வெள்ளி, 31 டிசம்பர், 2010

அடைப்பு..

அவென்யூவின்
நாற்சதுரப் பள்ளங்களில்
அடைப்பெடுக்க
ஆள் தேடி..

இறங்கிக் கறுப்பாகி.,
இடுக்கெல்லாம் குத்தி..
மயிற்கற்றையும்.,
பஞ்சுக் குப்பையும்.,
அள்ளிப் போட்டவனுக்கு...,

ஆயிரத்தை ஐநூறாக்கி
அனுப்பிய பின்..
கறுப்புத் திட்டாய்
நாறிக் கிடக்கிறது..

வயிற்றுப் பசியோடு
வந்த அவனை
இறக்கி விட்டதற்கான
உறுத்தல்..

டிஸ்கி:- இந்தக் கவிதை வியாழன் 30., டிசம்பர்., 2010 கீற்றுவில் வெளிவந்துள்ளது..

திங்கள், 27 டிசம்பர், 2010

ஆஸ்டியோ போரோசிஸ்.. ஒரு விழிப்புணர்வு.. டாக்டர் வேல்ராணி..



நம் நாட்டில் ஆறு கோடிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நோய் ஆஸ்டியோ போரோசிஸ்.. காரணமே இல்லாமல் கை முறிஞ்சிருக்கு என கட்டுப் போட்டிருக்கும் என் தோழி சொன்னார்.. காரணம் எலும்புத்தேய்மானம்.. ஆஸ்டியோ என்றால் க்ரீக்கில் எலும்பு. போரோஸ் என்றால் ஓட்டை உண்டாவது. ஒரு வீட்டின் மரக்கதவுகள்., நிலைச்சட்டம் இவற்றில் இருக்கும் மரம் உள்ளுக்குள்ளே கரையான் அரித்து உளுத்துப்போய் விட்டால் வலுவிழந்து விடுவது போல் மனித உடலில் எலும்புகள் கால்சியம் குறைபாட்டால் அடர்த்தி குறைந்து விடுவதால் முறிந்துவிடுவதுதான் எலும்புத்தேய்மானம் என்ற ஆஸ்டியோ போரோசிஸ்.


சென்னையில் இருக்கும் சுபம் நர்சிங்ஹோமில் பெண்களுக்கு ஆஸ்டியோ போரோசிஸுக்காக ஒரு நாள் இலவச சிகிச்சை முகாம் பக்ரீத் அன்று நடத்தப்பட்டது. அங்கு சென்று டாக்டர் வேல்ராணி அவர்களிடம் நம் வாசகியருக்காக ஆஸ்டியோ போரோசிஸ் பற்றி தகவல்கள் தந்துதவி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டோம். டாக்டர் கூறியவற்றை தொகுத்துள்ளேன்.


எலும்பின் அடர்த்தி 30 வயதுக்குப் பிறகு குறைய ஆரம்பிக்கிறது. எலும்புக்குள் இருக்கும் பல்ப் வயசு ஆகக் குறையும். எனவே எலும்பின் அடர்த்தி குறைந்து வலுவிழக்க ஆரம்பிக்கிறது. இதில்


1. ப்ரைமரி டைப் 1 மற்றும்

2. ப்ரைமரி டைப் 2 மற்றும்

3. செகண்டரி ஆஸ்டியோ போரோசிஸ் என மூன்று வகை உள்ளது.


ப்ரைமரி ஆஸ்டியோ போரோசிஸ் டைப் 1 என்பது போஸ்ட் மெனோபாஸுவல் ஆஸ்டியோ போரோசிஸ்.. அதாவது மாத விடாய் நின்ற பிறகு கிட்டத்தட்ட 45 வயதில் வருவது. மேலும் கர்ப்பப்பை எடுத்த பெண்களுக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாடு காரணமாக இது வரும்.


ப்ரைமரி ஆஸ்டியோ போரோசிஸ் டைப் 2 அல்லது செனைல் ஆஸ்டியோ போரோசிஸ் என்பது 75 வயது உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்குமே கூட 2:1 என்ற சதவிகிதத்தில் வருவது.


செகண்டரி ஆஸ்டியோ போரோசிஸ் என்பது எந்த வயதிலும் வரக் கூடியது. ஆண்., பெண் இருபாலாரையும் பாதிக்கக் கூடியது. இந்த வகை வரக் காரணம் நாட்பட்ட நோய்க்காக எடுத்துக் கொள்ளும் சில மருந்துகள். ஆஸ்டியோ போரோசிஸ் வந்தால் நம் வாழ்க்கைத் தரத்தைப் பாதித்து எதற்கும் அடுத்தவரை எதிர்பார்க்கும் சூழலைக் கொண்டு வரும். வாழும் ஆவலைக் குறைக்கும். சந்தோஷத்தோடு வாழ்வதற்குப் பதில் வலியோடும்., மாத்திரைகளோடும் வாழும் படி ஆகிவிடும். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது.


சரியான ஆகாரம் எடுத்துக் கொள்ளாமலிருத்தல்., அதனால் ஏற்படும் கால்சியம் குறைபாடு., எக்சர்சைஸ் செய்யாமலிருத்தல்., வெய்யில் நம் உடம்பில் படாமல் இருத்தல்., இது எல்லாம் இதை உருவாகும் காரணங்கள்..


கோலா போன்ற பானங்களை அதிகமாக எடுத்துக் கொள்வதும் உடலில் பொட்டாசியக் குறைவை ஏற்படுத்தி எலும்பு வலுவிழக்க காரணமாகிறது. அதனால் போன் டென்சிட்டி( எலும்பு அடர்த்தி) குறைந்து கூடு மாதிரி ஆகிவிடும். பீர்க்கங்காய்க் கூடு பார்த்திருப்பீர்கள் வெறும் நாராய்.. அது போல் ஆகிவிடும். லேசாக எங்காவது இடித்துக் கொண்டாலே ரொம்ப வலிக்கும். சட்டென்று உடையக்கூடிய தன்மை இருக்கும். இருப்பது தெரியாமல் முறிந்தபின்தான் தெரியும்., இது எலும்புத் தேய்மானம் என்று. இதுதான் சிம்ப்டம்.


ஒபிசிட்டி எனப்படும் உடற்பருமனும் ஒரு காரணம். பெரியவர்களுக்கு உயரம் குறைவு ஏற்படுவதும் இதனால்தான்., ஸ்பைனல் போன் ஷார்ட்டர் ஆவதால்தான். முக்கியமாக ( WEIGHT BEARING PARTS ) ( இடுப்பு., கால் பாகம் ) இடுப்பெலும்பு ., கால் எலும்பு., மணிக்கட்டு எலும்பு இவற்றில்தான் ஏற்படுகிறது முறிவு.


தொடர்ந்த இடுப்புவலி இருந்தால் பார்க்க வேண்டும். இதனால்தானா ., வேறு காரணமா என்று. கழுத்து வலி., மூட்டு வலி., குதிகால் வலி தொடர்ந்து இருந்தாலும் பார்க்க வேண்டும். பொதுவாக 40 வயது ஆகிவிட்டாலே இரண்டு வருடத்துக்கு ஒரு முறை ஹெல்த் செக்கப் செய்து கொள்வது நல்லது.


இரண்டு டெஸ்ட்டுகள் செய்யப்படுகின்றன. (BMD TEST ) போன் மாஸ் டென்சிட்டி டெஸ்ட் ., ப்ளட்டில் கால்சியம் ., இரும்பு சத்து ஆகியவற்றின் அளவை சோதிக்கும் டெஸ்ட்.


இது வந்துவிட்டால் அதிகம் படிகளில் ஏறாமலிருப்பது., தசைகளை முறுக்கி செய்யும் எக்சர்சைஸுகளை செய்யாமலிருப்பது., வெஸ்டர்ன் டாய்லெட் உபயோகிப்பது., சமதரையில் சிறிது தூரம் நடப்பது., நாற்காலியில் அமர்வது என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும்.


ஆரம்ப நிலையில் வலி நிவாரண மருந்துகள்., மூட்டுக்களை வலுப்படுத்தும் பிஸியோதெரபி., பயிற்சிகள் தரப்படும். அடுத்த நிலையில் ( KNEE CAPS., KNEE BRACE ) மூட்டுமேல் போடப்படும் உறைகள் போட்டுக் கொள்ள வேண்டும். முற்றிய நிலையில்தான் ஹிப் ரீப்ளேஸ்மெண்ட்., நீ ரீப்ளேஸ்மெண்ட் ( HIP REPLACEMENT ., KNEE REPLACEMENT ) போன்ற அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.


பால்., சோயாபீன்ஸ்., மொலாசஸ்., முட்டைக்கோஸ்., லோ ஃபாட் மில்க்., அதிகம் நார்ச்சத்துக்கள் உள்ள அனைத்துக் காய்கறிகளும்.. கீரை மட்டுமல்ல., எல்லா நிறக் காய்களும்., ( பச்சை ., ஆரஞ்சு., சிவப்பு., மஞ்சள்) மற்றும் பழங்களும் முக்கியமா ப்ரோட்டீன் அதிகமுள்ள முளைவிட்ட பயறு வகைகள்., முட்டை., காளான்., தானியங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஃபாட் ஃப்ரீ டயட் இருக்கணும். எண்ணெய் ., கொழுப்புச்சத்து குறைக்கணும். விட்டமின் கே மற்றும் டி மற்றும் கால்சியம் உள்ள உணவு வகைகள் அவசியம். அதிக உப்பு., இனிப்பு குறைப்பது அவசியம். ட்ரை ஃப்ரூட்ஸ் நல்லது. காட் லிவர் ஆயிலும் சாப்பிடலாம்.


ஆல்கஹால் அருந்தும் பழக்கம் ., சிகரெட் புகைக்கும் வழக்கம் இருந்தால் விட்டுவிடுவது நல்லது. ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. முறையான உணவுப் பழக்கம்., சரிவிகித உடற்பயிற்சி., நடைப் பயிற்சி., கால்சியம்., விட்டமின் டி., கே உள்ள உணவு., சூரிய ஒளி நம்மேல் சிறிது நேரமாவது படுதல்., நார்மல் வேலைகள்., இவைகளை செய்து ஹெல்த்தி லைஃபை வாழ்வது நம் கையில்தான் உள்ளது.




டிஸ்கி 2 :- பின்பற்றுபவர்கள் 250 ஆனது குறித்து மகிழ்ச்சி. என்னை படித்தும்., தமிழ் மணம்., இண்ட்லியில் வோட் செய்தும் ஊக்குவிக்கும் அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றி.. ! நன்றி !!..

