வியாழன், 31 மார்ச், 2011

பங்குச் சந்தையும் மற்ற முதலீடுகளும்.. (3)..

1. நான் சில பிரசித்தி பெற்ற கம்பெனிகளின் பங்குகளை வாங்கி வைத்து இருந்தேன்..அது தற்போது விலை இறக்கமாக உள்ளது .. இன்னும் விலை இறங்கி விடலாம் என நினைப்பதால் வைத்துக் கொள்ளலாமா, அல்லது விற்றுவிடலாமா..?

பதில்:- இது வாங்கியதைப் பொறுத்தது.. 15 இல் இருந்து 20 பர்செண்ட் ரிடர்ன் வருதுன்னா விக்கலாம்.. இப்ப மார்க்கெட் ஏற்ற இறக்கம் ரொம்ப இல்லாம இருக்கு.. நாம எப்ப எண்டர் பண்ணி இருக்கோம் என்றும் பார்க்கணும்.. (PPF என்றால் 8 % வங்கி என்றால் 5 - 6 % .. இது சேஃப் இன்வெஸ்ட்மெண்ட்..) . எனவே ரிடர்ன்ஸ் இருந்துச்சுன்னா விக்கலாம்.. பொதுவா ஏற்ற இறக்கம் இல்லாத சூழலில் விக்கக் கூடாது.. ட்ரேடிங்க் ரேஞ்ச் .. ரிடர்ன்ஸ் இருந்தா விக்கலாம்..

2. ப்ரோக்கர்ஸ் மூலமா ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து அவங்க மூலமா நமக்கு ஷேர் ட்ரேடிங்க செய்ய சொல்லலாமா..?

பதில்..:- செய்யலாம்.. நிறைய ரிஸ்க் இருக்கு அட்வாண்டேஜஸை விட.. சைன் மட்டும் பண்ணிட்டு ட்ரேடிங்க செய்யச் சொல்லாம.. ஃபாலோ பண்ணியும் பார்க்கணும்.. என்ன வாங்கி வித்து இருக்காங்க நம்ம அக்கவுண்ட்லன்னு...வாங்கின பங்குகள் ஏறி இருக்கா இறங்கி இருக்கான்னு சூப்பர்விஷன் பண்ணிக்கிட்டே இருக்கணும்..

3. எந்த வயது வரைக்கும் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கலாம்..?

பதில்:- அதிக பட்சம் 65 வயது வரைக்கும் எடுக்கலாம்.. அதுவும் எல்லா பாலிசியும் எடுக்க முடியாது..குறிப்பா 2 .,3 பாலிசிதான் எடுக்க அனுமதிக்கப் பட்டு இருக்கு.. பென்ஷன் பாலிசி தான் எடுக்கலாம்.. மேலும் 40 வயதுக்கு மேல பாலிசியில் கட்ட வேண்டிய ப்ரிமியம் தொகை கூடுது,,

4. பெரிய தொகையில் வீட்டுக் கடன் ( 50 லட்சம் 70 லட்சம் ) வாங்கும் போது அந்தத் தொகைக்கு ஈடா காப்பீடு எடுக்கச் சொல்றாங்க.. அதுக்கு ப்ரிமியம் தொகை வேற அதிகமாகுது.. அதற்கு மாட்டேன்னு சொல்லலாமா?

பதில்:- எடுக்கணும்னு அவசியம் இல்லை.. இதுல இரண்டு வகை இருக்கு ..தீ அல்லது பூகம்பம் மாதிரி இருக்கு.. பிஸிகலா பாதிப்பு.. மேலும் இன்சூரன்ஸ் எடுத்து அந்த வீடு கட்டியவர் இறந்து போகும் பட்சத்தில் குடும்ப உறுப்பினர்களால் அடுத்த ப்ரிமியம் கட்ட முடியமல் போகலாம்.. எனவே இன்ஸூரன்ஸ் எடுக்கணும்னு அவசியமில்லை.. அது அவரவர் விருப்பம்..

5. போஸ்ட் ஆஃபீஸில் ஏஜண்ட் தவிர்த்து நாமே பணம் போடலாமா..? அதற்கு மெயின் போஸ்ட் ஆஃபீஸ் போகணுமா அல்லது அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸிலேயே போடலாமா?

பதில்:- டைரக்டாவே நாமளே ஓபன் பண்ணலாம்.. போஸ்ட் ஆபிஸில் மற்றும் அருகில் உள்ள வங்கியில் (ஸ்டேட் பாங்க்) போய் PPS அக்கவுண்ட் ஓபன் பண்ணலாம். ஏஜண்ட் மூலமா போக வேண்டிய அவசியம் கிடையாது..வங்கி மூலமாவே பணம் செலுத்தலாம் .. மெயின் போஸ்ட் ஆஃபீஸ் போகணும்னு கிடையாது பக்கத்தில் உள்ள வங்கியில் கூட செலுத்தலாம்..

டிஸ்கி:- திருமதி சித்ரா நாகப்பன் நமது லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்காக அளித்த முதலீட்டு ஆலோசனைகள்.. ஜூலை 2010 இதழில் வெளிவந்து இருக்கு ..

செவ்வாய், 29 மார்ச், 2011

புனிதமாய் வீடு....


விட்டத்தைப் பிரித்து
ஒட்டடை அடித்து.,
வீட்டைப் பெருக்கி
கழிவறை கழுவி


எப்படித்தான் சேருகிறது
இவ்வளவு அழுக்கு
அவ்வப்போது அக்கறையாய்
துடைத்தும் துடைத்தும்..


வெளியே செல்ல
வேண்டி வந்தது
வெள்ளிக்கிழமை.
விஷேஷ பக்தி..

சாக்கடை ஓட்டம்
வண்டிப் புகை மூட்டம்
அழுகல் மாமிசங்கள்
அடைத்த வீதிகள்

வீச்சங்கள் துரத்த
பூட்டிய வீட்டை
விரைந்து திறந்தேன்..
புனிதமாய் இருந்தது வீடு..


திங்கள், 28 மார்ச், 2011

சிங்கையில் குருக்ஷேத்திரம். (24 Hours of Anger) எனது பார்வையில்..

Singaiyil Gurushetram

பல நூற்றாண்டுகளுக்கு முன் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய சென்றவர்கள் இன்று எந்த நிலையில் இருப்பார்கள் என நினைத்ததுண்டா நீங்கள்.. நன்கு செட்டிலாகி நல்ல நிலைமையில் இருப்பார்கள் என நினைப்பீர்கள்தானே.. அதில் ஒரு பகுதி மக்களின் அதிர்ச்சியூட்டும் இன்றைய நிலையை இதில் பாருங்கள்..

வலசை சென்ற மக்களில் சிலர் வாழும் வாய்ப்புக்களற்று திசை மாறி முறையற்ற வழியில் திடீர் பணக்காரராக வேண்டும் என்று போதை மருந்து கடத்தும் தொழிலில் ஈடுபட்டு தங்களுக்குளே போராடி தங்களையே அழித்துக் கொண்ட கதை இது.. என்னை அதிர வைத்த படம்.

படம்தான் பார்க்கிறோமா இல்லை ஏதோ உண்மையான டாக்குமெண்ட்ரியா., ந்யூஸ் ரீலா என பதைக்க வைத்தது.. ”நம் மக்கள் என நினைக்காமல் தவறு செய்தோருக்கு தண்டனை உண்டு என்ற ரீதியில் படத்தைப் பார்”, என்றார் ரங்கமணி.

சிங்கையில் குருக்ஷேத்திரம் படத்தில் போதைப் பொருள் கடத்துவோர்., (வேறு வேலை வாய்ப்பற்று இருக்கும் மக்கள் )( ப்ரகாஷ்., வினோத்., ) அதைக் கண்டு பிடிக்கும் நார்கோடிக் டிவிஷனில் வேலை பார்ப்பவர்( அன்பரசன்)., அந்த மாதிரி பிடிபட்டுச் சிதைந்த குடும்ப உறுப்பினர்களுக்கும்., குழந்தைகளுக்கும் உதவி செய்யும் சைகலாஜிகல் கவுன்ஸிலிங் செய்பவர்( ரேவதி) அனைவரும் நம் மக்கள்தான்..

இதை ஒரு குடும்பம் சம்பந்தப்பட்ட கதையாக பார்த்தால் ப்ரகாஷ்., (அவன் தம்பி --மனநிலை பாதிக்கபட்ட குழந்தை )விப்ராவின் தாய் போதைப் பொருள் கடத்தப்பட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார். அப்போது தன் தாயைக் காண வரும் ப்ரகாஷ் பக்கத்திலிருக்கும் சின்ன பெண்ணிடம் சொல்வான் ., ”நான் என் அம்மாவை தினம் பார்க்கலாம் ஒரு வாரத்துக்கு. ஏனெனில் அவங்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் தூக்கு “ என்று.

தன் மனைவி போதைப் பொருள் கடத்தி கைதானதும் தூக்கு நிர்ணயிக்கப்பட்டதும் அவரின் கணவர் படும் பாடு அப்பப்பா சொல்ல முடியாது. இருபக்கமும் கண்ணாடித் தடுப்பின் பின் கணவனும் மனைவியும் உரையாடும் காட்சியில் கணவர் சொல்வார்.” எனக்கு என் மனைவி வேணும். நான் அவளை கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும். “ என்று.. மிக அழ வைத்த காட்சி அது.

அவள் இறந்து உடலை கொண்டுவந்து ஈமக்கிரியை செய்யும் போது அவரால் துன்பத்தை தாங்க முடியாது. ”கொன்னுட்டாங்களே .. கொன்னுட்டாங்களே” என கதறுவார். அப்போது அவருக்கு போதை மருந்தைக் கொடுத்து சமாதானப்படுத்துவார்கள்.. அதன் பின் அவர் சொல்வார்.,” பாவம் யாரோ செத்துட்டாங்க போல” என்று.. போதையின் கொடுமை எப்பிடி இருக்கு.. ஐயோ என கலங்க வைத்தது.

ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் வாழ வேண்டியிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த தேசத்திலும் வந்தேறிகளாகப் பார்க்கப்படும் கொடுமை.

இறந்த பெண்ணின் சகோதரன் வினோத் சொல்வான் .,” செய்ய எங்களுக்கு வேலை இல்லை. இதை செய்தோம். காசு கிடைத்தது ”என்று..

இதே போல கடத்தப்பட்ட போதைப் பொருளை உட்கொள்ளும் ஆட்களும் நம்மவர்களே.. ஏனெனில் வேறு யாருமே உலகத்தில் கடத்துவதுமில்லை. உட்கொள்ளுவதுமில்லை என்ற கருத்து இந்தப் படத்தின் மூலம் எனக்கு தெரிய வந்தது.பின் என்ன சொல்ல?? பிடிபடுபவர்களும் நம்மவர்களே., இறப்பவர்களும் நம்மவர்களே..ஏனெனில் இது ஒரு குடும்பத்தின் கதை.. எனவே அந்தக் குடும்பத்தில் சம்பந்தப்பட்டவர்களை மட்டும் வைத்து இது பின்னப்பட்டுள்ளது.

அந்தப் பெண் சகோதரனிடம் கெஞ்சுவாள் . ”வேண்டாம் . என்னால் இத்தகைய செயலைச் செய்ய முடியாது ”என்று. தன் மன நிலை சரியில்லாத சின்னப் பையன் விப்ராவை இதில் சம்பந்தப்படுத்த வேண்டாம் என்று. எந்தக் குடும்பத்தில் பெண்ணின் சொற்கள் அம்பலம் ஏறி இருக்கின்றன.. பெண்ணை ., அவள் விருப்பத்தை யார் கேட்கிறார்கள் இன்றளவும்.. சொல்வதை செய்ய வேண்டும் அவ்வளவே.. அதுதான் அவளுக்குக் கிடைத்த சுதந்திரம்.

