செவ்வாய், 31 மே, 2011

உபநயனத்தில் உரத்தசிந்தனை..



கடந்த வெள்ளியன்று நமது பெரும் ப்லாகர்.,எழுத்தாளர்., பள்ளி ஆசிரியையாக பணி புரிந்து ஓய்வு பெற்ற ருக்கு அம்மாவின் ( ருக்மணி சேஷசாயி. -- பாட்டி சொல்லும் கதைகள்) பேரன் உதய்சரணுக்கு உபநயனம் நடந்தது மிதிலாபுரி கல்யாண மண்டபத்தில். சில இலக்கிய ஆர்வலர்கள் வந்திருப்பதாக அம்மா சொன்னார்கள்


அங்கு உரத்த சிந்தனை நண்பர்களை சந்தித்தேன். அதன் தலைவர் எஸ்வி ராஜசேகரன்., உறுப்பினர் பாண்டுரங்கன் மற்றும் நம் ருக்மணி அம்மா. போன வாரம் உறவினர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். உரத்த சிந்தனை சார்பில் கன்னிமரா நூலகத்தில் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்படுகிறது என்று. என் ஆர் கே ( கிருஷ்ணன்) விருது சிறந்த நூலுக்காகவும்., அமரர் சேஷசாயி விருது ( 2 விருதுகள் ) சிறந்த படைப்புகளுக்காகவும் வழங்கப்படுகிறது.


எஸ் வி ராஜசேகரும்., உதயம் ராமும் சேர்ந்து இந்த இலக்கிய அமைப்பை ஆரம்பித்தவர்கள். கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் ஆகிறது. மிகச்சிறப்பாக செயல்படும் இது மதுரை., கோவை., திருவண்ணாமலை., திருச்சி போன்ற தமிழகத்தின் பல ஊர்களிலும் இருக்கிறது. மாதாந்திரக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் இலக்கிய சம்பந்தமான புத்தக விமர்சனங்கள்., கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. வருடச் சந்தாவும் ஆயுள் சந்தாவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இன்னும் நிறைய சமூக சேவைகள் ., ஆதரவற்றோருக்கான உதவிகள்., கல்வி உதவிகள்., மருத்துவ உதவிகள் ., வழங்கப்படுகிறது. ரத்த தான முகாமும் நடத்தப் படுகிறது.


ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகப் பணியாற்றுபவர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டும் அவர்களை வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டும்., அவர்களின் சேவைகளின் சிறப்பை வெளிப்படுத்தவும் விருதுகள் வழங்கப்படுகின்றன.


குமுதம் சிறுகதைப் போட்டியில் நடுவர்களில் ஒருவராகவும் இந்த உரத்த சிந்தனை அமைப்பில் இருந்தவர் ஒரு முறை பங்கேற்றதாக ருக்கு அம்மா சொன்னார்கள். இலக்கிய ஆர்வலர்களும் ., சமூக சிந்தனையாளர்களும் சென்னையின் பெரிய மனிதர்களும் நிரம்பிய சபையாய் இருக்கிறது இது.


நல்லோர் வங்கி என்ற அமைப்பும் இதனுடன் சேர்ந்து செயல்படுகிறது. அதை ஆரம்பித்து 10 வருடங்கள் ஆவதாக ராஜசேகர் சொன்னார். இதில் சென்னையைச் சேர்ந்த 100 பேருக்கு மேல் உறுப்பினராக இருப்பதாகவும்., 70 ஆண் உறுப்பினர்களும் 30 பெண் உறுப்பினர்களும் இருப்பதாக சொன்னார். மிக நல்ல முயற்சி என அவர்களை வாழ்த்தினேன்.


ஜூன் மாதம் ஓவியர் ஸ்ரீ ( ஸ்ரீகாந்த்) அவர்களுக்கு ஓவியர் அரஸ் கையால் விருது வழங்கவிருப்பதாகவும். அது ஜூன் 19 ., தேவநேயப்பாவாணர் அரங்கில் நடைபெறும் என்றும் கூறினார் பாண்டுரங்கன். விருப்பமிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள். திறமையாளர்கள் எங்கும் வெல்வார்கள்.. வாழ்த்துக்கள் ஸ்ரீ..


இதில் முக்கியமாக குறிப்பிட நினைத்த விஷயம் நமது ப்லாகர்களில் ஒருவர் . திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் திரு . ருக்மணிசேஷசாயி அவர்கள் கையால் மே 22 அன்று கன்னிமரா லைப்ரரியில் நடைபெற்ற கூட்டத்தில் விருது வாங்கியிருக்கிறார். வலைப்பதிவர்கள் சார்பாக வை. கோபால் சாருக்கு பாராட்டுக்கள். நல்ல கட்டுக்கோப்பான எழு்த்து நடை இவருடையது . இந்த ப்லாகில் இவருடைய படைப்புக்களை படிக்கலாம்.


வாழ்த்துக்கள் வை. கோபால் சார்.. வாழ்க வளமுடன்.

திங்கள், 30 மே, 2011

ஐஸ்வர்யா ராகவின் பள்ளிப்பிள்ளைகளுக்கான பயிற்சிப்பட்டறை

ஐஸ்வர்யா ராகவ்... எம் ஓ பி வைஷ்ணவாவில் விஸ்காம் மாணவி. மங்கையர்மலர் சிநேகிதி மஞ்சுளா ரமேஷ் அவர்களின் மருமகள். மிக அருமையான சமையல் நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் நிகழ்த்துகிறார். மாமியாருக்கு உதவியாக சிநேகிதியிலும் சப் எடிட்டராக இருக்கிறார். கலைஞர் டிவி ஒலிபரப்பிய -- நாங்கள் கலந்து கொண்ட “யுத்தம் செய்” கலந்துரையாடலில் மிக இனிமையான குரலில் அழகாய் தன் கருத்துக்களை எடுத்துவைத்தவர்.


இவர் இந்த மாதம் ஜூன் 4, 5 ஆகிய தினங்களில் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்றை டி. நகரில் உள்ள சாரதா வித்யாலயா பள்ளியில் நடத்துகிறார். காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணிவரை. மதிய உணவும் அங்கேயே வழங்கப்படும். 8 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டும்.


பந்துமித்ராவின் அம்ருதஸ்யபுத்ரா ( BANDHUMITHRA'S AMRUTHASYAPUTHRA -- WE ARE THE CHILDREN OF THE DIVINE) “கிட்ஸ் 2011” என்பது இந்த ஈவண்டின் பெயர். தங்கள் படிப்பில் ., செயலில்., அக்கறையும் ., ஈடுபாடும்., கூர்ந்த மனோநிலையும் பெற இந்த ஈவண்ட் நடத்தப்படுகிறது. ஃபன்., ஆக்டிவிட்டி., லேர்னிங் முறையில் யோகா முதலான பயிற்சியும் பயிற்றுவிக்கப்படுகிறது. குழந்தைகளுடன் பெற்றோரும் கலந்து கொள்ளும் இண்டராக்டிவ் வகுப்பும் உண்டு. ஒரு குழந்தைக்கு ரெஜிஸ்டரேஷன் செய்ய 500 ரூபாய். இரண்டு குழந்தைகள் என்றாலும் அதே 500 ரூபாய் மட்டுமே .


எங்க கிளம்பிட்டீங்க.. உங்க பிள்ளைகளை பயிற்சிப்பட்டறையில் விடவா.. லீவு விட்டா., கம்ப்யூட்டர் ப்ராக்டீஸ்., கராத்தே க்ளாஸ்., கிரிக்கெட் கோச்சிங்., அப்பிடின்னு தேடித் தேடி தன் பிள்ளைகளின் வளர்ச்சியைப் பெருக்க நினைக்கிற மெட்ரோ சிட்டி பெற்றோருக்கு ஏற்ற வகுப்பு இது.. சீக்கிரம் ரெஜிஸ்டர் பண்ணிக்குங்க.. வாழ்த்துக்கள். பிள்ளைகளோடு சேர்ந்து பயில.. இன்னும் உங்க பிள்ளைகளை அறிந்து கொள்ள..


அன்பின் ஐஸ்வர்யாராகவ் கணவர் ராகவ் துணையோடு , பெற்றோர் எல்லாருக்கும் பயன் தரும் இந்த ஈவண்டை சிறப்பாக நடத்த வாழ்த்துக்கள் ..

சனி, 28 மே, 2011

இறவாப் புகழ் பெற்ற அனுராதா. போராடி ஜெயித்த பெண்கள் ( 9).




இறந்தும் இறவாப் புகழ் பெற்ற ஒருவரை பற்றி இந்த மாதம் பார்ப்போம்.. வாழும் போது போராடியவர் உண்டு.. வாழ்விலும் போராடி., இறந்த பின்னும் மனித குலத்துக்கு தன் உடலையும் ., கண்ணையும் தானமாய் வழங்கி இருக்கும் அனுராதாதான் அவர்.

அனுராதாவின் வயது 47. சென்னையில்தான் பிறப்பு வளர்ப்பு எல்லாம். எல்லாக் குழந்தைகளையும் போலத்தான் வளர்ந்தார். இவருக்கு ஒரு தம்பி ஒரு தங்கை.. அம்மா அப்பா ஒற்றுமை இல்லாத காரணத்தால் அம்மா குடும்பத்தை விட்டு பிள்ளைகளை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். பாட்டி வீட்டிலிருந்து பள்ளி செல்லும் பருவத்தில் ஒரு முறை இவர் கீழே விழுந்து அடிபட்டார். அப்போதுதான் தெரிந்தது இவருக்கு மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி ( MUSCULAR DISTROPHY) என்னும் சதை இறுகி செயல்பாடு இழக்கும் நோய் உள்ளது என்று. இது போலியோ மாதிரி முதலில் கால் சதையை செயலிழக்கச் செய்யும்.

கிட்டத்தட்ட 16 வயது இருக்கும்போது இது கண்டு பிடிக்கப்பட்டது. அப்போதுதான் தெரிந்தது இதற்கு மருத்துவத் தீர்வு என்பது இல்லை என்பது. இதனோடே பருவம் அடைந்தார். காலில் சதை இறுக்க நோயால் அவதிப் பட நேர்ந்ததால் எதை எடுத்தாலும் அடுத்தவர் உதவியை எதிர் நோக்கியே இருக்க வேண்டி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நடக்க இயலாமல் கால் சதை செயலிழந்து கொண்டிருந்தது. குளிப்பது., டாய்லெட் செல்வது என்பது அடுத்தவர் உதவியோடுதான். வீட்டில் அம்மா இருந்தால் பரவாயில்லை.. அடுத்தவர்களை எத்தனை காலத்துக்கு எதிர்பார்ப்பது.

எனவே கொஞ்ச காலத்துக்கு பிறகு வீட்டில் இருக்க இயலாமல் ஆந்திர மஹிளா சபாவில் ( சத்யா தியேட்டருக்கு எதிரில் உள்ளது) சென்று சேர்க்கப்பட்டார். கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டு பிறருக்கும் சொல்லிக் கொடுத்தார்.. அங்கும் அவர் சம்பாதித்ததை விட மஹிளா சபா அவருக்காக அதிகம் செலவு செய்து கவனித்துக் கொண்டது.

தனக்கென ஒரு ஸ்டூலை சக்கரங்களோடு செய்து தன் வேலைகள் செய்வது., குளிப்பது என தன்னை அவரே கவனித்துக் கொண்டார். இந்த நோய் கொஞ்சம் கொஞ்சமாக கால்களில் இருந்து கை தசைகள் மற்றைய உறுப்புகளையும் பாதித்து விடும். என தெரிந்தது. நுரையீரல் வரை வந்து விட்டால் கஷ்டம்தான்..

கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு முன் இந்த நோயால் தீவிரமாக பாதிப்படைந்து என்னை கருணைக் கொலை செய்யுங்கள் என குடும்பத்தினரிடமும் மஹிளா சபாவிடமு்ம் கேட்க ஆரம்பித்தார் இவர். இதை அறிந்த விஜய் டி வியின் கதை அல்ல நிஜம் டீம் சென்று இவருடைய நிலையை உலகுக்கு சொல்ல நினைத்தது.

இதிலிருந்து இவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கதை எல்ல நிஜம் டீமை சேர்ந்த எம். கார்த்திகேயன் மற்றும் அருண் இவர்கள் மூலம் இவர் முதல்வரை சந்தித்து தன் போன்றோருக்கு உதவ அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க நினைத்தார்.



ஹோம் ஸ்வீட் ஹோமை சேர்ந்த டாக்டர் வசந்தி பாபுவும்., கதை அல்ல நிஜம் டீமும் இணைந்து இவரை கோட்டைக்கு க்ளோபல் ஹாஸ்பிட்டல் ஆம்புலன்ஸ் மூலம் கலைஞரை சந்திக்க அழைத்துச் சென்றார்கள்.

அங்கு அவர் முதல்வர் கலைஞரிடம் தன்னைப் போல இந்த நோயால் தாக்கப்பட்டவருக்கு மருந்துகள் கண்டு பிடிக்கவும்., மற்றும் (இவர்களுக்கு கல்வி கற்றுக் கொள்ளும் இடங்கள் இருக்கிறது . ஆனால் தங்குமிடங்கள் இல்லை .. அதை உருவாக்கி) குடும்பத்தில் இருக்க முடியாதவர்களுக்கு ஹாஸ்டல்கள் மற்றும் ஹாஸ்பிட்டல்கள் தனியாக உருவாக்கிக் கொடுக்கும் படியும் கோரிக்கை வைத்துள்ளார்.

முதல்வர் கருணநிதி அவர்களும் இவரின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அதன்படி செய்வதாக உறுதி அளித்துள்ளார். இவரின் கதையை விஜய் டி வியின் கதை அல்ல நிஜம் குழு இவர் சொந்தங்களை எல்லாம் அழைத்து ஒரு நிகழ்ச்சியாக நடத்தியது.

தான் இறக்குமுன் பார்க்க ஆசைப்பட்டதாக இவர் கூறிய சில பிரபலங்களையும் இவரின் அம்மாவையும் பார்க்க கதை அல்ல நிஜம் குழு ஏற்பாடு செய்தது. இவரின் அம்மா., வகுப்பு ஆசிரியை., மத்திய சமூக நலத்துறை அமைச்சர் நெப்போலியன்., நடிகை ரேவதி., த்ரிஷா., முதலமைச்சர் கலைஞர் ஆகியோர்.

இதில் இவர் முதல்வரை முதலில் சந்தித்தார். அதுவும் கதை அல்ல நிஜம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. பின் நடிகை த்ரிஷா., ரேவதி., நெப்போலியன்., பள்ளியில் படித்த வகுப்பு ஆசிரியை .,ஆகியோரை சந்தித்தார்.

