வெள்ளி, 29 அக்டோபர், 2010

நிகழவே இல்லை நம் சந்திப்பு.......

நான் உன் பின்னே வர
நீ எதன் பின்னோ விரைய
குதிரை முன் கட்டிய கொள்ளுப்பை..

பாம்புகளும் ., பூரான்களும்
அடைசலாய் நெளியும்
கெட்ட கனவொன்றில் முழித்து..

வேர்வைச் சுரப்பிகள்
அமிலக் கண்ணீராய் அரிக்க..
இன்மையின் திரையில்..

பூக்கள் இருப்பதாய்
உணர்ந்த இடத்தில்
தொட்டுப் பார்க்க..
உறுத்திய முட்களும் இல்லை..

பூநாகமும்., திருநீற்றுப் பச்சையும்
மணத்துக் கிடக்க.. நிலவைப்
பலமுறை பின்னுருட்டினேன்..

உராய்ந்த தடமறியா
வலியுணராமல் பின்னோக்கி
பாதச்சுவடுகள் தேயத்தேய...

கொடுத்ததெல்லாம் திருப்பி
நேர்த்திக்கடனை நேர் செய்தேன்..
சந்தனமும் மிளகாயும் அரைத்துப் பூசி..

குழப்பம் இல்லா
குழந்தைச் செடியாய்
மொக்குகள் சுமந்தேன்..

பூக்கள் மணக்கும் நாளில்
நானும் நீயும் சந்திக்கவேயில்லை..
இனி சந்திக்கப் போவதுமில்லை...

டிஸ்கி :- இது 24. 10. 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது.

வியாழன், 28 அக்டோபர், 2010

மார்பகப் புற்று.. முன்னெச்சரிக்கை..

அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.. நண்டூறுது ., என அறியா வயதில் விளையாடி இருக்கலாம்.. பேரிளம் பெண்களுக்கான பருவத்தில் அறியாமல் இருக்கலாமா..

சென்ற மாதம் ஒரு தோழியுடன் பேசியபோது சொன்னார்.. தற்போதெல்லாம் 40 வயதுக்கு மேல் அல்ல ...30 வயது உள்ள பெண்களுக்கும் மார்பகப் புற்று ஏற்படுகிறது என.. மார்பகத்தில் சிறு சிறு கட்டிகள் உருள்வது போல் இருந்தால் மாமோகிராம் செய்வது அவசியம் ..

காரணமேயில்லாமல் ., பரம்பரை வாகு கூட இல்லாமல் புற்று வரும் வாய்ப்புகள் 5 % இருக்கிறது . ஒரு தோழி காய்கறி .,பழம் மட்டுமே சாப்பிடுபவர்., கொழுப்பு சத்து ., பால் .,ஸ்வீட்., எண்ணெய்., அசைவம் எதுவும் சேர்த்துக் கொள்ளவே மாட்டார்.. எதற்கும் அதிகமாக மருந்தும் உண்ணாதவர்.. அவருக்கு 3 மாதத்துக்கு முன் புற்று கண்டுபிடிக்கப் பட்டு அறுவைசிகிச்சை மூலம் சரி படுத்தப் பட்டு தற்போது கீமோதெரஃபி நடந்து வருகிறது..

5FU என்ற டாக்சிக் ட்ரக் கொடுக்கப் படுகிறது.. ஏனெனில் ஒரு சில செல்கள் இருந்தாலும் மீண்டும் உடலில் பரவும் அபாயம் உண்டு என்பதால். இதன் பக்க விளைவுகளாக., முடி கொட்டுதல்., பசியின்மை., வயிற்றுப் பொருமல்., வாய்ப் புண்., மலச்சிக்கல் ., நகம் வளராமை என சைட் எஃப்ஃபெக்ட்ஸ் வருகிறது. ஆனால் வேறு வழியில்லை.. காரம் சாப்பிடவே முடியாது..

இதுவே முன்பே கண்டுபிடித்ததால் இந்த அளவுடன் விட்டது.. இன்னும் இரண்டு மூன்று சிட்டிங்ஸ் போதும் கீமோதெரஃபிக்கு.. எனவே வரும் முன்னே காவுதல் நன்று..

மொத்தம் 12 வகையான மார்பகப் புற்றும் அதை கண்டு பிடிக்கும் முறைகளும்., சிகிச்சை முறைகளும் இந்த http://www.breastcancer.org/ இல் விவரமாக கொடுக்கப் பட்டுள்ளது .. பாருங்கள்..

நம் ரோஹிணி சிவாவும் தன்னுடைய புதிய வார்ப்பு வலைப் பதிவில் சோதனை தேவை என்ற தலைப்பில் இதைப் பற்றிக் குறிப்பிட்டு வருமுன் காக்க சொல்லி இருக்கிறார்..

நண்டு உணவாகலாம்.. நண்டுக்கு நாம் உணவாகலாமா.. எனவே சகோதரிகளே.. முன்னெச்சரிக்கையா இருங்க..

புதன், 27 அக்டோபர், 2010

காந்தி ஸ்டடி சென்டரில் குழந்தைகளின் அறிவியல் ., கைவினைப் பொருட்கள் கண்காட்சி..









ஒரு புக் ரிவ்யூக்காக காந்தி ஸ்டடி சென்டர் சென்றிருந்தேன்.. 28.0 2010 அன்று அங்கு தக்கர் பாபா வித்யாலயா ( வெங்கட்நாராயணா சாலை., தி. நகர்) வில் பயிலும் குழந்தைகள் நடத்தும் அறிவியல் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடக்க இருக்கிறது..

இது குழந்தைகள் கைகளினாலேயே வடிவமைத்த அழைப்பிதழ்.. சென்று வாருங்கள் சென்னை மக்காஸ் .. குழந்தைகளோடு.. இன்னும் பகிர நிறைய இருக்கு ..
வாராவாரம் ஒரு புத்தக ரிவ்யூ. .. நேற்று கறுப்புவெள்ளை என்ற புத்தக விமர்சனம் .. ரொம்ப அருமையா இருந்தது.. I HAVE A DREAM என்று சொன்னவரின்... மார்டின் லூதர் கிங் ஜூனியரின் .. வாழ்க்கைச் சரிதம்.. எழுதியவர் பாலு சத்யா.. வெளியீடு கிழக்கு பதிப்பகம். விலை ரூ . 60.
விமர்சனம் செய்தவர் வெங்கட்ராமன்.. காந்தி ஸ்டடி சென்டரின் அண்ணாமலை அவர்களின் முகவுரையும் அருமை..

காந்தி ஸ்டடி சென்டரை நிறுவக் காரணமாயிருந்த திருமலை அவர்களின் புதல்வர் விப்ரு நாராயணனையும் அவர் சகோதரி சுபாஷிணியையும்.., திரு அண்ணாமலையையும் அவர் துணைவியாரையும் ., பாலு சத்யா ., மோகன்., வெங்கட்ராமன்., வெற்றிவிடியல் ஸ்ரீனிவாசன்., எழுத்தாளரும் என் அன்புத் தோழியுமான மதுமிதா ராஜா., , மற்றும் இன்னும் பெரிய எழுத்தாளர்கள் ., விமர்சகர்கள் அனைவரையும் சந்தித்தேன்.. கற்றோர்கள் நிறைந்த சபை.. அதில் நானும் ஒரு துளியாய்.. .... ம்ம் நல்ல அவை.. ரகுபதி ராகவ ராஜாராம்..