அந்தப் பெண்ணின் மகன் ப்ரகாஷ் போதை கடத்தலுக்கான விசாரணையில் போதை தடுப்பு ஆஃபீசர் அன்பரசனிடம் சொல்வான்., ” நான் இங்கே பிறந்தேன். இருக்கிறேன் .,வாழ்கிறேன். ஆனால் நான் என் விலாசப்படி இந்தியன் கூட இல்லை தமிழன். ” என்று.. இதெல்லாம் தவமணியின் படத்தில் என்னை கலங்க வைத்த வசனங்கள்..

முறையற்ற .,தவிர்க்கப்பட்ட செயல்களில்., சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் அதற்கு மிகக் கடுமையான தீர்ப்புகள் வழங்கப்படும் நாடுகளில் அதன் பலனை அனுபவித்துத்தான் தீரவேண்டும். என்ற கருத்தை வலியுறுத்திய இந்தப் படத்தில் போதைப் பொருள் கடத்தினால் இறப்புத்தான் தீர்வு என்று விப்ராவைத் தவிர அனைவரும் இறக்கிறார்கள்.

மிகவும் பிடித்த காரெக்டர் அந்த கவுன்சிலிங் செய்யும் ரேவதி. நார்கோடிக் டிவிஷனில் கணவர் அன்பரசன் வேலை செய்கிறார். மனைவி ரேவதி அதில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு கவுன்சிலிங் செய்து மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்கிறார். கடைசி காட்சியில் விப்ரா ரேவதியின் கை பிடித்துக் கொள்ளும் காட்சி நெகிழ வைத்தது..


அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதா .. வாழ்ந்திருக்கிறார்கள் என சொல்வதா.. அவ்வளவு யதார்த்தம்..

ஹ்ம்ம் பிழைப்புக்காக வேறு நாட்டுக்குச் செல்லும் அன்பு சகோதரர்களே... அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ., எதற்காகவும் முறையற்ற., தவிர்க்கப்படவேண்டிய செயல்களில் தெரிந்தோ, தெரியாமலோ ஈடுபட்டு விடாதீர்கள் என கேட்டுக் கொள்வது தவிர வேறு என்ன இருக்கிறது.

நல்ல எச்சரிக்கையூட்டும் படத்தைக் கொடுத்த தவமணிக்கு நன்றி.. நல்ல நண்பர்களையும், சகாக்களையும், ரூம்மேட்டுக்களையும் தேர்ந்தெடுங்கள். வழி தவறிச் செல்வோரிடம் இருந்து விலகி இருங்கள். உங்கள் வாழ்வும் உங்கள் குடும்பத்தினரின் வாழ்வும் உங்கள் வசம். பெருமையை தேடித்தராவிட்டாலும் சிறுமைப்படும்படி செய்துவிடாதீர்கள்.

வெள்ளி, 25 மார்ச், 2011

ஷாஜியின் எனக்கு பிடித்த பதிவுகள். ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் மலேஷியா வாசுதேவன்.

ஒருநாள் ஷாஜியின் இசை பற்றிய பதிவு ஒன்றைப் படித்தேன் . ஷாஜியை பற்றி அதிகம் தெரியாது எனினும் அவரது http://musicshaji.blogspot.com படித்திருக்கிறேன்.. இசை விமர்சனக் கட்டுரைகளில் மிகுந்த அதிர்ச்சி அலை ஏற்படுத்துபவர் என்று பலராலும் சொல்லக் கேட்டே படித்தேன்.

ஒவ்வொருவரின் கருத்தும் ஒவ்வொரு விதம் என நினைப்பேன்.. அதில் ஷாஜி சொல்லும் விதம் அவர் பாணி.. அவருக்குப் பிடித்ததை., அவரை ஈர்த்ததை அவர் பாணியில் எழுதி இருக்கிறார்.

இதில் எனக்கு பிடித்த இரண்டு கட்டுரைகள் ஏ. ஆர். ரஹ்மான் : ஆர். கெ. சேகர் முதல் ஆஸ்கர் வரை. இன்னொன்று மலேஷியா வாசுதேவன் பற்றியது.

http://musicshaji.blogspot.com/2009/02/blog-post.html. ..

இதில் ஷாஜி ரஹ்மான்., “ பாடுவதற்கு தேர்ந்த குரல்கள் தேவையில்லை. இயல்பான பிசிறோடு ஒலிக்கும் குரல்களை சேர்க்க விரும்புவார் புதிதுபுதிதான குரல்களை அறிமுப்படுத்தியவர்” என குறிப்பிட்டு இருந்தார்.

பல்வேறு இசைப்பாணிகளை படைப்பூக்கத்துடன் சோதனை செய்வது., மின் பொறியியலில் ஆர்வம்., எளிய இனிய இசை என சேகருக்கும் ரஹ்மானுக்கும் ஒற்றுமையாகக் குறிப்பிட்டு இருந்தார்.

//அப்போது தமிழ் இசை என்றாலே இளையராஜாதான் என்று நினைக்கும் ஒரு தலைமுறையே உருவாகிவிட்டிருந்தது. ஆனால் படம் வந்த சில நாட்களிலேயே தமிழ்நாட்டில் வீடெங்கும் பேசப்பட்ட பெயராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆனார். அப்பாடல்கள் ஒரு புதிய இசையுகத்தின் தொடக்கமாக அமைந்தன.//

இது போலத்தான் ஒவ்வொரு இசை அமைப்பாளர் வரும் போதும் முன்னவரே சாதிப்பவர் என்று பின்னவரின் திறமை மேல் அனைவருக்கும் நம்பிக்கை வருவதில்லை.. பழக்கப்படுத்தப்பட்ட ஒன்று என்பதும் காரணமாய் இருக்கலாம். எந்த விஷயத்திலும் புதிதை எடுத்துக் கொள்ள தயங்கும் மனப்பான்மையாயும் இருக்கலாம்.

//அவரது இசை மேல் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அதிகப்படியான தொழில்நுட்பத்தன்மை, அதிகமான நவீனத்தன்மை, மிகையான மேலைநாட்டுபாதிப்பு, திரும்பதிரும்ப ஒரே மாதிரியான முயற்சிகள், ஆத்மா இல்லாத கருவியிசை, அனைத்துக்கும் மேலாக நகலெடுப்பு....! ஒன்றை நினைவுகூறுங்கள், இவையெல்லாம் புதுவழி வெட்டி முன்னால் சென்ற அனைத்து முன்னோடிகளைப்பற்றியும் சொல்லபப்ட்ட குற்றச்சாட்டுகள்தான்//

உண்மைதான் நாம் நெருப்பு வளையங்களுக்குள் வந்து நிரூபிக்க வேண்டும் என அனைத்திலும் விரும்புகிறோம்.

ஏ ஆர் ரஹ்மான் உலகமெங்கும் நம் இசையை கேட்க வைத்தவர் மற்றும் ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் தீம் மியூசிக்கும் ., ஜெய் ஹோ பாடலுக்காகவும் பிடிக்கும். மிகுந்த தன்னம்பிக்கை வரிகள் அவை.

எனக்கு ஏ. ஆர் . ரஹ்மானின் சூஃபி பாடல் பிடித்தது. ஜோதா அக்பரில் வரும் அந்தப் பாடலில் ”க்வாஜா மேரே க்வாஜா.. தில் கா சம்வாஜா” என அவர்கள் சுழன்று ஆடும் போது தன்னை மறந்த ஒரு ஒளி வட்டம் நம்மையும் சுற்றுவது போல உணர்ந்தேன்.

ஏ. ஆர் ரஹ்மானின் பாடல்கள் முதலில் நன்றாக இருக்கும். கேட்க கேட்க இனிக்கும். தீராத குடுவையில் தேவாமிர்தம் வழிவது போல..

விண்ணைத் தாண்டி வருவாயா என பலநூறு முறையும். ., ஒரு நாள் நினைத்தேன்., என்றும்., உனை நோக்கியே எனை ஈர்க்கிறாய். என்றும் உருகி., உன் கண்களோடு இருநூறாண்டு., மூக்கின் அழகோடு முன்னூறாண்டு என்றும் மாய்ந்து மாய்ந்து பாடி இருக்கிறேன்.

நுஸரத் பதே அலி் கானின் ஆஃப்ரீ ஆஃப்ரீ பிடிக்கும் .கித்னா சோனா துஜே ரப்னே பனாயா..ஏ. ஆர் ரஹ்மானுடன் இணைந்து http://www.youtube.com/watch?v=AJhZD7zx_Ns போறாளே பொன்னுத்தாயி மெட்டில்.,” சந்தா சூரஜ் லாக்கொன் தாரேன்” என்ற பாடல் இதம்..

//சேகரைப்போலவே ரஹ்மானும் தன் மொழியின், பண்பாட்டின் எல்லைக்குள் நிற்க மறுத்து இசைக்கே உரிய தனிப்பண்பாட்டு வெளி ஒன்றில் வாழ்பவர். ஆர்.கெ.சேகர் தோல்வியடைந்த இடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் நம்பமுடியாத மாபெரும் வெற்றிகளை அடைந்தார். வெற்றிக்காக ஆர்.கெ.சேகரின் அகம் கொண்ட தவிப்பே ஏ.ஆர்.ரஹ்மான் ஆக விசுவரூபம் எடுத்ததோ என்று எண்ணத்தோன்றுகிறது//

உண்மைதான் ஒரு நிறைவேறாமல் சென்ற எண்ணம் தான் செய்ய நினைத்ததை அடுத்த உயிரின் மூலம் செய்ய விழைகிறது என்பதை நானும் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.

இனி அடுத்து மலேஷியா வாசுதேவன் பற்றி ஷாஜியின் கட்டுரை..

மிக அழகாக தமிழை உச்சரித்துப் பாடக்கூடிய உயர்ந்த குரலுக்கு சொந்தக்காரர் மலேஷியா வாசுதேவன். தமிழ் துள்ளி விளையாடும்.

ஏ முத்து முத்தா என்று ஆரம்பிக்கும் பாடல்., மலையோரம் மயிலே என்ற பாடல் என வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்..

20 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டவரைப் பற்றிய பதிவு கண்ணீரை வரவழைத்தது. மனித வாழ்வில் திறமை இருந்தும் வாய்ப்பும் அங்கீகாரமும் இல்லாமல் இருப்பது என்பது ரொம்பக் கொடுமை.

2003 ஆம் ஆண்டு பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டபின் அவர் பாடவே இல்லை.

//30 வருடத்துக்கும் மேலாக பணிபுரிந்து வந்தாரோ, வாழ்ந்து வந்தாரோ அவர்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்புக்காக, எப்போதேனும் நிகழும் ஒரு சந்திப்புக்காக, ஒரு கனிவான வார்த்தைக்காக அவர் ஏங்கியிருந்த போதெல்லாம் இவற்கள் யாருமே அங்கு தென்படவில்லை. //


மலேஷியா வாசுதேவன் தன்னைப் பற்றி ஷாஜியிடம் இவ்வாறு கூறி இருக்கிறார்..
//" எனது ஆன்மாவையும், உள்ளுணர்வுகளையுமே நான் இதுவரைக்கும் பின்பற்றிவந்தேன். யாரிடமும் எதையும் எதிர்பார்த்ததில்லை. பிறருடைய வாய்ப்புகளைத் தள்ளிவிட்டு எனக்கு கிடைக்கவேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஒன்றிரண்டு பாடல்கள் சினிமாவில் பாடிவிட்டால் போதும் என்ற கனவோடுதான் இந்தியா வந்திறங்கினேன். ஆனால் ஏறத்தாழ ஐயாயிரம் பாடல்களைப் பாடிவிட்டேன். 85க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் விட்டேன். வெற்றி, புகழ், பணம் எல்லாம் பார்த்து விட்டேன். பாடல்பதிவுக்காகவோ, மேடை நிகழ்ச்சிகளுக்காகவோ சன்மானமாகத் தரப்படும் பணத்தை நான் ஒருபோதும் எண்ணிப் பார்த்ததே இல்லை. நான் மனிதர்களை நம்பினேன். அதுவே நான் செய்த மிகப்பெரும் தவறு. இவ்வாழ்வில் மிதமிஞ்சி பெருமைப்படுவதற்கு யாருக்குமே பெரிதாய் ஒன்றுமில்லை, ஏனெனில் மனித வாழ்வென்பது அத்தனை மகத்தான விஷயமொன்றுமில்லை."
//

பணத்தை சேர்த்து பாதுக்காக்கும் வழிமுறை தெரியாமல் பலரை நம்பிய காரணம் இவர் படம் எடுத்த போதும் .,உடல் நிலை சரில்லாத போதும் இருந்தவற்றை செலவழித்து சரி செய்து கொள்ள வேண்டியதாயிற்று.. பாட வேறு முடியாது. சிறப்பு சிகிச்சைகள் எடுத்திருந்தால் முடிந்திருக்கலாம்.. இன்னொரு பெரிய பாடகர் இது போல தொண்டையில் பிரச்சனை இருந்து பின்பு சரியானது ஞாபகம் வந்தது இதைப் படிக்கும் போது.


