புதன், 31 ஆகஸ்ட், 2011

மௌனக்கூடு..

இரைச்சலான கீழ் வீடு

துன்புறுத்துகிறது..,

காலியானபின் அதிகமாய்..!

டிஸ்கி:- இந்தக் கவிதை 24.8.2011 ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது. :)


செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

கோதுதல்...



கோதுதல்..:-
*******************
ஒரு தூக்கம் வரும்போது
ஒரு சோகத்தை விழுங்கும் போது
ஒரு கோபத்திலிருந்து விடுபட
ஒரு துக்கத்தை வெளியேற்ற
தேவையாய் இருக்கிறது
தலை கோதுதல்.

தாத்தாவின் முடியடர்ந்த
மார்பில் படுத்தபடி
கதை கேட்டு உச்சுக்கொட்டி
முகம் பார்த்து மல்லாந்திருக்க
தலை கோதும் அவர் கைக்குள்
சுருண்டு வருகிறது
மந்திரக் கோலால்
தொட்டதுபோல் தூக்கம்.

படிப்பு மந்தமோ.,
திருமண பந்தமோ
பார்வையாலே கோதி
தாத்தா வருடும்போது
ஒரு சமரசம் வருகிறது
ஜெயித்து விடுவோமென.

நல்லெண்ணையும் சீயக்காயும்
தாத்தாவின் தலைப்பக்கம்
தொட்டுவைத்துத் திரும்பும் போது
துக்கம் கோதுகிறது
தொண்டையை.
கேவலாய் வெளிப்பட்டு.

தங்கம் உரசி நாவிலிட்டு
பெயரிட்டு அள்ளிக் கொண்டவர்
திரும்பப்போவதில்லை
எத்தனை முறை கூவினாலும்.
பயணப்பட்டுக் கொண்டிருந்தார்
கேளாச் செவியும் பாராமுகமுமாய்
பச்சை ஓலையில்..

அலமாரி லாக்கரைத்
திறக்கும் போதெல்லாம்
மறைந்த தாத்தா
சந்தனப் பாக்கெட்டுகளோடு
வார்த்தைகளால் கோதியபடி
இருந்தார் பாதுகாத்து
வைத்திருந்த பழைய கடிதங்களில்..

டிஸ்கி:- இந்தக் கவிதை 14.8.2011 கல்கியில் வெளிவந்துள்ளது:)

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

சிகரத்துக்கு ஸ்க்ரிப்ட்...


நான் ஸ்கிரிப்ட் எழுதிய முதல் விளம்பரம்.. ஸ்விஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் வெளிநாட்டு தமிழ் தொலைக்காட்சிகளி்லும் வருவதாக ஸ்க்ரிப்ட் இயக்குனர் நண்பர் அருண்குமார் தெரிவித்தார்..:)

கவிதை எழுத ப்லாக் ஆரம்பித்தேன். அதைப் படித்து ஒன்றைப் பாடலாக அமைத்தவர் இயக்குனர் நண்பர் செல்வகுமார். அந்தப் பாடல் மகளிர் தின ஸ்பெஷல்.... ஆக வந்தது. நன்றி புதிய வாய்ப்புக்கள் வழங்கும் செல்வாவுக்கும் அருணுக்கும்.

சனி, 27 ஆகஸ்ட், 2011

கடிதங்களின் காலம்..

கடிதங்களின் காலம்..:-
*************************************
குறுந்தகவல்களைப் போல
எளிதாயில்லை
கடிதங்களின் காலம்..

பரிமாற்றங்களுக்கு முன்னான
பரிபாஷைகள் பயங்கள்
தயக்கங்கள் மிகுந்து..

புராதனக் கல்வெட்டோ.,
சிற்ப வினோதமோ.,
டிரங்குப் பெட்டிகளில் புதைந்து..

புதைபொருள் ஆராய்ச்சி
செய்யும் போதெல்லாம்
செல்லரித்த ஸ்டாம்பு கூட
ஐம்பொன் தகடாய்..

கொள்ளளவு மிகுந்து
எந்தத் தயக்கமும் அற்று
இடமற்று அழிக்கப்படும்
குறுந்தகவல்களாய்
இன்றைய காதலும்., நட்பும்.

டிஸ்கி:- இது ஆகஸ்ட் II ., 2011 அதீதத்தில் வெளியானது. :-))

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

ராசக்ரீடை...



ராசக்ரீடை..
********************
எல்லாமும் தேவதைதான்..
ஒன்று காளியாய்
ஒன்று சூலியாய்
ஒன்று சரஸ்வதியாய்
ஒன்று வராஹியாய்
ஒன்று லக்ஷ்மியாய்..

பெயரெழுதிய
சோறைப்போல
தனக்கானதை மட்டும்
உண்ணும்
ஒழுக்கம் வளரட்டும்..

எல்லா தேவதையும்
சிறகடித்து
கண்முன்னே
பறந்து கொண்டிருக்கலாம்
தன் சுய தேவதையோடு
கை கோர்த்து..

தேவதைகளின்
தரிசனத்தில்
தனக்கான ப்ரத்யேக
தேவதையைத்
தொலைத்துவிட்டு

இன்னொன்றைத்
தேடித் தொடர்ந்து
தூக்கமும் கனவுமற்று
விழித்தே இறக்காமல்

விழிப்புற்று
கிடைத்ததே வரம்தானென
தன் தேவதையின்
இறகு பிடித்து
மறைந்து கொள்ளலாம்
அல்லது பறந்து
அதனோடு களிக்கலாம்..

டிஸ்கி..1..:- இந்தக் கவிதை 21.3.2011 ( உயிரோசை 134 இல்) வெளிவந்துள்ளது.




புதன், 24 ஆகஸ்ட், 2011

வீடென்பது..

வீடென்பது...
********************
இறக்கைகள்
அடுக்கியபடி
எனக்கான பறவை
காத்திருந்தது..

நீல வானம்
மஞ்சள் வெய்யில்
அந்திச் சிவப்பு
மழை வானவில்

எல்லா இடமும்
என்னை தூக்கிச்
சென்றலைந்து
களிப்பாக்கியது..

தொடர்ந்த
சிறகடிப்பில்
தொய்ந்த அது
ஒற்றைக் கிளையில்
ஓய்ந்தமர்ந்தது..

கண் மலர்த்தி
கிடந்தபடியே
களைப்போடு
பார்த்தேன் ..அது
எனதான வீடு

எங்கு மலர்ந்தாலும்
இங்கு பூத்துக் கிடப்பது
இன்பமாய் இருந்தது..
இறக்கைக்கான
வேலையும்., தேவையும் இன்றி

டிஸ்கி:- 21.3.2011 உயிரோசையில் வெளிவந்தது.:)

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

தாய் மரம்...



தாய் மரம்..
********************
முலைகளும் யோனியும்
முளைத்த மரங்கள்
யோசித்ததே இல்லை
தாம் ஏன் சுமப்பதென..

பறவைகள் உண்டு
வெளித்தள்ளிய எச்சங்களில்
இடப்பெயர்ச்சி அடையாமல்
அங்கங்கு வம்சவிருத்தி

பசியாற்றும் முலைகள்
பழுத்த கனிகளாய்
வழிப்போக்கருக்கும்
கல்லடிப்போருக்கும்

விதை விதைத்தோருக்கு
விரிந்த விருட்சமும்
வினை விதைத்தோருக்கு
வினை எச்சங்களும்..

டிஸ்கி:- இந்தக் கவிதை 21.3. 2011 உயிரோசையில் வெளிவந்துள்ளது.:)

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

விளையாட்டு..

விளையாட்டு.
**************************
கிச்சு கிச்சு தாம்பூலம்
விளையாடத் தொடங்கி
கிளியாந்தட்டில் சுற்றி
கொலை கொலையாய்
முந்திரிக்காயை பறித்து
கொள்ளையடித்தவன்
ஒளிந்து பிடித்து விளையாட
பல்லாங்குழிகளாய்
சிதறிக் கிடந்தது பரவசம்.
பசுக்களை வாரியவன்
சுற்றத் தொடங்கினான்.
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததென..
தங்கத் துளிகளாய்
மிதந்து கொண்டிருந்தது தேகம்.

டிஸ்கி:- 28.2.2011 உயிரோசையில் வெளிவந்தது.:)

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

முகமற்ற முகங்கள்.. மற்றும் லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்கான படைப்புகள்..

முகமற்ற முகங்கள்..:-
******************************
என்னைச் சுற்றி
அவர்கள் இருந்தார்கள்..
இவர்கள் இருந்தார்கள்..
உலாவ பெயர் வைத்த
நிறைய தெருக்களும்..

எவரும் யாரையும்
அறிந்திருக்கவில்லை.
வாலற்ற விந்தண்ட
கோசங்கள் சுற்றின
எல்லா நிறங்களிலும்
எல்லா வடிவங்களிலும்.

ஒவ்வொன்றுக்கும்
தனித்தன்மையும்
பொதுத்தன்மையும்
இணைந்திருந்தது
டிஎன்ஏ ஆர்என்ஏ
மூலக்கூறுகள் என்று.

ரிபோ ந்யூக்ளிக் ஆசிட்
பிரட்டிய கார்பன் ஹைட்ரஜன்
அடைத்த பாண்டாய்
நானும் முட்டி மோதி
ஆக்ஸிஜன் உறிஞ்சி
முகமற்ற முகங்களோடு..

டிஸ்கி:- இந்தக் கவிதை 1.8.2011 அதீதத்தில் வெளிவந்துள்ளது. :) ********************************************************************

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்கான படைப்புகள் அனுப்ப :-
************************************************************************
அன்பு முகநூல் நண்பர்களுக்கு

வணக்கம் . பலதரப்பட்ட நண்பர்களை இந்த முகநூல் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது .நேரில் பேசாவிட்டாலும் முகநூல் மூலமாக உங்களுடன் தொடர்பில் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி .

லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழை உங்களில் சிலர் ,வாங்கியோ அல்லது இணையத்திலோ படித்திருக்கலாம் .

வழக்கம்போல் இந்த வருடமும் மிகப் பெரிய அளவில் லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் தயாராக ஆரம்பித்துள்ளது .இந்த வருடம் முக நூல் நண்பர்களுக்கும் மலரில் இடம் தர வேண்டும் என்கிற ஆவலில் இந்தக் கடிதம்!

உங்கள் படைப்புக்களை ,------கவிதை,பயணக் கட்டுரை,ஆன்மிகம், இலக்கியம்,சிறுகதை,அனுபவம்,ஜோதிடம்,நகைச்சுவை, சித்திரம், கார்டூன், என்று எதுவாகவும் இருக்கலாம்---எங்களுக்கு அனுப்புங்கள் .