டிஸ்கி :- ரொம்ப முக்கியமா சொல்ல விரும்புறது என்னன்னா.. என் கவிதைகளில் வரும் கருக்கள் அனைத்தும் கற்பனையே.. கண்டும் கேட்டும் பார்த்தும் எழுதுவது.. என் வாழ்க்கையில் இவ்வளவு சம்பவங்களும் நடக்க சான்ஸ் இருக்கா என்ன.. உங்கள் வாழ்க்கையைச் சுற்றி அநேகரின் வாழ்வும் இருக்கிறதே.. ஒரு வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கே எவ்வளவு கதைகள்.. அதையெல்லாம் சிலர் பார்வையாளராக கடந்து சென்று விடுகிறார்கள்.. நான் பதிவு செய்கிறேன்.. எல்லாருக்கும் . மேலும் எல்லோரைச் சுற்றியும் காமம்., க்ரோதம்., வெறுப்பு., பகை., அன்பு., காதல்., என எவ்வளவு இருக்கு..
என் குடும்பம் நல்லதொரு குடும்பம் ..பல்கலைக் கழகம்.. எனவே என் கவிதைகளோடு என்னையும் இணைத்து குழப்பிக் கொள்ள வேண்டாம் என அர்ஜண்டாக சொல்ல விரும்புகிறேன்.. முக்கியமாக என் நலம் விரும்பிகளுக்கு.. நன்றி மக்காஸ்.. கவிதையை கவிதையா பாருங்கப்பா.. எழுத்தாளனின் சுதந்திரம் பறி போகாமல்.. அதை சோதனை செய்யாமல்..

தேன் சிறகு முத்தம்...

தாலாட்டும் ரயில்
தாய் போலெனக்கு...

ஆடுகளும்., பாசி ஊசிகளும்
அசைபோட்டு நடந்தபடி..

கிரானைட் பெஞ்சுகளில்
சாய்ந்து அமர்ந்திருந்தோம்..
அணைத்துக் குலவியபடி..

போவோர் வருவோரெல்லாம்
புகை பொங்கப் பார்த்தபடி..

ஒரு முத்தம் கொடுடா என்றேன்
என் குழல் கற்றையை
விரலால் சுழற்றினாய்..

தோடை.. காதை தடவினாய்..
கன்னத்தோடு கன்னமிழைத்தாய்..
காது கேட்காதது போல்..

தடதடத்து வந்தது ரயில்..
என் கோபம் போல்..

ஒழுங்காய் சாப்பிடு..
சமர்த்தாய் தூங்கு..
இந்தா என் கைக்குட்டை..

இம் என்று வாங்கினாய்..
முத்திரை இடாத தபாலாய்
தளதளப்பாய் ஒரு வாரம் ஆகுமென்றேன்..

இம் என்றாய்..
பொய்க்கோபம் மிக
போயமர்ந்தேன்..
உன் முகம் ஏக்கமாய்ப் பார்த்து..

இதழ்களில் பிஞ்சுக்கரம் பதித்து
பறக்கும் முத்தம் பரிசளித்தாய்..
பட்டாம் பூச்சியாய் அது
கன்னம் அப்பியது..
தேன் சிறகுகளோடு..

உன் அப்பா கையிலிருந்து..
இன்னும் இன்னும் வாரியிறைத்தாய்..
அட படவா.. முன்பே கொடுப்பதற்கென்ன......:))

டிஸ்கி :- இது 24. 10 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது.

செவ்வாய், 26 அக்டோபர், 2010

கடல் அடையும் விளையாட்டு...

அலங்காரத்தோடும்
பாதுகாப்போடும்
கடலில் கரையப் போகும்
பிள்ளையார் படம் போட்ட
தாளில் மடிக்கப் பட்டது.,
கணவன் அடித்துத்
தண்டு உடைந்த தோடு..

வீடெங்கும் இறைந்து
கிடந்தன வார்த்தைகள்...,
வலித்த தோளோடும்
துடைத்தும் தீராமல்..

வேங்கையின் உறுமலாய்
காற்றும் சுட்டுக் கிடந்தது..
பல மணி நேரம் ..வீடே
அனல் கோப்பையாய்..

துணிகள்., பாத்திரங்கள்.,
குப்பைகள் போல் சோர்ந்து...
சுவற்றோரம் முடங்கி..,

ஒவ்வொரு வருடமும்
களிமண்ணில் உருவாகி
குடையோடு வீடுவந்து
அருள் பாலித்து
கடல் அடையும் விளையாட்டில்
விநாயகரும் .. வாழ்வும்...

டிஸ்கி :- இது 24 . 10 . 2010 ., திண்ணையில் வெளிவந்துள்ளது..

திங்கள், 25 அக்டோபர், 2010

தாம்பத்யம்..

என்றுமே புரி்ந்து கொள்ளாத தன்மைக்கு
என்ன பெயரிட்டாலென்ன..?

வருடங்கள் மட்டுமே வாழ்க்கையல்ல..
வருடல்கள் மட்டுமேயும்..

வாழ்க்கைக்குள்ளும் ஒரு நெகிழ்வு.,
ஒரு புரிவு., பரிவு..

எனக்கான பிரபஞ்சத்தில் நானும்..
உனக்கான பிரபஞ்சத்தில் நீயும்..

அவ்வப்போது விண்கற்களாய்..
தவறாய் முட்டிக்கொண்டும்.,
தவறாமல் மோதிக்கொண்டும்..

அவரவர் இலக்கில் அநாமதேயமாய்..
எங்கோ எரிந்து வீழும் வால்நட்சத்திரங்களாய்...

பால் வீதியின் சிதறல்களில்தான் இருக்கிறோம்...
நான் மட்டும் உன் நினைப்பில் சிறுகோளாய்..
உன்னை மட்டுமே சுற்றி..

இருக்கட்டும் எல்லாம் ..
அவரவர் ஹீலியப் பந்து எரியும் வரை..
முழுமையும் வெண்சாம்பலாய் மாறும் வரை...

கிரகணங்களும்., அமாவாசைகளும்
நம் உயிர்ப்பையும் இருப்பையும் உணர்த்த..
எப்போதோ பௌர்ணமிகளும் ப்ரகாசமாய்..

டிஸ்கி:- இது அக்டோபர் 24., 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

செய்தியும் கருத்தும்..

தமிழகத்தில் தபால் நிலையங்களில் தங்கக் காசு விற்பனை செய்யப்படுகிறது.. ---- செய்தி..

நகைக் கடைக்காரர்கள் போல வங்கி மேனேஜர்கள் வித்துக்கிட்டு இருந்தாங்க.. இப்ப தபால் துறையுமா.. இந்தப் போட்டியில் ...!!!

இந்தியாவின் இந்த வார கோல்., கோல் இந்தியாதான்.. ( வெளியீடு) -- பங்குச்சந்தை செய்தி..

நல்ல கோல்தான்..தங்கம் விலை குறைகிறதே..

இந்தியா வரும் ஆறாவது அதிபர் ஒபாமா...-- செய்தி

வந்தார்கள்.. வென்றார்கள் .. சென்றார்கள்.. எபிஸோட் .. 6

IN THE MIDST OF ALL THOSE SPECIAL EFFECTS AND GRAPHICS, WHERE HAS THE LONER, THE ANGRY YOUNG MAN OF THE 1980S GONE..?--- NEWS..

AT 1980 HE IS 30 AND NOW HE IS 60..

’பெர்ல் ஸ்பிரிங் செஸ்’ தொடரின் 4 வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் , பிரான்சின் எடினே பாக்ரோட்டிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்..

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு.. அடுத்த முறை ஜெயிப்பார்.. அதென்ன அதிர்ச்சித் தோல்வி..?

சனி, 23 அக்டோபர், 2010

வெள்ளி கொலு..







