செவ்வாய், 28 ஜூன், 2011

கவி மதியும் கவிமதியும்...





கவி மதியும் கவிமதியும்.:-
****************************************
இசுலாமிய நண்பர்கள் மற்றும் சகோதரர்களின் எழுத்துக்களில் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்கள் ., வாசிக்கப்படவேண்டியவர்கள் என என்னிடம் ஒரு லிஸ்ட் உண்டு.. மிக அருமையான., நேர்த்தியான பகிர்வுகளுக்குச் சொந்தக்காரர்கள். கவிமதி., ஜமாலன்., ஆபிதீன்., ஆசாத்ஜி. ஆசிஃப் மீரான். இதில் ஸ்டார்ஜனும்., அக்பரும்., இப்படிக்கு நிஜாம்., ஜமால்., நவாஸ்., ஜெய்லானியும் உண்டு.

என் அன்பு சகோதரர் கவிமதி முதலில்.. இவரின் கவிதைத் தொகுதி .,"தண்ணீர்ப் படிகள்" படித்து கண்ணீர் வந்தது உண்டு.. குழந்தைப் பருவத்தில் நம்மை நெருக்கமாக உணரவைக்கும் நட்பு வயது ஏற ஏற பிரித்துச் செல்கிறது. அண்மையில் செல்லவும் பேசவும் கூட சமூகம் கட்டுக்களை முன் வைக்கிறது. இந்தக் கவிதைகளில் சிறுவயதில் நாம் களங்கமில்லாமல் கொண்ட நட்பை பருவ வயதிலும்., திருமண வயதிலும்., அதன் பின்னர் பல வருடங்கள் .. வாழும் நாள் வரையிலும் எடுத்து செல்லும் நேர்த்தி மிக அருமை.. அண்ணன் தம்பி இல்லாத ஒரு ஆணின் உறவு காதலாய்த்தான் இருக்க வேண்டுமா என்ன. இது போல மிக அழகான நட்பாகவும் இருக்கலாமே..

நம் நட்பைச் சரியாகப்
புரிந்துகொண்ட போதே
நினைத்தேன்

நம்மை இங்கே விட்டு
மாடியில்
உன் மனைவியும்
என் கணவனும்
புதுப்பிக்கின்றனர்
தங்கள்
பள்ளி வாழ்க்கையின்
பசுமைகளை.

மற்றும்

தலைமுடி
நகம்
பயணச்சீட்டு
இன்னபிறவென
சேமித்து வைக்கும் பைத்தியக்காரதனம்
எப்போதும் நட்பிற்கு
அவசியமேயில்லை..

இவை தண்ணீர்ப் படிகளில் எனக்குப் பிடித்தவை.. ஜென் தத்துவம்...., பின் நவீனத்துவம் என மிரட்டாமல் மிக எளிமையான மனம் தொடும் கவிதைகள் இவை..

நிலாச்சோறு உண்டிருக்கிறீர்களா.. நாம் சிறு பிள்ளைகளாய் இருந்த போது அத்தையோ அம்மாவோ பிள்ளைகளை வட்டமாக அமரவைத்து குழம்பு ஊற்றிப் பிசைந்து ஒவ்வொருவர் கையிலும் ஒரு கவளம் கொடுப்பார்கள்.. நாம் சிரித்துப் பேசிக் கொண்டே உண்ணுவோம்., ஓடி ஆடி விளையாடுவோம்., தொலைக்காட்சி நம்மை தின்னாத காலம் அது.. அந்த இன்பம் எல்லாம் இன்று தனித்த வீடுகளில் வாழும் குழந்தைகளுக்கு வருட விடுமுறை நாட்களிலாவது கிடைக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.


இந்த ஏக்க உணர்வுகளை பதிவு செய்து இருக்கிறார் தண்ணீர்ப் படிகளில் ..

”எங்கள் தெரு வழியே போறவரே” என்ற தொகுதி முழுக்க உரிய அங்கீகாரமில்லாமல் சிதறிக்கிடக்கும் மனிதம் பற்றிய நெகிழ வைக்கும் கவிதைகள்..

என்
தெரு வழியே
போறவரே..

எப்போதேனும்
பேசியதுண்டா
பெரும்
அங்காடிகளில்
பேரம்?

இல்லையெனில்

ஏன் பேசுகிறீர்கள்
இத்தனை பேரம்
என் கூடைக்கருகில்..?

என இது போல சிந்திக்க., வருந்த வைத்த கவிதைகள் அனேகம்..

அமீரகம் சென்ற போது சந்தித்த முதல் வலைப்பதிவர் மற்றும் குறிப்பிடக்கூடிய எழுத்தாளர் இவர். தை இதழில் இவரது கவிதை .,

பார்வையற்ற புத்தன்..

உன்னினத்திற்கு மட்டுமென்ற
பிரிவினைவாதங்களில்
குளிர்ந்தேயிருக்கின்றன
போதி மரங்கள்
எம்மினக் குருதியில்..

என்ன சொல்ல... இன்னும் குருதிக்காட்டில் முள்வேலியில் வாழ்பவர்கள் பற்றி..சொல்ல ஏதும் வார்த்தை கூட துணை வருவதில்லை..

இவரின் இணைய தளம். www.kavimathy.wordpress.com

இதில் நீ எங்கிருக்கிறாய் என்ற கவிதையில்

அவர்கள் காட்டிய படத்தில்
ஈழத்தை தவிர்த்து
வானத்தைப் பார்க்கிறது
உன் கண்கள்
அப்போதே தெரிந்துக்கொண்டோம்
அது நீ இல்லையென//

இல்லை என்று சொல்லிக்கொண்டே
எங்களை பிளந்து பிளந்து
தேடுகிறான்
முன்பு எங்களோடு இருந்தவன்
இன்று எங்களுக்குள்
இருப்பாயோவென

கொஞ்ச நாளாவது
குளிர்ந்துபோகட்டும்
திடீரென்று தோன்றும் உன்னிடம்
தோற்றுப் போகவேண்டாமா

எமக்குத் தெரியும்
எவனுக்கும் சொல்ல அவசியமில்லை
எங்கு நீ இருக்கிறாய் என்பதை.

இந்தக் கவிதைகளின் அசாத்திய நம்பிக்கை எனக்கு பிடித்திருந்தது.


8 புத்தகங்கள் வெளியிட்டு இருக்கும் இவர் புதுச்சேரி அரசாங்கத்தால் சிறுகதைத் தொகுப்பிற்காக ” புதுச்சேரி மூவொரு அறக்கட்டளை விருது “ பெற்றிருக்கிறார்.

பெரியாரின் கருத்துக்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு ..சாதி ஒழிப்பும் பெண்ணெழுச்சியும்தான் உண்மையான சமுதாய விடுதலை என எண்ணுபவர்.

பெரியார் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டே தன் பெயரை கவிதைகளின் ஒளிநிலவாய் .. ”கவிமதியாய்..” மாற்றிக் கொண்டார். பெண்கள் கற்க வேண்டும்., சுயசார்போடு நிற்கவேண்டும் என்ற பிடிவாதமான கொள்கைகளுக்குச் சொந்தக்காரர் இவர். மதம் ., இனம் சார்ந்து பெண்ணை வீட்டிலேயே அடக்கி வைத்தல் கூடாது.. பெண் எழுச்சி வேண்டும். பெண்கள் உயர்வடைய வேண்டும்.ஆணும் பெண்ணும் சமமாய் பார்க்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தை பலவித எதிர்ப்புகளுக்கு மத்தியில் பதிவு செய்து வருபவர் இவர்.


கீற்று., வானவில்., தை., ஆயுத எழுத்து., குளம்., தமிழ் மணம்., மாற்று., இலக்கியம் - புதுச்சேரி. இவற்றில் இவரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.

”மழை மழையாய்., மதகுப் பலகைகள்., என் தெரு வழியே போறவரே.,தண்ணீர்ப் படிகள்., மதம் ஒரு கற்பிதம்., நிறங்களற்ற தனிமை ” இவரின் நூல்களில் சில.

"வெட்டியெறிய ஆடுகளல்ல..
நாம் வெள்ளாமை பெருக்கும் காடுகள் .."

என்பது இவருக்குப் பிடித்த மேற்கோள்..

ஃபிப்ரவரி 2010 இல் இவரின் மதகுப் பலகைகள் நூலுக்கு திருமதி கி. ராஜநாராயணன் அவர்களின் துணைவியாரிடம் இருந்து திருமதி அக்கலீமா கவிமதி விருதை வாங்கினார். இன்னும் பல புத்தகங்கள் வெளியிட்டு பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் கவிமதி..!

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 29.3.2011 மார்ச் கீற்றுவில் வெளியிடப்பட்டுள்ளது. நன்றி கீற்று..:))

திங்கள், 27 ஜூன், 2011

கல்கியில் மீன்கள்..

ஒன்றுமறியாத


பூனைக்குட்டியாய்


அமர்ந்திருந்தாய்..


உன் கண்களிலிருந்து


மீன்கள் துள்ளியது


உணராமல்.

டிஸ்கி:- இந்தக் கவிதை. 26. 6. 2011 கல்கியில் வெளிவந்துள்ள்து. நன்றி கல்கி.:)




வெள்ளி, 24 ஜூன், 2011

விகடனில் கவிதை... மிச்சம்.