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

மன்மதன் அம்பு .. எனது பார்வையில்..

HONESTY BECOMES LUXURY.. ஆம் பொய்யர்கள் நிறைந்த உலகில் உண்மை விலை உயர்ந்ததாகிவிட்டது.. இதுதான் மெசேஜ்.. இரண்டு உண்மையாளர்கள்., (ஒத்த குணமுடையவர்கள்.,) மட்டுமே ஒத்துப் போக முடியும்.. பொய்யோடு பொய்யும்., மெய்யோடு மெய்யும்.

புலம் பெயரும் பறவைகள் செல்லும் போதெல்லாம் ஒரு நிம்மதியின்மை பரவுகிறது.. இருக்கும் இடம் சுகமில்லை என்பதால்தானே.. அப்போது த்ரிஷாவும்., இன்னொரு இடத்தில் கமல்ஜியும் பார்க்கும் சோகப் பார்வை க்ளாஸ்..

பாப்ரே.. கதை., திரைக்கதை ., வசனம்.. பாடல்கள் கமல்ஜி.. WHO IS DA HERO.. பாடலும் நீல வானம் பாடலும் அருமை.. க்ரூஸில் சுற்றுவது., வெனிஸ் ., ரோம் என்ற சாமானியன் சுற்ற விழையும் கனவு தேசங்களை வஞ்சனையில்லாமல் வாரி வழங்கி இருக்கிறது மனுஷ்நந்தனின் காமிரா.

தேவிஸ்ரீ ப்ரசாத்தின் இசை என்றால் ஒரு துள்ளல் இருக்கும்.. இதில் ம்ம் இருக்கு.. ரமேஷ் அரவிந்தானா அது.. ஊர்வசி அழவே பிறந்தவர் போல .. நல்ல வேளை க்ளைமாக்ஸில் சிரிக்கிறார்.. (முடிக்கணுமே.. படத்தை) .

ஆமா ஹெச் ஐ வி க்கு மருந்து கண்டு பிடிச்சிட்டாங்கன்னு படிச்சேன்.. இதுல கான்சரை குணப்படுத்திடலாம் .. ஹெச் ஐ வியை குணப்படுத்த முடியாதுன்னு சொல்றாங்க.. கொஞ்சம் விசாரிச்சு சரியான தகவலை சேர்த்து இருக்கலாம்.

ரவிகுமார் அவர் படத்துல ஒரு சில சீன்லயாவது வருவார்.. ரவிக்குமார் சார் உங்க படம் அருமை.. ஆனா இன்னும் கொஞ்சம் பாக்ட் ஆ இருக்கும் உங்க படம்.. பாண்ட் சட்டை போட்ட பேய் பிசாசு மாதிரி ராத்திரி பகல்னு பார்க்காம வேலை பார்ப்பார்னு உங்களைப் பற்றி நண்பர் சேரன் தன்னுடைய கட்டுரையில் புகழ்ந்து இருப்பார்..

மாதவன் சந்தேகப்படுறதும்.. ஏதாவது நெகட்டிவ் மோட்டிவ் தேடி அலையிறதும்.. கொஞ்சம் வித்யாசமான ரோல்.. அலை பாயுதே., ரன்., மின்னலே., பார்த்தாலே பரவசம் இதைப் போல மாதவன் இதிலும் தன் ரோலை கச்சிதமா செய்து இருக்கார்.. மேடி.. மேடி.. :))

கொலோசியத்தில் கமல்ஜியால் அடக்கப்படும் காளையா வரும்போது முகபாவனை நடிப்பு செம சூப்பர் மதன்.. (மாதவன்)..

த்ரிஷா., தமிழை உற்றுக் கவனிக்காட்டா என்ன பேசுறாங்கன்னு புரியலை.. குரல் நல்லா இருக்கு.. லைவ் டப்பிங்ன்னு சொல்றாங்க .. அது காரணமா..? த்ரிஷாவும் நல்ல ஸ்லிம் நிஷா,,.. அவர் தன் விடுமுறையை கழிக்க தோழியுடன் சிட்னி போவதாக குமுதமோ., விகடனிலோ படித்ததால் அதே ஞாபகம் வருகிறது.. எத்தனை வருடமாக இப்படியே ஸ்லிம்மாக இருக்கிறார்.. நல்ல உயரம்.. இதே இவர் கம்பீரத்துக்கு காரணம்..

சங்கீதா சொல்லவே வேணாம்.. இந்தப் படத்துல என்னைக் கவர்ந்தவங்க இவங்க.. பிதாமகன்ல வெற்றிலை போட்டுகிட்டு., தன் ஃபோட்டோவை விக்ரம் கிட்ட காட்டும் போது லேசா வெக்கப் படுவாங்க.. இதுல எல்லாம் அதிரடி.. சரவெடி.. நல்ல கிளாமரா இருக்காங்க.. ரொம்ப காஷுவலா நடிக்கிறாங்க .. பேசுறாங்க.. அப்பிடியா அப்ப இந்த காமிராவை பிடிச்சுக்குங்கன்னு தூக்கி தண்ணியில போட்டுட்டு ஐயையோ விட்டுட்டீங்களே என சொல்லும் போது செம குறும்பு..

அட நம்ம உஷா உதுப்.. மல்லிகைப் பூ பாடல் பாடினவங்க.. கச்சிதமான அம்மா.. மஞ்சு பிள்ளையும் நல்லா தன் காரெக்டரை நல்லா செய்து இருக்காங்க.. டிடெக்டிவ் மாதிரி செயல்படும் குட்டிப் பையனும் பொண்ணும்., அந்த சிலோன் ஜோடியும் அழகு.

ரெட் ஜெயண்ட் மூவீஸ்., உதயநிதி ஸ்டாலின் என்பதால்.. வஞ்சனையில்லாமல் நிறைந்த முதலீடோடு நல்ல படம்..

கடைசியா நம்ம பாஸ் கமல்ஜி.. கமல் ஜி.. பாடல்களில் ரிவர்ஸ் சீன்ஸ் எடுத்தவிதம் அருமை.. உங்க பாட்டு முடிவில் எங்க கண்களில் நீர்த்துளி.. கண்ணோடு கண் கலந்த பாடல் இல்லை.. அதனால் ஏதோ மிஸ்ஸிங்.. என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா என்ற பாடலில் ஒரு ரொமான்ஸ் இருக்கும். என்ன ஆச்சு.. கவனம் பல துறைகள்லயும் செலுத்த வேண்டியதாலா..

நைரோபியில் இருந்து வந்த எங்க தோழி காஞ்சனா மோகன் என்னிடமும் விகடன் பொன்.காசிராஜனிடமும் சொன்னாங்க.. எவ்வளவு காண்ட்ரவர்ஸி வந்தாலும் நானும் என் கணவரும் ஒத்துப் போவது கமல் படம் பார்க்கும் போதுதான்.. அப்பிடின்னு.. நானும் அதையே வழிமொழிகிறேன்.. உங்க நடிப்பு., வசனம்., பாடி லாங்குவேஜ்., எல்லாம் அருமை.. உங்களைத் தவிர வேறு யாராலும் நடிப்பை இவ்வளவு அசால்டா தர முடியாது.. ஆனா இதில் நாங்க உங்களை ஏதோ கொஞ்சம் மிஸ் பண்றோம்..

இனி எனக்கு பிடித்த உங்க வசனங்கள்..

திறமை இருக்கவன் கிட்ட திமிர் இருக்கும்.. ஏன்னா அதுதான் அவன் வேலி..

இந்த உலகத்தை யாரும் யார் காலடியிலும் வைக்க முடியாது.. ஏன்னா ஒரு பிச்சைக்காரன் காலடியில் கூட அவன் உலகம் இருக்கு..

ஐ லவ் யூ பட் ஐ லவ் மை வொர்க் டூ.. எனக்கு அதுவும் முக்கியம்.. ( இதுக்காக உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஹேட்ஸ் ஆஃப் பாஸ்.. ஆமாம் ஒவ்வொரு பெண்ணுக்கும் குடும்பம்., குழந்தை., கணவன் போல அவள் காரியர் முக்கியம்.. )

MATRIMONY MAY NOT BE GOOD BUT ALIMONY IS GOOD..

அறம் பேசாதே.. அறம் செய்..

வீரனோட அழகு மன்னிப்பு.. வீரத்தோட உச்சம் அகிம்சை..

ஒரு முரட்டுக் காளையை வளைத்துப் பிடித்திருக்கிறீர்கள்.. கொஞ்சம்போக்குக் காட்டி.. அடுத்து எங்களுக்காகவே பஞ்ச தந்திரம்., தெனாலி., காதலா காதலா மாதிரி இன்னொரு படம் சீக்கிரம் கொடுங்க கமல்ஜி..

சனி, 25 டிசம்பர், 2010

சும்மா பறத்தலே சுகம்..

பறத்தலுக்காய்தானே சிறகுகள்...
கூடல் இன்பத்துக்காய்
அலகுகள் மருவி..

பசித்தாலும் புல் தின்னாப் புலி
புனுகுப் பூனை மருவுமோ..
வைப்பரில் ஈசல் அல்ல..

கவரி மானோ ., அன்றிலோ
யாத்ராவின் புத்தகத் தலைப்பே
செல்ல விளிப்பாய்..

குழலினிது யாழினிது
வதை இனிது., வனிதையும்..
வாதை விரும்பி..நீ..

குறித்து வைக்கப் படாத
இறக்கைக் குறிப்புகள்
ஜீவாத்மாக்களின் வாழ்வு..

பறத்தலின் சுகத்துக்கே
பறக்கும் பறவைகள்..
அறியும் சுதந்திரம்..

பதிவு செய்யும் திறன்
பரமாத்மாக்களுக்கே
வாய்க்கும்.

வாழ்க படைப்புலக
பரமாத்மாக்கள்..
வெல்க அவர் தம் படைப்பு..

செவ்வாய், 21 டிசம்பர், 2010

தேனீர் தாகம்.. முதல் பரமபதப் பாம்புகள் வரை.. எட்டு கவிதைகள்..

1. தேனீர் தாகம்..
**************************

சுப்ரபாதத்தோடு
கணவருடன் ஆறுமணிக்கு.,
பையனுடன் எட்டு மணிக்கு.,
பலகாரத்துக்குப் பின்
பத்துமணிக்கு.,

வேலைக்காரப் பெண்ணுடன்
பன்னிரெண்டு மணிக்கு.,
மாலை நாலுக்கும்.,
பின் ஆறுக்கும் கூட..