அப்போது வந்த இவரின் தம்பியும் அன்னையும் பின்பு வரவுமில்லை உதவி செய்யவுமில்லை.. ஒரு குழந்தைக்கு தாய் இருந்தால்தான் சிறப்பு. தாய் இருந்தும் இப்படி கவனிக்கப்படாமல் இருப்பது கொடுமை. இருந்தும் இவர் மன உறுதியாலேயே இத்தனை வருடங்கள் தன் நோயையும் தாங்கிக் கொண்டு எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்திருக்கிறார். நல்ல குடும்பச் சூழல் இருந்து அம்மாவும் கூட இருந்திருந்தால் இன்னும் பல வருடம் வாழ்ந்திருப்பார்.

தன்னைப் பராமரித்துக் கொள்ள அதிகம் செலவு செய்ய முடியாத காரணத்தாலும் நோயின் தீவிரத்தாலும்தான் இவர் தன்னைக் கருணைக் கொலை செய்து விடுமாறு கேட்டார்.. இவருக்கு உதவுவதாக சொன்ன எவரும் பின் சொன்ன அளவு உதவியும் செய்யவில்லை.

நோய் தீவிரமடைந்து நுரையீரலையும்., இதயத்தையும் தாக்கியது. அதற்கு முன் இவர் தன் கண்ணையும் உடலையும் தானமளிக்கும் படி கேட்டுக் கொண்டார். தன் உடலை ஆராய்ச்சி செய்து இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் படி கேட்டுக் கொண்டார். அதன் படி இவர் கண் சங்கர நேத்ரலயாவுக்கும்., உடல் ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் வழங்கப் பட்டது.

இத்தனை உபாதைகளோடும் இத்தனை வருடங்கள் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து எதிர்நீச்சல் போட்டு பின் இறப்புக்கும் பின்னும் வாழும் கண்களோடும் ஆராய்ச்சிக்காக பாதுகாப்பட்டு உடலாயும் இருக்கும் இவர் என்னைப் பொறுத்த வரையில் இன்னும் இறக்கவில்லை. இது போன்ற நோய்கள் கண்டறியப்பட இறந்தும் இறவாமல் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.

அனு தனக்காக வாழும் மனிதர்கள் மத்தியில் எல்லா மனிதர்களுக்காகவும் இறந்தும் வாழ்கிறீர்கள். உங்கள் சேவைகாக மனித குலமே உங்களைப் பாராட்டுகிறது.




வியாழன், 26 மே, 2011

வௌவால்கள்...பூவரசியில்.



புலனாய்வு., விசாரணை
மேல்முறையீடு ..
நீதியின் தாமதங்களால்
பாழடைந்த மண்டபங்களில்
பதுங்கித் தலைகீழாய்த்
தொங்கிச் சிறுத்துக் கிடந்த
உயிர் தின்னி வௌவால்கள்
இளமைத் தோல் தின்று
மனித உயிர் குடித்து
ஒற்றை ஆயுள் முடித்து
இரட்டை ஆயுள் பெற்று
சத்தங்கள் துணைகொண்டு
மோதாமல் தப்பித்து
எங்கென்று தெரியாமல்
வேறொரு மண்டபம் பதுங்கி..
அடுத்தொரு தோலுக்காய்..
வலைவிரித்த இறக்கையோடு..


புதன், 25 மே, 2011

பரிசோதனை எலிகளும் பரதேவதையும்..

ஆய்வுக் கூடத்தில் எலிகள்
அன்பாய் வளர்க்கப்பட்டு..
அடுத்த சோதனைகள் வரை
அன்பு உணவு கொடுக்கப்பபட்டு..

சிரிஞ்சால் குத்திப்பார்ப்பது
மூஞ்சியில் ஆல்கஹால் தேய்ப்பது
பஞ்சை அமுக்கி முச்சை அடக்குவது
எல்லாம் செய்துவிட்டு சோதனை எனலாம்

நலியாத புன்னகையோடு
டிசெக்‌ஷன் ப்ளேட்டில்
படுக்க வைக்கப்பட்டு
ஆணியும் ஊசியும்
அடிக்கப்படும் போது கூட
நம்பிக் கொண்டிருப்பீர்கள் இது அன்பென்று,

கத்திரிக்கோல்களால் துண்டாக வெட்டி
சாக்குப் பையிலும் அமுக்கி
வீசும் போது வீசாமல் இருக்கலாம்
உங்கள் பிணவாடை உங்களுக்கே..

அன்பென்று நடித்து
அரவணைப்பதாய் கத்தி சொருகி
சிரிக்கும் இவர்களைப் பார்த்து
சிலர் பரதேவதே காளி் என விழுவார்கள்.

கரு நீர்க்கலாம் என உங்கள்
தாய் வயிற்றிலேயே உங்கள் கருவைக்
குத்திக் கொலை செய்யும் இவர்களோடு
இன்னமும் அன்பு என்று நீங்கள்
கட்டிப் பிடித்து அழுது கொண்டிருக்கலாம்.

பரதேவதையோ உங்கள் உதிரத்தை
எல்லாருக்கும் அருந்தக் கொடுத்து
சதையை சமைத்து வைத்து
சாவகாசமாய் ஒன்றும்
அறியாததுபோல காட்சியளிக்கும்
அடுத்த பரிசோதனை எலிக்காக காத்து.

சமச்சீர் கல்வியும் கருத்து கந்தசாமிகளும்..

சமச்சீர் கல்வி .. இந்த வாசகம் கடந்த மூன்று நாட்களாக முகப்புத்தகத்தில் படும் அடி வேறு எதற்கும் பட்டிருக்காது.. யார் கைதானதும் கூட..இவ்வளவு பெரிதாய் விவாதிக்கப்படவில்லை..

தங்களை கருத்து கந்தசாமிகளாய் நினைத்துக் கொண்டு ஒரே கருத்து மயம்தான். எனக்கு அம்மா பாசம் அய்யா பாசம் என்பதெல்லாம் இல்லை. பிடித்தவர் செய்யும் எல்லா செயலும் உவப்பானதாய் இருப்பதில்லை. பிடிக்காதவர் செய்யும் எல்லா செயலும் வெறுப்பதுமில்லை.

உண்மையில் நிறைய அரசுப் பள்ளிக்களுக்குச் சென்றிருக்கிறேன். சீஃப்கெஸ்டாகவும் சில நிகழ்வுகளில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் பிள்ளைகளின் அறிவு என்னை வியக்க வைத்திருக்கிறது. சரியாக சானலைஸ் செய்யப்பட்டால் அவர்கள் ஜொலிப்பார்கள் எனவும் உணர்ந்திருக்கிறேன். வாய்ப்புகள் வழங்கப்படாமல் நிறைய பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்வதில்லை. கல்வி என்பதும் மருத்துவம் என்பதும் இலவசமாய் ஆக்கப்படவேண்டும்.

உனக்கு இது ஏன் பிடிக்கவில்லை எனத் தெரியும் என் அன்புத் தங்கையே கூ்றியதுதான் இந்த இடுகைக்கே காரணம். இலவசமாய் தரமான கல்வி கிடைத்தால் அரசுப் பள்ளிகளில் அட்மிஷனே கிடைக்காது என்பதுதான் உண்மை. என் உறவினர்கள் யாருக்கும் கல்விக்கூடம்(கல்லூரி) இருந்தாலும் பள்ளிக்கூடம் இல்லை. எனவே நான் யாருக்கும் வக்காலத்து வாங்க வேண்டிய சூழலிலும் இல்லை.

எந்த அடைப்படையில் நான் ஒரு சார்புள்ளவள் என்பது தீர்மானிக்கப்படுகிறது. பெயராலா., பிறந்த குலத்தாலா.. சமமாய் மனிதரை கருதுவது மனிதராய்ப் பிறந்த யாருமே செய்வதுதானே.. இதில் மனிதாபிமானமுள்ள நான் ஏன் எல்லாருக்கும் கிடைக்கும் அரிய வாய்ப்பை மறுதலிக்க வேண்டும். வேண்டாத இலவசங்களை எல்லாம் கட் செய்துவிட்டு கல்வியும் .,மருத்துவமும் கொடுத்தால் போதுமே.. மீன் பிடிக்கத்தான் கற்றுக் கொடுக்கவேண்டும் .. தினமும் மீன் தருவது தலைவலி என்பது என் கருத்து.

இதில் வேடிக்கை முகப்புத்தகத்தில்., அரசுப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்காதவர் கூட எல்லாருக்கும் சமச்சீர் கல்வி என்பது கானல்தானா என முதலைக் கண்ணீர் வடிப்பது.

ஆண் அரசாண்டால் எல்லாம் பெரியவருக்குத் தெரியும் என்றும் பெண் அரசாண்டால் சாமான்யன் கூட ராஜகுருவாய் அட்வைஸியாய் மாறுவதும் ஏன்.? இது இந்தியக் குடும்ப மனோபாவம். பெண் என்பவள் எல்லாவற்றையும் தன்னைக் கேட்டு தன் அனுமதி பெற்றுச் செய்யவேண்டும் என்பது.

மூன்று முறை அரசாண்டவர்களுக்கு தெரியாதா.. நாம் ஏன் அதை திடீரென்று முன்னிருத்தி பேசவேண்டும். ஒரு திட்டம் உண்மையிலேயே பயனளிக்கக்கூடியதாய் இருந்தால் அதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. சத்யமேவ ஜயதே என்ற இந்திய அரசின் தாரக மந்திரத்தை நானும் நம்புகிறேன்.

மதிய உணவுத்திட்டம்., தனியார் பள்ளிகளில் ஃபீஸ் குறைப்பு., என்ட்ரென்ஸ் எக்ஸாம் இல்லாமலிருப்பது என பல நடந்திருக்கிறது. இதிலும் சரியான முடிவே எடுக்கப்படும் என நினைக்கிறேன். அம்மா அப்பா அட்வைஸ் செய்தால் நாம் கேட்டுக் கொண்டது அந்தக்காலம். உனக்கென்ன தெரியும் என நம் பிள்ளைகள் பரிகசிப்பது இந்தக் காலம். இருந்தும் அம்மா அப்பா எது செய்தாலும் ஏன் இப்படி என நாம் கேட்டதில்லை. அவர்கள் செய்வதெல்லாம் நம் நன்மைக்கே என எண்ணுபவர்களுள் நானும் ஒருத்தி.

முதலில் எல்லாவற்றுக்கும் கண்டமேனிக்கு கருத்து சொல்லும் பழக்கத்தை விடுங்கள். தேவையானால் மட்டுமே சொல்லுங்கள்.. இப்போது என்னையும் கருத்து கந்தசாமி ஆக்கி விட்ட அம்முவுக்கு நன்றி.

செவ்வாய், 24 மே, 2011

புற்றை இனம் காணுங்கள். அடையார் கான்சர் இன்ஸ்டிடியூட் சேர்மன் டாக்டர் சாந்தா பேட்டி..



புற்றை இனம் காணுங்கள்..:-
******************************************
தற்காலத்தில் பெண்களை அதிகம் பாதிப்பது
மார்பகப் புற்று மற்றும் கருப்பைப் புற்று . இந்தப்
புற்றுநோயின் தீவிரத்தினால் பெண்கள் பெரும்
துயரமடைகிறார்கள். இது இருப்பதே தெரிந்து
கொள்ளாமல் வாழும் பெண்கள் அநேகம்.
நோய் முற்றிய பிறகு கருப்பையையோ.,
மார்பகத்தையோ நீக்குதல் என்பது பெண்களை
மனதளவில் துயருறச் செய்யும்.. இந்த நோய்
பற்றி அறிந்து பெண்கள் தங்களை பரிசோதனை
செய்து கொள்ள வேண்டும்.

புற்று நோய்க்கான சிகிச்சை அளித்து தன்
வாழ்நாளில் பெரும் பகுதியை இந்த வியாதியை
தடுப்பதிலும்., நீக்குவதிலும் பாடுபட்டு மக்களுக்கு
சேவை செய்து வரும் அடையார் கான்சர்
இன்ஸ்டிட்யூட்டின் சேர்மன் டாக்டர் சாந்தா
அவர்களை நம் லேடீஸ் ஸ்பெஷல்
வாசகியருக்காக சந்தித்தேன்.. அவர்களிடம்
நம் வாசகியருக்கு கான்சர் பற்றிய
விழிப்புணர்வுத் தகவல்கள் தந்துதவுமாறு
கேட்டு அவர்கள் சொன்னதை தொகுத்துள்ளேன்.

அன்னை தெரசா., சாரதா தேவியாரை
சந்தித்ததுபோல் உணர்ந்தேன்..

அந்தத் தாயின் கரங்களினால் எத்தனை
உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.. அந்தக்
கரங்களை பிடித்த போது அத்தனை உயிர்களின்
நன்றியையும் உணர்ந்தேன்..

1954 இல் கான்சர் இன்ஸ்டிட்யூட்
ஆரம்பிக்கப்பட்டது. அந்த காலத்தில் கான்சர்
என்பது பயங்கரமான வியாதி. கர்மா.
பிறவிலேயே வந்தது என மக்கள் எண்ணினார்கள்.
55 வருடம் கழித்து அந்த எண்ணத்தில்
நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு. கான்சரை
தடுக்க முடியும். நூற்றுக்கு அறுபது சதவிகிதம்
கான்சர் குணப்படுத்தக் கூடியதே.. மிச்சம்
40 சதவிகிதம் கான்சரையும் தடுக்க
ஸ்டெப்ஸ் எடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கு.

அடையார் கான்சர் இன்ஸ்டிடியூட்டில்
கான்சரை தடுப்பதில் முழு முயற்சியோடு
செயல்பட்டுக் கொண்டு இருக்காங்க....

கான்சர் என்பது ஒரு தனிப்பட்ட வியாதி
இல்லை.. அது உடலில் எத்தனை பாகங்கள்
இருக்கிறதோ அத்தனை பாகங்களிலும்
வரக்கூடியது. ( ITS NOT A SINGLE DISEASE. ) .
கண்., மூக்கு., வாய்., தொண்டை., வயிறு.,
கர்ப்பப்பை., மார்பகங்கள்., சிறுகுடல்., தோல்.,
ரத்தம் என எல்லா இடத்திலும் வரக்கூடியது.
எல்லா பாகங்களிலும்., எல்லா வயதிலும்.,
குழந்தையானாலும் சரி வயதானவரானாலும் சரி.
பணக்காரர் ., ஏழை என்ற வித்யாசம்
இன்றி வரக்கூடியது.

வளர்ந்த நாடுகள்., வளராத நாடுகள்., வளர்ந்து
வரும் நாடுகள் என உலகில் எல்லா இடங்களிலும்
கான்சர் இருக்கிறது. காலரா., டைபாய்டு எல்லாம்
கிருமி மூலம் வருது. தொற்று நோய் .
ஆனா கான்சர் கிருமி மூலம் பரவுவது இல்லை.
கான்சர் என்பது உடலில் உள்ள செல்கள்
கட்டுப்பாடு இழந்து பெருகுவது.
( CELL LOST ITS CONTROL AND BREAK THE CHAIN. ).
ஆரோக்கியமான அணுக்கள் கட்டுப்பாட்டுடன்
ஒரே அளவுடன் வளர்ச்சிபெற்று தன்னிச்சையாக
தன்மைபெற்று இயங்குகின்றன.