பிரசுரிப்பதற்கு ஏற்ற படைப்புகளை எங்கள் தீபாவளி மலர்க் குழு தேர்ந்தெடுக்கும் .

அனுப்பவேண்டிய முகவரி
girijaraghavan@gmail.com
or
Gayathri Publications
60/9,LKS Nest,
7th Avenue,
ashok Naga Prabhur,
Chennai-600083

சனி, 13 ஆகஸ்ட், 2011

சமுதாய நண்பனும் சில நிகழ்வுகளும்..

இலக்கியத்திற்கென்று சில இதழ்கள் நடத்தப்படுகின்றன. உயிர்மை., கணையாழி., அகநாழிகை., தகிதாவின் தகிதா ( முன்பு புதிய “ழ” என்ற பெயரில் வந்தது).. சமுதாய நண்பன் நாகர்கோவிலில் இருந்து வெளிவருகிறது. ஒரு பல்சுவை திங்கள் இதழ். தமிழ் வழி ஆங்கிலம்., பிழையற ஆங்கிலம் பேசவேண்டாமா., ஜி கே., ஸ்போக்கன் ஹிந்தி., கவிதைச்சோலை., ஜோக்ஸ்., சிறுகதை., கவிதை., கட்டுரை., மனித உரிமை., கேள்வி பதில் என அனைத்திலும் பிரமாதமாக வருகிறது. தனி இதழ் 15 ரூபாய்., ஆண்டுச் சந்தா 125. கல்வி நிறுவனங்களுக்கு சலுகை தருகிறார்கள். சி பி ஃப்ரன்சிஸ் ., கமல செல்வராஜ் கட்டுரைகள்., கோவிந்தராசு கவிதைகள்., மார்ட்டின் நீதிக்கதைதள்., ஸ்டாம்ப் கலெக்‌ஷன். என பகிர்வுகள் அருமை. நாகர் கோயிலில் கிட்டத்தட்ட 137 விளை என முடியும் ஊரின் பெயர்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கு.. 10 புத்தகங்களும் வெளியிட்டிருக்காங்க. ஆறாம் ஆண்டில் வெற்றி நடை போட்டுக்கிட்டு இருக்குது சமுதாய நண்பன். சிறப்பான முயற்சிகளோடு வெளியிடும் ஆசிரியர் ராஜுக்கும்., அவர் மனைவி லில்லி ராஜுக்கும் ஆசிரியர் குழாமுக்கும் பாராட்டுக்கள்.

நாகர்கோவில் எழுத்தாளர்களுக்குப் புகழ் பெற்ற ஊர்.. இந்த புத்தகத்துல என்னுடைய 3 கவிதைகளும் வெளிவந்துள்ளன. நன்றி ரத்னவேல் ஐயா அவர்களுக்கு,.. ஐயா அவர்களின் இடுகைகளைப் போலவே அவர்கள் அனுப்பும் புத்தகங்களும் மிகச் சிறந்த வழிகாட்டிகளாக இருக்கின்றன. நன்றி ரத்னவேல் ஐயா..

இந்த புத்தகத்தில் சிறப்பான தொடர்கதைகளும் வரவேற்கப்படுகின்றன. எனவே எழுத ஆர்வமோடு இருப்பவர்கள் சமுதாய நண்பன்., 1348., சிங்காரத்தோப்பு., பார்வதிபுரம்., வெட்டூர்ணிமடம் அஞ்சல்., நாகர்கோவில். 629 003.குமரி மாவட்டம் என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்க.

நம்ம ஜீவா சாரோட திரைச்சீலையின் விமர்சனக்கூட்டம்தான் இது. வழக்கம்போல் டிஸ்கவரியில்தான். ராஜன் அவர்கள் சில எதிர் கூறுகளை எடுத்து வைத்தார்.. அதற்கு நம்ம நண்பர் இது எழுதப்பட்ட சூழலை அழகா சொன்னார்.. ஜீவா யதார்த்தமா எழுதியதே தேசிய அவார்டு வாங்கினா இன்னும் சிரத்தையோட எழுதி இருந்தா இண்டர்நேஷனல் அவார்டு வாங்கி இருப்பீங்க.. வாழ்த்துக்கள் ஜீவா..


டிஸ்கவரியி நடந்த அடுத்த முப்பெரும் விழா இது சாக்பீஸ் சாம்பலில் புத்தகத்துக்கு ( நான் விமர்சனம் எழுதிய நூல் ) நாணற்காடனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து விருது கிடைச்சிருக்கு . அதை கௌரவிக்கும் கூட்டம் இது. அடுத்து பூமித்தொட்டில் என்ற ஆவணப்படம் நம்ம தோழர் தகிதா மணிவண்ணன் எடுத்ததை எங்களுக்காக ஸ்பெஷலாக வெளியிட்டுத் திரையிட்டார். மூன்றாவது அவரது மாணவர் குழந்தை வேலப்பன் ( ஆண்மை தவறேல் இயக்குனர்) கவுரவிக்கப்பட்டார். இந்தப் படம் நன்கு இருப்பதாக அனைவரும் சொன்னார்கள்..


பூமித்தொட்டிலில் மணிவண்ணன் ( அவர் எது எழுதினாலும் கவித்துவமாகவே சொல்வார்) ., பூமி என்னும் உண்டியலில் உள்ள சத்துக்களை எல்லாம் நாம் எடுத்துக்கொண்டே இருக்கிறோம் ..சேமிக்கவே இல்லை .. என்றார். க்ளோபல் வார்மிங். பற்றிய வார்னிங் படம் இது.. வாழ்த்துக்கள் மணி ., வேலப்பன்., சரவணன். ( நாணற்காடன் சரா). !

சென்ற மாதம் அம்பாசிடர் பல்லவாவில் நடந்த வண்ணமும் வாசமும் ஓவியக் கண்காட்சி. தோழி மீனாக்ஷி மதன். தன்னுடைய படங்களில் பூக்களையே தேர்வு செய்கிறார். அவர் நிற்பது அவருக்குப் பிடித்த அனிச்ச மலரின் பக்கத்தில். கிட்டத்தட்ட 25 நாளில் 33 படங்களை வரைந்திருந்தார். HUES OF HEART STUDIO நடத்திவரும் அவரின் இன்னொரு படம் IHI .. பேல் விவாஹ் எனப்படும் இந்தப்படமும் ஸ்பெஷலான ஒன்று. நேபாளில் மேவார் வம்சத்தில் பெண்களுக்கு முதலில் வில்வமரத்துடன் பால்யத் திருமணம் நடைபெறும். அதன் பின்தான் திருமணம் நடைபெறும் என்று கூறினார்.


பழனியப்பன் வைரம்ஸ் என்பவரின் ப்லாக் பார்த்து பல பூக்களின் விவரம் சேர்த்து இவற்றை வரைந்ததாகக் கூறினார். மிக அருமையான படங்கள் மீனாக்ஷி .பூக்களை வரையும் பூவையே ! வாழ்த்துக்கள்.!

என் இன்னொரு தோழி அனுராதா நிகேத். மாடலிங். படங்கள் வரைதல் ., பெண் தொழிலதிபர் என கலக்குபவர். அவர் வரைந்த ஓவியங்கள் அப்ஸ்ட்ராக்ட் வகை. மிக வித்யாசமான ஃப்ரேம்களில்., க்ளேசியர்., கடல்., நதி முகத்துவாரம்., என அற்புதமாக வரைந்திருந்தார். இரண்டு ஆடுகள் குறித்த ஒரு படம் எனக்குப் பிடித்திருந்தது.


அம்பாசிடர் பல்லவா ஹோட்டல் இந்த மாதிரி ஓவியக் கண்காட்சிக்குன்னு இலவசமா காலரி தர்றாங்க.. வாழ்த்துக்கள் கலைகளை வளர்க்கும் அம்பாசிடர் பல்லவாவுக்கு. !


சித்ரகலா அகாடமியின் தலைவர் ஜீவாதான் தொடங்கி வைத்தார். அவர் ஒரு ஓவியம் வரைய அதை நாங்கள் எல்லாரும் கலந்து கட்டி வரைந்து எங்கள் கைத்திறமையையும் காண்பித்திருக்கிறோம்.. ( பள்ளிக்கூடத்துல வரைஞ்சது மறக்கலன்னு சந்தோஷமா இருந்துச்சு..) .. வீடியோ ஆரம்பிச்சு 9.50 க்கு மேலதான் நான் வரைஞ்சேன்.. ஆக்டர் சிவாஜி சந்தானம் சார் ., “ தேனம்மைலெக்ஷ்மணன்.. ஒரு கவிதை வரைகிறது.. ” என்று கமெண்ட் அடிப்பார்.. பின்னல் வரைந்தேன்.. பார்த்துட்டுச் சொல்லுங்க..
என் அன்புத்தோழி வசுமதிவாசன் கூச்சுப்பிடியில் கலக்கிய நிகழ்ச்சி இது.. போன வாரம் கோடம்பாக்கம் டி ஏ வி ஸ்கூலில் அரங்கு நிறைந்த நிகழ்ச்சியா நடந்துச்சு இது.. சின்ன வேம்படி சத்யம் அவர்களை குருவாகக் கொண்டு அவர்களின் சிஷ்யையின் சிஷ்யை மாதுரியை ஆசிரியையாக அமைய வசு 3 மாதங்களில் கற்றுக் கொண்டு ஆடிய நிகழ்ச்சி இது. ஏற்கனவே பரத நாட்டிய டான்சரா இருந்ததாக கொஞ்சம் ஈஸியா கத்துக்கிட்டதா சொன்னாங்க வசு.. இதில் ஆடிய அனைவரும் மற்றும் கற்றுக் கொடுத்த ஆசிரியையும் தங்கள் பிள்ளைகளைப் பள்ளியில் கொண்டு விடும்போது சந்தித்து இந்த மதுரா டான்ஸ் கிரியேஷனை உருவாக்கி இருக்காங்க..!


நாட்யாஞ்சலி., பிரம்மாஞ்சலி., ஜாவளி என்ற மூன்று நடனங்கள். முதன் முதல் சலங்கை பூஜை என்பதால் கொஞ்சம் டென்ஷனோடு இருந்த வசு நடனமாட ஆரம்பித்த பின் அபிநயனங்களிலும் பாவங்களிலும் கலக்கி விட்டார்.. செமையா என்ஞாய் செய்த நிகழ்ச்சி இதுதான். செல்வகுமார்., சுகன்யா., விஜயானந்த்., ஷீலா தாமஸ் ரத்னம் ., என் கணவர்., என் அக்கா பெண்ணும் ஆடியதால் அவர்கள் குடும்பம் என கலந்து கட்டி சந்தோஷமாக இருந்தது.


