வெள்ளி, 29 ஏப்ரல், 2011

ஆனந்த விகடன் சொல்வனத்தில் ..என் பொம்மை உலகம்...






தோழி பொம்மை..:_
*****************************
ஒவ்வொருவரிடமும்
இருக்கிறது
ஒரு கரடி பொம்மையோ
தன்னைச் செதுக்கும்

பெண் பொம்மையோ
ஒரு நெளிந்து நிற்கும்
தோழி பொம்மையோ..

சில பொம்மைகள்
கைகூட்டி முழங்கால் மடித்து
கண் சாய்த்து அமர்ந்து

ஸ்நேகிதனை
கண் கொட்டாமல்
அல்லும் பகலும்
கண்ணாடிக் கவருக்குள்ளிருந்து
பார்த்தபடி

அவர்கள் தன்னோடு்
தன் கவலைகளோடு
பேசிக் கொள்ளும் போது
காதுகள் கொடுத்து

மகிழ்ச்சியாய்
தோழர்கள் ஆடும் போதும்
புன்னகைத்தபடி

கூட இருப்பதே
ஒரு தவமாய் இயற்றி
விட்டுச் சென்ற
இடத்திலேயே காத்து., கிடந்து

புறக்கணித்தோ
பரணிலோ.,
குப்பைத் தொட்டியிலோ
வீசிச் செல்லும்
நண்பர்களை குறை கூறாமல்
அங்கும் மௌனமாய்..
அங்கீகரிப்பும் அனுமதிப்புமாய்.


டிஸ்கி:- பொம்மை உலகம் என்ற என்னுடைய இந்தக் கவிதை 27.04.2011 ஆனந்த விகடன் சொல்வனத்தில் வெளிவந்துள்ளது..:) நன்றி விகடன்...:)

வியாழன், 28 ஏப்ரல், 2011

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு... போராடி ஜெயித்த பெண்கள் (7.,8 )







சாருமதி.. தமிழரசி.. வெங்கடேசன்.. இவை வெறும் பெயர்களாக உங்களுக்குத் தெரியலாம். இந்தப் பெயர் கொண்ட மூவரும் பலருக்குக் கடவுள்கள்..

சாலையோரம் எங்காவது புழுதியில் குப்பைத்தொட்டியில் புரண்டு கொண்டிருப்பவர்களைக் கண்டால் நாம் மூக்கைப் பொத்தி திரும்பிச் செல்வோம்..இவர்கள் அவர்களை அரவணைத்து உரிய புகலிடங்களில் சேர்ப்பிக்கிறார்கள்..இது ஒன்றும் சாதாரணமாக செய்து விடக் கூடிய விஷயமல்ல..

சாருமதி .. இவர் தென்னக ரயில்வேயில் ரிஷர்வேஷன் சூப்பர்வைசர். பண்ருட்டியை பூர்வீகமாககொண்ட இவர் வசிப்பது தாம்பரத்தில். சேலம் சாரதா கல்லூரியில் கணிதம் படிக்கும் போதே பகவத் கீதை மற்றும் விவேகானந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாம். இவரைப் பார்த்தால் சாரதாதேவியைப் போலவே இருக்கிறார்.

முதன் முதலில் இவர் வேலை செய்த சென்ட்ரல் மின் ரயில் நிலையத்தில் ஒருவர் உடையில்லாமல் விழுந்து கிடந்திருக்கிறார். மறுநாளும் அதே இடத்தில் மோஷன்., யூரின் போய்., சுற்றிலும் ஈ மொய்க்க கிடக்க தன் சக ஊழியர் வில்சனுடைய உதவியுடன் அன்பகத்தில் சேர்த்து இருக்கிறார். இவ்வாறு அநாதரவாக., மனநிலை சரியில்லாமல் வடநாட்டிலிருந்து தென்னகத்து ரயிலில் வந்து சேரும் பெண்கள்., முதியவர்கள்., ஆண்கள்., குழந்தைகள் என பலரை தானே முன்னின்றும்., வில்சன்., தமிழரசி , மற்றும் வெங்கடேசன் உதவியோடும் அன்பகம்., பானியன்., லிட்டில் ட்ராப்ஸ் ஆகிய காப்பகங்களில் கொண்டு சேர்க்கிறார். .

தமிழரசி ..இவர் சென்னைவாசி. கணவர் சிறைத்துறை கண்காளிப்பாளர்... இவரும் கணிதம் இளங்கலைப் பட்டதாரி.. RRB எக்ஸாம் எழுதி இருவரும் ரயில்வே பணியில் அமர்ந்திருக்கிறார்கள். இவர் ரிஷர்வேஷன் சூப்பர்வைசர் மற்றும் விஐபி இன்சார்ஜ் . புன்னகை தவழும் முகம் . விஐபிக்களை நன்கு தெரிந்ததால் அவசிய தருணங்களில் போன் மூலமாகவே ஆதரவற்ற சிலரை சென்னையில் இருந்துகொண்டே பாதுகாப்பு இல்லங்களில் சேர வழி செய்திருக்கிறார். தனக்கு சாருமதிதான் வாழும் எடுத்துக்காட்டு என சொல்கிறார்.

வெங்கடேசன் ...இவர் இப்படி அநாதரவாய் ரோட்டில் கிடப்பவர்களை எந்த அருவெறுப்புமின்றி எடுத்து உடல் துடைத்து , சமயங்களில் முடி வெட்டி., குளிக்க செய்து .,உணவூட்டி., உரிய மருத்துவ செக்கப் செய்து., தேவைப்பட்டால் அரசு மருத்துவ மனைகளில் சேர்த்து., அதன்பின் அவர்களை புகலிடங்களில் (தொண்டு நி்றுவனங்களில்) சேர்ப்பித்து., பின் அவர்களை பற்றிய தகவல்கள் அறிந்து ., உறவினர்களை அழைத்து கவுன்சிலிங் செய்து ஒப்படைப்பது வரை இவரின் பணி தொடர்கிறது.. அதன் பின்னும் அவ்வப்போது அவர்கள் குடும்பத்தாரால் சரிவர கவனிக்கப் படுகிறார்களா என்பதையும்., மருந்து தொடர்ந்து எடுத்துக் கொள்கிறார்களா என்பதையும் ., அவர்களின் உடல் நலத்தையும் தொண்டு நிறுவனங்கள் பின் தொடர்கின்றன.

சிலர் டெமென்ஷியாவாலும் சிலர் காக்ரீன் எனப்படும் நோயாலும் பாதிக்கப்பட்டுஇருப்பார்கள்.. குப்பைத் தொட்டியின் பக்கமாய் எலிகள்., காக்கைகள்., குருவிகள் இவர்கள் கால்களை கொத்தித் தின்னும். இதே போல் ஒருவர் தான் இறந்து விட்டதாகக் கருதி அவுட் அவுட் என்று சொல்லிக் கொண்டே விரிந்த கண்களோடு அப்படியே
கிடந்திருக்கிறார். இவர்களை எல்லாம் வெங்கடேசனும் சாருமதியும் காப்பாற்றி இருக்கிறார்கள்.

மனநிலை சரியில்லாமல் ரயில்வே பாதைகளில் சுற்றும் பெண்களில் 65 சதவிகிதம் பேர் சமூக விரோதிகளால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பிணிகளாய் இருப்பது கொடுமை.. அதனால் அத்தகைய பெண்களை இனம் கண்டவுடன் தொண்டு நிறுவனங்களில் கொண்டு சேர்ப்பது கடினமான பணி..

யாரோ நம்மை ஏதோ செய்ய வருகிறார்கள் என்ற கோபத்தில் அடிக்கவும் ., திட்டவும்., கடிக்கவும் செய்வார்கள்.. அதை மீறி அவர்களை உரிய இடத்தில் சேர்ப்பது கடும் பணி. மேல்மருவத்தூரில் ஒரு பெண் மேல் உடம்பு எரிந்த நிலையில் பிடிக்க செல்லும் போது எல்லாம் ஓடிச் செல்வதுமாக கிட்டத்தட்ட ஒரு நாள் முழுதும் கஷ்டப்பட்டுப் பிடித்து கொண்டு வந்து சேர்த்திருகிறார்கள். , ., குஜராத்திலிருந்து வந்த அழகிய இளம்பெண் வெறி பிடித்தது போல் ரயில் நிலையத்தை சுற்றி சுற்றி வந்ததும் அவரை ஒரு கால் டாக்ஸியில் பாதுகாப்பு இல்லத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது கத்தி ஹிந்தியிலேயே திட்டியதும் செல்லும் வழியில் வாந்தி எடுத்ததும். பின் வில்சனும்., சாருமதியும் இரண்டு கைகளைப் பிடித்து அமர்ந்து கொண்டு சேர்த்ததாக கூறினார்கள்.

மனநிலை சரியில்லாதவர்கள் குப்பைத்தொட்டியில் இருந்து எடுத்து உணவு எடுத்து உண்பதும்.. உடை பற்றி அக்கறை இல்லாமல் இருப்பதும்., ரயில்வேயின் பாத்ரூம்., நடைபாதை., வண்டிகள் நிறுத்துமிடம் என சுற்றித் திரிந்து படுத்திருப்பதும் கண்டு சாருமதி., வில்சன்., தமிழரசி மற்றும் சிலர் சேர்ந்து ரயில்வே டீம் என ஒன்றை உருவாக்கி உதவி வருகிறார்கள்.

இது வரை 45 பேர்களை இவ்வாறு பாதுகாப்பு இல்லங்களில் கொண்டு சேர்த்ததாக சாருமதி சொன்னார்.. அதில் 6 ., 7 நபர்களை வேறு யாருடைய உதவியும் இன்றி சாருமதியே சேர்ப்பித்ததாக வெங்கடேசன் கூறினார்.

உயர்மட்ட அளவில் உதவி தேவைப்பட்டால் அதை வி ஐ பி இன்சார்ஜாக இருக்கும் தமிழரசி உதவியுடன் பெற்று செயலாற்றுகிறார்கள். ஒரு மனநிலை சரியில்லாத பெண் திருச்சியில் ரோடில் குழந்தை பெற்ற போது சென்னையில் இருந்து தமிழரசி துணை முதல்வர் ஸ்டாலினின் முதல் நிலை உதவியாளர் இளங்கோவின் உதவியை நாடி அவர் போன் மூலமாக சொன்னதன் பொருட்டு அந்த தாயை மனநல காப்பகத்திலும்., குழந்தையை குழந்தைகள் காப்பகத்திலும் சேர்ப்பித்திருக்கிறார்கள்.