எல்லாருக்குமான வீடு


துண்டாடப்பட்ட பின்

எஞ்சின சாவிகள்..


டிஸ்கி:- இந்தக் கவிதை 22.6.2011 ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது. நன்றி விகடன்.:)

வியாழன், 23 ஜூன், 2011

குங்குமத்தில் கவிதை..கண்ணீர்..

கண்ணீர்..:-
****************

தாளத்தோடு

சொட்டிக் கொண்டிருக்கிறது

பிடிவாதம் பிடித்தழும்

குழந்தையின் கண்ணீராய்

மழை.

டிஸ்கி:- இந்தக் கவிதை 20.6.2011 குங்குமத்தில் வெளிவந்துள்ளது. நன்றி குங்குமம்.:))

புதன், 22 ஜூன், 2011

மனிதராய்த் தொடங்கினோம் வாழ்வை..

மனிதராய்த் தொடங்கினோம் வாழ்வை..:-
=====================================
எல்லோரும் வைத்திருந்தோம்.,
வசனங்களும்., வாசகங்களும்.,
வேதமொழிகளும் நிரம்பிய
தடித்தடியான புத்தகங்களை..

பின்பற்றினோமோ இல்லையோ..
அவரவர் தோதுக்கு
சொல்லிக் கொண்டோம்.,
இது சிறப்பு அது சிறப்பென்று..

வரிந்து கட்டி எழுதி.,
சேற்றை வாரி வீசி.,
நினைத்ததெல்லாம் இடித்து
சண்டையிட்டுக் கொண்டோம்.

வார்த்தைச் சாணைகளில்
வெட்டுண்டு வீழ்ந்தன
அணைத்து வளர்ந்திருந்த
அன்பின் தளைகள்...

ரத்தம் தோய
பரிதாபமாய்
சிதறிக்கிடந்தன..
முந்தய முகங்கள்..

எஞ்சிய முகங்களில்
கரி அப்பி இருந்தபோ்து
கெக்கிலி கொட்டின..
கையூட்டுக்கள் பல..

தூண்டியவர்கள்
கணப்புக்காய்
இன்னும் விசிறினார்கள்..
எரிச்சல் பத்தாமல்..

பற்றியெரிந்த பொழுதில்
குருத்துக்களாய்
கரம் பற்றினார்கள்..
எங்கள் பிள்ளைகள்..

ஒரு விசித்திர நொடியில்
குளிர்ந்தது அனைத்தும்...
சீர் படுத்திக் கொண்டோம்..
சிதைந்த ஓவியங்களாய்..

பைசாசங்கள் ஒழிந்தன..
விட்டெறிந்த புத்தகங்களோடு..
புதுப்பித்துக் கொண்டோம்
புன்னகையயும் ., சுவாசத்தையும்..

மாசுகள் தொலைந்து
மழலைகளானோம்..
மறுபடி கைகோர்த்து
மனிதராய்த் தொடங்கினோம் வாழ்வை..

டிஸ்கி :- இந்தக் கவிதை ஒரு விசித்திர நொடியில் குளிர்ந்தது அனைத்தும் என்ற தலைப்பில் 10.2.2011 கீற்றுவில் வெளிவந்துள்ளது. நன்றி கீற்று.:))

செவ்வாய், 21 ஜூன், 2011

கர்ப்பத்துக்கு முன்னும் செக்கப்...டாக்டர் மாதினி பேட்டி..



தற்காலத்தில் கருத்தரிப்புக்கு முன்னும் டாக்டர்களை கன்சல்ட் செய்யும் ஆலோசனை முறை பின்பற்றப்படவேண்டியுள்ளது.. பொதுவாக கர்ப்பகால பாதுகாப்பு மட்டும்தான் கவனத்தில் கொள்ளப்படும்.. ஆனால் கர்ப்பம் தரிக்கும் முன் மேற்கொள்ள வேண்டிய செக்கப்புகள் பற்றி அரசு மருத்துவமனையில் பணி செய்து ஓய்வுபெற்ற டாக்டர் மாதினி .. கைனகாலஜிஸ்ட்..( தற்போதும் மந்தைவெளியில் ப்ராக்டீஸ் செய்து வருகிறார்) அவர்களிடம் நம் லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்காக கர்ப்பத்துக்கு முன்னும் ., கர்ப்பகாலத்தின் போதும் மேற்கொள்ள வேண்டிய செக்கப்புக்கள்., பாதுகாப்பு முறைகள்., மருத்துவம்., உணவு., பயிற்சிகள் பற்றி விழிப்புணர்வுத்தகவல்கள் தந்துதவுமாறு கேட்டேன்.. அவர் கூறிய தகவல்களைத் தொகுத்துள்ளேன்..

பொதுவா கர்ப்பம் தரித்தபின்தான் பெண்கள் டாக்டரிம் செக்கப்புக்கு வருவார்கள்.. கர்ப்பம் ஆகுமுன்னே வந்து மருத்துவரை அணுகி தங்களுக்கு ஏதும் ஹெல்த் ப்ராப்ளம் இல்லை என செக்கப் செய்து கொள்வது தாய்க்கும் சேய்க்கும் நலம் பயக்கும். இதயத்தில் மர்மர் சத்தம்., தைராய்ட்., இரத்த அழுத்தம். , ஹீமோக்ளோபின்., ஃபைப்ராயிட் கட்டிகள் இருக்கா என எல்லாம் செக் செய்து கொள்ள வேண்டும்.


ஹெல்த்தில் ஏதும் ப்ராப்ளம் இல்லையா., சர்க்கரை இருக்கா., எல்லா இம்யூனிஷேசனும் ( ஜெர்மன் மீசில்ஸ்) போடப்பட்டிருக்கா என செக்கப் செய்து கொள்வது ப்ரி கன்சப்ஷன் செக்கப் எனப்படுகிறது PRE CONCEPTION CHECK UP ஐ PRE CONCEPTION CLINIC சென்று செய்து கொள்வது அவசியம். அதன் பின் கருத்தரிப்பது நல்லது.

கர்ப்பம் தரிப்பது தாமதப்பட்டால் ஃபோலிக் ஆசிட் குறைபாடு இருந்தால் ஃபோலிக் ஆசிட் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அது நரம்பு மண்டல வளர்ச்சிக்கு முக்கியமானது. கருத்தரிக்கும் முன்பே போடலாம்.

முதல் மூன்று மாதம்., இரண்டாவது மூன்று மாதம்., மூன்றாவது மூன்று மாதம் என மூன்றாக ( TRIMESTER) கர்ப்பகாலம் பிரிக்கப்படுகிறது.

ஆரம்பகால மூன்று மாதங்களில் நாஸியா., வாமிட்., டயர்டாக இருப்பது., குமட்டல் இருப்பது என சில அறிகுறிகள் இருக்கும். பொதுவா வெயிட் ஏறாது.. அல்லது கொஞ்சம் குறையவும் செய்யலாம். இப்படி இருந்தா யூரின் டெஸ்ட்., மற்றும் ப்ளட் செஸ்ட் செய்யணும் . கொஞ்ச நாள் கழித்து இரட்டைக் குழந்தையா., குழந்தையின் ஹார்ட் பீட் சரியா இருக்கா., கர்ப்பம் உள்ளே இருக்கா., அல்லது வெளியெ இருக்கா ., குழந்தையின் உறுப்புக்களில் பிரச்சனை இருக்கா., தாய்க்கு ஃபைப்ராயிட் ., ஓவரி கட்டிகள் இருக்கான்னு ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.

ஸ்கான் கட்டாயம் செய்ய வேண்டுமென்பதில்லை.. ஆனால் செய்து கொண்டால் நல்லது. சிலர் இதெல்லாம் தெரிந்து கொள்ள செய்வார்கள்.

முதல் மூன்று மாதத்திற்கு மாத்திரை ஏதும் கொடுப்பதில்லை.எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். பொதுவா வெயிட் ஏறாது. சிலருக்கு குறைய வேறு செய்யும்.

கர்ப்பகாலங்களில் எந்த உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் மருந்துகளைத்தான் சாப்பிட வேண்டும். இன்னொரு ஸ்கான் 11 முதல் 13 வாரத்தில் செய்ய வேண்டும். டவுன் சிண்ட்ரோம் பேபியா., உறுப்புகள் சரியான வளர்ச்சி உள்ளதா ., என பார்க்க முடியும். அதற்கு அறிகுறிகள் இருந்தால் ப்ளட் டெஸ்ட் செய்து ஸ்கான் செய்வதால் தெரியவரும்.

டாக்டர் கவுன்சிலிங்குக்குப் பிறகு முதல் மூன்று மாதங்களில் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பிக்கும் போது ப்ளட் டெஸ்ட்., ஹீமோக்ளோபின்.( HAEMOGLOBIN) , ரத்த குரூப்.,(BLOOD GROUP) ஹெச் ஐ வி ( HIV) இருக்கா., ஹெப்பாட்டைட்டிஸ் பி ( HEPAPATITIES B) , இவை எல்லாம் செக் செய்து கொள்ள வேண்டும். இது கம்பல்சரி டெஸ்ட்.