//’இவ்வாழ்வில் மிதமிஞ்சி பெருமைப்படுவதற்கு யாருக்கும் பெரிதாய் ஒன்றுமில்லை’ என்று சொன்ன எனது வாசு அண்ணாவின் பாதங்களில் இந்த தீவிர ரசிகனின் ஒரு மௌனக் கண்ணீர்த்துளி//

இதுதான் உண்மை என யதார்த்தமும் சுடும் போது நாமும் நமது கண்ணீரை அஞ்சலியாக்குவது தவிர வேறென்ன இருக்கிறது.

வியாழன், 24 மார்ச், 2011

நம்பிக்கை நட்சத்திரம். திருஷ்காமினி.. போராடி ஜெயித்த பெண்கள் (6).



M.D. திருஷ்காமினி.. இந்திய மகளிர் கிரிக்கெட்டர்., ஓபனிங்க் பாட்ஸ்உமன்., ஆல் ரவுண்டர். இளம் சாதனையாளர். 8 வயதிலேயே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தவர். கிரிக்கெட் விரும்பிகள் அனைவருக்கும் இவரை தெரிந்திருக்கும். ஆண்களுக்காக மட்டுமே சிறப்பாய் விளம்பரப்படுத்தப்படும் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஒரு பெண் நட்சத்திரத் தாரகை .. இவர்.

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருப்பார் என சொல்லப்படுவதுண்டு.. இவரின் வெற்றிக்குப் பின் இவரின் தந்தை இருக்கிறார்.. டிக்கேஷ் வா சங்கர். இவர் ஒரு ஹாக்கி ப்ளேயர்.. போர்ட் ட்ரஸ்ட்டில் சூபரிண்டெண்ட். அம்மா மணிமேகலை ஐ ஓ பி யில் க்ளார்க். ( தற்போது இல்லை.) தந்தை கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக மகளுக்கு கோச்சாக செயல்பட்டு பயிற்சி அளிக்கிறார். தன் வேலையை ராஜினாமா செய்து மகளுடைய முன்னேற்றத்துக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

தற்போது 20 வயதாகிறது திருஷ்காமினிக்கு.. இவர் பெயரில் இவரின் அனைத்து உறவினர்களும் இருக்கிறார்கள். தி - ஜாதகப் படி வைத்தது. ரு - இவரின் அப்பா வழித் தாத்தாவின் பெயர் முருகேசனிலும்., ஷ்- தந்தை திக்கேஷிலும். கா பாலன்ஸ் செய்ய.. மி - தந்தைவழிப் பாட்டியின் பெயர் மீனாட்சியிலும் னி - அம்மா மணிமேகலையின் பெயரிலும் சேர்த்து திருஷ்காமினி ஆகி இருக்கிறார். சர்ச் பார்க்கில் பள்ளிக் கல்வி., எம் ஓ பி வைஷ்ணவாவில் பி. காம் முடித்து தற்போது எம் ஏ கம்யூனிகேஷன் படிக்கிறார்.




8 வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். டி வி யில் பார்த்து வளர்ந்த ஆர்வத்துக்கு இவர் தந்தை தூண்டுகோலும் துணையுமாய் இருக்கிறார். வீட்டில் விளையாடிய பாட்ஸ்களின் அணிவகுப்பே இருக்கிறது. ஒவ்வொரு பாட்டும் 12, 000 விலை பெறும்.


7 வது படிக்கும் போது சப் ஜூனியர் லெவெலில் முதலில் ஜாம்ஷெட்பூரில் விளையாடி இருக்கிறார். இதுதான் முதல் போட்டி. கிரிக்கெட்டில் சின்னப் பெண்ணாக இருந்தாலும் தன் 12 ஆவது வயதில் DEBU பண்ணும் போது 26 வயது ப்ளேயர்களுடன் சரிசமமாக விளையாடி இருக்கிறார். 14 வயதில் சென்னையில் நடந்த இண்டர் ஸ்டேட் இல் ஓபனிங் பாட்ஸ்மானாக விளையாண்டிருக்கிறார். அந்த டோர்னமெண்டில்,” ப்ராமிசிங் கிரிக்கேட்டர் ஆஃப் த டோர்னமெண்ட் ” அவார்டு கிடைத்தது.

ஜூனியர் இண்டர் ஸ்டேட் டோர்னமெண்ட் திருவனந்தபுரத்தில் நடந்தபோது பொதுவாக பாட்டிங்., பௌலிங்., ஃபீல்டிங்தான் பண்ணமுடியும். விக்கெட் கீப்பிங்கும் செய்ய வேண்டி இருந்தது. அதில் பாட்டிங்கில் 284 ரன் எடுத்து பௌலிங்கில் 7 விக்கெட் எடுத்து ஃபீல்டிங்கில் 3 காட்சும் ., கீப்பிங்கில் 2 காட்சும் பிடித்து 5 விக்கெட் எடுத்தார்.

TNWCL இல் 221 ரன் எடுத்து பெஸ்ட் பாட்ஸ்உமன் அவார்டு வாங்கினது மறக்கமுடியாத அனுபவம். 38 பவுண்டரிஸ் ( 4 ) எடுத்து 4 சிக்ஸர்.. ( 6).2007 - 2008 இல் பெஸ்ட் ப்ளேயர் ஆஃப் த இயர் (ஜூனியர்) இண்டியன் லெவலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வருடம் முழுவதும் ஆவரேஜ் 165. சராசரியாக 1 மாட்சுக்கு 165 ரன்கள் , இந்த மாதிரி ரன்களை ஆண்களே அடிக்க முடியாது.

இந்தியன் கிரிக்கெட் வாரியம் பெஸ்ட் ப்ளேயர் ஆஃப் த இயர் எடுத்ததால் ஆஸ்திரேலியாவுக்கு CENTRE OF EXCELLENCE - BRISBANE . க்கு ஸ்பெஷல் ட்ரெயினிங் காம்ப்க்காக அனுப்பி வைத்தார்கள். அதில் பல நுணுக்கங்களைப் பயின்றிருக்கிறார்.. இது மட்டுமல்ல.. டி வியிலும்., மற்றும் அடிக்கடி மற்ற மாட்சுகளைப் பார்த்தும் நுணுக்கங்களை தான் கற்றதோடு மட்டுமல்ல தன் சக விளையாட்டு தோழியருக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

கிரிக்கெட் மைண்ட் ஓரியண்டட் கேம் . பிசிகலாகவும்., மெண்டலாகவும் எப்பவும் ஃபிட்டாக இருக்க வேண்டும். அறிவை உபயோகப்படுத்தியும் ஆடணும். ஆடப்போகும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு சவாலான நாளே.. நின்று ஆடவேண்டும்., ஜெயிக்க வேண்டும். இந்த மாதிரி சமயங்களில் ஆண்களே தடுமாறும் நிலை உண்டு.. ஒவ்வொரு பாலும் சவாலான பால்தான்.



2007 இல் ப்ளஸ்டூ தேர்வு எழுதும்போது இந்தியா- ஆஸ்திரேலியா இங்கிலாந்து ., நியுசிலாந்து குவார்ட்ராங்குலர் சீரிஸில் விளையாடி விட்டு எக்ஸாம் எழுத சென்றார். ஒரு நாள் கூட படிக்க லீவ் இல்லை. 20 நாட்கள் விளையாட்டுக்காக ஹோட்டலில் தான் தங்க வேண்டும். படிப்பது சிரமம். ப்ராக்டீஸ் செய்ய வேண்டும். நாட்டுக்காக விளையாடுவதால் மாட்சில்தான் கான்சன்ட்ரேட் செய்யவேண்டும். சீரிஸ் முடிந்த அடுத்த நாளே பரிட்சை. அதில் 162 மார்க்கும். மொத்தத்தில் 70 பர்சண்டேஜும் வாங்கி இருக்கிறார். மிக நன்றாக படிக்கக் கூடிய பெண்ணான இவர் இன்னும் டைம் கிடைத்திருந்தால் ஸ்டேட் ராங்க் வாங்கி இருக்கக் கூடும்.

பத்துவயதில் ப்ளேக்ரவுண்டில் ப்ராக்டீஸ் செய்யும்போது ஹெல்மேட் போட்டும் பாடிலைனாக மூக்கில் பட்டு பவுன்ஸாகி ரத்தம் கொட்டத்துவங்கியது. இவரின் தந்தையும்., பௌல் செய்தவருமே பயந்துவிட்டார்கள்.. மற்றவர்களாக இருந்தால் அன்றோடு கிரிக்கெட் முடிந்திருக்கும். இவரின் மன உறுதி., விடாமுயற்சி., போராட்டம் ., உழைப்பு காரணமாக இன்று ஆல்ரவுண்டராக பரிணமிக்கிறார்.

எல்லா இடத்திலும்., ஒரு சிறப்பான இடத்தை அடைய., கிடைத்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியிருக்கும். உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் இவரின் விடாமுயற்சியும்., உழைப்பும் ., ப்ராக்டீஸும் இவரின் எல்லா தடைகளையும் மீறி ஜொலிக்க வைக்கிறது.



இந்தியாவுக்காக விளையாடி

1.15 வயதில் 21 வயதுக்குட்பட்ட யங் லேடீஸ் 2005 பாகிஸ்தான் லாகூர் உமன் ஆஃப் த மேட்ச் அவார்டு.

2. 16 வயதில் ஆசிய மகளிர் கிரிக்கெட் கோப்பை ஜெய்ப்பூர் 2006 இல் அறிமுகப்போட்டியில் உமன் ஆஃப் தெ மேட்ச் ., உமன் ஆஃப் த சீரிஸ் அவார்டு.

3. குவார்ட்ராங்குலர் சீரிஸில் இந்தியா, ஆஸ்திரேலியா., இங்கிலாந்து., நியூசிலாந்து., போட்டியில் 2006 இல் சென்னையில் பங்கேற்றார்.



விளையாட்டுத்துறை அமைச்சர் மொய்தீன் கானிடம் உமன் ஆஃப் தெ சீரிஸில் 2006 இல் இண்டர்நேஷனல் சீரிஸுக்காக பாராட்டு கிடைத்தது.

கலைஞர் பிறந்தநாளில் நடந்த மின்னொளி டோர்னமெண்ட்டுக்காக சிறப்பு அழைப்பாளராக சென்றிருக்கிறார். அங்கே ஸ்டாலின்., கலைஞர்., கிருஷ் ஸ்ரீகாந்த்., டி. ஆர். பாலு. துரை முருகன்., கே. என் . நேரு., ஆகிய எம் எல் ஏக்கள் சட்டமன்ற உறுப்பினர்களோடு இவரும் பங்கேற்றிருக்கிறார்.

ஜெய்ப்பூரில் நடந்த ஆசிய மகளிர் கிரிக்கெட் போட்டியில் “ தொடர் ஆட்ட நாயகி “ விருது திருஷ்காமினிக்கு கொடுக்கப்பட்டு., ”ஜஸ்ட் ஃபார் ஹெர் விற்பனை மையத்திலிருந்து ”ஹீரோ ஹோண்டா ப்ளெஷர்” வண்டி பரிசாக அளிக்கப்பட்டது.



இந்த வெற்றி எல்லாம் சும்மா வந்ததல்ல.. உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டுமே..