புற்றுநோய் வளர்ந்து உடலின் மற்ற அணுக்கள்
பாகங்களுக்கும் கட்டுக்கடங்காதபடி பரவக்கூடியது.
உடலின் உள்ளே உள்ள செல்களின் அதீதமான
வளர்ச்சியும்., வெளிப்புறக் காரணங்களும்
புற்று நோய் வரக் காரணிகள்.


40 % ஆண்களுக்கு வரும் புற்று நோயும்
20 % பெண்களுக்கு வரும் புற்று நோயும்
புகையிலையினால்தான் வருகிறது

புகையிலையை எந்த விதத்திலும்
உட்கொள்ளக்கூடாது.. புகைப்பிடித்தலோ அல்லது
வாயில் போட்டு மெல்லுவதோ கூடாது. சிகரெட்.,
பீடி., சுட்கா( ஆந்திரப் பிரதேசத்தில் பெண்கள்
உபயோகிப்பது)., சிகர்., இது போல வாயில் (ORAL)
வைத்துப் பிடிக்கப்படும் புகையிலைப் பொருட்கள்
மிக அதிக அளவில் புற்றை உண்டு செய்கின்றன.
சிகரெட் போன்றவற்றில் நெருப்பு வாயில்
வெளிப்புறம் வைத்துப் பிடிக்கப்படுகிறது என்றால்
சுட்கா போன்றவை நெருப்பை வாய்க்கு உள் பக்கமாக
வைத்துப் பிடிக்கப்படுகின்றன. எனவே அதிக அளவில்
மக்கள் இதனால் புற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
.
புகையிலையை முற்றிலுமாக தடை செய்தால்
புற்றுநோயை 80% தடுக்கலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தி்ல் 3,00,000 பேரிடம்
இது பற்றி சர்வே எடுக்கப்பட்டது. அப்போது
புகையிலையை உபயோகித்தல் என்பது் கல்வி அறிவு
அதிகமாக அதிகமாக குறைகிறது. ஏனெனில் படிப்பு
அதிமாகும்போது இது பற்றிய விழிப்புணர்வு அதிகமாகிறது.
எனவே நம் பெண்களுக்கு கல்வி அறிவு அவசியம்
தேவை. அதனால் பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும்
போது பெண்கள் வீடு., கணவர். குழந்தைகளை பார்த்துக்
கொள்ள முடியும். கல்வியறிவு பெற்றதனால்
புகையிலையின் தீமைகளை உணர்கிறார்கள்.
புற்றுநோயாக மாறுவதற்கு முன்பே நாம்
புற்று நோயை கண்டறியலாம். 100 சதவிகிதம்
குணப்படுத்த முடியும். வருமுன் காப்போம்.

PREVENTION IS BETTER THAN CURE. WE CAN PREVENT CANCER.

டெக்னாலஜியும் ரொம்ப இம்ப்ரூவ் ஆகி இருகிறது.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்., சி டி ஸ்கேனர்.,
எம் ஆர் ஐ., பெட்ஸ் ஸ்கேன்
( ULTRA SOUND SCANNER., C.T. SCANNER., M.R.I., PETS SCAN., )
இவைகள் மூலமா நாம் கான்சரை கண்டறிய முடியும்.
(WE CAN IDENTIFY WITH MEDICAL ONCOLOGY).

பெண்களில் அதிகமாக காண்பது கருப்பை ., மார்பகம்
மற்றும் வாய்ப் புற்றுநோய்கள்தான். ஆண்களில் 40 சதம்
புற்றுநோய் புகையிலையினால் வருகிறது. அவை வாய்.,
நுரையீரல்., தொண்டை., மற்றும் குரல்வளையைத்
தாக்குகின்றன.

குணப்படுத்தவே முடியாது என்று எண்ணப்பட்ட
புற்று நோய்கள் இந்நாளில் குணப்படுத்தப்படுகிறது.
கான்சர் நோயாளிகள் முற்றின நிலையில்
வருவதுதான் கஷ்டமாக இருக்கிறது..
அட்வான்ஸ்ட் கான்சருக்கு மல்டி மொராலிட்டி ட்ரீட்மெண்ட்
மூலம் தரமான சிகிச்சை கொடுக்கப்படுகிறது.

ADVANCED CANCER MULTI MORALITY TREATMENT..:_

1. SURGERY ( சர்ஜரி)

2. RADIATION ( ரேடியேஷன்)

3. CHEMORAPHY ( கீமோதெரஃபி)

4. IMMUNOTHERAPHY ( இம்மியூனோதெரஃபி)

இவற்றின் மூலம் தரமான சிகிச்சை தரப்படுது.

( NEW EQUIPMENTS AND DIFFERENT MACHINES ) .

1957-65 இல்

1.கோபால்ட் பீம் ( COBALT BEAM) .,

2. லீனியர் ஆக்ஸிலரேட்டர் ( LINEAR ACCELERATOR)

வந்தது.


ஆரம்ப நிலையில் மார்பு புற்றுநோயைக் குணப்படுத்தலாம்.
முற்றிய நிலையில் உள்ள புற்று நோய்க்கு பன்முக
சிகிச்சை தேவைப்படுகிறது. .மார்பகத்தை அகற்றாமலே
பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் அகற்றலாம். .
முன்பெல்லாம் முழு மார்பகத்தையும் எடுக்க
வேண்டி வரும் . அதை பெண்கள் விரும்புவதில்லை..
ஆனால் இதன் மூலம் பாதிக்கப் பட்ட பகுதியை
மட்டும் எடுக்கலாம். போன் கான்சரில் (காலில் வரும்
புற்றுநோயில்) குறிப்பிட்ட பகுதியை
மட்டும் எடுக்கலாம். ட்ரீட்மெண்ட் தான் கொஞ்சம்
எக்ஸ்பென்சிவ். அரசு உதவியோடு இந்த சிகிச்சை
எல்லாம் வழங்கப்படுகிறது.


இதில் 40 சவிகித நோயாளிகள்தான் பணம் செலுத்தி
சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள்.

மற்ற 60 சதவிகித
நோயாளிகள் (SUBSIDISED PATIENTS) ஜெனரல் வார்டு
இதிலும் 20% இலவச சிகிச்சை
அளிக்கப்படுகிறது மீதி 40 % நாமினல் பேமண்ட்.
. மெடிக்கல் இன்சூரன்ஸ்
எடுக்கப்பட்டிருந்தால் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது.

தடுப்பு முறைகள்:-

1. புகையிலை ( TOBACCO) :- புகையிலையை எந்த
வடிவத்திலும் எந்த வயதிலும் உபயோகிக்கக்
கூடாது. இது புற்று நோயை மட்டுமல்ல., இதய நோய்.,
நுரையீரல் நோய் ., ட்யூபர் க்ளோசிஸ் ( காசநோய்) .,
இருமல் ஆகியவற்றை உண்டாக்குகிறது.

2. பொது சுகாதாரம்..( GENITAL HYGIENE) :- இது
செர்விக்கல் கான்சர் (CERVICAL CANCER ) எனப்படும்
கர்ப்பப்பை புற்றை தடுக்கிறது.

1. சுத்தமான நாப்கினைப் பயன்படுத்த வேண்டும்.

2. வெள்ளைப் படுதல் ., அரிப்பு
இருந்தால் பார்க்கணும்.

3. துர்நாற்றம்.,ரத்தம் சேர்ந்து
வந்தால் கட்டாயம் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

4. மாதவிடாய் சமயம் தவிர மற்ற நேரங்களிலோ மற்றும்
மாதவிடாய் நின்று விட்ட பிறகோ ரத்தம்
வெளியேறினால் பார்க்கணும். மேலும்
இண்டர்கோர்ஸின் போதும் ரத்தம் வெளியேறக் கூடாது.


10 சதவிகிதம் பரம்பரையாக புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.


BREAST CANCER ரத்த உறவினர்களிடம்
இருந்தால் பார்க்கணும். இது 90 சவிகிதம் வருவதில்லை .
10 சவிகிதம்தான் வருகிறது. மார்பில் கட்டிகள் இருந்தால்.,
காம்பில் கசிவு இருந்தால் கட்டாயம் மாமோக்ராம்
செய்ய வேண்டும். சின்ன கட்டிகள் இருந்தால்
மருத்துவரை அணுகி பிறகு எடுக்க வேண்டும்.
தாங்களாகவே முடிவு செய்யக் கூடாது.
புற்று என்றால் மாமோகிராமில் தெரிந்து விடும்.
பொதுவாக 40 வயது ஆனால் அவ்வப்போதும்
50 வயதுக்கு மேல் வருடத்துக்கு ஒரு முறையும்
முழு உடல் பரிசோதனை
( FULL HEALTH CHCK UP ) செய்து கொள்ள வேண்டும்.

உணவுமுறை. (DIET) :- AVOID FAT., FAST FOODS.,

JUNK FOODS., RED MEAT., BEEF., TOBACCO., ALCOHOL..

கொழுப்பு உணவுப்பொருளைத் தவிருங்கள்.
ஃபாஸ்ட் ஃபுட்ஸ்., துரித உணவுகள்., டப்பாவில்
பதப்படுத்தப்பட்ட உணவுகள்., இறைச்சியில்
மாட்டிறைச்சி., இவற்றை தவிருங்கள்.


புகையிலையும்., மதுபானமும் அறவே கூடாது.

நிறைய பச்சைக் காய்கறிகள் ., பழங்கள் எடுத்துக்
கொள்ளுங்கள். சீரியல்ஸில் அரிசி., போன்றவை நல்லது.
அசைவத்தில் மீன் பரவாயில்லை.. அதிக காரம்., புளிப்பு .,
உப்பு தவிர்க்கவும். அதிகச் சூடு ., அதிகக் குளிர்ச்சியான
உணவுப் பண்டங்களையும் தவிர்க்கவும். மிதமான சூடு .,
குளிர்ச்சியுடைய உணவு நல்லது..

உணவே மருந்து. நல்ல பழக்க வழக்கங்கள் நாம்
கைக்கொள்ளும் போது நம் உடல் நம் வசப்படும்.
மருந்தை உணவாக சாப்பிடாமல் உடம்பை முன்பே
கவனித்து ஆரோக்கியமாக இருப்பது நம் கையில்தான் உள்ளது..

குறிப்பு :- பிப்ரவரி 4 உலக கான்சர் தினம்.

ஜூன் 19 ஆம் தேதியன்று இங்கே குணமான நோயாளிகள்
வருடாவருடம் ஒன்று கூடுகிறார்கள். குணமானவர்கள்
சந்திக்கும் நாள் என்று அதற்குப் பெயர். அவர்களும்
தங்களால் இயன்ற பண உதவியை கான்சர்
இன்ஸ்டிட்யூட்டுக்கு செய்கிறார்கள்.











திங்கள், 23 மே, 2011

தொற்று...

தொற்று..
*****************
வெற்றிலைக்காவி.,
எச்சில்.,
நாப்கின் துண்டுகள்.,
வார்த்தைக் கிறுக்கல்கள்
விழுந்து கிடக்கும்
பொதுக்கழிவறையான
தனது தேகத்தை
கழுவிக்கொண்டே இருக்கிறாள்...
தொற்று வியாதிகளின்
தீவிரம் தெரிந்தும்
தொழில் வாய்ப்புக்காய்
பணத்தை எண்ணும் குடும்பம்.,
அவளுக்குப் பின்
அழுது கொண்டே உண்கிறது
அவளது சவத்தை.

டிஸ்கி:- தோழி ஈழவாணி ஜெயாதீபனின் புது வெப்சைட் பூவரசி.காம் இல் மே 1. 2011 இல் இந்தக் கவிதை வெளிவந்துள்ளது.

ஞாயிறு, 22 மே, 2011

நீங்கதான் சாவி. சுரேகாவின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள்.. எனது பார்வையில்

நீங்கதான் சாவி..:-
******************************
சுரேகாவை ஒரு வலைப்பதிவராக அறிவேன்.. அவர் எழுதிய சுய முன்னேற்றக் கட்டுரைகளின் தொகுப்பு இது.. வெளியீ்டு நாகரத்னா பதிப்பகம்.. விலை ரூ 50.

அட்டைப் படத்திலேயே மனிதனைச் சாவியாக., பிரச்சனைகளின் திறவுகோலாக சித்தரித்திருப்பது அருமை..

அறிவுரை சொல்பவர் அப்படியே இருப்பார்.. கேட்பவர்கள் வளர்ந்து விடுவார்கள்.. அப்படி இல்லாமல் அந்த அறிவுரைப்படி நாமும் இருக்க வேண்டும் என நினைத்ததனால் ஜேசிஐ ( JUNIOR CHAMBER INTERNATIONAL) மூலம் கற்றுக் கொடுத்து தன்னையும் சரி செய்து கொள்ள முடிந்ததாக தன்னுரையில் சொல்லி இருக்கிறார் சுரேகா.

இவர் ஒரு தன்னம்பிக்கை பயிற்சியாளர்..

சுதந்திரமாக செயல்பட அனுமதித்த பெற்றோருக்கும்., தன் குறைகளுடன் தன்னை ஏற்றுக்கொண்ட மனைவி குழந்தைகளுக்கும் நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார்..

இனி விமர்சனம்..

மொத்தம் 18 தலைப்புக்கள் ..

ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் அதை ஒட்டிய சினிமா சம்பந்தப்பட்ட ஒரு தகவலையும் இணைப்பா கொடுத்திருக்கிறார்..

மொக்கச்சாமி என்ற காரெக்டர் மூலமா நாம பண்ற தவறுகளையும் சுட்டிக் காண்பிக்கிறார்..

”பென்சில் வாழ்க்கை”யில் நாம நம்மை கூர் தீட்டிக்கொண்டே இருந்தால்தான் ஜொலிக்க முடியும். பென்சில் மாதிரி நம் தப்பை அழித்து எழுதவும் தயாரா இருக்கணும்னு சரியான காரணங்களோட சொல்றார்..

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சொல்வராம் .. சிறிய ”லட்சியம்” ஒரு குற்றம்னு.. அதுனால பெரிய லட்சியங்களை கைக்கொள்ளுங்கள்.. தேடிச் சோறு நிதம் தின்று வீணாக்காமல் என்கிறார்..


” கால நிர்வாகம்” இதில் நேரத்தை நிர்வகிக்கும் கலையைத் தெரிஞ்சுக்கணும்., நேரத்தை வீணடிப்பது தெரிந்தே ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை குப்பைத்தொட்டியிலிடுவதற்குச் சமம்..