இரண்டாவது 3 மாதத்தில் இரும்புச்சத்து மாத்திரை., கால்சியம் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

20 வாரத்தில் சிசுவுக்கு ஏதாவது மேஜரா அனானிமஸ் இருக்கா., உறுப்பு வளர்ச்சி இருக்கா என்று ஸ்கான் மூலம் அறியலாம். டெட்டனஸ்., டிப்தீரியாவுக்கு இன்ஜெக்‌ஷன் 4 முதல் 6 வாரத்தில் ஒரு டோஸ் கொடுக்க வேண்டும் . இரண்டாவது டோஸ் ப்ரஃபரெபிளா., 30 அல்லது 3 அல்லது 36 வாரத்தில் கொடுக்க வேண்டும்.

உணவு இரண்டாவது 3 மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சாப்பிடலாம். நிறைய ப்ரோட்டீன் உணவு ( பருப்பில் இருக்கிறது ) அவசியம். கார்போஹைட்ரேட்., ஃபாட்.(FAT) , தண்ணீர் ஆகாரம்., நிறைய எடுத்துக் கொள்ளலாம். இயற்கையாய் தயாரிக்கும் சத்துமாவுக் கஞ்சி எடு்த்துக் கொள்ளலாம். ப்ரோட்டீன் நிறைந்த ஆகாரம் முக்கியம். காய்கறி., கீரை., பயிறு வகைகள்., பழம் அதிகம் சேர்க்கலாம்.

அவ்வப்போது டையபடீஸுக்கும் ஹீமோக்ளோபினுக்கும் செக்கப் செய்து கொள்வது அவசியம்.

மூன்றாவது 3 மாதத்தில் வயிறு பெரிதாகும் அடிக்கடி டாக்டரிடம் காண்பிக்கலாம். தலை கீழே இறங்கி இருக்கிறதா., சரியான வளர்ச்சி இருக்கா என்று. உப்பு ஹீமோக்ளோபின்., சர்க்கரை., இரத்த அழுத்தம் வெயிட் ஆகியவை அடிக்கடி செக் செய்து கொள்ளலாம். கர்ப்ப ஸ்த்ரி யூஷுவலா 10 லிருந்து 13 கிலோ வெயிட் ஏறவேண்டும். முதலில் வெயிட் ஏறாது மூன்றாம் மாதத்தில் இருந்து சுமாரா இரண்டு கிலோ வெயிட் ஏறணும்.

வாக்கிங் ., மூச்சுப் பயிற்சி., ப்ரணயாமம் செய்யலாம்., சத்து மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். வலி எடுத்தாலோ., உதிரப்போக்கோ., பனிக்குடம் உடைந்து தண்ணீர் வெளியேறினாலோ குழந்தை அசைவு இல்லாமல் இருந்தாலோ ஹாஸ்பிட்டலுக்கு போக வேண்டும். பொதுவா லேபர் பெயின் இருந்தாலும் போகணும். மூச்சுப் பயிற்சி மூலம் வலியை சிறிது சகித்துக் கொள்ள முடியும்.

குழந்தை பிறக்கும் முன்பு சிரமமாக இருந்தால் எபிசிடியாட்டமி ( EPICITIYATAMI) .. சிறிது வெட்டி விடுதல் செய்யப்படும். நஞ்சு கட் செய்து விட்டு உதிரப் போக்கு கட்டுப்படுத்தப்படும்.

குழந்தை பிறந்தவுடன் பால் கொடுத்தல் முக்கியம். அதுக்கு கொலாஸ்டம்னு பேர். பால் நன்றாக வரும். சீம்பால் என்று தமிழில் சொல்வார்கள் . அதுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். குழந்தையை துடைத்தவுடன் அம்மாவிடம் கொடுக்கலாம்.

இதை எல்லாம் பேறுகாலத்தில் பின்பற்றி சுகமான பிரசவமாய் அமைந்து தாயும் சேயும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்..


டிஸ்கி:- டாக்டர் மாதினியிடம் நான் எடுத்த இந்த மருத்துவ விழிப்புணர்வுப்பதிவு மே மாத லேடிஸ் ஸ்பெஷலில் வெளிவந்துள்ளது.

திங்கள், 20 ஜூன், 2011

தாயுமானவர் ஓம் ப்ரகாஷ்..

ஒருநாள் ஒரு நண்பர் மற்றும் தங்கை வீட்டில் விருந்து. விருந்தென்றால் செம விருந்து.. விருந்தளிக்கவே பிறந்தவர்கள் நண்பரும் தங்கையும். கனிவான புன்னகையோடு அவர்களிடம் உரையாடவே இன்பமாய் இருக்கும். அப்போது அவர்கள் வீட்டில் தங்கைக்கு உதவியாக ஒரு ஆண் வேலை செய்து கொண்டிருந்தார். எல்லார் வீட்டிலும் இருப்பது போன்ற வேலைக்காரர் தோற்றமும் இல்லை. நன்கு நீட்டாக உடை உடுத்தி 5 ஸ்டார் ஹோட்டல் ஊழியர் போல பளிச்சென்று இருந்தார். நண்பர் வீட்டின் விஷேஷம் என்னவென்றால் கணவன் மனைவி மட்டுமல்ல . அவர்களுக்கு பணிபுரிபவரும் தங்களில் ஒருவராக நடத்தப்படுவதே என்னைக் கவர்ந்தது.

விருந்தில் அத்தனை பேருக்கும் முகம் சுளிக்காமல் வந்தவுடன். ஒரு அழகான வேலைப்பாடமைந்த ட்ரேயில் தண்ணீர் மற்றும் ஜூஸ். அவர் அதைக் கொண்டு வந்து பவ்வியமாக நீட்டும் அழகே அழகு. வந்தவருக்கெல்லாம் சமையல் மட்டுமல்ல . அந்த வீட்டின் ஒத்திசைவு என்போமே அதுவும் பிடித்திருந்தது. ஒரு ஹார்மனி இருந்தது. வீடு அழகு அற்புதம் சுத்தம்.

மிகுந்த அக்கறையோடு சமைக்கப்பட்ட உணவுகள். நல்ல நியூட்ரிஷியஸ் உணவு. இதை திட்டமிட்டவர் தங்கை அதை செயல் படுத்தியவர் ப்ரகாஷ். அழைக்கப்பட்ட விருந்தினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க சிலர் நேரமாகிவிட்டது என கிளம்பினார்கள். அப்போது நண்பர் சொன்னார்,” எல்லாரும் நல்லா சாப்பிட்டுட்டு போங்க. உங்களுக்காக ப்ரகாஷ் மத்யானத்திலேருந்து அக்கறையோடு பார்த்துப் பார்த்து சமைத்து வைத்திருக்கிறார் ..”

எனக்கு மிகப் பிடித்த ரஸ்மலாய் ., வெள்ளரிக்காய்., வெங்காயம்., தக்காளி., காரட் ஸ்லைசஸ்., வெஜிடபிள் சாலட்., மிக மெல்லியதான சாஃப்டான சுக்கா சப்பாத்தி., தக்காளி பிரியாணி., வெஜ் பச்சடி., தயிர் ராகி சேமியா., வெஜிடபிள் குருமா., இட்லி ., சாம்பார். என எல்லாம் ஸ்டார் ஹோட்டல் தரம்.

நண்பரும் அவர் மனைவியும் மத்திய அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்கள். பெரும் பொறுப்பான பதவியை இந்தச் சின்ன வயதில் இருவருமே அடைந்தவர்கள். சேவை மனப்பான்மை உள்ளவர்கள்.

நன்கு பேசிக்கொண்டிருந்து விட்டு நேரமாகி விட்டதென அனைவரும் கிளம்பினோம். அப்போது ப்ரகாஷ் ஒரு ட்ரேயில் டம்ளர்கள் வைத்து எல்லாரும் அருந்த நீர் ஊற்றிக் கொண்டிருந்தார். ஒரு நிமிடம் கூட சும்மா இராமல் அவ்வப்போது சூடாக சப்பாத்திகளையும் இட்லிகளையும் பரிமாறின விதம் ஒரு தாயின் கவனிப்பை நினைவூட்டியது. தங்கையும் அவ்வப்போது உதவிக் கொண்டிருந்தார்.

பெண்களும்., அம்மாக்களும்., தங்கைகளும்., அக்காக்களுமே வேலை செய்து பரிமாறி பழக்கப்பட்ட கண்களுக்கு ஒரு ஆண் அன்போடு முகம் கோணாமல் செய்தது அழகாய்ப் பட்டது. எல்லார் வீட்டிலும்தான் வேலை செய்பவர்கள் ., சமையல் செய்பவர்கள் இருக்கிறார்கள் . ஆனால் உணவில் அன்பெனும் ருசியை தூவுவது சிலரே.

