக்கு தன் டாக்குமெண்டரி மூலம் அறிமுகப்படுத்திய ஷைனி ஜேக்கப் பெஞ்சமினுக்கு வாழ்த்துக்கள்..!!




யூட்யூபில் இதற்கான லிங்க்.




வியாழன், 22 செப்டம்பர், 2011

பங்குச் சந்தையில் கலக்கும் திருமதி முத்துசபாரெத்தினம் ஆச்சி அவர்கள் பேட்டி.

”அந்த பேங்க் என்ன ஆச்சு? இன்னிக்கு ஏறுமா.. வச்சுக்குவோமா, வித்திருவோமா?”


இந்த ஷேர் மார்க்கெட் குரலுக்குச் சொந்தக்காரர் 65 வயதான முத்துக்கருப்பாயி ஆச்சி. ஆண்களே அஞ்சி ஒதுங்கும் பங்குச் சந்தையில் அநாயாசமாக விளையாடிக் கொண்டிருக்கிறார் ஆச்சி.


“ ஒரு பெண்ணாக இது எப்படி சாத்தியம்?” என்று பிரமிப்பு மாறாமல் கேட்டால் அமைதியாய்ப் புன்னகைக்கிறார் ஆச்சி.


”எந்த வயதானால் என்ன? ஆண், பெண் என்று இதில் வித்யாசம் என்ன?” என்று எதிர்க்கேள்வி கேட்டு அவராகத் தொடர்கிறார்.


”அடிப்படையிலேயே நம் பெண்களுக்கு வியாபாரம்., தொழில் என்பதெல்லாம் உள்ளுக்குள்ளேயே ஊறி இருக்கிறது. பருப்பு டப்பாவில் சேமித்து வைப்பது., பால் கணக்கை சுவற்றில் எழுதி வைப்பது., அக்கம் பக்கத்தில் வட்டிக்குக் கொடு்து இதெல்லாம் பெண்கள் காலங்காலமாக செய்து வரும் பிஸினஸ் விஷயங்கள்தான். அதையே இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணினால் பங்குச்சந்தை வரை விளையாடலாம். ஷேர் மார்க்கெட்டெல்லாம் ரிஸ்கானதாச்சே.. அதைச் செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பவர்கள் யோசித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான். ரிஸ்க் எல்லாவற்றிலும் உண்டு. பங்குச் சந்தையும் அப்படிப்பட்ட ரிஸ்க்தான்”.


ஷேர் மார்க்கெட் நிலவரங்களை எப்படித் தெரிந்து கொள்கிறீர்கள்?


”பங்குககள் ஏற்றத்தை தினம் என்.டி.டி.வி., சி.என்.பி.சி., யில் பார்த்து தெரிந்து கொள்கிறேன். அவ்வப்போது ஃபோன் மூலமாக ஆர்டர் கொடுத்து வாங்கி விற்று வருகிறேன். போன சில வருடங்களில் நல்ல விலையில் வாங்கிய பங்குகள் திடீரென இறங்கி விட்டது. நான் உடனே பயந்து போய் அவற்றை விற்றுவிடவில்லை. அப்படியே வைத்திருந்து அடுத்த் ஆண்டுகளில் ஏற்றம் வந்தபோது விற்றுப் பணம் பார்த்தேன். இந்தக் காத்திருப்பும்., சரியான நேரத்தில் காய் நகர்த்துகிற புத்திசாலித்தனமும்தான் இதில் மூலதனம். இது பெண்களிடம் நிறைய உண்டு”.


"நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்போல் தெரிகிறதே..?”


”ஆமாம். எனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம். நாம் இருக்கிற இடம் சரியோ, தவறோ எதுவாக இருந்தாலும் ‘ கடவுளின் கருணை இல்லாமல் எதுவுமே இல்லை” என்பது என் கருத்து. நகரத்தார் வழக்கப்படி ( குறிப்பிட்ட வயதில் வானப்பிரஸ்தம் போவதுபோல) ‘உபதேசம் கேட்பது” என்று ஒரு தர்மம் இருக்கிறது. அதன்படி உபதேசம் கேட்டுவிட்டு., தினமும் காலையில் நீராடி., இறையருள் வேண்டி மந்திரம் சொல்லு விபூதி தரிப்பேன். அதன்பின்தான் உணவு மற்றவை எல்லாமே.”.


”உங்களுடைய வெற்றிக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?”


“தன்னம்பிக்கை..! எல்லோரும் சொல்வதுதான் இது ஆனாலும் இதுதான் என் வாழ்வில் உண்மை.


சின்ன வயதில் டான்சில் பிரச்சனைக்காக செய்த ஆபரேஷன் என் காது நரம்புகளைப் பாதித்து கேட்கும் திறனில் குறைவு ஏற்பட்டது. அதன் பிறகு இரண்டு முறை ஆபரேஷன் செய்து காது சரியாகக் கேட்கவில்லை. அப்போதே நான் என் மீது நம்பிக்கை இழக்கவில்லை. பேச்சும் சொல்லும் என்னிடம் அழுத்தம் திருத்தமாக இருக்கும். என்னை நானே தாழ்வாக எப்போதும் எடை போட்டதில்லை. எப்போதும் கம்பீரமாகத்தான் என்னை நான் உணர்வேன். காது கேட்கும் கருவியைப் பொருத்தியபின் இன்னும் தன்னம்பிக்கை அதிகமாகிவிட்டது.”


”நீங்கள் எழுத்தார்வம் கொண்டவர் என்றும் கேள்விப்பட்டோமே..?”


”இறைவன் துதிப்பாடல்கள்., மரபுக்கவிதைகள்., திருமண வாழ்த்துப்பாக்கள் எழுதுவேன். இப்போது சும்மாவின் அம்மா என்ற வலைத்தளம் ஒன்றும் தொடங்கி இருக்கிறேன். ஃபேஸ்புக்கிலும் நண்பர்களோடு உரையாடிக்கொண்டு, என் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு இருக்கிறேன். “


டிஸ்கி:- இந்தப் பேட்டி ஆகஸ்ட் 2011 இவள் புதியவளில் வெங்கட் சபா என்ற பெயரில் வெளிவந்தது. இதை டைரக்டர் மனோபாலா தன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார். :)

புதன், 21 செப்டம்பர், 2011

குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

குமுதம் .. எங்கள் வாழ்வில் மறக்கமுடியாத பெயர். வங்கிகள்., பல்கலைக்கழகங்கள்., கோயில் திருப்பணிகள்., தமிழிசைச் சங்கம்., சினிமா., எனப் பல துறைகளிலும் வேரோடிய நகரத்தார் பதிப்பங்களிலும் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளார்கள். நிறைய புத்தக நிறுவனங்கள் ( வானதிபதிப்பகம்., மணிமேகலை., மணிவாசகர்., செல்வி ) என பதிப்பங்களுக்கு நடுவில் தேவி ப்ரஸ் என்பதும் குமுதம் ஆதிகாலத்தில் வெளியிடப்பட்ட ஒரு இடமாகும். இன்றைய குமுதம் அலுவலகம் இருக்கும் இடத்தில்தான் தேவி ப்ரஸ் இருந்திருக்கிறது.


குமுதம் நிறுவனர்கள் எஸ் ஏ பி அவர்களும்., யவண்டம் ( அன்றைய ரெங்கோனில் யவண்டம் என்ற ஊரில் கொண்டு விக்கச் சென்றதால் இந்தப் பெயர்) வைரவன் செட்டியார் அவர்களும் சின்னத்தா பெரியத்தா மகன்கள். வைரவன் செட்டியார் புதுவயலுக்கு பிள்ளை வளர வந்து விட்டார்கள். இருந்தாலும் இருவருக்கிடையேயும் அன்பும் தொடர்பும் இருந்தது. எஸ் ஏ பி அவர்களின் கல்லூரி (திருச்சி செயிண்ட் ஜோசப் காலேஜ்) நண்பர் பார்த்தசாரதி. இவர்கள் மூவரும் சேர்ந்து குமுதம் பத்ரிக்கையைத் தொடங்கினார்கள். இது வைரவன் செட்டியாருக்கு சொந்தமான தேவி பிரஸ்ஸில் அச்சடிக்கப்பட்டது.


தொடர்ந்து சில உடல் நலக்குறைவுகளால் அதில் கவனம் செலுத்த முடியாமல்., தன்னுடைய பிள்ளைகளையும் கேட்காமல் அதில் இருந்து வெளிவந்துவிட்டார்கள் வைரவன் செட்டியார் அவர்கள்.