”பொருள் ஒழுங்கு” இதில் ஜப்பானிய தொழில் நேர்த்தியை குறிப்பிடுகிறார்.. 5S என்பது அதன் பெயர்.. செய்ரி., செய்ட்டன்., செய்சோ., செய்கெட்ஸு., மற்றும் சிட்சுகெ..எல்லாவற்றையும் புரியும்படி அடுக்கி வைத்து பழைய குப்பைகளை அகற்றுதல்தான் அது..

ஒற்றை நொடி வாழ்க்கையில் செய்யும் வேலைகளை அனுபவித்து அந்த நொடியில் வாழுங்கள்.. தொலையாமல் பேசுவோம் என்ற தலைப்பில் நாம் பேசும்போது போனை நோண்டிக் கொண்டிருக்கும் நபர்களையும் போனிலேயே வாழ்பவர்களையும் பற்றியும் நல்ல சாடல்..


எந்த வேலையையும் தள்ளிப் போடவே கூடாது.. சரியான திட்டமிடல் முக்கியம்..

வாயில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்கும் ஒரு சென்சார் போர்டு வச்சு வெளியிடுங்க..வார்த்தைகளை கவனமா கையாண்டா நாமதான் தகவல் தொடர்பு குரு.. யாரையும் புறம் கூ்றாதீங்க..

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லியை அண்டவே விடக்கூடாது.. ஏனெனில் அதனால் நம்மை வெறியூட்ட நினைப்பவர்களுக்கு நாமே வழி செய்ததாகிவிடும். இதைப் படிக்கும்போது எனக்கு கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் சொன்னது ஞாபகம் வந்தது.. .,” நீ எந்த விஷயம் நடக்கக் கூடாது என்று கோபப்படுகிறயோ அந்த விஷயம் நீ கோபப்பட்ட ஒரே காரணத்துக்காக நிகழ்ந்து விடும் “ என்று.. எனவே பாலகுமாரன் சொல்வது போலும் கோபத்தை பொறுமையில் ஊறப் போடுங்கள்.. ” பிழை பொறுங்கள்..

எது நம் திறமை.. என்று கண்டுபிடித்து அதில் செயலூக்கம் காட்ட வேண்டும்.. எந்திரன் மாதிரி நம்ம கிட்ட திறமைகள் கொட்டிக் கிடக்கும். அதை அடையாளம் கண்டு சொல்லக் கூடிய நல்ல நண்பர்கள் வட்டத்தை பெருக்கிக்கணும்..

சேர்ந்து வாழ்தல் பற்றியும் .. (ஆணோ., பெண்ணோ., யாரும் யாருக்கும் உடைமை இல்லைன்னு நினைச்சுட்டாலே பாதி பிரச்சனை தீர்ந்திரும்.. )ஆண்டாண்டு காலமா சொல்லப்பட்டு வரும் கற்பு என்பதன் அர்த்தத்தையும் காமத்தை துரோகமா பார்க்கப்படுறது குறித்தும் சும்மா நச்சுன்னு சொல்லி இருக்கார்..

எதுவும் அளவோட இருக்கணும் அது சுய மதிப்பீடுன்னு சொல்லப்படுற ஈகோவா இருந்தாலும்.. இல்லாட்டி அதிகம் ஊதப்பட்ட பலூனாய் வெடிச்சிரும்..

ஒப்பீடும் எதிர்பார்ப்பும் இல்லாத வாழ்வு அருமையா இருக்கும். நம்ம தனித்துவத்தோட நாம வாழணும்..

நம்மோட சூழல் பற்றி அறிந்து வாழணும்.. வீடு., நிறுவனம்., அலுவலகம்., கல்லூரி இது பற்றி எல்லாம் விவரங்கள் தெரிஞ்சு வைச்சுக்கணும்..

எதிரிகள் யார் போட்டியாளர்கள் யார்னு தெளிவு இருக்கணும்.. அற்ப விஷயங்களுக்காகவெல்லாம் எல்லாரையும் எதிரியா கருதக் கூடாது.. அதை விட்டுட்டு நம்ம முயற்சிக்காக சக்தி முழுவதையும் செலவழித்து ஜெயித்து வாழ்ந்து காட்டணும்..

அநீதி நடந்தால் தட்டிக் கேளுங்கள்.. தவறுகளுக்கு எதிராக குரல் கொடுங்கள்.. தவறுகளைத் தட்டிக் கேக்கும் போது தன்னம்பிக்கை வளர்கிறது..

எந்த ஒரு பிரச்சனைன்னாலும் தீர்வைப் பாருங்க.. அநேக பிரச்சனைக்கு காரணம் நாமளாவே இருப்போம்.. உலகமே மோசம்னு நினைக்காம.. நாம அதை எப்பிடி நமக்கு சாதகமா திருப்பிக்கலாம்னு முயற்சி பண்ணனும்.. அந்த மந்திரச் சாவி நம் கையில் இருந்தால் உலகமே நம்வசம்தான்.. ஏன்னா நம்ம வாழ்க்கைப் பூட்டுக்கு சாவி நாமதான்..

இந்த புத்தகம் முழுவதும் நான் மிகவும் ரசித்தது தன்னம்பிக்கை., தன்னம்பிக்கை., தன்னம்பிக்கை மட்டு்மே.. தமிழில் எண்ணம் போல் வாழ்வு என்று சொல்வார்கள்.. அது போல் தன்னை முன்னேற்றிக் கொள்ள தானாய்த்தான் முனைய வேண்டும்..

நம் வாழ்வெனும் பூட்டுக்கான அணுகுமுறை என்ற சாவி நம் கையில்.. எல்லாருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் இந்த செய்தியை அழுத்தமாகப் பதிந்திருக்கும் சுரேகாவுக்கு வாழ்த்துக்கள்..

டிஸ்கி:- சுரேகாவின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள் பற்றிய எனது இந்த விமர்சனம் 23.1.2011 திண்ணையில் வெளிவந்துள்ளது. நன்றி திண்ணை.:)

வியாழன், 19 மே, 2011

58 ஆவது தேசிய திரைப்பட விழாவில் விருதுக்கு வாழ்த்துக்கள் ஜீவாவுக்கும்., திரிசக்திக்கும்.

நண்பர் ஜீவாவின் ஓவியங்கள் அற்புதமானவை.. அவர் எழுதிய ஒரே புத்தகம் சினிமா பற்றியது. அது குறித்தான விமர்சனத்தை நான் என்னுடைய வலைத்தளத்தில் எழுதி இருக்கிறேன்..


திரிசக்தி வெளியிட்ட புத்தகங்களில் திரைச்சீலை என்ற இந்தப் புத்தகம் போன வருடம் வெளியிடப்பட்டது. தமிழ் சினிமா., இந்திய சினிமா., உலக சினிமா குறித்தான பரந்துபட்ட அனுபவங்களோடு எழுதப்பட்டது. படிக்கும்போதே பிரமிப்பை அளித்த நூல் இது.


தந்தையுடன் தான் அமர்ந்து பார்த்த படங்கள்., பல படங்களுக்கு போஸ்டர்கள் வரைந்தது., பின்னும் இவர் மகனும் திரைப்பட ஒளிப்பதிவாளராயிருப்பது. (ஆனந்த் ஜீவா தமிழ்ப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்) என சினிமாவையே நேசித்து ., சினிமாவையே சுவாசித்து வாழ்பவர் இவர். ஒரு வலைத்தளமும் வைத்திருக்கிறார்..” ஜீவார்டிஸ்ட் ”என்று.


58 ஆவது தேசிய திரைப்பட விழாவில் சினிமா பற்றி .,”திரைச்சீலை” என்ற புத்தகம் எழுதியமைக்கு சிறப்பாகக் குறிப்பிடப்படும் புத்தகம் என பட்டயம் கிடைத்துள்ளது. ஆடுகளம் தனுஷ்., தென்மேற்குப்பருவக்காற்று சரண்யா., வைரமுத்து ஆகியோருடன் பரிசைப் பெற தலைநகரம் செல்லும் நண்பர் ஜீவாவுக்கு வாழ்த்துக்கள்..


அவர் புத்தகம் பற்றிய என் விமர்சனம் இதோ.. திரிசக்தியின் திரைச்சீலை எனது பார்வையில்..




சிறப்பான எழுத்துக்களை ஊக்குவிக்கும் தி்ரிசக்திக்கும் வாழ்த்துக்கள்..

வியர்வையை விரட்டுங்க.. கோடையைக் கொண்டாடுங்க..





கோடைகாலத்தில் வெய்யிலால் உண்டாகும் உடல்சீர்கேடுகள் என்னென்ன.. அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என சுபம் மருத்துவமனையின் டாக்டர் வேல்ராணி அவர்களிடம் நம் இவள் புதியவள் வாசகியருக்காக பேட்டி எடுத்தோம்.. அவர் கூறியவற்றை பின்பற்றி வியர்வையை விரட்டுங்க.. கோடையைக் கொண்டாடுங்க....

வியர்வை., வேர்க்குரு., வேனல்கட்டி.,துர்நாற்றம்., சன்ஸ்ட்ரோக்., நீர்க்கடுப்பு அல்லது நீர் எரிச்சல்., அம்மை., வயிற்றுப்போக்கு., உடல் உஷ்ணம்., படை., சொறி., சிரங்கு., புண்கள்., கொசுக்கடி., சருமம் கருத்து போதல் அல்லது வெளுத்துப் போதல் என வெய்யில் காலத்தில் ஏற்படும் தொல்லைகளுக்கு அளவில்லை..இவை எல்லாவற்றுக்கும் மூல காரணம் வியர்வைதான்..


வியர்வைச் சுரப்பிகள் வெய்யில் காலத்தில் அதிகம் வேலை செய்கின்றன. எனவே வேர்க்குரு உண்டாகிறது. இது அதிகமானால் வேனல்கட்டி உருவகிறது. அதிகமாக வியர்வையினால் உடல் துர்நாற்றம் உண்டாகிறது. இதைத்தவிர்க்க தினம் காலை மாலை இரண்டு வேளையும் குளிக்க வேண்டும்., ஒரே ப்ராண்ட் சோப்பைத்தான் உபயோகிக்க வேண்டும். நம் சருமம் ஒரு சோப்புக்கு பழகியபின் மாற்றினால் சருமப்பிரச்சனைகள் உருவாகும். எனவே எந்த சோப்பை உபயோகிக்கிறோமோ அதையே எப்போதும் உபயோகிக்க வேண்டும்.

சுத்தமான துவாலைகள் ., கைக்குட்டைகள் உபயோகப்படுத்தவேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வேர்க்குரு அதிகமானால் அரிப்பு ., தலையில் பொடுகு ஏற்படும். வேர்வை நீங்க குளித்தபின் வேர்க்குருவுக்கான பவுடர் போட்டுக் கொள்ளலாம். ஆனால் அதிகமான பவுடர் போட்டால் அதுவே தோலில் படிந்து மயிர்க்கால்கள் அடைபட்டு இன்ஃபெக்ட் ஆகி வேனல்கட்டி ஆகலாம்.

வேர்வை கை மடிப்புகளில் அல்லது உடல் மடிப்புகளில் படிந்து சிவந்து தடித்துவிடும். வியர்வை இல்லாமல் நன்கு துடைக்கவேண்டும். இல்லாவிட்டால் படை., சொறி., சிரங்கு., புண்கள் போன்றவை ஏற்படக்கூடும். இதை தடுக்க குளித்தபின் நன்கு துடைத்து விட்டு களிம்பு அல்லது ஆயிண்ட்மெண்ட் அல்லது டியோடரண்ட் தடவுவதை விட ., லேசாக வேர்க்குருபவுடரைப் போட்டுக் கொள்ளலாம்.. துர்நாற்றத்தைத்தடுக்க மைல்ட் பாடிஸ்பிரே உபயோகப்படுத்தலாம்.

தலைக்கு தரமான ஷாம்பூ., அல்லது சீயக்காய்த்தூள் உபயோகப்படுத்தலாம். தலையில் வேர்க்காமல் இருந்தாலே பொடுகு வராது. துர்நாற்றமும் வராது. பயத்தமாவு., கடலைமாவு போட்டும் நன்கு அலசலாம். வியர்வையினால் பெருகும் ஃபங்கஸை இவை தடுக்கின்றன.

நீர்ச்சுருக்கு., அல்லது நீர்க்கடுப்பு வந்தால் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்., நீர் ஆகாரம் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை ஜூஸ்., நன்னாரி சர்பத்., வெட்டிவேர் சர்பத்., நீர்மோர்., பானகம்., இளநீர்., நுங்கு., பழச்சாறுகள் போன்றவை தாகவிடாயை தடுக்கும். சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் எரிச்சலையும் தடுக்கும். பாட்டில்களில் விற்கப்படும் குளிர்பானங்களை விட வீட்டிலேயே செய்து அருந்துவது சிறப்பு. மண்பானைகளில் நீர் வைத்து அருந்துவது நல்லது.. அதை முதலில் நன்கு சுத்தமாக்கியபின் தண்ணீர் ஊற்ற வேண்டும்.


மாங்காய்.,பச்சை மிளகாய் போன்ற உஷ்ணம் ஏற்படுத்தும் உணவுகளை அளவோடு சாப்பிடவேண்டும். காரம் மற்றும் மசாலா குறைக்க வேண்டும்.இல்லாவிட்டால் அவை சூடு தாங்காமல் வயிற்று வலியையும் வயிற்றுப் போக்கையும் உண்டாக்கும். எந்த உணவையும் அதிக சூட்டோடோ அல்லது அதிக குளிர்ச்சியாகவோ உண்ணக்கூடாது. சாதத்தில் அதிகம் தயிர் அல்லது மோர் சேர்த்து உண்ணலாம்.

ஐஸ் சேர்த்து தயாரிக்கப்படும் குல்ஃபி., ஐஸ்க்ரீம்., மில்க்‌ஷேக் ., ஃப்ரூட் சாலட்டுகளையும் மிதமான குளிர்ச்சியில் ரூம் டெம்பரேச்சரில் சாப்பிடவேண்டும்.. தரமானவைகளாக இல்லாவிட்டால் தொண்டையில் இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டுவிடும்.

உடல் சூடு அதிகம் இருக்கும். எனவே அதிகம் நீர் அருந்த வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள்., வெள்ளரிக்காய்., பூசணிக்காய்., பீர்க்கங்காய்., புடலைங்காய் போன்றவையும்., பழங்களில் தர்ப்பூசணி., வெள்ளைக் கிர்ணி., சிவப்பு கிர்ணி., வெள்ளரிப்பழம் போன்றவையும்., எலுமிச்சை ஜீஸ் மற்றும் அனைத்து பழச்சாறுகளும் ஏற்றவை.