இன்னொரு முறை செல்ல நேர்ந்தது. நானும் தங்கையும் ஒரு விழாவை அட்டெண்ட் செய்து விட்டு மிகக் களைப்பாக தங்கையின் வண்டியில் போய் இறங்கினோம். அப்போது தோட்டத்துச் செடிகளுக்கு ஹோசில் நீரூற்றிக் கொண்டிருந்தார் ப்ரகாஷ். எங்களைக் கண்டவுடன். தோட்ட வழியாக உள்ளே வந்து ஒரு அழகான ட்ரேயில் இரண்டு கண்ணாடி டம்ளர்களில் நீர் கொடுத்தார். களைத்து சோஃபாவில் அமர்ந்திருந்தோம். டீ மட்டும் போதும் என்றோம். இல்லை ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் என்று சொல்லி. இன்னொரு சித்திரமாய் செதுக்கிய மர ட்ரேயில் நான்கு கண்ணாடிக் கோப்பைகளில் (மைக்ரோவேவ் அவனில் வைத்து ) சுடச் சுட மைசூர்பாவும் மிக்சரும் ஸ்பூன் போட்டு கொண்டு வந்து கொடுத்தார். அடுத்து உயர்தரமான யேராவோ., லா ஒபல்லாவோ தெரியவில்லை தங்க விளிம்புகளுடன் நெளிநெளியாய் வனைந்த கோப்பைகளில் சுடச் சுட ஹெர்பல் டீ வந்தது. அருந்தியதும் ஒரு புத்துணர்ச்சி வந்தது இருவருக்கும்.

வேலை செய்வது பெரிதில்லை.. ஈடுபாட்டோடு செய்பவர்களை காண்பதுதான் அரிதாய் இருக்கிறது இந்த நாளில்.. எங்கிருந்தோ வந்தான் கண்ணன் என்ற பாடலும் ஞாபகம் வந்தது.

வீடு வந்தவுடன் நண்பரிடம் போன் செய்து கேட்டேன். அப்போது அவர் ப்ரகாஷ் பற்றி சொன்னார்.. நண்பரின் தந்தையும் ப்ரகாஷின் தந்தையும் இந்தியன் ஆர்மியில் பணியாற்றியவர்கள். பதவி ஏற்றத்தாழ்வு இருந்தாலும் நண்பரின் தந்தை ப்ரகாஷின் தந்தையுடன் சமமான நட்போடே பழகுவார்.

அதே போல எட்டாம் வகுப்புவரையே படிக்க முடிந்த ப்ரகாஷும் ஆர்மியில் சேர்ந்து பணியாற்றி ஓய்வில் வந்தவர். பின் என்ன செய்வது என்ற கேள்வி எழும்போது நண்பர் அவரை பத்தாம் வகுப்பு ( எஸ் எஸ் எல் சி ) படிக்க வைத்து தன் அலுவலகத்தில் வீட்டு உதவிக்கு கொடுக்கப்பட்ட பங்களா ப்யூன் என்ற போஸ்டை வாங்கித்தந்திருக்கிறார். அதிலிருந்து அவர் நண்பரின் வீட்டுப் பொறுப்பாளர் ஆகிவிட்டார். தோட்டம்., சமையல்., சுகாதாரம்.,மளிகை எல்லாம் இவர் பொறுப்பில்தான். இவர் கண்ணாடி போல் வீட்டை வைத்திருக்கும் நேர்த்தி பெண்களுக்கே கைவராதது.

நண்பர் ப்ரகாஷின் தாய்க்கும் உதவிகள் செய்து வருகிறார். ப்ரகாஷுக்கு ஆர்மியில் இருக்கும்போதே திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்கள் தலை நகரத்தில் கேந்திரிய வித்யாலயாவில் படித்து வருகிறார்கள். அரசாங்கம் இவர்களுக்கென்றும் வீடு கொடுத்திருக்கிறார்கள்.. அவர் இங்கே தனது பணிகளை முடித்துவிட்டு தன் இல்லத்துக்குச் சென்றுவிடுவார்.

எல்லார் வீட்டிலும் நடத்தப்படுவது போல் இவர் வேலைக்காரராக நடத்தப்படுவது இல்லை இங்கே.. அவரும் வேலைக்காராக நடந்து கொள்ளாமல் உரிமையோடும்., நட்போடும்., அன்போடும் தன் பணிகளைச் செவ்வனே செய்து வருகிறார். நல்ல உறவினர்கள் கிடைப்பதைவிட அரிதாய் இருக்கிறது பொறுப்பான அன்பான நட்பான புரிந்துகொண்டு செயலாற்றும் தன்மையுள்ள வேலைக்காரர் கிடைப்பது..

நண்பர்., நாங்கள் விருந்து முடிந்து கிளம்பியதும் சொன்னதுதான் இந்தப் பதிவுக்குக் காரணம். ”நாங்க ஆஃபீஸ் போனப்புறம் எல்லாம் இவர் ராஜ்ஜியம்தான். எங்களை நல்லா பார்த்துக்குவார் இவர். எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆஃபீசிலிருந்து வந்ததும் எங்களுடைய தேவைகளைக் கவனித்து நாங்க சாப்பிட்டவுனே தூங்க வைச்சிட்டுப் போவார். ”என்று வேடிக்கையாய் குறிப்பிட்டார். இதைச் சொல்லும் போது ஒரு தாய் தன் குழந்தைகளைத் தாலாட்டித் தூங்க வைத்த அழகு இருந்தது வார்த்தைகளில். குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா என தோன்றியது..

சில உறவுகளும் நட்புக்களும் வேலைக்காரர் என்ற பதம் மீறியும் அழகானவை. நாம் எப்படி நடத்துகிறோமோ அதாகவே அவர்களும் மாறிவிடுகிறார்கள் என்பதை நானும் பலசமயம் உணர்ந்திருக்கிறேன்.

கடவுள் எல்லா இடங்களிலும் நம்மோடு இருக்க முடியாது என்பதற்காக தாயைப் படைத்திருக்கிறார்.. தாய் எல்லா வயதிலும் நமக்கு சேவை செய்ய முடியாது என்பதால் தாயைப் போல அன்பு செலுத்தும் பணியாளர்களைக் கொடுத்திருக்கிறார். மிகப்பெரிய அளவில் சாதித்துக் கொண்டிருக்கும் நண்பர் குடும்பத்துக்கு ப்ரகாஷ் தாயுமானவராய் இருக்கிறார்.. வாழ்க அவர்கள் நட்பும்., புரிந்துணர்வும். வையம் உள்ள மட்டும்.! வாழ்க வளமுடன். !

டிஸ்கி:- இந்தக் கட்டுரை ஜூன் 2011 இவள் புதியவளில் அழகு மிளிரும் வீடு என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. நன்றி இவள் புதியவள்.:))

சனி, 18 ஜூன், 2011

வோட்டுப் போடும் வேள்வி..

வோட்டுப்போடும் வேள்வி:-
***************************************

போட்ட ஓட்டுக்கு
அவிர்ப்பாகம் வாங்கிய
கட்சிதேவதைகள்
அட்வான்ஸ்டு வரமாய்..
பிரியாணிப் பொட்டலங்களும்
பணமும் குடமும் ஈந்து..

டிஸ்கி:- இந்தக் கவிதை 30.1. 2011 பழைய திண்ணையில் வெளிவந்துள்ளது. நன்றி திண்ணை:))

..

மக்கள்...

மக்கள்..
***************
எத்தனை முறை ஏமாந்தாலும்
விலகி விடப் போவதில்லை
மத குருமார்களிடமிருந்தும்
நிதிச் சீட்டுக்களிலிருந்தும்.

டிஸ்கி :- இந்தக் கவிதை 30.1.2011 பழைய திண்ணையில் வெளிவந்துள்ளது. நன்றி திண்ணை.:))
.

வெள்ளி, 17 ஜூன், 2011

சத்தம்...

சத்தம்..:-
*********************

ஒரு பழைய மிதிவண்டி
அல்லது ஒரு தையல் எந்திரம்
உண்டுபண்ணும் சத்தம்..

ஞாபகப் படுத்துகிறது
பால்யத்தில் பள்ளியில்
கொண்டு விட்ட அப்பாவையும்

கைகளால் சுற்றி
தலையணைக்கு உறை
தைக்கும் அம்மாவையும்..

டிஸ்கி:- இந்தக்கவிதை 30 . 1. 2011 பழைய திண்ணையில் வெளிவந்துள்ளது. நன்றி திண்ணை.:)))

வியாழன், 16 ஜூன், 2011

சாயம்...

சாயம்..
***************
கட்சியின் பெயராலோ
சாதி., இனம்., மொழி
மதத்தின் பெயராலோ

கறுப்போ., சிவப்போ.,
காவியோ., பச்சையோ
பூசப்படும் உங்கள் மீது..

குன்றிப்போய் விடாமல்
ஹோலியாய்க் கொண்டாடுங்கள்..
வர்ணங்கள் நிறைந்தது வாழ்வு..

பிறப்பு., வளர்ப்பு., வாழ்வு., வளர்ச்சி.,
விருப்பு சார்ந்துதான்
சாயங்கள் நம்மேல்
சவாரி செய்ய அனுமதிக்கிறோம்..

நம் சொந்த நிறமென்னும்
இயற்கைச் சாயம் தவிர
அனைத்தும் அழிந்துவிடும்..

சந்தர்ப்பங்கள் பொறுத்தோ.,
தேய்மானம் பொறுத்தோ.,
யாருக்கும் தெளிவு படுத்தும்
அவசியம் இல்லாமல்..

டிஸ்கி:- இந்தக் கவிதை 30. 1. 2011 பழைய திண்ணையில் வெளிவந்துள்ளது. நன்றி திண்ணை.:))

புதன், 15 ஜூன், 2011

மாயை....