கொலுவென்றால் என்னவெல்லாம் தோன்றும் உங்களுக்கு..
சுண்டல்., மரப்பாச்சி., பொம்மைகள்., பார்க்., மலை., ஃபவுண்டன்., கோலம்., பாடல்கள். , பட்டுப் பாவாடை ஜிமிக்கியில் கண்மை தீட்டிய குழந்தைகள்..
இப்படித்தான் நினைத்து நானும் சென்ற வாரம் என் நண்பர் அருண் வீட்டு கொலுவுக்கு சென்றேன்.. கை மாவுக்கட்டு இருந்தால் என்ன..? நட்பு முக்கியம் இல்லையா..:))
உள்ளே நுழைந்ததும் அசந்து போனேன் .. பிரம்மண்டமாய் .. ஏதோ டால் எம்போரியத்தில் நுழைந்து விட்டோமாவென்று இருந்தது.. டில்லியில் சங்கர்ஸ் டால் மியூஸியம் பார்த்தது போல்..
மிக அட்ராக்டிவ் அம்சங்கள் அவர் அம்மா வத்சலா அவர்கள் தன் கையாலே செய்த சகுந்தலை கதை.. பொம்மைகள்.. பொம்மைகளே செய்யப் பட்டு பின் அவற்றுக்கான உடைகளும்.. கண்வ மகரிஷியின் பர்ணசாலையில் சகுந்தலை வளர்வதும்., துஷ்யந்தனைக் கண்டு காதல் வயப்படுவதும்., மோதிரம் அணிந்து காந்தர்வ மணம் புரிவதும்., அந்த அன்பின் நினைப்பிலேயே குடிலுக்கு வந்த துர்வாசரை வரவேற்காததால் கோபமுற்ற அவர் சாபமிடுவதும் ., அந்த மோதிரம் நீர்நிலையில் விழுந்து விடுவதும் ..பின் துஷ்யந்தனைப் பார்த்து அவள் வருந்துவதும் .. என எல்லாம் தத்ரூபமாய்..
ஆந்திரா கர்நாடகாவின் கலைகளான பொம்மை செய்தலை ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன் மங்கையர் மலர் மூலம் தான் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்... பொம்மைகளை துணியில் செய்து கம்பிகளில் கை கால்களை நுழைத்து ., ஒரு ஸ்டாண்டில் நிற்கவைத்து இருக்கிறார். முகத்துக்கு மாஸ்க் பொம்மைகள் உபயோகப் படுத்தப் பட்டு இருக்கிறன.
தினமும் மரப்பாச்சி பொம்மைகள் இரண்டுக்கு விதம் விதமான காஸ்ட்யூம்ஸ்.. இதில் பெரிய ஸ்டாண்டில் 7 ஷெல்ஃப்களும் சின்னதில் 5 ஷெல்ஃப்களும் பொம்மைகள்.. ஓரினத்திலிருந்து ஒருவனே தேவன் வரை..
இதில் ஹை லைட் ராம் சீதா திருமணவைபவம்.. நிஜ சீர் சாமான்கள் தோற்றுவிடும் அழகில் கிட்டத்தட்ட 2 கிலோ வெள்ளியில் 5 படிகளில் சீர் பொருட்கள்.. அழகு.. பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க.. ஆமாம் வெள்ளியில்லையா....
கேசரி., சுண்டலுடன் ஒரு பர்ஃபெக்டான நவராத்திரி.. அருண் இத பார்க்கிறதுக்கு எல்லாருக்கும் நீங்க டிக்கெட் கொடுத்தீங்கன்னா எந்திரன் படத்தை விட அதிகமா வசூலாகும்..

வியாழன், 21 அக்டோபர், 2010

மகாவின் கல்யாண வைபோகமே..

மக்காவின் மகா..
மஞ்சள் புடவையில்
சின்ன தேவதை..
கருவேல நிழலின் கீழ்
கிருஷாந்திப் பூ..
பாலையில் காய்ந்த பாராவின்
பசும் சோலை..
விளக்கில் விசும்பிய பூதம்
விருந்துத் தட்டோடு..
இனி முதலாளியென்று
சொல்லாதே..ஜீனியே
மாப்பிள்ளை என்று சொல்லு..
உன்னையும் மகளுக்கு
சீதனமாக்கி ..
படிப்பை மூலதனமாக்கி..
பாராவின் உழைப்பை
அடித்தளமாக்கி..
ரயிலின் சந்தங்கள் ஒலிக்க..
வாழைமரம் வைத்த வீட்டில்
வாழ்க... வளர்க... கண்மணி..
வலைக்குடும்ப வாழ்த்துக்கள்..
அப்பனும் சித்தப்பன்களும்
மாமன்களும் அத்தைகளும்.,
பெரியம்மாக்களும்
நிறைந்த இல்லத்தில் ..
நெகிழ்கிறது கண்கள்..
அனைவரின் ஆசீர்வாதமும்..

புதன், 20 அக்டோபர், 2010

எல்லாம் வாய்க்கிறது..

எதிர்வீட்டுக் குழந்தையுடன் குலாவல்...
படி கூட்டும் பெண்ணிடம் விசாரணை..
பேரம் பேசிக் காய்கறி...
காக்காய்க்குச் சுடுசோறு..
தொலைபேசியில் தாய்வீட்டில் கொஞ்சல்...
தோழிகளிடம் அளவளாவல்..
அலுவலில் இருக்கும் கணவரிடம்
குறுந்தகவலில் குறும்பு..
மிச்சம் கிடக்கும் நொறுக்குத்தீனி...
பாதி படித்து மறந்த புத்தகம்..
ஆர அமரக் குளியலுடன் ஒரு பாட்டு..
தென்னங் காற்று..
தெருமுக்கு அம்மன் கோயில்..
பூத்துக் கிடக்கும் தோட்டம்..
எல்லாம் வாய்க்கிறது..
கணனியும் ., தொலைக்காட்சியும்
சீவனற்று சடமான
மின் தடையின் போது..

திங்கள், 18 அக்டோபர், 2010

வட்டங்கள் இறக்கிய கிணறு..

வட்டங்கள் இறக்கிய கிணறு...
வட்டச் சிற்றலைகளுடன்..

மழைத்துளி உண்ணும்
சாதகப் பட்சியாய் வாய் பிளந்து..

சில படிக்கட்டுகளோடும்..
சில பாழடைந்தும்..
சில குப்பைகளோடும்...
சில வாழ விரும்பாதவர்களோடும்..

தோண்டித் தூரெடுத்தால்
ஊற்றாயும் ..
வாழ்வின் சாறாயும்..

சுவரோரமாய்ப் பாசங்களும்..
செங்கல் பெயர்ந்த தடங்களும்..
பசலையும்.. தீயின் வடுவுமாய்..
ரகசியங்கள் உறைந்து..

தவளைகளும் .. சில மீன்களும்..
தொலைத்த பொருட்களும்..
தொலைய நினைத்த மனிதர்களும்..

பம்புசெட்டும் .. கீரைப் பாத்திகளும்..
உயிர்தழுவும் உன்னதக் காற்றும்..
உயிர்ப் பயிர்களின் தலையசைப்பும்..

காற்றும் நீரும் கலவி...
லயமும் சரமுமாய்...
இரைக்க.. இரக்க..
இறைத்து .. இரைந்து..

சகடைச் சத்தங்களும்
வாளியின் முத்தங்களும்..
ஆள்துளையின் இயந்திர
நாதங்களும்.. சந்தங்களும் சுமந்து..

வலை வீச முடியாது ..
கல்லெறியலாம்..
எல்லாம் விழுங்கி
மெல்லலைகளுடன்
வட்டங்கள் இறக்கிய கிணறு..

டிஸ்கி.. 1 .. :- இது அக்டோபர் 17 ., 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது .
டிஸ்கி.. 2.. :- என் அம்மாவின் புது வலைத்தளம் சும்மாவின் அம்மா..

சனி, 16 அக்டோபர், 2010

புத்தகத்துள்ளுறை மா(னுடர்க)தர்களே..

இந்த மாத ரிவ்யூ .. முகப்புத்தகம்..
உருவாக்கியவர் .. மார்க் ஜுக்கர்பெக்கர்..