வெய்யில் அதிகமாக இருந்தால் சன்ஸ்ட்ரோக்., மயக்கம்., தலைச்சுற்றல் ஏற்படும். சிலருக்கு அம்மையும் ஏற்படும். எனவே வெய்யில் நேரங்களில் அதிகம் வெளியில் செல்லாமல் மாலை நேரங்களில் செல்லலாம். வேலைக்கு செல்லவேண்டிய பெண்கள் சன்ஸ்கிரீன் லோஷன்கள் உபயோகப்படுத்தலாம். மேலும் கைகளுக்கு உறை அணிந்து கொள்ளலாம். அவை சருமம் கறுப்பதை தடுக்கின்றன. ஆண்கள் தொப்பி அணிந்து கொள்ளலாம்.

வெளியே செல்ல வேண்டி வந்தால் கறுப்பு குடை பயன்படுத்துவதை விட வெள்ளைக் குடைகள் அல்லது கலர் குடைகள் பயன்படுத்தலாம். காலமாற்றத்துக்கு ஏற்ப காட்டன் உடைகள் அணிய வேண்டும். சிந்தடிக் உடைகளை அணியக்கூடாது. கோடை முடியும் வரை வாஷபிள் காட்டன் உடைகள்தான் பெஸ்ட். உள்ளாடைகளும் காட்டனில்தான் அணிய வேண்டும்.

முன்பெல்லாம் வீடுகளில் வெட்டிவேர் தட்டி இருக்கும். தற்போது நாம் ஃபேன்., ஏசி., ஸ்பிளிட் ஏசி., ஏர் கூலர் போன்றவற்றுக்கு மாறிவிட்டோம். ஏர் கூலர்களில் இருக்கும் நீரை அடிக்கடி மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் கோடையிலும் கொசுக்கள் உற்பத்தியாகி கொசுக்கடியால் வேனல்கட்டிக்கு சமமாக சருமம் சிவந்து தடித்து விடும்.

எனவே இந்த கோடைகாலத்தில் இருமுறை குளித்தும்., காட்டன் உடைகள் அணிந்தும்., நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கள் பழங்கள்., நிறைய நீர் ஆகாரங்கள் எடுத்தும் வியர்வையை விரட்டுங்க.. கோடையையும் கொண்டாடுங்க..


டிஸ்கி :- இந்தக் கட்டுரை மே மாத இவள் புதியவளில் ஆண்டாள் என்ற பெயரில் வெளியாகி உள்ளது.. உங்க தேனக்கா புனைபெயரில் எல்லாம் எழு்த ஆரம்பிச்சாச்சு மக்காஸ்..:)


புதன், 18 மே, 2011

அடுத்த கோர்ஸ்.




அடுத்த கோர்ஸ்..
****************************
காய்ச்சலுக்கு.,
இருமலுக்கு
உடல்வலிக்கு.,
தொண்டைப் புண்ணுக்கு என
பல வண்ண மாத்திரைகளையும்
ஒன்றாய் விழுங்குவதாய்..

ஈழத்துக்கு.,
மீனவர்க்கு்.,
சாய(ந்த) மண்ணுக்கு.,
உரிமை மீறலுக்கு என
கவிதை எழுதித் தொலைக்கிறேன்..

ஒன்றையும் குணமாக்கும்
வழி தெரியாமல் விழிக்கிறேன்..
கையில் அடுத்த கோர்ஸை
தொடரச் சொல்லும்
மருத்துவக் குறிப்போடு..

////இன்று மே 18 அழிவை நினைத்து வருந்தி இக்கவிதை.////




செவ்வாய், 17 மே, 2011

நதி.. மலை..

1.தாய்மை ததும்பும்
பசிய மார்பகத்திலிருந்து பாலாய்
கசிந்து கொண்டிருந்தது நதி..
*********************************************
2. வெண் தீயாய்
சடசடவென மலையிலிருந்து
பற்றிப் பரவுகிறது நதி..
*************************************************

3. கர்ப்பப்பைகளைப் போல
ஒளிந்து வைத்திருக்கிறது மலை
குகைகளை..
**********************************************

4. ஆடுகளைப் போல
வெட்டிக் குவிக்கப்பட்டு
சுண்ணாம்புக் கவிச்சியுடன் மலை



திங்கள், 16 மே, 2011

கல்கி கவிதை கஃபேயில் எனது இரவு கவிதை...

நதி வட்டப்பனையோலைத்
தடுக்குகளாய் முடைகிறது
அலையை..

மரம் கலைத்துக் கலைத்து
சீட்டுக்கட்டுக்களாய் வீசுகிறது
இலையை..

வானம் நதிக்குள்
வெள்ளிக்கிண்ணமாய்க் கவிழ்க்கிறது
பால் நிலவை.

சில்வண்டுகள் ஒளிந்திருந்து
சுரண்டிக் கொண்டிருக்கின்றன
இரவை..

கோட்டான்கள் ஹைடெசிபல்களில்
அதிரடிக்கிறது நெளிக்கோலங்களாய்
குளத்தை..

துருவன் நுண்ணோக்கிக்
கொண்டிருக்கிறான் தினம் பிரளும்
பூமியை..

டிஸ்கி:- இந்தக் கவிதைகள் 8.5.2011., கல்கி கவிதை கஃபேயில் வெளிவந்துள்ளன. நன்றி கல்கி..:)

ஞாயிறு, 15 மே, 2011

361* வெளியீடு.

நேற்று டிஸ்கவரி புத்தக நிலையத்தில் 361 டிகிரி புத்தக வெளியீடு நடந்தது. நரன் மற்று நிலாரசிகனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது. கவிதைகள்., புத்தக விமர்சனம்., சிறுகதைகள்., கட்டுரைகள்., மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் கொண்டு இலக்கியச் சிற்றிதழாக தனிச்சுற்றுக்கு மட்டும். விலை ரூபாய் 20 . காலாண்டிதழ். மிக அருமை . வாங்கிவந்தவுடனே படித்து விட்டேன்.. மிகச்சிறந்த கவிதைகள்.

நரன் வரவேற்க., குட்டி ரேவதி வெளியிட., கவிதா முரளீதரன் பெற்றுக் கொண்டார். ஐயப்ப மாதவன்., அஜயனும் இது குறித்து பேசினார்கள்.


அட்டைப்பட ஓவியம் ரோஹிணி மணி.. மற்ற ஓவியங்களுமே உள் கவிதை கொண்டிருக்கின்றன. மிகப் பெரிய அரிய முயற்சி இது.. அ. முத்துலிங்கம் தொடங்கி., ஜி. குப்புசாமி., கணேசகுமாரன்., ,மனோஜ்., செல்வ புவியரசன்., நேசன்., நரன்., வெய்யில்., நிலாரசிகன்., குட்டி ரேவதி., லீனா, கதிர்பாரதி வேல்கண்ணன்., நதியலை., தேவதச்சன்., விஸ்வாமித்திரன்., அபிலாஷ்., மணிகண்டன்., மண்குதிரை., ஊர்சுலா ராகவ்., சிவன்., முத்துவேல்., சாகிப்கிரான்., மணிவண்ணன்., சபரிநாதன்., இளங்கோ ஆகியோரின் படைப்புகள் அமிர்தம்.

சாதாரண ரசிகர்களை இலக்கிய தரத்துக்கு எடுத்துச் செல்வதில் இதுபோன்ற சிற்றிதழ்களின் பணி பெரிது. இன்னும் இலக்கியத்தில் மேம்பட வேண்டும் என நினைப்பவர்கள் இந்த புத்தகத்தை படித்துப் பாருங்கள்.

பெண் எழுத்துக்கள் எவ்வாறு மாறி வருகின்றன என அறிந்துகொள்ள உதவியது. என் சக வலைப்பதிவ தங்கைகளும் தோழிகளும் இதை ஒரு முறையாவது படித்துப் பாருங்கள். நாம் எழுத யோசிக்கும் கருக்களில் எல்லாம் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. குறியீட்டுக் கவிதைகளும் படிமானக் கவிதைகளும் நம்மை வேறு வேறு தளங்களுக்கு எடுத்துச் செல்கின்றன. லீனாவின் கவிதைகள் அட்வான்ஸ்ட் திங்க்கிங்கில் போல்டாக எழுதப்பட்டவை. அவ்வாறு நீங்களும் எழுதுங்கள் என சொல்லவில்லை. அப்படியும் ஒரு ஆங்கிள் ., வியூ இருக்கிறது என தெரிந்துகொள்ளலாம்.

இதில் ரொம்பப் பிடித்தவை., மனோஜின் ,”அந்நியை” சிறுகதை., நேசனின் ,”மற்றும்-ஃ” கதிர்பாரதியின் ”யவ்வனம்” கவிதை ., மண் குதிரையின் ,”கண்ணாடி பிம்பங்களின் இசை”..

அடுத்த இதழ்களுக்கும் அனைவரும் கவிதைகள்., கதைகள்., கட்டுரைகள் அனுப்புங்கள். தொடர்புக்கு 361degreelittlemagazine@gmail.com.

361 டிகிரியை பெரும் முயற்சிக்குப்பின் கொண்டுவந்திருக்கும் நரனுக்கும் நிலாரசிகனுக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே வளர்க.. உங்கள் இலக்கியப்பணி..!!

டிஸ்கி 1.. :- இந்த வெளியீடு 16.5.2011. உயிரோசையில் வெளிவந்துள்ளது.

டிஸ்கி 2 ..:- டிஸ்கவரி புத்தக நிலையத்தில் மே 10 இல் இருந்து விகடன் (புக் ஃபேர்) பிரசுர புத்தகங்கள் 10தவிகித டிஸ்கவுண்டில் கிடைக்கின்றன.


டிஸ்கி 3 :- சென்னையில் இருக்கும் பெண் வலைப்பதிவர்கள் மே 20 மெரீனா பீச் மீட்டில் கலந்து கொளுங்கள். லேடீஸ் ஸ்பெஷலின் பெண் வாசகியரும் வரலாம். கலக்கலாம். அசத்தலாம் வாங்க. மறந்துடாதீங்க மே 20 மதியம் மணி 3.30 - 7 30.


செவ்வாய், 10 மே, 2011

தேனு... தேனம்மைலெக்ஷ்மணன். THENU. HONEY. தேன்.

கொசுவத்தி., ஊதுவத்தி எல்லாம் சுத்தாம ஒரு விஷயம் சொல்லணும் . முடியுமா பார்க்கிறேன்.. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி புதன் கிடைச்சாலும் பொண்ணு கிடைக்காதுன்னு சொல்லுற ஒரு புதன் கிழமை இந்த பூமியில ஒரு பெண் குழந்தை பிறக்க போகுது ( அட அஞ்சலி பாப்பா இல்லப்பா) அது அன்பான குழந்தை. தேன் போல பேசும்( சமயத்தில் தேளும் கூட) அதுக்கு நாம எல்லாம் நல்ல பெயர் வைக்கணும்னு தேவதை எல்லாம் பேர் தேடுச்சாம். சரி அவங்க பெரியப்பத்தா பேரே அழகா இருக்கு. அவங்கள மாதிரி பொறுமையா இருக்கட்டும்னு அப்பத்தா வீட்டு ஐயா தேனம்மைங்கிற பேரை வச்சாங்களாம்.


ஐயா., ஆயா., அப்பத்தா., அப்பா., அம்மா., மாமா.,மாமி., அத்தை., சித்தப்பா., சித்தி., பெரியம்மா., பெரியப்பா மட்டுமில்லீங்க.. அத்தை மக்க., மாம மக்க., பெரியம்மா மக்க., தம்பிங்க எல்லாருக்கும் நான் தேனுதான்.. இன்னிய வரைக்கும்.. எல்லாரும் கிட்டத்தட்ட என் வயசுதான்.. சரி போகுதுன்னு விட்டுட்டேன்.. இதுக்காக எல்லாம் போராட்டமா நடத்த முடியும்கிறீங்களா.. என் சித்தப்பா மக்க ---குட்டித்தங்கச்சிங்க ரெண்டு பேர் மட்டும் என்ன ஆச்சின்னு கூப்பிடுவாங்க இனிமையா..


காலேஜ் படிக்கும் போது ஒரு கிறுக்குத்தனம் இருந்துச்சு ( அப்பமட்டும்தானா கிறுக்குத்தனம் .. ஹிஹி என சிரித்துக் கொண்டே நசரேயன் வருவது தெரியுது ) . என்னன்னா ஒரு பாட்டு விடுறது இல்ல.. எந்தப் பாட்டுல எல்லாம் தேன் தேனே., அப்பிடின்னு வருதோ அதை எல்லாம் எடுத்து எழுதி அதுக்கு ஒரு தனி டைரி போட்டு தேனுவின் டைரிக்குறிப்புகள் ரேஞ்சுல டேட்டா எடுத்து வைச்சுருந்தேன். இப்ப அந்த இண்ட்ரஸ்ட் போயிட்டதால அந்த டைரிய தேடணும். ரொம்ப சுவாரசியமான நாட்கள் அவை.. ஒவ்வொரு இளம் பெண்ணும் தான் ஒரு் முக்கியமானவள்னு நினைக்கிற காலகட்டம் அது.


பூதக்கண்ணாடி எல்லாம் வச்சு தேட வேண்டாம். அதுக்கு மேல ரொம்ப சுவாரசியம் இல்லை. கல்லூரி முடிச்சவுடனே கொஞ்ச நாள்ல திருமணம் ஆகி திடீர்னு தேனம்மைலெக்ஷ்மணன் ஆகிட்டேன். அப்புறம் ரொம்ப வருஷம் சும்மா இல்லத்தரசியா இருந்தேன். திடீர்னு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஞானோதயம்., ஒளிவட்டம்னு சொல்லலாம்.. ( ரொம்ப ஓவரா இருக்கோ..:)) ஏற்பட்டது. பிள்ளைகளுக்கு நம்மிடம் உள்ள தேவைகள் குறையும்போது நமக்கு ஒரு வெற்றிடம் ஏற்படுது. அதை நிரப்ப சிலர் கணவருடன் சேர்ந்து தொழிலில் ஈடுபடுறாங்க. வங்கித்தொழிலில் இருக்கும் கணவருக்கு நாம என்ன உதவி செய்யிறது. எனவே சும்மா இருக்கமேன்னு ப்லாக் எழுத ஆரம்பிச்சு வந்தேமாதரம் சசிகுமார் புண்ணியத்துல THENU னு ஸ்டைலா கையெழுத்து போட்டாச்சு .