இன்று குமுதம் ஆல்போல் தழைத்து கிளைவிட்டு அருகு போல் வேரோடி தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்து இருக்கிறது. அதன் வேராய் இருந்தவர்களுள் இவரும் ஒருவர் -- என் தம்பி மனைவியின் அப்பத்தா வீட்டு ஐயா -- எங்கள் உறவினர் என்பதே மகிழ்ச்சியாய் இருக்கிறது. வாழ்க குமுதம்.!!வளர்க அதன் பணிகள்..!!!!


செவ்வாய், 20 செப்டம்பர், 2011

ராஜ குடும்பத்தில் ஒரு மாண்புமிகு மத்திய மந்திரி ப. சிதம்பரம் அவர்கள். ..

செட்டிநாட்டு அரச குடும்பத்தில் பெண் வழிப் பேரனாக லெட்சுமி ஆச்சி., பழனியப்ப செட்டியார் அவர்களுக்கு மைந்தனாக செப். 16 .,1945 இல் பிறந்தவர் நம் மத்திய உள்துறை அமைச்சர்., திரு ப . சிதம்பரம் அவர்கள். இவர் மனைவி நளினி., மகன் கார்த்திக். மருமகள் ஸ்ரீநிதி. ஸ்ரீநிதி ஒரு மருத்துவராகவும் டான்சராகவும் பரிணமிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.



மாண்புமிகு அமைச்சர் திரு ப. சி. அவர்கள் ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில் பயின்றவர்கள். வழக்கறிஞராக காங்கிரஸ் உறுப்பினராக., பொது செயலாளராக இருமுறை மத்திய இணை அமைச்சராக., இருமுறை மத்திய நிதி அமைச்சராக மிகவும் வெற்றிகரமாக தன் பணியைச் செவ்வனே செய்து வருகிறார்கள்.



செப். 16 இல் தனது 67 வது பிறந்தநாளைக் கொண்டாடிய மாண்புமிகு அமைச்சர் திரு ப. சி. அவர்கள் ., இன்னும் பல அகவைகள் கண்டு நம் மக்களுக்கு அரும்பணி ஆற்ற வேண்டும். இதுவே நமது வாழ்த்துக்களும்., வேண்டுதல்களும் ஆகும்.. வாழ்க வளமுடன்.. நலமுடன்..!!!


********************************************************




செட்டி நாடு பேலஸில் விருந்து:-


***************************************


செட்டிநாட்டு அரசரின் சதாபிஷேகத்துக்கு கானாடு காத்தானில் இருந்து 2 பஸ்., காரைக்குடியில் இருந்து 4 பஸ்., மதுரையில் இருந்து 2 பஸ்.,திருச்சியில் இருந்து 2 பஸ் மூலமாக நகரத்தார்கள் அனைவரும் சென்னைக்கு அழைக்கப்பட்டு ராணி சீதை ஹால்., ராணி மெய்யம்மை ஹாலில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.



நெடுங்குடி முத்து., அமெரிக்க நடேசன்., அறுசுவை அரசு நடராஜன்., ஆத்தங்குடிப் பெருமாள் போன்ற செட்டிநாட்டு சமையல் வல்லுனர்களின் குழு தயாரித்த மாபெரும் விருந்து நடந்ததாம்.



முன்னாள் பாங்க் ஆஃப் மதுரா ஊழியர்கள் கிட்டத்தட்ட 100 பேர் பங்கேற்றார்களாம். மிகப் பெரிய விழாவும் கூட்டமுமாம். ராணி சீதை ஹாலிலிருந்தும் ராணி மெய்யம்மை ஹாலிலிருந்தும் அரைமணி நேரத்துக்கு ஒரு முறை விருந்தினரை அழைத்துச் செல்ல பஸ்கள் வந்தவண்ணம் இருந்தனவாம்.



இரவு சதாபிஷேகம் முடிந்து பஸ்ஸில் ஊர் திரும்பிய அனைத்து விருந்தினருக்கும் சாம்பார் சாதம்., தயிர்சாதம்., தண்ணீர் பாட்டில் சகிதம் வழங்கப்பட்டதாம்.. நாம் செல்வதைத் தவற விட்டாலும் மிக நம்பிக்கையான நண்பர் கொடுத்த தகவல் இது.. வாழ்க.. வளர்க..


ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.



செட்டிநாடு என அழைக்கப்படும் கானாடுகாத்தானில் செட்டிநாட்டு அரசரின் அரண்மனை இருக்கிறது. எங்கள் சொந்த ஊரான செட்டிநாட்டில் ஒவ்வொரு விஷேஷத்துக்கும் ( அனுவலுக்கும்) வரும் உறவினர்கள், நண்பர்களின் கட்டாய விசிட்டிங் ஸ்பாட் அது. ஹெரிட்டேஜ் வீடுகள் அருகி வரும் இந்தக் காலத்தில் செட்டிநாட்டுப் பகுதியில் அந்தக் காலப் பாரம்பரியத்தோடு இன்னும் பாதுகாக்கப்பட்டு விசிட்டர்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் அரண்மனை இது.



செட்டிநாட்டரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் இந்தியன் வங்கி., அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நிறுவினார். ராஜா சர் முத்தையா செட்டியாரின் மகன் ராஜா டாக்டர் எம் ஏ எம் ராமசாமி செட்டியார் அவர்கள் . மதுரையில் தமிழிசைச் சங்கம் ராஜாசர் முத்தையா செட்டியார் அவர்களின் பெரு முயற்சியால் நிறுவப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது. மிகப் பெரிய ஆன்மீகத் தலங்கள் அனைத்திலும் நகரத்தாரின் ஆன்மீகப் பணிகள் இருக்கும். காசியில் காசி விஸ்வநாதர் கோயிலில் முதல் மரியாதை( சம்போவுடன் ) நகரத்தாருக்குத்தான். ஆன்மீகத் தலங்களிலும்., மற்றுமுள்ள ஊர்களிலும் சத்திரங்கள் மிகக் குறைந்த மகமையில் கிடைக்கவும் நகரத்தார் வழிகோலியுள்ளார்கள். வங்கி., கல்வி ., ஆன்மீகம் சமுதாயத்துக்குத் தொண்டு செய்தது என சமூக சமூதாயப் பணிக்கென தங்களை அர்ப்பணித்துக் கொண்ட செட்டிநாட்டு அரசரின் பாரம்பர்யத்தில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலும்., சிதம்பரத்திலும் பக்தர்களின் வசதிக்காக இரு ஐயப்பன் கோயில்களை நிறுவி இருக்கிறார்கள். பாரம்பரியமிக்க செட்டிநாட்டின் அரசர்களில் ராஜா டாக்டர் எம் ஏ எம் அவர்கள் சென்ற தலைமுறைகளின் பாரம்பர்யத்தையும் இன்றைய தலைமுறைகளின் நவீனத்தையும் அங்கீகரிப்பவர். ராஜ்யசபாவின் எம்பியாகவும் இருந்திருக்கும் இவர் செட்டிநாட்டின் இன்றைய வாழும் சகாப்தம்.


அன்னை வழிச் சொந்தத்தில் அம்மான் மகளான சிகப்பி ஆச்சியை மணந்து 42 ஆண்டுகள் மிகுந்த அன்யோன்னியத்தோடும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தார்கள். மகன்., மருமகள் பேரப்பிள்ளைகள்., உறவினர்களோடு இன்று ஆயிரம் பிறை கண்ட விழாவைக் கொண்டாடுகிறார்கள். ராஜா வீட்டில் ஒரு நிகழ்ச்சி என்றால் கானாடு காத்தானின் மொத்த வீடுகளுக்கும் ஸ்பெஷலாக அழைப்பு இருக்கும். விருந்தோம்பலும் மிகப் பிரமாதமாக இருக்கும். ஊர்ப்புள்ளிகள் சிலர் வெளி ஊர்களில் இருப்பதால் வந்து ராஜா வீட்டு விஷேஷங்களில் கலந்து கொள்ள முடிகிறதோ இல்லையோ., அவர்களுக்காக ராஜா வீட்டில் இருந்து ஊர் முறை ( தட்டு., பை., பலகாரங்கள்., தாம்பூலம்) அனைத்தும் அழைப்பிதழ் கொடுக்கும் அன்றே வழங்கப்பட்டு விடும்.