மாயை.
**************

எப்போதிலிருந்து என
தெரியவில்லை..
கற்பெனப்படுவது
பெண் உடல் மட்டும்
சம்பந்தப்பட்டதாக
நிறுவப்பட்டது என்பது

பெண் என்பது
அந்தரங்கம் மறைக்கும்
உள்ளாடையாகவும்

ஆண் என்பது
கௌரவத்துக்குரிய
பொன்னாடையாகவும்..

கால்மிதியாகவும்
கொடிக் கம்பமாகவும்
கற்பிதப் பெருமையாய்..

டிஸ்கி:- இந்தக் கவிதை 30.1.2011 பழைய திண்ணையில் வெளிவந்துள்ளது. நன்றி திண்ணை.:)

செவ்வாய், 14 ஜூன், 2011

ஆத்திகம்..? நாத்திகம்..?




ஆத்திகம்.. ? நாத்திகம்..?
****************************************
கோபுரங்களைப் பார்த்தால் மட்டும்
கன்னத்தில் போட்டுக் கொள்வது.

மார்கழி செங்காவி., சாணி., பூசணிப்பூவுக்கு
மாற்றாய் டைல்ஸில் ஸ்டிக்கர் கோலம்

பவர் கட்டாகி ., இன்வர்டரும் ., ஜெனரேட்டரும்
தீர்ந்தபோது சாமிவிளக்கோ., மெழுகுவர்த்தியோ..

டீப்பாய் நைவேத்தியத்தை நகராமல் உண்டு
கணினிக்குள் நானே எலியில் சுற்றும் பிள்ளையாராய்..


டிஸ்கி:- இந்தக் கவிதை 30.1.2011 பழைய திண்ணையில் வெளிவந்துள்ளது. நன்றி திண்ணை.:))


திங்கள், 13 ஜூன், 2011

விகடனில் நாணம் கவிதை..



வீடுபார்க்க வந்தார்கள்
பக்கத்து வீட்டுக்காரர்கள்.
பார்த்த பார்வையில்
பெண் பார்க்க வந்ததாய்
நாணியது வீடு.

டிஸ்கி:- இந்தக் கவிதை 8.6. 2011 ஆனந்தவிகடனில் வெளிவந்துள்ளது. நன்றி விகடன் :)

சனி, 11 ஜூன், 2011

குமுதத்தில் ஃபுல்...



கோப்பைகளை

தினமும் நிரப்புகின்றன..

மனைவியின் எதிர்பார்ப்புகளும்

மேலதிகாரியின் அதிருப்தியும்...


டிஸ்கி:- இந்தக் கவிதை 1.6.2011 குமுதத்தில் வெளிவந்துள்ளது . நன்றி குமுதம்.:)

வியாழன், 9 ஜூன், 2011

கல்கியில் என் மெழுகின் முணுமுணுப்பு...

மெழுகின் முணுமுணுப்பு..:-
**************************************
சட்டென்று மின்சாரம்
செல்லும் வேளைகளில்
ஒளியூட்டப்படுகிறது
ஒற்றை மெழுகுவர்த்தி..

அதன் நடனத்தைச் சுற்றி
அமரும் அனைவரும்
நகரும் போர்ட்ரெய்ட்டுக்களாய்..

தங்க நிற இசையில்
பொங்கி வழிகின்றன
பழங்கதைகளும் சிரிப்பும்..

இருளில் உயிர்பெறுகிறது
நிழல்களைப் போல
ஒளிந்திருந்த ஆசைகளும்

ஓங்கிக் குரலெடுத்து
அம்மா சொல்லும் ஸ்லோகங்களும்
பாடல்களும் உற்ற துணையாய் வருடி

கை விரல்களில் கொக்கும்
கிளியும் நாயும் சுவற்றில்
நிழல் பென்சில் ஓவியமாய்

வரைந்து பயிலும் போது
உயிர்பெற்ற மின்விசிறி
ஓங்காரமாய் வீசி
அணைக்கிறது மெழுகை..

ஒளியத்தவித்து
அங்குமிங்கும் ஓடி
இருளில் விழுகிறது மெழுகு
மினுக்கென்ற முணுமுணுப்போடு..

மீண்டும் பிரிந்து
தத்தமது வேலையில்
அனைவரும் புகுந்துகொள்ள

பகிர்ந்த சந்தோஷம் எல்லாம்
துரத்தப்பட்ட கனவாய்
அதன் புகையைப் போல
மிதந்து வெளியேறுகிறது..

டிஸ்கி :- இந்தக் கவிதை 5.6.2011 கல்கியில் வெளிவந்துள்ளது. நன்றி கல்கி.:)

புதன், 8 ஜூன், 2011

ஜூன் லேடீஸ் ஸ்பெஷலில் ஸ்பெஷல் லேடி(டீஸ்)...ஜெயாம்மா., ஈழவாணி., லூர்துராணி மற்றும் பெண்பதிவர்கள்

ஜூன் மாத லேடீஸ் ஸ்பெஷல் அட்டைப்படத்தில் ஜெ அம்மா அவர்களின் அழகான புகைப்படம். இந்த ஸ்பெஷல் லேடிக்கு பெண் வலைப்பதிவர்கள் சார்பா வாழ்த்துக்கள்மா. மக்களின் தேவைகளை நிறைவேற்றி தன்னிறைவு அடைய செய்யும் உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையட்டும்.


சென்னையில் லேடீஸ் ஸ்பெஷல் சார்பா மே மாதம் ஒரு பெண் வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது மெரீனா பீச்சில். கிரி்ஜாம்மா அனைவரையும் சந்திக்க விரும்பினார். 20 பேரை அழைத்தேன். 12 பேர் வந்தார்கள். எல்லா வேலைகளுக்கிடையிலும் இதில் கலந்து கொண்ட பெண் பதிவர்களுக்கும். கலந்து கொள்ள ஆசைப்பட்டும் இயலாமல் இங்கே மனதும் அங்கே கடமையுமாக வருத்தப்பட்ட மத்த பெண் பதிவர்களுக்கும் நன்றிகள்.

அடுத்த மீட் இருக்கு.. எனவே அப்போதும் சந்திப்போம். வாழ்க்கை விரிந்த பாதைகளுடன் இருக்கு. எப்ப வேணாலும் சேர்ந்து கொள்ளலாம். ஸ்பெஷல் லேடீஸ் SO DONT WORRY LADIES .. BE HAPPY.


ஈழவாணி ஜெயா தீபன் இந்த மாத ப்லாகர் அறிமுகத்தில். அவரின் குழந்தைப்பருவ எண்ணங்கள் இங்கே இடுகையாய். மிக அருமை வாணி. இவர் ஹனி என அழைப்பதே இனிப்பாய் இருக்கும். இனி லேடீஸ் ஸ்பெஷலில் ஈழத்துப் பெண்களைப் பற்றி எழுதப்போகிறார். காத்திருங்கள் ஒவ்வொரு கதையையும் தெரிந்துகொள்ள.


இந்த மாதம் போராடி ஜெயித்த கதையின் நாயகி அரும்பாக்கம் மிடில்ஸ்கூலின் தலைமை ஆசிரியை லூர்து ராணி. கிட்டத்தட்ட 31 வருடங்களாக தன் உடல் நலக்குறைகளோடு போராடி ஒரு நாள்கூட விடுப்பு எடுக்காமல் சிறப்பாக பணிபுரிந்து சிறந்த ஆசிரியர் விருதை இந்த ஆசிரியர் தினத்தில் பெறப்போகும் லூர்து ராணிக்கு வலைப்பதிவர் சார்பா ஒரு ராயல் சல்யூட்.

செவ்வாய், 7 ஜூன், 2011

வேலிக் கொடிகள்..



வேலிக் கொடிகள்
************************
வளர்ந்து முதிர்ந்தாலும்
பனியின் இழைகளாய்
வெறுமை எதையும்
பிரதிபலிப்பதில்லை..
பிரதிநிதித்துவமாயும்..

கூடாரத்துணியுள்
பிடித்து வீச முடியாத
வர வெய்யிலாய்..
கடத்தி வெளியேற்ற
முடியாத வாடைக்காற்றாய்..

குட்டைக்குள்
ஆமையாயோ
மழை நேர
மரக்கதவிடுக்கில்
நத்தைப் பூச்சியாயோ

பாசம்பிடித்து
ஊறிக்கிடக்கும்
கிணற்றடிக் கல்லின்
வெறுப்பு மண்டிய
அழுக்குகளாய்..

நினைவின் நுனிகளில்
எப்போது வேர் பிடித்தது
என்பது தெரியாததாய்
எப்போது கசந்தது
வேலியோரப் பாகலாய்

துளைகள் கூடவிடாது
கிளையேறும் வரை
காலம் கடந்ததால்
கழட்டி வீச முடியாது
சுற்றிய கொடியாய்.


டிஸ்கி:- இந்தக் கவிதை ஜனவரி 30. 2011 பழைய திண்ணையில் வெளிவந்துள்ளது.

திங்கள், 6 ஜூன், 2011

நிஜம்..

நிஜம்..
*************
பதின்மத்திலேயே
நின்றுவிட்டது என் வயது
அதன் பிறகு
நான் வளரவேயில்லை
வளர விரும்பவும் இல்லை

வளரும் போதெல்லாம்
வலிக்கிறது
வளர்சி்தை மாற்றத்தால்..