அடுத்தும் லயனஸ் வசு அவங்க ப்ரோக்ராமில் கலக்கப் போவதால் அட்வான்ஸ்டு வாழ்த்துக்கள் வசு.. !

உனக்கான வாழ்வில் நான்....

உனக்கான வாழ்வில் நான்..
***************************************
சிறகுகள் உதிர்த்தேன்
நீ என்னை சுமக்கிறாயென..
சிந்தனைகள் அற்றேன்
நீ எனக்காய் சிந்திக்கிறாயென..
தேவனான காட்சியில்
தேவதையாய் கைகோர்த்து
நினைப்பே இல்லை
நீயும் மனிதன்தானென..

கனவுகளுக்குள்ளும்
ஊடுருவி எனக்கான
கனவை காண்கிறாய்..
இமைப்பொழுதும்
இமைப்பதில்லை
நான் உன் கருவிழிக்குள்..

என்னை விட்டு
இன்னொரு சிந்தனையை
நீ சிந்திக்க முடியும் என்பதை
நான் உணர மாட்டாமல்
எப்போது இமைத்தாயென
இம்மியும் தெரியாமல்

விடுதலைக்கான
பத்திரத்தில் கையெழுத்திட்டேன்
எப்போது உன்னை விடுவிப்பேனோ
என்மனக் கூட்டிலிருந்து..
எனக்கான வாழ்வை
நீ வாழ்ந்து சென்றுவிட
உனக்கான வாழ்வை
வாழ்ந்து கொண்டிருக்கும் நான்..

டிஸ்கி:- நன்றி ஜூலை 11., 2011 அதீதம். படத்துக்கு நன்றி நெல்லை ராமானுஜம் ப்லாக்ஸ்பாட். காம்..:))

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

கண்கள் உதிர்த்துச் சென்றவனுக்கு...

மீளுதலற்ற பாதைகளில்
உலா சென்றன கண்கள்.

கார்னியா கிரணங்களை விழுங்க
யத்தனித்தன கிரஹணங்கள்.

கவ்வுதலும் விடுவித்தலும்
பலநூற்றாண்டுகளுக்கு
விழி தப்பியபடி.

விழிக்கத்துவங்கிய சமயம்
மின்சாரம் பாய்வதும் அறுவதும்.

முழுசாய் அறுத்து மூடியபோது
பாதங்களின் கீழ் அவன் விழிகள்.

நெஞ்சை அறுக்கும் ஆக்ஸாவில்
தப்பிக்க திரும்பி நடந்தாள்
கண்களற்ற பாதைகளில்.

டிஸ்கி:- நன்றி ஜூன் 29., 2011 அதீதம்.. படத்துக்கு நன்றி ஷண்பகநாதன் ப்லாக்ஸ்பாட்.:))

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

நோயோடு போராடிப் பணி செய்யும் ஆசிரியை லூர்துராணி. போராடி ஜெயித்த பெண்கள் (11)




ஒருவருக்கு உடல்நலக்கோளாறுன்னா என்னவெல்லாம் நீங்க நினைப்பீங்க.. டயபடிஸ்., ப்ளட் பிரஷர் இது மாதிரிதானே.. ஆனால் அரும்பாக்கம் பள்ளித்தலைமை ஆசிரியை லூர்து ராணி அவர்களுக்கு கிட்டத்தட்ட 31 வருடமாக ஹீமோக்ளோபின் கவுண்ட் கம்மி.. பொதுவா இரத்தச்சிவப்பு அணுக்கள் எல்லாருக்கும் 12 இருக்கணும்னா இவங்களுக்கு 4 தான் இருந்தது. அவங்க இதை எதிர்கொண்டு தன்னுடைய ஆசிரியப்பணியையும் செவ்வனே நிறைவேத்தி இருக்காங்க..

லூர்து ராணியோட அம்மா அப்பா இருவரும் ஆசிரியர்கள் என்பதால் இவருக்கும் ஆசிரியப்பணி பிடித்து விட்டது. அம்மா அப்பாவிடம் இருந்து பங்சுவாலிட்டியைக் கத்துக்க முடிந்தது. 21 வயதில் படிப்பும் திருமணமும் முடிந்து 3 குழந்தைகளுக்கும் 27 வயதில் தாயானார். கணவர் ஜேசுராஜ் கிறிஸ்டியன் கல்லுரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

டெய்லர்ஸ் ரோட்டில் வாடகைக்கு குடி இருந்த போது சேத்பட் கவர்ன்மெண்ட் ஸ்கூலில் பணிபுரியும் போது கிட்டத்தட்ட 29 வயதில் அடிக்கடி நடக்க முடியாம ., அசதியா., மயக்கமும் சோர்வுமா வந்தது. மூச்சு வாங்கும். பேசமுடியாது . மாடி ஏற முடியாது. செக் பண்ணா ஹீமோக்ளோபின் இருக்க வேண்டிய அளவை விட ரொம்பக் கம்மியா இருந்துள்ளது. .HAEMOGLOBIC ANEMIA WITH ETILECY - என்ற பாதிப்பால் ஒரே நாளில் 6 முறை ஃபிட்ஸில் நாக்கெல்லாம் வெளியே வந்து கவர்ன்மெண்ட் ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டார்.
மூக்கில் செருகப்பட்ட ட்யூப் வழியாகத்தான் ஆகாரம் எல்லாம். நாக்கு உள்ளே வெடுக் வெடுக்கென்று போனதைக் கூட உணர்ந்ததாக சொன்னார். ரத்தம் ஏத்த முடியவில்லை. ஜன்னி வர ஆரம்பித்துவிட்டது. ஊசி போட்டாக் கை கால் வீங்கிவிட்டது. ஸ்டீராயிட்ஸ் ஏற்றப்பட்டதும்தான் ( வைஃபொலான் 60 மிகி) இவர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்.

அன்றிலிருந்து இன்று வரை அந்த ஸ்டிராய்டின் பலத்தில்தான் செயல்படுகிறார் . மந்த நிலையை வீர்யப்படுத்துகிறது என்றாலும் உயிரைக் காத்த மாத்திரை என்றாலும் ஸ்லோ பாய்சன் போல அது ஏற்படுத்திய தாக்கங்கள் அதிகம். பக்க விளைவுகளாக., டயாபட்டீஸ்., ரத்த அழுத்தம்., காடராக்ட்., கிட்னியிலும் நெஃப்ரான்கள் வீக், 2000 ஆம் வருடத்தில் கான்சர் வந்து மார்பக நீக்கம்., கீமோதெரஃபி., மற்றும் ரேடியேஷன் 55 நாட்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வாழ்நாள் பூரா இது எல்லாவற்றுக்கும் தனித்தனி மாத்திரை சாப்பிட வேண்டும். இவை எல்லாம் சமாளித்து இவர் பள்ளிக்கு பங்சுவலாக காலை 8 3/4 க்கு வந்தாரென்றால் மாலை 4 மணிக்கு பள்ளி பூட்டியபின்தான் வீடு செல்வார்.இதுவரை ஆஸ்பத்ரியில் படுத்திருந்த நாள் தவிர லீவே எடுத்ததில்லை. பிள்ளைகளுக்கு மெட்ரிக்குலேஷன் கல்விக்கு இணையாக இங்கும் கல்வி அளிக்கப்படுவதாக சொன்னார்

நன்கு படிக்கும் பிள்ளைகளை ஊக்குவிப்பது., புத்தகம் வாங்க பணம் கொடுப்பது., மேற்படிப்பு படிக்க விரும்பினால் பணம் கொடுப்பது மட்டுமல்ல ஒரு குழந்தை வீட்டில் சாப்பிடாமல் வந்துவிட்டால் தன்னுடைய உணவையும் கொடுத்து விடுவார். தாய் தகப்பன் சண்டை என்றால் சரியாக படிக்காத குழந்தைகளை இனம் கண்டு அவர்கள் குடும்ப சச்சரவை அமைதியாக இணைத்தோ., விருப்பம் இல்லாமல் வாழ்பவர்களுக்கு சட்டதின் உதவி கிடைக்கும் படியும் செய்திருக்கிறார்,

1990 கோயம்பேடு கார்ப்பரேஷன் மிடில் ஸ்கூலில் பணிபுரியும் போது ஓலை தீப்பற்றி கட்டிடம் முழுமையும் தீ பரவியது. அப்போது முதல் மாடியிலிருந்து இவரும் இன்னொரு ஆசிரியரும் எல்லாப் பிள்ளைகளையும் தப்பிக்கச் செய்து அதன் பின்னர் இவர்களும் குதித்திருக்கிறார்கள். அதில் நான்கு குழந்தைகள் இறந்தது விட்டார்கள் என்றும் மிச்ச அனைவரும் தப்பித்துவிட்டார்கள் என்றும் சொன்னார். ACT OF BRAVRY AWARD INNERWHEEL CLUB ம் ., LIONS CLUB மூலம் ரூபாய் 150 ம் கொடுத்திருக்கிறார்கள்.

டாக்டர் ஷீலா ராணி சுங்கத் சென்னை கலெக்டராக இருந்தார் அப்போது. கபீர் புரஸ்கார் அவார்டுக்காக அவர் இவர் பெயரை பரிந்துரைத்திருந்தார். அவர் ட்ரான்ஸ்ஃபர் அகிவிட்டதால் அது அப்படியே நின்றுவிட்டது.

பள்ளியில் கூட யாருக்கும் உடம்பு சரியில்லை என்றால் லூர்துராணி டீச்சரைப் பார்த்து தைரியமா இருங்க என்பார்களாம். எல்லாரும் பொதுவா விடுப்பு கிடைத்தால் எடுப்பார்கள் . ஆனால் இவர் தனது லீவில் 6 மாதம் மிச்சம் வைத்து இருக்கிறார்.. இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா.. இந்த ஆகஸ்ட் 2010 அன்றும் ப்ரேயர் முடிந்தபின் மூச்சு விட முடியாமலிருந்து உடனே ஆஸ்பத்ரியில் அட்மிட் ஆகி எல்லா ஸ்கேனும் செய்து மூளையில் .ப்ளட் க்ளாட் ஆகியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு மருந்து சாப்பிட்டு வருகிறார் . இந்த மாதத்தோடு இவர் ரிட்டையராகிவிட்டார்.. இருந்தும் மே 31 வரை அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காகவும்., அடுத்த தலைமை ஆசிரியை வரும்வரை பணி செய்ய விடுப்பு எடுக்காமல் இருக்கிறார். .