நம்ம ப்லாக் பேரு சும்மா. ஆனா நாம ஹனிலெக்‌ஷ். எனவே சிலசமயம் ஹனின்னு சொல்றாங்க.. ஏன்னா ப்லாக் ஐடியாம். சரி சரி . ஒரு முறை டெல்லிக்கு ட்ரெயினில் போகும்போது என் கணவர் அடிக்கடி என்னை தேனு என விளித்துக் கொண்டிருந்தார். எல் எஃப் சி என்றதால் ஏசி கம்பார்ட்மெண்ட். எதிரே ஒரு தமிழர் பேர் ராகவன் சிங்கப்பூரில் ஜேம்பவாங்கில் பணிபுரிந்துகொண்டிருந்தவரும் அவர் மனைவியும் வந்தார்கள். கிட்டத்தட்ட 36 மணிநேர ப்ரயாணம். இவர் கூப்பிடுவதைப் பார்த்து,” சார் நீங்கதான் வெள்ளைக்காரர் மாதிரி ஒய்ஃபை ஹனின்னு சொல்றீங்க.. :”என்றார்.. இவர் இவ பேரே அதுதானே .. இதுல என்ன சிறப்பு என என்னைப் பார்த்தார்..:))


பேஸ்புக்கிலும் , ப்லாகிலும் சிலர் தேன் என்றும் தேனம்மை என்றும் அழைப்பார்கள்.. யாரையாவது எந்த புக்குக்காவது பேட்டி எடுக்கணுமென்றால் எடுத்தவுடன் ” ஹலோ நான் தேனம்மைலெக்ஷ்மணன் பேசுறேங்க ..”என்றால் அவங்க ”என்னங்க” என்பார்கள்.. அப்புறம் என்ன ரிப்பீட்டுதான்..:))



இதுதாங்க நான் தேனு., தேனம்மைலெக்ஷ்மணன்., THENU., HONEY., தேன் ஆன கதை..


சரி சரி பேர் புராணமெல்லாம் போதும்னு சொல்றீங்களா.. அதுவும் சரிதான். இதுக்கெல்லாம் கோச்சுக்கணும்னா இந்த பேரு பெத்த பேரு பத்தி என்னை எழுத சொன்ன பாலாஜி சரவணா மற்றும் அமைதிச்சாரலைக் கோச்சுக்குங்க..:))

திங்கள், 9 மே, 2011

அபிராமி ராமனாதனின் ”ரோபோ” பால அபிராமி..

இந்தியாவில் முதன்முதல் ஷாப்பிங் மாலோடு கூடிய திரையரங்குகளை உருவாக்கியது அபிராமி. சைனீஸ்., ஸ்பானிஷ்., ஈஜிப்டியன் முறைப்படி கட்டப்பட்ட திரையரங்குகளின் நேர்த்தி கண்டு வியந்திருக்கிறேன். நேற்று ரோபோ பால அபிராமி திரையரங்கு திறப்பு விழா. அதில் ப்ரஸ்ஸும்., ஃப்ரெண்ட்ஸும் உறவினர்களும் மட்டும் அழைக்கப்பட்டிருந்தார்கள். வேறொரு விஷயம் வேண்டி ராம் சாருக்கு போன் செய்தபோது இது பற்றி கூறி வர சொன்னார்கள். அழைப்புக்கு நன்றி ராம் சார். ஏற்கனவே கூட்டம் பொங்கி வழிகிறது அபிராமி மாலில். இந்த ரோபோ திரையரங்கு இன்னும் கூட்டம் சேர்க்கும். குழந்தைகளுக்கான 3டி படங்கள்., மற்ற படங்களும் திரையிடப்படும்.



மிக நவீனமான முறையில் திரை( அமெரிக்காவிலிருந்து கப்பலில் மிகுந்த சிரத்தையுடன் கொண்டுவரப்பட்டது.) ., 3 டி படம் பார்க்கவென்றே அமைக்கப்பட்டுள்ளது. சாதாரணப்படம் ஒளிபரப்பப்பட்டபோது மிக அற்புதமாக இருந்தது. வீட்டில் அமர்ந்து பார்ப்பதற்கும் இதுபோல திரையரங்கில் அமர்ந்து பார்ப்பதற்கும் நிறைய வித்யாசம்தான். தொழில் நுட்பங்களோடு கூடிய படங்களை டிடிஎஸ் எஃபக்டில்., இன்க்ளைனேஷன் சேரில் அமர்ந்து இண்டர்வெல்லில் தியேட்டருக்குள் ஸ்நாக்ஸோடு ருசிப்பது நல்ல அனுபவம்.


சேர்கள் கூட ரோபோ தியேட்டருக்காக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு ஸ்பேஸ் ஷிப்பில் அமர்ந்து இருந்தால் ஏற்படும் உணர்வு ஏற்படுகிறது. இதை வடிவமைத்த ராஜ்குமாருக்கும் மற்ற தொழில் நுட்பக்கலைகலைஞர்களுக்கும் திருமதி நல்லம்மை நன்றி தெரிவித்தார். தங்களுக்காக பணிபுரியும் அனைவரையும் பெயர் கூறி அறிமுகப்படுத்திச் சிறப்பித்தார் நல்லம்மை.. இவர்களின் தொடர் வெற்றிக்கு அனைவரையும் தங்களோடு இணைத்துக் கொள்வதும் ஒரு காரணம் என உணர்ந்தேன். என் கணவர் பல வருடங்களுக்கு முன் இங்கே படம் பார்த்திருக்கிறார். போனமாதம் நானும் என் கணவரும் இங்கேதான் சிங்கையில் குருஷேத்திரம் என்ற ஒரு சமூக அக்கறையுள்ள படத்தைப் பார்த்தோம். இங்கே இருக்கும் ஈஜிப்டியன் மதர் (MOTHER ISIS-- GODDESS OF CHARM AND FERTILITY) என்னை மிகவும் கவர்ந்தார். அன்னையர் தினத்தில் அவரையும் தரிசித்தேன்.




திரு அபிராமி ராமநாதன் அவர்கள் கனிவு பொங்கும் பார்வை., கற்கண்டுப் புன்னகைக்குச் சொந்தக்காரர். மிக கம்பீரமும் அதே சமயம் எளிமையுமானவர். வொயிட் அண்ட் வொயிட் அணிந்து பார்ப்பவருக்கே புத்துணர்ச்சியூட்டக் கூடியவர். ஒரு மனிதன் மனிதனாக மட்டும் செய்யப்படவில்லை. மனிதநேயத்தாலேயே செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்வேன். “எங்கள் தந்தையார் சம்பாதிப்பதில் 25 சதவிகிதம் திரும்ப தொழிலிலேயே முதலீடுக்கும்., 25 சதவிகிதம் குடும்பத் தேவைகளுக்கும்., 25 சதவிகிதம்
பிற்கால வாழ்விற்கும்., 25 சதவிகிதம் தானமாகவும் செலவு செய்யணும் என்று சொல்லி இருக்காங்க. அதுபடி நான் என் பிறந்த ( பூலாங்குறிச்சி) ஊரில் 30 லட்ச ரூபாய்க்கு சோலார் லைட்ஸ் போட கொடுக்கிறேன் என திரு லட்சுமணன் அவர்களிடம் கொடுத்தார்கள். அதையும் தன் திரையுலக நண்பர்கள் கையால் கொடுக்கச் செய்து அனைவரையும் இணைத்துச் சிறப்பித்தார்கள்.



திரு விடுதலை பேசும்போது சூழ்நிலைக்கேற்ப அபிராமி தன்னை மேம்படுத்திக்கொண்டே வருவதுதான் அதன் வெற்றியின் சிறப்பு என்றார்..



திரு கஸ்தூரிராஜா பேசும்போது ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதை இந்தக் குடும்பத்தில்தான் பார்ப்பதாக கூறினார். தலைவன் எவ்வழியோ அதே வழியில் மனைவியும் பிள்ளைகளும்., பேரன் பேத்திகளும் துணையும் தோளும் கொடுப்பதால்தான் இவ்வளவு வெற்றிகளும் என கூறினார்.


திரு கேஆர்ஜி., திரு ராமநாராயணன்., திரு விசி குகநாதன்., திரு அண்ணாமலை ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தார்கள். தொகுத்து வழங்கிய சிறுவன் பேரன் என நினைக்கிறேன். மிக அருமையாக தொகுத்தார். வரவேற்புரையை திரு சிவலிங்கமும்( மகன்) ., ஏற்புரையை திருமதி நல்லம்மையும் ( மனைவி)., நன்றியுரையை மகளும் வழங்கினார்கள்.

மேதகு மனிதரின் சக்தி... திருமதி நல்லம்மைதான் இவ்வளவு பெருமுயற்சிக்கும் பின்னணி. !!! விடாமுயற்சி., அனைவரையும் இணைத்துச் செல்லும் நற்பண்பு., நிர்வாகத்திறமை பொருந்தியவர்கள். 40 க்குப் பின்பும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர்கள்.. !!!

மிக இனிய பொன்மாலைப்பொழுதாக அது இருந்தது. சினிமா பிரபலங்கள் நிறைந்திருந்தார்கள் . தொலைக்காட்சி., பத்ரிக்கை நிருபர்கள் குழுமி புகைப்படங்களும் சலனப்படங்களும் எடுத்துத் தள்ளினார்கள். நாமும் பின்னாடி அமர்ந்து கொஞ்சம் சங்கோஜத்தோடு ( தனிப்பட்ட பேட்டி என்றால் நான் முன்னால் செல்வேன். நிறைய கூட்டத்தைப் பார்த்ததும் மிரட்சியாகிவிட்டது) நம்ம லூமிக்ஸ் காமிராவில் சுட்டது எல்லாம் உங்க பார்வைக்கு மக்காஸ். சென்னைக்கு வந்தால் அபிராமிக்கு விசிட் செய்யுங்கள். வெளிநாட்டு மால்களுக்கெல்லாம் சவால் விடும் மால்கள் சென்னையிலும் வந்தாச்சு. குழந்தைகளோடு பெரி்யவர்களும் குழந்தைகளாகலாம். அங்கே இன்னும் ஸ்நோ வேர்ல்ட்., டாஷிங் கார்ஸ். , எல்லாம் துபாய் மால் போல இருக்கு. அடுத்து ராம் சார் குழந்தைகளுக்கான ஒரு 3டி சினிமா எடுக்கப்போவதாக சொன்னார். அது சீக்கிரம் வெளிவர வாழ்த்துக்கள் ராம் சார்.. வாழ்க வளமுடன்... நலமுடன்...!!!


சனி, 7 மே, 2011

என் பெயர் அருணா..

சுவாசம் மெல்லியதாய் ஓடிக் கொண்டிருக்கிறது.. எப்போதும் மெல்லியதுதானே. இன்றென்ன புதிதாய்..

எல்லாரும் ரொம்ப சந்தோஷமாக மிட்டாய்களை வாயில் போட்டு என்னை பாதுகாத்துவிட்டதாக உற்சாகப்பட்டுக் கொண்டிருந்தார்கள்..

நீதி மன்றத்திலிருந்து தீர்ப்பு வந்து விட்டது கருணைக் கொலை செய்யக் கூடாது என்று.. என்னால் அவர்களுக்கு சிரமம்தான்.. எத்தனை நர்ஸ்கள் மாறி இருப்பார்கள்.. எல்லாருக்கும் நான் உயிரோடு இருக்கவேண்டும்.. அவர்கள் நம்பிக்கையை சிதைக்காமலிருக்கவே உயிரோடு இருக்கிறேன்.. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லலாம். அல்லது மருந்து மாத்திரை உணவுகளால்., அவர்கள் அன்பால் பராமரிப்பால் என்னை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

நான் ஒரு வெஜிடபிள்.. மெடிக்கல் லாங்குவேஜில் சொன்னால்.. கோமா பேஷண்ட்.. மூச்சு விடும் உயிரினம். இதயம் மட்டும் தாறுமாறாய் சீரற்றுத் துடித்துக் கொண்டே இருக்கிறது.. மூளை செயல்படவில்லை என்று சொல்கிறார்கள்.. அது அவர்களுக்கு.. எனக்கு செயல்படுகிறது ஆனால் எதும் செய்யத்தான் முடியவில்லை..

38 நீண்ட ஆண்டுகள் .. எதற்காக மருந்தும் உணவும் கொடுத்து காப்பாற்ற வேண்டும்.. ஏனெனில் நான் அவர்களுள் ஒருத்தி.. அவர்கள் என்னை அவர்களாய் உணர்கிறார்கள்.. அவர்கள் நம்பிக்கையைக் காப்பாற்ற நான் உயிரோடு இருக்கிறேன்..

மெடிக்கல் மிராக்கிளாக இருக்கலாம்.. எனக்கு நடந்த அநீதி அவர்கள் ஒவ்வொருவருக்கும் நடந்ததாய் வருந்துகிறார்கள். அவர்களின் நம்பிக்கையின் சாட்சியாய் நான் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறேன்..

அந்த இருளடைந்த நாளில் நாய்களுக்கான உணவை திருடி விற்றுக் காசாக்கின சோகன் லாலை கண்டித்தேன்.. நாய்களே பரிசோதனைக்கு கொண்டுவரப்பட்டவை.. அவைகளின் உணவைத் தின்பவன் எப்படிப்பட்டவன்.. நாய்களின் எச்சத்தை தின்பவன். பலமுறை கண்டித்தும் பயனில்லை. பான் போட்ட வாயோடு ஏதோ ஒரு பானா காலியை உச்சரித்தான்.. மும்பையின் தெருக்களில் நாயோடு நாயாக அலைய வேண்டியவன்..

ஒரு முறை பொறுக்க முடியாமல் சீனியர் டாக்டரிடம் சொன்னேன் . அவர் கடுமையாகத் தண்டித்து விட்டார்.. அன்று மாலை ட்யூட்டி முடிந்து நான் வீடு செல்ல உடைமாற்றும் அறைக்குச் சென்று உடை மாற்றிக் கொண்டிருந்தேன்.. அங்கேயே ஒரு ஓநாய் ஒளிந்திருப்பது அறியாமல்.. ஆடுகளின் கழுத்தில் கயிற்றைப் போடுவது போல ஒரு நாய்ச் சங்கிலி என் கழுத்தை நெரித்தது.. கோர முகத்தோடும் பற்களோடும் நாயைப் போல சோகன்லால்.. கத்த முடியவில்லை.. உதவிக்கு யாரை அழைக்க.. திமிறினேன்.. கழுத்தை நெரித்த அந்த நாய் என் உடம்பின் மீதும் அத்து மீறீயது..

குரல் வளையில்., ரத்தக்குழாய் உடைந்து மூளை நரம்புகள் செயலிழக்கத்துவங்கின.. ஒரு அவசர மயக்கத்துக்கு போனேன்.. அந்த இருட்டறைதான் நான் கடைசியாகப் பார்த்தது.. இப்போது என் கண்கள் விழித்திருக்கின்றன என்றாலும் எதுவும் சரியாய் பதியாமல்., புரியாமல்.

என் நகை., பணம்., வாட்ச் எல்லாம் எடுத்துக் கொண்ட அவன் தெருக்கு தெரு அலையும் வெறி நாய் போல வெளியேறினான்.

அவனுக்கு தண்டனை கிடைத்தது.. பின் வெளியேறி வேறு இடங்களில் வேலை செய்ய சென்று விட்டான்..

என்னை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தபடி பராமரித்தபடி இருக்கிறார்கள் அனைவருமே முகம் சுளிக்காமல்..