எப்போது ஆரம்பித்தது
என்று தெரியாமல்
நேரமற்றுத் தொடர்ந்து.,

நீர்ச்சத்தோ., சர்க்கரையோ
குறையும் போதெல்லாம்.,
கிடைக்கும் போதெல்லாம்.,
மாற்றம் வேண்டும் போதெல்லாம்.,

எழுதத் துவங்குமுன்.,
எழுதி முடித்தபின்.,
எல்லாரோடும்.,
தனியாயும்.,

சிந்தனையின் போது.,
கவலையின் போது.,
மகிழ்ச்சியின் போது.,
காரணமற்றும்.,

குடிகாரர்களைத் திட்டும்
போதெல்லாம் உள் கேலி.,
”நீ யாராம்... போடீ
தேனீர் குடிகாரி என்று..”

==============================

2. நானென்ற கம்பீரம்..
**************************

புதைக்கப் பட்டதற்காய்ப்
புதையாமல்
வெடித்து வேர்விட்டுத் தேடு..

முளை விரல் நீட்டி
சூரியக் கரம் பிடித்து
மேலேறு...

புல்லாகவோ.,
பெருமரமாகவோ.,
நானென்ற கம்பீரத்துடன்...

=============================

3. டெஃப்லான் தோசைகள்..
***********************************

தாமரைத் தண்ணீர்..
நீர்மேல் எண்ணெய்..
உறவுற்று உறாமல்..

நிலவொட்டிய வானம்..
ஒட்டில்லை..
உறவு உண்டு..

பேனாக் கத்திகளாய்..
பேனாக் கடத்திகள்..
ஆளற்ற அனைத்தும் தூக்கி..

விக்கிலீக்ஸ் காட்சி.,
சுவிஸ் வங்கி ஆட்சி.,
அசாங்கே சாட்சி..

தொலையும் தொடர்பில்
ஆளுமைகள் மாற..
ஆசையர்கள் மாற..

இரும்பு ., இண்டாலியம்.,
டெஃப்லானாய்த் தேய..

ப்ளாஸ்டிக் வீச்சத்துடன்..
டெஃப்லான் தோசைகள்..
எல்லார் தட்டிலும்..

==============================

4. நிசிப்பறவைகள்..
******************************

நிசியில் பறவைகள் சடசடக்க..
நெஞ்சக் காடு தேடி..
ரோமக் கூட்டுக்குள்..
முகம் தத்தி அமர்ந்து..
முத்த முட்டைகள் பொரித்து..

விடிந்ததும் தெரிகிறது..
பறவைகள் அமர்ந்த இடம்..
விலகிய ரோமச்சுள்ளிகளில்
கால்களின் நகக்கீறலோடு..

=============================

5. ஈரப்பூக்கள்...
***********************

ஈரம் கசியும் கன்னங்களை
திரும்பத் துடைக்கிறேன்..
கனவில் முத்தமிட்டாயோ..
முகமருகே குனிந்து
கண்ணீர் சிந்தினாயோ..
உன்னை நினைத்துக்
கிடந்த என் கண்ணீரோ..
மழை பெய்த சுவர்த்தடமாய்
ஈரப்பூக்கள் கன்னமெங்கும்..

=============================

6. குழந்தைப் பூ..
************************

நானும் கறுப்பு..
மனைவியும் கறுப்பு..
குழந்தைக்கு ஏன் குங்குமப்பூ..

==============================

7. மழைக் கேள்விகள்..
*******************************

குழந்தையின் கேள்விகளாய்
தொறுதொறுத்துக் கொண்டே மழை...
விடை தெரியாது ஓடுபவளாய் நான்..

சுவற்றில் ஆக்டோபஸ்களாகவும்..
அமீபாக்களாகவும் ஈரக்கால் பரப்பி..
சிலந்தியில்லா தண்ணீர் வலைகள்..

பயிர்களைப் போல
சுவர்களும் அழுகி பூசணங்கள்..
மாவுகளில் குளமற்ற ஆம்பல் பூத்து..

வகுப்பறை மேசைகள் ஈரம் கசிந்து..
புழுக்கமாய் வியர்வையா..
கருணையாய் ஊற்றா..

சில்வண்டுகளாய் ரீங்கரித்த மழை..
தவளையாய் தவ்விச் சென்றபின்..
கேட்பது அற்ற காதுகளுடன் நான்..

==================================


8. பரமபதப் பாம்புகள்..
****************************

மோட்டு வளையைப்
பார்த்துக் கொண்டே
கவலையற்றுப்
படுத்திருக்க..

தொட்டில் குழந்தையாய்..
இன்னுமொரு
பிறப்பு வேண்டி..

விடியலில் எழுந்து..
காலைக் கடன்
கழித்தும்., கழிக்காமலும்..

டப்பி சோறும்..
ஓட்டமும் நடையும்..
மின் வண்டித் தடமும்..
பேருந்துப் புகையும்..

வருடக் கணக்காய்
பல கை மாறி..
சரிபடுத்தப்படாத
தணிக்கைக் கணக்கும்..

நாளைக்கு வந்து
நச்செறியப் போகும்
தணிக்கை அதிகாரியும்..

கிடைக்கப் போகும்
குறைந்த நட்சத்திரங்களும்..
குடும்பக் கவலையும்..
கண்ணுக்குள் குழம்ப..

பள்ளிப் பருவக்
குழந்தையாய்..
குறைந்த மதிப்பெண் கனவில்
விழுந்ததாய் விதிர்த்து எழுந்து..

பரமபதப் பாம்புகளால்
சொர்க்க வாசல் அடைந்த நான்
மீண்டும் முதலில் இருந்து
அதன் வால் பிடித்து..

டிஸ்கி..1..:- நானென்ற கம்பீரம் என்ற கவிதை 20 . 12. 2010 உயிரோசையில் வெளிவந்துள்ளது... நன்றி உயிரோசை..

டிஸ்கி :- தேனீர் தாகம்., நானென்ற கம்பீரம்., டெஃப்லான் தோசைகள்., நிசிப் பறவைகள்.. ஈரப் பூக்கள்., குழந்தைப் பூ., மழைக்கேள்விகள்.. பரமபதப் பாம்புகள்.. இந்த எட்டு கவிதைகளும் 19. 12. 2010.. திண்ணையில் வெளிவந்துள்ளன.. நன்றி திண்ணை..:))

திங்கள், 20 டிசம்பர், 2010

புதிய இதயம்.. புதிய ஜீவிதம்..(3) உமாஹெப்சிபா...

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி .. இப்படித்தான் இருந்தார் உமா., நான் பார்க்கும் போது. ஆனால் அவருக்குள் ஒரு சிவகங்கைக் குளத்து துர்க்கையும் இருப்பது பின்தான் தெரிந்தது. வெளியே போராடி ஜெயித்தவர்கள் அநேகம். இவர் வெளியில் மட்டுமல்ல.. தன்னுள்ளும் போராடி ஜெயித்த மஹிஷாசுரமர்த்தினி..

உமா சென்னைவாசிதான் என்றாலும் பூர்வீகம் கடலூர். தாயின் கருவறையிலேயே நோய் சுமந்து வெளிவந்தவர் இவர். இதயக் கோளாறு..46 வயது உமா 20 வயதுப் பெண் போல இருக்கிறார். முகம் மலர சிரிப்பும்., அகம் மலர சேவைகளுமாய்.. இந்த நிலையை எட்ட அவர் எடுத்த பகீரதப் ப்ரயத்தனங்கள் எத்தனை எத்தனை ..


ஒரு சகோதரன் ., மூன்று சகோதரிகளுடன் மூத்தவராகப் பிறந்தவர் உமா. இவர் தாய் கங்காவிடம் டாக்டர்கள் இவர் பிறந்தவுடனே சொல்லி விட்டார்கள் இந்தக் குழந்தையின் வாழ்நாள் கம்மி. , மறந்து விடுங்கள் என்று.. மிகவும் வளர்த்தி குறைவாக நோஞ்சானாய்ப் பிறந்த இவருக்கு ஒரு காலகட்டத்தில் தனக்கு இதய வியாதி இருப்பது தெரிகிறது. ஆபரேஷன் கட்டாயம் செய்ய வேண்டிய காலகட்டம் அது. இரண்டு முறை ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப் பட்டிருக்கிறது.


முதல் சர்ஜரி 14 வயதில். இவருடன் 6 குழந்தைகளுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. பிழைத்தவர் இவரும் இன்னொருவரும் மட்டுமே. திருமண வாழ்வில் ஈடுபடவே கூடாது என டாக்டர்கள் அறிவுரை செய்து அனுப்பி வைக்கிறார்கள்.


எப்போதும் சுய இரக்கம்., கழிவிரக்கம் சூழ எல்லாருக்கும் நல்ல படிப்பு., நல்ல வாழ்க்கை., எனக்கு மட்டும் ஏனிப்படி என சுய பச்சாதாபம் வாட்ட ., கோபம் வந்து அனைத்திற்கும் கத்துவது., சண்டை போடுவது என வீட்டில் ரணகளம்தான். உடம்பில் ரத்த ஓட்டம் சரியில்லை. பெரிய பெண்ணாக ஆக முடியாது. ஆபரேஷன் செய்தாலும் ஆறு மாதம்தான் தாங்கும் என்று வார்த்தைகள் வேறு இவரை வெருட்ட., மன அழுத்தம் கூடி எப்போதும் சண்டைக் கோழியாகவே ஆகிவிட்டார்.


எல்லாரையும் திட்டுவது., என்னை ஏன் பெற்றாய்.. எல்லாருக்கும் நல்லா கல்யாணம் பண்ணி வை .. என்று அம்மாவிடம் கோபித்துக் கொள்வது., என உடல் வியாதியுடன் மனச்சிக்கலுடன் தாய் தகப்பனுக்கு முள்முடியாய்... உடனே தந்தை .” அவளை பேசாமலிருக்கச் சொல் “ என சத்தம் போடுவது. , தாயார் ,” மகளுக்காக விட்டுக் கொடுங்கள் “ என கெஞ்சுவது என ஒரே போராட்டமான வாழ்க்கை.


தான் ஏன் பிறந்தோம்., எதற்காக வாழ்கிறோம் என சுய பச்சாதாபம். எப்போதும் கத்திக் கொண்டிருந்தாலும் ., ஹார்ட் பேஷண்ட்., என்ன செய்வது என எல்லாரும் மன்னித்து விட்டார்கள்..