செகரட்டேரியேட்டில் வேலை செய்யும் வெங்கடேசன் கிட்டத்தட்ட 600 பேர்களை இவ்வாறு காப்பகங்களில் சேர்ப்பித்திருக்கிறார். பென்ஷன் வாங்கும் நாள் மட்டும் அம்மாவை அழைத்துச் சென்று கையெழுத்து வாங்கி பின் அங்கேயே விட்டுச் செல்லும் மகன்கள் கூட இருக்கிறார்கள்.. அந்த அம்மாவை வெங்கடேசன் அன்பகத்தில் சேர்ப்பித்திருக்கிறார். மேலும் முன்னாள் நடிகரின் மனைவி., நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு முதிய தாய் ., என பலரையும் அன்பகம், லிட்டில் ட்ராப்ஸ்., பானியனில் சேர்ப்பித்து இருக்கிறார்.

இவர்களைப் போல பலரும் இணைந்து மனநிலை சரியில்லாதோருக்காக., மெரினா பீச்சில் ஒரு ராலி கண்டெக்ட் செய்து., கல்லூரி கல்லூரியாக சென்று சுமார் ஒரு லட்சம் கையெழுத்து வாங்கி., அதை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் நெப்போலியனிடம் அனுப்பி அனுமதி வாங்கி., தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் கொடுத்து 2008 இல் ஒரு ஆர்கனைசேஷன் ஃபார்ம் செய்து இருக்கிறார்கள். பெயர் ..WOMAN...--- WELL -WISHERS OF MENTALLY ABNORMAL NATIONALS.

கூடுமானவரை சட்ட ரீதியாக செய்கிறார்கள். வேலை நேரம் முடிந்தபின்பே தங்கள் சேவையை தொடருகிறார்கள். 18 வயது வரை உள்ள குழந்தைகளை டான் பாஸ்கோ இல்லத்திலும்., முதியோர்களை லிட்டில் ட்ராப்ஸிலும்., எல்லா வயது பெண்களையும் பானியன்., அன்பகத்திலும் சேர்ப்பிக்கிறார்கள்.

இதற்கென்று முறையான செயல்பாடு இருக்கிறது.. ஒருவர் மனநிலை சரியில்லாமல் சுற்றித் திரிகிறார் அல்லது அநாதரவாக உயிர்போகும் நிலையில் ரோட்டில் கிடக்கிறார் என்றால் உடனே 108 க்கு ஃபோன் செய்கிறார்கள். முதியோர்கள் என்றால் ஹெல்ப் ஏஜுக்கும்., குழந்தைகள் என்றால் சில்ரன் ஹெல்ப் லைனுக்கும்., பெண்கள் என்றால் உமன் ஹெல்ப் லைனுக்கும் போன் செய்கிறார்கள்.. அவசர தேவை என்றால் முதலுதவி அளிக்கிறார்கள். 108 க்கு போன் செய்ததும் ஒரு குழு வந்து அவர்களின் பல்ஸ்., பி பி எல்லாம் சோதிப்பார்கள். பின் ஒரு அட்டண்டர் உடனிருக்க அந்த கேஸை ஜி ஹெச்சில் சேர்ப்பார்கள். இந்த மாதிரி அநாதரவானவரை பற்றி தகவல் கொடுப்பவரே அட்டண்டராக இருக்க வேண்டி வரும். அவர்களை சேர்க்குமுன்பு.அவர்கள் உடல் நிலை பற்றி ஒரு டாக்டரிடம் சர்டிஃபிகேட் வாங்கி ., பின் அந்த ஜூரிஸ்டிக்‌ஷனில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

முதியோரை எடுத்தால் அந்த போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டரிடம் ஜெனரல் மெமோ .( பொது நமூனா) வாங்கினால் போதும் . மனநிலை சரியில்லாதோரை சேர்க்க எஃப் ஐ ஆர் ஃபைல் செய்து., மாஜிஸ்ட்ரேட்டிடம் பர்மிஷன் வாங்கி., போலீஸ் ஸ்டேஷனில் ரிஷப்ஷன் ஆர்டர் போடுவார்கள். அதை ஆஸ்பத்ரியில் காண்பித்து சேர்த்து பின் அவர்கள் தரும் அட்மிஷன் தகவல்களை போலீஸ் ஸ்டேஷனிலும் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு ஒரு நாளாகும்.

அவர்கள் குணமாகும் வரை ஆஸ்பத்ரிக்கு தினமும் சென்று அவருக்கு தேவையான உணவு வாங்கித் தருவது., உடை மாற்றுவது., மருந்துகள் கொடுப்பது., அவரிடம் தன்மையாக பேசி அவர் பற்றிய தகவல்கள் அறிந்து குடும்பத்தினருக்கு தெரிவிப்பது., பின் மனநோயாளியாக இருந்தால் தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்ளச் செய்வது., குடும்பத்தினருக்கு கவுன்சிலிங்க் செய்வது., பின்னும் ஒவ்வொரு மாதமும் அவரை பரிசோதிப்பது என இவர்கள் பணி தொடர்கிறது.

இவ்வாறு மனநிலை சரியில்லாத நபர்களை குடும்பத்தினர் சிலர் ஏற்றுக் கொள்வதில்லை.. சிலர் வீட்டுக்கு சென்றாலும் கவனிப்பு சரியில்லாத காரணத்தால் தெருவிலேயே திரும்ப விடப்படுகிறார்கள்,, இவ்வாறு ஆதரவற்றவர்களை அன்பகம்., பானியன்., லிட்டில் ட்ராப்ஸிலேயே திரும்ப சேர்ப்பிக்கப்படுகிறார்கள். முடிந்தால் அவர்களும் அங்கு உள் நோயாளிகளாக இருந்து கொண்டே தம்மாலான உதவிகளை செய்து வேலைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். கை வினைப் பொருட்கள் தயாரிகிறார்கள். சிலர் பக்கத்தில் உள்ள கடைகளிலும் வேலை செய்கிறார்கள்.

ICCW -- INDIAN COUNCIL FOR CHILD WELFARE , மற்றும் டான் பாஸ்கோ அன்பு இல்லம் இவற்றில் சிறுவர்., குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். லிட்டில் ட்ராப்ஸில் முதியோர்களும்.,பானியனில் ஆதரவற்ற பெண்களும்., எல்லாரும் அன்பகத்திலும் சேர்க்கப்படுகிறார்கள்.


HELP AGE., காக்கும் கரங்கள்., உதவும் கரங்கள்., சேவாலயா போன்ற பலவும் இந்த நற்பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக கூறினார் வெங்கடேசன். தமிழ்நாடு ஊர்க்காவல் படையும் இந்த மாதிரி மக்களை காப்பகங்களில்சேர்க்க உதவுவதாக கூறினார்.

108 இன் சர்வீஸ் மூலம் GEDATRIC கேர் என்ற ஒன்று இப்போது ஆரம்பிக்கப் பட்டிருகிறது.. இது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான மருத்துவ உதவி. இதன் மூலம் ELDERS LEGAL ASSISTANCE., MOBILE MEDICAL CAMPAIGNE., COUNCELLING எல்லாம் செய்யப்படுகிறது.

இப்போது முதிய பெற்றோரை பாதுகாக்காமல் தெருவில் விடும் பிள்ளைகளை தண்டிக்க சட்டத்திலும் இடம் உள்ளதாக வெங்கடேசன் கூறினார்.

சென்னை மாநகர மேயர் மா. சுப்ரமணியன் அவர்களும் கார்ப்பரேஷன் மூலமாக உதவுவதாக வெங்கடேசன் கூறினார்.

தான்., தன் குடும்பம்., தன் நலம் என்றதெல்லாம் மீறி தன்னுடைய சம்பளப் பணத்தில் பெரும்பகுதி சாருலதா செழவழிக்கிறார் இந்த சேவையில்.

பலவருடங்களாக இந்த சமூக சேவையில் ஈடுபட்டிருந்த வெங்கடேசன் இப்போது இரண்டு வருடங்களாகத்தான் செகரட்டேரியேட்டில் பணிபுரிகிறார். மிச்ச நேரங்களில் சமூக சேவை தொடர்கிறது.

மிக உயர் பொறுப்பில் இருந்தாலும் தன் புன்னகை முகத்தாலும் அன்பான தன்மையான அணுகுமுறையாலும் மேலிடத்தினரின் உதவி பெற்று இம்மாதிரி பாதிக்கப்படும் மக்களை காப்பதில் உதவுகிறார் தமிழரசி..

கடவுளை கும்பிட நான் கோயிலுக்கு செல்வதில்லை.. தேவைப் படும் மக்கள் மூலமாக கடவுளே எங்களிடம் வருகிறார் .. இந்த சேவையிலேயே கடவுளின் ஆசீர்வாதங்களை (குணமானோர் சொல்லும் வாழ்த்துக்களை ) ருசிக்கிறேன் என்கிறார் வெங்கடேசன்..

இன்றைக்கு 8 பெண்கள் இவ்வாறு (மனநிலை சரியில்லாமல் இருந்து குணமகி வீட்டு அட்ரஸ் கேட்டு சேர்ப்பிக்கப்படப் போகிறார்கள் அவர்கள் குடும்பத்தோடு. இதை ரயில்வேயின் ஒரு உயர் அதிகாரி மூலம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அனுப்புகிறார்கள்.. இதற்கு மூலகாரணம் தமிழரசி.. தன்னுடைய வி ஐ பி சர்வீஸ் தொடர்புகள் மூலம் இந்த நல்ல காரியத்தை சாதித்திருக்கிறார்.

வாழும் தெய்வங்கள் இவர்கள். வாழ்த்துவோம் இவர்களை..

இதுபோல் இன்னும் சில உதவும் டீம்கள் அமைய வேண்டும் என்பது இவர்கள் எண்ணம்.

வாசகர்களும் எங்காவது இது போல் அநாதரவாக அல்லது மனநிலை சரியில்லாத நபர்களை கண்டால் இந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.. எளியோருக்கு உதவுதல் நன்று.. இது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல.. தங்கள் நேரத்தில் சிறிதை பிறருக்காகவும் வாழ்வோம்.






வாசகர்களுக்காக..
ELDERS HELP LINE --- 1253
CHILDREN HELP LINE --- 1098
WOMEN HELP LINE --- 1091
CORPORATION --- 191.