நான் இப்படி விழுந்ததும் என் காதலன் காணாமல் போனான்.. அவனோடு பனிமலைச் சிகரங்களில் ஏறவும்., கப்பல்களில் மிதக்கவும்., விமானங்களில் பறக்கவும் முடியாது என முழுதாய் அறிந்தபின் பிரமிடுக்குள் இருக்கும் மம்மியைப் போல என்னைப் போட்டு விட்டுப் போய் விட்டான்.. என்றும் உயிர்க்க மாட்டாள் என ..

சுற்றி இருந்த சொந்தக்காரர்களுக்கு அவரவர் வேலைகள்.. ஒரு ஜடத்தை துடைத்து மருந்தும் உணவும் கொடுத்து ., பெட்ஸோர் வராமல் பார்க்க முடியவில்லை.. என்றைக்கு அந்த அறையில் விழுந்தேனோ அன்றிலிருந்து இந்த ஆஸ்பத்திரியில் கர்ப்பத்தை விட்டு வெளியேறாத பிள்ளை போல கிடக்கிறேன்.. என்னை சுமந்து கொண்டே இருக்கிறது இந்த மருத்துவமனை..

38 வருடமாக இப்படிக் கிடக்கிறேனே என்று என்னைப் பார்க்க வந்த பிங்கி விராணிக்கு என்னைப் பார்த்துப் பார்த்து தினம் வேகிறது மனது.. எப்படி இருந்த நான் இப்படிஆகிவிட்டேன் என்று,,. அவளது அன்பிலும் குறை சொல்ல முடியாது.. என் கதையை எழுதினாள்.. இவ்வளவு கஷ்டப்படாமல் முடித்துவிடவும் நினைக்கிறாள்..என் நிலை பார்த்து கருணைக் கொலைக்கு மனு போட்டாள்..

என் துயரை பார்த்து பார்த்துப் பரிதவித்து நீதி மன்றக் கதவைத் தட்டினாள்.. காய்கறியைப் போலக் கிடக்கும் எனக்கு வலியாவது ஒன்றாவது.. என் சக தோழிகள் ., நர்ஸுகள் என்னை பார்த்துக் கொள்வதாக சபதமிட்டவர்கள் போல தொடர்ந்து பராமரித்து வருகிறார்கள்.. அவர்களுக்கு என்னை இழப்பதா என்ற துயரம்.. ஏனெனில் நான் அவர்களின் அங்கம்..

அவர்களைப் போல அங்கு வேலை செய்த ஒருத்தி.. ரத்தமும் சதையும் துடிப்புமாக வளைய வந்தவள்.. நான் இருப்பது அவர்களுக்கு ஒரு துணை போல.. என்னைக் காப்பாற்றி இதுவரை வந்திருப்பது அவர்களின் நம்பிக்கைக்கு உயிர் கொடுப்பது போல.. அவர்கள் எனக்கு பணி செய்வதை அவர்களே சிரமமாக எண்ணவில்லை.. அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றவே இன்னும் உயிர்ப்போடு இருக்கிறேன்..

தாறு மாறாக வேணும் என் இதயம் இயங்கிக் கொண்டிருக்கிறது.. அது கடவுள் கொடுத்த காலம் வரை இயங்கட்டும்.. அவர்கள் வெளியே இனிப்பை உண்டுகொண்டிருக்கிறார்கள் என் உயிர்ப்பால்.. என் சந்தோசம் அசைவற்ற கண் வழி வழிகிறது.. கைகள் உறுதியாய் இன்னும் என் எதிரிக்கும் என்னை விட்டுச் சென்றவர்களுக்கும் என் உறுதியை என் இருப்பை வாழ்வை பறை சாற்றுகிறது.



டிஸ்கி.1 :- இது மே 15 -30 சூரியக்கதிரில் வெளிவந்தது..


டிஸ்கி..2..:- தங்கள் பல வேலைகளுக்கிடையிலும் தங்கள் எண்ணங்களை., கருத்துக்களை., பாதித்தவைகளை., சுமைகளை பதிவுகளில் பகிரும் அனைத்துத் தோழிகளுக்கும்., தங்கைகளுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.. மற்றும் வலைப்பதிவர்கள் அனைவருக்குமே தாய்மை நிறைந்த அன்னையர் தினத்தில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. வாழிய வையகம். வாழ்க வளமுடன். !

வியாழன், 5 மே, 2011

மே மாத லேடீஸ் ஸ்பெஷலில் பெண் ஆட்டோ ஓட்டுநர் சாந்தி.,டாக்டர் மாதினி., அமெரிக்க விஜி..மற்றும் நான்..:))

மே தினம் உழைப்பாளிகள் தினம். அன்று வெளிவந்த லேடீஸ் ஸ்பெஷலில் பெண் ஆட்டோ ஓட்டுநர் சாந்தியை அட்டைப் படத்தில் போட்டு கௌரவித்துள்ளது நம்ம லேடீஸ் ஸ்பெஷல்.. நாமும் வாழ்த்துவோம் .



முன்னுரையிலும் கிரிஜாம்மா என்னையும் சாந்தியையும் மாதினியையும் அமெரிக்க விஜியையும் குறிப்பிட்டு சிறப்பு செய்து இருக்காங்க.. அவங்களுக்கு அன்னையர் தின அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..:)


8 மணி நேரம் உழைப்பு.. 8 மணி நேரம் ஓய்வு., 8 மணி நேரம் தூக்கம் என சொன்ன கார்ல்மார்க்ஸ் பிறந்த தினத்தில் ஒரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரை உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்துவதில் சந்தோஷமடைகிறேன்.. அவர்தான் குடும்பத் தலைவியாய் இருந்து ஆட்டோ ஓட்டி தொழிலாளர் நல சங்கத்தில் உயர் பதவியில் இருக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர் சாந்தி.. உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சாந்தி..!


விஜிஸ் கிச்சன் என்று நமக்கெல்லாம் தெரிந்த அமெரிக்க விஜிதான் இந்த மாத ப்லாகர். ஹாலிடேக்கு ஜாலி ட்ரிப் அடிக்குமுன்னால அவங்க சொல்றத படிச்சிட்டுப் போங்க..வாழ்த்துக்கள் விஜி.!


கர்ப்பமான பின்னாடிதான் எல்லாரும் டாக்டர்கிட்ட கன்ஃபர்ம் பண்ண போவாங்க.. ஆனா நம்ம டாக்டர் மாதினி கர்ப்பத்துக்கு முன்னாடியே உடலில் ஏதும் கோளாறுகள் இருக்கான்னு செக் பண்ண சொல்ற ப்ரீ கன்செப்ஷன் க்ளினிக் வந்து ஹெல்த் செக்கப் பண்ண சொல்றாங்க.. எல்லாரும் படித்துப் பயன் பெறுங்க.. ஆட்டோ ஓட்டுநர் சாந்தியையும் டாக்டர் மாதினியையும் (மகாபலிபுரம் போயும் ஐந்து ரதங்களின் அருகில் அமர்ந்து தொலைபேசியில் பேசி ) பேட்டி எடுத்துத் தொகுத்துக் கட்டுரையாக்கி இருக்கிறேன்....




டிஸ்கி:- முக்கியமான விஷயம்.. நம்ம லேடீஸ் ஸ்பெஷல் சார்பில் மே 20 அன்னைக்கு மெரினா பீச்சில் ஒரு மீட் இருக்கு. பெண் வலைப்பதிவர்கள் மட்டும் 3.30 க்கு காந்தி சிலையருகில் வந்துடுங்க. கிரிஜா ராகவன் மேடம் உங்களை எல்லாம் சந்திக்க ஆவலா இருக்கார். சென்னை பெண் வலைப்பதிவர்கள். , வெளி ஊரிலிருந்து வரமுடிந்த பெண் வலைப்பதிவர்கள் கலந்துக்கலாம். லேடீஸ் ஸ்பெஷலில் அறிமுகமான ப்லாகர்கள் லேடீஸ் ஸ்பெஷல் லிங்கை தங்கள் வலைத்தளத்தில் காட்ஜெட்டில் கொடுங்க . முக்கியமா வர்றவங்க லேடீஸ் ஸ்பெஷல் படிச்சிட்டு வாங்க.. நம் சந்திப்பு இனிய சந்திப்பா அமையட்டும்..:))




புதன், 4 மே, 2011

சீனாவில் வினோ(தம்). .. சம்மர் ஸ்பெஷல் பேட்டி..:))



இந்த சம்மருக்கு இங்கே போகலாம் அங்கே போகலாம்னு ஆயிரத்தெட்டு ப்ளான் வச்சிருப்பீங்க ..எங்கே போகப் போறீங்க நீங்க எல்லாம். இந்த வருடம் கொஞ்சம் வித்யாசமான ஊரு ட்ரை பண்ணுங்க. ஜெயா டிவியில் ஸ்டார்ஸ் உங்களுடன் நிகழ்ச்சி நடத்தும் வினோ சுப்ரஜா இந்த வருடம் சீனா போய் வந்து இருக்காங்க . அவங்க அனுபவத்தை இங்கே நம்ம இவள் புதியவள் வாசகர்களுக்காக சொல்றாங்க..ஆர்வமாயிட்டீங்கள்ல கேக்க..

”ஆக்சுவலா சொல்லப் போனா இது ரொம்ப ஷார்ட் டிரிப்தான். ஒரு ஐந்து நாளுக்கு மட்டும் ஒரு வெளிநாட்டுப் பயணம். என் கணவர் ஃபோர்டில் வேலை செய்வதால் அவரோட ஹெட் ஆஃபீஸ்., ஆசியாபசிஃபிக்கோட ஹெட் க்வார்ட்டர்ஸ் சைனாவின் ஷாங்காயில் இருக்கு. அதுக்கு இந்த வருடம் போய் வரலாம்னு போனோம்.

ஷாங்காய் ஏர்போர்ட்டில் இறங்கியதும் பிரமித்தோம்.. அவ்வளவு சூப்பரான அழகான ஏர்போர்ட். கிட்டத்தட்ட 7 ., 8 சென்னையை அடக்கலாம் போல அவ்வளவு பெரிய நகரம் ஷாங்காய். ஏர்போர்ட்டில் இருந்து நாங்கள் தங்கி இருந்த இடத்துக்கு செல்லவே 40 நிமிடம் பிடித்தது.. கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தள்ளி இருக்கு ஊர். ஃப்ளைட்டில் பறந்தது போதாதுன்னு ஃப்ளை ஓவர் ஓவரா காரில் பறந்து ஹோட்டல் இண்டர் காண்டினென்டலை அடைந்தோம்.



ஃபிப்ரவரி மாதம் என்றாலும் நாங்க இருந்த ஐந்து நாளும் ஐந்து க்ளைமேட். முதல் நாள் நல்ல பனி மழை ( SNOW FALL) . மறுநாள் வெய்யில் ., அடுத்த நாள் மழை., அதற்கடுத்த நாள் பயங்கரக் குளிர்.. இவ்வளவு வித்யாசமான க்ளைமேட்டை நாங்க எதிர்பார்க்கலை. க்ளைமேட் ரொம்ப அன்ப்ரடிக்டபிள்.. இப்படித்தான் இருக்கும்னு சொல்ல முடியலை. அங்கே வெய்யிலடிச்ச அன்னிக்கு மறுநாள் மழை வரும்னு சொன்னாங்க வானிலை அறிக்கையில். நம்ம ஊர் வானிலை அறிக்கை மாதிரி( WEATHER FORECAST) இருக்கும்னு நினைச்சோம்.. என்னன்னா நம்ம ஊர் வானிலை அறிக்கையில் மழை பெய்யும்னு சொன்னாங்கன்னா நம்ம ஊர்ல வெய்யில் கொளுத்தும் .. ஆனா பாருங்க அங்க உண்மையாவே ரொம்ப மழை பெய்தது அன்னைக்கு. !! அவங்க சொன்னது எக்ஸாக்டா நடக்குது..ஆச்சர்யம்தான்.

சைனாவில் முதல் கஷ்டம் பாஷை.. ஏன்னா அங்கே யாருக்கும் சைனீஸ் தவிர ஏதும் தெரியாது. ஆங்கிலம் கூட..தெரியாதுஅங்கே நிறைய கார்டுகள் இருக்கும் கடையில் இடத்தின் படம் போட்ட கார்டுகளை வாங்கி வைத்துக் கொண்டோம். அந்த கார்டில் சைனீஸில் என்னை அந்த இடத்துக்கு கூட்டிச் செல்லவும் என எழுதி இருக்கும். இதை டாக்ஸி ட்ரைவரிடம் காண்பித்து ம் என்று சொல்லணும் அவரும் ம் என்று சொல்லி விட்டு நம்மை அழைத்து போவார்.

ஓஷன் அக்வேரியமுக்கு ஒரு பொருள் வாங்க மறுநாள் போகணும் . நல்லவேளை முதல்நாள் நாங்க அங்கே போனபோது எடுத்த ஃபோட்டோ இருந்துச்சு. அதை காமிச்சு ம் என்றோம். உடனே டாக்ஸி ட்ரைவரும் ம் என்று சொல்லி அழைத்துச் சென்றார். என்ன ஒண்ணு கஜினி சூர்யா போல ஃபோட்டோவோட அலைஞ்சோம்னு சொல்லலாம். எங்கே போகணும்னாலும் நம்ம ஃபோட்டோவில் ஒண்ணை காண்பித்து ம் என்று சொல்லி போயிட்டு அடுத்த இடத்துக்கு ம் என்று சொல்லி இன்னொண்னை காமிச்சு ஊர் சுத்தினோம். திரும்ப ஹோட்டலுக்கு போகணும்னாலும் இதே மெத்தட்தான்..ஹோட்டல் ஃபோட்டோ கைவசம் வைச்சிருந்தோம்..

ஊர் ரொம்ப நீட்டா இருந்துச்சு. ட்ராஃபிக் ரூல்ஸை ஒழுங்கா கடைபிடிக்கிறாங்க. ஒரு குப்பை இல்லை சுத்தமா இருந்துச்சு. பார்க்கவே ரொம்ப அழகா இருந்துச்சு. ஆனா அங்கேயும் எக்ஸலேட்டர்ல போய் அதன் பின் நடந்து போற ஃப்ளை ஓவர் மேல உள்ள ப்ரிட்ஜில ஒரு ஆள் ஒரு பெண்ணை படுக்க வைத்து அடித்து அழவைத்து பிச்சை எடுத்துகிட்டு இருந்தாரு.. நம்ம ஊரு போல இருந்துச்சு அந்த காட்சி.. போனவுங்க எல்லாம் காசு போட்டுட்டு போனாங்க. அட இங்கேயுமா இதுன்னு பார்த்துட்டு போனோம் நாங்க..