காமன்வெல்த் பாங்க் கிரிக்கெட் சீரிசில் ஆஸ்த்ரேலியாவுக்காக விளையாடி வந்தபின்பு இண்டர்ஸ்டேட் தமிழ்நாட்டுக்காக அனந்தப்பூரில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நடுவில் ஒரு நாள் ப்ரேக் டே இருந்தது. அதன் முதல் நாள் இரவில் இவரின் தாய் மணிமேகலைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்ரியில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். இரவு 2 மணிக்கு அவரின் இறப்பு செய்தி கிடைத்ததும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் உதவியுடன் ஒர் டாக்சியில் 4 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மாலை 4 மணிக்கு வந்து தாயின் ஈமக்கிரியைகளில் கலந்து கொண்டு பின் உடனே 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாட்ச் விளையாட சென்றார்.. இந்த மாதிரி மனநிலையில் எப்படி விளையாடி இருக்க முடியும். தாயை இழந்த சோகம்., பக்கத்தில் இருக்க முடியாத பரிதவிப்பு., பயணம்., ஓய்வற்ற பயிற்சி., உறக்கமற்று மறுநாள் விளையாட வேண்டிய அவசியம்.. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை அல்லவா.

ஒவ்வொரு வெற்றிக்கு முன்னும் இந்த மாதிரி பல சம்பவங்களை கடக்க வேண்டியதிருக்கிறது.




கிட்டத்தட்ட 7000 ரன்களும்., 126 விக்கெட்டுகளும் ., 20 வயதில் எடுப்பது என்பது என்னளவில் ஒரு பெரும் சாதனையே.. பல தொலைக்காட்சிகளும் பத்ரிக்கைகளும் வெளிநாட்டு பத்ரிக்கைகளும் ., என் டி டி வி யும் இவரின் சாதனைகளை பகிர்ந்துள்ளன




இவரின் சகோதரி M.D. சுகராகமினியும் ஒரு இளம் கிரிக்கெட்டர் .. இவரும் எம் ஓ பி வைஷ்ணவாவில் ஃபுட் சைன்ஸ் மேனேஜ்மெண்ட் படிக்கிறார். இவரும் ஜூனியராக கல்லூரி டீமிற்காகவும். தமிழ்நாட்டிற்காகவும் விளையாடுகிறார்.


இருவரும் எம்.டி.டி என்றும் எம்.டி.எஸ் என்றும் அழைக்கப்படுகிறார்கள் கிரிக்கெட் வட்டாரத்தில்..

தமிழ்நாடு சீனியரில் இருவரும் ஒன்றாக தாய்த்தமிழ் நாட்டுக்காக., தாய் நாட்டுக்காக ஒன்றாக விளையாட வேண்டுமென்பது தந்தையின் விருப்பம்.


இந்திய மகளிர் கிரிக்கெட்டின் நட்சத்திரங்கள் மினி சகோதரிகள் இணைந்து வெற்றி பெற வாழ்த்துவோம். !!!


டிஸ்கி:- நம்பிக்கை நட்சத்திரம் திருஷ்காமினி பற்றிய என்னுடைய இந்தக் கட்டுரை (போராடி ஜெயித்த பெண்கள் ) மார்ச் மாதம் 2011 லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்துள்ளது.

புதன், 23 மார்ச், 2011

குழந்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.. டாக்டர் வசந்தி பாபு.




ஒரு இல்லம் இனிய இல்லமா அமையுறது பெற்றோரால்தான்.. அந்த இனிய இல்லத்தை அமைக்க பெற்றோர் குழந்தைகள் உறவு இனிமையா இருக்குறது முக்கியம்.. பெற்றோர்தான் எனவும்., பிள்ளைகள் தான் எனவும் குற்றம் சாட்டிக் கொள்வோம். அந்த உறவு என்றும் நீடிச்சு இருக்க குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது பற்றி., அவங்க பிரச்சனைகளை களைவது பற்றி ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற வெப்சைட்டையும் ., ஆர் ஏ புரத்திலும்., ராயப்பேட்டையிலும் கிளினிக்கும் நடத்திவரும் டாக்டர் திருமதி வசந்திபாபுவை சந்தித்து நம் வாசகியருக்காக ஆலோசனை தந்துதவுமாறு கேட்டோம். இவர் மனநல ஆலோசகராகவும்., ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற கவுன்சிலிங்க் கிளினிக்கையும் நடத்தி வருகிறார்.. சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பிரச்சனைகள் ., ட்ரான்ஸ்ஜெண்டர்களின் பிரச்சனைகள்., பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி உள்ளார்.

முதலில் எல்லா வீட்டிலும் ஒரு கூட்டுக் குடும்பமா., தாத்தா பாட்டி அரவணைப்பில் குழந்தைகள் வளர்ந்தார்கள்.. இப்போ சூழ்நிலை மாறி தனிக் குடித்தனத்தில் வேலைக்குச் செல்லும் பெற்றோருடன் பிள்ளைகள் இருப்பதால்., தனி ரூம் ., ஏசி., கம்ப்யூட்டர்., டிவி., செல்ஃபோன்., கிடைப்பதோடு வேலைக்காரர்கள் அல்லது ஆயாவோடு வளர வேண்டிய கட்டாயம்.. எனவே பிள்ளைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகுறாங்க..

பிறக்கும் போது அனைத்துக் குழந்தைகளும் ஒண்ணுதான்.. வலிமையானவனா இருக்குறதுக்கோ., பலவீனமானவனா மாறுவதற்கோ சூழல்தான் காரணம். சரியா இருக்குறதுக்கும் ., தடம் புரள்றதுக்கும் பெற்றோர்தான் காரணம்.. அவங்க கவனிப்பு இன்மைதான் காரணம். அதை விட்டுட்டு நான் என் பிள்ளைக்கு அதை செய்தேன் இதை செய்தேன் என நிறைய வசதிகளை பட்டியல் இடுவாங்க. இதெல்லாம் விட அவங்களுக்கு தேவை அன்பு..

இதுல இருந்து விடுபடுறதுக்கு குழந்தைகளை ஒரு காரணமா காண்பிக்காம பெற்றோர்தான் மாறணும்.. குழந்தைகளுக்கு கவுன்சிலிங்க் தேவை இல்லை.. பெற்றோருக்குத்தான் தேவை..திருமணம் முடிந்ததும் கணவன் மனைவி சம்பாதிக்கிறோம் ., பிள்ளைகளைப் பெற்று விட்டோம் . அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்துவிட்டோம் .. கார்., பங்களா., ஏசி., க்ளாஸ்களில் சேர்த்து விடுவது ஆயா. ட்ரைவர் வைப்பது என இருந்து விடுகிறார்கள்..

ஆனா குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதை பார்க்கணும். சாதாரணமா ஒரு குழந்தை இன்னொரு குழந்தையிடமிருந்து மாறுபடுது. அது பக்கத்துல இருந்து அதை தட்டிக் கொடுத்து சாதிக்க வைக்கணும். சாதிச்ச குழந்தைக்கு பரிசு கொடுத்து ஊக்குவிக்கணும். தவறு செய்தா தண்டிக்காம., கண்டிக்கணும். அன்போடு விசாரித்து அதை திருப்பி பண்ணாத மாதிரி ஒரு அணுகுமுறையை கொண்டு வரணும்..

முக்கியமா பெற்றோர் குழந்தைகள் முன்னாடி சண்டை போடுதல்., திட்டுதலை தவிர்க்கணும்.. அதைத்தான் குழந்தைகள் எளிதில் கத்துக்குவாங்க..

இனி எஃபெக்டிவ் பேரண்ட்ஸா இருக்க பத்துக் கட்டளைகள்..


EFFECTIVE PARENTS.. AND POITIVE PARENTS..

1. BE A ROLE MODEL..:-
முன்னுதாரணமாக இருங்கள்.. வீட்டை நாம் சுத்தமாக வைத்தால்தான் குழந்தைகள் கற்றுக் கொள்ளும்.இப்படி செய் ., அப்படி செய் என வலியுறுத்துவதைவிட நாமே முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்..

2. ALOT TIME FOR CHILDREN. :-
குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குங்கள்.. எவ்வளவு வேலை இருந்தாலும்
குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கி கூட இருந்தால் வேண்டாத பிரச்சனைகளை சின்ன வயதிலேயே கண்டுபிடித்து கிள்ளி எறிய முடியும். அது பெரிதாகி குழந்தை அவமானப் படுவதை ., வேறு பிரச்சனைகள் உருவாவதைத் தடுக்கும்.

3. LOVE THEM TO TEACH THEM TO LOVE THEM ALL:-
நிறைய அன்பு செலுத்துங்கள் . அன்பாக சொல்லுங்கள். மத்தவங்ககிட்டயும்.,
வேலை செய்பவர்கள் கிட்டயும் கூட மரியாதை கொடுத்து பேச பழகச் சொல்லுங்கள் அன்பா ., மரியாதையா பழகணும்.. எல்லாரும் நமக்கு வேணும் என்பதை குழந்தைகள் உணரணும்.

4. LEAD THEM AND DONT FORCE THEM :-
நம்முடைய ஆசைகளை., எதிர்பார்ப்புக்களை ., ஏமாற்றங்களை குழந்தைகள் கிட்ட திணிக்காதீர்கள். வழி நடத்துங்கள்.. வற்புறுத்தாதீர்கள்.. கை பிடித்து
அழைத்துச் செல்லுங்கள்.. கழுத்தை பிடித்து தள்ளுவது போல் அதைச் செய்.,
இதை படி என வற்புறுத்தாதீர்கள்.. நீ டாக்டரா வரணும். , எஞ்சினியரா
அல்லது டான்சரா வரணும் என கட்டாயப் படுத்தாதீர்கள். எதில்
அவங்களுக்கு இண்டரஸ்ட் இருக்கோ அதில் ஈடுபடுத்துங்கள். உதாரணமா நீச்சல் கத்துக்க ஆசைப்பட்டா எவ்வளவு தூரம் இருந்தாலும் நேரம் ஒதுக்கி அழைத்துச் செல்லுங்கள்.

முக்கியமா இந்தக் காலத்துல பெற்றோர் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஃபோர்ஸ் செய்வதால் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகுறாங்க.. திறமைகளைக் கண்டுபிடித்து ஊக்குவியுங்கள்.. கோ கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்., ஸ்போர்ட்ஸ்., ரீடிங்., ஸ்விம்மிங்., பெயிண்டிங் என அவங்க
ஹாபீஸுக்கும் முக்கியத்துவம் கொடுங்க..

DONT COMPARE CHILDREN WITH OTHERS. அது அவங்க செல்ஃப் கான்ஃபிடன்ஸை குறைத்துவிடும். இப்படி செய்யாம தட்டிக் கொடுத்து ஊக்குவியுங்க..

5. TEACH THEM COPING TECHNIQUES:-
நமது குடும்பம் இப்படி என கற்றுக் கொடுக்க வேண்டும்.. எந்த
சூழ்நிலையிலும் வாழக் கற்றுக் கொடுக்க வேண்டும். யார் வீட்டுக்கு
சென்றாலும் அவர்கள் தருவதை உண்ண., மற்றும் தங்க பழகிக் கொள்ள
வேண்டும்.கட்டிலாக இருந்தாலும் தரையாக இருந்தாலும் செல்லும் இடத்திற்கு தகுந்தது போல் பிள்ளைகள் தங்களைப் பொருத்திக் கொள்ள வேண்டும். இது ஸ்கூல் ., காலேஜ் ., ஹாஸ்டலிலும் இருக்க உதவும். வெறும் பந்தாவுக்காக குடும்ப நிலைமை தெரியாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டாம்..

6. LET US STAND IN THEIR SHOES:-
குழந்தைகள் ஒரு ஏஜுக்கு வந்த பின் தோழமையோட நடத்துங்க.. அவங்க இடத்துல இருந்து பாருங்க. சிந்தியுங்க.. அவங்களா மாறுங்க. அவங்க வயதுகுத் தகுந்த மாதிரி நாம மாறி அவங்க இடத்துல இருந்து நாம அனலைஸ் பண்ணா எது கரெக்ட் எது தப்புன்னுதெரியும்.