செவ்வாய், 26 ஏப்ரல், 2011

ஸ்ரீ கான குஹா.. இசைப்பள்ளியின் ஆண்டுவிழாவில்..சிறப்பு விருந்தினராக.

பிப்ரவரி 27 அன்று சென்னை., ஆழ்வார்திருநகர் திருவிக பூங்காவில் ஸ்ரீ கான குஹா இசைப்பள்ளியின் ஆண்டுவிழா ஸ்வரா 2011 நடைபெற்றது. அதற்கு சிறப்பு விருந்தினராக நானும் தங்கை கயல்விழிலெட்சுமணனும் கலந்து கொண்டோம்.


குத்து விளக்கேற்றி., குழந்தைகளின் இனிய கானத்தோடு ஆரம்பமானது விழா.

இந்த இசைப்பள்ளியின் ஆசிரியர் திரு விவேக் நாராயணன். நண்பர் டைரக்டர் செல்வாவின் “அவர்” படத்துக்கு இசையமைப்பாளர் இவர்தான். விரைவில் வெளிவர இருக்கிறது படம். இவர் இசைப்பள்ளியில் படித்தவர்தான் பிரபல பாடகர் திப்பு.

விவேக் நாராயணன் மகள் தொகுத்து வழங்க ஆரம்பமான விழாவில் அவரது துணைவியார் எங்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

கயல்விழி லெட்சுமணன் தனது உரையில்., “ இந்தக் காலத்துக் குழந்தைகள் மிக அட்வான்ஸ்ட் திங்க்கிங் உள்ளவர்கள்.. நாம் எதுவும் சொல்லிக் கொடுக்கவே வேண்டாம். எல்லாம் அவர்களுக்கே தெரிகிறது. நிறைய எக்ஸ்போஷர் இருப்பதால் அவர்கள் எதையும் சீக்கிரம் கற்றுக் கொள்கிறார்கள். இங்கு பாடிய குழந்தைகள் சிறப்பாக பாடினார்கள். நல்ல திறமைசாலிகள். எனவே நான் அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.” என்றார்.

அடுத்து பேசிய நான்., சங்கீத மும்மூர்த்திகளுக்கும் என் நமஸ்காரம். “ கீதஞ்ச., வாத்யஞ்ச., நிருத்யஞ்ச த்ரயம் சங்கீத சமுச்யதே .. பாடல்., வாத்தியக் கருவிகள் வசிப்பது .,நடனம்., இம்மூன்றுமே சங்கீதம் எனப்படுகிறது. இந்த இனிய மாலைப் பொழுதை பொன்மாலைப் பொழுதாக மாற்றிய இந்த இசைப்பள்ளியின் குழந்தைகளுக்கு நன்றி.


இசையின் 7 ஸ்வரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பறவையின் அல்லது மிருகத்தின் ஒலியில் இருந்து உருவானது.. உதாரணமாக ,”ச” ( ஷட்ஜமம்) என்ற ஒலி மயிலின் அகவலிலிருந்தும்., “ரி” ( ரிஷபம்) என்ற ஒலி ரிஷபத்தின் ஒலியில் இருந்தும் .,( இதுபோல் க-காந்தாரம்-- ஆடு., ம--மத்யமம்--கிரௌன்ச பட்க்ஷி., ப--பஞ்சமம்-- குயில் ., த -- தைவதம் -- குதிரை., நி-- நிஷாதம்-- யானை) உருவானது.


காலை., மதியம்., மாலை., இரவு பாடுவதற்கென தனித்தனி ராகங்கள் உள்ளன. ., பூபாளம் விடியலிலும்., மதியம் பைரவியும்., மாலையில் காஃபி ராகமும் இரவில் நீலாம்பரியும் பாடப்படும் ராகங்களில் சில.


மலர் மருத்துவம் போல இசைமருத்துவம் என ஒன்றை நான் படித்தேன்.. அதன் படி இசையின் மூலம் நோய்களைக் குணப்படுத்தலாம். ஹிந்தோளம் காய்ச்சலுக்கும்., கரகரப்பிரியா வயிற்று வலிக்கும் பைரவி தலைவலிக்கும் பாடினால் நோய் குறைகிறது என கண்டு பிடித்திருக்கிறார்கள்.


உலகம் முழுமையும் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம். அப்படி இருக்கும் போது உங்கள் தாய்தந்தையர் உங்களுக்கு கல்வி மட்டுமே முக்கியம் ., நல்ல வேலை கிடைத்து சம்பாதிப்பது மட்டுமே முக்கியம் என உங்களை சம்பாதிக்கும் மிஷின்களாக எண்ணாமல் தங்கள் குழந்தைகள் பல கலைகளையும் கற்றுத் தேர்ச்சியடைய வேண்டும் என இந்த இசைப்பள்ளியில் சேர்த்து இசையைக் கற்கச் செய்திருக்கிறார்கள்.

தன் குழந்தைகளை சரியாக கவனிக்காத பெற்றோர் இருக்கிறார்கள். வறுமையினால் கவனிக்க இயலாத பெற்றோரும் கூட இருக்கிறார்கள். இந்த மாதிரி சூழ்நிலையில் உங்களை ஊக்குவிக்கும் பெற்றோர் கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எனவே நீங்கள் உங்கள் பெற்றோருக்கும் இந்த இசைப்பள்ளிக்கும் பெருமை தேடித்தரவேண்டும். இந்த இசைப்பள்ளி மிக அருமையான பாடகர் திப்புவை உருவாக்கி இருக்கிறது.

உலக அரங்கில் நம் இசையை ஒலிக்கச் செய்ய வேண்டும். நிறைய ஆராய்ச்சிகள் இசையில் மேற்கொள்ளப்படவேண்டும். இசைமருத்துவம் பற்றி கூட ஆராய்ச்சி மேற்கொண்டு நாம் தற்காலத்தில் உட்கொள்ளும் மருந்துகளைக் குறைக்கலாம். சர்வதேச அரங்குகளில் நம் தமிழிசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து பாடுங்கள். நம் மொழியையும் இசையையும் உலகெங்கும் ஒலிக்கச் செய்யுங்கள் .. ” என்று கூறினேன்.


கலந்து கொண்டு பேச வாய்ப்பளித்த இசையமைப்பாளர் விவேக் நாராயணனுக்கும்., அவர் பட டைரக்டர் செல்வாவுக்கும் நன்றிகள்.


குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி ஜன கண மனவுடன் விழா இனிது நிறைவுற்றது.



சனி, 23 ஏப்ரல், 2011

அதில் எனக்கு வருத்தமுண்டு.. பாரதி மணியின் பேட்டி சூரியக்கதிரில்..




பாரதி மணி சாருடன் ஒரு பேட்டி!

தேனம்மை லெக்ஷ்மணன்

விருதுபெற்ற எழுத்தாளர்களிலிருந்து விருது பெறத்துடிக்கும் நாடக நடிகர்கள் வரை இவர்களிடம் வெகு பிரபலமானவர் பாரதி மணி. எஸ். கே. எஸ் மணி சார் என்றாலோ., எழுத்தாளர் க. நா.சு வின் மாப்பிள்ளை என்றாலோ
உங்களுக்கு தெரிந்ததை விட.. பாரதி படத்தில் பாரதியாரின் தந்தை சின்ன சாமி ஐயராக நடித்தவர் என்றாலும்., பாபாவில் ரஜனியுடனும் ., குருக்ஷேத்திரத்தில் சத்யராஜுடன் நடித்திருக்கிறாரென்பதும் தெரிந்திருக்கலாம்.. அவர்தான் பாரதிமணி ஐயா. பலருக்குத்தெரியாத
இன்னொரு விபரம் பேரறிஞர் அண்ணா., மற்றும் மக்கள் திலகம் எம் ஜி ஆர் ஆகியோருடன் தில்லியில் நெருங்கிய நட்புடன் இருந்தார் என்பது. இரண்டு முதல்வர்களுடன் அவர்கள் முதல்வராகுமுன்னே நெருங்கிப் பழகும் வாய்ப்புப்பெற்றவர். அவர்கள் முதல்வரானதும் ஒருமுறை கூட போய்ப்பார்க்காதவர்!

அறிஞர் அண்ணாதுரை அவர்களின் எளிமையையும்., டெல்லிக்கு வந்த அவருடன் பார்த்த ஆங்கிலத் திரைப்படங்களையும் மற்றும் எம் ஜி ஆர் அவர்களுடன் ஜெய்ப்பூர் போனதையும் அவரின் ஈகைக் குணத்தையும் தன்னுடைய ” பல நேரங்களில் பல மனிதர்கள் ” என்ற ஒரே புத்தகத்தில்
அற்புதமாக பகிர்ந்திருக்கிறார். இவர். இரண்டாவது புத்தகம் எழுதி, தனக்கு தமிழ் வாசகர்களை துன்புறுத்தும் எண்ணமில்லையென்று வேடிக்கையாக சொல்பவர்!

இவரது கட்டுரைகளை இணையத்தில் படிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட
சுட்டியில் படிக்கலாம்: http://balhanuman.wordpress.com/category/bharati-mani/

ஐம்பது வருடம் தில்லியில் இருந்த இவர். நேரு., இந்திரா காந்தி., ராஜீவ் காந்தி., மொரார்ஜி தேசாய்., காந்திபாய் தேசாய், மது தண்டவதே, ஷேக் ஹஸீனா (பங்களாதேஷின் தற்போதைய அதிபர்), , அன்னை தெரசா., சுஜாதா., பூர்ணம் விசுவநாதன் போன்றோருடன் நெருங்கிப்பழகும் சந்தர்ப்பம் பெற்றவர். இவரது திரைப்பட அனுபவமே BBC சானல் தயாரித்த ஆங்கிலப்படத்தில் துவக்கம். இவர் நடித்த 13 திரைப்படங்கள் தேசிய விருது வாங்கி இருக்கின்றன. இலக்கியம்., நாடகம்., கர்நாடக இசை அறிவு., திரைப்படம்., பல அரசியல் தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு என பரந்துபட்ட அனுபவங்களுக்குச் சொந்தக்காரர். இவ்வருடம் தில்லி டைரக்டரேட் ஆப் ஃபிலிம் ஃபெஸ்டிவல் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுத்த ஜூரியாக தில்லி போய் 210 படங்களைப்பார்த்து, அதில் 26 சிறந்த படங்களை கோவாவில் நடந்த இந்தியன் பனோரமாவுக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பெற்றவர். பிரபல இயக்குனரின் புது திரைப்படத்துக்காக ஸ்டில்ஸ் போட்டோ செஷனுக்கு சென்று வந்த இவரிடம் நம் சூரியக்கதிர் பத்திரிகைக்காக பேட்டி எடுத்தோம் .