2005- 2006 இல் தமிழ்நாடு முழுமைக்கும் பெஸ்ட் கார்ப்பரேஷன் டீச்சர் அவார்டு செயிண்ட் ஜான்ஸ் இண்டர்நேஷனல் ஸ்கூலில் வைத்து வழங்கப்பட்டது. டாக்டர் ராஜ்குமார் அவார்டும் கிடைத்தது. 2009-2010 இல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவார்டு தமிழ்நாடு கவர்ன்மெண்டிம் பெஸ்ட் டீச்சர் இன் கார்ப்பரேஷன் ஸ்கூல்ஸ் இவருக்கு கிடைத்தது.

வருடா வருடம் இவர் பிறந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று ஸ்டான்லி ஆஸ்பத்ரியில் இவர் பிள்ளைகள் 150 பேருக்கு உணவுப் பொட்டலம் கொடுத்தல்., மற்றும் ரத்த தானமளித்தல் என செய்வார்களாம் இவர் படிக்க வசதியில்லாத பிள்ளைகளுக்கு உதவி பல செய்தும் தன் பிள்ளைகள் சம்பாத்தியத்திலிருந்தும் அவர்களின் அலுவலக நண்பர்களிடமிருந்தும். வசதி படைத்த பணக்காரர்களிடமிருந்தும் உதவிகள் பெற்று இந்தக் குழந்தைகளுக்கு வழங்குகிறார். இதைப் பார்த்த இவர் குடும்ப நண்பர் -கண்ணதாசன் மருமகள் - இவரை என் ஜி ஓவில் சேரும்படி சொன்னாராம்.

AEO- ASSISTANT EDUCATIONAL OFFICE மூலமா நேஷனல் அவார்டுக்கு இவர் பெயரை அனுப்பி இருக்காங்க.. வில்பவர்., கடவுள் கிருபை., பிள்ளைகள்., கணவர் கோவாப்பரேஷன் மூலமா இவர் இவ்வளவும் சாதிக்க முடிந்தது என்றார்.. இந்த விருதும் அவருக்கு கிடைக்க வாழ்த்தி விடைபெற்றோம்.

டிஸ்கி:- சாதனைக்கு எதுவும் தடையில்லை என்ற தலைப்பில் இந்தக் போராடி ஜெயித்த பெண்கள் கட்டுரை ஜூன் 2011 லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்துள்ளது..:)

புதன், 10 ஆகஸ்ட், 2011

மழைக்காலத்தில் குழந்தைகளின் நலம் காப்பது எப்படி.? டாக்டர் முகமது ஆசிஃப்..

வெய்யில் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கியவுடனே வீட்டில் இருக்கும் சின்னக் குழந்தைகளுக்கு வியாதிகள் ஆரம்பிக்கத் தொடங்கும். அதுவரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கொஞ்சம் காய்ச்சல்., சளி என்று நை நை என்று அழ ஆரம்பிக்கும். பெரியவர்களுக்கு வந்தாலே கஷ்டம் எனும் போது குழந்தைகளுக்கு வந்தால் எப்படித்தாங்குவார்கள்.. ?குழந்தைகளுக்கு இதுபோல மழைக்காலம் ஆரம்பித்தபின் வரும் உடல் நலக் கோளாறுகளுக்காக என்ன செய்யவேண்டும்., எப்படிக் குழந்தைகளை இவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என சுபம் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் முகமது ஆசிஃப் அவர்களிடம் நம் வாசகியருக்காக நோய்த்தடுப்பு முறைகள் பற்றிக் கேட்டேன். அவர் கூறியவற்றைத் தொகுத்துள்ளேன்.

மழைக்காலம் ஆரம்பித்தவுடனே எல்லா பாக்டீரியா ., வைரஸ் மற்றும் மைக்ரோ பாரசைட்ஸ்களின் ஆதிக்கம்., ஈரப்பதத்தின் காரணமாகப் பெருகத்துவங்கும். அப்போது சுவாசத்தின் (காற்றில்) மூலமாகவும்., நீரின் மூலமாகவும் ., சுகாதாரமற்ற சுற்றுச்சூழல் மூலமாகவும் நோய் பெருகிப் பரவுகிறது.

வைரஸின் மூலமாக டையோரியா., டிஸண்ட்ரி., டைபாயிடு., காலரா., ஜாண்டிஸ்., மலேரியா போன்றவை வருகிறது. இதில் டையோரியா., டிசண்ட்ரி போன்றவை சுத்தமற்ற தண்ணீர் மூலமும்., டைபாயிடு., காலரா போன்றவை சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீர் மூலமும் பரவுகிறது. ஹெப்பாடிடிஸ் பி எனப்படும் மஞ்சள் காமாலை நோயும் சுவாதசத்தின் மூலம் பரவுகிறது. மலேரியா தண்ணீர் மூலம் பரவுகிறது.

க்ளைமேட் மாற்றமடைவதும் வைரல் இன்ஃபெக்‌ஷன்ஸை உண்டு பண்ணுகின்றன. இதனால் வைரல் ஃபீவர்-- ஃப்ளூ., இன்ஃப்ளூயன்ஸா., நிமோனியா., டெங்கு., சிக்கன் குனியா போன்றவை தாக்குகின்றன. இதில் நிமோனியா பாக்டீரியல் இன்ஃபெக்‌ஷனால் உருவாகிறது.

ஆஸ்துமா மிகப் பொதுவான மழைக்கால நோய். காற்று ., மழை போன்ற சமயங்களில் இதன் தாக்கம் அதிகமாய் இருக்கும். இது முதலில் நுரையீரலை பாதிக்கிறது. பொதுவாக செப்டம்பர் மாதத்தில் வருகிறது. இது சுவாசக் கோளாறுப் பிரச்சனைகளை உண்டுபண்ணுகிறது.

சில வைரல் இன்ஃபெக்‌ஷன்கள் மூளையை பாதித்து மூளைக்காய்ச்சலை உண்டுபண்ணும். இதற்கு பன்றிக் காய்ச்சல் என்றும் பெயர். இந்த வைரஸ் எல்லாம் சுவாசித்தல் மூலம் மூக்கு மூலம் பரவுது. இது மூக்கு வழி நுழைந்து நுரையீரல்., ரத்தம்., பிறகு அதன் மூலம் எல்லாப் பாகங்களுக்கும் பரவுது. முதலில் இது ப்ரெயின் ஃபீவர் ., ஹெப்படிடிஸ் பி என நுழைந்து பின் உடலை சோர்வுறச் செய்து., டீ ஹைட்ரேஷனாக்கி எல்லா பாகத்தையும் பாதிக்கிறது.

பொதுவான நோய் அறிகுறிகள்;-
முதலில் காமன் கோல்ட்., மூச்சுவிடுவதில் சிரமம்., மூக்கு அடைப்பு அல்லது மூக்கு ஊற்றுதல்., இருமல்., சளி., காய்ச்சல்., உடல்வலி., தலை வலி., தலைபாரம்., குமட்டல்., வாந்தி மயக்கம்., சோர்வு இருக்கும்.

இதை சரியான சமயத்தில் கண்டறிந்து மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டல் இது ரத்தத்தில் கலந்து உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு நிமோனியா., இன்ஃப்ளூயன்ஸா., ஃப்ளூ., சுவாசக் கோளாறு., ஆஸ்த்துமா போன்றவற்றில் கொண்டுபோய் விடும். இப்படி சிவியரா பாதிக்கபட்டா ஹாஸ்பிடலைஸ் செய்யணும். அதுவும் ஒரு வருடத்துக்குள் உள்ள குழந்தை என்றால் உடனடியா ஆஸ்பிட்டலில் சேர்த்து மருத்துவ உதவி செய்யணும்.

அடுத்த கட்டத்தில் வாய் கசப்பு., வயிற்று வலி., பசியின்மை., வயிற்றுப் பொருமல்., வாமிட்டிங்., லூஸ் மோஷன்., இதெல்லாம் இருக்கும். ஜாண்டிஸும் டைபாய்டும் வைரஸால் வருவது. கண்ணில் நீர் கோர்த்தல்., மூக்கில் நீர் வடிதலில்தான் எல்லா நோய்களும் ஆரம்பிக்கும். சில காய்ச்சல்களில் நெறிகட்டுதல்., ரேஷஸ்., டையர்ட்நெஸ். இருக்கும். டெங்கு., சிக்கன் குனியாவில் முழு உடலும் வலிக்கும் நெறிகட்டும். மூட்டுகளைப் பாதிக்கும் . மலேரியா விட்டு விட்டு குளிர் ஜுரம் போல வரும்.

சிக்கன் பாக்ஸ்., ஸ்மால் பாக்ஸ்( பெரியம்மை., தட்டாலம்மை) போன்றவை வரலாம். இது எல்லாம் மழைக்காலத்தில் பெருகி வரும் ஈரப்பதத்தால்., பாக்டீரியா வைரஸ்கள் காற்றிலும் நீரிலும் அதிகமாகி சுவாசம் மூலமும்., நீர் மூலமும் மனித உடலை அடைகின்றன.

உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் இது அதிகம் பாதிக்காது. நோஞ்சான் பிள்ளைகள் சிலருக்கு ஊரில் ஒரு வியாதி எட்டிப் பார்க்கும்போதே முதலில் அவர்கள் உடலைத்தான் பதம் பார்க்கும். எனவே தினமுமே உணவில் நல்ல ஹெல்த்தி டயட் இருக்கும்படி பார்த்துக் கொடுக்க வேண்டும்.

இதை எல்லாம் தடுக்கும் முறைகள் :-

மழைக்காலம் ஆரம்பித்தவுடன் பாதுகாப்பு முறைகளும் அமல்படுத்தப் படவேண்டும். குப்பைகள் சேராமல்., சாக்கடைத் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படவேண்டும். பொது சுகாதாரமும். சுத்தமான சுற்றுச் சூழலும் முக்கியம். இல்லாவிட்டால் தேங்கி இருக்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா போன்ற காய்ச்சலை உருவாக்கும். பொதுவாக கைமருந்து எல்லாம் பிள்ளைகளுக்குக் கொடுத்துக் கொண்டிராமல் ஒன்றிரண்டு தினங்கள் பார்த்து விட்டு சிவியரானால் ஹாஸ்பிட்டலைஸ் செய்துவிட வேண்டும்.

குடும்ப சுகாதாரம்., தனிநபர் சுகாதாரம் முக்கியம். சாப்பிடும் முன்பும்., டாய்லெட் செய்றுவந்தபின்னும் லிக்விட் சோப்பு போன்றவற்றைப் பயன்படுத்தி கைகழுவவேண்டும்.பிள்ளைகளையும் கை கழுவ பழக்க வேண்டும். நகங்களை அவ்வப்போது வெட்டி விடவேண்டும்.