சென்னையில் தங்கள் இல்லத்தில் சுற்றமும் நட்பும் புடை சூழ ஆயிரம் பிறை கண்ட திருவிழாவை( 80 பிறந்த நாள் சதாபிஷேகம்) கொண்டாடும் எங்கள் செட்டிநாட்டரசர் திரு எம்.ஏ.எம்.ராமசாமி அவர்கள் கனகாபிஷேகமும் (100 வயது)செய்து கொள்ள சிதம்பரம் ஆடல் வல்லானையும்., ஸ்ரீ ஐயப்பனையும் வணங்குகிறோம்.


சனி, 17 செப்டம்பர், 2011

கழுமரம்.

கழுமரம்.:-
**************

பிரம்புகளும் சாக்பீசுகளும்
கரும்பலகைகளும்
ஓய்ந்து ஒதுங்கி

முட்டியிடுதலும்
பென்ச் மேலேறலும்
கிரவுண்டில் ஓடுதலும்

வாய் பேசி இம்போசிஷனும்
வகுப்பு வெளியே நிற்றலும்
தாமதத்துக்கு ஃபைன் கட்டலும்
கடந்த கணனி யுகத்தில்
கண நேர சந்தேகக் கணை
ஆசிரியர் பாய்ச்ச

கருகியோ, மருந்திலோ
கயிற்றிலோ ஓய்கிறது
கழுவிலேற்றப்பட்ட உயிர்..

டிஸ்கி:- இந்தக் கவிதை வெள்ளி 11. மார்ச் 2011 கீற்றுவில் வெளியானது.:)

வியாழன், 15 செப்டம்பர், 2011

முகஸ்துதி..

முகஸ்துதி..
*********************
வரிசையில் வரலாம்..
கருத்து அல்லது
விமர்சனம் சொல்ல..
அது முகஸ்துதியை
ஒட்டி இருத்தல் நலம்..

என் சபைக்கு வந்து
பல்லாண்டு பாடிச்
சென்றால் உங்கள்
சபைக்கும் வருவேன்
புகழ்பாட பாணனாகவோ
கேளிக்கை வழங்கும்
நர்த்தகியாகவோ..

பரிசில் எதுவும்
தேவையில்லை
திரும்ப இந்த
சொறிதல்களை
எரிச்சல் வராமல்
வழங்க அனுமதியோடு.

சோப்பு., வெண்ணை
ஐஸ்., காக்கா
கழுதை., கால்பிடித்தல்
போன்றவை உங்கள்
ஞாபகத்தில் வந்தால்
சுலபமாக வேறு
பரிமாணத்தில்
சுய விளக்கம்
கொடுத்து விடுங்கள்


யாருக்கு நேரமிருக்கப்
போகிறது ஒற்றுப் பார்த்திட..
எகிறிக் குதிப்பவர்க்கும்
ஏதாவது பட்டயம் கொடுத்து
பேச விடாமல்
வாயில் அடித்து விடலாம்.

டிஸ்கி:- இந்தக் கவிதை செவ்வாய் மார்ச் 1. 2011 கீற்றுவில் வெளிவந்துள்ளது.

டிஸ்கி:- வெள்ளி மார்ச் 4. 2011 கீற்று தலையங்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதன், 14 செப்டம்பர், 2011

வழிகாட்டும் ஒலி.. அவள் விகடனின்.. முதலீடு..

முதலீடு பற்றி நிறைய எழுதி வருகிறோம். நாட்டின் மற்றும் வீட்டின் செழிப்புக்கு காரணம் நல்ல வருமானம் மட்டுமல்ல., நல்ல சேமிப்பும் கூட அவசியம். நிறைய சம்பாதிப்பாங்க ஆனா சின்ன சின்னதாக கூட சேமிக்க மாட்டாங்க.. அதுக்கு நம்ம அவள் விகடனில் வழிகாட்டும் ஒலி வழிகாட்டுது.

போன மாதம் பங்குச்சந்தையில் வெளிநாட்டு இந்தியருக்கான முதலீடு பற்றி நான் பங்குச் சந்தை இயக்குனர் திரு நாகப்பனிடம் கேட்டு எழுதி இவள் புதியவளில் வெளியான கட்டுரை நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் எளிமையான சேமிப்பு முறைகள் பற்றியும் நிறைய பேர் கேட்டு இருந்தாங்க. அவங்களுக்காக இது.. சின்ன சின்ன சேமிப்பு முறைகள் பற்றி சொல்றாங்க. சிறு துளி பெருவெள்ளம் அப்பிடிங்கிறது மாதிரி மாதா மாதம் நீங்க ( ஒரு நாளைக்கு 80 ரூபாய் வீதம் ) 2500 /- ரூபாய் சேமித்துக்கொண்டே வந்தால் 30 வருடம் கழித்து 33 லட்சமாக அது பெருகுவதை விளக்குகிறார் திரு நாகப்பன். மேலும் முதலீடுகள் பற்றியும் சொல்கிறார் கேளுங்க. பயன் பெறுங்க.

இந்த நம்பரை டயல் செய்து உங்கள் வழிகாட்டும் ஒலியைக் கேளுங்க.. அதன் படி நடந்து நிறைய சேமித்து தன்னிறைவோடு வாழுங்கள்.. +914442890013.
வாழ்க வளமுடன்., நலமுடன்.!!!

திங்கள், 12 செப்டம்பர், 2011

வலைத்தளங்களின் வரலாறு...

நம்மில் பெரும்பாலோர் கூகுளின் உதவியுடன் ப்லாகுகள்., வேர்ட் ப்ரஸ்., ஆகியவற்றில் எழுதி வருகிறோம். வலைத்தளங்களுக்கு என்று ஒரு வரலாறு எழுதப்படவேண்டும் என நினைக்கிறேன். இது சாமான்யர்களையும் சிருஷ்டிகர்த்தாக்களாக உலவ விட்டிருக்கிறது.

முன்பு பத்ரிக்கைகளுக்கு அனுப்பி பல மாதம் காத்திருந்து பின் வெளிவந்தபின்தான் எழுத்தாளர் என்ற அங்கீகாரம் கிடைக்கும். இப்போது ஃபேஸ் புக் நோட்ஸிலோ., எஸ் எம் எஸ் களிலோ மெயினாக ப்லாகுகளிலோ நாம் நினைத்ததைப் பகிர முடிகிறது. அதன் எதிர் வினைகளையும் உடனடியாக உணர முடிகிறது.

1986 இல் டெக்ஸ்ட் ஒரு மெயிலில் இருந்து பல மெயில்களுக்கு அனுப்பப் பட்டது. 1990 இல் படித்துக் கொண்டு மட்டும் இருந்த நாம் எழுதவும் முடிந்தது அதன் பெயர் GLOG -- G LOG ., BBS -BULLETIN BOARD SERVICES., FORUMS., BLOGOSPHERE., WIKI., இது எல்லாம் அதன் பரிமாணங்கள்.

1990 களில் YAHOO ஒரு ஆப்ஷனைக் கொடுத்தது -- GEOCITIES அப்பிடின்னு ஒரு வெப்சைட் க்ரியேட் பண்ணிக்கலாம். 1995 மத்தியில் ஒவ்வொருவரும் ஒரு ஃபாண்டை உபயோகப்படுத்தியதால் படிக்க முடியாமல் ஃபாண்ட் ப்ராப்ளங்களை எதிர் கொள்ள வேண்டி வந்ததாம். இப்போ பார்த்தீங்கன்னா பத்து வருடங்களுக்கு மேலாக எழுதி வரும் வெப்சைட் அல்லது ப்லாகுகளில் மிகப் பழைய இடுகைகள் பிழிந்த ஜிலேபி போல புரியாமல் இருக்கும். எனவே யூனிகோடின் தேவை ஏற்பட்டது.

1997 இல் WEBLOG. 1998 இல் அதன் பெயர் V BLOG என்று அழைக்கப்பட்டது. 1999 இல் அதில் இருந்துசுருங்கி BLOG ஆகிவிட்டது. 2002 இல் யூனிகோட் பாப்புலர் ஆனவுடன். யாரும் ப்லாக் ஆரம்பிக்கவும் எழுதவும்., பின்னூட்டமிடவும். பின்னூட்டங்களை மட்டுறுத்தவும் முடிகிறது.

2005 இல் விக்கி்பீடியா மிக முக்கியமானதாகிறது.

தற்போது சில கேள்விகள். உங்கள் சிறந்த ஆலோசனைகளை வழங்குங்கள்.

1.இந்த ப்லாகுகள் எந்த மொழியில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டன?