ஸ்பெஷலிடி.. இதில் படிக்க மட்டுமல்ல . எழுதலாம்., பகிரலாம்..
மல்டி ஸ்பெஷலிடி.. நிறைய பேருக்கு வீடே இதுதான்.. தூங்குற நேரம் டாய்லெட் நேரம் தவிர... இது தூக்கமும் தவிர்ந்த திரிசங்கு சொர்க்கம்..குப்பையைக் கூட இதுலதான் கொட்டுவோம்னா பார்த்துக்குங்க..

இன்றைய ஸ்பெஷல்.. லாப்டாப்போடு பூஜை அறையில் அமர்ந்தது..
என்றும் ஸ்பெஷல்..அன்பு ., வம்பு ., நட்பு., கண்ணீர்., கியாரண்டி..
புதிதாய் உருவாக்கியிருப்பது .. ஸ்டார் ஹோட்டல் FB மீட்..
உணரவைத்தது.. உறவை விட நட்புக்கள் மேல்..

30 வயசுப் பெண்ணையும் அவர் பிறந்த நாளில் பால் புட்டிப் பெண்ணாக நட்புக்கள் கலாய்ப்பது..

சாதனை.. தூங்க வைக்கவும்., எழுப்பவும்., அரசியல் .,சினிமா பகிரவும் செய்து., டிவி., பத்ரிக்கைகளை ஓரம் கட்டியது..

தனிமையில் இருப்பவர்களுக்கு சரியான நண்பன்..
தவறாய் பயன்படுத்துபவர்களும் உண்டு.. காலம் மாறட்டும்..

பெரிய சாதனை.. மிகப் பிரபலங்களையும் நண்பர்களாக ஆக்கியது..
எதிர்காலம்.. பள்ளி செல்லும் பிள்ளைகளும் மொபைலில் FB அப்ளிக்கேஷன் வைக்க... பிரகாசமாய் தலைமுறை தாண்டியும் ஜெயிக்கும் ..
அடுத்த நோட்டிஃபிகேஷனை பார்க்காமல் போய்விடுவோமோவென்று மனிதர்களின் இறப்பு சதவிகிதம் குறையும்..

மனிதர்கள் நேரில் இருக்கும் மனிதர்களைப் பார்க்காமல்.. அவர்களையே நெட்டில் பார்த்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள்..
வாழ்க .. வளர்க.. மனிதமும் நட்பும் எப்படியாகிலும்..

டிஸ்கி..:- ஆயுத பூஜை டிப்ஸ்.. வீட்டில் கண்ணாடி அலங்காரப் பொருள் அல்லது அழகிய சீசா இருந்தால் தலையை சுற்றி விட்டெறியுங்கள் . அல்லது அம்மா கொடுத்தது .. பாட்டி கொடுத்தது என்ற செண்டிமெண்ட் கிளியா.. வாட்டர் மோட்டர்., பைக் ., மைக்ரோவேவ் ., தையல் மிஷின் ., அடுப்பு., மிக்ஸி ., கிரைண்டருக்கு வைக்கிற மாதிரி சந்தனம் குங்குமம் வைத்து அடுத்த வருஷமும் எங்களுக்கு எந்த விபத்தும் நேராமலிருக்கட்டும் என ஆரத்தி காட்டி விடுங்கள்.. பின்னே.. சுண்டு விரலில் பாட்டில் குத்தி டிண்டான் ., லெக்கமண்ட்ஸ் கிழிந்து போனஸா ஒரு பாட்டில் ரத்தத்தோடு போனால் உங்களுக்கு இன்ஸுரன்ஸ் இருக்கா சர்ஜரி பண்ணனும் என டாக்டர் சொன்னா.. எப்பிடி கிர்ருன்னு இருக்கும். அட (பெருஞ்செலவு) அது முடிஞ்சும்.. மூணு வாரம் கழிச்சும் சுண்டு விரல் என் கேள்விக்கென்ன பதில் டைப்பிலேயே தனியா நின்னா.. அடுத்த வாரம் பிஸியோதெரபிஸ்டைப் பார்க்கணும்..சரி மக்களே,.. சொல்றதை சொல்லிட்டேன் சூதானமா நடந்துக்குங்க..

ரொம்ப முக்கியமான விஷயம் பா.. என் அம்மா வலைத்தளம் ஆரம்பிச்சிட்டாங்க.. பேரு சும்மாவின் அம்மா.. :)) அதுல புதுயுகப்புத்தகம்னு முகப் புத்தகம் பத்தி எழுதி இருக்காங்க..:-))

வெள்ளி, 15 அக்டோபர், 2010

அக்டோபர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் ரம்யா தேவி.,ராமலெக்ஷ்மி., ருக்மணி அம்மா., சித்ரா நாகப்பன்..

அக்டோபர் மாதம் நவராத்திரி ஸ்பெஷல்.. அதில் துர்க்கையாக வாழ்வில் போராடி ஜெயித்த ரம்யாதேவியைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன்.. இவர் ப்லாக்கிலும் எழுதிவருகிறார்.. போராடி ஜெயித்த கதைகள் என்ற தலைப்பில் தன்னம்பிக்கைப் பெண்கள் பற்றி கட்டுரை தொடரும்...வெற்றி தொடரட்டும் ரம்யா தேவி..

அடுத்து நம்ம லெக்ஷ்மிதான் இந்த மாத ப்லாகர் அறிமுகத்தில்.... நம்ம ப்லாகர் ராமலெக்ஷ்மியின் பல இடுகைகள்., ஃபோட்டோகிராஃபி எனக்குப் பிடிக்கும்.. மிக அருமையான நேர்த்தியான கவிதை ., கதைகளுக்குச் சொந்தக்காரர்.. லெக்ஷ்மியே வருக .. வருக .. அனைவர் வாழ்விலும் விளக்கேற்ற..!!

நம்ம சித்ரா நாகப்பனோட காசுமழை இந்த இதழிலும் படித்து முதலீடு செய்யுங்க மக்களே..
அடுத்த வணக்கம் நம்ம சரஸ்வதி...ருக்மணியம்மாவுக்கு.. இவங்க பள்ளிக்கூட ஆசிரியையாய் இருந்து பணி ஓய்வு பெற்றவங்க.. இவங்களோட திருக்குறள் கதைகளை குழந்தைகளுக்குப் படித்துக் காட்டுங்கள்.. நல்ல நீதிபோதனைக் கதைகளை மென்மேலும் எங்களுக்கு சொல்ல நல்ல ஆரோக்யத்துடன் வாழ்க அம்மா..

இவங்களை எல்லாம் அறிமுகப்படுத்தக் காரணமும் கருவியாயும் இருக்கும் கிரிஜாம்மாவுக்கும் ., என் என்பு அன்னை சுசீலாம்மாவுக்கும் என் சரஸ்வதி வந்தனங்கள்.. விஜய தசமியில் வெற்றி எங்கும் எதிலும் கிட்டட்டும் .. தேவி உபாசகர்களுக்கு ..

புதன், 13 அக்டோபர், 2010

விட்டிலாயிராமல் விலகியிரு...

மின்சாரமற்ற பொழுதுகளில்
மின்சார உற்பத்தியானில்
எரிப்பான் அற்ற நேரங்களில்..

கும்மிருட்டு மூலையில் கிடந்த
என்னைத் தேடி எடுத்து
ஒளிர்ப்பானில் பற்றவைத்த போது..

உணர்ந்தேன்.. உன் கைகளில்..
பஃப்களின் வெண்குழல் வத்திகளும்
புளித்த பார்லித் தண்ணீரின் வாசமும்..

உன் கை பட்டதால்
உணர்வற்று உருகிக் கொண்டிருந்தேன்..
சொட்டுச் சொட்டாய்..
உனக்காயும் எனக்காயும் ..

ஒளிர்ந்து கொண்டிருந்தேன்..
வேறு எந்த உபயோகமுமற்று..
நம் இருவரின் இருப்பை
உணர்த்த மட்டுமே..

ஒளியீர்ப்பு விசையாய்
என் புன்னகை பட்டு
ஒளிர்ந்து கொண்டிருந்தது
உன் கண்கள்..