சிதைக்காமலே
சிதைகிறது
சின்னக் குழந்தைத்தனம்..

கள்ளத்தனம்
எட்டிப் பார்க்கும் கண்கள் ...
மெல்ல எழும்பிய தனங்களோடு..

சுமக்க ஆரம்பித்தபின்
சுமையாய் கிடக்கிறது
பெண்ணாய் நீண்ட நிஜம்..





டிஸ்கி:- இந்தக் கவிதை பழைய திண்ணையில் 23.01.2011 இல் வெளிவந்துள்ளது.



வியாழன், 2 ஜூன், 2011

குண்டூஸ் ஃபார் எவர்.. இவள் புதியவளில்..




கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா .. இல்ல ஓடிப் போயி கல்யாணந்தான் கட்டிக்கிடலாமான்னு என் கணவர் பாட முடியாது.. காரணம் ஏற்கனவே அவர் என்னை கல்யாணம் கட்டிக்கிட்டதுனால இல்ல.. என்னால ஓடி வர முடியாது .. அதுதான் காரணம்..

பருமனா இருக்குறவங்கள ஓபீஸ்னு சொல்வாங்க ஆங்கிலத்துல.. சோபாவை அடைச்சுகிட்டு உக்கார்ந்து டி வி பார்த்துகிட்டு இருந்தா அவங்க பேரு கவுச் பொட்டாடோ. கவுச்சி இல்லை சோஃபாவுக்கு ஆங்கிலத்துல கவுச்சுன்னு சொல்றங்க..

கல்யாணம் ஆகிறவரைக்கும் நானும் ஊர்வசி., மேனகா ., அருந்ததி ( அட இவங்க எல்லாம் அப்போ நடிச்ச நடிகைங்கப்பா)மாதிரிதான் இருந்தேன்.. புள்ள குட்டின்னு ஆனப்புறம் கூட கொஞ்சம் குண்டாதான் இருந்தேன்.. குண்டானதுக்கு சிசேரியன் ஒரு காரணம்னு சொல்லிக்கிறது.. பழிய தூக்கி எது மேலயாவது போடவேண்டி இருக்கே..

ஒரு காலத்துல யோகா ., எக்சர்ஸைஸ் எல்லாம் செய்து காய்கனியா சாப்பிட்டு பழந்தின்னி வவ்வால் மாதிரி பறக்குற அளவு இல்லாட்டாலும் நல்லா நடக்குற அளவு இருந்தேன்.. எப்ப யோகா செய்யிறத விட்டனோ அப்பவிலேருந்து உடம்பு வந்துருச்சு.. சுமாரா நாம எவ்வளவு செண்டி மீட்டர் உயரம் இருக்கமோ அதில் நூறைக் கழிச்சா எத்தன செண்டி மீட்டர் வருதோ அந்த அளவு வெயிட்தான் உத்தேசமா நாம இருக்கணும். நான் 157 செண்டி மீட்டர் உயரம் அப்ப நான் 57 கிலோதானே இருக்கணும் ஆனா பாருங்க 72 இருக்கேன்.. ரொம்ப கஷ்டப்பட்டு குறைச்சா 67 வரைக்கும் வந்திருக்கேன்.. ஒரு பத்து கிலோ எக்ஸ்ட்ராதான்..

ஒரு நாலு தரம் காலில் அடிபட்டு கட்டு., அப்புறம் கையில் கூட ஒருதரம் அடிபட்டு கட்டுன்னு வந்தவுடனே எங்கே பார்த்தாலும் அட்வைஸ்தான்.. என் கணவர் படியை பார்த்தாலே ராணி வர்றாங்க பராக் பராக்குனு சொல்ற மாதிரி ,”படி இருக்கு ..பார்த்து பார்த்துன்னு” சொல்வார்.. என் சொந்தக்காரங்க கூட அப்பிடி சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க அப்புறம் என்ன பார்த்தாலே..


ஹீல்ஸ் செப்பல் எல்லாம் போடணும்னு ஆசைதான். சும்மா செருப்பு போட்டு ஃப்ளாட்டான தரையில நடக்கும்போதே இப்படி பொத்பொத்துன்னு பூசணிக்கா மாதிரி விழுந்தா அப்புறம் எப்பிடி ஹீல்ஸ் எல்லாம் வாங்க விடுவாங்க..

புத்தூர் கட்டு., ரத்தக் கட்டு., முட்டைப்பத்து., சுளுக்கு., எக்ஸ்ரே., ஸ்ப்ரெயின்., லிகமெண்ட்ஸ்., டிண்டான்., சர்ஜரி., டாப்லெட்ஸ்., ஊசி., பிஸியோதெரஃபி இதெல்லாம் எனக்கு சகஜமான விஷயம் ஆகிருச்சு..என்னப் பாக்கிறவங்கதான் இப்ப ஒண்ணும் இல்லையே பாணியில் கையையோ., காலையோ பார்ப்பாங்க.. அப்புறம் பத்திரமா பாத்து நட.. பாத்துக்க என்று சொல்லிட்டு போவாங்க..

கால்சியம் கொறைச்சல்., பால் குடி., கால்சியம் டாப்லெட்ஸ் சாப்பிடு., முட்டை சாப்பிடுன்னு.. சொல்லிட்டு போவாங்க..எல்லாம்தானே சாப்பிடுறோம் அதுனாலதானே உடம்பு வெயிட் தாங்காம கால் கதறுதுன்னு நமக்கு தெரியும்.

என் கணவர் சொல்வாரு அவளுக்கு பேச்சு ஸ்பீடு., ஆளும் ஸ்பீடு., மனசு போற வேகத்துல காலும் போகும்னு நினைக்கிறா.. என் பசங்க சிரிப்பாங்க.. என் சின்னப் பையன் குண்டுக்கை, அம்மா என்று கையைப் பிடித்துக் கொள்வான்.. பெரியவன் சொல்வான்., ரன் படத்துல டைட்டில் சாங்ல ஓடிவர மாதிரி ஒரு சீன் எடுப்பேண்டா.அப்ப அம்மாவை ஓடி வர சொல்லி தம் தம்னு மியூசிக் போட்டு குண்டூஸ் ஃபார் எவர்னு டைட்டில் ஸ்க்ரோல் ஆகு்ம்னு.

ஒண்ணுமில்லங்க வீட்டில் வடை சுட்டா ஷேப் இல்லாத வடை.. கடைசி வடை. , முதல் வடை அப்பிடின்னுதான் சாப்பிடுறது.. ஆனா பாருங்க சில சமயம் என் பசங்க சாப்பிட மாட்டாங்களா .. சரின்னு இன்னும் ரெண்டு எடுத்துக்குறது.. அப்புறம் சாயங்காலம் மிச்சம் ரெண்டு எடுத்துக்குறது.. இதுக்கு மேல வேற வேணுமாங்கறீங்களா அதுவும் சரிதான்.

பத்தும் பத்தாததுக்கு பசங்க அப்போ அப்போ பிஸா ஹட்டு ., சப்வே., டொமினிக்., கே எஃப் சின்னு போய் ஏதாவது வாங்கிட்டு வருவாங்க.. அம்மா உங்களுக்கு பிடிக்குமேன்னு சொல்லும் போது சாப்பிடாம இருக்க முடியுமா.. சாக்லேட் கேக்., ப்ளாக் ஃபாரெஸ்ட்., அருண் ஐஸ்க்ரீம்ல கசாட்டா அப்பிடின்னு நமக்கு பிடிச்ச லிஸ்ட் அதிகம்..என்ன ஒண்ணு எல்லாமே கலோரிஸை அதிகப்படுத்தும்..

நாம பாடு நாம உண்டு நம்ம வெயிட்டான சரீரம் உண்டுன்னு போக முடியலை பாருங்க... லீவுல ஊருக்கு அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தா பக்கத்து வீட்டு பொண்ணு சொல்றா.. என்ன அக்கா கதவ இடிக்கணும் போல இருக்கேன்னு.. அம்மா கூட சொல்லி அனுப்பிச்சாங்க பனீர்., மட்டன்., எல்லாம் ரொம்ப சேர்த்துக்காதே.., பால் தயிர் எல்லாம் நல்லா தண்ணி ஊத்தி காய்ச்சி காபி., மோரா உபயோகி., வாக்கிங் போன்னு ..

சரின்னு வாக்கிங் போலாம்னா ரோட்டுல காலை வச்சா ஒரே ட்ராஃபிக் ஜாமுங்க.. நாம் வாக்கிங் போறோமோ இல்லையோ நம்ம கால் மேல ரெண்டு கார் அல்லது ஏழெட்டு பைக் மோதுறா மாதிரி வரும்.. நாமளும் உயிர் தப்பி ஓடுற பல்லியோ., கரப்பானோ மாதிரி அங்கேயும் இங்கேயும் தடுமாறி ஓடணும்.. இது ஒரே புகை வேற.. வீட்டுல வந்து முகம் கழுவுனா கறுப்பா வருது.. முடி எல்லாம் ஏதோ பொகை போட்ட மாதிரி தூசு..