வீட்டில் முதலில் கிச்சன் சுகாதாரம் முக்கியம். அப்புறம் டாய்லெட்டுகள் சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

வீடு நல்ல காற்றோட்டமும்., சூரிய வெளிச்சமும் உடையதாக இருக்கவேண்டும்.

குப்பைகள் ., உடனுக்குடன் வீட்டிலிருந்து அகற்றப்படவேண்டும். டம்ப் பண்ணக்கூடாது

வீட்டைச் சுற்றி மழைத்தண்ணீர் ., சாக்கடைத்தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குடிதண்ணீரை. சுடவைத்து வடிகட்டிக் குடிக்க வேண்டும்.

வெளியில் மழைக்காலத்தில் ஐஸ்க்ரீம்., கூல்ட்ரிங்ஸ் ., ஃபாஸ்ட் புட் சாப்பிடுவது தவிர்க்கப்படணும். அதில் ஏதும் கிருமிகள் இருந்து உடல் நலக்குறைவுகள்., வயிறு., தொண்டை பிரச்சனைகள் உருவாகும்.

உணவு:-
ஈஸியாக செமிக்கக்கூடிய உணவு வகைகள் தரவேண்டும். பால்., ப்ரெட்., கஞ்சி., பார்லித்தண்ணீர்., சூப்., போன்றவை தரலாம். டீஹைட்ரேஷனத்தவிர்க்க அதிக அளவில் லிக்விட் ஃபுட் எடுத்துக் கொள்ளவேண்டும்.

எந்த அப்னார்மல் சிம்டம்ஸ் இருந்தாலும் உடனடியாக ஹாஸ்பிட்டலைஸ் செய்து மருத்துவம் அளிக்க வேண்டும்.

கைக்குழந்தைகள் எதனால் அழுகிறது என்பது தெரியாததால் உடனடியாகப் பார்க்கவேண்டும். சரி வெளியே கிளம்பும் போது குழந்தைகளுக்கு., மழைக்கோட்டு., குடை எல்லாம் மறக்காம கொடுத்து விடுங்க. தண்ணீரில் ரொம்ப விளையாட வேண்டாம்னு சொல்லி அனுப்புங்க. உற்சாகமா கிளம்புங்க மழைக்காலத்தை எதிர்கொள்ள.

டிஸ்கி:- இந்த மருத்துவக் கட்டுரை ஜுலை 2011 இவள் புதியவளில் வெளிவந்துள்ளது.:)

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

ஹுசைனியின் பேச்சிலர் சமையல்...


வீட்டில் பெண்களே சமைக்கிறார்கள்.. ஒரு மாறுதலுக்கு ஆண்கள் சமைத்தால் என்ன? வாயில் வைக்க முடியுமா என்கிறீர்களா.. இந்த ஷோவை பார்த்தா அப்பிடி சொல்ல மாட்டீங்க.. நீங்களும் சின்ன பொண்ணா இருந்தப்ப இப்படித்தானே நிறைய பொருளை கெடுத்து கத்துக்கிட்டு இருப்பீங்க.. உங்களை சொல்லச் சொன்னா லிஸ்ட் போட்டு கூட சொல்வீங்க.. உங்க மலரும் நினைவுகளை..

பொதுவா நான் ஆண்கள் கல்யாணக்கூடங்களில் சமைத்து பார்த்திருக்கிறேன். டி வி ஷோக்களில் கூட சமைத்துப் பார்த்திருக்கிறேன்.. சமைத்துப் பார் என புத்தகம் கூட எழுதி இருக்காங்க.. ஆண்கள்.. ஆனா சமையலை இஷ்டப்படியும் செய்யமுடியும்னு ஒரு ஷோ பார்த்தேன்.. நான் அதன் ரசிகை.. அதில் சமைப்பவர் சாதாரண ஆள் இல்லீங்க.. உலகளாவிய கராத்தே மாஸ்டர் ., சிறந்த ஓவியர் வில் வித்தை பயிற்சியாளர்., இசையார்வம் உள்ளவர்,, பன்முகத்திறமையாளர்., ஹூசைனிதான் அவர். எதையும் வித்யாசமா செய்யக்கூடியவர். இந்த ஷோவை அவர் நடத்தும் விதம் உங்களுக்கு எந்த மனநிலை இருந்தாலும் சிரிக்க வைத்துவிடும்.

ஒரு ப்ரெட்டை எடுத்து டோஸ்ட் போட சொல்லிக் கொடுப்பார்.. அது எப்பிடின்னா ஒரு பார் ப்ரெட்டை எடுத்து டேபிள்ல வச்சு டக்., டக்குன்னு வெட்டுவார்.. அதில் கடைசி துண்டுகள் கீழே விழும்.. அப்புறம் அடுப்பைப் பத்தவைக்காமல் தோசைக்கல்லை அதில் வைத்து ப்ரெட் இன்னும் வேகலையே., நாம அடுப்பையே பத்தவைக்கலை என்பார்.. அப்புறம் ஒரு ஷோவில் ஒரு சமையலுக்கு தண்ணீர் தேவைப்படும் . தண்ணீர் ஜாடி காலியாக இருக்கும். பக்கத்தில் ஒரு பைப் இருக்கும். அதை திருகி காண்பித்துவிட்டு இது செட் பைப் . தண்ணீர் வராது என்பார். பின் ஏதோ தண்ணீரை ஊத்தி சமைப்பார்.. இன்று காலை கூட ஒரு மாவை பிசைந்தார்.. பாருங்க.. பார்த்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.. என்னது சமைத்தது டேபிளுக்கு வந்துச்சான்னு கேக்குறீங்களா.. அது எதுக்கு .. இந்த சிரிப்பே ஒரு சந்தோஷ உணவுதானே..


அவரிடம் ஒரு பேட்டி எடுத்தேன் .. எப்பிடி உங்களுக்கு இப்படி ஒரு வித்யாசமான ஷோவை செய்யவேண்டும் என்று தோன்றியது என்று. அவர் சொன்னார்.. சன் டிவியில் ஒரு சமையல் ஷோ செய்ய வேண்டும் என அணுகினார்கள். எனக்கு ஆக்சுவலா கராத்தே தெரியும். பெயிண்டிங் தெரியும்.. ஆனா சமையல் தெரியாது. I DONT KNOW SAMAIYAL.

சன் டிவி ஆரம்பித்த பிரியட் ரமேஷ் பிரபா விஐபி கிச்சன் என்ற ஒரு ஷோவை நடத்த விரும்பினார். அதுக்காக பிரபல சினிமா ஹீரோக்களின் மனைவிகள் சமைக்கும் ஷோவும் அதில் (பெரிய பெரிய ஆக்டர்ஸ் )ஆண் ஹீரோக்களும் மனைவியுடன் சமைக்கும் ஷோவுக்கு( MALE VIP) அணுகினார்கள். அதுக்கு எந்த ஹீரோவும் ஒப்புக் கொள்ளவில்லை.. அதுனால என்கிட்ட வந்தாங்க..

நான் சொன்னேன் எனக்கும் சமைக்க தெரியாதேன்னு.. அதுக்கு நாங்க கத்துத்தரோம் அதப்பார்த்து நீங்க சமைங்கன்னு சொன்னாங்க. இது ஒரு அரைமணி நேர நிகழ்ச்சி. இத விஜயலெட்சுமி ரமேஷ் நடத்துனாங்க.. பாச்சிலர்ஸ் சமையல்னு பேரு. ஒரு நாள் ஒரு வெஜிடபிள் பர்கர் செய்து காண்பித்தேன்.. செய்து முடித்து டிஸ்ப்ளே செய்திருந்தேன்..


ஒரு முறை நான் காரில் செங்கல்பட்டு வழியாக செல்லும்போது ஒரு குரங்குக்குட்டி அடிபட்டு ரோட்டில் காயத்துடன் கிடந்தது.. அதை என்னுடன் எடுத்து வந்து சிகிச்சையளித்து என் வீட்டில் வளர்த்து வந்தேன்.. NAICHANCHIC னு பேரு .

சமைக்கும்போது எனக்கு என்ன பழக்கம் என்றால் நிறைய மிஸ்டேக்ஸ் செய்வேன்.. பேசிக்கிட்டே சமைப்பேன் . அப்புறம் எடுத்ததை எல்லாம் அதத்தூக்கி இங்க போட்டு இதத் தூக்கி அங்கே போடுவேன். சரியா வேக வைக்க மாட்டேன். இந்த வெஜிடபிள் பர்கர் செய்து முடித்ததும் என்ன ஆச்சுன்னா அதை நாம் சாப்பிட்டு ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லி ஷோவை முடிக்கணும். அப்ப நான் எடுத்து சாப்பிட்டு ,” சூப்பர்” அப்பிடின்னு சொன்னேன், சொன்ன மறு நிமிடம் அந்த குரங்குக்குட்டி வந்து என் கையில் இருந்த பர்கரை பறித்து தின்றுவிட்டு முகத்தை ஒரு மாதிரி அஷ்ட கோணலாக்கியது.. இஞ்சி தின்ன குரங்குன்னு கேள்விப்பட்டிருப்பீங்க அதை எல்லாரும் அன்னைக்கு பார்த்தோம். பர்கரை கையிலிருந்து தூக்கிப்போட்டுவிட்டு ஓடியது பாருங்கள்.. அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். காமிரா எல்லாவற்றையும் படம் பிடித்துக் கொண்டிருந்தது..

அது வித்யாசமா இருந்ததால் அதை அப்படியே டிவியில் ஒளிபரப்பினார்கள். அந்த ஒரு எபிசோடுக்கு மட்டும் ஒரே நாளில் 200 கடிதங்கள். திரும்ப ரீடெலிகாஸ்ட் பண்ண சொல்லி அதுக்கும் ரொம்ப ரெஸ்பான்ஸ்.

அப்புறம் அரைமணிநேரம் என்னால் தொடர்ந்து நேரம் ஒதுக்க முடியவில்லை. பேசிக்கலி எனக்கு கராத்தே., பெயிண்டிங்ஸில்தான் ஆர்வம் அதிகம். அதுக்கே நேரம் பத்தவில்லை. மேலும் கராத்தே ., பெயிண்டிங்க விட குக் என்ற பேர் பெரிசாயிருச்சு. எனவே நான் அதை ஸ்டாப் பண்ணேன். எனவே அந்த ஷோ நின்னு போச்சு..