முதல் ஆபரேஷன் டாக்டர் சாலமன் விக்டர் செய்துள்ளார். கவர்ன்மெண்ட் ஹாஸ்பிட்டலில். தந்தை சரியான உதவி இல்லை. ஆசிரியரான அவர் சொல்லாமல் கொள்ளாமல் கிட்டத்தட்ட 4., 5 வருடங்கள் வீட்டை விட்டு சென்று விட்டார். அந்த சமயங்களில் உறவினர்களின் வீட்டில் தங்க நேரிட்டது.


வீட்டில்தான் அம்மாவுடன் சண்டை போடுவதே தவிர உறவினர்கள் வீட்டில் உதவியாக இருப்பது., அவர்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது., பள்ளி கொண்டு விடுவது என ரொம்ப பரோபகாரம்.


சேத்துப் பட்டு மெட்ராஸ் சேவா சதன் ஸ்கூலில் ஹாஸ்டலில் தங்கி தமிழ் மீடியத்தில் ஹிஸ்டரி குருப்பில் ப்ளஸ் டூ வரை படித்த பின் எக்மோர் ஹை ரோடில் சந்தோஷ் ஹாஸ்பிடலில் ரிசப்ஷனிஷ்டாக பணியில் அமர்ந்தார்.

89 இல் இருந்து 95 வரை அங்கே ஏழு வருடம். ஈசிஜி எடுக்க ட்ரைனிங்க் கொடுத்து இருக்கிறார்கள்.. திடீரென ஒரு நாள் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கியதும்., இவரின் அம்மா கங்காவை அழைத்து டாக்டர்கள் இன்னொரு சர்ஜரி செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதைக் கூறுகிறார்கள். உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்.., ஆபரேஷன் செய்தாலும் பிழைப்பது துர்பலம் என சொல்ல இவரின் தாய் கங்கா என்ன செய்வது., விதி வழியே விட்டேன் எனக் கதறினாராம்.


முதலில் ஓபன் ஹார்ட் சர்ஜரி AVR .. AORTIC VALVE REPLACEMENT. இரண்டாவது MVR .. MITRAL VALVE REPLACEMENT. செய்தது டாக்டர் விஜய சங்கர். முதல் முறை ஜீவன் போராடிய போது ரத்தம் கொடுத்தவர் டாக்டர் ஜோசப். இரண்டாவது முறை ஜீவன் போராடியபோது ரத்தம் கொடுத்தது லயோலா காலேஜ் பிள்ளைகள் 4., 5 பேர்.


சென்னையில் ஜி ஹெச்., கடலூர் ஜி ஹெச்., பாண்டிச்சேரி ஜிப்மர்., ராயப்பேட்டை ஜி ஹெச்., ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி என கிட்டத்தட்ட 25 நர்சிங்ஹோமும் ., ஹாஸ்பிட்டல்களும் சென்றிருக்கிறார். கைட் செய்ய ஆளில்லை. தாயார் தகப்பனாருக்கும் ஒன்றும் தெரியவில்லை.


GUILD OF SERVICE இல் LONDON இல் இருந்து ஸ்பான்சர் செய்யும் நிறுவனம் மூலம் உதவி பிறந்தது. 1996 இல் பிஃப்ரவரி 14 இல் ஆபரேஷன் முடிந்து மூன்றாம் நாள்தான் நினைவு வந்தது. மார்ச்சில் டிஸ்சார்ஜ் ஆகி அஷோக் நகரில் உள்ள உறவினர் வீடு வந்தாச்சு. இதய ஆபரேஷன் சக்சஸ்.. பிழைச்சாச்சு. ஆனா என்ன செய்வதுன்னு தெரியலை. புத்தி பேதலித்தது போல் ஆகிவிட்டது. மூளை வேலை செய்வதில்லை .. யாரிடமும் பேசுவது இல்லை. சாப்பிடுவதில்லை. மெண்டலாகிவிட்டாள் என எல்லரும் நி்னைக்க ஆரம்பித்து விட்டார்கள்.


இந்த ஆபரேஷன் போது கவனித்துக் கொண்ட ஸ்டாஃப் நர்ஸ் ஒருவர் தன் சகோதரி பெந்தகொஸ்தே சபையைச் சேர்ந்த சிஸ்டர் ரெஜினாவிடம் இவரின் ஆபரேஷனுக்குப் பிறகு இவரைப் பார்த்துக் கொள்ள அவரிடம் சேர்ப்பிக்கிறார். அவரிடம் சென்று சேர்ந்த பின் அவரின் அன்பான கவனிப்பில் என்ன செய்தாலும் கோபிக்காமல் நேசிக்கும் நேசிப்பில் இவர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி விட்டார்.


எனக்கு மட்டும் ஏனிப்படி என்ற கேள்விகள் மனதைக் குடைய அவரிடம் கேட்கும் போதெல்லாம் கடவுள் தேவை இல்லாமல் யாரையும் படைப்பதில்லை என்ற அவரின் அறிவுரையும், வேத புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் செய்வதுமாய் உறுதுணையாய் இருந்திருக்கிறார். அங்கே அவருக்கு நர்சிங் செய்யப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. தன் உடல் நலக் குறைவோடு ஏறக்குறைய 10 முதாட்டிகளுக்கு சேவை செய்துள்ளார். பத்துப் பேரும் படுத்த படுக்கையில். அவர்களுக்குக் குளிப்பாட்டுதல் ., உடை அணிவித்தல்., உணவூட்டுதல்., பாட் மாற்றுதல்., தன் நினைவற்றவர்களுக்கு உடல் துடைத்து பாடி ஸோர் வராமல் பவுடர் போடுதல்., மருந்து கொடுத்தல்., என .. இதில் சிலர் கோபித்துக் கொள்வார்கள் . சிலருக்கு சாப்பிட்டதே மறந்து விடும். சாப்பிட்டு பத்து நிமிஷத்தில் சாப்பாடு தரவில்லை என சத்தம் போடுவார்கள்..


எல்லாருடனும் பழகி பக்குவப்பட்டு ., கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வந்தது. சிஸ்டர் ரெஜினாவின் அன்புதான் அனைத்திற்கும் காரணம் . ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்., தெரசா போல் சேவை செய்து இருக்கிறார். தனக்கு உடல் நலமில்லாத நிலையிலும். ரெஜினா சிஸ்டர் சம்பளம் கிடைத்தாலும் நீ 4 பேருக்கு சேவை செய்கிறாய் . உன்னால் இத்தனை பேருக்கு உபயோகம் இருக்கிறது பார்.. நீ இருப்பது இறைவனின் விருப்பம். தன் சாட்சியாக அவர் உன்னை வைத்திருக்கிறார். நல்ல வார்த்தை பேசு., கனிவாக பேசு., புன்னகையோடு இரு., சுய இரக்கம் தவிர் என அட்வைஸ் செய்து இருக்கிறார்.


இன்றைக்கு எங்கு வேண்டுமானாலும் செல்லும் அளவு தைரியம்., கிட்டத்தட்ட 15 வருடமாக மருந்து இல்லாம ஜெபம்தான். தான் சுய மீட்சி அடைந்ததாகக் கூறுகிறார். இறையன்பால் ஈர்க்கப்பட்டு உமா., உமாஹெப்சிபா ஆனார். ஹெப்சிபா என்றால் தேவனுடைய மகள் என்று அர்த்தம்.


நிஜமான தேவதையாக இன்று வாழும் இவர் இன்னொரு வீட்டில் கான்சருக்கு ஆபரேஷன் செய்து தற்போது குணமாகி விட்ட ரூபி ஜார்ஜ் அவர்களின் உதவியாளராக 2008 இல் இருந்து பணிபுரிகிறார். அவரு்க்காக., மற்றும் அனைவருக்காகவும் ஜெபித்துக் கொண்டு ..


ஓரளவு வங்கி சேமிப்பு செய்யும் அளவு பொருளாதாரமும் உயர்ந்து விட்டது . போனமாதம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு ரொம்பத் தீவிரமாகி விட்டது. உடை எல்லாம் மஞ்சளாகும் அளவு. ஜெபத்தின் மூலமும் கீழா நெல்லியை அருந்தியும் குணமடைந்ததாகக் கூறுகிறார். தனக்கு கடவுள் கொடுத்திருப்பது புதிய இதயம்., புதிய ஜீவிதம் எனக் கூறுகிறார். முகமும் அகமும் மலர.


இன்று அந்த துர்க்கை சாந்த சொரூபிணியாய் .. ப்ரகாசமாய்., ஒரு தீபத்திலிருந்து பல தீபங்களை ஒளிரச் செய்தவளாய்.. வாழ்க வளமுடன்.. நலமுடன்..



வியாழன், 16 டிசம்பர், 2010

ருக்மணி அம்மாவின் புத்தகங்கள்.. ஒரு பார்வை..

லேடீஸ் ஸ்பெஷல் ப்லாகர் அறிமுக இரண்டாவது இஷ்யூவுக்காக தேடியபோது விதூஷ் எனக்கு பாட்டி சொல்லும் கதைகளை அறிமுகப் படுத்தி வைத்தார்.. அதற்காக ஈ மெயிலில் தொடர்பு கொண்ட போது என் வீட்டருகிலேயே ருக்மணி அம்மா இருப்பது தெரிய வந்தது. சந்திக்க சென்ற போது சில புத்தகங்கள் கொடுத்தார்.. கிட்டத்தட்ட 27 புத்தகங்கள் அச்சில் வந்துவிட்டன.. இன்னும் 3 வர இருக்கின்றன..

அவர்கள் வயது 73.. ஆனால் முயற்சியில் பகீரதன் கூட அடுத்தபடிதான்.. எதையாவது எழுதிக் கொண்டே இருப்பதும்., அடுத்து என்ன எழுதலாம் என யோசிப்பதும்.,” இன்னும் நிறைய இருக்கும்மா சொல்ல..” என்பார்..!!

சுய உதவிக்குழு பற்றிய கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்ற போது., என் உடன் வந்த அம்மா அங்கே இருந்த தொழில் முனைவோரிடம் பாக்கு மட்டை பொருட்கள் செய்வது பற்றி விசாரித்தார்கள்..,” முடிந்தால் அதையும் செய்து பார்க்கலாமே.,” என்றார்களே பார்க்கணும்.. அம்மா.. அம்மம்மா..

அவர்கள் மகள் சொல்வார்கள் அம்மாவின் கவிதைகள் அருமையாய் இருக்கும் என்று.. கதைகளும், நாடகங்களும் கூட சிறப்பாய் இருக்கின்றன., அவர்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் போல. ஆறு மாதமாய் கம்ப்யூட்டரில் அவ்வப்போது பிரச்சனைகள் வந்தபோதும் திருக்குறள் கதைகள் எழுதி அனுப்புகிறார்கள் லேடீஸ் ஸ்பெஷல் இதழுக்கு..

தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தின் மெம்பர் கார்டு வைத்திருக்கிறார்கள். இவர் வெளி பதிப்பகங்களிலும் தங்கள் சொந்தப் பதிப்பகத்திலும் நூல்களை வெளியிடுகிறார்கள்.. புத்தக வெளியீட்டில் பெரிய வருமானம் பொதுவாக இல்லை.. வித்யா தானம் என்பார்கள். நமக்கு தெரிஞ்சதை நாலு பேருக்கு சொல்வோமே என்பார்கள். இவரின் நூல்களை பல நூலகங்களிலும் பள்ளிகளிலும் காணலாம். பலரின் நூல்களுக்கு அணிந்துரை., முகவுரை., விமர்சனம் எழுதிக் கொடுக்கிறார்கள்..

இவர் படைப்பில் 8 புத்தகங்கள் வாங்கி வந்து படித்தேன்.. (அப்பாடா 6 மாசம் கழிச்சு இப்பவாவது படிச்சியே என்கிறீர்களா..:)).. ஆமாம்.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உன்னதம்..

ருக்கு அம்மா அரசுப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்ததால் இவர் சந்தித்த ஒவ்வொரு மாணவனும் இவரின் கதை நாயகர்கள்.. எல்லாம் நீதி போதனை., நன்னெறி., நல்லொழுக்கம் போதிக்கும் கதைகள்..

குழந்தைகளுக்கு இரவு படுக்கும் போது அல்லது விடுமுறை நாளில் ., ட்ரெயினில் செல்லும் போது படிக்க கொடுக்கலாம் . புரியாவிட்டால் விளக்கம் கொடுக்கலாம்..

இவரின் சொந்த பதிப்பகம் சாய் பதிப்பகம் ., இவர் கணவரின் ஊக்கமூட்டுதல் அதிகம். இவர் தன் மனைவியின் புத்தகங்களுக்கு ப்ரூஃப் ரீடிங் பார்த்துக் கொடுப்பாராம்.. இப்படி கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்தானே..!!

1.அம்மா என்றால் அகிலம் சாய் பதிப்பகம்.-- இதில் அன்னையின் மாண்பு பற்றி ஏழு சிறுகதைகள்.

2. உரத்த சிந்தனை அமைப்பின் அறிமுக அலைகள் ( இது 26 கவிஞர்களின்150 கவிதைகள்... இதில் ருக்கு அம்மாவின் முதுமை பற்றிய கவிதை அருமை..
“சேயூரில் தவழ்கின்ற மலரொன்றின் பயணம்
மூதூரில் நுழைந்தபின் சருகாகி விடுகிறது..
சருகாகிப் போனாலும் சத்தற்றுப் போய்விடுமா..
மூதூர். இது அனுபவப் பறவைகளின் வேடந்தாங்கல்”

3.விடுதலைச் சுடர்களில் 10 விடுதலைப் போராட்ட வீரர்கள் .. தீவிர போராட்டவாதிகளாய் அறியப்பட்ட சுபாஷ் முதல் வீர சிவாஜி வரை எழுச்சியூட்டும் 10 கதைகள்.. கீர்த்தனா பிரசுரம்

4. பைந்தமிழ்ப் பாவலரில் கோவூர்க் கிழார் முதல் நப்பசலையார் வரை..சாயி பதிப்பகம்.

5. மாணவர்களுக்கு ஏற்ற நாடகங்களில் உழைப்பின் உயர்வு., சேமிப்பின் சிறப்பு ., கல்வியின் பெருமை., திருடாதே., என 10 கதைகள் .. ஜெம் ஆஃப்செட்டின் அச்சில்.

6. ஒரு கிராமத்து மணம் .. இதில் 12 சீர்திருத்தச் சிறுகதைகள்., சாயி பதிப்பகம்.

7. அகிலம் போற்றும் மேதைகள் .. இதில் சர். சி. வி . ராமன் முதல் ஹிப்போகிரேட்டீஸ் வரை 20 அறிவியல் மேதைகள் பற்றிய கட்டுரை. .அஸ்வினி புக் கம்பெனி..

8. அந்தியிலும் ஒரு அழகு.. மிக அழகான ஒரு நாவல்.. சொர்ணவல்லி பிரசுரம்..

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாய் எழுத்துப் பணியில் இருக்கிறார் ருக்கு அம்மா.. இன்றும் பதிப்பகத்தார் இவர் எழுதியவுடன் வீட்டிற்கு வந்து வாங்கிச் செல்கிறார்கள்..

என்ன மக்காஸ் நீங்களும் புத்தகம் போட கிளம்பிட்டீங்க போல இருக்கே..
ஆசைக்கும் ., சாதனைக்கும் வயசு இருக்கா என்ன.. ஆசைப்படுங்க .. சாதிக்கலாம்.

அடுத்த வாரம் உயிர்மையில் வெளிவரப்போகும் கவிதைத் தொகுப்பிற்காய் என் அன்பிற்குரிய நண்பன் நேசனுக்கு இந்த இடுகை பரிசு.. வாழ்க மக்கா.. வெற்றி நிச்சயம்..

டிஸ்கி:- இது எனது 300 வது இடுகை.. எல்லாம் உங்க ஆதரவும் ஆசீர்வாதமும் மக்காஸ்..:))

செவ்வாய், 14 டிசம்பர், 2010

கருவேலம்., பெட்டகம்., எழுத்து வாகனம்., எச்சப்புள்ளிகள்., தினசரி...

1. கருவேலம்:-

********************

ஈரப்பதம் உறிஞ்சி
உள்துப்பும் இயந்திரங்கள்
சமையற்கட்டிலும்.,
சயனத்திட்டிலும்.,
வரவேற்பறையிலும்.,
வாகனத்திலும்..

வெந்நீர் வளையங்கள்
பொங்கித்தரும்
தொட்டில் ஜலக்ரீடை..

பாலிவினைல் புட்டிகளில்
நன்னீரும்..
டஃபர்வேரில் நல்லுணவும்..
துகளானவை தொண்டைக்குழாய்க்குள்..

ஓசோன் டார்பாலின் கிழிய
கந்தகமாய்த் தீயும் பூமி..
முடங்கிப் போன முழங்காலாய்..

எஞ்சியவை
இடையறாத இருமலோடு..
எண்டோஸ்கோப்பியிலும்
கண்டு பிடிக்க இயலாமல்..

எடுத்து ஊன்றிக் கொண்ட
கருவேலங்களாய்..
வேரோடு வெட்டியும் கிளைவிட்டு..

=======================================

2. பெட்டகம் :-
******************

இரும்புக்கம்பு அடைத்து
இரட்டைப் பூட்டிட்ட
தேக்கு மரக்கதவின் பின்னே..

கைமுஷ்டியாய் இறுகின கைப்பிடியோடு
பித்தளைத்தகடு மறைத்த பூட்டோடு..
பலவர்ணத்தில் அசைக்க முடியாமல்..

ஒரு காலத்தில் கன்னமிட்ட நீ.,
உள்ளே வெள்ளைத்துணி சுற்றிய
வெள்ளிப் பிள்ளையார் கவசத்தை..

உன்னுரிமையாய் எண்ணி.,
களவாட முயன்று.,
கைநோக தோற்று..

வங்கி லாக்கருக்குப் பின்
வேண்டுவாரற்று
வெளியில் கிடக்கிறது..

வரும்போதெல்லாம்
முகம் திருப்பிச் செல்லும்
உன்னைக் கண்டு வருத்தமுற்று..

=====================================

3. எழுத்து வாகனம்..:-
*************************

ஏறும் வரையில்
தீர்மானிக்கப் படுவதில்லை..
எங்கு எதில் செல்வதென..

ஏறியபின்
சிறகு முளைத்த அன்னமாகவோ.,
பிடரி சிலிர்க்கும் சிங்கமாகவோ.,
கொம்பு கிளைத்த எருதாகவோ.,

எடுத்துச் செல்கிறது..
குவளைகள் கொட்டிய குளத்துக்கோ.,
அரவுகள் நெளியும் காட்டுக்கோ.,
மனிதர்கள் முட்டும் ஜல்லிக் கட்டுக்கோ..

நகர்ந்தோ., சிலிர்த்தோ., பொருதியோ..
பரிமாறியதெல்லாம்
பார்வைக்குப் பார்வை
உருமாறுகிறது..

காவியணிந்த நபராகவோ.,
காவியடித்த சுவராகவோ.,
காவி படிந்த பல்லாகவோ..

எந்தத் தேடுதலும் அற்று
பயணித்து முடிக்கையிலும்
சிதறிக்கிடக்கிறது..

வெள்ளை இறகோடு நீர்ச்சொட்டுக்களும்.,
மஞ்சள் பிடரி முடியோடு பாம்புச் செதில்களும்..
கருங்கொம்பின் வர்ணத்தோடு சரிந்த குடல்களும்.

=========================================

4. எச்சப் புள்ளிகள்..:-
**********************

பறவை எச்சப் புள்ளிகளோடு
நிழலைக் கோலமாக
வரைந்து கொண்டிருந்தது மரம்..

மொட்டை மரங்களிலும்
நீர்ப்பூக்கள்.
உதிர்த்துக் கொண்டிருந்தது மழை...

மண் பாளங்களாய்
வெடித்திருந்தன..
நீரற்ற காய்ந்த மரத்தின் கிளைகள்..

தானியத் தட்டை
கொத்தும் பறவைகளாய்
சூரியத் தட்டில் கதிரைக்
கொத்திக் கொண்டிருந்தன மரங்கள்..

மஞ்சள் உமியோடு
வெய்யிலைத்
தூற்றிக் கொண்டிருந்தது சூரியன்..

======================================

5. தினசரி :-
*************

சுமைதாங்கிக் கல்லாகவோ.,
சிலுவைக் கட்டையாகவோ.,
அலுவலகச் சுமைகள்
அசைய முடியாமல்
அடித்து வைக்க..

களைத்துக் கைகோர்த்துப்
பின்னே சாய்கிறாய்..
குழந்தையாகும் வேட்கையில்
என் வரவை எதிர்பார்த்து..

உன் பதவி., பாவனைகளோடு
கம்பீரத்தையும்., கடுமையையும்
கழற்றி எறிகிறாய்..
உயரப் பறக்கும் மின்விசிறி மீதோ.,
காலடியில் திறக்கும் குப்பைத்தொட்டியிலோ..