இருட்டில் நவ்வாப்பழமாய்
உன் கண்கள் கனிந்து
கசிந்து கொண்டிருந்தன அன்பில்..

ஒரு விட்டிலைப் போல
உருமாறிக் கொண்டிருந்தாய்.. நீ...
வினோத தாகம் ஆட்கொள்ள..

இறகுகள் சடசடக்க என் மேல்
மோதிப் பற்றியெரியும்
ஆவலில் பறக்க யத்தனித்தாய்..

உன் நலம் மட்டுமே நாடும் நான்
என்னைச் சுற்றிச் சுழன்ற
காற்றைப் பற்றி இழுத்துப்
போர்த்துக் கொண்டேன்..

ஒளிந்த என்மேல் விழுந்த நீ
வெம்மையை உணர்ந்திருந்தாய்..
ஆயினும் உயிர்த்திருந்தாய்..

மரித்து விடாமல் உயிர்த்திரு
விட்டிலாயிராமல் விலகியிரு..
எல்லா விளக்குகளிடமிருந்தும் ...

டிஸ்கி ..1..:- இது அக்டோபர் 10 ம் தேதி திண்ணையில் வெளிவந்துள்ளது..

டிஸ்கி..2..:- இதை எழுத தூண்டிய அபுல் கலாம் ஆசாதின் எரியும் திரி...(எதிர் கவுஜயா.’. இல்லையான்னு சொல்லுங்கப்பா..:))))

டிஸ்கி..3..:- அபுல் கலாம் ஆசாத் ஜியின் உம்ரோ ஜானின் திரைச்சீலை யும் என் மனம் கவர்ந்த ஒன்று.. அதன் மறுமொழியும்தான் இது..

செவ்வாய், 12 அக்டோபர், 2010

உயிர் உறை ரகசியம்..

குறுக்கில் மரத்துண்டாய்..,
பூவில் பனித்துளியாய்.,
காரணமற்ற காய்ச்சலாய்..
பீடித்துக் கிடக்கிறது..
உன் அன்பு.. என் மேல்..

எல்லா அம்புகளும் படுக்கையாய்..
தக்ஷிணாயனம் இருக்கட்டும்..
எய்துவிடு மிச்சமும்..

நேசத்தின் இழையா ..
அன்புப் பிளவை..
நெய்வதை நிறுத்து..

எவ்வளவு புரை ஏறியது..
நுரையீரலைக் கேள்..
என் நினைவை விட்டெறி..
மூச்சுக்குழாய் பிழைக்கட்டும்..

வலப்புற மூளையா..
இடப்புற மூளையா..
எதிலாவது அடக்கு..
நினைவுகளின் உற்பத்தி..

காதலும் காமமும்
கிளைத்த கொடியே..
பூப்பது உன்னிஷ்டம்..
என்னை மூழ்கடிக்காமல்..

முப்பாலும் உன் அணைப்பால்..
நாலாம் பக்கம் உன் ஆக்கிரமிப்பால்..
நானும் ஒரு தீபகற்பமாய்..

எத்தனை யுகங்களாய்
உன்னைத் தள்ளுவது..
இடையறாத அலையாய்..
என்னைச் சுற்றி நீர்தான்..

உயிர் உறை ரகசியமே..
மாய கர்ப்பமே..
இதயச் சூலுக்குள்
பிரசவிக்க இயலாமல் நீயும்
வெளியேற முயலாமல் நானும்..

டிஸ்கி...1..:- இது அக்டோபர் 10ம் தேதி திண்ணையில் வெளிவந்துள்ளது... நன்றி திண்ணை..

டிஸ்கி...2..:- முக்கிய அறிவிப்பு மக்காஸ்.. லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்கு சிறுகதைகள்., குறுங்கதைகள்., நாவல்கள்., கவிதைகள்., அனுப்பி வையுங்கள்... எல்லா ப்லாக்கர்களும்.. ஆண் வலைப்பதிவ நண்பர்கள் பலரின் படைப்புக்களும் நன்றாக இருப்பதால் கிரிஜாம்மாவிடம் இந்த வாய்ப்பைக் கேட்டுப் பெற்றுள்ளேன்.. சிறப்பாக எழுதுங்கள்.. உங்கள் படைப்புக்களை அச்சில் பார்க்கும் ஆவலோடு நானும் வாழ்த்துகிறேன்.. தேர்ந்தெடுக்கப்படுபவை பிரசுரிக்கப்படும்.. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.. thenulakshman@gmail.com

டிஸ்கி...3..:- அன்பு மக்காஸ்.. எல்லார் வலைத்தளத்துக்கும் சென்று சொல்ல முடியவில்லை.. நேற்று சிலரின் வலைத்தளம் சென்றேன்.. கை வலி.. எனவே எல்லாரும் கலந்துக்குங்கப்பா.. படிக்கிறவங்க அடுத்தவங்களுக்கும் சொல்லுங்க.. நேசன்.,பாலா சார்., ஜெசி., கலகலப்பிரியா., கதிர்., ரோஹிணி., புலவன் புலிகேசி., பட்டியன்., அக்பர்., ஸ்டார்ஜன்., கண்ணகி., அம்பிகா., பத்மா., திவ்யாஹரி., மேனகா., கீதா ஆச்சல்., புவனேஷ்வரி ராமனாதன்., ஷாந்தி லெட்சுமணன்., ஜெரி., சீனா சார்., ராகவன் நைஜீரியா, முனியப்பன் சார்., தியா., நிகே., சந்த்ரு., வசந்த்., வினோத்., ஜெட்லீ., சுரேகா., பட்டர்ஃப்ளை சூர்யா., ருத்ரன்., கேபிள்ஜி., சரவணகுமார்., மதுரை சரவணன்., ஆனந்தி., ஜெய்லானி., ஸாதிகா., மலிக்கா., கமலேஷ்., சிவாஜி சங்கர்., ஆசியா., அஹமத் இர்ஷாத்., நியோ., தேவன்மாயம்., சுரேஷ் பழனியிலிருந்து., ராகவன்., பாரா., அஷோக்.,மஞ்சு., வேல்கண்ணன்.,முகிலன்., மரா., .,வித்யா.,சத்ரியன்.,கோபிநாத்.,பிரபு., மயோ., ஜோதிஜி.,ரோஸ்விக்., குமார்.,ஜலிலா., பாலா.,சீமான்கனி., கண்மணி., பனிதுளிசங்கர்., அப்துல்லா., ஃபாத்திமா ஜொஹ்ரா., கருணாகரசு., மணிகண்டன்.,ரூஃபினாராஜ்., ஷஃபி., பனிதுளிசங்கர்.. இன்னும் நிறைய பேர் இருக்கீங்க.. எல்லாருமே அனுப்புங்க..விட்டுப்போன பெயர்கள் என் தற்காலிக ஞாபகக் குறைவே அன்றி வேறொன்றில்லை..

சனி, 9 அக்டோபர், 2010

சுய உதவிக்குழுக்கள்.. நவராத்திரி அங்காடி ..பெண்களுக்கான போட்டிகள்..