2. தோராயமாக எத்தனை உலக மொழிகளில் எழுதப்படுகின்றன?

3. தமிழில் முதன் முதலில் ப்லாகின் முன்னோடி/ முன்னோடிகள் யார்.?

4. அவர்கள் மேற்கொண்ட முறைகள்., பிரச்சனைகள் தீர்வுகள் என்ன?

5. எது சம்பந்தமாக எல்லாம் ப்லாகில் பெரும்பான்மையும் எழுதப்படுகிறது?

6. கவிதை., கதை., கட்டுரைகள் தவிர., ஓவியம்., விளையாட்டு., அரசியல்., மற்ற கலைகளுக்கு என உள்ள வலைத்தளங்கள் என்னென்ன..

7. இவை தவிர என்ன என்னவெல்லாம் ப்லாகில் எழுதப் படுகின்றன.

8. இன்னும் ப்லாகுகளை வலைமையுறச் செய்ய என்ன செய்யலாம்.

9. திரைப்படங்கள்., தொலைக்காட்சி., பத்ரிக்கை போன்ற ஊடங்களின் முன் ப்லாகை வலிமையானதாக எப்படிக் கொண்டுவரலாம்.

10 இதில் நாம் வீடியோக்கள்., படங்கள்., செய்திகள் போன்ற சினிமா., டிவி., பத்ரிக்கை தருவது அனைத்தையும் தருவதால் மிகவும் நம்பிக்கையானதாகவும்., தரமுள்ளதாகவும் கொண்டு வந்து மிக முக்கியமான ஒரு இடத்துக்கு ப்லாகுகளை முன்னிறுத்துவது எப்படி.

11. பத்ரிக்கைகள் கூட தற்போது வலையுலகில் தங்கள் லிங்குகளை நிறுவி வருவதால் ப்லாகுகள் மிக முக்கியமானவையாகின்றன். எனவே நம்முடையவற்றை மிக அருமையானதாக சிறப்பானதாகக் கொடுப்பது எப்படி.

11. உங்கள் மேலான ஆலோசனைகளைப் பின்னூட்டத்தில் வழங்குங்கள்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

சாஸ்த்ரிபவனில் மகளிர் தினத்தில்.




INTERNATIONAL WOMEN’S DAY CENTENARY 1911-2011
CENTRAL GOVERNMENT WOMEN EMPLOYEES WELFARE ASSOCIATION

Equal access to education, training and science and technology:
Pathway to decent work for women

19 th - TUESDAY APRIL 2011

CONFERENE HALL- I (A- WING) DURING : 3 TO 5.30 PM
SHASTRI BHAVAN CHENNAI

WELCOME ADDRESS : MANIMEGALAI - PRESIDENT
SECRETARY REPORT : SREE KUMARI - SECRETARY.
SPECIAL ADDRESS : JAYA SHREE - JT SECRETARY.
ANNUAL REPORT : PRABHAVATHY - ORG. SECRETARY,
CULTURAL PROGRAMME ; CHILDREN AND MEMBERS.


CHIEF GUEST : SMT. KAMALA SELVARAJ . MD.DGO. PHD.
OBSTETRICIAN AND GYNECOLOGIST
A PIONEER IN INFERTILLITY TREATMENT
GG HOSPITAL -CHENNAI

TOPIC :WOMEN GYNAC PROBLEMS

FELICITATION AND PRIZE DISTRIBUTION:
SMT. THENAMMAI
JOURNALIST . FREELANCER FOR 3 TAMIL MAGAZINES.

DR. SATHYA. CGHS . DISPENSARY
SHASRTI BHAVAN

SHRI.N.V.NAGARAJAN I.I.S.
JOINT DIRECTOR
DIRECTORATE OF FIELDPUBLICIY
SHASTRIBHAVAN

VOTE OF THANKS.:

PUSHPA DEVI- Treasurer

சாஸ்த்ரி பவனில் CGWEWA வுக்காக 19 ஏப்ரல் அன்று மகளிர் தினம் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்க அழைத்திருந்தார் யூனியன் லீடர் மணிமேகலை அவர்கள். அன்புத் தங்கை கீதாவின் மூலம் போராடி ஜெயித்த பெண்ணாக அறிமுகமான மணிமேகலை சிறந்த தோழியாகி விட்டார். டாக்டர் கமலா செல்வராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அந்த விழாவில் என் கருத்துக்களை மகளிரிடம் பகிர்ந்து கொள்ளவும் வெற்றி பெற்றவர்க்குப் பரிசுகளை வழங்கவும் அழைக்கப்பட்டிருந்தேன். அதற்கு சிறப்பு ப்ரஸ் கவரேஜாக தினமலர் நிருபரும், தீக்கதிரின் நிருபர் தங்கமும் அழைக்கப்பட்டிருந்தார்கள் .


பெண்கள் சங்கத்தில் மணிமேகலை மருத்துவ் முகாம்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும் எந்தப் பிரச்சனையானாலும் முன்மொழியப்பட்டால் அதற்குத் தீர்வு பெற்றுத் தரும் வரை ஓய மாட்டார். யூனியன் தலைவி மணிமேகலையின் முன்னுரைக்குப் பின் டாக்டர் கமலா செல்வராஜ் பெண்கள் கர்ப்பம் தரிக்கும் காலகட்டங்களை மூன்று மூன்றாகப் பிரித்து எவ்வாறு உடல் நலன் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என எடுத்துரைத்தார். ஸ்க்ரீனில் ஸ்லைட் ஷோவாக அவர் ஒவ்வொரு நிலையையும் விளக்கியது சிறப்பு. மணிப்பிரவாள நடையில் புராண., இதிகாச ., தற்கால சமூக விளக்கங்களோடு அவர் பேச்சு மிக அருமை. ரொம்ப ஹூமரஸ் சென்ஸோடும். குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பொறுப்புகள் பற்றியும் அருமையாக பேசினார்.



நிறைய கலை நிகழ்ச்சிகள் நடந்திருந்தன். ஆனால் அன்று சிறப்பாக ஒரு முன்னோடியாக மணிமேகலை ஒரு பாடலுக்கு நடனமாடி மகிழ்வித்தார். பால் போலவே வான் மீதிலே என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்த போது அப்ளாஸ் அள்ளிக் கொண்டு போனது. பெண்கள் தங்கள் கூச்சங்களையும் தயக்கங்களையும் விட்டு வெளி வந்து தங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டும் என்பது அவர் கொள்கை. மிக அருமையான நடனம் அம்மணி..:)


நடிகர் ஜெமினி அவர்களின் மகள் என்ற பந்தா எதுவுமில்லாமல் டாக்டர் கமலா செல்வராஜ் என்னுடன் உரையாடினார்கள். அவர்கள் உரை முடிந்ததும் என்னுடைய கருத்துக்களைச் சொன்னேன். டாக்டர் வெகு நேரம் எடுத்துக் கொண்டதால் மணி என்னுடைய நேரத்தை 30 நிமிடத்தில் இருந்து 10 நிமிடம் பின் ஐந்து நிமிடமாகக் குறைத்து விட்டார். கொத்துப் பரோட்டா போட்டது போல கருத்துக்களை மட்டும் கடகடவென சொல்லி முடித்தேன்.



அதன் சாராம்சம்.:- பெண்கள் தினத்துக்காக நூற்றாண்டு கொண்டாடும் வரை வந்து விட்டோம். ஆனால் இன்னும் பெண்ணுரிமை., பெண் சுதந்திரம்., பெண் கல்வி பற்றி கோர வேண்டியவர்களாய் இருக்கிறோம். பெண்கள் தங்கள் உடல் நலத்தில் முதலில் அக்கறை செலுத்த வேண்டும். தற்காலத்தில் பெண்கள் கருத்தரிப்பது தொடர்பாய் பல சிக்கல்கள் இருக்கின்றன. சுற்றுச் சூழல் மாசு., உரங்கள்.,ப்ளாஸ்டிக்., ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றால் பல்வேறு உடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு கர்ப்பம் தரிப்பது தள்ளிப் போகிறது.