குழந்தைகள் பட்டம் மாதிரி. அவர்களை பறக்க விடணும்.. ஆனா கண்ட்ரோல் நம்ம கையில் இருக்கணும். இழுத்துப் பிடிச்சாலோ ., அதிகமா விட்டாலோ ஒண்ணு பட்டம் அறுந்துடும் அல்லது பறந்திடும்.. எனவே சுதந்திரம் கொடுப்பதிலும் ., கண்டிப்பதிலும் கூட அளவோடு இருக்கணும்.

7. TEACH THEM GOOD HABBITS.:-
நல்ல ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கைக் கொள்ளச் செய்யுங்க.. நகம் வெட்டுதல்., உடல் பராமரிப்பு., பர்சனல் ஹைஜீன் முக்கியம். ஜங்க் ஃபுட்
வாங்கிக் கொடுக்காதீங்க., அவங்களுக்கு விருப்பமான உணவை விருப்பமான
வடிவத்தில் சுவையா செய்து கொடுங்க. அன்போடு பரிமாறுங்க.. கூடுமானவரை இரவு உணவு சேர்ந்து சாப்பிடணும். அல்லது சனி ஞாயிறு அன்றாவது ஒன்றாக அமர்ந்து சாப்பிடணும். அந்த சமயங்களில் நல்ல விஷயங்களை பேசலாம் ., தெரிந்து கொள்ளலாம்.

8. TEACH THEM TIME MANAGEMENT.:-
எந்த சமயத்தில் எந்த வேலையை செய்யணும்னு கத்துக் கொடுக்கணும்.
எக்ஸ்போஷர் அதிகமா உள்ள இடத்தில் டி வி., கம்ப்யூட்டரை வைங்க.. அதுக்கும் இந்த நேரம் வரைதான் பார்க்கணும்னு நேரம் வைங்க.. தனி பெட்ரூமில் வைக்க வேண்டாம். போன் ஹாலில் பேசும் இடத்திலேயே வைக்கலாம். செல்போனில் மெசெஜ் அனுப்புவது., பேசுவது எல்லாம் நேரம் காலம் முக்கியம் என கட்டுப்பாடு வைக்கணும்.

9. UNCONDITIONAL LOVE.:-
வரைமுறையில்லாத அன்பு கொடுக்கணும். அன்பை விட நல்ல மருந்து கிடையாது.. எந்தப் பிரச்சனயிலும் அன்பை விட நல்ல மாற்று கிடையாது. தவறை அன்பா கண்டிங்க.. ஆனா தண்டிக்காதீங்க.. கூப்பிட்டு பேசுங்க.. சொல்லிக் கொடுங்க.. நல்லது கெட்டது எல்லாம்.. ஒரு வயதுக்கு மேல நண்பனா இருங்க.. ஆலோசனை சொல்லுங்க.. ஏற்றுக் கொள்வார்கள்.

10. MAKE YOUR CHILDREN'S FRIENDS AS YOUR FRIENDS :-
உங்க குழந்தைகளோட நண்பர்களை உங்கள் நண்பர்களா ஆக்கிக் கொள்ளுங்கள். அவங்க மூலம் உங்க குழந்தையின் எல்லா மூவ்மெண்ட்ஸும் தெரிஞ்சுக்கலாம். அது ஒரு இம்பார்ட்டண்ட் சீக்ரெட். நல்ல டாக்டிக்ஸ். கூப்பிட்டு விருந்து வைத்தல்., நல்ல இடங்களுக்கு நண்பர்களோட அழைத்து போதல் இன்னும் உங்களை பிள்ளைகளுக்கு நெருக்கமா உணரவைக்கும்.
ஒரு குடும்பம் இனிய இல்லமா இருக்க அதன் சாவி நம்ம கையிலதான் இருக்கு. அந்த சாவியைக் கொண்டு நம்ம இல்லத்தை இனிய இல்லமா மாத்துவோம் !!!






திங்கள், 21 மார்ச், 2011

தேனிரும்பு..

ஒளிய முடியாமல்
பால் ப்ரகாசம்
வழிந்து வழிந்து

மேகமாய் மரமாய்
கிளையாய் இலையாய்
நதியாய்.. நீளமாய்..

கனவில் நீளும்
இறக்கையோடு
கால் நனைத்துக்

கவ்விய மீனோடு
புலம் பெயர்ந்து
ஏதோ ஒரு புலத்தில்

கண்ணுக்குத் தெரியாத
காந்தமாய்..
கால் எடுக்க வாராமல்
இரும்பாய்..

நிற்கவோ.,
உறையவோ.,
உயிர்க்கவோ..

செப்பிடு வித்தையோ
செய் வினையோ
செப்பிடும் வித்தை.

சனி, 19 மார்ச், 2011

வாழும் வரை போராடு..மணிமேகலை..போராடி ஜெயித்த பெண்கள் ( 5).


"வெறும் வேடிக்கை மனிதரைப் போலே நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ..” என்ற பாரதியின் வரிகள் மணிமேகலை அவர்களுக்குத்தான் பொருந்தும் .. சாஸ்திரி பவனில் ஆடிட்டராகப் பணிபுரியும் இவர் எட்டிய உயரம் டென்சிங் சிகரம்.

திருமதி மணிமேகலை சாஸ்திரி பவனில் பெண் ஊழியர்கள் நலச்சங்கத்தின் தலைவர்.. எஸ் சி எஸ்டி பெண் ஊழியர் நலச்சங்கத்தையும் துவக்கியவர்.. ஒரு பெண்ணின் உணர்வுகளை ஒரு பெண்ணால்தான் உணரமுடியும் என்பது எவ்வளவு உண்மையோ அதுபோல்தான் ஒரு தலித்தின் உணர்வுகளை ஒரு தலித்தால்தான் உணரமுடியும்.. எவ்வளவோ சலுகைகள் கொடுத்தும் ., இன்னும் பின் தங்கி இருப்பவர்களை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு., பாடுபட்டுக் கொண்டிருப்பவர் இவர்.

இவரின் அப்பா தெய்வசிகாமணி ஒரு வழக்கறிஞர்.. இந்திய குடியரசுக் கட்சியின் நிறுவனர்.. முதல் வேட்பாளர்.. எக்மோர் தொகுதியில் போட்டியிட்டு இருக்கிறார்.. தாயார் சுசீலா .. KGF ( KOLAR GOLD FIELD) இல் ஸ்கூல் டீச்சர். . அந்தக் காலத்தில் எஸ் எஸ் எல் சி . மியூசிக் டீச்சர்.. நன்கு பாடும் திறமை படைத்தவர்.

நான்கு சகோதரிகள்., ஒரு சகோதரருடன் பிறந்ததால் விட்டுக் கொடுத்தல்., பகிர்ந்து கொள்ளுதல் போன்ற நல்ல பண்புகள் வளர்ந்தன.. ஒரே ஒரு ஹரிகேன் விளக்கில் அனைவரும் சுற்றி அமர்ந்து படிப்பது.., பள்ளி ., கல்லூரிகளுக்கு நடந்தே செல்வது ., மேலும் இங்கிலீஷ் மீடியம் ., தமிழ் மீடியம் என மாறி மாறிப் படித்தது என நன்கு படித்து சகோதரிகள். , சகோதரர் அனைவரும் வங்கிப் பணியில்.அமர., இவர் மட்டும் தந்தையின் வாரிசாய்.. சமூகப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கிறார்.

தந்தை தெய்வசிகாமணி அரசியல் மேதை அண்ணல் அம்பேத்காரின் ஃபாலோயர்.. பிள்ளைகளுக்கு நல்ல புத்தகங்களை வாங்கித் தந்து அறிவு ஊட்டி இருக்கிறார்.. 40 வருடங்களுக்கு முன் வெஸ்லி ஹை ஸ்கூலில் படித்தவர் இவர். (WRREN &MARTIN ENGLISH GRAMMAR BOOK )எல்லாம் படிப்பிக்கச் செய்து ஆங்கில அறிவை ஊட்டி இருக்கிறார்.. பிள்ளைகளுக்கு கல்வி ஒன்றுதான் சொத்து.. அதைத்தான் சேர்த்து வைத்திருக்கிறேன் .. அதுதான் என் பிள்ளைகளுக்கு நான் வழங்கும் சீதனம் என்று மாப்பிள்ளைகளிடம் கூடக் கூறுவாராம்.

புத்திஸ்ட்டான இவர் குடும்பம் புத்த மத பிரகாரம் பஞ்சசீல நெறிமுறையைப் பின்பற்றி அமைந்தது..

பள்ளிப்பருவம்வரை எல்லார் வாழ்க்கையும் போல் சென்று கொண்டிருந்த இவர் வாழ்க்கை கல்லூரியில் அடி எடுத்து வைத்த போது நடந்த ஒரு சம்பவம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

க்வீன் மேரீஸ் கல்லூரியில் பி ஏ பொருளாதாரம் சேர சென்ற போது தலித் மக்களுக்கு உள்ள அரசு சலுகையை பயன்படுத்தி (ENTITLEMENT CARD ..) E- CARD மூலம் ஃபீஸ் கன்ஷஷன் உண்டு.. அதை செலுத்தி ஒரு சிறிய தொகையும் மாணவியர் செலுத்த வேண்டும்.. அதை செலுத்த கவுண்டரில் காத்திருந்த போது சரியான சில்லரை இல்லை என்று சொன்னதும் வரிசையில் பின் நின்ற ஒருவர்.. ”இவங்க எல்லாம் படிச்சு என்ன பண்ணப் போறாங்க”.. என கேட்டாராம்.. அப்போது இவரின் தாய் ., “ ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின் பெயர் என் மகளுக்கு சூட்டி இருக்கிறேன்.. அவள் நிச்சயம் படித்து ஜெயிப்பாள் ., “ எனக் கூறினாராம்.. இதைக் கேட்டவுடன் இவரின் மனதில் பெரும் மாற்றம்.. ஆம் நாம் சாதிக்கப் பிறந்திருக்கிறோம் என ..

அன்றிலிருந்து தன்னைப் போல பணம் கட்ட முடியாமல் கஷ்டப்படும் நண்பர்களுக்கெல்லாம் இந்த மாதிரி ஹரிஜன் வெல்ஃபேர் டிபார்ட்மெண்ட் மூலமாக E- CARD கிடைக்கச் செய்து ஃபீஸ் கன்சஷன் வாங்கித் தந்திருக்கிறார்.. எஸ் சி., எஸ் டி மக்கள் முன்னேற அரசாங்கம் வழங்கியுள்ள சலுகை இது என கூறி தந்தை தாய் வருமானம் இல்லாமல் இருந்தால்., கம்யூனிட்டி சர்டிஃபிகேட்., பர்த் சர்டிஃபிகேட்., கல்லூரியில் சேரக் கிடைத்த அட்மிஷன் கார்டு எனஅனைத்தையும் சேப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் காண்பித்தால் அந்த தலைமை அதிகாரி அதை வாங்கி சரி பார்த்துவிட்டு ., ஈ கார்டையும் பார்த்து ஃபீஸ் கன்சஷன் கொடுப்பார்.. ஒவ்வொரு முறையும் இந்த நடைமுறை.. பலமணி நேரம் பொறுமையாக காத்திருந்து பெற வேண்டும். இது போல் உள்ள சலுகைகளை எல்லாம் மற்ற தலித் பிள்ளைகளும் பெற வெண்டும் என்ற சேவை நோக்கில் எல்லாருக்காகவும் பாடுபட்டு இருக்கிறார்..

கல்லூரியில் பி ஏ எகனாமிக்ஸ். அப்புறம் எம் ஏ எகனாமிக்ஸ் படித்தார். த்ரோபால் ப்ளேயர். கல்லூரி யூனியன் லீடர்.. எனவே எல்லா டிபார்ட்மெண்டுக்கும் சென்று எல்லா தலித் மாணவர்களுக்கும் உதவி வாங்கித் தர முடிந்தது.