நவராத்திரி ..சுபராத்திரி.. பாடல் கேட்கும்போதே முப்பெரும் தேவியரும்.. பட்டுப்பாவாடையணிந்த சுவாசினிகளும் ., மஞ்சள் குங்குமமும் தாம்பூலமும் ., கொலுவும் சுண்டலும் கண்முன்னே விரிகிறதா..
இந்த வருடம் கொஞ்சம் ஸ்பெஷல் ..ஏனென்றால் லேடீஸ் ஸ்பெஷல் சார்பில் மாம்பலம் குமரன் கல்யாண மண்டபத்தில் நடந்த நவராத்திரி ஆரம்ப விழா.. சுய உதவிக்குழுக்களை நபார்டின் வாகீசன் அவர்கள் ஒன்றிணைக்க.. எக்ஸ்னோராவின் சிதம்பரமும்., ரோட்டரியின் சேதுராமனும் ., சசி ஹெர்பல் சசிரேகாவும் கிரிஜா ராகவன் மேடத்தோடு இணைந்து மிகச் சிறப்பான நவராத்திரி அங்காடி ஆரம்ப விழாவாக நடந்தது...
கீதா இறைவணக்கம் பாட... விழாவை கிரிஜா மேடம் ஆரம்பித்து வைக்க.. சீஃப் கெஸ்ட் மேன்மைமிகு கவர்னர் பர்னாலாவின் பேத்தி ஆயிஷா ஸாந்து ., ஸ்பெஷல் கெஸ்ட் ஃபிலிம் டைரக்டர் மதுமிதா விஜய்., மற்றும் எக்ஸ்னோரா சுலோசனா ராமசேஷன்.. குத்துவிளக்கேற்றி முப்பெரும் தேவியரும் விழாவைத் தொடங்க.. நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன..

எக்ஸ்னோரா ராஜம் ஆயிஷா அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்க ., அடுத்ததாக நான் சுலோசனா அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்க., கிரிஜா மேடத்தால் அழைக்கப்பட்டபோது இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.. ”ஷி இஸ் எ ரைட்டர்” என அறிமுகப்படுத்தினார்..அனைவருக்கும்.. அடுத்து மதுமிதா அவர்களுக்கு காந்தலெக்ஷ்மி நினைவுபரிசு வழங்கினார்.

சுய உதவிக்குழுக்களின் விற்பனை., வாழ்வு., பற்றி அனைவரும் கருத்துக்கள் சொன்னார்கள்.. இது ஐந்தாம் வருடம் . முதல் வருடம் ஒன்றரை லட்சம் விற்பனை., அடுத்தடுத்த வருடங்களில் பெருகி பத்து லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக சொன்னார்கள்..விற்பனை இந்த வருடம் 20 லட்சமாக இருக்கட்டும் என மதுமிதா வாழ்த்தினார்..

சுலோசனா மிகச் சுருக்கமாக இந்த குழுக்கள் வியாபாரம்., பற்றி அற்புதமாக உரையாற்றினார்.. ஆயிஷா அவர்கள் எல்லாரும் சொன்னதை வழிமொழிவதாக கூறினார்.. ராஜம் அவர்களும் உரையாற்ற தேசிய கீதத்துடன் விழா நிறைவுற்றது..
அனைவரும் ஸ்டால்களில் சென்று பொருட்கள் வாங்கினோம்.. கொலு பொம்மைகள் தவிர தோடுகள்., வளையல்கள்.,எம்பிராய்டரி புடவைகள்., சங்கிலிகள்., டாலர்., வால் ஹாங்கர்கள்., உணவுப் பொருட்கள்., நலுங்குமாவு., ராகி ஃப்ளேக்ஸ்., ஜோவர் ஃப்ளேக்ஸ். , பூஜைப் பொருட்கள், ஹாண்ட் பேக்குகள்..என பெண் குழந்தை உள்ளவர்களுக்கு ஷாப்பிங்க் செய்ய ரசனையான இடம்.. போட்டிக்ளும் இருக்கு சென்னை மக்காஸ்..
12. 10. 10--- 12 மணி.-- கோலப்போட்டி -- நடுவர் -- மிசஸ். ஆனந்தி ராமச்சந்திரன். எந்தக் கோலமும் வரையலாம்.
13. 10. 10----12 மணி---ஆன்மீகப் புதிர்ப் போட்டி -- நடுவர் -- மிசஸ் ஹேமா சந்தானராமன்..
14. 10. 10 ---12 மணி--- மடிசார் மாமி போட்டி -- நடுவர் மிசஸ் கமலா நடராஜன்
15 .10 .10 --12 மணி--- சமையல் போட்டி.-- நடுவர் மிசஸ் மீனாஷி பாலு
16 .10. 10 -- 12 மணி -- அசத்தல் ஐடியா டிப்ஸ் போட்டி -- நடுவர் மிசஸ் கலா பாலசுப்ரமணியன்..
விதிமுறைகள்;-
1. பதினோரு மணிக்கு முன்னதாக ஹாலுக்கு வந்துவிட வேண்டும்..
2. முன் பதிவு செய்ய.. ரொட்டேரியன் ஜெயந்தி ரமேஷின் ஃபோன் நம்பர்.. 9841035311.
3. எல்லா நாட்களிலும் ஹால் கவுண்டரில் லேடீஸ் ஸ்பெஷல் ஸ்டாஃப் வள்ளியிடம் நேரில் சென்று பதியலாம்.
4. ஈ மெயிலில் பதிவு செய்ய girijaraghavan@ladiesspecial.com இல் மெயில் அனுப்புங்கள்..
வாழ்த்துக்கள்.. சென்னை லேடீஸ் அண்ட் கேல்ஸ்.. ஹாவ் எ ப்லாஸ்ட்..:))

வெள்ளி, 8 அக்டோபர், 2010

ஸ்மைலியும்., க்ளாடியும்., கல்கியும்...


சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்பவர்கள் ... திருநங்கைகள்..

உடலால் ஆணாகவும் உள்ளத்தில் பெண்களாகவும் உளவியல் சிக்கல்களோடு வாழ்பவர்களின் உணர்வுகளைச் சித்தரிக்கும் ஆவணப்படம்.. அஃறிணைகள்... CREATURES..?

கற்கை நன்றே .. கற்கை நன்றே..
பிச்சை புகினும் கற்கை நன்றே..
நன்றோ.. நன்றாய்க் கற்றும் பிச்சை புகுதல்..

தன் பாலியல் அறுவை சிகிச்சைக்காக பிச்சை எடுத்தும்., பின்பு வியாபாரம் செய்தும்., உத்யோகம் பார்த்தும்.. தற்போது டைரக்டர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றும் லிவிங் ஸ்மைல் வித்யாவின் கசியவைக்கும் கவிதைதான் இது..

பாதுகாப்பே இல்லாத சூழலில் யாரென்றே தெரியாத பலரால் அடிக்கப்படும் நிலை.. நினைத்துப்பார்க்கவே நடுங்குகிறது அல்லவா.. பார்க்கும் போது பதற்றம் ஏற்படுத்தியது அந்த இயலாமை.. அழுகை..ஓலம் என்றும் சொல்லலாம்...

கவுன்சிலிங் கொடுத்தால் சரியாகிவிடும்.. கல்யாணம் செய்தால் சரியாகிவிடும் என பெற்றோர் தவறான முடிவெடுக்காமல் என்ன பிரச்சனை என கண்டுபிடித்து அதற்கு ஏற்றதை செய்வதே சரியாக இருக்கும்..

டாக்டர் ஷாலினி சொல்கிறார்.. ஒவ்வொரு குழந்தையும் உருவாகும் போதே பெண்ணாகத்தான் உருவாகுது என்கிறார்.. ஆறாம் வாரத்தில்தான் அது ஆணாகவோ., பெண்ணாகவோ தீர்மானிக்கப்பட்டு ஆண் என்றால் Y க்ரோமோசோம் இணைந்து டெக்ஸ்ட்ரோன் பரவி ஆண் உறுப்புகள் உருவாகின்றன..

ஆண்கள் பால் கொடுக்கும் தேவை இல்லாமலே மார்புக் காம்புகள் இருப்பது இதனால்தான்.. ஆண் மிருகங்களுக்கோ வேறு எந்த உயிரினத்திற்கோ இப்படி இல்லை.. இப்படி பெண் மூலம் பெண்ணாகவே உருவாகி ஆணாக பிறக்கும் ஆண்கள் இவர்களை குறைத்து மதிப்பிடுவதும்., கேலி செய்வதும் ., சம்பந்தமில்லாமல் அடிப்பதும் என்ன நியாயம்..?