1. பாரதி மணி ஐயா! உங்களைப் பற்றி நமது சூரியக்கதிர் வாசகர்களுக்குச் சொல்லுங்கள்..
நாகர்கோவில் பக்கத்திலுள்ள பார்வதிபுரம் என் சொந்த ஊர். 1937-ம் வருடம் பிறந்தவன். திருவனந்தபுரத்தில் என் தந்தை சுப்பிரமணியம் வேலை செய்ததால் அங்கே சாலை ஸ்கூலில் படிப்பு. அங்கே எழுத்தாளர் நீல. பத்மநாபன் என் வகுப்புத் தோழர். அதன் பின் நாகர்கோவில் எஸ் எல் பி ஸ்கூலில் 11-வது வரை படித்தேன். எஸ் எஸ் எல் சி. முடித்த பின் டெல்லி சென்று அங்கே தமக்கை பகவதி வீட்டில் தங்கி பி. காம் ., எம் பி ஏ. என்று
தொடர்ந்தேன். நான் இன்று வளர்ந்திருப்பதற்கு என் அக்காவும் அத்தானுமே
பக்கபலம்!

முதன்முதலில் தில்லி பாரத் எலக்ட்ரானிக்ஸில் வேலை. 1955 இல் என் முதல் சம்பளம் 136 ரூபாய் எட்டணா. பின்பு ஸ்டேட் ட்ரேடிங் கார்ப்பரேஷனில் பணி செய்தேன். பின்னர் பிர்லாவில் வேலை. அதன் பின் இண்டர்னேஷனல் ட்ரேடிங்கில் பணி. லைசன்ஸ் பர்மிட் கோட்டா ராஜ் இருந்ததால் பேப்பர்., சிமெண்ட், சீனி., பாமோலின், கோதுமை, பத்திரிகைக்காகிதம், யூரியா, சல்ஃபர் போன்ற பொருட்களை இறக்குமதி செய்தோம் பலநாடுகளிலிருந்து. அங்கெல்லாம் அடிக்கடி போகும் வாய்ப்பிருந்ததால், நான் அப்போது உலகம்
சுற்றும் நாற்பது வயது வாலிபனாக இருந்தேன்!. நான் போன நாடுகளைப் பட்டியலிடுவதை விட நான் போகாத நாடுகள் தான் குறைவு. !

2. நாடகத்துறை ., திரைப்படத்துறை ., இலக்கியத்துறையில் நீங்கள் வந்தது எப்படி..?
சின்ன வயதில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என் தந்தையைப் பார்க்க எங்கள் வீட்டுக்கு வருவார். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது தான் முதன்முதலாக சங்கரதாஸ் ஸ்வாமிகள், யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை, பம்மல் சம்பந்த முதலியார், F.G. நடேசய்யர் போன்ற பெயர்களைக் கேட்டிருக்கிறேன். என் தந்தை ஹேம்லெட் நாடகத்தை ஆங்கிலத்தில் உணர்வு பூர்வமாக குரல் ஏற்ற இறக்கத்துடன் வாசிக்க, ஒரு வார்த்தை
ஆங்கிலம் தெரியாத நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார்.

அப்போது அவர்களுக்காக உணவு எடுத்து மாடிக்கு கொண்டு செல்லும் என்னைப் பார்த்து ஒரு நாள் ராஜமாணிக்கம் பிள்ளை சொன்னார், ’ அய்யர்வாள்! இவனை இரண்டுமாத பள்ளிக்கூட லீவில் என்னிடம் அனுப்பிவையுங்கள்.....ட்ராமாவில் நடிக்க வைக்கிறேன். அனுமதி கொடுங்கள்’ என்று. என் தந்தை அனுமதித்ததும் எனக்கு இரண்டு மாதங்கள் தான்
பள்ளி விடுமுறை என்பதால் சிறு சிறு வேடங்களில் நடிக்க வைத்தார். கிருஷ்ண லீலாவில் கிருஷ்ணரின் நண்பனாய்., நல்லதங்காளில் கிணற்றில் குதிக்கும் 2 வது 3 வது பிள்ளையாய் வேஷம் கொடுத்து நடிக்க வைத்தார். இதன் மூலம் எனக்கு நடிப்பு வந்ததோ இல்லையோ, கொஞ்சம் டிசிப்ளின் வந்தது. ஆரோக்கியம் வந்தது. பிராணாயாமம், ஆசனம் எல்லாம் கற்றுக் கொண்டது அங்கே தான்!

பெருமைக்குரிய விஷயம். இந்த வருடம் மார்ச் மாதம் தியேட்டர் லாப்
தயாரித்து, ஜெயராவ் இயக்கிய பஷீரின் சப்தங்கள் நாடகத்தில் நான் எழுத்தாளர் பஷீராக நடித்தது இன்னும் பல காலம் நினைவில் இருக்கும்.

3.நீங்க நடிக்கிற படம் எல்லாம் விருது வாங்கிடுதே.. ?
1991 இல் என் முதல் படம் பி பி சி எடுத்த ஆங்கிலப்படம் எலக்ட்ரிக் மூன். முதல் படமே விருது வாங்கிய படம். இதில் கதை வசனம் எழுதியவர் அருந்ததி ராய்.. அதன் பின் இயக்குனர் லெனின்.,ஜெயபாரதி., அம்ஷன் குமார், ஞான. ராஜசேகரன் ஆகியோர் இயக்கிய படங்களில் நடித்திருக்கிறேன். நான் நடித்த 40 படங்களில் 13 படங்கள் தேசிய விருது பெற்றவை.. அவற்றில்
சில எலக்ட்ரிக் மூன்., பாரதி., ஊருக்கு நூறு பேர்., மொட்டுக்கா., றெக்கை., ஒருத்தி., நண்பா நண்பா., ஆட்டோகிராஃப்., அந்நியன். எடிட்டர் லெனின் விளையாட்டாக சொல்வார்: ‘மணி சார் ஒரு ஃப்ரேமில் வந்தாலும், அந்தப்படம் விருது வாங்கிவிடும்!’ என்று! பல படங்களில் கதாநாயக/நாயகிகளின் தாத்தா வேடத்தில் தலையைக்காட்டியது தான் எனக்கு அசட்டுத்தனமான சோகம்! இப்போது அதையெல்லாம் தவிர்த்துவருகிறேன். மூன்றே படங்களில் முதலமைச்சராக நடித்திருந்தாலும், எல்லா படங்களிலும் நான் முதலமைச்சராக வருவதாக ஜெயமோகன் என்னை கேலி செய்வார்! 2010-ல் நூற்றாண்டுவிழா கொண்டாடிய திரு கக்கன் அவர்கள் நினைவாக தயாரிக்கப்பட்ட ஒரு முழுநீள ஆவணப்படத்தில் நான் கக்கனாக நடித்திருக்கிறேன்......ஆம்.... அவரைப்போல வாழமுடியாது........நடிக்கத்தான் முடியும்!

4. இசை விமர்சகர் சுப்புடுவே உங்களைப் பாராட்டி இருக்கிறாராமே..?
தில்லியில் என்னைவிட வயதான கர்நாடக சங்கீத சபாவின் செயலராக இருந்தபோது தமிழகத்திலிருந்து வரும் அனைத்து பிரபல சங்கீத வித்வான்களும் டெல்லி வந்தால் என் வீட்டில்தான் தங்குவார்கள்.என் தந்தையாரின் உந்துதலால் கர்நாடக இசையை சிறுவயதிலேயே கேட்டு வளர்ந்ததினால் ஆரோகணம் அவரோகணம் தெரியாமலே 100 ராகங்களுக்கு மேல் கண்டுபிடித்துவிடுவேன். இசை விமர்சகர் சுப்புடுவே, ‘எப்படீடா டக்குனு சொல்றே?’ என்று ஆச்சர்யம் அடைவார்.என்னுடைய கர்நாடக இசை சம்பந்தமான நட்புகளையும் தொடர்புகளையும் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். அந்தக்காலத்திலிருந்தே தில்லி வரும் மதுரை மணி, அரியக்குடி, மகாராஜபுரம், செம்பை, செம்மங்குடி, பழனி, லால்குடி, காருகுறிச்சி, உமையாள்புரம், எம்.எல்.வி., எம்.எஸ். போன்றவர்களுக்கு அங்கு
தேவையான உதவிகளைச்செய்ய தயங்கமாட்டேன்.

5. நீங்கள் எழுதிய பல நேரங்களில் மனிதர்களில் பலரும் உங்களைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்களே..?
என்னை யாராவது எழுத்தாளன் என்று சொன்னால், உடம்பு கொஞ்சம் கூசுகிறது. இலக்கியத்துக்கும் எனக்கும் வெகுதூரம். I am a One Book Wonder! நான் எழுதிய ஒரே புத்தகமான உயிர்மை வெளியிட்ட பல நேரங்களில் பல
மனிதர்களில் நாஞ்சில் நாடன், இ.பா., வெ.சா., ஜெயமோகன், அ. முத்துலிங்கம்,
அசோகமித்திரன், வாஸந்தி, பாவண்ணன், ஆ. மாதவன், லெனின், சத்யராஜ்
போன்ற 28 பிரபலங்கள் என்னைப்பற்றி நிறைய ’பொய்’ சொல்லியிருக்கிறார்கள்!