ரூமில் படிப்பதற்காக நியூஸ் பேப்பர் வாங்கி வந்தோம் . அதில் அன்னைக்குத்தான் ட்ரேடிங்கில் சைனாவை முந்தி ஜப்பான் உலக இரண்டாமிடத்துக்கு வந்திருக்குன்னாங்க.. வேறு ந்யூஸ் ஏதும் இருக்கான்னு பார்த்தா அட நம்ம இந்தியாவில் நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்காம் பத்தி எழுதி இருந்துச்சு.. அட நம்ம மானம் உலகம் பூரா பறக்குதேன்னு இருந்துச்சு.

டி வி யில் இந்தியன் சானலே இல்லை. AXN., NATIONAL GEOGRAPHIC., BBC NEWS இதுதான் பார்த்தோம். ஹிந்தியும் இல்லை உலகெங்கும் வரும் தமிழும் இல்லை..

ரெண்டாவது கஷ்டம் உணவு. உணவுன்னு எடுத்துக்கிட்ட சைவம் சாப்பிடுபவர்களுக்கு ரொம்பக் கஷ்டம்தான் ஷாங்காயில். நாங்க ரெடி மிக்ஸ் கொண்டு போயிருந்தோம். கையோட கொஞ்சம் அரிசியும் எலக்ட்ரிக் ரைஸ் குக்கரும் . அந்த சாப்பாட்டுக்கு வத்தக் குழம்பும் சாதமும் தேவாமிர்தமா இருந்துச்சு. அப்புறம் நூடில்ஸை நம்ம ஊரு பாணியில் மசாலா எல்லாம் போட்டு ரைஸ் குக்கரில் வேகவைத்து சாப்பிட்டோம்

அங்கே எல்லாம் ஹாஃப் குக்டுதான். எல்லாம் ஹாஃப் பேக்டு ஹாஃப் குக்டுதான் .. அரை வேக்காடு.. நான்வெஜ் கூட.. அசைவத்தை நம்மூரில் நல்லா வேகவைப்பாங்க.. இங்கே அரை வேக்காடு எல்லாம்.,. நம்ம ஊர்ல நாம செய்து சாப்பிடுற சைனீஸ் நூடில்ஸுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை.

இந்தியன் ரெஸ்டாரெண்ட் 2., 3 இருக்கு அந்த இடத்து ஃபோட்டோ எடுத்து போயி ரசம் ., உருளை பொரியல் எல்லாம் ரூமுக்கு வாங்கி வந்து ரைஸ் குக்கரில் சூடு செய்து சாப்பிட்டோம். இந்தியன் ரெஸ்டாரெண்டில் சுரேஷ்னு ஒரு மேனேஜர் இருக்கார் அவர் ரொம்ப ஹெல்ப்ஃபுல். நல்ல ஜெண்டில்மேன் . உதவிக்கு எல்லாம் ஆட்கள் அனுப்பினார். கைட் செய்தார்.

ஆனா ஷாங்காய் ரொம்ப எக்ஸ்பென்சிவான ஊர். மெயினா ஹார்ட் ஆஃப் சிட்டி ரொம்ப அழகு பயங்கர ஃபாஷன். இது ரீசண்டாதான் டெவலப் ஆன சிட்டி . கார்ப்பரேட் கம்பெனிகள் அதிகம். இருக்கு. அதனால அழகுக்கும் கவர்ச்சிக்கும் குறைவில்லை.

ஓல்ட் சிட்டிதான் நம்ம ஊரு மாதிரி. மக்கள் ப்ளாட்ஃபார்மில் எல்லாம் துணி காயப் போடுறாங்க. அப்புறம் கடை எல்லாம் மூட்டை மூட்டையா அரிசி மூட்டை மாதிரி அடுக்கி வைச்சிருக்காங்க.. கொஞ்சம் சிட்டி அளவு நீட் இல்லை இந்த ஓல்ட் சிட்டி.

ஷாங்காயில் ஓடும் நதி பேரு ஹூவாங்க்பூ நதி . இதில் பண்ட் கரையோரம் கட்டப்பட்டு இருக்கும் ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு நாட்டின் பாணியில் கட்டப்பட்டு இருந்துச்சு. மிக அழகான ஆர்க்கிடெக்ஸர். அதன் மறுபக்கம் ஹை ரைஸ் பில்டிங்க்ஸ்.. வானளாவ உயர்ந்த கட்டிடங்கள். அதை எல்லாம் இங்கே இருந்து பார்க்க அழகா இருந்துச்சு.

மொத்தத்துல ஒரு பாஷை தெரியாத ஊரில் பே பே என்று 5 நாட்கள் இருந்து விட்டு வந்தோம். நண்பர்கள் சிலர் வீட்டில் சாப்பிட்டோம் அது ஒரு ஆறுதலான விஷயம். ஆனாலும் ஐந்து நாளில் நாக்கு நம் ஊர் சாப்பாட்டுக்காக ஏங்க ஆரம்பித்து விட்டது. எந்த வெளிநாடானலும் ஊர் சுத்தி பார்க்க போறவுங்க சைவமாயிருந்தா கையோட நம்மூரு வத்தக்குழம்பு., பொடி வகையறா ., அரிசி., எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் எடுத்துப் போயிருங்க..அப்பதான் தப்பிச்சீங்க.

ஷாப்பிங்னு எடுத்துக்கிட்டா எனக்குன்னு கொஞ்சம் சைனீஸ் ட்ரெஸ் வாங்கினேன். என் ஃப்ரெண்ட்ஸுக்கு எல்லம் சைனீஸ் டால்ஸ்., லாஃபிங் புத்தா., புக் மார்க் இதெல்லாம் வாங்கினேன்.. ஓல்ட் சைனாவின் ஷாங்காய் சிட்டியில் ஆண்டிக்ஸ் இருக்குமாம். பழைய சைனீஸ் கோயில்கள் இருக்குமாம். இந்த முறை மாடர்ன் சிட்டியைத்தான் பார்த்து வந்தோம்.அடுத்த முறை ஓல்ட் ஷாங்காயையும் பார்க்கலாம் என ஐந்து நாள் அற்புதத்திலிருந்து கிளம்பி கிளம்பி சென்னை வந்தோம்..


டிஸ்கி:- சீனாவில் வினோ(தம்) வின் சம்மர் சுற்றுலா பற்றி நான் எடுத்த பேட்டி ஏப்ரல் இவள் புதியவளில் வெளியாகி உள்ளது.:)). நான் பேட்டி எடுத்த பிறகு அவர் கணவருக்கு சீனாவுக்கே பணி மாறுதலாகி விட்டது. அடுத்த முறை ஓல்ட் ஷாங்காய் பற்றிய பேட்டி எடுப்போம்.;;) வாழ்த்துக்கள் வினோ. !

செவ்வாய், 3 மே, 2011

சாக்பீஸ் சாம்பலில் .. கவிதைத்தொகுதி.. எனது பார்வையில்..




தகிதா பதிப்பகம் சென்ற மாதம் 10 புத்தகங்கள் ஒன்றாக வெளியிட்டது;.. அதில் ஒன்று நாணற்காடனின் சாக்பீஸ் சாம்பலில்... இவருடைய கவிதைகளை தகிதா பதிப்பகம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை வெளியிடும் புதிய ,”ழ” வில் படித்திருக்கிறேன்.. பத்து கவிதைத்தொகுதிகளையும் மேற்கு வங்க நூலகத்திற்காக மொத்தமாக கேட்டதாக தகிதா பதிப்பகம் மணிவண்ணன் கூறினார்.. எல்லா கவிஞர்களையு்ம் ஊக்குவிக்கும் இவர் முயற்சி பாராட்டற்குரியது.. விலை ரூ 50.

புதுக்கவிதை ., நவீன கவிதை எழுதி வரும் நாணற்காடனின் ஹைக்கூக்களும் அருமையாய் இருக்கின்றன. இந்தி ஆசிரியரான இவர் இந்தியிலிருந்து தமிழுக்கு கணிசமான மொழிபெயர்ப்புகளும் செய்துள்ளார்.. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளராக விளங்கும் இவர் எட்டு ஆண்டுகளாக எழுதி வருகிறார்.. ”கூப்பிடு தொலைவில்.” , “ பிரியும் நேரம்.,” ஆகிய இரு கவிதைத் தொகுதிகளும் வெளியிட்டு உள்ளார்.. சாக்பீஸ் சாம்பல் இவரது மூன்றாவது கவிதைத் தொகுதி..

பள்ளிக் கூடம் என்றால் நமக்கு கரும்பலகையும் கலர் கரலராய் சாக்பீஸ்களும் ஞாபகம் வரும்.. டஸ்டரால் அழிக்கும் போது வி்ழும் துகள்கள்.. வெறும் துகள்களாக நமக்கு தென்படும் போது இவர் கண்ணில் மட்டும் சாம்பலாய் .. ஒரு பொருள் எரிந்தால்தான் சாம்பல்.. சாக்பீஸ் கரும்பலகையில் மக்களுக்கு கல்வி புகட்ட தன்னைக் கரைத்து சாம்பலாய் விழுவது அழகுதான்..

ஆனந்த விகடன்., கல்கி., புதிய ,”ழ”., கருக்கல்., அகம்புறம்., கவிதைச்சிறகு., மதுமலர்., என இவர் கவிதைகள் வெளிவந்த புத்தகங்கள் அனேகம்.

தலைப்புகளற்ற கவிதைகள்.. இன்றைய இரவு கூட தனக்கான கடைசி இலையாய் இருக்கலாம் என ஆரம்பிக்கிறது கவிதைத் தொகுதி..

அலைபேசியின் குறுஞ்செய்தி ., காற்றில் நீந்திச் செல்வதும்., மழை வேலிக்குள் மலரெனப் பூத்திருக்கும் காதலியும் பூச்சியொன்றினை குறி வைக்கும் பல்லி பார்த்து., பசிக்கும் மரணத்துக்கும் நடுவில் நான் எனவும்., இரவெனும் மயானற் காட்டில் பிணமாய் நிலவு எரிவதும்.. பாம்புகள் அண்டுவது கருதி பிடுங்கிப் போடப்பட்ட செடிகளில் வாழும் பூக்கள் தேடி பட்டாம் பூச்சிகள் ஏமாறக் கூடும் எ்னவும் ஒன்றையொன்று சுழற்சியிட்டு அழகாயும் அவலமாயும் இருக்கிறது..

கழுகுகள்., பாம்பு., தவளை., பூச்சிகள்., . என எக்கோ சிஸ்டமாய் ஒரு கவிதை அருமையாய் இருக்கு..

தலைப்பின் கவிதைதான் மிக அருமை..

வகுப்பறை தோறும்
கரும்பலகையின் கீழே
சாக்பீஸ் சாம்பலாய்
உதிர்ந்து கிடக்கிறது..
பாடங்களால் எரிக்கப்பட்ட
குழந்தைகளின் வாழ்க்கை..

ஆம் நாம் வைத்துள்ள கல்வித் திட்டங்களை எல்லாம் தோலுரிக்கிறது இக்கவிதை.. மனனம் செய்து கக்குவதுதான் இன்றைய முறையாய் இருக்கிறது.. கல்வி என்பது எளிதாய்., ஆசையோடு கற்பதாய் இருக்க வேண்டும்.. மதிப்பெண்கள்தான் கணக்கிடும் அளவுகோல்களாய் இல்லாமல்..

மழை ., வெய்யில்., காற்று., மரம்., குடிசை., கோயில்., தனிமை., காதல்., இரவு., மரணம்., சிகரெட்., சொற்கள்., குருதி., ஆணாதிக்கம்., மீன்., தூண்டில்., என பலவும் கலந்து கிடக்கிறது கவிதைகளில்.. அதிகம் சொல்லமுடியாமல் ஊவா முள்ளாய் நெஞ்சில் உறுத்திக் கொண்டிருக்கும் ஒற்றைச் சொல் பற்றியதான கவிதைகள் அநேகம்., பிரசவ வலி போல்..வெளியேறத் தவித்து..

வேலையற்றவனின் துயரம்., குழந்தையற்றவள்., முதிர்கன்னி., முள்வேலி மக்களின் வாழ்வு., வேண்டுதல்கள்., பேச்சில் ஆங்கிலக் கலப்பின் அங்கதம்., குழந்தையின் விளையாட்டு., இலவச தொலைக்காட்சி பார்த்து மகிழும் விவசாயி., குழந்தை வளரும் வீடு., கொத்தாய் பூத்திருக்கும் பஞ்சு மிட்டாய் விற்பவன்., பார்வையற்றவர்கள்.,, இறந்தபின்னும் செத்துப் போகாத நிழல்., காலிக் குடங்களோடு லாரிக்காக காத்திருப்பு, சொல்லப்படாத உண்மையின் நீர்த்தல்., என பல்வேறு தளங்களில் இயங்குகிறது கவிதை.

இந்த ஹைக்கூ அருமை..

கிளைகள்தோறும் அமர்ந்தெழும் பறவை
இலைகளில் தங்கிய மழைத்துளிகளை
பொழியச் செய்கிறது..

நீராய் நிரம்பியிருக்கும்
காற்றில்..
தத்தளித்துக் கொண்டிருக்கும்
கற்பிதங்களோடு
நீந்திக் கொண்டிருக்கும் நாம் ..

என்ற கவிதையிலும் நாம் எவ்வாறு கற்பிதங்களால் ஆளப்படுகிறோம் என கூறுவது சிறப்பு. பொறி போடவோ ., தூண்டில் போடவோ யாராவது வரும்போது ஒன்று அதிலேயே கிடக்கலாம் அல்லது மீளலாம் ,.. என முடித்திருக்கிறார்..

எண்ணங்களைத் தூண்டிவிட்டு சிந்திக்கச் செய்யுமளவு சிறப்பாய் இருக்கிறது கவிதைத் தொகுதி.

டிஸ்கி.1.:- இந்த விமர்சனம் ஜனவரி 9., 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.

திங்கள், 2 மே, 2011

நெசவு...

நெசவு..
**********************
துணி கசகசத்தது
இறந்திருந்த பட்டுப்பூச்சியின்
எச்சத்துடன்., கவிச்சியுடன்..

இலைதின்று
கூடோடு கிடந்தவற்றை
கூண்டோடு அனுப்பி

இழைகளை நீவி
வாரி வாரி சீராக்கி
சாயக்கஷாயத்தில் தோய்த்து..

கசவுகளும் .,
கசடுகளும் நீக்கி
தறியடித்து ஜரிகை சேர்த்து

பட்டு சார்த்தும் போதோ
பட்டு போர்த்தும் போதோ
பட்டின் உடல் நெளி நெளியாய்..

உப்புக் கண்டமாகவோ
கருவாடாகவோ
பட்டு(டாய்)ப்போன புழுக்களோடு..

டிஸ்கி:- இந்தக் கவிதை 23.3.2011 வார்ப்புவில் வெளிவந்துள்ளது.. நன்றி வார்ப்பு..:)