க்ளாடி முதலில் ஒரு திருநங்கையை சந்திக்கும்போது அவரின் குடிசைக்கு வரும் ஒரு வாடிக்கையாளரைப் பார்த்து நடுங்குவதும்.. திருநங்கைகள் சமூகத்தால் மட்டுமல்ல.. அவர்களுக்குள்ளே ஏற்படும் உணர்வுக் குழப்பமும் ( தான் உருவத்தில் ஆணாக இருந்தும் ஆணின் மேலேயே காதல் வருவது..) முழுமையாய் வெளிப்பட்டு சங்கடம் ஏற்பட்டது..

எறும்பைப் போலவும் புல்லைப் போலவும் தன் அந்தரங்கம் மிதித்துச் செல்லப்படும் வலி.. என் கண்கள் கசங்கி விட்டன..

பிறப்பில் ஏற்படும் குறைபாட்டாலும் ., ஹார்மோன்களின் குளறுபடியாலும் ஏற்படும் இந்நிலைக்கு.. முழுமையான பெண்ணாக மாற முன்பு எல்லாம் தாயம்மா முறை என்றும் அதிகாரபூர்வமற்ற மு்றையில் செய்யப்படும் அறுவை சிகிச்சையே வழியாய் இருந்தது என்றும்.. தற்போது தமிழக அரசின் திருநங்கைகள் நல்வாழ்வு மையத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளிலும் கவுன்சிலிங்குகள்., டெஸ்ட்டுகளுக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்றும் கிளாடி சொல்கிறார்.

நம்மைவிட நளினமாக அழகாக உடையணியும் ரோஸும்., கல்கியும்., ஆச்சர்யப்பட வைத்து இருக்கிறார்கள்.. விஜய் டிவியில் இப்படிக்கு ரோஸ் சிலமுறை பார்த்து இருக்கிறேன்.. பால் சுயம்புவின் உயிரின்நிலை குறித்த கட்டுரைகள் பத்ரிக்கையில் படித்து அசந்திருக்கிறேன்.. திறமை எங்கு இருந்தாலும் ஜெயிக்கும்.. இன்பத்துப்பாலில் விளைந்த மூன்றாம் பால் இது..
இன்பத்துக்காக பெற்றுவிட்டு புறந்தள்ளுவது என்ன நியாயம்.. பெற்றவர்களே யோசியுங்கள்.. உங்கள் ரத்தமும் சதையும் கொடுத்து நீங்க உருவாக்கிய உயிர்
அது.. ( அது .. இது என்று தாங்கள் அழைக்கப்படும் அவலம் குறித்து ஸ்மைலியின் வரிகள்.. கவிதைகளாய் )

லிங்கிஸ்டிக்கில் முதுநிலை படித்த ஸ்மைலியும்., முதல் முறை கல்லூரியிலேயே தான் பெண் என்று சர்டிஃபிகேட் கொடுத்து சேர்ந்த முதல் திருநங்கை க்ளாடியும்.. அவர்களின் தன்னம்பிக்கையும்.,க்ளாடியை புரிந்து உதவி செய்த.. தோழி சபியும்.. டாக்டர் ஷாலினியும்., மதுரையில் ஸ்மைலிக்கு முதலில் வேலை தந்த நிறுவனத்தாரும்., சரவணனை.. ஸ்மைலி என தன் கதையை வெளியிட உதவிய கிழக்கு பதிப்பகத்தாரும் என்னை வியக்க வைக்கிறார்கள்..

இதை குறும்படமாக எடுத்த என் முகப்புத்தகத் தோழி கீதாவும்., அவர் கணவர் இளங்கோவும் பாராட்டப்படவேண்டியவர்கள்.. சரியான சமயத்தில் சரியான விழிப்புணர்ச்சி கொடுத்ததற்காகவும்.. இவர்களை என் நண்பர்களாக கொடுத்ததற்காகவும் ஆணாகிப் பெண்ணாகி நின்ற ., தான் பாதி உமைபாதி என்றான கடவுளுக்கு நன்றி..

” உன் சுதந்திரம் வெறும்
கண்ணாடிக் குடுவைக்குள் அடக்கம்..
எனக்கு இந்தப் பிரபஞ்சத்தைப்போல...”

பிரபஞ்சம் உங்கள் கையில் தோழி.. ஸ்மைலி.. பின்னென்ன..:))
இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள்..:))
இந்த நாள்.. இனிய நாளில் என் முகப்புத்தகத்தோழி கல்கிக்கு இந்த இடுகையை பிறந்த நாள் பரிசாக அளிக்கிறேன்.. வாழ்க வளமுடன்.. நலமுடன்.. என் அன்புத்தோழி... கல்கி..

புதன், 6 அக்டோபர், 2010

புகைப்படங்களில் வாழ்பவர்கள்...

சட்டமிடப்பட்டு சந்தனமிடப்பட்டு
சாஸ்வதமான தாத்தாவுடன் பாட்டியும்..

சலனமுற்று நகரும் கணனிப் படங்களில்
வெளிநாட்டுவாழ் அப்பாவுடன் அம்மாவும்..

நாளும் பொழுதும் முகப்படம் மாற்றும்
நூல் தோழிகளின் படங்களில் தோழர்களும்...

கட் அவுட்களில் கால் அரை நூறாண்டு
வாழ்வு கழித்த கடைநிலை ரசிகர்களும்...

திங்கள், 4 அக்டோபர், 2010

பெயரெச்சம்..

லாரி முகப்புகளில்.,
விளம்பரப் பலகைகளில்.,
திரையரங்கு நிறுத்தங்களில்.,
ஊர் காட்டிகளில்.,
ஒளிந்து தெரியும் உன் பெயர்..

ஓட்டுனர் பயிற்சிப்பள்ளியோ.,
நகை அடகுக் கடையோ.,
உணவுக்கூடமோ.,
அணியாடை அகமோ
தேய்ந்தும் கரைந்தும்
மறைந்தும் பளிச்சிட்டும்...
சுருட்டைக் கேசமாய்
கருத்த எழுத்துக்களில் உன் பெயர்..

உன் பெயர் சொல்லிக் கூப்பிட்டு
யாரோ யாரையோ அழைக்கும்போதும்.,
தோளணைத்துச் செல்லும்போதும்.,
குழந்தைகளைக் கொஞ்சும்போதும்
காதுகளில் வழிகிறது தேன்...

பத்ரிக்கையிலோ.,
புகைப்படத்திலோ.,
தொலைக்காட்சியிலோ.,
உன் பெயர் கொண்டவரைப் பார்த்தால்
ஒரு சந்தோஷப்பூ மலர்கிறது..
கண்ணிலும்., மனசிலும்., இதழ்களிலும்..,
எதிர்பாராது உன்னையே கண்டதாய்..

உன் பெயர் பொறித்த இடங்கள்
சரித்திரக் கல்வெட்டுக்களாய்
மனதில் படிந்து..

தடங்களற்ற கணனித்திரையிலும் கூட
நிரவிக்கிடக்கும் உன்னை
நெருடிப்பார்க்கிறேன்...
நீ நனவா கனவா என்று..

டிஸ்கி:- இது அக்டோபர் 2 ம் தேதி சனிக்கிழமை திண்ணையில் வெளிவந்துள்ளது..

சனி, 2 அக்டோபர், 2010

எந்திரன்..THE ROBOT..எனது பார்வையில்...



கடவுள் இருக்கிறாரா..? இந்த கேள்விக்கு சிட்டியை கேளுங்கள் ..சொல்வார்.. இருக்கிறார்.. அவர்தான் வசீகரன்.. என்னைப் படைத்த கடவுள்..என்று.
ஒரு ரோபோ சொல்லும் சிம்பிள் ஆன்ஸர்..
 