என்னையெல்லாம் ஓர் எழுத்தாளன் என்று சொல்வது எழுத்துக்கும் அதை
வேள்வியாக கொண்டாடுபவர்களுக்கும் பெருமை சேர்க்காது!! ஆனால் நான்
ஒரு நல்ல வாசகன். தேடித்தேடி வாசிப்பவன். எனக்கு கிடைத்த ஒரு பாக்கியம் – நூறுக்கும் மேற்பட்ட பெரிய எழுத்தாளர்களுக்கு .......– அது ஒரு பெரிய லிஸ்ட்....... மெளனி, சி.சு.செல்லப்பா, தி.ஜ.ர., தி. ஜானகிராமன், நகுலன், தி.க.சி., கி.ரா., ஆதவன், கிருஷ்ணன் நம்பி, சு.ரா., ஆ. மாதவன், நீல. பத்மநாபனில்
தொடங்கி இப்போது எழுதும் அம்பை, பாவண்ணன், வண்ணதாசன்,
எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு, யுவன் சந்திரசேகர், சுகா, விஜய்
மகேந்திரன், மதுமிதா, தேனம்மை வரை நண்பனாக இருக்கிறேன். அப்ப்பா! நாலு தலைமுறை எழுத்தாளர்கள்!! இந்த கொடுப்பினை வேறு எத்தனை பேருக்கு கிடைக்கும்? மெளனியும், சி.சு. செல்லப்பாவும் என்னை ‘மாப்பிளே....மாப்பிளே என்று தான் வாய் நிறைய கூப்பிடுவார்கள். மாறாக க.நா.சு. என்னை ஒரு தடவை கூட மாப்பிள்ளே என்று அழைத்ததில்லை!
மணி தான்! அதில் எனக்கு வருத்தமுமுண்டு! நான் மட்டும் கொஞ்சம் முந்திப் பிறந்திருந்தால், புதுமைப்பித்தன், வ.ரா., கு.ப.ரா., அழகிரிசாமி, பிச்சமூர்த்தி
இவர்களுடனும் அதற்குத்தான் கொடுத்து வைக்கவில்லை! போகட்டும்!
அவருக்கு நான் என்றும் நட்பாக பழகியிருப்பேன்! என்ன பேராசை பாருங்களேன்! ஆண்டவன் எனக்கு எல்லா செல்வங்களையும் என் தகுதிக்கு மீறியே அள்ளித்தந்திருக்கிறான். இப்போது நல்ல நண்பர்களின் தேடல் தொடர்கிறது. நேற்று கூட என் புத்தகத்தைப் படித்துவிட்டு, உடனே என்னிடம்
அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்த தர்மபுரி வாசகர் ஜெயவேல்,
என்னைப்பார்ப்பதற்காகவே சென்னை வந்து, என்னுடன் நாலு மணிநேரம்
பேசிக்கொண்டிருந்தார். இதைவிட சந்தோஷம் வேறென்ன இருக்கமுடியும்? நான் கொடுத்துவைத்தவன்!

டிஸ்கி:- இது ஏப்ரல் 1 - 15 சூரியக்கதிருக்காக நான் எடுத்த பேட்டி.. இன்னும் நாடகம்., அரசியல்., சினிமா உலகம் பற்றி எல்லாம் பரபரப்புத்தகவல்கள் கொடுத்த பாரதி மணி ஐயா எல்லாம் ஆஃப் தெ ரெக்கார்ட் என சொல்லி விட்டதால் ரொம்பக் காரமாக இருக்காது இந்த கட்டுரை..:)

புதன், 20 ஏப்ரல், 2011

இவள் புதியவளில் உன்னோடு ஒரு நாளாவது மற்றும் மௌனக்கல்..




உன்னோடு ஒரு நாளாவது ...
***************************************
ஏதேனும் ஒரு கடற்கரையோ.,
பூந்தோட்டமோ.,
இருளும்., குளிரும்
கதகதப்பாய்ப் பூக்கத்
தொடங்கும் அதிகாலை...

மகிழம்பூக்களோ.,
குல்மோஹரோ கொட்டிக்
கிடக்கும் மரத்தடியில்..
அல்லது அலைகளும்
தென்னையும் விசிறி அடிக்கும்
கட்டுமரங்களுக்கிடையில்

பாதம் புதைய கைகோர்த்து.,
தோளணைத்து செல்கையில்.,
உன் கையில் தாவரமாகவோ
கொடியாகவோ.,



உன் முகம் பார்த்துப்
பூக்கத்தொடங்கும்
தாமரையாகவோ..
சூரியகாந்தியாகவோ.


நிறைய பறவைகளும்
தட்டாரப் பூச்சிகளும்.,
சில பட்டாம் பூச்சிகளும்
நம்மைச் சுற்றி
சிறகடித்து ரீங்கரிக்க

அலைகளும் நுரைகளும்
ஆள்நனைத்து கூதலடிக்க
பேச ஏதுமில்லை
உன்னுடன் நான்..
என்னுடன் நீ

பசியில்லை., தாகமில்லை..
தூக்கமில்லை.,ஏக்கமில்லை.,
முகம் பார்த்து பசியாறி
புன்னகையில் தாகமடங்கி


ஒருவர் விழியில் ஒருவர்
இளைப்பாறிக் களைப்பாறி
பறவைகளுடனும்.,
பூக்களுக்குள்ளும்.,
அலைகளுக்குள்ளும்..

இருளும் குளிரும்
கதகதக்கும் மாலை
வெயிலில் கைகோர்த்து
உன்னோடு ஒரே ஒருநாளாவது..
*********************************************

12. மௌனக்கல்:-
******************
மௌனம் ஒரு கல்லாய்
விழுகிறது என்னுள்...
விரிவலைகள் கிளப்பி..


சிற்பமாய் செதுக்கிக்
கொண்டிருக்கிறேன் அதைப்
பலகாலமாய்..


சிலசமயம் தெய்வமாயும்.,
பலசமயம் குரங்காயும்
அரட்டுகிறது அது..

மௌனக் கல்லும்
வார்த்தைக் கல்லும்
மோதி மோதி
நதியைப் போல நெளிந்து நான்..

கடலிலிருந்து மேகமாகித்
தரையிரங்கும் வரை
கற்களற்றது என் வாழ்வு..

கற்களோடான பயணத்தில்
களைத்துக் களைத்துக்
கடல் தட்டி நான்..

டிஸ்கி :- இந்த இரண்டு கவிதைகளும் ஏப்ரல் 2011 இவள் புதியவளில் வெளிவந்துள்ளது.. நன்றி இவள் புதியவள்..:))

திங்கள், 18 ஏப்ரல், 2011

அன்புள்ள அம்மாவுக்கு.. அவள் விகடனில் என் கவிதை..



எங்களுக்காய் கடவுள்

அனுப்பிய தேவதையே..

அன்பெனும் குடுவை நீ..


கலாசாலைகளும்

கற்பிக்க இயலாததெல்லாம்

கற்றுக் கொடுத்த

உயிர் கல்விக்கூடம் நீ..


எந்த இடத்திலும்

என் சுயத்தை

இழந்ததே இல்லை..

என் சுயத்தின்

ஆணிவேர் நீ..


நீ அன்பை

எவ்வளவு இட்டாலும்

கொள்ளும்தான் எனக்கு..

உன் அன்பை மட்டுமே

புசிக்கும் காயசண்டிகை நான்..


டிஸ்கி:- இது 12. 4. 2011 அவள் விகடனில் வெளிவந்து இருக்கு.. ( பத்ரிக்கைகளுக்கு அனுப்பும் ரங்க தங்க மணிகளே.. சில சமயம் உங்க படைப்பு பத்திகள் ஒதுக்கப்படுவது பொறுத்து எடிட் ஆகி சின்னதாகிவிடலாம்.. எனவே எடிட் பண்ணாலும் பரவாயில்லை என நினைக்கும் ரங்க தங்க மணிகள் தங்கள் படைப்புகளை பத்ரிக்கைக்கு கொடுங்க.. :)) ) ..

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

இணையத்தில் எழுத்தாளர்.. குங்குமத்தில் வாசகர் கேள்விக்கு என் பதில்..



இணையத்தில் எழுத்தாளர்!


வலைப்பூக்களில் பலர் எழுதுகிறார்களே...


நானும் அதுபோல இணையத்தில் எழுத விரும்புகிறேன். அதற்குச் செலவாகுமா? என்ன வழி? - ஆர்.ராதிகா, ராஜபாளையம்.


பதில் சொல்கிறார் வலைப்பதிவர் - எழுத்தாளர் தேனம்மை லெக்ஷ்மணன்.


இணைய இணைப்பும் மின் அஞ்சல் கணக்கும் இருந்தாலே போதும்... வேறெந்த செலவும் இல்லாமல் வலைப்பூ தொடங்கலாம்.


blogger.com, wordpress.com, typepad.com போன்ற சேவைத்தளங்களில் இரண்டே நிமிடங்களில் பதிவுசெய்து, உடனே எழுதத் தொடங்கிவிடலாம்.


விரும்பினால் சுய விவரம், புகைப்படத்தோடு, பிடித்த திரைப்படங்கள், இசை, புத்தகங்கள் போன்ற ஆர்வங்களையும் பதிவு செய்யலாம்.


உங்கள் வலைத்தளத்துக்கு பெயர் சூட்ட வேண்டும். அதன்பிறகு டாஷ்போர்ட் பலகைக்குச் சென்று ‘புதிய இடுகை’ என்பதை க்ளிக் செய்து கதை, கவிதை, கட்டுரை என விரும்புவதை எழுதி வெளியிட வேண்டியதுதான்! படங்கள், வீடியோ, ஆடியோ க்ளிப்பிங்ஸ் இணைக்கும் வசதியும் உண்டு.


கணிணியில் தமிழ் எழுத யூனிகோட் எழுத்துரு தேவை. ‘பொங்கு தமிழ் யூனிகோட் எழுதி’ பயன்படுத்தலாம். அல்லது NHM Writer என்ற இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழையே எஸ்எம்எஸ்ஸில் ஆங்கிலத்தில் அடிப்பதுபோலவே, இதிலும் அடித்து, தமிழாகப் பெறும் கீபோர்டு வசதியும் உள்ளது.


வலைப்பூவில் எழுத ஆரம்பித்ததும் உறவினர்கள், நண்பர்களுக்குச் சொல்லலாம். பின்பற்றுபவர்கள் என்ற கேட்ஜெட்டை நம் வலைப்பூவில் சேர்க்கலாம். நாமும் பிற வலைப்பூக்களில் பின்பற்றுபவராகச் சேர்ந்து, படித்து, பின்னூட்டமிட்டால், நம் வலைப்பதிவை படிக்கும் வாசகர்கள் அதிகமாவார்கள்.


வலைப்பூவை பிரபலமாக்க திரட்டிகளில் இணைக்கலாம். தமிழ்மணம், தமிழிஷ், உலவு என பல திரட்டிகள் உள்ளன. திரட்டிகள் ஒவ்வொரு இடுகையையும் அறிவிப்பாக வெளியிடும்.


ஃபேஸ்புக், ட்விட்டரிலும் இடுகைகளைப் பகிரலாம். நெட்வொர்க் ப்ளாக்ஸ் போன்றவற்றிலும் இணைக்கலாம்.


வாரம் ஓரிரு பதிவாவது எழுதுதல் நல்லது. சிறப்பான பதிவுகள் வாசகர் வட்டத்தை உருவாக்கும்.