இந்தக் கோளாறுகளைக் களைய ப்ரீ மெடிக்கல் ஹெல்த் செக்கப் ( PREMEDICAL HEALTH CHECK UP) என்ற ஒன்று பயன்பாட்டில் இருக்கிறது. இது குறித்து டாக்டர் கமலா செல்வராஜ் அவர்களிடமும் கேட்டால் சொல்லுவார்கள். இதன் மூலம் தைராய்டு., ப்ளட் ப்ரஷர்., டயபடீஸ்., ஃபைப்ராயிட் கட்டிகள், கருப்பை வாய் புண்கள்., ஹார்மோனல் இம்பாலன்ஸ் போன்றவை கண்டு பிடிக்கப்பட்டு பெண்கள் கருத்தரியாமையின் காரணம் கண்டு பிடிக்கப்பட்டு களையப்பட்ட பின் கர்ப்பம் தரிப்பது எளிதாகிறது. இது ஆண்களுக்கும் பொருந்தும், ஸ்பெர்ம் கவுண்ட் மற்ற உடல் கோளாறுகள் கண்டு பிடிக்கப்பட்டு களையப்பட வேண்டும். இது இருபாலாருக்கும் பொது. எனவே பெண்கள் தங்கள் உடலில் உள்ள குறைகளை இனம் கண்டு மருத்துவ உதவி பெற்று தீர்வு காண வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் சிறப்பாய் வரும். குடித்தல், புகைப்பிடித்தல் மூலமும் குழந்தைப் பேறு தாமதமாகிறது. நாம் கர்ப்பம் தரிக்க தகுதியானவர்தானா என உறுதிப் படுத்திக் கொள்ளவும் அது சம்பந்தமான சிகிச்சை மேற்கொள்ளவும் இந்த ப்ரீ மெடிக்கல் செக்கப் உதவுகிறது. எனவே கர்ப்பம் தரித்தபின் போகலாம் என இருக்காமல் திருமணமாகி ஓராண்டு ஈராண்டு ஆனபின் குழந்தைப் பேறு எதிர்பார்த்து தாமதப் பட்டால் கைனகாலஜிஸ்டிடம் முழு ஹெல்த் செக்கப் செய்து கொள்ள வேண்டும்.



குடும்பத்திலும் உங்கள் பிரச்சனைகளை மனம் விட்டுக் கூறினால்தான் தீர்வும் தெளிவும் ஏற்படும்.



நீங்கள் இதுவரை வேலை வேலை என பிஸியாக இருந்து விட்டீர்கள். ரிட்டயர்மெண்டுக்குப் பிறகு வெறுமையான நாட்களில் என்ன செய்யப் போகிறீர்கள். இந்த சமூகத்துக்கும் உங்களுக்கும் உபயோகமான விஷயங்களில் ஈடுபடுங்கள். உங்கள் சமூக சேவைகளை இன்றே கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பியுங்கள். தோழி மணிமேகலை அட்சய பாத்திரத்தில்( ஃபவுண்டேஷன் மூலம்) தன்னிடம் உள்ளதைப் பிறருக்கு வழங்குவதைப் போல நீங்களும் படிக்க முடியாத ஒரு குழந்தையை தத்தெடுத்துப் படிக்க வைக்கலாம். அநாதை ஆசிரமங்களில் தாய் தகப்பனில்லாத குழந்தைகளுக்கு உணவு ., உடை., கல்வி வழங்கலாம். முதியோருக்கும் அதே உதவிகள் செய்யலாம்.

செய்ய என்ன இருக்கிறது என்ற விரக்தியான மனநிலை வரும்முன் உங்களை உங்கள் செயல்பாடுகள் மூலம் பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள். சமூக சேவையில் ( SOCIAL CAUSE) இல் ஈடுபடுங்கள். இதுவே மகளிர் தின நூற்றாண்டு நாளில் நான் பகிர விரும்பிய செய்தி.



பரிசுகள் வழங்கி விழா முடிந்ததும் இரண்டு மூன்று பேர் சொன்னார்கள் , கர்ப்பம் தரிக்க ப்ரீ மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது பற்றி இன்றுதான் அறிந்தோம். நன்றி நல்ல செய்தி சொன்னீர்கள் என்று.

வியாழன், 8 செப்டம்பர், 2011

அண்ணல் அம்பேத்கார் பிறந்த தினம்- அட்சயா ஃபவுண்டேஷன் -- அரும்பாக்கம் மிடில் ஸ்கூல்


ATCHAYAA FOUNDATION
CHENNAI

INVITES YOU TO HONOUR THE CORPORATION SCHOOL TEACHERS
ON THE OCCASION OF AMBEDKHAR BIRTH DAY
ON 8TH APRIL 2011

VENUE : CORPORATION HIGH SCHOOL
ARUMBAKKAM, CHENNAI
TIME : 9 TO 10 a.m.
FRIDAY

WELCOME ADDRESS BY M. LOURDH RANI
HEAD MISTRESS/ARUMBAKKAM
CORPOATIONN MIDDLE SCHOOL
CHENNAI
&

CHIEF ADDRESS AND HONOURING THE TEACHERS
BY SMT. THENAMMAI LAKSHMANAN
FREELANCER FOR 3 TAMIL MEGAZINES
&
VOTE OF THANKS
BY SMT. P.SUSEELA
FOUNDER ATCHAYAA FOUNDAION
CHENNAI.

அண்ணல் அம்பேத்கார் பிறந்த தினமான ஏப்ரல் 14 அன்று( அதற்கு முன்பாகவே ஏப்ரல் 8 அன்று ) அட்சயா பவுண்டேஷன் சார்பாக அரும்பாக்கம் மிடில் ஸ்கூலில் கார்ப்பரேஷன் பள்ளி ஆசிரியைகளை ஊக்குவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டது.



இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணாக்கருக்கு அம்பேத்கார் பற்றிக் கூறவும்., ஆசிரியைகளுக்கும் விருது அளிக்கவும் அட்சயா பவுண்டேஷன் நிறுவனர் மணிமேகலை அழைத்திருந்தார்.



அண்ணல் பற்றிக் கூற அநேகம் இருந்தாலும் ( கூடு அமைப்பின் சாலை செல்வம் அவர்களைத் தொடர்பு கொண்டு விவரங்கள் சேகரித்திருந்தேன்) குழந்தைகளுக்கு ஏற்றாற் போல எளிமையாக சில கருத்துக்களைக் கூறி வந்தேன்.



தலைமை ஆசிரியை லூர்து ராணி பொன்னாடை போர்த்தினார். மணிமேகலை அட்சயா ஃபவுண்டேஷன் சார்பாக நினைவுப் பரிசு வழங்கினார். மணிமேகலையின் பேச்சும் மிகவும் அற்புதம். தளைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரமான மனநிலையில் அவர் தன்னாலான உதவிகளை தலித் மக்களுக்கும் மற்றும் அனைவருக்கும் செய்து வருவது மட்டுமல்ல. பள்ளி ஆசிரியைகளையும் ஊக்குவிக்கும் விதமாக தன் அம்மா பெயரில் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி அதன் மூலமும் சேவை செய்து வருகிறார்.




மகர் இனத்தில் பிறந்ததால் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்பட்ட அண்ணல் அம்பேத்கார் நம் நாட்டின் சட்டங்களை வடிவமைத்த சட்ட மேதையானார். ஒருவரைப் பிறப்பால் உயர்வு தாழ்வு கருதக்கூடாது. விடா முயற்சியோடு நன்கு படித்து தன் கல்வியாலேயே உயர்ந்த அண்ணல் அம்பேத்கார் போல நீங்களும் நன்கு படிக்க வேண்டும். கல்வி மட்டுமே உயர்வு அளிக்கக்கூடியது. கல்வியால் மட்டுமே ஒருவர் அறியப்படவும் பெருமையுறவும் முடிந்திருக்கிறது., சாதி., மதம்., இனம் இவற்றால் எல்லாம் மனிதரைப் பேதம் பார்க்கக்கூடாது. அனைவருமே ஒன்றுதான். நீங்கள் அனைவரும் வாழ்வில் உயர்வேண்டுமென்றால் அம்பேத்கார் போல நன்கு படிக்க வேண்டும். அவர் நன்கு படித்ததாலேயே அவரை பரோடா மன்னர் வெளிநாட்டுக்கு அனுப்பி பயில வைத்தார். எனவே கல்வி மட்டுமே ஒருவரை பெருமையுறச் செய்யும். KNOWLEDGE IS WISDOM. KNOWLEDGE IS POWER. KNOWLEDGE IS EVERYTHING.



பல்வேறு இன்னல்களோடு உங்கள் அம்மா அப்பா எல்லாரும் உங்களைப் படிக்க வைக்கிறார்கள். இங்கே ஆசிரியர்களும் நன்கு பயிற்றுவிக்கிறார்கள். எந்த சந்தேகம் வந்தாலும் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து நன்கு பயிலுங்கள்.