ரோபோவுக்கு மனித உணர்ச்சிகள் வந்தால் எப்படி இருக்கும்..? அதுதான் கதை..முதலில் கோபம் வருகிறது..பின்பு உற்சாகம்.. பின் காதல்..
காதல் வந்ததும் ஆக்கபூர்வமான மனது காதல் போட்டியில் டிஸ்ட்ரக்டிவாக எப்படி எல்லாம் செய்ய முடியும்.. இதுதான்.. ஜெயண்ட் சைஸ்.. ரோபோ..
இது கலாநிதிமாறனின் லேபிளில் மிக அட்டகாசமாக வந்துள்ளது..

 ரஜனி என்ற சுப்ரீம் ஸ்டாரின் இரட்டைச் சிங்கங்கள் சுஜாதா மற்றும் சங்கர்..
என் இனிய இயந்திரா..ஞாபகம் வந்தது .. நிறைய இடங்களில் கதையில் சுஜாதாவின் இருப்பை உணர முடிந்தது..

 டெர்மினேட்டர்., ஐ ரோபோட்., மாட்ரிக்ஸ்..போன்ற படங்கள் அவ்வப்போது நினைவில் வந்தாலும்..ரஜனி ரஜனிதான்.. அந்த கூலர்ஸ் எல்லாம் ரோபோ ரஜனிக்கு ரொம்ப அட்டஹாசம்.. எந்த கண்ட்ரியிலெல்லாம் வாங்கினீங்க..
அதுபோல் ரோபோ ரஜனியின் காஸ்ட்யூம்ஸ்.. மார்வலஸ்.. இனி அடுத்த ஹேர் கட் மற்றும் கிருதா எல்லாம் வில்லன் ரஜனியின் ஸ்டைலாகத்தான் இருக்கும்..

"காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்" பாடிய ரஜனி.," காதல் அணுக்கள்., கிளிமாஞ்சாரோ., இரும்பிலே ஒரு இதயம் முளைக்குதே"., எனப்பாடினாலும்., ஐஷுடன் டான்ஸ் ஆடினாலும் பார்க்கப் பார்க்கச் சலிக்கவில்லை..
செண்ட் ஆஃப் வுமன்., மாஸ்க் ஆஃப் ஸாரோ ., ட்ரூ லைஸ் ., டேக் த லீட் போன்ற படங்களின் நடனங்களை விரும்பிப்பார்த்தது போல் எந்திரனிலும் ரோபோவின் நடனம் சூப்பர்ப்..அதிலும் தொப்பி போட்டு மைக்கேல் ஜாக்சன் போல் ஒரு ட்விஸ்ட் ஆடுவார் பாருங்கள்.. கொள்ளை அழகு.. ரஜனி.. ப்ளீஸ் சொல்லுங்க உங்க வயசென்ன.?
இரும்பிலே ஒரு இதயம் துடிக்கும் பாடலில் ரோபோவின் சில்வர் க்ரே ட்ரெஸ்ஸில் ஆடும் போது இரும்புத் தாமரைகளும்., கோல்டன் கலர் ட்ரெஸ்ஸில் ஆடும் போது தங்க மீன் தொட்டியும் அழகு.. கிளிமாஞ்சாரோ பாடலில் இயற்கைஅழகும் ரஜனி ஐஸின் அழகும் போட்டி போட்டுக்கொண்டு ஜொலிக்கிறது..
ஐஸ் ஏக் தம் ஃபிட்.. அடுத்த ஆச்சர்யம் இவர்.. டைனோராவா., சாலிடரா தெரியவில்லை.. அந்த விளம்பரத்தில் அழகுக் கிளியாக வந்தவர்.. சிறிது பூசினாற்போல இருந்தாலும்.. கொள்ளை அழகுதான்.. நல்ல ஸ்கின் டோன்...சிவப்பு உடைகளில்..திரையில் நெருப்புப் பிடித்தது போலிருக்கிறது இவரின் நடனம்..
சந்தானம்., கருணாஸ்., டானி டெங்சோபா., கலாபவன் மணி ., ராகவ் எல்லாரும் உண்டு..கடைசி கட்ட கிராஃபிக்ஸை குறைத்து இவர்களுக்கு இன்னும் வாய்ப்பு வழங்கி இருக்கலாம்.. அருமையான நடிகர்கள்..
பீட்டர் ஹெய்ன்., அலெக்ஸ் மார்ட்டின் சண்டைக்காட்சிகள் பிரமிப்பு..
வைரமுத்து., மதன் கார்க்கி., பா. விஜய் பாடல்கள் அருமை.. பா. விஜய்.. உங்க கிளிமாஞ்சாரோ வரிகள் ரொம்ப அற்புதம். மதன் உங்க இரும்பிலே பாடல் ரொம்ப டச்சிங்கா இருந்தது..வைரமுத்து எப்பவும் வியக்க வைப்பவர்.
சங்கர்.. ஹேட்ஸ் ஆஃப் யூ.. வழக்கம் போல சக்ஸஸ் ஃபார்முலா.. குட் லீடிங்.. நல்ல டைரக்‌ஷன்.. ஏ.ஆர். ரஹ்மான் சில பாடல்களில் வியக்க வைக்கிறார்.. சில பாடல்கள்.. ம்ம்ம்..சாபு சிரில்., ரசூல் பூக்குட்டி., பிரபு தேவா.அற்புதம்..
ஆனால் சவுண்ட் டிடிஎஸ் எஃபெக்ட் சரியாக இருக்கும் தியேட்டர்களில் பார்க்கவேண்டும்..


தேவி கருமாரியில். படம் ஆரம்பிக்க உள்ளே போகுமுன் இருந்த மக்கள் கூச்சல் உள்ளே குறைவுதான்.. படமும் நல்ல டெப்தாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.
வில்லன் ரஜனியின் சில அசைவுகள் மிரட்டலாய் இருக்கின்றன,,
நல்ல ஹுமனாய்டு.. குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவு யோசிக்கிறது..பயமாய் இருக்கிறது.. எதிர்கால ரோபோக்கள் சிந்திக்கும் திறனுடன்.. உணர்வுகளுடன் இருக்க சாத்தியமா..?
கடைசியாக ரோபோ ரஜனி சொல்லும் வசனம்தான்..கோபம்., பொறாமை போன்றவை மனுஷ குணங்கள்... படைத்தவனின் கட்டளையை மீறி நடக்கக் கூடாது..
பொழுதுபோக்கு., மற்றும் ரஜனி படம் (வழக்கமான பஞ்ச் லயலாக் இல்லை)., சங்கர் டைரக்‌ஷன்., கலாநிதி மாறன் தயாரிப்பு என்பதெல்லாம் மீறி.. ரஜனியின் மிக உருப்படியான இன்னொரு படம்..பார்க்கலாம் மக்காஸ்.. அடுத்து பிவிஆர் அல்லது ஏஜிஎஸ் இல் பார்க்கலாம் என்று இருக்கிறேன்..
டிஸ்கி:- என்ன என்னுடைய ப்ளாக்கில் திரை விமர்சனமா எனப் பார்க்கிறீர்களா..? நாங்களும் பள்ளிக்கூட வயசிலிருந்தே ரஜனி ஃபான்ஸ்தானே,,..:)) முதல் முறை திரை விமர்சனமும் எழுத நினைத்தேன்.. அது நம்ம தளபதி படமா அமைஞ்சிருச்சு..:))..
டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங் பண்ணியாச்சு.. அதுக்குள்ள கையில் ஒரு இஞ்சூரியாகி ஹாஸ்பிடலைஸ் செய்து சர்ஜரி வரை வந்து க்யூர் ஆகி ரெண்டு நாள்தான் ஆகுது.. ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸோட ஒற்றைக் கையால் டைப் செய்த விமர்சனம் இது..
முதல் நாள் 4 வது ஷோ கைக்கட்டோட போய்ப் பார்த்துட்டுட்டு.வந்து சூட்டோட சூடா போட்ட ரிவ்யூ...:))