16 வயதிலேயே இந்த மாதிரி தலித் சமுதாயத்தில் பிறந்ததால் ஏற்பட்ட இன்னல்களை சமாளித்து., வேலைக்கு வந்த பின்னும் பொருளாதாரத்தில் பின் தங்கிய தலித் சமூகப் பெண்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் பெண் ஊழியர் நலச்சங்கத்தின் தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்ட (CGWEWA.. CENTRAL GOVERNMENT WOMEN EMPLOYEES WELFARE ASSOCIATION ) இவர் தலித் பெண்களுக்காகவும் ஒரு நலச் சங்கத்தை ( SSWEWA.. SHASTRI BHAVAN SC., ST.,WOMEN EMPLOYEES WELFARE ASSOCIATION ) உருவாக்கினார்..

CGWEWA வைப் பொறுத்தவரை ஹெல்த் கேர் நிறைய எடுக்கப் பட்டிருக்கு.. இதுக்கு இந்த சங்கத்தின் தலைவியாய் இருப்பதால் மற்றவர்களின் ஒத்துழைப்போடு தான் நிறைய சாதிக்க முடிந்தது எனக் கூறுகிறார்.. வெறும் 5 ரூபாய் செலவில் அனைத்துப் பெண்களுக்கும் BMD- BONE MASS DENSITY TEST செய்து ( மெஷினின் விலை 12 லட்சம் ) ANENE COMPANY யின் உதவியோடு முட்டி எலும்புத் தேய்மானம் கண்டுபிடித்து கால்சியம் மாத்திரைகள் வழங்கப் பட்டிருக்கு.

பெண்கள் பொதுவா வீட்டில் எல்லாரையும் கவனிப்பங்க ,. தன்னை மட்டும் கவனிச்சுக்க மாட்டாங்க. அதைப் போக்க இந்த மாதிரி இலவச மருத்துவ முகாம்களை நிறைய நடத்தி கண் பல்., டயபடிக்., கைனகாலஜிஸ்ட்., ஜெனரல் செக்கப் எல்லாம் ரெகுலரா செய்றாங்க.

மார்ச் 8 மகளிர் தினத்தன்று சாதித்த பெண் நினைவா அவார்டு வழங்கப்படுது இந்த வருடம் மதர் தெரசா அவார்டு இளவழகிக்கு வழங்கப் பட்டது. டாக்டர் ஷாலினியை வைத்து பணிபுரியும் பெண்களுக்கு மன அழுத்தம் குறைய ஆலோசனை வழங்கப்பட்டது. டாக்டர் கலா (கைனகாலஜிஸ்ட்) மூலம் ப்ரொஜக்டர்கள் வைத்து யூராலஜிஸ்ட் மூலம் கர்ப்பபை பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினத்தன்று 10 நாட்கள் TALENT PROMOTING COMPETTTIONS மற்றும் CULTURALS நடத்தப்பட்டு திறமைகள் வெளிக்கொணரப்படுது.. இதுஅவங்க திறமைகள் வெளிப்படும் ஒரு ப்ளாட்ஃபார்மா அமையுது. அவர்களின் அழகு .,திறமை ., ஆளுமைத்தன்மை கணக்கில் கொள்ளப்பட்டு மிசஸ் . சாஸ்த்ரி பவனாக முடி சூட்டப்படுறாங்க..

எஸ் சி,., எஸ் டி விமன்ஸ் அசோசியேஷன் பெண்கள் பிரச்சனைகள்., தனிப்பட்ட முறையில் ஜாதிப் பிரச்சனைகள்., இன்னும் பல .... இவற்றை விமன்ஸ் கமிஷன் மூலம் தீர்த்து வைக்கிறாங்க... இந்த அசோசியேஷன் செயல் பட ஆரம்பித்த பிறகு இந்த தொந்தரவுகள் குறைந்து இருக்கு.. முன்பு தலித் பெண்கள் அலுவலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை சொல்ல பயந்தார்கள்.. இப்போ தைரியமா சொல்ல ஆரம்பித்ததால் இது விமன்ஸ் அசோசியேஷன் கூட மிங்கிள் ஆகி இருப்பதால் ஒரு பயம் இருக்கு.. எனவே தவறுகள் குறைந்து விட்டன.

தனியே பெண்கள் போராடுவதை விட ஒரு இயக்கத்தின் மூலமா சொல்லப் படும் போதும்., செயல்படும் போதும் அதன் வீர்யமும் வலிமையும் கூடுது. அதிகாரத்தின் மூலமும்., இயக்கத்தின் மூலமும் ரூல்ஸ் மற்றும் ரெகுலேஷன்ஸ் மூலமும் அதிகம் செய்ய முடியுது. மரியாதையும் அதிகம் . பொறுப்பும் அதிகம். சாதிக்கவும் முடியுது. பெண்கள் எவ்வளவு சாதிக்க முடிந்தாலும் அதில் சில தங்கு தடைகளை ஏற்படுத்துவது ஆண்கள்தான். அதையும் தாண்டி இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது சாஸ்த்ரி பவனில் அம்பேத்கார் சிலையை வைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்... அதற்கு இந்த அமைப்பு பெரும் துணையா இருக்கு.. இவை எல்லாத்தையும் சாதித்த மணிமேகலை நானொரு தலித் பெண் என்று சொல்ல பெருமைப்படுகிறேன் என்றும் மிக தன்னடக்கமாகவும்., , எல்லாவற்றுக்கும் இயக்கத்தினைக் கை காட்டுகிறார்..

இப்படி ஒரு நிறுவனத்துக்கு ஒருவர் இருந்தால் போதும் .என்பது எல்லா பெண்களுக்கும் ஒரு விடிவெள்ளிதான்.


மணிமேகலையை என் தோழியாக இணைத்த அன்புத் தங்கை கீதா இளங்ககோவனுக்கு நன்றி..:)

வியாழன், 17 மார்ச், 2011

புகைப்பூக்கள்..

புன்னகையை மட்டும் கண்டிருக்கும் பெண்களின் இதழ்களில் புகைப் பூக்களைப் பார்த்தால் எவ்வளவு அதிர்ச்சியாயிருக்கும்..
அமிதிஸ்டில் காபி அருந்தச் சென்ற என் அன்புத் தங்கை கயல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக சிகரெட் பிடித்த இரு பெண்களைக் கண்டு என்னிடம் பகிர்ந்த வருத்தம்தான் இந்த புகைப்பூக்கள்.

மிக அழகான நேர்த்தியான பெண்கள் இருவர் வந்திருக்கிறார்கள். சுடிதார் போட்டு அழகான கூந்தலோடு .. அமிதிஸ்டில் காபி(யே விலை அதிகம்)., சிக்கன் பர்கர்., சாண்விச் என வாங்கி சாப்பிட அமர்ந்த போது இந்தப் பெண்கள் கண்ணில் பட அடுத்து இவர்கள் செய்த காரியம்தான் கயலை இவ்வளவு பேச வைத்தது..

ஹேண்ட்பாகிலிருந்து அடுத்தடுத்து சிகரெட்டும் லைட்டரும் எடுத்து ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி புகைத்திருக்கிறார்கள்.. கிட்டத்தட்ட ஆளுக்கு ஆறு ஆறு சிகரெட்டுகள்.. புகை உடலுக்கு பகை என அங்கே போர்டு இல்லை போல.. அடுத்தவர் உடல் நலத்துக்கும் தீங்கு என நினைக்காமல் வேறு ..

இங்கு நான் இந்திய கலாசாரம்., தமிழக கலாசாரம் பற்றியெல்லாம் பேசவில்லை.. உடல் ஆரோக்கியம் பற்றி பேச நினைக்கிறேன்.. அந்தப் பெண்களின் அப்பா அம்மாவின் பொறுப்பற்ற தன்மை பற்றி.. பேச நினைக்கிறேன்..

ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் பான் பராக்., சிகரெட்., ஆல்கஹால் என அடுத்து அடுத்து வேண்டாத பழக்கங்களைப் பழகிக் கொள்வது என்பது தனக்குத்தானே செய்து கொள்ளும் தீமை..

இதில் பெண்ணுரிமை., சுய உரிமை ., சம உரிமை எல்லாம் இல்லை.. தேவையில்லாத ஹெல்த் ஹசார்ட்.. கர்ப்பம் தரிக்கும் போது நிகோடின் குழந்தையை பாதிக்கும். வாய் ., தொண்டை., நுரையீரல் என தாக்கும் புற்று நோய்களுக்கு முதன்மையான காரணம் புகையிலை.. புகையிலையை எந்த வடிவத்திலும் பயன்படுத்தவே கூடாது..

முதலில் ஃபன்னுக்காக பழகுவது., தோழமைகள் மத்தியில் கெத்துக்காக தொடர்ந்து செய்வது என பழகி பின் குறிப்பிட்ட நேரம் வந்தால் காஃபி குடிப்பது போல இதுவும் பழகி விடும். காஃபின் கூட கெடுதல்தான் அதிகமானால்.. நிகோடின் ரொம்பக் கெடுதல்.

தனக்கு மட்டுமில்லாமல் சுற்றி இருப்பவருக்கும் மற்றும் தான் சுமந்து பெறப்போகும் வருங்கால சந்ததிக்கும் பெரும் கேடு செய்வதே இந்தப் பழக்கம். தனிமை., பெற்றோருடன் கோபம்., சம்பாதிக்கும் திமிர் ., கட்டுப்படுத்த ஆளில்லாத நிலை., கையில் பெரும் பணம் பாக்கெட் மணியாக புழங்குவது இதுதான் இந்த பழக்கம் வர காரணம்..

பிள்ளைகளுக்காக உழைக்கும் பெற்றோர் அவர்களுக்கு தனியறை., டி வி ., லாப்டாப்., செல்போன் ., கார்., என பலதும்கொடுத்து பாக்கெட் மணியாக நிறைய பணமும் கொடுக்கிறார்கள்.. எது கொடுத்தாலும் என்ன செய்கிறார்கள் என அவ்வப்போது கவனிக்க வேண்டும். எந்த நேரம் சென்று எந்த நேரம் வருகிறார்கள்., நண்பர்கள் யார்., வெளியே நண்பர்களுடன் சென்றால் எங்கு தங்குகிறார்கள். தொடர்பு எண் என வாங்கிக் கொள்ள வேண்டும்..

போலீஸ்காரர் உத்யோகம் பார்க்காவிட்டாலும் அவ்வப்போது பிள்ளைகளின் டெஸ்க்டாப்., செல்ஃபோன் மெசேஜ்கள் ., அன்டைமில் போனில் பேசுவது யாரோடு, ஹாலிடேக்கு யாரோடு எங்கு செல்கிறார்கள் என செக் செய்து கொள்வது அவசியம்.

தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாகிவிடாமல் குழந்தைகளுக்கு நல்ல நண்பராயும்., அவர்களின் நண்பர்களுக்கும் நல்ல நண்பர்களாயும் பழகி எந்த ஒரு வித்யாசமான தொடர்பையும் கண்டறிய வேண்டும்.. உனக்காகத்தானே நான் இவ்வளவு சம்பாதிக்கிறேன் என ஒரு பழக்கத்துக்கு அடிமையாகிவிட்ட பிள்ளையிடம் சொல்வதை விட., அதன் முன்னாலேயே கவனிப்பது நல்லது. அப்படி ஆகிவிட்டாலும் தொடர்ந்து கவனம் எடுத்து குழந்தைகளோடு மனம் விட்டுப் பழகி அதை நீக்க பாடுபடவேண்டும்.

பிள்ளைகளாக பெற்றோரை பெருமையுறச் செய்யாவிட்டாலும் தலை குனிய வைக்காதீர்கள்.. கெட்ட பழக்கங்கள் ஒட்டகத்தைப் போல உள்ளே நுழைந்து உங்கள் உடம்பெனும் கூடாரத்தை காலியாக்கிவிடும். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளோடு கொஞ்சம் கவனம்., கொஞ்சம் அன்பு., கொஞ்சம் முக்கியத்துவம் ப்ளீஸ்.. அப்புறம்தான் நீங்கள் சேர்த்துவைக்கும் எல்லாவற்றுக்கும் அர்த்தம் உண்டு..