காலை உணவை கட்டாயம் சாப்பிட்டு வாருங்கள். அம்மா கொடுப்பது பிடிக்காது என சாப்பிடாமல் வரக்கூடாது. காலை உணவில்தான் உடலுக்கு தேவையான சத்து கிடைக்கிறது. பல மணி நேரம் வயிறு காலியாக இருப்பதால் நேரமில்லை என கூறி சாப்பிடாமல் வராமல் கட்டாயம் உணவருந்தி வரவேண்டும்.



கற்பென்றும் தீட்டென்றும் பெண்களையும் தாழ்த்தப்பட்டவரையும் ஒதுக்கி வைப்பது குறித்து அண்ணல் போராடி இருக்கிறார். அவர் பெற்றுத்தந்த உரிமைகளின் படியே பெண்கள் கல்வி கற்கவும் சுயமாய் தன் காலில் நிற்கவும் முடிந்திருக்கிறது. பெண் கல்வியை ஆதரித்தவர் அம்பேத்கார். எனவே கல்விதான் மிகச் சிறந்த செல்வம். அது எல்லாச் செல்வங்களையும் பெற்றுக் கொடுக்கும்.


நீங்களும் பெரியவர்கள் ஆனதும் அண்ணலைப் போல நாட்டிற்கு அரும்பணி ஆற்ற வேண்டும். வாழ்த்துக்கள் குழந்தைகளே..



வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணின் பின்னாலும் ஒரு ஆண் இருப்பார் என சொல்லி மணி மேகலை என் கணவருக்கும் தலைமை ஆசிரியை லூர்து ராணி மூலம் பொன்னாடை போர்த்தச் செய்தார். அவரும் சில வார்த்தைகள் குழந்தைகளுக்கு அறிவுரை கூறினார்.



பின் அனைத்து டீச்சர்களுக்கும் புத்தகங்களும் விருதுகளும் வழங்கினேன்.



மிகச் சிறப்பு என்னவென்றால் குழந்தைகள் சில கலை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். மிகத் திறமையான குழந்தைகள். கற்பூர புத்தி என்பார்களே அது போல அறிவின் தீட்சண்யம் ஒளிவிட்டது ஒவ்வொரு குழந்தை கண்ணிலும்.



ஒரு குழந்தை பாட்டுப் பாடினாள். ஒருத்தி நடனமாடினாள்., ஒரு சிறுவன் அம்பேத்கார் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசினான். 5 சிறுவர்கள் அமர்ந்து பட்டி மன்றம் போல தொலைக்காட்சியின் நன்மை ., தீமை பற்றிப் பேசினார்கள். பார்த்து அசந்து போனேன். ரொம்ப ப்ராக்டீஸ் கூட இல்லை. மிகச் சரியாக வழிநடத்தப்பட்டு உதவிகள் கிடைத்து அவர்கள் படித்து முன்னேறினால் இந்தியா நிச்சயம் ஒளி விடும்.



அன்றைய தினத்தில் நானும் மணிமேகலையும் எங்களால் ஆன சிறிய பரிசுகளை மேடையேறிய குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தோம்.




வாழ்க மணிமேகலையின் தொண்டுள்ளம்.! வளர்க அட்சயா ஃபவுண்டேஷனின் பணி. !



செவ்வாய், 6 செப்டம்பர், 2011

துறைமுகத்தில் மகளிர் தினத்தில்..

மகளிர் தினத்தில் போர்ட் ட்ரஸ்டில் சிறப்புப் பேச்சாளராய்ப் பேச அழைத்தார் அதன் செகரட்டரி தனலெக்ஷ்மி. முதலில் தயக்கமாய் இருந்தாலும் என்னை சஜஸ்ட் செய்தவர் என் அன்பிற்கினிய தோழி விஜயலெக்ஷ்மி ஜெயவேலு என்பதால் சம்மதித்தேன். ஏஜிஸ் ஆடிட்டிங்கில் பணிபுரியும் இவர் ஃபேஸ்புக்கில் கீதாஜீவனுடனான லேடீஸ் ஸ்பெஷல்( குமரன் கல்யாண மண்டபம்) சுய உதவிக்குழுவில் பேசியது., கவிதைச் சங்கமத்தில் ( தேவநேயப்பாவாணர் அரங்கம்., ) பேசியது., கலைஞர் தொலைக்காட்சி செய்தியில் கவிதைச் சங்கமம் பற்றி கருத்துக் கூறியது., சேரன் மிஷ்கினுடன் யுத்தம் செய் கலந்துரையாடலில் பேசியது., கான குஹா ( இசைப்பள்ளி ) ஆண்டு விழாவில் பேசியது என மைக் மோகன் ரேஞ்சுக்கு மைக்குடன் இருக்கும் ஃபோட்டோக்களைப் பார்த்து நான் கட்டாயம் வரவேண்டும் என கூறினார்.

எப்போது மேடை ஏறினாலும் ஒரு சின்ன பதற்றம் இருக்கும். சரியாக நினைத்ததை எல்லாம் சொல்லி முடிக்க வேண்டுமே என்று. அன்று அதிகமாய் இருந்தது. துறைமுகப்பேரதிபருடன் சரிசமமாக அமர்ந்து பேசப்போகிறோமே என்ற டென்ஷனும் சேர்ந்து கொண்டது. காலையில் அடையாறு கான்சர் இன்ஸ்டிடியூட் சென்று சாந்தாம்மாவை வேறு கண்டு வாழ்த்திவிட்டு., கான்சர் பற்றிய ஒரு பேட்டியை எடுத்து முடித்து விட்டு போர்ட் ட்ரஸ்ட் சென்றேன்.

துறைமுகப் பேரதிபர் அதுல்ய மிஸ்ரா., யூனியன் தலைவி ப்ரதீமா ஆகியோருடன் குத்து விளக்கை ஏற்றினேன். ரெபேக்கா தொகுத்து வழங்க முதலில் அதுல்ய மிஸ்ரா பேசினார்., மிக அருமையான தமிழ்., காதில் தேனும் பாலும் பாய்ந்து கொண்டிருந்தது. என் அன்பிற்கினிய சகோதரிகளே என அவர் ஆரம்பித்ததுதான் தாமதம் கரகோஷம் அடங்க 5 நிமிடம் ஆனது. அழகும் அறிவும் ஜனவசியமும் பொருந்திய ஒரு பர்சனாலிட்டி அவர். போர்ட் ட்ரஸ்டில் தாங்கள் செய்து வரும் பணிகள் குறித்தும் செய்யப்போகும் பணிகள் குறித்தும் பேசினார். அடுத்து ப்ரதீமா பேசினார். யூனியன் தலைவிகளுக்கே உரித்தான கம்பீரமான குரல். தான் கேட்க நினைத்தவற்றை எல்லாம் மேடையிலேயே கேட்டார். அதற்கு துறைமுகப்பேரதிபர் தான் முடிந்தவரை செயல்படுத்துவதாக கூறினார்.

அடுத்து சிறப்புப் பேச்சளராக அழைக்கப்பட்டிருந்த நான் பேசத்துவங்கினேன்.என் பேச்சின் சாராம்சம்.. ..

என் அன்பிற்கினிய சகோதரிகளே.. இந்த மகளிர் தினத்தில் நூற்றுக்கணக்கில் சக்தியின் வடிவங்களாக அமர்ந்திருக்கும் உங்களை எல்லாம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. என் சகோதரிகளைக் காண வரும்போது எளிமையாக வரவேண்டும் என்பது என் விருப்பம்.


மிக முக்கியமான பிரச்சனைகளாக இந்த மகளிர் தினத்தில் சொல்ல விரும்புவது மகளிரை இழிவு படுத்தும் டி வி விளம்பரங்களைப் புறக்கணியுங்கள். டி வி சீரியல்களுக்கு அடிக்ட் ஆவதை தவிருங்கள். நீங்கள் நினைத்தால் இந்த விளம்பரங்களுக்கு எதிர்ப்புக் காண்பித்தால் வெளியிடுவது தடை செய்யப்படும். பாடி ஸ்ப்ரே போட்டால் உடனே பெண்கள் பின்னாலேயே வந்து விடுவார்கள் என்பதெல்லாம் எவ்வளவு அபத்தம். மோசமாக பெண்ணைச் சித்தரிக்கும் எந்த விஷயத்தையும் ஆதரிக்காதீர்கள். பலர் சேர்ந்து சொல்லும்போது ஒரு விஷயம் கவனம் பெறுகிறது.