அப்புறம் மெகா டிவியில் என்னை திரும்ப இந்த ஷோ பண்ணும்படி திருமதி தங்கபாலு கேட்டாங்க.. எனக்கு அரைமணி நேரம் ஒதுக்க முடியாததால ஷார்ட்டா பண்ணித்தரும்படி கேட்டாங்க.. 20 ஷோ.. 3 நிமிடம் வர்ற மாதிரி எடுப்பாங்க.. எனக்கும் கொஞ்ச நேரம் ஷூட்டிங்குக்கு ஒதுக்கினா போதும். எனவே ஒப்புக் கொண்டேன்.

இதப் பார்த்துட்டு நிறைய வீடுகள்ல பெண்கள் ஆண்கள் கிட்ட பாருங்க ஹுசைனியே சமைக்கிறார்.. நீங்களும் கத்துக்குங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.. இந்த ஷோவை பெண்கள் ., ஆண்கள் என்ற வித்யாசமில்லாம அனைவரும் ரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க..
ஆண்கள் சமைப்பது தப்பில்லைன்னு உணரனும்..

3 மாதமா ஒரு நாளைக்கு 3 ஷோ வருது காலையில 9 மணிக்கு., மதியம் 1 மணிக்கு., அப்புறம் மாலை 7 மணிக்குன்னு. இது ஃபன்னி ப்ரோக்ராம் . இதைப் போட்டு உடைப்பேன்., அதைப்போட்டு உடைப்பேன். முதல்ல எல்லாரும் க்ரிட்டிசைஸ் பண்ண ஆரம்பிச்சாங்க.. இப்ப எல்லாரும் ரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. அதுனால ரொம்ப பாப்புலர் ஆகிருச்சு இந்த நிகழ்ச்சி.

ரோடு நடுவில ஒரு ஞானியும் வருவான் ஒரு பைத்தியக்காரனும் வருவான். கிறுக்குத்தனமா ., பையித்தியக்காரத்தனமா செய்யிறத உடைக்கிறத ரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க மக்கள்.. ஹுசைனி செய்யிற மாதிரி செய்ங்க அப்பின்னு வேற வீட்டுல சொல்ற அளவுக்கு ரெஃபரன்ஸ் ஆகிப்போச்சு அந்த ஷோ..

என்ன நல்லா சமைக்கக் கத்துக்கிட்டனான்னு கேக்கிறீங்களா.. நான் நல்லா சமைக்கக் கத்துகிட்டா அது சாதாரண விஷயம் ஆகிரும்.. அதுனால இதே அதிரடி சமையல்தான். ப்ராப்பரா சமைச்சு கொடுக்குறத விட இப்படி சிரிக்க வைக்கிறது எனக்கு பிடிச்சிருக்கு. சோ அதிரடி சரவெடிதான்.. என்ஜாய் பண்ணுங்க..


டிஸ்கி:- ஹூசைனியின் பேச்சுலர் சமையல் என்ற இந்தக் கட்டுரை கோதை என்னும் புனைபெயரில் ஜூன் 2011 இவள் புதியவளில் வெளிவந்துள்ளது.



திங்கள், 8 ஆகஸ்ட், 2011

சம்மர் டூர் அடித்த பிரபலங்கள்..

போன மே மாதம் எங்கே போயிருந்தீங்க.. இந்த மே மாதம் எங்கே போய் வந்தீங்க.. எந்த ஊர் பார்க்கலாம் என்று நம்ம வாசகர்களுக்குச் சொல்லுங்க என்று சில பிரபலங்களிடம் கேட்டோம். அவங்க சொன்ன் ஜில் ஜில் ஸ்பாட்ஸ் பத்தி படிச்சிட்டு.. ஜில்லுன்னு ஒரு விசிட் அடிங்க..

முதலில் மாணிக்க விநாயகம் சார்.. ஷூட்டிங்கல படு பிஸி .. அவர ஒரு வழியா காண்டாக்ட் பண்ணி கேட்டபோது .,” இந்த வருடம் மலேஷியாவுக்கு கலை நிகழ்ச்சிக்காக போகிறேன். குடும்பத்தோட பழனி., திருச்சி., மாயவரம்., தஞ்சாவூர் போய் வந்தேன். ஷூட்டிங்குக்காக எல்லா ஊரும் நாடும் போனாலும் எனக்கு நம்ம நாட்டில் இருக்கிற ஆன்மீகத்தலங்கள் தான் பிடிக்கும். பழனி ஆண்டவர் தரிசனத்துக்கு ஈடா ஏதாவது உண்டா என்ன.. வொகேஷனுக்குன்னு சொன்னா குடும்பத்தோட சிங்கப்பூருக்கு போன மே மாதம் போய் வந்தேன்.

பொதுவா எனக்கு தமிழ்நாடுதான் பிடிக்கும். ஏன்னா நம்ம ஊரில் இல்லாதது உலகத்தில் இல்ல. இங்கேயே கோடை வெய்யிலுக்கு இதமா கோடை வாசஸ்தலங்கள் ஊட்டி., கொடைக்கானல்., ஏற்காடு., குத்தாலம்., ஹொகனேக்கல்னு வெரைட்டியா இருக்கு. நல்ல க்ளைமேட். இயற்கையின் நலம் அனைத்தும் இங்கேயே கிடைக்குது. மூலிகைக் காற்று., மூலிகைத்தண்ணீர் எல்லாம் அதிக செலவில்லாமல் கிடைக்குது. நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி குழந்தைகள் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி போகலாம். இந்த கோடையில் ஃப்ளவர் ஷோ., சீசன் எல்லாம் ஆரம்பிக்குது. நிம்மதியா என்ஜாய் பண்ணனும்னா நம்ம நாடுதான் என் சாய்ஸ்.

அடுத்து பாடகி ரெனினா ரெட்டி.. தேன் குரலில் பேட்டி கொடுத்தாங்க.. இந்த வருடம் சிங்கப்பூர் ., மலேஷியா., தாய்லாண்ட் போயிட்டு வந்தேன். சிங்கப்பூருக்கு 12 முறை போயிருக்கேன். இந்த 20 ஆம் தேதி ஸ்விஸ்ஸுக்கும்., டோராண்டோவுக்கும் ப்ராபபலி ஜூனில் அமெரிக்காவுக்கும் போகிறேன். எல்லாம் வொர்க் பேஸ்டுதான். சிங்கப்பூர் .,மலேஷியா போனா உணவு ப்ரச்சனையில்லை.. எங்காவது சைவ உணவு கிடைக்கும். தாய் ஃபுட்டில் வெஜ் என்பது கஷ்டம்தான்.. ஏன்னா அவங்க உணவுல உப்பு சேர்த்துக்குறது இல்லை.. ஷ்ரிம்ப் சால்ட் என்னும் பொருளை எல்லா உணவுலயும் போடுவாங்க. ஃபிஷ் சாஸ் எல்லாம் சேர்த்து சாப்பிடுவாங்க. சைவம் மட்டும் சாப்பிடுறவங்களுக்கு தாய் புட் கஷ்டம்.

நான் எப்பவும் ம்யூசிக் கன்சர்ட்க்காகவும். வொர்க் பேஸ்டாகவும் செல்வதால் அதிகம் ஷாப்பிங்க் பண்ண முடியாது

ஹாலிடேக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல சிங்கப்பூர் பெஸ்ட் ப்ளேஸ். அங்கே டிஸ்னிலாண்ட் எல்லாம் இருக்கு. அமெரிக்காவுக்கு குடும்பத்தோட போகலாம். ஆனால் அங்கே இருக்குற மாதிரியே சிங்கப்பூரிலும் டிஸ்னிலாண்ட்எல்லாம் இருப்பதால் இங்கேயே சீஃப் அண்ட் பெஸ்ட். பொதுவா ஒரு வாரம் அல்லது 5 நாள் ப்ளான் பண்ணிப் போகலாம். சென்னை மாதிரி ஃப்ளூயன்ஸி இருக்கும் என்பதால் எனக்கு சிங்கப்பூர் பிடிக்கும்.

நடிகை வேகாவுக்கும் ரொம்ப ஸ்வீட் வாய்ஸ்.. வானம் படத்துல நடிச்சவங்க. அவங்களுக்கு சத்தீஸ்கர்தான் பிடிக்குமாம். ஏன்னா து அவங்க தாத்தா, பாட்டி இருக்கிற ஊர். எப்ப டைம் கிடைச்சும் அவங்க விசிட் பண்ண விரும்புற ஊர் சத்தீஸ்கர்தான்.

போன வருடம் இஸ்தான்புல்., டர்க்கி., (TURKY)., எல்லாம் போய் வந்தாங்களாம். இந்த வருடம் டைம் கிடைக்கலை. எப்பவும் ஷூட்டிங்கில் பிஸி. போன வருடம் மைசூர்., பெங்களூர் எல்லாம் போய் வந்தாராம். மிக அழகான ஊர்கள் என்றார். காஷ்மீர் ரொம்பப் பிடிக்கும் என்றார்.. எல்லாரும் காஷ்மீர்., பெங்களூர் போகலாம் . பெஸ்ட் ப்ளேசஸ் என்றார். எப்ப ஷூட்டிங்கில் கொஞ்ச நாள் காப் கிடைச்சாலும் போக விரும்பும் ஊர் தன் சொந்த ஊரான சத்தீஷ்கர்தான் என்றபோது அவர் குரலில் அவ்வளவு மகிழ்ச்சி.

பாடலாசிரியர் விவேகா ஆஸ்கார் ஃபிலிம்ஸ் பாடல் கம்போசிங்குக்காக சென்றுவிட்டு அப்போதுதான் ஏற்காட்டிலிருந்து டைரக்டர் ., மியூசிக் டைரக்டருடன் திரும்பி இருந்தார். எக்ஸ்யூஸ்மி மிஸ்டர் கந்தசாமி ... சாரி விவேகா (!) உங்க வொகேஷன் பயண அனுபவங்கள சொல்லுங்கன்னு சொன்னோம்.

வொகேஷனுக்கு ஃபாமிலியோட ஊட்டிக்குப் போய் வந்தேன். ஆஸ்கார் ஃபிலிம்ஸுக்காக ஏற்காட்டில் ஜிஆர்டியில் தங்கி இருந்தேன் டைரக்டர்., ம்யூசிக் டைரக்டருடன். மிக அருமையான இடம். அப்புறம் பெங்களூருவும் போய் வந்தோம்.

எனக்கு பிடித்த இடம்னா கேரளாதான். அங்கே போட் ஹவுஸ் நல்லா இருக்கும். படகு வீட்டில் தங்கும்போது மீன் பிடித்து சுடச் சுட வறுத்துத் தருவாங்க. எல்லாரும் விசிட் பண்ணுறதுக்கு கேரளா பெட்டர். மூணாறும் அழகிய இடம். நம்ம ஊர்ல சாத்தனூர் டேம் பிடிக்கும். தென்பெண்ணையாற்றங்கரையில் கட்டப்பட்டுள்ளது. இதுக்கும் போய்ப் பாருங்க . இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும்.