என் கணவர் சொன்னார். சரி கடைக்கு எல்லாம் போயிட்டு வா.. பக்கத்துல பால் கடை., காய் கடை.,எல்லாத்தையும் வீட்டுல இருந்தே போனுல ஆர்டர் பண்ணாம போயிட்டு வா. நடந்த மாதிரியும் ஆச்சு., வெளியே காலைத் தூக்கி வைக்க மாட்டேங்கிறியே.. காலை வெளியே வைச்சா காருலதான் வைப்பேன்., கால்டாக்ஸியிலதான் வைப்பேன். இல்லாட்டா ஆட்டோவிலதான் வைப்பேன் நு சொல்லாம இருந்தா கொஞ்சம் வெயிட்டை குறைக்கலாம்னு..

இப்படி எல்லாம் நாம எங்க சபதம் போட்டோமின்னு நெனைச்சுகிட்டு ( அட்வைஸ் இதெல்லாம்.. ஏங்க நான் குண்டா இருக்கனான்னு கேட்டா இதெல்லாம் கிடைக்கும்தானே.. ஏதோ இல்லமா.. நீ கொஞ்சம் பூசுனாப்புலதான் இருக்கே.. குண்டு எல்லாம் ஒண்ணுமில்லயேன்னு ஒரு ஆறுதலுக்காக கேக்குறது .. அது வெனையில முடியும் ) சரின்னு., போன் பில்லு., தண்ணி பில்லு., கரெண்டு பில்லு., வீட்டு வரி., மளிகைக் கடை., பால் வாங்க., தண்ணீர் கேன் சொல்ல., அயர்ன் பண்ண துணி கொடுக்க., என்று அலைந்து திரிந்ததில் 4 நாளில் பில்லி சூனியம் வைத்த கானாங்கெழுத்தி கருவாடு மாதிரி ஆகிட்டேன்..

வீட்டுல ட்ரெட் மில் வாங்கினா நடந்து நடந்து 50 கிலோ வந்துர்ற மாதிரி அனத்த ஆரம்பிச்சேன்.. கடைக்கு போனா 25000 லேருந்து ஒரு லட்சம் வரைக்கும் இருந்துச்சு ட்ரெட்மில்.. அதுல டி வி எல்லாம் பார்த்து பாட்டு கேட்டுகிட்டே கூட ஒடலாம். அப்புறம் எல்லாத்தையும் பார்த்துட்டு டி வி பார்க்கத்தான் வீட்டுலயே டி வி இருக்கே இதுல வேற பார்த்துக்கிட்டே ஓடணுமான்னு 25000 உள்ள ஒரு ட்ரெட் மில் வாங்கி வந்தாச்சு.. சுமார் ஒரு மாசம் இருக்கும்.. அதுக்கு கான்வாஸ் ஷூ., ட்ராக்சூட்.,பனியன் எல்லாம் போட்டு சூப்பரா நடந்தேன். அப்புறம் என்னாச்சுன்னு கேக்குறீங்களா.. நான் ஆன்லைனில் கவிதை கதை கட்டுரை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டனா.. அது பாட்டுக்கு போர்வை போர்த்திக்கிட்டு தூங்குது..

வீட்டுல தையல் மிஷின் ஏர் கூலர்., ப்ரிட்ஜ்., மைக்ரோவேவுக்கேல்லாம் என்ன கதியோ அதுதான் அதுக்கும்.. என்ன கதின்னா கேக்குறீங்க.. அதுதாங்க வீட்டுல எல்லாத்தையும் பொருள் வைக்கிற ஸ்டாண்டா உபயோகப் படுத்துறது.. எல்லாத்து மேலயும்., ஐடி கார்டு., பணம் வாட்சு., மருந்து மாத்திரை., கோயிலுக்கு போயிட்டு வந்து விபூதி குங்குமம் பாக்கெட் ., ஹேர்பின்னு., பழக்கூடை போட்டோன்னு ஏதாவது வைப்போமில்ல அதுமாதிரி ட்ரெட்டு மில்லும் ஆயிருச்சு. அதுல போயி என்னங்க வைக்க முடியும்னு கேக்குறீங்களா.. ப்ரஷ் ஸ்டாண்ட்., சீப்பு ஸ்டாண்ட் ஷேவிங் ஐட்டம்ஸ் இது பத்தாதுன்னு ஒரு கபடா ( துணி போடுற) ஸ்டாண்ட் வேற.. எங்க விட்டுக்கு வந்த நண்பர் அதுல துண்டு காயப்போட்டு வச்சிருக்குறத பார்த்துட்டு சொன்னார். ஒரு பெட்டும் போட வேண்டியதுதானெ படுத்து தூங்கலாம்னு..

நடிகர் ஜெயராம் ஒரு பேட்டியில் சொன்னார் தன் மனைவி பார்வதி இப்படித்தான் எல்லா இடத்துலயும் விழுந்து வைப்பாருன்னு.. அதை பார்த்து மனச சமாதானப்படுத்திகிட்டேன்.. ஆனா ஒண்ணுங்க.. கூடிய சீக்கிரம் என் எடையை குறைச்சு.. ஃபிட் ஃபார் எவெர்ன்னு ஆகணும்னு தமிழ் புத்தாண்டு சபதம் எடுத்துகிட்டேன்.. என் எண்ணம் நிறைவேற நீங்களும் வாழ்த்துங்க..:))


டிஸ்கி:- இந்தக் கட்டுரை 2011 மேமாத இவள்புதியவளில் வெளிவந்துள்ளது.


புதன், 1 ஜூன், 2011

ஃபாத்திமாபாபு பேட்டி..கான்வெண்டில் படிக்கும் பெண்களுக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக வருவதில்லை..

சந்தனக் குரல் கேள்விப்பட்டிருப்பீர்கள் .. சந்தனம்., ஜவ்வாது ., பன்னீர் எல்லாம் கலந்து மணக்கும் உன்னதமான குரலுக்குச் சொந்தக்காரர் கிட்டத்தட்ட 24 வருடங்களாக தொலைக்காட்சி செய்திகள்., நாடகங்கள்., தொகுப்புகள்., திரைப்படங்கள் என எல்லாவற்றிலும் முத்திரையைப் பதிக்கும் மல்கோவா மாமி ..பிரபல செய்தி வாசிப்பாளர் . ஃபாத்திமா பாபுவை நம் பத்ரிக்கைக்காக தொடர்பு கொண்டோம்..

1.தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளராக மற்றும் நடிகையாக உங்களைப்பற்றி எங்களுக்கு தெரியும் ...மேலும் உங்களைப் பற்றி ., உங்கள்குடும்பம் பற்றி எங்கள் வாசகர்களுக்கு சொல்லுங்களேன்..

நான் பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தேன் .,தற்போது போரூரில் வசிக்கிறேன். என் கணவர் பெயர் பாபு. எனக்கு இரண்டு பையன்கள். மூத்தவன் ஆஷிக்., ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் செகண்ட் இயர் படிக்கிறான்.. சின்னவன் ஷாரூக்.. ஏழாவதில் இருந்து எட்டாவது போகிறான்.

2. நீங்கள் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக வந்தது எப்படி?

..சின்ன வயதில் இருந்தே ஸ்டேஜ் பர்ஃபாமர்., லைம் லைட்டில் இருப்பது பிடிக்கும். 1980 இல் ஆல் இண்டியா ரேடியோவில் நாடகத்துறையில் இருந்து இருக்கேன்.. செய்தித்துறையில் வேகன்ஸி இருந்தது. AIR - NEWS PONDICHERRY - இல் அதில் சேர்ந்தேன்..

பிறகு சென்னைக்கு எம் ஏ., ஷோசியல் ஒர்க்ஸ் படிக்க வந்தேன். முதல் வருடத்தோடு நிறுத்தியாச்சு. இந்தியன் ஆயிலில் வேலை கிடைத்தது. மெட்ராஸ் தூர்தர்ஷனிலும் செய்தி வாசிப்பாளர் பணிக்காக ஆடிஷன்க்கு அப்ளை செய்தேன் குரல் நன்றாக இருந்ததால் கிடைத்தது. குரலுக்காக சிறப்பு பயிற்சி ஏதும் எடுக்கவில்லை. 96 வரை இந்தியன் ஆயிலில் பணி புரிந்தேன். ஒர் நேரத்தில் ஒன்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தால் சிறப்பாக செய்யலாம் என வேலையை விட்டுவிட்டு முழு நேர செய்தி வாசிப்பாளராக ஆனேன்.

3. தொலைக்காட்சி சீரியல்கள்., திரைப்படம் இவற்றில் கலக்குகிறீர்களே.. இது தவிர வேறு ஏதும் செய்கிறீர்களா..

1.மேடையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறேன் .. ஆல் இண்டியா ரேடியோ., டி வி எல்லாவற்றிலும் நிகழ்ச்சிகளைத்தொகுத்து வழங்குகிறேன்.

2.ஷார்ட் ஃபிலிம் எடுப்பது பற்றி படித்து வருகிறேன். ஞாயிற்றுக் கிழமைகளில். சிறந்த குறும்படங்கள எடுத்து வழங்கும் ஆசை உண்டு..

3. கதை., கவிதை., கட்டுரை எழுதி வருகிறேன்.. தமிழ் ஸ்டூடியோ.காமில் நெட்டில் வெளியிடும் ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கிறது.

4. இண்டர்வியூக்கள் செய்திருக்கிறேன் ராஜ் டிவியில். கூட்டாஞ்சோறு என்னும் ப்ரேக்ஃபாஸ்ட் ஷோ.