இரண்டாவதாக நீங்கள் உங்கள் பணத்தை சேமிக்கிறீர்கள்., அதை டெப்பாசிட்., இன்சூரன்ஸ்., தங்கம்., ரியல் எஸ்டேட்டில் போடுவதைப் போல ஒரு பங்கை நம் நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யுங்கள்.


இங்கே ஸ்போர்ட்ஸில் ஈடுபடும் பெண்களைப் பார்த்தேன். அதுபோல் அரசியலிலும் ஈடுபடும்., கருத்துக்கூறும் அளவு உங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். தினம் ஒரு முறையாவது செய்திகளைப் பார்ப்பது அவசியம்.


குடும்பத்துக்காக எவ்வளவோ செய்கிறீர்கள். எல்லாவற்றிலும் ( வீடு ., கார்., உயர்கல்வி., ) உங்கள் பங்கு இருக்கிறது. எல்லாருக்கும் பார்த்துப் பார்த்துச் செய்கிறீர்கள். உங்கள் உடல் நலனிலும் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உங்களுக்கென்று சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்கு ஏதாவது ஒரு கலை பிடித்தமானதாய் இருக்கலாம். அதை இப்போதே செயல்படுத்தத்துவங்குங்கள். ஒரு பெயிண்டிங்., பாட்டு கற்றுக் கொள்ளல்., ஒரு விளையாட்டு., இது போல. நீங்கள் ஒரு தனித்துவம் ( INDIVIDUALITY) வாய்ந்தவர். உங்களுக்கென்றும் வாழுங்கள்.



--- இவ்வாறு கூறி அனைவருக்கும் நன்றி கூறியவுடன் அனைவருக்கும் பரிசுகள் வழங்கினோம். பின் வெளியே வரும்போது லிஃப்டில் ஒரு பெண் வந்து கையைப் பிடித்துக் கொண்டு நான் டான்ஸ் நல்லா ஆடுவேன். ஒரு டான்ஸ் பள்ளி ஆரம்பித்து அனைவருக்கும் சொல்லிக் கொடுக்க ஆசை. அடுத்த முறை நீங்க என்னைப் பார்க்கும்போது நான் எனக்காகவும் என் ஆசைகளுக்காகவும் கூட வாழத் துவங்கி இருப்பேன் என்றார். மிகுந்த சந்தோஷமா இருந்தது.


டிஸ்கி:- மார்ச் 8 இல் போட வேண்டிய பதிவை ஏன் இப்போ போடுறீங்கன்னு கேக்கிறீங்களா..( நிறைய மறந்து வேறு போய் விட்டது.) ஏன்னா மார்ச் 8 இல் இருந்து போர்ட் ட்ரஸ்ட் ஃபோட்டோ கிராஃபரிடம் ஃபோட்டோ கேட்டு கேட்டு போராடி., ப்ரதிமா., தனா எல்லாரும் கேட்டும் இன்னும் கைக்குக் கிடைக்கவில்லையாதலால் இவ்வளவு லேட்டாயிருச்சு மக்காஸ்.... (துறைமுகப் பேரதிபர்., யூனியன் லீடர் ப்ரதீமா., போர்ட் ட்ரஸ்ட் மருத்துவர்., மற்றும் உயரதிகாரிகள் சூழ இருந்த படம்) சரி ரைட்டு ஆறு மாசம் ஆச்சு.. கிடைத்தால் போடுறேன். . :))

திங்கள், 5 செப்டம்பர், 2011

தெரிஞ்சுக்க..

தெரிஞ்சுக்க..:-
********************
ன்னா ஹசாரே பத்தி தெரியுமா..”

”ம்.. இல்லை..”

”ராம்தேவ் பத்தி..”

”ம்ஹூம்..”

”சமச்சீர் கல்வி பத்தி என்ன நினைக்கிறே..?”

”நம்ம பசங்க காலேஜ்ல படிக்கிறாங்க..”

”ஹிலாரி க்ளிண்டனோட இந்தியா விசிட் பத்தி தெரியுமா..?”

”தெரியலைங்க..”

”சுத்த வேஸ்டுடி நீ.. வெறும் சீரியலை மட்டும் பார்க்காம டிவியில கொஞ்சம் ந்யூஸும் பார்க்கத் தெரிஞ்சுக்க..”

எந்தக் கேள்விக்கு பதில் சொன்னாலும் திரும்ப மடக்கும் கணவனிடம் அவள் ”தெரியலைங்க ” என சொல்வதை வழக்கமாக்கி இருந்தாள்.



”என்னங்க.. வெளியில போறீங்களா.. கொஞ்சம் அர்ஜண்டா எண்ணெய் வேணும்.. வாங்கிட்டு வாங்க.. “

சட்டையை மாட்டியபடி கடைக்குச் சென்று திரும்பிய அவன்..

”என்னடி இது.. எண்ணெய் நூறு ரூபாய்க்குள்ளதானே இருந்துச்சு.. இப்போ 135 ரூபாயாமே. சட்டையில 120 ரூபாய்தான் இருந்துச்சு. பார்க்காம போயிட்டேன். அண்ணாச்சிகிட்ட வீட்டில வந்து வாங்கிக்க சொல்லி இருக்கேன். கொஞ்சம் அவமானமா போச்சு..”

“ஏங்க டிவியில நியூஸுக்கு கீழே மளிகை சாமான் ., காய்கறி விலை எல்லாம் கூட ஓடுமே பார்த்ததில்லையா நீங்க..?”

மடக்கிய மனைவியின் வார்த்தையின் அர்த்தம் உணர்ந்தவன் விழித்தான்... ”ஹி..ஹி..ஹி.. . ”


டிஸ்கி:- இந்த சிறுகதை 29.8. 2011 குங்குமத்தில் வெளிவந்துள்ளது. நன்றி குங்குமம்.:)

வியாழன், 1 செப்டம்பர், 2011

YOU R SO SWEET.. இனிப்பான மக்களுக்கு ஒரு சேதி.. டாக்டர் அஞ்சனா.




YOU R SO SWEET .. அப்பிடின்னு சிலர் புகழ கேட்டிருப்பீங்க.. இது பாராட்டுக்காக சும்மா சொல்றது.. அதென்னங்க ஸ்வீட்.. நிஜமாவே இனிப்பு அதிகமானா அதுக்கு பேர் டயபடிக் என்கிற சர்க்கரை வியாதி. நீரிழிவு நோய்னும் சொல்றாங்க. தற்காலத்துல நிறைய பேர் இதனால பாதிக்கப்பட்டிருக்கிறதால இது பத்தி விழிப்புணர்வு தரும்படி டாக்டர் மோகன் டயபடிக் ஸ்பெஷல் சென்டரைச் சேர்ந்த டாக்டர் அஞ்சனாவிடம் நம் லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்காக ஸ்பெஷலா ஒரு பேட்டி கேட்டேன். . டாக்டர் அஞ்சனா சொன்னவைகளைத் தொகுத்துள்ளேன்..

சர்க்கரை வியாதி., நீரிழிவு., டயபடிக்னு சொல்லப்படுற இந்த வியாதி ரத்தத்தில் சர்க்கரை அளவு ஜாஸ்தி்யா இருக்குறத குறிக்குது. இதுல பல டைப்புகள் இருக்கின்றன.

1. டைப் 2 இதுதான் தற்காலத்துல நிறைய பேருக்கு இருப்பது. 95 % இதுதான் பாதிப்பு ஏற்படுத்துது.

2. டைப் 1 இது குழந்தைகளுக்கு இருப்பது. இது ஒரு 2 % இருக்கு.


3. கர்ப்பகாலத்தின் போது மட்டும் ஏற்படுவது இது 0.5 % இருக்கு. இதுக்கு GDM ன்னு பேர். ( GESTATIONAL DIABETES MELLITUS ) . மற்றதெல்லாம் 2.5 சதவிகிதம் இருக்கு.

மெயின் டைப் 2 என்பது முன்பு எல்லாம் 50 ,60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் வந்தது. பின் அடுத்த ஜெனரேஷனில் 40 வயதிலேயே வந்துவிட்டது. இந்த ஜெனரேஷனில் அது 25 லிருந்து 30 வயதுக்குள்ளேயே வருகிறது. யூத்திலேயே வருகிறது.