யுத்தம் செய்யில் அம்மாவா வந்து மிரட்டிய லெட்சுமி ராமகிருஷ்ணனுக்கு 3 பெண்கள். அவர்களில் இரண்டாவது பெண் டில்லியில் படிக்கிறார். மிக அருமையாக படிப்பதால் மெரி்ட்டில் எஸ் ஆர் சி சி யில் இடம் கிடைத்து்ப் படிக்கிறார். பெண்களைப் பற்றிச் சொல்லும் போது பெருமை வழிகிறது தாயின் குரலில். லெட்சுமிக்கு ஷூட்டிங்கும் டெல்லியில் இருப்பதால் மகளுடன் அனைவரும் டெல்லிக்கு செல்கிறார்கள்.

இவர் கிட்டத்தட்ட 17 வருடங்கள் அப்ராடில்( மஸ்கட்) இருந்ததால் இவருக்கு அப்ராட்தான் பிடித்த இடமாயிருக்கிறது. ஷூட்டிங்க்குக்கு ஹைதராபாத்., பின் டெல்லி., அதன்பின் ராஜஸ்தான் செல்லும் ப்ளான். அங்கே வைல்ட் லைஃப் சாங்க்சுவரி பார்க்கப்போகிறார்கள்.

ஷாப்பிங் பண்ணக்கூடாதுன்னு இருப்பேன். மூணு பெண் குழந்தைகள் இருக்காங்க.. கைவினைப் பொருட்கள் என்றால் பிடிக்கும். ஏதாவது கட்டாயம் வாங்கி விடுவேன் என்கிறார். எல்லாரும் செல்ல இவர் எல்லா வெளிநாடுகளும் பெஸ்ட் என்றும் குறிப்பாக ஸ்விட்ஜர்லாந்து என்றும் சொல்கிறார்.

நீங்களும் இந்த மே மாதத்தில் எங்காவது குடும்பத்தோடு சென்று என்ஜாய் செய்ங்க..

டிஸ்கி:- ஜூலை 2011 சூரியக்கதிரில் இந்தக் கட்டுரை வெளிவந்துள்ளது:))

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

ழ வில் வலைப்பூ வடை...




































சென்னையில் பதிவர்கள் ( வலைப்பூக்களில் எழுதுபவர்கள்) சந்திப்பு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடக்கிறது. தனித்தனியாக பெண் பதிவர்கள் சந்திப்பும் கூட .

டிஸ்கவரி புத்தக நிலையத்தில் ஏதேனும் புத்தக வெளியீடு அல்லது விமர்சனம் நடைபெற்றால் சொற்ப அளவில் பெண்பதிவர்களும் நிறைய ஆண்பதிவர்களும் ( அதுலயும் 33% தான்) கலந்து கொள்வார்கள். கடற்கரை சந்திப்பும் நடைபெறுகிறது.

விஜய் டிவியின் நீயா நானா புகழ் சக்தி செல்வியின் சென்னை விஜயத்தை ( வீட்டுப்புறா என்ற பதிவர்) முன்னிட்டு அடையார் ழ கஃபேயில் ஒரு பதிவர் சந்திப்பை பெண் பதிவர்களின் தானைத்தலைவி பகோடா பேப்பர்கள் வலைப்பூ புகழ் விதூஷ் நடத்தினார். ஆண் பெண் பதிவர்கள் அனைவருக்கும் அழைப்பு. இதில் என்ன ஆச்சு என்றால் பதிவர்கள் பலர் பதிவு அடிக்கடியோ., அவ்வப்போதோ போட்டாலும்., முகநூலர்களாகவும்.,ட்விட்டர்களாகவும்., கூகுள் பஸ்ஸர்களாகவும்., கூகுள் ப்ளஸ்ஸர்களாகவும் மாறி இருந்தாங்க. எங்கே போனாலும் ப்லாகில் எழுதின பதிவை அப்லோட் செய்ய மறக்குறதில்லை. ப்லாகர்ஸ் ஆர் ஆல்வேஸ் ப்லாகர்ஸ் என்ற கூகுள் விதிப்படி இலவச இலக்கியக் குடிசையை ., டென்டை எங்கே போனாலும் தூக்கிக்கிட்டே போவாங்க..!

மீட் பண்ற இடம் முடிவான பின்னாடி அதுக்கு சினிமா பாணியில் ஒரு பாஸ்வேர்ட் ரெடி பண்ணி இருந்தாங்க. ழ கஃபே போனவுடனே வெளியே காவலுக்கு ஒரு ஐயனார் ( சிலை ) இருப்பாரு. அவர்கிட்ட வலைப்பூ வடைன்னு சொன்னா உள்ளேருந்து நாலு பேர் ( தாதா இல்லீங்க) வந்து கூப்பிட்டுகிட்டு போவாங்கன்னு. அவரப்பார்த்ததுமே மிரட்சியா இருந்துச்சா.. வலைப்பூவடைன்னு பயந்துகிட்டே சொன்னது அவருக்கு வாழைப்பூ வடைன்னு கேட்டுச்சுப் போல.. உடனே அவர் அதெல்லாம் உள்ளதான் கிடைக்கும் வெளிய சர்வ் பண்ணுறதில்லை. உள்ளே போகலாம் அப்பிடின்னாரா. உடனே உள்ளே போயிட்டோம்.

அங்க நம்ம சொந்தபந்த ப்லாகர்ஸ் எல்லாம் கும்மி அடிச்சிகிட்டு காஃபி் குடிச்சிகிட்டு இருந்தாங்க. சிலர் கருவேப்பிலை சூப் குடிச்சிகிட்டு இருந்தாங்க.ப்லாகில மட்டும் சத்து சத்துன்னு எழுதுனா பத்தாது. டயட்டிலயும் அப்பிடி இருக்கணும்னு. அடுத்து வாழைப்பூ வடை வந்துச்சு. அப்ப உள்ள வந்தாரு.. கேபிள் சங்கர். சங்கர் அப்பிடிங்கிற பேர்ல நிறைய பதிவர்கள் இருப்பதால இவர் சினிமா பற்றி எழுதுவதால் கேபிள் சங்கர். வந்தவர் தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையம் அப்பிடிங்கிற மாதிரி தனக்கு கிடைச்ச வெஜ்ஜி பர்கரை பிச்சு பிச்சு குருவிங்க இரை ஊட்டுற மாதிரி மத்த ப்லாகர்ஸுக்கு ஊட்டிக்கிட்டு இருந்தாரு. அம்மையப்பன்னா தாயுமானவர்னு அர்த்தம்..:)

அங்க ஏற்கனவே எறும்பு ராஜகோபால்., பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் ஜாக்கி சேகர்., தண்டோரா மணிஜி., அதியமான் த லிபரடேரியன்., அகநாழிகை பொன் வாசுதேவன்., ஈஸ்வரி ரகு., ரம்யாதேவி., விதூஷ்., சக்தி செல்வி., அவங்க கணவர்., ரோமியோ ராஜராஜன்., அசோகபுத்திரன்., கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மன்., கேசவ் பாஷ்யம்., பினாத்தல் சுரேஷ்., வெட்டிபீடியா சுரேஷ்., குட்டி டின்., ஓ ஆர் பி ராஜா., வித்யா., அகிலா., ரமேஷ் சுப்புராஜ்., ராஜகோபால்., கே ஆர் பி செந்தில்., ராஜலெக்ஷ்மி எல்லாரும் இருந்தாங்க..

அப்ப..

மேடி மேடின்னு ஒரு சத்தம் கேட்டுச்சா.. உள்ள கூலிங்க் க்ளாசோட வந்தார் (பபாஷா) பலா பட்டறை சங்கர். இவர் பதிவுல சினிமா., புத்தக விமர்சனம் எழுதி இருக்குறத பார்த்தா சம்பந்தப்பட்ட ஆசாமிங்க நினைச்சுக்குவாங்க . அட நாம இம்புட்டு அழகாவா படம் எடுத்து இருக்கோம் அல்லது புக் எழுதி இருக்கோம்னு. அவ்வளவு அழகா விமர்சனம் செய்திருப்பார்..


என்ன இங்க வெய்யிலா அடிக்குதுன்னு கலாய்ச்ச உடனெ கூலிங்க் க்ளாசைக் கழட்டினார். அப்ப அமெரிக்கப் புகழ் நசரேயனும் வந்தார் அவரும் கூலிங்க் கிளாசோட.!!

பர்கரும் வாழைப்பூவடையும் சர்வ் செய்யப்பட்ட சமயம் ரோமியோ எனக்கு பிடிக்காது வேண்டாம் எனமூக்கின் பக்கமா கையை கொண்டு போக நம்ம கறுப்பு எம்ஜியார் நசரேயன் யப்பா ரோமியோ இந்த பர்கர்ல என்னென்ன சத்து இருக்குன்னு சொல்லட்டுமா. விட்டமின் 40 பர்சண்ட்., ஃபாட் 5 பர்சண்ட்., கார்போஹைட்ரேட் என அடுக்க ஆரம்பிக்க அசந்தர்ப்பமா ரமணாவோட புள்ளி விவரத்துல மாட்டுன கில்லிங்க மாதிரி எல்லாரும் முழிக்க. வேண்டாம்னா விடுங்க பாஸ் என முற்றுப் புள்ளி வைத்தார் ரோமியோ. (ஹிஹி நசர் உங்களைக் கலாய்க்க இத விட்டா வேற வழி..:))

வேல் கண்ணனும்., ராம்ஜி யாஹுவும் உள்ள வந்தாங்க. அப்ப அவங்க பேசிக்கிட்டாங்க நாம கவிதை சங்கமத்தில் சந்திச்சிருக்கோமேன்னு. கொஞ்சம் சலசலப்புக்கு இடையில் வந்தாரு அப்துல்லா தன்னோட பெண் அர்ஷியாவோட. குட்டி ப்லாகரா இவங்க என எல்லாரும் அவரைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள் வித்யாவும்., தன்னோட பையனோட வந்தார்.

முக்கியமான விஷயம் புதிய தலைமுறையின் யுவகிருஷ்ணாவும்., அதிஷா வினோவும் வந்திருந்தாங்க.. என்னமா வில்லங்கமா கமெண்ட் அடிப்பார் இந்த யுவகிருஷ்ணா. அவர் அதிஷா வினோ போல மென்மையா புன்னகை செய்துகிட்டு இருந்தது ஆச்சர்யம்..