புதன், 16 மார்ச், 2011

மார்ச் மாத லேடீஸ் ஸ்பெஷலில் ஸாதிகா., சாருமதி., தமிழரசி.,வெங்கடேசன்., திருஷ்காமினி மற்றும் நான்..:)

மகளிர் சுய தொழில் கருத்தரங்கம்., கடன் உதவி விண்ணப்பம்னு கை கொடுத்து உதவிக்கிட்டு இருக்கு மகளிருக்கு நம்ம லேடீஸ் ஸ்பெஷல்.. இந்த மார்ச் மாதத்தில் மகளிர் சுய தொழில் பக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கு.. மகளிர் தின ஸ்பெஷலாச்சே..

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தன்னடக்கமாக சொல்லும் நம்ம ஸாதிகாதான் இந்த மாத ப்லாகர்.. அவங்க இடுகைகளில் ஒரு நேர்த்தி., அழகு ., இனிய எள்ளல் இருக்கும். அதன் ரசிகை நான்.. மகளிர் தின வாழ்த்துக்கள் ஸாதிகா ..:)

இதுல ஸாதிகா பத்து மேனேஜ்மெண்ட் பத்தி சொல்றாங்க.. அதுல நமக்கு பரிஞ்சுபேசுற ப்லாக் மேனேஜ்மெண்டும் உண்டு.. :) படிச்சா சொல்வீங்க ஸாதிகா நீங்க சொன்னது எல்லாம் வழிமொழிகிறோம்னு..:)

ரயில்வேயில் பணி புரியும் சாருமதி., தமிழரசி இவங்க ரெண்டு பேரும் மற்றும் செகரட்டேரியேட்டில் பணி புரியும் வெங்கடேசனும் ( இவர் பற்றி நம்ம பாலா சார் -- வாசுபாலாஜி ஒரு இடுகை போட்டு இருக்கார். படிங்க.. ) சேவைக்குன்னே பிறந்தவங்க.. ரோட்டிலேயும் ரயில் நிலையங்களிலும் மற்ற பொதுஇடங்களிலும் அநாதையாகவும் .,மன நிலை சரியில்லாமலும் இருந்த 600 நபர்களை காப்பாத்தி உரிய பாதுகாப்பு இல்லங்களில் சேர்த்து இருக்காங்க.. இந்த மகளிர் தின ஸ்பெஷலுக்கு மணி மகுடம் இவங்கதான்..இவங்க செய்த மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.. இன்னும் பல்லாண்டு வாழ்ந்து இவங்க மூவரும் இன்னும் பலருக்கு சேவை செய்ய வாழ்த்துவோம்.

கிரிக்கெட்ன்னு சொன்னவுடனே உங்களுக்கு எல்லாம் கிரிக்கெட் ஃபீவர் வந்துருக்கணுமே.. MD திருஷ்காமினி.. இவங்க பெண் கிரிக்கெட்டர். நம்ம நாட்டோட நம்பிக்கை நட்சத்திரம். இவங்க சகோதரி MD சுகராகமினியும் ஒரு வளர்ந்துவரும் கிரிக்கெட்டர். திருஷ்காமினியோட அப்பா திக்கேஷ் வா ஷங்கர் போல ஒரு அப்பா அமைஞ்சால் எல்லா பெண்களும் சாதிக்க முடியும்.. MD மினி சகோதரிகளுக்கும் அவங்களை ஊக்குவிக்கும் அவங்க அப்பாவுக்கும் சிறப்பு மகளிர் தின வந்தனங்கள்.. உலக அரங்கில் நம் நாட்டின் பெயரை ஒலிக்கச் செய்ய வாழ்த்துக்கள் MD SISTERS..:))
இவங்களை அறிமுகம் செய்து வைத்த சாஸ்திரிபவன் யூனியன் லீடர் மற்றும் எனது தோழி மணிமேகலைக்கும் ., என் அன்புத் தங்கை கீதா இளங்கோவனுக்கும் சிறப்பு நன்றிகள்..

செவ்வாய், 15 மார்ச், 2011

நா கொடுக்கு..


கொட்டிவிட்டு மட்டுமல்ல
விதைத்துவிட்டும் செல்கிறது
அடுத்த கோபத்தை..

கசாப்புக் கடைக் கத்தியாயும்.,
ரத்தம் ருசிக்கும் அடித்தண்டாயும்..
இரும்பு கலந்து..

வால் முறுக்கி.,
விரட்டும் மாடாய்..
வெருட்டும் அரவாய்..

புன்னகைக் கைப்பிடி..
பொருத்திய வளைவாள்
உதடெனும் நாதாங்கிக்குள்..

எச்சமிட்டு எச்சமிட்டு
எச்சில் அமுதம்
பல்லி எச்சமாய்..

அன்பு புனைந்ததான
உயிர்மெய்கள் உண்டு
எச்சில் தழும்பு..

தேவதைப் பலியும்
நரம்பறுக்கும் எருதும்
காமாக்கியா தெப்பமாய்...

வெட்டி விழுந்தாலும்
திரும்ப வளரும்
பல்லிவாலும் கருவைமுட்களும்..

திங்கள், 14 மார்ச், 2011

நரம்பறுந்த நிலம்...

நின்ற இடம்
அமர்ந்த இடம்
இருந்த இடம்
கிடந்த இடம்..

மண்சரிவில்
புதைந்த இடம்
மனிதர் வாழ்ந்த
உயிர்த்தடம்..

அணு வீச்சு.,
ஆழ்துளை...

கதிர் அறுத்து செருகிய
நூற்றுக் கட்டிடங்கள்..

முரணோடு
இயற்கை பேர்த்து
உயிர் சுழற்சிச்
சக்கரம் நிறுத்தி..

கண்டத்திட்டுகள்
நரம்பறுந்து
நகர்ந்து சென்று
நூலில் ஆடும்
பொம்மைகளாய்..

நீர் சரிந்து
மண் சரிந்து
உயிர் செறிந்த
நீர்ச்சமாதி..

யாழறுந்த வீணை
அபஸ்வரமாய்
பெருகுவதாய்
நரம்பறுந்து
நைந்த மகள்..
நிலம் எனும் நல்லாள்
அறியாதோர் ஆக்கிரமிப்பில்
அகலத் தோண்ட நகும்
ஆழத்தோண்ட வெகும்.

சனி, 12 மார்ச், 2011

கடல் உள்ளும் வெளியேயும்..


கடற்கரையோரம்
செல்லும் போதெல்லாம்
சுனாமியும்
சர்வதேச எல்லையுமே
நினைவை உறுத்தி..

காற்று வாங்க நினைத்து
காற்றோடு கலந்த
மூச்சை எல்லாம் உணர்ந்து..

சங்கு., சிப்பி., மணல் குத்த
அலைச்சத்தம் துரத்த
செயலற்ற பாதசாரியாய்த்
திரும்பி ஓடினேன்..
வீட்டுக் காற்றை சுவாசிக்க..

வெள்ளி, 11 மார்ச், 2011

எது என் எல்லை.. யுகமாயினி கவிதை..


கிறுக்கல்களும்.. கறைகளும்..
ஓலங்களும் நிறைந்த
சுவரருகே நிற்கிறேன்..
உத்தப்புரமோ.. பெர்லினோ..
உடைத்துத் தூளாக்க தூளாக்க..
வேறொரு புரம் வளர்ந்து நிற்கிறது..
எது என் எல்லை
என்றுணர முடியாது
என் ரத்தமும்.. மீன் ரத்தமும்
அப்பிய நீர்ச்சுவர்கள்..

டிஸ்கி :- இந்தக் கவிதை மார்ச்., 2011 யுகமாயுனி அச்சிதழில் வெளிவந்துள்ளது .. நன்றி யுகமாயினி..:-))

புதன், 9 மார்ச், 2011

பொம்மைக்காரிகள்..

கரடி பொம்மையின்


கைபிடித்து தரதரவென


இழுத்து வந்தது குழந்தை..



தரையில் கிடந்த


இன்னொன்றைப் பார்த்து


அதைக் கீழேயே விட்டு


இதைத் தூக்கியது..



கொஞ்சி சலித்தபின்


டீப்பாயில் இருந்த


மற்றொன்றை எடுத்தது..



அதற்கு சோறூட்டி


தூங்கப் பண்ணிய வேளையில்


அதிரடி சத்தத்தோடு வந்தார்கள்..


அதன் பொம்மைக்காரிகள்..



தூங்கிய பொம்மைகள்


விழித்துத் துள்ளின


எவ்விடம் இருப்பதென..



வலதும் இடதும் பற்றி


பொம்மைகளை


பொம்மைக்காரிகளிடம்


கொடுத்தபின் ..



தனது மட்டுமேயான


கரடி பொம்மையை


எடுத்து மார்போடு


அணைத்துக்கொண்டது குழந்தை..








நன்றி உயிரோசை..:)


செவ்வாய், 8 மார்ச், 2011

நன்றி என்னை உருவாக்கிய பெண்ணுக்கும்., ஊக்குவித்த ஆணுக்கும்..

திருமதி கிரிஜாம்மா.. லேடீஸ் ஸ்பெஷலின் ஆசிரியை..

என்னவென்று சொல்வதம்மா.. அன்னையவள் பேரழகை..

என்னை உருவாக்கிய தாய்., என் தமிழ் அன்னை எம் ஏ சுசீலா அவர்கள் மற்றும் என்னை இந்த அளவு சிறப்படைய் செய்த என் கிரிஜாம்மாவுக்கும் சிறப்பு மகளிர் தின வந்தனங்கள்..

திரு . செல்வகுமார்.. அவர் பட இயக்குனர்.. என் நண்பர்..
என் கணவர் ஒரு கணவராக என்னை ஊக்குவித்து இருக்கிறார்.. உறவுமுறையில் அப்பா., கணவர்., தம்பிகள்., பையன்கள் அனைவருக்கும் இந்த மகளிர் தினத்தில் என் நன்றிகள்.
ஆனால் நண்பர்களில் ஸ்பெஷல் பர்சன் என ஒருவர் உண்டு.. சோர்வுறும் போதும்., துன்பமுற்ற போதும்., எல்லாவற்றையும் எளிதாக எடுத்து கடந்து போக கற்பித்தவர். ஒவ்வொருவரது திறமைகளையும் அடையாளம் கண்டவர். மிக இனிய கனவான். இவரை நண்பராய் அடைய ., சகோதரராய் அடைய அனவருமே கொடுத்து வைத்து இருக்கவேண்டும்..
என்னை மட்டுமல்ல எல்லாரது திறனையும் கண்டுபிடித்து ஊக்குவிக்கும் நண்பர்., அவர் செல்வகுமாருக்கு இந்த மகளிர் தினத்தில் என் சிறப்பு வந்தனங்கள்..
மற்றும் பலர் இருக்கிறார்கள்.. அந்த அனைத்து நல்ல நண்பர்களுக்கும்., நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

திங்கள், 7 மார்ச், 2011

இஸ்திரிக்காரரின் மகள்..


இஸ்திரிக்காரரின் மகள்..:-
********************************

வீடு வீடாய்ச் சென்று படியேறி
உடுப்பு சுமந்து சுமந்து

பழுக்காய்கள் நீக்கி
வெள்ளாவி வைத்து

உவர்மண்ணில் துவைத்து
கரை மண்ணில் உலர்த்தி

பெட்டி போட்டுக்
காய்ப்பேறிப் போன கைகளை
நீவி விட்டுக் கொள்கிறாள்..

உடுப்பெடுக்கச் சென்ற
மாடி வீட்டு அம்மாவின்

வேலையற்றுச் சிவந்திருந்த
ரோஜாப்பூக் கரங்களைப்
பார்க்கும்போதெல்லாம்..

அப்போதெல்லாம்
அவள் கண்கள் கனலும்
இஸ்திரிப்பெட்டியின் கங்குகளாய்..

அதிகச் சூட்டில் தீய்ந்த
ஓட்டையாய்.. துளையிட்டுச்
செல்லும் பார்வையோடு..