மாடிப்படியில் செருப்பு போடும் ஸ்டாண்டிலோ.,
துவைக்கும் யந்திரத்தின்
அழுக்குத் துணிகளோடோ.,
நானும் உரித்துப் போடுகிறேன்.,
என் கோபத்தையும்., சலிப்பையும்...

ஊறவைத்த தானியங்களைப் போல
முளைத்துக் கிடக்கிறோம்.,
மூழ்கிய அன்பில்..
மறுபடி முளைக்கும்
மற்றொரு நாளை எதிர்நோக்க..

டிஸ்கி 1 :- கருவேலம் கவிதை 13.12.2010 உயிரோசையில் வெளிவந்துள்ளது.. நன்றி உயிர்மை..:))

டிஸ்கி..2.:- கருவேலம்., பெட்டகம்., எழுத்து வாகனம்., எச்சப்புள்ளிகள்., தினசரி .. இந்த ஐந்து கவிதைகளும் தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள் என்ற தலைப்பில் 12.12.2010 திண்ணையில் வெளிவந்துள்ளது.. நன்றி திண்ணை..

சனி, 11 டிசம்பர், 2010

டிஸ்கவரி புக் பேலஸும்.. நானும்..

அமெரிக்காவை கண்டு பிடித்தவர் கொலம்பஸ் என்றால் என்னைக் கண்டு பிடித்தது டிஸ்கவரி புக் பேலஸ் எனலாம்.. என் முதல் கட்டுரை புத்தக வெளியீடு பற்றி வந்தது.. மிக நீண்ட நாட்களுக்குப் பின் அதிகமாக எழுதப் பழகினேன் அதிலிருந்து எனலாம்.. இன்று சில கட்டுரைகள் எழுத அதுவே முதல் முயற்சி..

ஒரு ஜர்னலிஸ்டாக ஆகவேண்டும் என்ற ஆவல் இருந்தது.. விகடன் மாணவப் பத்ரிக்கையாளர் திட்டம் முதல்முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது கல்லூரியில் மூன்றாமாண்டு வேதியல் படித்துக் கொண்டிருந்தேன்.. இரண்டாமாண்டு மாணவியர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்..என்றிருந்தது.. என்ன செய்வது.. ஓரளவு லேடீஸ் ஸ்பெஷல் மூலம் அந்த எண்ணம் நிறைவேறியது எனலாம்.. இன்னும் உழைத்தால்., இன்னும் முயன்றால் இன்னும் அதிக உயரங்களைத் தொடமுடியும் என்ற நம்பிக்கையை விளைத்தது.., இந்த மாதிரி கட்டுரை ., கவிதை., கதை எழுதும் முயற்சிகளே..

எந்த வயதானாலும் மூச்சைப் போல உங்கள் ஆசைகளையும் சுவாசித்துக் கொண்டே., புத்துணர்வு கொடுத்துக் கொண்டே இருங்கள்.. ..

பந்தயத்தில் ஓடுகிறோம் என்பதே பெருமைக்குரியதாய் இருக்கும் .. உங்கள் கனவுகளைச் சூலுற்று வையுங்கள்.. அது பிரசவிக்கும் தருணம்.., வலியிருந்தாலும் இன்பமும் இருக்கும்.. கஷ்டப்படாமல் சாதனைகளே கிடையாது.. நிச்சயம் ஒரு நாள் ஜெயிப்போம்..

முதல் முறையாக பத்ரிக்கையாளர்களையும்., ப்ளாகர்களையும் சந்தித்த கூட்டம் அது.. ஞாநி., சாரு., அஜயன்., பாஸ்கர் சக்தி., தேவன்., வண்ணத்துப் பூச்சியார்., பாரா(வின் மகள் மஹா) ., லாவண்யா., நர்சிம்., வினாயக முருகன்..
இவர்களை சந்திக்க இயன்றது.. ஒரு வருடம் ஆகிவிட்டதா .. வியப்பாய் இருக்கிறது..

நாளை அமுதசுரபி ஆசிரியர் தி்ருப்பூர் கிருஷ்ணன்., இயக்குனர் லிங்குசாமி., கவிஞர் முத்துக் குமார்., பத்ரிக்கையாளர் ஞாநி., பேராசிரியர் இராமகுருநாதன் மற்றும் யுகமாயினி சித்தன் கலந்துகொள்ளும் முதல் புத்தக வெளியீடும் ., முதலாம் ஆண்டு நிறைவும் நடக்க இருக்கிறது..

போன வாரம் சென்றிருந்தபோது ஏகப்பட்ட பொருட்செலவில் குளிர்சாதன வசதியோடு புதுப்பித்தல் நடந்து கொண்டிருந்தது..

டிஸ்கவரியின் புத்தகம்., பதிப்பக சேவைக்கும்., இன்னும் பல்லாண்டுகள் சேவை செய்யவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

டிஸ்கி..1..:- இது சென்ற வருடம் எழுதிய அகநாழிகை புத்தக வெளியீடு... ஒரு பார்வை கட்டுரை..

டிஸ்கி .. 2..:- இந்த http://www.globalgiving.org/projects/hygeine-training-for-40-untouchable-women-in-india/?rf=email_pe_thankyou_7019 செய்தியை பாருங்கள்..

டிஸ்கி ..3..:- கருவேல மரங்களை வெட்டுங்கள் என்று அதன் தீமை சம்பந்தமாக எனக்கு மெயில்கள் வந்தவண்ணம் இருகின்றன.. உங்களுக்கும் வந்து இருக்கலாம்.. இதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

வியாழன், 9 டிசம்பர், 2010

கவிதை என்பது என்ன..?

”I THINK POETRY COMES TO U WHEN U R RESTLESS., UNEASY ., DEPRESSED..... ” -- DHARMENDRA.. --IN HINDU ..

IS IT SO ALWAYS..DHARAM.. ??

கவிதை என்பது இருப்பு கொள்ளாத நிலையிலோ., சரியில்லாத சூழலிலோ., மனச்சோர்வுற்ற போதோ வருவதுதானா.. தரம் தியோல்..

ஏன் காதல்., இன்பம் ., அமைதி., போர்., எல்லாம் இல்லையா..

ஏதோ ஒன்றைப் பகிருதல் என்பதுதானே கவிதை.. நான் நினைத்த ஒன்றை அடுத்தவரையும் உணரச்செய்தல்.. இன்னும் சொன்னால் உணர்வுக் கடத்தல்..

”பாஜ் மன் ஹரி கா நாம்.. ” ( BAAJ MAN HARI KAA NAAM) “இறைவன் பேரைப் பாடு மனமே .” தனிமையில் எழுதப்பட்டதாயிருக்கலாம்..

வருத்தம்., வெறுப்பு., சோகம்., பக்தி தவிர வேறு என்னவெல்லாம் இருக்கிறது..

தென்னகத்தின் ட்ரீம் கேர்ள் ஹேமாவை மணம் புரிந்தபோது., வரவில்லையா கவிதை மனதில்.. இரண்டு கம்பீரமான பையன்கள்., இரண்டு அழகுப் பெண்களின் அப்பாவாகவும் ஆனபோது..

ஷோலேயில் பார்த்த தர்மேந்திராவுக்கு இப்போது 75 என்பது ஆச்சர்யம்தான்.. YAMLA PAGLA DEEWANA வெற்றிக்கு வாழ்த்துக்கள்.. ரஜனிகாந்த் அவார்டு கிடைத்ததற்கும்.. மூன்று தலைமுறையாக வெற்றிகரமான ஹாண்ட்சமான ஹீரோவாய் இருப்பதற்கும்.. மூன்று நடிகர்களை கொடுத்ததற்கும்,, சன்னி., பாபி., ஈஷா..

டிஸ்கி:- கவிதை என்பது என்ன ..? உங்களோட கருத்துக்களைப் பகிர்ந்துக்குங்க மக்காஸ்.. இதை கேக்கதான் தரம் தியோலோட கருத்தை இங்கே பகிர்ந்தேன்..

லேடீஸ் ஸ்பெஷலில் இன்னும் நிறைய கருத்துக் கணிப்பு இருக்கு.. அதுக்கு முன்னோட்டம்தான் இது..

புதன், 8 டிசம்பர், 2010

டிசம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் புவனேஸ்வரி ராமனாதன்., உமா ஹெப்சிபா., டாக்டர் வேல்ராணி. ருக்மணி அம்மா...

டிசம்பர் மாதம் மழை., சங்கீதக் கச்சேரி மாதிரி களை கட்டி இருக்கு., நம்ம லேடீஸ் ஸ்பெஷலும்.. பிள்ளையார் நோன்பு., ராப்பத்து., பகல் பத்து., வைகுண்ட ஏகாதசி., மொஹரம்., கிறிஸ்த்மஸ்., புத்தாண்டுன்னு அடுத்தடுத்து வருது.. நம்ம ப்லாகர்களோட படைப்புகள் மாதிரி..

இந்த மாத ப்லாகர்., புவனேஸ்வரி ராமனாதன் கவிதை., கதைனு கலக்கிட்டாங்க.. அவங்க கதை படிச்சு ரெண்டு சொட்டு கண்ணீர் வந்ததுன்னா பார்த்துக்கோங்க.. நீ நீயாய் இரு.,என்ற கதையும் நாடோடிகள் என்ற கவிதையும்.. நாம் நம் நல்ல குணங்களோடு எப்போதும் நாமாகவே இருப்போம் .. நன்றி புவனா இந்த மெசேஜ் சொன்னதுக்கு...

ஆஸ்டியோ போராஸிஸ் பத்தி சுபம் மருத்துவமனையின் டாக்டர் வேல்ராணி அவர்களிடம் பேட்டி எடுத்து எழுதப்பட்ட என்னுடைய கட்டுரை எலும்புத்தேய்மானம் எப்படி வருகிறது..? மிக அருமையான கம்பீரமான டாக்டர் இவங்க .. என் தோழியாவே ஆகிட்டாங்க.. நன்றி டாக்டர்..

உமா ஹெப்சிபா.. என்னால் மறக்க முடியாத பெண்மணி.. பல்வேறு உணர்வுக் கலவைகளுடன் இவர் எனக்கு பேட்டி கொடுத்தார்.. போராட்டம் வாழ்வில் பலவகை.. அதில் இது ஒரு வகை.. போராடி ஜெயித்த கதைகள் (3) .. இதில் புதிய இதயம்.. புதிய ஜீவிதம்.. என்ற பெயரில் இவரின் தன்னம்பிக்கை கதை என்னுடைய கட்டுரையாக இந்த மாதம்.