ஆங்கில வலைப்பூவாக இருந்தால் ‘கூகுள் ஆட்சென்ஸ்’ விளம்பரத்தை நம் வலைப்பூவில் வெளியிட அனுமதி கொடுத்து, வருகையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறிய தொகை ஒன்றையும் சம்பாதிக்க முடியும். வாழ்த்துகள் வலைப்பதிவரே!


டிஸ்கி:- இந்தக் கேள்வி பதில் 11. 4. 2011 குங்குமத்தில் வெளியானது.. நன்றி குங்குமம்..:))

வியாழன், 14 ஏப்ரல், 2011

அசடன் மொழியாக்கம் (முன்பதிவு..) என் அம்மாவின் அற்புதமொழிவளத்தில்..:)


என் அன்பி்ன் சுசீலாம்மாவின் புத்தகம் குற்றமும் தண்டனையும் குமுதத்தில் பெஸ்ட் செல்லரில் 2008 இல் 9 வது இடத்தைப் பிடித்தது.. அதைப் படித்தபின் டில்லியில் இருந்த அவர்களோடு தொடர்பு கொண்டு பின் நானும் ஒரு வலைத்தளம் .,ஆரம்பித்து ., புத்தகங்கள் என இந்த அளவு வந்துள்ளேன்.. அவர்களின் நூல் விமர்சனம் .. அதுவே ஒரு புத்தகமாகி விடும். அந்த அளவு எனக்கு ரஸ்கோல்னிகோவையும் துனியாவையும் பிடிக்கும் நிச்சயம் ஒரு நாள் அதை முழுமையாய் எழுதுவேன்.. இப்போது என் அம்மாவின் அடுத்த படைப்பு அசடன் வெளியாக உள்ளது.. அதை வாசிக்க கீழிருக்கும் முகவரியில் முன்பதிவு செய்யுங்கள்.. உலக இலக்கியங்களை ., கலைச் செல்வங்களை நம் மொழியில் சேர்க்கும் அம்மாவுக்கும் மற்றும் அனைத்து வலைப்பதிவர்களுக்கும்., வாசகர்களுக்கும்., இணைய இதழ்களுக்கும்., பத்ரிக்கையாளர்களுக்கும்., பொது ஜன ஊடக மக்களுக்கும்., சின்னத்திரை., பெரிய திரை., முகபுத்தக நட்புக்களுக்கும் என் சித்திரைத் திருநாள் வந்தனங்கள்.. மங்கலம் பொங்கட்டும் மங்களகரமான நாளில்.. வாழ்க வளமுடன்.. !!!


////’’உண்மையின்அழகு பொதிந்த ஓர் ஆன்மாவை சிருஷ்டிப்பதே என் நோக்கம்’’எனக் குறிப்பிடும் தஸ்தாயெவ்ஸ்கி அந்த எண்ணத்துடன் உருவாக்கியுள்ள ஆக்கமே இடியட்/அசடன்.(The Idiot) குற்றமும் தண்டனையும் நாவலை விடவும் அளவில் பெரியதாக நான்கு பாகங்களைக் கொண்டிருக்கும் இந்த நாவலைக் கொடிய வறுமை,இடைவிடாச்சூதாட்டம்,முதற்குழந்தையின் மரணம் முதலிய சொந்த வாழ்க்கைச்சிக்கல்களுக்கு நடுவிலிருந்து கொண்டு,அவற்றோடு போராடியபடி - முன்னதை முடித்த இரண்டு வருடங்களுக்குள்ளேயே உருவாக்கிச் சாதனை படைத்தார் தஸ்தாயெவ்ஸ்கி.

அந்த நாவலைப் போன்ற சீரான ஒருமுகத் தன்மை அற்றதாய்ப் பல்வேறு முடிச்சுக்களும் பலரின் உணர்வுப் போராட்டங்களும் இணைந்த ஒரு கலவை இடியட்.


மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தாயெவ்ஸ்கியின் இந்த நாவலின் மூலம் தரிசிக்கும்போது ஏற்படும் பரவசச் சிலிர்ப்பு வார்த்தையில் விவரிக்க ஒண்ணாதது மனிதச் சிறுமைகளின் கறை படியாத புனிதமான ஒரு மானுடனாக வளர்ந்து உருவாகும் இளவரசன் மிஷ்கின் , தான் போற்றிவந்த மேன்மையான கிறித்தவக்கோட்பாடுகளுக்கு எதிர்மாறான ஒரு சமூகத்துக்குள் சிக்கிக்கொள்ள நேரிடுகிறது; பணம்,அதிகாரம்,பாலியல் வேட்கை ஆகியவற்றில் மட்டுமே கருத்துச் செலுத்தி வெறி கொண்டு அலையும் அந்தக் கும்பல் அவனை எவ்வாறு மூச்சுத் திணற வைக்கிறது என்பதே இந்நாவல்.


குறிப்பிட்ட அந்தச் சமூகத்துக்குள் அவன் காலடி எடுத்து வைத்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே - அதி பயங்கரமாகத் தன்னை மூழ்கடிக்கக் கூடிய ஒரு காதல் முக்கோணத்தின் பிடிக்குள்ளும் அவன் ஆட்பட்டுப்போகிறான்; ’ஊரறிந்து’சிறுமைப்பட்டுப்போன ஒரு பெண்ணும்,அழகிய வேறொரு இளம் பெண்ணும் அவனது அன்பைப்பெறப் பகையாளிகளாகிப் போட்டி போடுகின்றனர்.மிஷ்கினை அலைக்கழிக்கும் அந்த இரண்டு பெண்களையும்....அவர்களின் மன அமைப்பையும் துருவித் துருவிப் படம் பிடித்து அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.


ஒருத்தி மிகப் பாதுகாப்பான சூழலில் வாழும் வாய்ப்புக் கிடைத்தவள்;ஒழுக்கத்தை அரணாகப் பூண்டிருப்பவள். (அக்லேயா இவாநோவ்னா) மற்றொருத்தி, சந்தர்ப்ப சூழலால் சீரழிவுகளுக்கு ஆளாகி அதன் காரணமாகவே ஒருபுறம் வஞ்சத்தோடும் , மறுபுறம் தாழ்வு மனப்பான்மையோடும் தவித்துக் கொண்டிருப்பவள்.(நஸ்டாஸ்யா பிலிப்போவ்னா) இருவருமே இடியட் மிஷ்கினை நேசிக்கவும் செய்கிறார்கள்; அவனை அலைக்கழிப்புக்கும் ஆளாக்குகிறார்கள். மிஷ்கினும் அவர்கள் இருவரையும் வெவ்வேறு கண்ணோட்டங்களோடு அணுகிப் பரிவும் பாசமும் காட்டுகிறான். ஆனால் ஏற்கனவே சற்று மனப்பிறழ்வுக்கு ஆட்பட்டிருந்த அவனை மேலும் பைத்தியமாக்கி வேடிக்கை பார்ப்பதே அவர்கள் இருவரின் வாடிக்கையாக இருக்கிறது. ஒருத்தி திருமண நிச்சயம் வரை சென்றுவிட்டு அவனை மறுதலிக்கிறாள். இன்னொருத்தியோ மணமேடையில் அவனைக் காத்திருக்க வைத்து விட்டு ஓடிப் போகிறாள்.


பொருள்கொள்ளை,வதந்தி,கொலை ஆகியவை தொடர்ந்து நிகழ்ந்தபடி மிஷ்கினின் அற உணர்வுகளுக்குச் சவால் விடுக்கின்றன. மனித மனத்தின் புரியாத பக்கங்களை....இண்டு இடுக்குகளைப் புறவயப் பார்வையோடு வாசகர் முன் வைத்து விட்டுத் தீர்ப்பை அவரவர் ஏற்புத் திறனுக்கே விட்டு விடுகிறார் தஸ்தாயெவ்ஸ்கி மனிதனுக்குள் ஒளிந்திருக்கும்’ இன்னொரு மனிதனை இனம் காண நேரும்போது ஏற்படும் கரைகாணா மானுட வேதனைகளையும்,உள்ளச் சிதைவுகளையும் இந்நாவலின் மூலம் கண்டடைய முனைந்திருக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி.


ரஷ்ய மக்களின் சிக்கலான - வேறுபட்ட மனோபாவங்களைத் துருவிப்பார்த்துப் பதிவு செய்திருக்கும் முற்றான ஒரு ரஷ்யத் தன்மை கொண்ட நாவலாக உருப்பெற்றிருப்பது ‘அசடன்’. ’’எல்லோரும் என்னை ஓர் உளவியலாளன் என்று அழைக்கிறார்கள்;ஆனால் அது பொருத்தமானதில்லை.என்னிடம் இருப்பது சற்று மிகையான யதார்த்தவாதம்;அதனாலேதான் மனித ஆன்மாக்களின் அடியாழம் வரை ஊடுருவிப் பார்த்து என்னால் சித்தரித்திருக்கமுடிந்திருக்கிறது’’என்பதே தன்னைக்குறித்து தஸ்தாயெவ்ஸ்கி வெளியிடும் கணிப்பு....


பின்குறிப்பு; தஸ்தயெவ்ஸ்கியின் இடியட் நாவல் அதன் ஆங்கில மொழியாக்கத்தின் துணையுடன் ’அசடன்’என்ற பெயரில் என்னால் முழுமையாக மொழியாக்கம் செய்யப்பட்டு மார்ச் மாதம் - (2011 )வெளியாக இருக்கிறது. நூலை வெளியிடவிருக்கும் மதுரை பாரதி புத்தக நிலையம் அதற்கான முன் வெளியீட்டுத் திட்டத்தை அறிவித்திருக்கிறது.


http://www.masusila.com/2010/12/blog-post_11.html பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட்/அசடன் நாவலின் வெளியீட்டுப் பணி நடந்து கொண்டிருக்கிறது. நான்கு பாகங்கள் கொண்டதும் அச்சில் ( டபுள் கிரவுன் அளவு ) 800க்கு மேற்பட்ட பக்கங்கள் நீள்வதுமான (என் கையெழுத்துப் பிரதியில் 1200 பக்கங்களுக்கும் மேல்..) அந்த மாபெரும் உலக இலக்கியப் படைப்பை மேம்போக்காகச் செய்துவிடாமல்..,ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு உணர்வோடு செய்வதே அதற்கு வழங்கும் நியாயமாகவும்,அதற்குச் செலுத்தும் மரியாதையாகவும் இருக்கக் கூடும் என்பதால்,அச்சுப் படி திருத்திச் செம்மைப்படுத்தும் பணியை மிகுந்த நிதானத்துடனும், கவனமாகவும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் மூல நூலின் ஒரு சொல் கூட விடுபட்டுப் போகாத முழுமையான மொழியாக்கமாக இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதால், நூல் வெளியாகும் நாளில் சிறிது தாமதம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகியிருக்கிறது .


ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் நூலை வெளிக்கொணர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாவலை முன்பதிவு செய்வதற்கான கால அவகாசமும் ஏப்ரல் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.


முன்பதிவு செய்ய ...

விலை;ரூ.600.00 முன் வெளியீட்டுத் திட்ட விலை;ரூ;350.00 கூரியர் செலவு;ரூ;75.00 ஏப்ரல் 25 வரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.


முன் பதிவுத் தொகையை ‘பாரதி புக் ஹவுஸ்’ என்ற பெயரில் மதுரையில் மாற்றும் வகையில் வங்கி வரைவோலை(டிராஃப்ட்) அல்லது பணவிடை( எம்.ஓ.)மூலம் அனுப்பலாம். நேரடியாகக் கனரா வங்கிக் கணக்கு எண்ணிலும் செலுத்தலாம். எண்; 1013256227


இணைய வழிமுன்பதிவுக்கும் நூலைப் பெறவும்.. உடுமலை.காம். காண்க இணைப்பு; அசடன் மொழியாக்கம்-முன் வெளியீட்டுத் திட்டம் http://www.masusila.com/2011/04/blog-post.html --

எம்.ஏ.சுசீலா,(M.A.Susila)

புது தில்லி (தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை) D II 208 KIDWAI NAGAR WEST,NEW DELHI110023 www.masusila.com http://www.google.com/profiles/susila27 ///


டிஸ்கி:- இன்று விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தோம் . தொலைக்காட்சி எதிர்ப்பாளர்கள்., ஆதரிப்பவர்கள் என இரு அணி.. அதில் நாங்கள் எதிர்ப்பு அணி., ஜாக்கி சேகர்., தமிழரசி., தமிழ் செல்வி., நான் மற்றும் பலர். மிகச் சிறப்பாக கருத்துக்களைப் பதிவு செய்த ஜாக்கிசேகர்., தமிழரசி, தமிழ் செல்விக்கு வாழ்த்துக்கள். ( என் பெயரை விஜய் மகேந்திரன் முன் மொ்ழிந்திருக்கிறார். நான் தமிழ் செல்வி ., தமிழரசி., பத்மா.,மதுமிதா., ஈழவாணி பேரை முன் மொழிந்தேன்.. மற்ற மூவரும் கலந்து கொள்ளவில்லை) ..


தொலைக்காட்சித் தொடர்கள் உறவுச் சிக்கல்களையும் ., உணர்வுச் சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றன என நான் கூறிய கருத்து எடிட்டிங்கில் வெளியாகவில்லை.. என் கருத்துக்கள் அடுத்த இடுகையில் பகிர்வேன்..:)

புதன், 13 ஏப்ரல், 2011

ஐந்தொகை.--(.4.).

வெய்யில் தாளாமல்
வேர்வைத் துளிகளாய்
வடிந்து கொண்டிருந்தன இலைகள்..
************************************************
இரவுக் கம்மாய்க்குள்
குளித்துக் கொண்டிருந்தது
நிலவு.
***********************************************
அலகுகளும் கால்நகங்களும் நீண்ட
வல்லூறாய் நின்று கொண்டிருந்தது
மொட்டை மரம்.
***********************************************
அளவுகள் மாறிய
பேரிளம் பெண்ணாய்
விளைந்து கிடந்தது பலா
**********************************************
இருளையும் வெய்யிலையும்
உதறத் தெரியாமல்
விழித்துக் கொண்டிருக்கிறது பூமி.

டிஸ்கி. 1 :- இந்தக் குறுங்கவிதைகள் மார்ச் 13., 2011 திண்ணையில் வெளிவந்துள்ளன. நன்றி திண்ணை..:))

டிஸ்கி .. 2:- மார்ச் 15 - 30 ., 2011 . அதீதத்திலும் வெளிவந்துள்ளன. நன்றி அதீதம்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

முகமாத்து..


முகமாத்து...

*******************

முகம் காட்டியும்

காட்டாமலும்

ஒரு முகமாத்து

பொதுவெளியில்...


எதெதெல்லாமோ

அன்பளிப்பு ...

அம்மா அப்பா கூட

கிடைக்கலாம்..


படுத்துக் கொண்டும்

அமர்ந்து கொண்டும்

ஜெயிக்கலாம்

எங்கு நின்றாலும்..


நிற்பவர்களை

அமர விடாமலும்

யோசிக்க விடாமலும்

செய்யலாம் இலவசத்தால்..


உபயப் பட்டயம்

எழுதாமல்

தொலைக்காட்சியும்

கணினியும்

சிந்திக்கும் திறனழித்து..


நெற்றிக்குப் பதிலாய்

ஆள்காட்டிவிரலில்

கறுப்பு நாமம்...

யார் யார் நாமத்தாலோ

வாழ்கவென்று சொல்லி


அடுத்த நாற்காலி

நமக்குத்தான்

அதுவரை ஆற அமர

செலவு செய்து விட்டு

ஓய்வெடுப்போம் சுழற்சிக்காய்..




திங்கள், 11 ஏப்ரல், 2011

ஓட்டுப் போட்டு நாட்ட மாத்து..


ஓடு ஓடு போடு போடு

ஓட்டு போட்டு நாட்ட மாத்து

இல்ல வெலைக்கு போட்டு

ஒன் நிலைமையாவது மாத்து..


ஓட்டு வீடு காரை வீடாய்

ஒழுகினாலும் தார்சு வீடு..

பிள்ளை பெத்தா பேறு பணம்

வயசானா முதியோர் பணம்


ஒரு ரூவாய் அரிசியோடு

ரேஷன் மளிகை குழம்போடு

தொலைக்காட்சி பசப்போடு

தொலையாத கசப்போடு


இப்படித்தான் வாழப்போறே

உனக்கெதுக்கு வெட்டி கோவம்

செல்லா ஒட்டாய் செல்லாம ஆக்கி

கள்ளஓட்டுக்கு வழி செய்யாதே..


எல்லாரும் சம்பாதிக்கிறான்

எங்கேயும் லஞ்சம்தான்

அன்னா என்ன அண்ணா என்ன

யார் வந்தாலும் மாறாதிது


எலவசமும் லஞ்சமும் கௌரதையும்

கார்சவாரியும் உனக்கும் கிடைக்கும்

ஆனா போனா ஐந்து வருடத்துக்கு

ஒரு முறையாவது ராஜா நீயும்


ஓடு ஓடு போடுபோடு

ஓட்டு போட்டு நாட்ட மாத்து

இல்ல வெலைக்கு போட்டு

உன் நிலைமையாவது மாத்து..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஏப்ரல் 10., 2011., திண்ணையில் வெளிவந்துள்ளது. நன்றி திண்ணை..))

..

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

வலைப்பூக்களில் கலக்கிவரும் புயல்பூக்கள்..எழுத்தாளர்களாகி வரும் பெண்கள்..சந்திப்பு.

இவள் புதியவள் மற்றும் சூரியக் கதிர் மாதமிருமுறை வெளிவரும் பத்ரிக்கைகள்.. இதில் இவள் புதியவள் பெண்களுக்கான இதழ்.. மிக அழகும் நேர்த்தியுமாய் வரும் இந்த இதழ்களின் எடிட்டர் அன்பு சகோதரன் (விகடன் புகழ்) மை. பாரதிராஜா.. அவர் ஒரு பெண் வலைப்பதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முடியுமா என கேட்டார். டிஸ்கவரி புக் பேலசின் உரிமையாளர் அன்பு சகோதரன் வேடியப்பன் இடம் வழங்க பன்னிரெண்டு வலைப்பதிவர்களை அழைத்தேன்.. அதில் ஜெரோம் ஷர்மிளா பற்றி எல்லாம் எழுதி இருக்கும் அன்புத்தங்கை கீதா இளங்கோவன் ., அந்தமானைப் பாருங்கள் அழகு என பாடப் போய்விட., ருக்கு அம்மா ஆந்திராவில் ஒரு உறவினர் வீட்டில் இருக்க., உமா சக்தி கவிதைப் பட்டறையில் மும்முரமாய் செயல்படவேண்டி இருக்க., பறவைகளையும் பூக்களையும் தோட்டத்தில் வளர்க்கும் தங்கை மெர்லின் மரிய வித்யா உடல் நலமில்லாமல் இருக்க மிச்ச எட்டு பேரும் சந்திக்க முடிவானது.
கவிமணி தொகுக்க., முத்துக்குமார் படம் எடுத்தார் அனைவரையும். கலந்து கொண்ட வலைப்பதிவர்கள் ”அமிர்தவர்ஷிணி அம்மா” என்கிற வலைப்பதிவர் சாரதா., ”என் வானம்” என்ற வலைப்பதிவர் அமுதா., ”வசுமதியின் கருத்தோட்டம்” என்ற வலைப்பதிவர் வசுமதி வாசன்., ”தணல்” என்ற வலைப்பதிவர் ஈழவாணி., “நுனிப்புல்” என்ற வலைப்பதிவர் ராமச்சந்திரன் உஷா., ”காற்று வெளி “ என்ற வலைப்பதிவர் மதுமிதா..”எல்லாப்புகழும் இறைவனுக்கே” என்ற வலைப்பதிவர் ஸாதிகா., ”சும்மா” என்ற வலைப்பதிவர் நான்..(!) அனைவரும் கலந்து கொண்டோம்..


ஸாதிகா பெண்கள் பெருமை பற்றி., நம் கலாசாரம் பற்றி கூற., அமுதா வேலைக்கு செல்பவரின் கஷ்டங்கள் ., திருமணம் ஆனபின் போக விடாமல் தடுத்தல் பற்றி பகிர., நான் வலைப்பதிவு ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்துவதும் பின் பெண்கள் பிரச்சனைகளாக இன்னும் நிறம்., சாதி (பத்ரிக்கை பேட்டி எடுக்கச் செல்லுமிடங்களில் இதை சொல்வார்கள். ஆனால் மாகஸீனில் வந்துவிட வேண்டாம் என கேட்டுக் கொள்வார்கள் .) என்பவை முன்னேறத் தடுப்பாக இருப்பது பற்றியும் பகிர்ந்தோம். சாரதா தான் பார்ப்பவற்றை., தன்னைப் பாதித்தவற்றை வலைப்பதிவில் பகிர்வதாக கூறினார்.