சென்ற பின்னும் உடுப்புக்களில்
கறுப்புத் தீற்றலாய்..

அங்குமிங்கும் பறந்து கிடக்கிறது
அவள் கோபத்தின் சாம்பல்..


சனி, 5 மார்ச், 2011

குழுமக்கூட்டு....

குழுமக்கூட்டு:-
*****************************
வீட்டுக் கூட்டாயினும்
நாட்டுக் கூட்டாயினும்
பச்சைப் பயி(றா)ராய்க் கிடந்தாலும்
செம தாளிப்புதான்..

கூடா இடத்தில் கூடினால்
சீட்டும் அம்பேல்தான்
குறுகிக் குந்தவேண்டி வரும்..

சகோதரியாய் பேச்சும்
அண்ணி., மாமியாய்
ஏச்சும் போனசாய்..

பிடித்தால் கூட்டு
பிடிக்காவிட்டால் துவட்ட(ல்)
வேண்டியதுதான்..

புன்னகைத்தபடியே
பிரட்(டல்)டுவது எப்படி
என அறிந்து ,

வறு(வ)த்தலும்
பொரி(ய)த்தலும்
வகுப்பில் படிக்காமல்

விறைச் சோறாய்
சேராமல் இருக்கக்
கற்றுக் கொள்வீர்கள்..

நாளடைவில்
வத்(தக்குழம்பு)திப்போவீர்கள் ..
அல்லதுதெளிந்த ஞானரசமாவீர்கள்..

விருந்துண்ண என
வந்துவிட்ட பிறகு
பாயாசமிட்டாலும்
பாய்சனாக எண்ணாமல்

கொழுமோர் காய்ச்சிக்
குடியுங்கள்
பயமடங்க..

இதெல்லாம் கடக்காவிட்டால்
கூட்டிலிருந்து எப்போது கொட்டும்
குளவியாகக் கற்பீர்கள்..

வெள்ளி, 4 மார்ச், 2011

பூவாய் நீ...

சின்னஞ்சிறு பூக்களாய் விரிந்து கிடக்கிறது நினைவு.. உன்னையும் ஒரு பூவாய்த்தான் பார்த்தேன்.. முள்ளோடு கூடிய பூ.. அதற்குத்தானே கிராக்கி அதிகம்.. நீ புன்னகைத்ததை விட குத்தி காயமாக்கியதே அதிகமாய் இருக்கும்..

அடர் வனமொன்றில் கேட்பாரற்று அலையும் யானையைப் போலிருந்தேன்.. எனக்கு மதம் கொண்டதென்று எதிர் வரவில்லை யாரும்.. நீ வந்தாய் ஒரு தேனீயாகவோ குளவியாகவோ கவனம் சிதைத்தாய்.. உன்னைத் தும்பிக்கையில் வசமாக்கிவிட வீசித் துரத்த வைத்து.. கண்மண் தெரியாமல் காடுகரை மேடு எல்லாம் ஓட வைத்து., களைத்து நான் அமரும் போது காதுக்கருகே வந்து “நொய்ங்ங்” என்கிறாய்..

நான் திரும்பிப் பார்க்கையில், கிட்டே வந்து விடுவேனோ என வேங்கையின் உருவம் எடுக்கிறாய்.. நான் உடனே ஒரு சிறுத்தையாய் மாறி உறுமுகிறேன்.. சட்டென்று மறைந்து போகிறாய்..

”நான் செடியில் இருப்பேன்., பூப்பேன் .. மலர்ந்து கிடப்பேன்.. மரிப்பேன்... ஏன் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்.. உன் பார்வை எனக்கு இம்சையாய் இருக்கிறது .. பார்க்காதே.. என் முட்கள் கூட மலராகும் அபாயத்தில் உன்னைப் பார்த்து அலறுகிறேன் .. போ போய்விடு.. உன் வேலைகளைக் கவனி.. உன் அன்புப் பார்வை ஏற்படுத்தும் இம்சைகளை நீ அறிய மாட்டாய்.. நான் நானாக இருக்க முடியவில்லை.. என் இயல்பற்றுப் போகிறது.. நீ இருந்தால் மற்ற வண்டுகள் கூட வரவில்லை என்னை அண்டி.. நான் உனக்கு மட்டுமல்ல. தோட்டம் முழுமைக்கும்... அதோ அந்த வண்ணாத்திப் பூச்சிக்கு., தேன் சிட்டுக்கு., கரு வண்டுக்கு., தேனீக்கு .. “ என்கிறாய்..

என்னை இழுத்துப் போர்த்தும் முயற்சியில் தீபமற்றும் மரிக்கும் மெழுகாய் உள்செல்கிறேன்.. எனக்கு இரங்கல் தெரிவிக்க விட்டிலாய் அருகே வருகிறாய்.. உன்னைக் காணும் ஆவலில் திரும்ப நான் வெளிவர நீ என் கணப்பில் குளிர் காய்கிறாய்..

சூரியனாய் இருந்தாலும் உன் முகம் பார்க்கும் திசையில் உதிக்க விரும்புகிறேன்.. நிலவாய் இருந்தாலும் உன் ஆம்பல் தலை தழுவும் வெண்காற்றாய்.. உன் மென்மையான இதழ்களை நீ கோபிக்காத சிலசமயம் தொட்டுப் பார்க்க நினைக்கிறேன்.. பார்த்தவுடனே நிறைவடைந்து விடுவதால் பக்கம் வரக் கூடத் தோன்றுவதில்லை.. நம் இறையாண்மையைக் கெடுக்க வேண்டாமென்றுதான்..

என்னை பார்த்ததும் வேர்க்கிறது உனக்கு.. மெய்க்காப்பாளன் போல தெரிகிறேன் உனக்கு ., தொடரும் அன்பை பி்ய்த்துப் போட முயல்கிறாய்.. என் அன்பை முகமூடியாய் வெறுக்கிறாய்.. விட்டால் விட்டு விட்டு ஓடும் ஆசையும் இருக்கிறது.. ஆனாலும் வேரைப் போன்று ஏதோ ஒன்று உன்னை பிடித்து என்னை விட்டு ஓடாமல் செய்கிறது.. ரத்தமும் சதையுமாய் பதிந்து போய் இருப்பது உணர்கிறாய்.. பின்னெப்போதும் விட்டுப் போகும் ஆசையை வளர்க்கவில்லை நீ..

சிலசமயம் புன்னகைத்தபடியே கிடக்கிறாய்.. போகட்டும் என உன் புன் முறுவலை பொன்னிற வெய்யிலில் சுற்றித் தருகிறாய்.. நானும் தினம் பெற்று என் இதயத்தில் அடுக்குகிறேன்.. ஸ்பரிசிக்கத்தூண்டும் ஆசையும்
வேகமும் அடங்கிவிட்ட மனதில் தினமும் பூத்துக் கிடக்கிறது ஒவ்வொரு புன்னகையும் அஜந்தா சித்திரமாய்..

தில்லியின் முகல் கார்டனிலாகட்டும்., ஏற்காடு., கொடைக்கானலாகட்டும் எந்தக் குளிரிலும் பூத்திருக்கும் உன்னைத்தேடி வருகிறேன்.. ஒரு பொது ரகஸ்யத்தைப் போல நீயும் கிசுகிசுத்தபடியே மலர்ந்து கிடக்கிறாய்.. உன்னைப் பார்க்கும் போதெல்லாம் தோழியாயோ ., தாயாயோ உணர்கிறேன் என்னை..
பாசம் என்பதும்., காதல் என்பதும் ., அன்பு என்பதும்., உறவில்மட்டும்தானா.. நட்பில் இல்லையா என்ன.. தன்னுடையதான., தனக்கு மட்டுமேயான என்ற எண்ணம் எப்போதும் ஏற்பட்டதேயில்லை எனக்கு..

உன் வாழ்வை,., இருப்பை., நம் உறவை ரசிக்கிறேன் நான்.. உன்னைச் சுற்றி காற்று தழுவினாலும்., பனி பெய்தாலும்., நிழல் அணைத்தாலும்., வெய்யில் கதகதத்தாலும்., மழை ஊடுருவினாலும்., பூச்சிகள் வண்டுகள் தேனெடுத்து உறிஞ்சினாலும்., ஒரு பார்வையாளராகவே இருக்கிறேன்.. நீ இருக்கிறாயா ., நன்றாக இருக்கிறாயா., தேவையான நீரருந்தி., பூரித்து ., விகசிப்போடு என்பது மட்டுமே என பார்ப்பதே என் தினசரி வேலையாய் இருக்கிறது.. உன் விருப்பங்கள் ., ஆசைகள்., தேவைகள் நிறைவேறி வருவதையே தோட்டக்காரனைப் போல ரசனையோடு பார்க்கிறேன்.. என்ன அழகு நீ .. எந்த இடத்திலோ இருக்க வேண்டிய வரம்.. என் வீட்டுத்தோட்டம் செய்த பாக்கியம்.. உன் விருப்பம் தீரும் காலம் வரை நீ இரு..

அவ்வப்போது பார்த்துக் கொள்கிறேன் .. தோட்டத்தில் யாரும் பறித்து விடாமல்.. ஓடும் சிந்தனைகள் உனக்கும் முதுமை வரும் என்கிறது.. உன் இதழ்கள் ஒவ்வொன்றாய் உதிரலாம்.. வெளிறலாம். குச்சியைத் தாங்கி காய்ந்த மகரந்தங்களோடு நீ நிற்கலாம்.. அப்போதும் உதிர்ந்த உன் மகரந்தத் துகள்கள் இன்னும் பல பூக்களை உருவாக்கும்.. அவற்றில் சுவாசத்திலும்., வாசத்திலும் என் தோட்டமே மலரும்..

நிறைய பூக்களும் பிள்ளைகளும் விளையாடி மகிழ்வார்கள். பூக்களின் முட்கள் பற்றியோ., வண்டுகள் பற்றிய கவலையோ அன்றி..

நிறைவடைந்து விட்டதாய் தோன்றும் நேரம் வரும்.. நீ செல்ல வேண்டிய அக்கணம் நானும் மரித்துவிடுவேன் என்றே தோன்றுகிறது.. பின் என் உடலின் மீது அப்போதாவது அலங்கரிக்கப் போகும் எனக்கான ஒற்றைப் பூ நீதானே... உன் தேன் துளியை கண்ணீராய் சேர்த்து வை என்மேல் சிந்த..

டிஸ்கி:- ரூஃபினாவுக்காக..

வியாழன், 3 மார்ச், 2011

கணவன் மனைவி கிரிக்கெட்.. சிக்ஸர்...

கொஞ்சம் விடுமுறையும்.,
கட்டிக்கொள்ள (கத்தாத) கறுப்பியும்
கிரிக்கெட்டும் சுகமே சுகம்..

உன் கருவிழிப் பந்தடித்து
க்ளீன் போல்டாகினேன்
எச்சரிக்கை இல்லாத நான்..

ரன் அவுட்., விக்கெட் தப்பி.,
காலில் அடிபட்டு (LBW)
அவுட்டான நான்..
முதுகுத்தண்டு மட்டை
வயிற்றுப்பந்தை
அடித்துக் கொண்டிருந்தது
உன் பார்வை பட்டு....
ஆறதெற்கு ஒரேயொரு
பார்வைப்பந்து போதும்
என் ஹாங்க் ஓவருக்கு
மட்டையாயும்., விக்கெட்டாயும்.,
க்ளவுசாயும்., ஃபீல்டாயும் நீயிருக்க..
எல்லா இடத்திலும் உருளும் பந்தாய் நான்..
நோ பால்:-
காட்ச் பிடித்து பிடித்து
ஃபீல்டுக்கே அனுப்புகிறாய்..
அடுத்தும் என்னை கொத்தோடு காட்ச் பிடிக்க..
மெய்டன் ஓவர்.:-
எத்தனை வருடம் மெய் வருந்த வருந்த
ஓடினேன் ஓடினேன் உலகத்தின் ஓரத்துக்கே
ஒரு ரன்னாவது விடு ..
மொத்தமாய் ஓட..