நட்பின் சிறப்பு பற்றி நம்ம ருக்மணி அம்மாவோட கதை அருமை.. எல்லாம் படிச்சு பாருங்க.. நட்பின் இலக்கணம் ருக்மணி அம்மா..:))
டிஸ்கி 1 :- முக்கியமான விஷயம்.. பொங்கல்., புத்தாண்டு சிறப்பிதழ்.. லேடீஸ் ஸ்பெஷலுக்காக உங்க படைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன.. கதை., கவிதை., கட்டுரை எதாக வேணாலும் இருக்கலாம்.. எல்லாரும் கலந்துக்குங்க.. டிசம்பர் 15 க்குள்ள அனுப்பி வையுங்க.. ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.. அனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி thenulakshman@gmail.com.
டிஸ்கி:- அப்புறம் நம்மளையும் மறந்துறாதீங்க .. மக்காஸ்.. என்னோட படைப்புக்களையும் தமிழ்மணம் போட்டிக்கு அனுப்பி இருக்கேன்..
உங்க பொன்னான வாக்குகளை தந்து டெப்பாசிட்டாவது கிடைக்க செய்ங்க..:))

திங்கள், 6 டிசம்பர், 2010

தீட்டு., மழை., கல்யாண முருங்கை., நசிகேதன் அக்னி..

தீட்டு:-
***********
பாத்ரூம் போனால்
காவலாய் சத்தகம்..
படுக்கை பக்கம்
தடுப்பாய் உலக்கை..

தலைக்குக் குளித்தாலும்
மூன்றுநாள் தீண்டத்தகாதவளாகி
தனித்தட்டு., தனி டம்ளர்..

தனி நாடு கேக்காத
எனக்குத் தனியிடம்..
துண்டு நிலம்...
தோல் தலையணை..

கிணறு வற்றிவிடும்..
செடி பட்டுவிடும்..
ஊறுகாய் கெட்டுவிடும்..

கருப்பை சூல் சுமக்க
மகரந்தம் பக்குவமாக்கும்
பருவத்தின் சுழற்சி இது..

சாமி படைத்த என்னை
மறைக்க சாமிக்கு
ஏன் திரைச்சீலை..

பின் குழந்தைகளோடு
இருக்கும் கடவுளர்கள் மட்டும்
எப்படி தீட்டுகளற்று...

*************************************************

மழை:-
**************
* பெயிண்ட் அடிப்பவனைப் போல்
ஈரவண்ணம் அடித்துக்
கொண்டிருந்தது மழை..

* மதியம் புகுந்து
மஞ்சள் வண்ணமடித்துக்
கொண்டிருந்தது வெய்யில்..

* இரண்டும் கோர்த்துப்
பாலமாக்கி ஏழுவர்ணம் அடித்துக்
கொண்டிருந்தது வானம்..

***************************************

மழை தொல்லை தாங்கலை
புலம்பிக் கொண்டிருந்தார்கள் இளைஞர்கள்
மெசேஜ் மழை பொழியும் காதலி பார்த்து..

************************************************

குடையோடு நடந்து
கொண்டிருந்தார்கள் மனிதர்கள்..
மழையும் நடந்து
கொண்டிருந்தது அவர்களோடு..

************************************************

பால்கனியிலிருந்து சிதறிய
அவள் கூந்தல் ரோஜாக்கள்
மழை நதியில் பாய்மரக் கப்பலாய்
மிதந்து வந்து கொண்டிருந்தது
என் வீடு நோக்கி..

********************************************

கல்யாண முருங்கை..
*********************************

கோலமாவில் தோய்ந்த முஷ்டிகளால்
உன் பாதங்கள் வரைகிறேன்..

சீடைகள் செய்யத் தெரியாததால்
வெண்ணை கடைந்து வைத்திருக்கிறேன்..
நீ பிடிப்பிடியாய் உண்ணும் அவலும் கூட..

விஷம் கக்கும் பூதனை ., காளிங்கன்
இல்லை இங்கு..
அன்பைக் கக்கும் நான் மட்டுமே..

வருடம் ஒரு முறை
வருகிறாய் வீட்டுக்குள்..
என் வயிற்றில் ஒரு முறையாவது வாயேன்..

உறை பனியிலிருந்து
குழாய் வழிப் பயணத்திலோ.,
தொட்டிலில் இருந்து தத்தாகவோ..

***************************************************

நசிகேதன் அக்னி:-
**************************

முன்னையிட்டதும்.,
பின்னையிட்டதும்.,
அன்னையிட்டதும்.,
என்னையிட்டதும்..

மண்ணில் பிறந்ததும்.,
மண்ணைப் பேர்த்ததும்.,
தீக்குள் நுழைந்ததும்.,
மண்ணில் புதைந்ததும்..

எந்தன் செயலல்ல..
மந்தன் செயலதோ..
சந்தேகங்களை
தேகம் சுமப்பதோ..

மண்ணை ஆளவும்.,
விண்ணை ஆளவும்..
அஸ்வமேத யாகப்
பெண் பொம்மை போதுமே..

உந்தன் யாகத்தீ..
என்னை ஆ(க்)கு தீ..
நீ நிறை சொர்க்கம் ஏக
நான் நசிகேதன் அக்னி..

டிஸ்கி 1. :- தீட்டு., மழை., கல்யாண முருங்கை., நசிகேதன் அக்னி என்ற நான்கு கவிதைகளும் டிசம்பர் 5., 2010 திண்ணையில் தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.. நன்றி திண்ணை..:))

டிஸ்கி 2.:- தீட்டு என்ற கவிதை 6. 12. 2010 உயிரோசையில் வெளிவந்துள்ளது.. நன்றி உயிர்மை..:))

டிஸ்கி:- நசிகேதன் அக்னி., தீட்டு என்ற இரு கவிதைகளும் 10.12. 2010 வார்ப்பில் வெளிவந்துள்ளன.

சனி, 4 டிசம்பர், 2010

கடவுளும்., நானும்..

நெல்லிமரத்துப் பிள்ளையாரப்பா.,பிள்ளையார்பட்டி பிள்ளையாரப்பா., குன்றக்குடி முருகா., ஊனையூர் கருப்பா., மாத்தூர் மகிழமரத்தடி முனிஸ்வரா.. ............. என்ன பார்க்குறீங்க.. எல்லா நல்ல கார்யம் ஆரம்பிக்கும் போதும் தெய்வத்துணையை நாடுவது நம்ம பழக்கமாச்சே..

நம்ம தமிழ் உதயமும்., தங்கமணியும் என்னை லாங் லாங் அகோ., சோ லாங் அகோ.... ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள்.. அதை முடிச்சே ஆகணும் .. ஏன்னா நம்ம ஸாதிகா அடுத்த கானாமிர்தம் பதிவுக்கு அழைச்சிட்டாங்க.. இப்ப அசைன்மெண்ட்ஸ் அதிகமா போச்சா.. முடிக்காட்டி டிஸொபிடியண்ட் ஆகிருவோம்.. சோ சுறுசுறுப்பு..

“எப்ப பார்த்தாலும் சிதர் தேங்காய் பெண்டிங்ல இருக்கு ” இது பிள்ளையார்..

“ரொம்ப சோம்பேறி ஆகிட்டே.. இந்த வருஷம் நடக்கலையா..” முருகன்..

“ முருகனுக்குன்னா முணுக்குன்னு ஓடிப் போய் முடி இறக்கிக்கிறே.. எத்தனை வருஷம் ஆச்சு முடி காணிக்கை செலுத்துறேன்னு.. பார்க்கக்கூட வர மாட்டேங்குறே..” பெருமாள்..

”பால்குடத்துக்கு வர்றேன்னு இந்த வருஷம் வரல..” இது காரைக்குடி முத்துமாரி..

இப்படிப் பல வேண்டுதல்களைப் பெண்டிங்க்ல வைக்கிறதே நம்ம பழக்கம்.. நம்மளைப் போயி கேட்டாங்களே எழுத சொல்லி.. அர்த்தமுள்ள இந்து மதம் மாதிரி 10 பதிப்பு போடலாம்.. அவ்வளவு உள்ள இருக்கு.. ( அடடா.. சும்மா சொன்னேன்.. ஓட வேண்டாம் மக்காஸ்.. இந்த இடுகையோட முடிச்சிருவேன்) .

”எப்பப் பாரு .. உன் பசங்க வண்டியை எடுத்தாலும் சரி.. வீட்டை விட்டு யார் காலடி எடுத்து வெளிய வைச்சாலும் சரி., நீ பூட்டிக்கிட்டு போனாலும் சரி .. எங்களை எல்லாம் காவலுக்கு கூப்பிட்டு தொல்லை பண்ணுறதே உன்னோட ரோதனையா போச்சு “ .. கிட்டத்தட்ட 25 சாமிகள் புகார்..

”அம்மா என்னது இது காலையில ., சாயங்காலத்துல விளக்கேத்தி ஒரு மணி நேரம் மொணமொணன்னு ஏதோ சொல்லிக்கிட்டு இருக்கீங்க.. அவருக்கே உங்க ஃபாஸ்டான பாட்டு ., ஸ்லோகம் எல்லாம் புரியலையாம்.. ஒரு வேளை திட்டுறீங்களா..”

பத்தும் பத்தாததுக்கு வேளாங்கண்ணி., நாகூர்., குருத்வாரா., லோட்டஸ் (பஹாய்) டெம்பிள் ., எல்லாம் போறது உண்டு..

மார்கழித்திங்கள்.. என்ற திருப்பாவையைக் கேட்டாலே வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களோடு கண்ணனும்., தலையில் கொண்டையோடும்., கரங்களில் மாலையோடும் ஆண்டாளும்., ( இளம் பருவத்தில் ஆண்டாளாகவே நினைத்த காலம் உண்டு.. ராமநாராயணன் தேனாண்டாள் ஃப்லிம்ஸ் என்று நிறுவனத்துக்கு பெயர் சூட்டி இருப்பது கூட பார்த்தவுடன் ஆச்சர்யமாக இருந்தது..) பித்தா பிறை சூடி என்ற திருவெம்பாவையைக் கேட்டாலே விரிசடை விபூதி தரித்த., புலித்தோல் பாம்பு., சூடி நெற்றிக் கண் எரிக்கும் சிவனும் .. இன்னும் ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு படர் நினைவுகளும் விரி நினைவுகளும் உண்டு..