4. நீங்கள் இண்டர்வியூ செய்த பிரபலங்களைப் பற்றிக் கூறுங்கள்..

ராஜ் டி வி ப்ரேக்ஃபாஸ்ட் ஷோவுக்காக எஸ்.வி. சேகர்., தலைவாசல் விஜய்., சுஜாதா., கவிஞர் பா விஜய்., விவேக்., வெங்கட் பிரபு., ஸ்ரீகாந்த். எஸ்.பி.பி சரண்., யுகேந்திரன்., சின்மயி ஆகியோரை இண்டர்வியூ செய்திருக்கிறேன்.

மேடை நிகழ்ச்சியில் ஜேசுதாஸின் எக்ஸ்க்ளூசிவ் கச்சேரி ., UK முரளி., லக்ஷ்மண் ஷ்ருதி ஆகியோர் நிகழ்ச்சிகளை காம்பியரிங் செய்திருக்கிறேன்.

5. பல படங்களில் நடிக்கிறீர்களே நீங்கள் அறிந்த மொழிகள் எத்தனை..
தமிழ் ., தெலுங்கு., மலையாளம்., கன்னடம்., ஆங்கிலம்.

6. எப்ப பார்த்தாலும் ஸ்லிமா ஃப்ரெஷா ஸ்வீட் ட்வண்டி மாதிரி இருக்கீங்களே உங்க இளமையின் ரகஸ்யம் என்ன..?

எல்லாம் இயற்கை உணவுதான். நார்மலா காலையில் நான் தக்காளி ஜூஸ் அல்லது ஒரு கொய்யா எடுத்துக் கொள்வேன்.

பீன்ஸ்., முள்ளங்கி தவிர மற்ற எல்லாம் பச்சையா சாப்பிடுவேன். சௌ சௌ., கோஸ்., காரட்., குடைமிளகாய்., வெள்ளரிக்காய்., பூசணிக்காய்., ப்ராக்கோலி எனப்படும் பச்சை நிற காய்கறி ( காலிஃப்ளவர் போல்) . லேசா உப்பு மிளகு போட்டு சாப்பிடுவேன் லஞ்சுக்கு .

இரவு உணவு பெரும்பாலும் சோயா மாவில் செய்த சப்பாத்தி.

எல்லாருமே இயற்கை உணவுக்கு மாறணும். சமைத்த உணவு சத்து இழக்குது. எண்ணெயில் போடுவது., வெந்நீரில் போடுவது என்பது காய்கறிகளை எண்ணெய்க் கொப்பரையிலும் கொதிநீரிலும் நரகத்தில் போடுவது போல.

முடிந்தவரை இயற்கை உணவு எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் 10 % இயற்கை உணவு. 90 % சமைத்த உணவு எடுத்துக்குங்க. பின்பு 50 % இயற்கை உணவு., 50 % சமைத்த உணவு., பின் 75 % இயற்கை உணவு., 25 % சமைத்த உணவு. இப்படி மாறினால் தோலுக்கும் உடலுக்கும் உரிய சத்து அழியாமல் கிடைக்கும் . 7. இதுவரை எத்தனை படங்களில் நடித்திருப்பீர்கள்? அதில் மிகப் பிடித்தது எது. ?

70 திரைப்படங்களில் நடித்திருப்பேன். கல்கி., பார்த்தேன் ரசித்தேன் ., சொர்ணமுகி., தேவதையைக் கண்டேன்., விஐபி. மலையாளத்தில் ட்ராஃபிக். ரொம்ப பிடித்து செய்த படம் இது எல்லாமேதான். மலையாளத்தில் ட்ராஃபிக் ரொம்ப பிடித்து செய்த படம். அதில் ரோஹிணி., லக்‌ஷ்மி ராதாகிருஷ்ணன் எல்லாம் நடித்திருக்கிறார்கள்.

8. ஷோபனா ரவி., ஃபாத்திமா பாபு என்பது போல இப்போது ந்யூஸ் வாசிக்கும் யாரும் பெரிதாக பேசப்படவோ கவனிக்கப்படவோ இல்லையே ஏன்.. ? உங்கள் உடையையும் ஹேர்ஸ்டைலையும் தினம் தினம் பார்க்கவே டிவி பார்க்கும் கூட்டம் ஒன்றும் இருந்தது. உங்கள் உச்சரிப்பு சுத்தம்., அழகு எல்லாம் ரசிக்கக்கூடியது .. அந்த அளவு யாரும் இப்போ சொல்ல முடியலையே ஏன்.

அப்போ தமிழ் நன்கு பேசக்கூடிய கான்வெண்ட் படிக்கும் பெண் போன்ற முகத்தோடு நான் ., ஷோபனா ரவி., சந்தியா போன்றோர் இருந்தோம். தமிழ் நன்கு பேசக்கூடிய பெண்களுக்கு சொஃபிஸ்டிகேடட் லுக் இல்லை. கான்வெண்டில் படித்த பெண்களுக்கு தமிழ் நன்கு உச்சரிக்க வரவில்லை. எனவே இது இரண்டும் இணைந்திருந்த நாங்கள் மூவரும் பேசப்பட்டோம். அது தவிர., செய்தி வாசிக்கும் போது வார்த்தைகளையோ., வாக்கியங்களையோ அவ்வப்போது நிறுத்தாமல்., நீட்டி முழக்காமல்., சரியான இடத்தில் நிறுத்தி சரியான வேகத்தோடு உச்சரித்து செய்தி கேட்பதை விரும்பும்படி., கதை சொல்வது போல சுவாரசியமாக சொல்ல முடிந்தது ஒரு காரணம். ஒரு ப்பேஸ் விட்டு சொல்லணும் . அந்தக் கலை எங்களுக்கு கை வந்தது.

9. உங்கள் உடை., ஹேர் ஸ்டைல் மாற்றம்., எல்லாம் டிவியில் நீங்கள் நியூஸ் வாசிக்கும் போது ஒரு வாசகர் ஃபோட்டோவாக தினம் எடுத்து அனுப்பியது பார்த்திருக்கிற ஒரு பத்ரிக்கையில் .. அப்படிப்பட்ட ரசிகர்கள் கூட இருந்திருக்கிறார்கள் உங்களுக்கு. அவர் பெயர் என்ன.

ஆமாம் தாராபுரம் விஜய குமார்..என்பது அந்த ரசிகரின் பெயர். ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. தினம் நான் செய்தி வாசிக்கும் போது எடுத்திருக்கிறார். நீண்ட தலைமுடியுடன் நான் செய்தி வாசிப்பதிலிருந்து குட்டையாக வெட்டிக் கொண்டது வரை அதில்தினம் நான் செய்தி வாசித்த போது டி வி யில் எடுக்கப்பட்டு தொகுத்து ஆல்பமாக அனுப்பி இருந்தார்.

10. பிரபலமானவர் நீங்கள். உங்கள் வாழ்க்கையில் நிறைய சோதனைகள் வெற்றிகள் வந்திருக்கும். அந்த அனுபவங்கள கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

எல்லாவற்றையும் புறந்தள்ளணும். மகிழ்வோ., துக்கமோ., கடந்து போகணும் அசைபோட்டுக் கொண்டே இருப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

அப் இருக்கும் போது சந்தோசமும் டவுன் இருக்கும் போது துக்கமும் கொள்வது கிடையாது. இவ்வாறு எல்லா மாற்றமும் கடந்து போகும். மாற்றம் ஒன்றே மாறாததுன்னு இருக்கும் போது என்னைக் கடந்து என்னைப் பார்க்க முடிந்தது.

வாழ்க்கையை அதன் போக்கிலேயே எடுத்துக் கொள்கிறேன்.. AS IT GOES. பெரிதாக எதுவும் பாதித்தது இல்லை. என்னை சேன்ச் பண்ணல.

சந்தோஷம் மெட்டீரியலில் மட்டும் இல்லை. அது உள்ளே இருக்கிறது..

11. இவ்வளவு பணிகளில் ஈடுபடுகிறீர்களே .. சிலர் நேரமில்லை எதற்கும் என்பார்கள். உங்களால் எப்படி முடிகிறது ?

காலையில் இருந்து மாலை வர திட்டமிடல் முக்கியம் எனக்கு. இன்னிக்கு ஷூட்டிங் இருந்தா அதுதான் முக்கியம். அல்லது ந்யூஸ் ரீடிங். அல்லது சமையல் அப்படி ஆர்கனைஸ் செய்து கொள்வேன். சுஜாதாம்மா இறந்த அன்னைக்கு அவங்களுக்கு அஞ்சலி செலுத்த அவங்க வீட்டுக்கு செல்வதுதான் எனக்கு முக்கியமா நினைச்சேன். எனவே ந்யூஸ் ரீடிங்கை கட் செய்துட்டு அங்கே போனேன். எதுக்கு ப்ரையாரிட்டி கொடுக்கணுமோ அதுக்கு கொடுப்பேன். எனக்கு க்வாலிட்டி ஆஃப் டைம் முக்கியம்.

டிஸ்கி:- ஃபாத்திமாபாபு அவர்களின் இந்த பேட்டி மே மாத இவள் புதியவளில் வெளிவந்துள்ளது.