ஏனெனில் ஏசியன் இந்தியன்ஸ்க்கு சர்க்கரை வியாதி அதிகரிக்க ரிஸ்க் அதிகம் இருக்கு. நம் தாத்தா பாட்டி காலத்தில் 50., 60 வயதில் வந்தது இப்போவே வருதுன்னா அது லைஃப் ஸ்டைல் ரிலேட்டடா இருக்கு. நம் லைஃப் ஸ்டைலை மாத்துவதால் உண்டாகிறது.

இதுக்கு காரணம்


1. உணவுப்பழக்கம் .,


2. உடற்பயிற்சி இன்மை.,


3. ஸ்ட்ரெஸ்., டென்ஷன்.




இதுதான் பெரும்பகுதி காரணம். இது குழந்தைகள் மற்றும் யங் அடல்ட்ஸுக்கு வருதுன்னா அதுக்கு ஓவர் வெயிட் மற்றும் ஓபீஸ் எனப்படும் உடற்பருமன் காரணம். ஜங் புட் எடுக்குறது., கோக் குடிக்கிறது. ( எங்கே பார்த்தாலும் ரெடிமேட் ஃபுட்ஸ் சாப்பிடுறது .. கே எஃப் சி., டொமினிக்., பிஸா ஹட்., பர்கர்., ஐஸ்கிரிம்ஸ்., சாக்லெட்ஸ்., கேக்ஸ் போன்ற உணவுகள்) .

ஹை கலோரி உணவு எடுத்துக் கொள்ளும் அளவு உடற்பயிற்சி செய்வதில்லை.. வீட்டுக்குள் வந்தவுடன் டி வியை போட்டு சோஃபாவில் அமர்ந்து அதிக கலோரி உள்ள உணவுகளை உண்பதால் அந்த ஃபாட் பூரா உள்ளேயே தங்கி விடுகிறது. ந்யூட்ரீஷனல் வால்யூ அதிகம் உள்ள உணவினால் ஃபாட் அதிகமா உடம்பில் சேருது. கோக் பெப்சியால் சுகர்தான் சேருது. வேறு ஒன்றும் இதில் இல்லை.

நம்ம ட்ரெடிஷனல் உணவில் அரிசி சாதம்., பருப்பு., கீரை., காய்., கூட்டு., பொரியல்னு தேவையான சத்துக்கள் இருக்கின்றன. இதை சாப்பிட்டு வெயிட் ஏறவுமில்லை. தேவையான சத்துக்களும் கிடைத்தது. இந்த மாடர்ன் உணவுகளின் அவைலபிலிட்டி மற்றும் அஃபோர்டபிலிட்டியால் இந்த பருமன் நிலை.

இது தவறான உணவினால் ஏற்படுது. ஹை கலோரி ஃபுட்., மற்றும் உடற்பயிற்சி செய்வதே இல்லை. முன்பு பெண்களுக்கும் அம்மி., ஆட்டுக்கல்., கிணற்றில் தண்ணீர் இறைப்பது ,வீட்டு வேலை செய்வது போன்றவை உடற்பயிற்சியா இருந்தன. இப்போ எல்லாம் மெஷினைஸ்ட். ஒர்க் மற்றும் மெஷினைஸ்ட் ட்ரான்ஸ்போர்ட். ஆண்களும் நடப்பதே இல்லை. சைக்கிள் என்பதே குறைந்து விட்டது. எல்லாரும் டூவீலர் அல்லது 4 வீலர்தான். படி ஏறி இறங்குவது இல்லை. லிஃப்ட்தான்.

இப்போ ரீசண்ட் ஸ்டடி என்ன சொல்கிறது என்றால் ( இண்டியா டயபடிக் ஸ்டடி) INDIAB -- நம் தேசம் முழுவதும் 86 % மக்களுக்கு பிசிக்கல் ஆக்டிவிட்டியே கிடையாது. 14 சதவிகிதம் மக்கள்தான் உடல் உழைப்பில் ஈடுபடுகிறார்கள். எனவே அதிக கலோரி உணவு ., ஆனால் எனர்ஜி அவுட் என்பது சீரோ., எனவே ஓவர் வெயிட். ஓபிசிட்டி., எல்லாம்.

சிலர் ஒல்லியா இருப்பாங்க ஆனால் தொப்பை இருக்கும். இவங்களுக்கு சுகர் இல்லைன்னு சொல்ல முடியாது. . இண்ட்ரா ஃபாட் எனப்படுவதுதான் ரொம்ப (INTRA ABDOMINAL FAT) ஜாஸ்தி ஆகி வெயிட் இன்க்ரீஸ் ஆகி டயபடிக் வரலாம்.

இதை தீர்மானிப்பது ஃபாமிலி ஹிஸ்டரி. அப்பா அம்மாவுக்கு இருக்கலாம். அது பிள்ளைகளுக்கு வரும். ரெண்டாவது வயதாவதால் வரும். மூன்று அதிக எடையால் வரும். நாலாவதா உடல் உழைப்பு இல்லாததால வரும். ஐந்தாவதா டென்ஷன்., வேலை ஸ்ட்ரெஸினால் வரும்.

இதிலிருந்து எப்படித் தற்காப்பது. ?


1. நல்ல சத்துணவா சாப்பிடுங்க.


2. சரியான உடல் உழைப்பு மற்றும்


3. உடற்பயிற்சி.. வாக்கிங்க் மாதிரி., அப்புறம்


4. எடைக்குறைப்பு.


5. ஸ்ட்ரெஸ் டென்ஷனைக் குறைக்கவேண்டும்.


6. ரெகுலர் ஸ்க்ரீனிங் செய்யவேண்டும்.


7. ரெகுலர் ப்ளட் செக்கப் செய்யவேண்டும்.

இது சரியா கவனிக்கப்படலைன்னா கண்கள். இதயம்., நரம்பு., சிறுநீரகங்கள்., கால் ஆகியவற்றைப் பாதிக்கும். ஹை ரிஸ்க் காம்ளிகேஷன்ஸத் தருது. உரிய நேரத்தில் வந்தால் தடுத்து விடலாம்.

50 சதவிகிதம் பேர் சிம்டம்ஸ்எதுவும் தெரியாம வருவதில்லை. இதன் அறிகுறிகள் என்னன்னா


1. அதிக தாகம்.,


2. அதிகமா சிறுநீர் கழிப்பது.,


3. அதிக பசி.,


4. எடை குறைதல்.,


5. ரொம்ப களைப்பாக உணருதல்.,


6. வீக்காக இருத்தல்.,


7. மறைவிடங்களில் அரிப்பு ஏற்படுதல். இது எல்லாம் இருக்கும். ப்ளட் டெஸ்ட் மூலமும். ரெகுலர் ஸ்கிரீனிங் மூலமும் கண்டு பிடித்து ட்ரீட்மெண்ட் எடுத்துக்கணும்.

ட்ரீட்மெண்ட்ன்னு எடுத்தா டயட்டை கம்ளீட்டா மாத்தணும். வாழ்க்கை முறையை மாத்தணும்.உடற்பயிற்சி., வாக்கிங்க இருக்கணும். இன்சுலின் கூடினா. , கு்றைந்தா டாப்லெட்ஸ் அல்லது ஊசி எடுத்துக்கணும் டாக்டர் அறிவுரைப்படி. ரெகுலர் ஸ்க்ரீனிங்க் மற்றும் மானிட்டரிங் மூலம் சரிப்படுத்தலாம்.

பேஷண்ட்ஸ்டோட ஒத்துழைப்பு முக்கியம். எம்பவர்மெண்ட் ஆஃப் பேஷண்ட்ஸ். என்னன்னா இது பற்றிய கல்வி ., விழிப்புணர்வு தேவை. இதை எப்படி கண்ட்ரோல் செய்வது என்றும் அறியவேண்டும். சுகர் டாப்லெட்ஸ் போட்டுக்கலாம் என கண்ட்ரோல் இல்லாமல் சாப்பிடக் கூடாது இனிப்பு வகைகள் ஜூஸ் போன்றவைகளை. பேஷண்ட்ஸ் முழுதா ஒத்துழைத்தால்தான் இந்த நோயின் தீவிரத்தை கட்டுக்குள் வைக்க முடியும்.

எனவே இனிப்பான மக்களே கொஞ்சம் கண்ட்ரோலா இருந்து உங்க ஹெல்த்தை ஃபிட்டா வைச்சுக்குங்க.

டிஸ்கி:- டாக்டர் அஞ்சனாவிடம் நான் பேட்டி எடுத்த இந்த மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரை ஜூலை மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்துள்ளது.:)