பிறந்த இனம்., குடும்பம் கற்றுக் கொடுத்த பழக்கமும்., படித்த கல்விக்கூடமும் ( நற்கருணை வீரன்.. ) ., தோழியர் (சிராஜுதீன்) சொல்லும் சில குரான் வாக்கியங்களும்., செதுக்கி இருக்கிறது..

உருவ வழிபாடு., அருவ வழிபாடு என்பதெல்லாம் மீறி கடவுள் என்னைக் கடந்து உள் செல்பவராகவும்.., என்னுள்ளே உறைபவராகவும்., என்னை எடுத்துச் செல்பவராகவும்., என்னை மீறி எதுவும் நடக்கும் போது என் நம்பிக்கை ஒளியாகவும்., என் துக்கமெல்லாம் பகிரும் தோழனாகவும்., சந்தோஷத்தில் என் எல்லாமாகவும் இருக்கிறார்..

என் அறிவை மீறிய ஒரு பால்வீதிக்கு., அதன் ஆரம்பம்., முடிவுக்கு., என்னால் கடக்க முடியாத இன்னல்களின் போது., கடவுள் அல்லது ஒரு சக்தி இருப்பதை உணருகிறேன்.

நகரத்தார் இல்லங்களில் சாமி அறையில் ஒரு கண்ணாடி இருக்கும்.. அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் இருக்கிறது என்பதன் குறியீடாய்.. இறைவன் உள்ளே உறைகிறான் என்பதன் குறீயீடாய்..

வெற்றித் தெய்வம் கொற்றவை என் ஆதர்சம்.. தைர்யலெக்ஷ்மி..!!!

பூசை ., படைப்பு., பொங்கல் என்ற சமூகம் சார்ந்த விசேஷங்கள் போக., மாமனார் சிவ பூஜை செய்ததும்., அம்மா அப்பா திருவாசகம் முற்றோதல் (ஒரு நாள் முழுவதும்) தங்கள் குழுவோடு உலகம் பூரா சென்று ஓதுவதும் ., நகரச் சிவன் கோயில் என்றே எல்லா ஊர்களிலும் இருப்பதும்,., சிவனே ஜீவன்., சிவனற்றது சவம் என்ற நம்பிக்கை உண்டு..

ஆசாமிகளை ஒரு போதும் சாமிகளாக எண்ணத் தோன்றவில்லை.. ஒரு உறவினர் சொன்னதால் பத்தாவது அவதாரமாய் இந்துக்கள் கருதும் ஒரு ஆசிரமத்துக்கும்., அதன் ஒரு வகுப்புக்கும் சென்று வந்த அனுபவம் உண்டு.. ஆனால் ஏனோ எதன் மீதும் பிடிப்பு., நம்பிக்கை ஏற்படவில்லை..

”கடவுளே.. நீ என்னோடு எப்போதும் இருப்பதாக உணர்கிறேன்.. நான் செல்லும் பாதையில் இரண்டு காலடித்தடங்கள் பார்க்கிறேன்.. ஆனால் நான் நோயாலோ., மற்றவற்றாலோ துயருற்ற போது நான் ஒரு காலடித்தடத்தையே பார்க்கிறேன்.. அப்போது நீ என்னருகில் இல்லையா.. ” எனக் கேட்டால் அவர் சொன்னார்.. “ என் அன்பிற்குரியவளே.. நீ எப்போதெல்லாம் துயருருகிறாயோ அப்போதெல்லாம் உன்னால் நடக்கவே முடியவில்லை.. நான் தான் உன்னை சுமந்து சென்றேன்.. என் காலடித்தடம்தான் அது ..” என்றார்..

இதுதான் கடவுளும் நானும்...

புதன், 1 டிசம்பர், 2010

தேனமுதபாஷிணி..


உன் குரல் கேட்டதில்லை நான்.. எழுத்திலேயே எல்லாம்.. !!! மிக மென்மையானதாகவும்., சமயங்களில் வலிமையானதாகவும் இருக்கும்..

வார்த்தைகளின் சாகசக்காரி நீ.. சூத்திரதாரி நீ ...உன் வார்த்தைச்சரங்களில் தோல்பாவையாய் ஆடிக்கொண்டிருக்கிறேன் நான் நிகழ்வேதும் அறியாமல்.. அன்பால் நீ ஆட்டுவிப்பதும் பின் காணாமல் போவதுமாய் கண்ணாமுச்சியில்.. ஜென்மம் தோறுமோ., யுகங்கள் தோறுமோ ..

மானாய் ஓடிக் கொண்டிருக்கிறாய்.. எனதாக்கிக் கொள்ளும் ஆவலில் பின் தொடர்ந்து. . ஆனால் வேட்டையாட அல்ல.. எதனாலும் காயப்பட்டுவிடாமல் இருக்கிறாயா எனப் பார்க்க..

வலிமையானவள்தான் நீ.. முகம் மட்டுமே காட்டி முகமாத்துச் செய்ய உன்னால்தான் முடிகிறது.. முகம் மட்டுமல்ல .. மூளை பார்த்தும் அதிசயித்து... வெளிக்கிரக வாசிகளும் உன்னை கலங்கரை விளக்காய் நினைத்து வாழ்த்திக் கொண்டிருப்பது பார்த்தேன்..

பொறாமையின் ஊற்றூக் கண்கள் பொங்கி வழிந்தன .. எனக்கு மட்டுமான ஒன்றை எல்லோரும் சொந்தம் கொண்டாடுவதா என்று.. எல்லோருக்கும் உரிமையான ஒன்றை நான் மட்டும் களவாட., பதுக்க முயன்றிருக்கிறேன் என்பது அறியாமல்..

என் கரங்கள் காயப்பட்டபோது கரங்களாகவும்.. என் கண்கள் வழிந்தபோது சேர்ந்தழுத கண்களாகவும்., என்னை வழிஎடுத்துச் சென்ற கால்களாகவும்.. நானாகவே நீ..
நிலவற்ற மழை இரவுகளில் கதை பேசியதில்லை நாம்.. மருதோன்றிச் செடியும் ., மல்லிகையும்., மீன்குழம்பும் உன் நெருக்கத்தையும்., உன் சுவாசத்தையும் என் காதோரம் நெகிழ்த்தி.. மரத்தோரம் நீ சாய்ந்திருக்கும் ஓவியம் என் மனதுள்..

வெர்ச்சுவல் சாட்டிஸ்ஃபாக்‌ஷன் என்ற நெருடல்களோடு எல்லாரும் நெருக்கியபோதும் உன் குரல் கேட்டு விடலாம்., பார்த்துவிடலாம் ரத்தம் சுண்டுமுன் என்ற நப்பாசையில் ..ஒருத்தி..

பாஷைகளற்ற நம் மூவருக்குள்ளும் சொல்லவும் பகிரவும் ஏதுமிருக்கிறதா என்ன.. தன்னைச் செதுக்கும் சிற்பம் போல நீங்கள் இருவரும்.. நான் சாளக்கிராமக் கல்லாய் நதியின் ஓட்டத்தில் செதுங்கி.. ஓரிடத்தில் சந்தித்து..
விந்தைதான்..

நீ முத்தமிட்டதில்லை.. இன்று உன் பிறந்தநாள்.. என்றும் அன்பும் அணைப்பும் அக்காவுக்கு என்றுதான் சொல்லிச் செல்வாய்.. இன்று உன் ஈரம் பதிந்த முத்தம் என் கன்னங்களில் நனைந்து நனைந்து காய்ந்து கொண்டிருக்கிறது.. என் அன்பு மழை உன் மேல் பொழிந்து கொண்டிருப்பது போல்..

நீடூழி வாழ்க கண்மணி.. நீயும் தமிழும் அபியும் போல்.. வாழ்க வளமுடன்., நலமுடன்.. அன்பு அக்கா தேனமுதபாஷிணி..

விட்டுப் போனவை.., வெறுப்பு., கனவு...


1. விட்டுப் போனவை:-
**************************
ஒரு கோப்பைக்குள் பாதரசமாய்
ஏந்தி இருந்தாய் உன் கனவை..
காலம் தீர்ந்த அவகாசத்தில்
கையளித்துச் சென்றாய் என்னிடம் ..
குழியாடிக் குவியாடிக்
கண்களாடிக் கலந்தேன்..
நகரும் வெள்ளிக் கண்ணாடியில்..
அதிகமசைந்து
தங்கம் துளைந்தாடியது அது..
இன்ப அதிர்ச்சியோ என்னவோ..
கை தவறிப் போட்டுடைத்தேன்..
குன்றிமணிகளாய்த் தரையில் சிதறி..
அமில ஓட்டைகள்
கத்தரித்திருந்த
சோதனைச் சாலை அங்கியோடு
தவழ்ந்தேன் தரை முழுதும் ..
ஒன்று சேர்த்துக் கோர்த்துவிடலாமென..
*****************************************************
2. வெறுப்பு:-
**************
கொலைக் கத்திகளும்
கொம்பின் முனைகளும்
முத்தமிடும் உலகில்
தாவரமாகவோ.,
காய்கறியாகவோ வாழ்வது..
கத்திரிக்கோல்களால்
நறுக்கப்படவே தினம்
செய்வதறியாது சிரிக்கும்
செந்நிற ரோஜாவாய்ப் பூத்திருப்பது..
வீட்டின் மேல் பழையதும்
வேண்டாததும் போட்டு
அடைக்கும் பரணாயும்
ட்ரெங்குப் பெட்டியாயும் இருப்பது ...
காலடி எடுத்து வாசலில் வைத்தாலே
திருவிழாவோ., தெப்பமோ
தேரோ., உலாவோ செல்லும்
அம்மனாய்த் தோன்றுவது...
பூப்பல்லக்குகளும்., வாகனங்களும்.,
கோமடங்களும் ., செங்காவியும் சூழ
வணக்கத்திற்குரிய சிலையாய்
சிறையுண்டிருப்பது..
**************************************
3. கனவு :-
**************
ஓவிய வகுப்பில்
ஓயாமல் பென்சில் திருகி...
முனை ஒடித்துக்
குட்டு வாங்கிய
குழந்தையின் இரவில்....
சாபமிட்டு விரல் முறிக்கும்
கொடுந்தேவதைகள்
முளைத்துக் கிடந்தார்கள்
கனவெங்கும்..
டிஸ்கி.. 2..:- விட்டுப் போனவை., வெறுப்பு., கனவு என்ற என் மூன்று கவிதைகளும் நவம்பர் 28., 2010 திண்ணையில்.. தொடர்ந்து வெளியிட்டு வரும் திண்ணைக்கு நன்றி..:))