வசுமதி புதிதாக குழந்தைகள் பற்றிய சைக்காலஜி., சினிமா விமர்சனம் பற்றி ஃபேஸ்புக்கிலும் ப்லாகிலும் எழுதுகிறார். ஆரம்பகால வலைப்பதிவர்கள் உஷாவும்., மதுமிதாவும். இதில் உஷா முதன் முதலில் புக் வெளியிட்ட பெண் வலைப்பதிவர். மதுமிதா 10 புத்தங்கங்கள் வெளியிட்டு இருப்பவர். ஈழவாணி ஐந்து புத்தங்கங்கள் வெளியிட்டு இருப்பவர். ஜர்னலிசம் படித்தவர். இவர் இப்போது பூவரசி என்ற இணைய இதழுக்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்..


3 மணி நேரம் போனதே தெரியவில்லை. நடுவில் பாரதி ராஜாவும் வந்து கலந்து கொண்டார் என் என்பு வேண்டுகோளுக்கிணங்க.. என் கூடவே வந்து பேட்டி முழுவதும் டிஸ்கவரி புக் பேலஸில் அமர்ந்து இருந்தார் என் கணவர். ( என் வெற்றிக்குப் பின்னாலிருக்கும் ஆண்..:)) .. நிறைய புத்தகங்களும் வாங்கி வந்துள்ளார்.. படிக்க வேண்டும்.. :))


நன்றி ..எங்களை அறிமுகப்படுத்திய இவள் புதியவளுக்கும்., மை. பாரதிராஜா., கவிமணி., முத்துக்குமாருக்கும்., டிஸ்கவர் புக் பேலஸின் உரிமையாளர் வேடியப்பனுக்கும்., :))வேடியப்பன் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்., கதைத்தொகுதியின் பெயர் முணுமுணுப்பு.. அதன் முன்னுரை கண்மணி குணசேகரன் வழங்கி இருக்கிறார். சீக்கிரம் விமர்சனம் எனது பார்வையில் வெளிவரும்..:))

மேலதிக விவரங்களுக்கு ஸாதிகாவின் இந்த வலைப்பூவை பார்க்கவும். :)

வியாழன், 7 ஏப்ரல், 2011

காற்றுக்கென்ன வேலி..

”அன்னக்கிளி உன்னத்தேடுதே.”. .. என்று பாடிய சோக சுஜாதாவை மறக்க முடியாது.. அந்தப்படத்துக்கு எதிர் மாறாய் அதிரடி காரெக்டர் ”அவள் ஒரு தொடர்கதை..” தொட்டால் பற்றும் நெருப்பு போல பேச்சு.. மிகத்துணிச்சலாய் அப்போதே அவர் நடித்த படம். உடை மாற்றுவது கூட ஜன்னல் வழியாய் எடுக்கப்பட்டிருக்கும்.


”விதி ., நூல்வேலி.”, என மறக்க முடியாத படங்கள் கொடுத்தவர். கமலுடன் ”கடல் மீன்கள்” படத்தில் ,”தாலாட்டுதே வானம்” என்ற பாடல்., ”அந்தமானைப் பாருங்கள் அழகு” என சிவாஜியுடன்., என பல பரிமாணங்கள்.


”கடவுள் அமைத்து வைத்த மேடை” பாடலில் அவரது பாவனைகள் ., அவரின் கொள்ளை கொள்ளும் அழகுச் சிரிப்பு., அந்த மச்சம்., மென்மையான நளினமான அழகிய பெண் அவர்.


”அவர்களில்” ., காற்றுக்கென்ன வேலி” பாடல் எனக்குப் பிடித்தது.. எப்போது கேட்டாலும் ஒரு இதம்.. ஒரு விடுதலை உணர்வு.. அலையைப் போன்றவள் பெண்., குதிரையைப் போல வேகம்., மன உணர்வுகளை அடுக்கடுக்காகப் பெருக வைக்கும் பாடல்..கட்டுப்பாடுகளற்றுப் பெருகும் ஒரு சுதந்திரம். மனம் பறப்பதுபோல..


அப்புறம் அக்கா ., அண்ணி என நடித்தாலும் அந்த விழிகளும் பார்வையும் சிரிப்பும் என்னை வசீகரித்துக் கொண்டே இருக்கும்.. எல்லோருக்கும் முதுமை வருகிறது., பிணி ., சாக்காடு எல்லாம் . ஆனால் சிலர் இறந்தாலும் இறப்பில்லை.. காற்றுக்கென்ன வேலி பாடல் கேட்கும் போதெல்லாம் அவர்தான் வருவார். ஆம்... காற்றுக்கென்ன வேலி.. காற்றோடு காற்றாய்க் கலந்த பின்னே..

புதன், 6 ஏப்ரல், 2011

ஏப்ரல் 2011 லேடீஸ் ஸ்பெஷலில் காசி சொர்ணலிங்கேஸ்வரர்., டாக்டர் சாந்தா (கான்சர் இன்ஸ்டிடியூட்)., அனுராதா.

ஏப்ரல் மாத லேடீஸ் ஸ்பெஷல் பெண் தொழில் முனைவோருக்கு மிக உபயோகமுள்ளதா இருக்கு.. வெளியே 30 கை வேலைப் பொருட்கள்.தனி இணைப்பு. , உள்ளே 30 ரெசிப்பிக்கள்னு அசத்தலா இருக்கு.. இந்த மாத ப்லாகர் அடுத்த மாதம் வருவார்..:)
காசி சொர்ணலிங்கேஸ்வரர் இந்த இதழில் சிறப்பான இடத்தில் அமர்ந்திருக்கிறார்.. கடவுள் தனக்கான இடத்தைத் தானே தேர்ந்தெடுக்கிறார் என்பது உண்மை.. இது பற்றி நான் இந்த இடுகையில் எழுதி இருக்கேன்..


லேடீஸ் ஸ்பெஷலின் ஆசிரியை கிரிஜாம்மாவின் பெற்றோரின் சதாபிஷேஹம் பற்றி., அவர்களின் எண்பதின் அழகு பற்றி அவர் வாய்மொழியா படிச்சாலே கண்கள் பனிக்கும்.. மிக நெகிழ்வான பகிர்வு அது..


சென்னை அடையார் கான்சர் இன்ஸ்டிடியூட்டின் சேர்மன் டாக்டர் சாந்தா அவர்களிடம் புற்று நோய் விழிப்புணர்வு பற்றி எடுக்கப்பட்ட என்னுடைய பேட்டி வெளிவந்து இருக்கு..


போராடி ஜெயித்த பெண்களைப் பற்றித்தான் நாம் இதுவரை படித்திருக்கிறோம். இதில் போராடி இறந்து அதன் பின்னும் தன் கண்ணை சங்கர நேத்திராலயாவுக்கு தானமா வழங்கி., உடலையும் (மஸ்குலர் டிஸ்ட்ரோபி என்னும் சதைசெயல்பாடு இழப்பு நோய் மூலம் இறந்து ) ராமசந்திரா ஆஸ்பத்ரிக்கு உடலையும் தானமா கொடு்த்த அனுராதா பற்றி எழுதி இருக்கேன்.. அவங்களைப் பற்றி அறிய உதவி தகவல்களும் தந்துதவிய ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற வெப்ஸைட்டையும் கவுன்சிலிங் கிளினிக்கையும் நடத்திவரும் டாக்டர் வசந்தி பாபு (அக்காவுக்கு) நன்றிகள்..:))

திங்கள், 4 ஏப்ரல், 2011

குமுதத்தில் என் குழந்தைக் கவிதைகள்.. அம்மா யானை என்ற தலைப்பில்...:)





சிரித்துக் கொண்டே
தூங்கியமகனின்
புன்னகையில்
மின்னி மின்னி
ஒளிகின்றன
நட்சத்திரங்கள்..

**************************************

பாத்திர ஒலிதான்
பிடித்தமாயிருக்கிறது
பாடும் பொம்மைகளை விட

*********************************************

பள்ளி சென்ற பின்னும்
முந்தானையில்
வீசிக் கொண்டே இருக்கிறது
பற்றி விளையாடி வந்த
பிள்ளையின் வாசம்..

********************************************

கன்னமெல்லாம்
பிசுபிசுத்துக் கிடந்தது
சர்க்கரைப் பாகாய்
குழந்தையின்முத்தம்..

*******************************************

படிக்க நேரமில்லாத
புத்தகம் போல
சிதறிக் கிடந்தன
குழந்தையின்
பதில் கிடைக்காத கேள்விகள்

***********************************************
கற்றுக் கொண்டிருக்கிறேன்
கணினியை ..
கை பிடித்து அனா எழுத
கற்றுக் கொடுத்த மகனிடம்..

**********************************************

வாழ்க்கை நீச்சலை
தரையில் அடித்து
கற்றுக் கொள்கிறது
குழந்தை..

*******************************

பழக்கூழை ஊட்ட
போராடியபடி தாய்..
மணம் நிறைந்த
பழக் கொத்தாய் ..
மறுப்போடு குழந்தை..

***************************************

பூஜைக்கு வைத்த
நைவேத்தியங்கள்
சீண்டுவாரில்லாமல் காய்ந்து..

வளர்ந்து விட்ட குழந்தை
எதையும் உண்பதில்லை..
ஃபிட்னெஸ் வேண்டுதலில்..

***************************************

இனிப்பாய் ஒரு
உப்பு மூட்டை சுமந்தது
அம்மா யானை

****************************************


மாவுருண்டை., வெள்ளரிப்பழம்
கொழுக்கட்டை., பப்ளிமாஸ்..
உணவுப் பொருளெல்லாம்
உன் வடிவில்..

***************************************

டிஸ்கி..1 :- 6.4.2011 குமுதத்தில் என் குழந்தைக் கவிதைகள்.. அம்மா யானை என்ற தலைப்பில் முதல் முதலாய்.. நன்றி குமுதம்..:))

டிஸ்கி..2..:- புகைப்படத்தில் இருக்கும் செல்லக் குட்டி--வலைப்பதிவர் -- நண்பர்..தாமோதர் சந்துரு அவர்களின் பேத்தி ஆராதனா.. நன்றி சந்த்ரு..:))