அகநாழிகை வாசு வந்தவங்களுக்கெல்லாம் படிப்பீங்கதானே எனக் கேட்டு பத்து அகநாழிகை வெளியீடு கவிதைத் தொகுப்புகள் கொடுத்தார். நிச்சயம் படிப்பேன். ப்லாகிலும் மத்த இணையங்களிலும் விமர்சனம் பண்ணுறேனே என்றபடி வாங்கிக் கொண்டேன்.



பட்டாணி சுண்டல் உலா வரும் நேரம். சிலர் குலாப்ஜாமுன் வித் ஐஸ்கிரீமிலும்., சிலர் பவண்டோவிலும்., சிலர் ரோஸ்மில்கிலும் நீந்திக் கொண்டிருந்தார்கள்.

அங்கே இருந்த லைப்ரரி., டைட்டானிக் ரூம்., டிவிரூம் ஹால் தவிர மத்திய அறையில்தான் ரொம்ப நெருக்கடி.

அப்ப அதியமான் த லிபரடேரியன் மாஜிக் செய்து காட்டினார். விசிட்டிங் கார்டு பந்தா மாறுச்சு., ஒரு ரூபாய் காயின் அவர் கையிலேருந்து மறைஞ்சு இன்னொருத்தர் சட்டை மடிப்பில வந்துச்சு., கட்டை விரலை வேற ரெண்டா நகர்த்திக் காட்டினார்.. எங்கேருந்தாவது முயலை எடுப்பாரோன்னு பார்த்தோம். நல்ல வேளை அப்பிடி ஏதும் செய்யலை..

மதார்., சென் மனைவி மத்த எல்லாரும் கீழே உக்கார்ந்து பேசிகிட்டு இருந்தாங்க. சேர் பத்தாம கூட்டம். அகநாழிகை வாசு புத்தகம் டிஸ்ட்ரிப்யூட் பண்ண களைப்புல ஆலிலைக் கண்ணன் மாதிரி அந்த் டிவி டிவிடி ரூம்ல பீன் சேர்ல சாய்ஞ்சுட்டார்.. எல்லாரையும் ஒரு வழியா க்ரூப் ஃபோட்டோ எடுக்கலாம்னா மொத்த கும்பலுக்கும் இடம் பத்தல.


சரி கடைசியா சமரசத்துக்கு வந்து எல்லாரும் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக்கலாம்னு உக்காந்தா.. பெரியவங்க எல்லாம் சேர்ல உக்காருங்கன்னு யாரோ சொன்னதுதான் தாமதம் உக்கார்ந்திருந்த எல்லாரும் எழுந்து நிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. அப்பாடா நமக்கு சேர் கிடைச்சிதுன்னு நானும் ரம்யாவும் உக்கார்ந்தோம். போட்டோ எடுக்கப்போன கேபிள் ஜி டிஸ்டன்ஸ் பத்தாம சுவத்தைத் தள்ள ஆரம்பிச்சிட்டார்..சுவத்துக்கு அந்தப்பக்கம் போய் எடுங்கன்னு சொன்னாங்க எல்லாரும். அது பாசிபிள் இல்லாததுனால ஒரு வழியா உக்கார்ந்து நின்னு படம் எடுத்துட்டார்..

அப்புறம் இன்னும் 6 மாதத்துல அமீரகத்துலேருந்து குசும்பன் ( ப்லாகர்தாம்பா) வர்றாராம். அப்போ ஒரு மீட் வைக்கலாம்னு முடிவாச்சு. பில் யாரோ பே பண்றாங்க அப்பிடீங்கும்போது போறதுக்கு நமக்கு என்ன கசக்குதா..:)) கலகலன்னு சத்தத்தோட சாயங்கால விருட்சம் மாதிரி இருந்த் ழ கஃபே யை வி்ட்டு எல்லாரும் பை பை சொல்லி வீட்டுக்குப் பறந்தாங்க..

டிஸ்கி .1. :- விதூஷுக்கு நன்றி..



டிஸ்கி 2.:- நாம அரசியல் பத்தி பேசல., சினிமா பத்தி பேசல.., இலக்கியம் பத்தி பேசல., வலைத்தளம் பத்தி பேசல. மொத்தத்துல ஒர் ஃப்ரெண்ட்ஷிப் மீட்தான் இது.. எனவே எந்த மாகசீன்லயும் பதிவு பண்ண முடியலை. நம்ம வலைத்தளம் பின்ன எதுக்கு இருக்கு. நமக்கு நாமே பப்ளிஷர்ஸ்..:)



டிஸ்கி 3. :- மிச்ச படங்களை தெனாலியில் பாருங்க.. http://www.thenaali.com/. மாலையில் பார்க்க ரசிக்க காலரியில் வரும்.:)

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

கலம்பகம் விரும்பி....

கலம்பகம் விரும்பி..
******************************
மரிப்பதற்கான நேரம்
இல்லை இது ..
வாகை மாலையில்
உலா வந்தாய்..
யானையோ..
ஒட்டகமோ..

இணைந்த கரங்களும்
பிணைந்த விழிகளுமாய்
நனைந்து கிடந்தோம்..
உலராமல்..

கோட்டை கொத்தளங்களும்
குலவிய அந்தப்புரங்களும்
கொடிகள் வேரோடி
மண்பாயக் கூடுமோ..

உப்பரிகையில்
தலை உலர்த்தி நான்.
சோகம் பாய்ந்த விழியோடு
உன் மேல் வெறுப்புற்று..

கலம்பகம் விரும்பி
காதலோடு விழுங்கி
கூர்ச்சூலம் பாய
புறமுதுகிடாத வீரனாய்


அருஞ்சொற்பொருள்
எப்படி அறிந்தாயோ..
என் அன்பழிந்த அக்கணம்
நீ மரித்திருந்தாய்..

டிஸ்கி:- இந்தக் கவிதை 13.2. 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது>:))

புதன், 3 ஆகஸ்ட், 2011

இறக்கைப் பயணத்தினூடே...

இறக்கைப்பயணத்தினூடே..
******************************
அல்லாவுதீன் பூதமாய்
அடுத்து அடுத்து
என்கிறது..
என்ன கொடுத்தாலும்..

இரை எடுக்கிறேன் அலகில்..
கூட்டுக் குருவிகளுக்காய்..
எனக்கான எதிர்கால
சேமிப்பாய்..

உருவம் மாறி
உலவிச் செல்கிறேன்
காற்றாயும்.,
நீராயும்.. நெருப்பாயும்..

கண்டுபிடித்த
ஆகாயமாயும் மெய்யாயும்
கலவிக் கிடக்கிறது
உள்ளெடுத்த என்னோடு..

பயணம் செய்கிறேன்
அதனோடு கம்பளத்தில்
கூட கோபுரங்களும்
மாடமாளிகைகளும் அருகில்..

உப்பரிகைகள் மட்டுமல்ல
உப்பளங்களும்
உணர்ந்தே பயணிக்கிறேன்..
உராயும் தென்றலோடு.

டிஸ்கி:- இந்தக் கவிதை 2.6.2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.:))

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

குறுந்தகவல் தூது..

குறுந்தகவல் தூது..
****************************
உன் அரசவைக்கு
மனப்புறாவை தூதாக்கினேன்..
கண்களால் ஏந்திக்கொள்.
குலவு .. அல்லது அழி..
இன்னொரு அந்தப்புரத்துக்கு
தூதாக்காமல்..

டிஸ்கி :- இந்தக் கவிதை 2.6.2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.:)

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

வி ஐ பியுடன் நான். ...

ஒருநாள் முகப்புத்தகத்தில் ஒரு நண்பரை சேர்த்தேன். அது சேரன்பாண்டியன் என்ற டைரக்டர் சேரன். ஒரு முறை என்னோட ப்லாக் ஐடியை அவருக்கு அனுப்பினேன். உடனே அடுத்த நாள் ஆச்சியின் தீபாவளி பலகாரங்கள் அட்டகாசம் என்ற ஒரு பதில் வந்தது. ஒரே சந்தோஷம்தான். அதன் பின் அவர் ஸ்டேடசுக்கு பதில் போடுவதும்., படங்களுக்கு கவிதை எழுதுவதுமே எங்களைப் போன்ற ரசிகர்களின் பொழுதுபோக்கு. பலர் சென்று பார்த்துவிட்டு வந்து அது பற்றி ஃபோட்டோ போடுவார்கள்.

அவரது தவமாய் தவமிருந்து., ஆட்டோகிராஃப்., பொற்காலம்., பிரிவோம் சந்திப்போம்., மற்றும் அவரது எல்லாப் படங்களுக்குமே ரசிகை நான். அப்புறம் ஒரு நாள் அவரை சில முகப்புத்தக நண்பர்களோடு சென்று அபிபுல்லா சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். ஒரு பெரிய செலிபிரட்டிக்கு உரிய பந்தா ஏதுமில்லாமல் தன்னுடைய ஷூட்டிங் வேலைகளுக்கு நடுவில் அவர் எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கினார். உலகறிந்த ஒரு பெரிய நடிகரைப் பார்க்கப்போகிறோம் என்ற பதட்டம் இருந்தது. அவரோடு பழகிய சில மணித்துளிகளில் மிக நெருக்கமான நண்பராகிவிட்டார். புன்னகை தவழும் முகத்தோடு எங்களின் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி காஃபி வாங்கிவரச் செய்து அனைவருக்கும் தன் கையாலேயே கொடுத்தார். நட்புக்கு மரியாதை..!!!

அப்போது எடுத்த ஃபோட்டோதான் இது. அதோடு மட்டும் முடியவில்லை. இன்னும் அவர் யுத்தம் செய் படத்தை எங்களுக்காக ஸ்பான்சர் செய்து எங்களோடு ஒரே தியேட்டரில் பார்த்தார். அதன் மூலம் வந்த வருமானத்தையும் ஹெச் ஐ வியால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகள் உள்ள ஒரு பராமரிப்பு இல்லத்துக்குக் கொடுத்தார். அந்தக் குழந்தைகளையும் மகிழ்விக்க அவர்கள் இல்லம் சென்று அவர்களோடு அளவளாவி பக்கத்தில் அமர்ந்து உணவு உண்டு அந்தக் குழந்தைகளை மகிழ்வித்துத் திரும்பியுள்ளார். அப்போதுதான் உணர்ந்தேன் அந்த நடிகருக்குள் ஒரு உயர்ந்த மனிதன் இருப்பதை. ஒரு நடிகர் நண்பராவதில் உள்ள பெருமையைவிட மனிதநேயமிக்க அந்த மனிதனின் தோழியாக அறியப்படுவதில் பெருமையுறுகிறேன் நான்

டிஸ்கி :- இது 2011 ஜூலை இவள் புதியவளில் வெளிவந்த பகிர்வு. :-))